மைண்ட்வாய்ஸ் : ஆமா, நானும் அவரும் துபாய்ல விவேகனந்தர் தெருல...
அப்பாவி : மைண்ட்வாய்ஸ், திஸ் இஸ் தி லிமிட் (என கர்ஜிக்க)
மைண்ட்வாய்ஸ் : ம்... கோபம் வருதா? கோபம் வருதா? வேணும் வேணும் நல்லா வேணும்... ஹா ஹா ஹா... ஒரு நாள் மொக்க போட்டதுக்கே உனக்கு இத்தன கோபம் வருதே... எங்களுக்கு எத்தன கோ....ஊ... ஊ...ஓ... எ... ஏ... ஆ.........
(சைலண்டா வாயில் பிளாஸ்டர் ஒட்டி மைண்ட்வாய்ஸை கடத்துகிறார்கள் அப்பாவியின் ஆதரவாளர்கள். அது யாருனெல்லாம் கேள்வி கேக்க கூடாது. அவர்களின் பாதுகாப்பு கருதி அந்த தகவல் தலையை சுற்றி வீசப்படுகிறது... :)
அப்பாவி : ஹி ஹி... அது மைண்ட்வாய்ஸ்க்கு தொண்டைல கிச் கிச்... அது விக்ஸ் மாத்திர சாப்பிட போயிருக்கு...வர்ற வரைக்கும் நாம நிம்மதியா பேசுவோம்...
மொதலே சொல்லிடறேன், "உண்டவீட்டுக்கு ரெண்டகம் பண்ற பச்ச துரோகி, Yellow எட்டப்பி, கருப்பு கோட்சே"னெல்லாம் யாரும் கொந்தளிச்சு ஒடம்ப கெடுத்துக்க வேண்டாம். சும்மா மனசுலபட்டதை என்னோட பாணில சொல்லி இருக்கேன்... அம்புட்டு தானுங்கோ...
எனவே, உக்காந்து பின்னாடி அப்பாலிக்கா அனுபவிங்கோ (அதானுங்க "sit back and enjoy"...:))
இந்த ஊருக்கு வந்த புதுசுல நெறைய விஷயங்கள் ரெம்ப புதுசா இருந்தது. எங்க பிரெண்ட் ஒருத்தங்க சொன்னாங்க "எல்லாமே ஆப்போசிட் அப்படிங்கறத மட்டும் மனசுல வெச்சுக்க சீக்கரம் பழகிடலாம்"னு
டிரைவிங்ல சைடு மாறுறதத்தான் அப்படி சொல்றாங்க போலனு நானும் வெள்ளந்தியா மண்டைய மண்டைய ஆட்டினேன். வந்து பதினஞ்சு நாள் ஒரு பிரெண்ட் வீட்டுல தங்கினோம்... அப்புறம் தான் எங்களுக்கு அபார்ட்மென்ட் கெடச்சது
கைல சாவிய குடுத்ததும் என்னமோ வெள்ளை மாளிகையே என்ர பேருக்கு கிரையம்(பட்டா) பண்ணி வெச்ச ரேஞ்சுக்கு பீலாகி நான் தான் வீட்டை திறப்பேன் நான் தான் வீட்டை திறப்பேன்னு பீலா விட்டுட்டு இருந்தேன்
"சரிம்மா உன் இஷ்டம்"னு ரங்கமணி ஆதரவா பேசும் போதே யோசிச்சுருக்கணும், ம்... சூது வாது தெரியாம வளந்துட்டேன், என்ன செய்ய?
