Monday, March 29, 2010

பிரியமானவளே...பகுதி 1

"காயத்ரி...காயத்ரி...காயத்ரி..."

"டீ...காயத்ரி காஞ்சனா மாமி கூப்டுண்டே இருக்கா பாரு. போய் என்னனு கேட்டுண்டு வா" என்றாள் கோகிலா தன் மகளிடம்

"சரிம்மா. தோ வரேன் மாமி"

"மாமி கூப்டேளா" ஈரத்தலையை துவட்டியவாறே பக்கத்து வீட்டுக்கு சென்றாள்

"நாலு அடிக்கு அந்த பக்கம் இருந்து உன்னைய வரவெக்க நான் நாப்பது தரம் கூப்பிடவேண்டினா இருக்கு"

"ஆஹா...நாலு தரம் கூட கூப்பிடல. உங்க சீமந்தப்புத்ரனவிட அதிகமா பொய் சொல்வீங்க போல இருக்கே"

"கொழுப்பாடி நோக்கு. நான் சிவனேன்னு இருக்கேன். என்னை ஏண்டி வம்பிழுக்கற" என்றான் காஞ்சனா மாமியின் மகன் கார்த்தி என்கிற கார்த்திகேயன்

"நீ சிவனேன்னு இருக்கியோ...ஷிவானிஏன்னு இருக்கியோ..." அதே தெருவில் கடைசி வீட்டில் இருக்கும் கோமதி மாமியின் மகள் ஷிவானியிடம் கார்த்தி வழிய போய் பேசுவதை சமயம் பார்த்து கேலி செய்தாள் காயத்ரி

"ஏய்...." என்று பார்வையாலேயே அவளை அடக்கினான் கார்த்தி

பத்து வயது முதல் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் கார்த்தியும் காயத்ரியும் வம்பு பேசுவது புதிதல்ல என்பதால் காஞ்சனா அதை கண்டு கொள்ளவில்லை

"உங்க ரகளைல உன்ன எதுக்கு கூப்டேனோ அத விட்டுட்டு என்னமோ பேசிண்டு இருக்கேன்"

"எதுக்கு மாமி கூப்டேள்"

"இந்தாடி..இத வாங்கிக்கோ"

"என்னதிது..."

"உனக்கு இன்னிக்கி பிறந்தநாள்னு ஒரு பொடவை வாங்கினேன்...பிரிச்சு தான் பாரேன்"

"வாவ்...அழகா இருக்கு மாமி. எதுக்கு மாமி இதெல்லாம்... "

"ம்...தலைல வெச்சுக்க" என்றான் கார்த்தி கேலியாக

"போடா நீ.." என்றவள் அப்போது தான் பூஜை அறையில் இருந்து வெளியே வந்த கார்த்தியின் தந்தை ரங்கராஜனிடம் "வாங்கோ மாமா, இப்படி மாமியோட சேந்து நில்லுங்கோ. சேவிச்சுகறேன்"

"தீர்க்க ஆயுசா, தீர்க்க சுமங்கலியா, எல்லா செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க" என்று தம்பதியாய் வாழ்த்தினர்

இது ஒரு ஒரு வருடமும் நடக்கும் விஷயம் தான். தனக்கு பெண்கள் இல்லை என்ற குறை காஞ்சனாவுக்கு எப்போதும் உண்டு. அதை இப்படி தீர்த்து கொள்வாள்

"சரி இப்படி வா என்னோட கால்லயும் விழு. அப்போதான் என்னோட gift தருவேன்" என்றான் கார்த்தி

"அஸ்கு புஸ்கு...அதுக்கு வேற ஆளப்பாரு...போடா உன் கால்ல எல்லாம் விழ முடியாது"

"சரி பர்த்டே அன்னைக்கி பொழைச்சு போ" என்றவாறே தான் வாங்கிய பரிசை அளித்தான்

காயத்ரியை விட கார்த்தி சில மாதங்கள் மட்டுமே பெரியவன். கார்த்தி இன்ஜினியரிங் மூன்றாம் வருடமும் காயத்ரி BSC chemistry மூன்றாம் வருடமும் படித்து வந்தனர். கடந்த சில வருடங்களாக இருவரும் பரிசுகள் பரிமாறி கொள்வது வழக்கமானது தான்

"காயத்ரி...டீ...காயத்ரி...உங்க அக்கா போன்ல இருக்கா. வந்து பேசிட்டு போ" அம்மா கோகிலாவின் குரல் கேட்க "சரி மாமி நான் அப்புறம் வரேன்" என கிளம்பினாள்

"நம்மாத்துலையும் இப்படி ஒரு பெண் கொழந்தை இருந்தா வீடே நெறைஞ்சு இருக்கும் இல்லையாண்ணா" என்றாள் காஞ்சனா கணவனிடம்