ஆர்வமா போய் கதவ தெறக்கறேன் தெறக்கறேன் தெறக்கறேன் தெறக்கறேன்...... ஆமாங்க திறந்துட்டே இருக்கேன்... ஒண்ணும் முடியல
ஒருவேள "அண்டாக்கா ரசம் டப்பக்கா சாம்பார் டிபன்கா இட்லி.... திறந்திடு பிசாசே"னு எதுனா சொல்லணுமோனு சந்தேகம் வந்துடுச்சு
"நீயெல்லாம் எப்படித்தான் குடித்தனம் செஞ்சு குப்ப கொட்ட போறியோ"னு எங்க அம்மா பொலம்பினது வேற கண்ணு முன்னாடி வந்தது...அப்பவெல்லாம் எங்கம்மாட்ட நக்கலா "ம்... குப்பதொட்டில கொட்டுவேன்"னு சொல்லுவேன்... அந்த லொள்ளுக்கெல்லாம் தான் இப்ப ஆப்புனு ஒரே பீலிங்காகி போச்சு
இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி அந்த Immigration Agency கடன்காரன், டோபல் (TOEFL) கீபல்னு என்ன என்னமோ கோர்ஸ் எல்லாம் சொன்னான், இத பத்தி ஒண்ணும் சொல்லலியே... வீட்டு கதவ திறக்க "திறந்திடு சீசே - Release 1.1"னு ஏதோ கோர்ஸ் இருக்கு போலிருக்கே, நாம படிக்காம வந்துட்டோம் போல இருக்குனு மனசே விட்டு போச்சு
அப்படினா இனிமே, தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு தானா, ஐயோ மைனஸ்ல குளிருமேனு, நான் வேற லக்கேஜ் கூடி போச்சுன்னு எங்க பாட்டி குடுத்த குரும்ப கம்பிளிய அங்கேயே வெச்சுட்டு வந்துட்டனேனு யோசிச்சுட்டு இருக்கைல, ஆபத்பாந்தவியா எங்க பிரெண்ட் வந்தாங்க. விவரம் சொன்னதும் "திருப்பு திருப்பு"னாங்க
"அது மைக்கேல் மதன காமராஜன்ல ஊர்வசி கேரக்டர் ஆச்சே"னு மனசுல தோணினதை சொன்னா அவங்க என்ன நெனச்சுப்பாங்களோனு அமைதியா "புரியலைங்க"னேன்... அவங்க ஒரு மாதிரியா பாத்தாங்க
(சமீபத்துல அதே பிரெண்ட் கிட்ட மலரும் நினைவுகள் பேசிட்டு இருந்தப்ப "நான் முதல் முதலாக முழித்த போது என்ன நினைத்தாய்"னு கேட்டதுக்கு, "கதவ கூட கழட்ட தெரியாம இதெல்லாம் கனடாவுல என்னத்த கழட்ட போகுதோனு நெனச்சேன்"னு பல்பு குடுத்தாங்க. தேவையா எனக்கு? கேட்டு வாங்கிட்டேன்... ஹ்ம்ம்...இப்ப க்ளோஸ் பிரெண்ட் ஆயாச்சு, ஒண்ணும் சொல்றதுகில்லனு விட்டுட்டேன்)
சரி பழைய மேட்டர்க்கு போவோம்... வீட்டை திறக்க முடியாம நான் விழிக்க, அந்த பிரெண்ட் சொன்னது... "நான் தான் வந்த அன்னைக்கே சொன்னனே... இந்த ஊர்ல எல்லாம் தலைகீழ்னு... சாவியை திருப்பி போடு... திறக்கும்"னாங்க
அவங்க சொன்ன மாதிரி சாவியை அப்படியே 180 degrees திருப்பி போட்டு திருப்பினதும்...ச்சே... திருகினதும், ஒரு வழியா சொர்க்கவாசல் திறந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பபா.... எனக்கு அப்படியே சுவத்துல மண்ட மண்டையா அடிச்சுக்கணும் போல இருந்தது...
ஆனா மண்டைல இருக்கற கொஞ்ச நஞ்ச சரக்கும் டேமேஜ் ஆகி போய்ட்டா அப்புறம் ரங்க்ஸ்'ஐ கண் கலங்காம வெச்சு காப்பாத்த முடியாம போயிடுமோனு என்னை கட்டுப்படுத்திகிட்டேன்
அதோட முடிஞ்சதா, உள்ள போய் லைட் போட போறேன், ஏற்கனவே போட்டு இருந்தது, ஆனா போடல... உங்களுக்கு புரியல இல்லையா? எனக்கும் புரியல. அதாவது லைட் சுவிட்ச் ONல இருந்தது ஆனா லைட் எரியல
எரியும்ம்ம்ம்ம்.... ஆனா எரியாது................... போல இருக்குனு நெனச்சுட்டு ஒரு நிமிஷம் முழிச்சேன்... அப்ப தான் பல்பு எரிஞ்சது. அந்த பல்பு இல்லிங்க... என் மண்டைல பல்பு... அதாவது "இந்த ஊர்ல எல்லாமே தலைகீழ்" அப்படிங்கற தாரக மந்திரம் ஒலிச்சது
சுவிட்சை ஆப் பண்ணினேன் லைட் ஆன் ஆய்டுச்சு. அப்ப தான் புரிஞ்சது... நம்ம ஊரு ஆன் இங்க ஆப்... ஆண் இல்லிங்க... I mean "ON"
(மைண்ட்வாய்ஸ்(மனசுக்குள்) : நம்ம ஊரு ஆணும் இங்க வந்தா ஆப் தான் ஆகணும்.... அது வேணா கரெக்ட்...ஹ்ம்ம்)
அன்னைக்கி என்னோட மனசுங்கற டைரில Notes of the day தலைப்பின் கீழ் "Each and every action should be opposite in Canada to expect a correct reaction" னு எழுதி வெச்சுகிட்டேன். ஒரு வழியா இந்த சூட்சமத்த வெச்சு குப்ப கொட்ட ஆரம்பிச்சேன்... ச்சே... காலத்த ஓட்ட ஆரம்பிச்சேன்
அப்புறம் வேலை தேட தொடங்கினேன்.. ஆரம்ப அனுபவத்தின் பாதிப்புல "Interviewல பதில் கூட தலைகீழா தான் சொல்லணுமோ"னு ரங்க்ஸ்கிட்ட சந்தேகம் கேக்க, அவர் "நீ இப்படியே இருந்தேனா தலைகீழா நின்னா கூட வேலை கிடைக்காது"னு பல்பு எண்ணிக்கைல இன்னொன்னு சேந்தது
"எத்தனையோ பாத்துட்டோம் இத பாக்கமாட்டமா"னு நானும் ஒரு வழியா தட்டு தடுமாறி வேலை புடிச்சேன். ஏதோ புள்ள புடிக்கற மாதிரியே சொல்றியே அப்பாவினு பீல் பண்ணாதீங்க. என் கஷ்டம் எனக்கில்ல தெரியும்... ஹ்ம்ம்
இங்க வர்றதுக்கு முன்னாடி "நானெல்லாம் இங்கிலீஷ்ல 120 அவுட் ஆப் 100 யு நோ"னு பந்தா விட்டுட்டு வந்துட்டு, இவனுக பேசுற தத்தக்கா புத்தக்கா இங்கிலிஷை புரிஞ்சுக்கரதுக்குள்ள, "இதுக்கு நம்மூர்ல 420 கேஸ்ல உள்ள போய் நிம்மதியா உக்காந்திருக்கலாம்"னு தோண ஆரம்பிச்சது
ஹ்ம்ம்... அப்புறம் என்ன?.... "ஐ கேன் டாக் இங்கிலீஷ் ஐ கேன் வாக் இங்கிலீஷ்" கதை ஆகி போச்சு நம்ம பொழப்பு
ஆனா பாருங்க, நான் கூட ஆரம்பத்துல நமக்கு தான் இங்கிலீஷ் வரலைனு தப்பா புரிஞ்சுட்டேன்... அப்புறம் கொஞ்சம் விவரம் புரிஞ்சப்புறம்... அதெப்ப புரிஞ்சதுனு கேட்டா, நேரம் காலம் இடம் எல்லாம் சொல்றதுக்கு நான் என்ன போதிமரத்துக்கு கீழ உக்காந்து ஞானமா வாங்கினேன்... ஏதோ போற போக்குல புரிஞ்சது தான்
இந்த ஊர்லையே இருந்துட்டு இவங்களையே திட்றையானு நீங்க என்னை திட்டறதுக்கு முன்னாடி, என் பக்க வாதத்தையும்...
மைண்ட்வாய்ஸ் : ஐயையோ பக்க வாதமா?
அப்பாவி : ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா...
மைண்ட்வாய்ஸ் : சரி சரி... மறுபடி கடத்திடாதே... மீ சைலண்ட்... (என தனக்கு தானே பிளாஸ்டர் போட்டு கொள்கிறது)
அப்பாவி : ம்...அந்த பயம் இருக்கட்டும்
அதாவது, என் தரப்பு நியாத்தையும் கேளுங்கள்னு சொல்ல வந்தேன்
நீங்களே சொல்லுங்க, இவங்க grammer எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விட்டுட்டு accent'ங்கற பேர்ல இங்கிலிஷை கொல பண்ணிக்கிட்டு, "you got an accent"னு நம்மள சொன்னா "வொய் திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டா"னு சொல்ல தோணுமா இல்லையா?
அதையும் மீறி என்னை மாதிரி புத்திசாலிதனமா (ஹி ஹி) ஒரு பொண்ணு கொஞ்சம் விளக்கமா கேட்டா "You know what? Ours is American english... yours is British I guess"னு என்னமோ "அல்ஜீப்ரா சொல்லி தந்த அன்னைக்கி நான் ஏப்சன்ட்"னு சொல்ற மாதிரி சொல்லி நம்ம வாய அடைச்சுடறாங்க
சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்னு "அமெரிக்கன் பாதி பிரிட்டிஷ் பாதி கலந்து செய்த கொலை நான்"னு இப்ப என்ர இங்கிலிஷும் பாவம் டைபாய்ட் வந்த டைகர் மாதிரி ஆகி போச்சு
சரி இங்கிலிஷை விட்டு தொலைங்க... இந்த ஊர்ல வந்து திக்கு திசை தெரியாம நான் பட்ட பாடு இருக்கே... என் வீட்டு சோகமா உங்க வீட்டு சோகமா... அதை வெச்சு நாலு மெகா சீரியலே எடுக்கலாம் (நடு குறிப்பு : மெகா சீரியல் எடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
அப்பாவி@அப்பாவிதங்கமணி.காம்)
எனக்கு நம்மூர்லையே கெழக்க மேக்க தெரியாது... எங்க வீட்டுக்கு முன்னாடி நின்னு பாத்தா சூரிய உதயம் தெரியும்... சன் ரைஸ் இன் தி ஈஸ்ட் இல்லயா? So, அது கிழக்கு, அதே நீங்க புதுசா யாராச்சும் வீட்டுக்கு கூட்டிட்டு போய் திசை கேட்டா, சூரியன் தெரிஞ்சா சொல்லுவேன் இல்லாட்டி அயம் சாரி யுவர் ஹானர் தான், அவ்ளோ தான் என்னோட ஜாக்ரபி ஜிலேபி எல்லாம்... (By the way, இது சூர்யா ஜோதிகா sunrise இல்லிங்க, சூரிய பகவான் sunrise...:)
நம்ம இஸ்திரிய (History) பொரட்டி பாத்தீங்கன்னா....காலேஜ் போன மொதல் நாள் காந்திபுரம் சிக்னல்ல எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் காணோம்னு தேடின பிரகஸ்பதி நான், அதை பத்தி விவரமா இன்னொரு பதிவுல சொல்றேன் (சரி சரி அழுவாதீங்க)
இந்த அழகுல இங்க வந்த புதுசுல யாராச்சும்கிட்ட வழி கேட்டா "Drive 2km west then take south and drive 6km and...." இப்படி சொல்லிட்டே போவாங்க... அப்படியே போனா நேரா நயாகரா பால்ஸ் போய் குதிக்கலாம்னு எனக்கு தோணும்
பின்ன என்னங்க, இதே நம்மூரா இருந்தா "அப்டீக்கா நேரா போய் அப்புறம் லெப்ட் எடுத்து அப்பாலிக்கா ஒரு யு டர்ன் எடுத்து ரைட்ல ஓடிச்சினா அங்க ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். அதே சந்துல கொஞ்ச தூரம் போனா செவப்பு கலர் கேட் போட்ட மஞ்ச கலர் பெயிண்ட் அடிச்ச வீடு" அப்படின்னு எவ்ளோ அழகா சொல்லுவாங்க
இப்படி ரங்க்ஸ்கிட்ட பொலம்பினதுக்கு "இங்க பாரு... இங்கெல்லாம் ஈஸ்ட் வெஸ்ட் நார்த் சவுத் தான்... லெப்ட் ரைட் இல்ல... ஒழுங்கா பழகிக்கோ"னாரு... இதுக்கு நான் நயாகரா பால்ஸ்கிட்ட பொலம்பி இருந்தா அதே எனக்காக கண்ணீர் விட்டுருக்கும்
ஒரு நாள் இங்க ஒரு பிரெண்ட் வீட்டுக்கு போய் இருந்தப்ப, நான் பாட்டுல வழக்கம் போல ஷோ பண்ணிட்டு இருந்தத பாத்து பொறாமை பட்டு என்னோட இமேஜை டேமேஜ் பண்ணனும்னே ரங்க்ஸ் "புவனாவை யோசிக்காம உடனே East எதுனு சொல்ல சொல்லுங்க பாப்போம்"னு மாட்டி விட்டுட்டாரு
பொறுத்தது போதும் பொங்கி எழு புவனானு நானும் "எங்க அம்மா சன் ரைஸ் இன் தி ஈஸ்ட் தான் சொல்லி குடுத்தாங்க... இந்த ஊர்ல சன் ரைஸ் இன் சவுத் ஈஸ்ட்... சோ தப்பு என் மேல இல்ல இந்த ஊர் மேல தான்... சரியான கோண ஊரு... சன்னை மொதல்ல ஈஸ்ட்ல உதிக்க சொல்லுங்க, அப்புறம் நான் ஈஸ்ட் வெஸ்ட் சொல்றேன்"னு பொங்கிட்டேன்
அங்க இருந்த லேடிஸ் எல்லாரும் என் பக்கம் சேந்துட்டு "ரெம்ப கரெக்ட் புவனா... எனக்கும் ஈஸ்ட் வெஸ்ட் கன்பியூசன் இருக்கு... நீங்க சொன்னப்புறம் தான் தப்பு என் மேல இல்லைன்னு புரியுது... என்னங்க, இப்பவாவாச்சும் புரிஞ்சுக்கோங்க?"னு அவங்க அவங்க ரங்க்ஸ்'ஐ பாத்து ஒரு வெற்றி சிரிப்பு சிரிச்சாங்க
உங்கள்ல சிலருக்கும் இது உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்... ஏதோ என்னால ஆன ஒரு சின்ன சமூக சேவை... இதுக்காக எனக்கு நீங்க CN டவர் பக்கத்துலயோ இல்ல வைட் ஹவுஸ் வாசலையோ சிலை எல்லாம் வெக்க கூடாது சொல்லிட்டேன்... ஏன்னா, எனக்கு விளமபரம் புடிக்காது யு சி...:))
அப்புறம் இன்னொரு மேட்டர், இப்ப உங்ககிட்ட யாராச்சும் வந்து, உங்க வீடு எங்க இருக்குனு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க "இப்படி இப்படி ஊர்ல இந்த இந்த தெருவுல அப்படி அப்படி நம்பர்ல இருக்கு"னு சொல்லுவீங்க...கரெக்டா?
அதே இந்த ஊர்ல கேட்டா "வாஷிங்டன் ஸ்ட்ரீட் அண்ட் வெல்லிங்டன் சர்கிள் இண்டர்செக்சன்"னு சொல்லுவாங்க... போன புதுசுல "அம்மாடியோ... எவ்ளோளோளோளோளோ பெரிய அட்ரெஸ்"னு சொல்லி பல்பு வாங்கி இருக்கேன்
பின்ன என்னங்க, கோயம்புத்தூர்ல 'ஸ்ரீதேவி சில்க்ஸ்' எங்க இருக்குனு கேட்டா "கிராஸ் கட் ரோடு அண்ட் டாக்டர் நஞ்சப்பா ரோடு இண்டர்செக்சன்"னு சொன்னா எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது எனக்கும்
அப்புறம் போக போக பழகி போச்சு. அப்புறம் கூகிள் மேப்ஸ் பத்தி தெரிஞ்சுது, மக்கள்கிட்ட போஸ்டல் கோட் மட்டும் வாங்கி கூகிள் இருக்க பயமேன்னு காலம் போச்சு கொஞ்ச நாள். இப்ப ஜி.பி.எஸ் வந்தப்புறம் "நின்னையே கதியென்று..."னு ஆகி போச்சு நிலைமை (ஜி.பி.எஸ் ரகளை எல்லாம் இன்னொரு போஸ்ட்ல சொல்றேன்... நோ பீலிங்க்ஸ் ஒகே)
மத்ததெல்லாம் கூட பரவால்லைங்க... லாஜிக் லாஜிக்னு ஒண்ணு இருக்கே... இங்க மக்கள் அது கிலோ என்ன விலை கேப்பாங்க சில சமயம்...
வந்த புதுசுல Soccer Game Soccer Gameனு ஒரு கூட்டமே பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்தத பாத்து, ஏதோ பெரிய விளையாட்டு போல இருக்குனு விசாரிச்சா...
"In general play, the goalkeepers are the only players allowed to touch the ball with their hands or arms, while the field players typically use their feet to kick the ball into position, occasionally using their torso or head to intercept a ball in midair. The team that scores the most goals by the end of the match wins"னு ஒரு விளக்கம் சொன்னாங்க
"எங்கயோ கேட்ட குரல்" மாதிரி இருக்கேனு கொஞ்சம் உக்காந்து இல்லாத கிட்னிய சட்னியாக்கி யோசிச்சு பாத்தா... அட Footballனு என் மண்டைல பல்பு எரிஞ்சது
அப்புறம் ஏன் இவங்க இதை Soccerனு சொல்றாங்க... நம்மூர்ல சாக்கு போட்டி மாதிரி கடைசீல எதுனா வெப்பாங்களோனு என் சிற்றறிவு சிச்சுவேசன்'தனமா யோசிச்சது...அப்படியானு அவங்கள கேட்டதுக்கு, அதுக்கும் ஒரு விளக்கம் சொன்னாங்க...
ஒரு விஷயம் சொல்லியே ஆகணுங்க, இந்த ஊர்ல விளக்கம் சொல்றதுக்கு மட்டும் குறைச்சலே இல்ல... நான் நீ'னு போட்டி போட்டுட்டு விளக்கம் சொல்லுவாங்க...
ஆனா ஒண்ணு, எப்படி சொன்னா கேக்கறவனுக்கு கொஞ்சம் நஞ்சம் புரிஞ்சதும் மறந்து போகுமோ அப்படி ஒரு விளக்கம் சொல்லுவாங்க. என்னோட ஆத்துக்காரருக்கு இந்த ஊர் ஒத்து போறதுக்கு அதுவும் ஒரு காரணம்னு நான் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்ச உண்மை, இனம் இனத்தோட சேரும் யு சி...:)
ம்...சரி Soccerனு ஏன் பேரு வந்ததுனு கேட்டதுக்கு இந்த ஊர் அக்காச்சி சொன்ன விளக்கம் இதோ...
"Soccer was originally called 'association football' (the name soccer is derived from the word assoc, from the word association)"
இது விளக்கமா வில்லங்கமானு நீங்களே சொல்லுங்க. என்ன கொடும சார் இது? அப்ப அதை assoc னு வெச்சுருக்க வேண்டியது தானே, ஏன் அதை தலைகீழ நிக்க வெச்சு ஒரு தொப்பிய மாட்டி உலக நாயகன் தசாவதாரம் கெட் அப் போடற ரேஞ்சுக்கு கொழப்பனுங்கறேன்
நொந்து போய், எங்க ஊர்ல இது புட்பால்னு சொன்னதுக்கு, "yeah, I know football, that is different"னு சொன்னாங்க
அப்படி என்ன சாமி வித்தியாசம்... நான் வலது காலுல ஒதைக்கரத நீ இடது காலுல ஒதைப்பியோனு கடுப்போட கேட்டா...
"No no...American football is a sport played between two teams of eleven with the objective of scoring points by advancing the ball into the opposing team's end zone. The ball can be advanced by running with it or throwing it to a teammate. Points can be scored by carrying the ball over the opponent's goal line, catching a pass thrown over that goal line, kicking the ball through the opponent's goal posts or tackling an opposing ball carrier in his own end zone" னு விளக்கம்
அதாவது கைல வெச்சு விளையாடினா புட்பால், காலில தட்டி விளையாடினா சாக்கர்... புரிஞ்சு போச்சு... பேக் டு ஸ்கொயர் ஒன்...அதாங்க, இந்த ஊர்ல எல்லாமே தலைகீழ்... கைனா கால், கால்னா கை....அவ்வவ்வவ்வவ்வவ்....
ஏங்க... நான் தெரியாமத்தான் கேக்கறேன்... கால்பந்தாட்டம்னு ஏன் பேரு வந்ததுனு நம்மூர்ல கேட்டா "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சொல்ற சின்ன கொழந்த கூட"....கால்ல ஒதைச்சு ஆடுற ஆட்டம், எனவே அது கால்பந்தாட்டம்னு சொல்லிடும் இல்லையா? இந்த லாஜிக்கை அடிச்சுக்க முடியுமா என்ன?
ஏன் இந்த ஊர்ல மட்டும் எல்லாம் தலைகீழா இருக்கு... இவங்க கேரக்டரயே புரிஞ்சுக்க முடியலியே.... :)
:))