"காலம் கடந்த யோசனை காஞ்சு" என்றார் ரங்கராஜன் கேலியாக

"ச்சே...தோளுக்கு மேல வளந்த புள்ளைய பக்கத்துல வெச்சுட்டு பேச்சை பாரு..." என்று பொய் கோபம் காட்டினாள்

"அம்மா நீ ஒண்ணும் டென்ஷன் ஆகாதே..அதுக்கு ஒரு சுலபமான வழி நான் சொல்றேன்" என்றான் கார்த்தி

"அது என்னடா சுலபமான வழி"

"காஞ்சு...நான் என்ன சொல்றேன்னா..." என்று கார்த்தி தன் தந்தையின் குரலில் பேச

"டேய்...அம்மாவ காஞ்சுனு பேரா சொல்ற...ஒதைப்பேன்" என்றாள் காஞ்சனா

"உன் ஆத்துகாரர் சொன்னா மட்டும் "ஏன்னா...கூப்டேளா..." னு கொஞ்சற...பெத்த மகன் நான் சொன்னா tension ஆ"

"போட்டேன்னா ஒண்ணு வாய் மேல...பேச்சு மட்டும் அப்படியே உங்க அப்பன கொண்டிருக்க..."

"அம்மா மகன் சண்டைல என்னை ஏண்டி இழுக்கற" என்றார் தினசரியை படித்தபடி "அதுசரி...அது என்னடா சுலபமான வழி...அதை சொல்லு மொதல்ல" என்றார் ரங்கராஜன்

"அது ஒண்ணுமில்லப்பா...very simple ...எனக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டா நம்மாத்துக்கு ஒரு பொண்ணு வந்துடுவாளோனோ...அது தான் சொன்னேன்"

"இன்னும் இருபது முடியல...உங்க புள்ளைண்டானுக்கு கல்யாணம் கேக்குது கேட்டேளாண்ணா..."

"கேட்டேன் கேட்டேன்...கலி முத்திடுச்சு காஞ்சு..வேற என்ன?"

"இது நல்ல கதையா இருக்கே...ஏன்பா..நீங்க அம்மாவ கல்யாணம் பண்ணினப்ப உங்க வயசு பத்தொன்பது தான...நாங்க சொன்னா மட்டும் கலி முத்திடுச்சுனு dialogue "

"அது அந்த காலம்டா"

"இந்த சாக்கு எல்லாம் வேண்டாம்"

"இப்ப என்ன? நோக்கு கல்யாணம் பண்ணிக்கணும் அதானே...டீ காஞ்சு உன் தம்பி வரதனோட பொண்ணு வத்சலாவ பாக்கலாமா" என வேண்டுமென்றே எட்டாவது கூட தாண்டாத கார்த்தியின் மாமன் மகளை பற்றி பேச

"ஐயோ சாமி ஆள விடுங்கோ..." என்று சிதறி ஓடினான் கார்த்தி

_________

கார்த்தி வெளியே வரவும் காயத்ரி பூக்கூடையுடன் கோவிலுக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே வரவும் சரியாய் இருந்தது

"எங்க...? மகாராணி அதுக்குள்ள நகர்வலம் கெளம்பியாச்சா?" என்றான் கேலியாக

"ம்...வெட்டி ராஜாக்களே கெளம்பறப்ப நாங்க கெளம்பினா என்னவாம்?"

"உடம்பு பூரா கொழுப்ப தவிர ஆண்டவன் வேற ஒண்ணும் வெக்கலடி நோக்கு"

"ஆஹா...ஐயா நீங்க தெனமும் வடிச்சு கொட்டறேளேன்னோ...கொழுப்பு நேக்கு"

"வாயடி உன்கிட்ட பேசி ஜெய்க்க முடியுமா? அது சரி...எங்க கெளம்பிட்ட"

"இந்த கேலி தான வேண்டாங்கறது...பூக்கூடை எடுத்துட்டு காலேஜ்ஆ போவா? கோவிலுக்கு தான்"

திடீரென நினைவு வந்தவனாய் "ஏண்டி காத்தால ஒரு நிமிஷம் அம்மாகிட்ட என்ன மாட்டி விட்டுருப்ப...எப்ப என்ன பேசறதுன்னு இல்லையா நோக்கு"

"என்ன சொல்ற..." என்றாள் புரியாமல்

"ம்...ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காத...அம்மா முன்னாடி எதுக்கு ஷிவானி பத்தி பேசின "

"ஹா ஹா ஹா...நல்லா சிக்கினயா...இன்னும் கூட சொல்லி இருப்பேன்...போனா போறதுனு விட்டேன்"

"பெரிய மனசு தான்..."

"அடடா...இதுக்கு பேரு தான் டெலிபதியா..."

"என்ன?" என்றான் கார்த்தி புரியாமல்

"அங்க பாரு ஷிவானிய பத்தி பேசினா அவளே எதுக்க வர்றா"

"வாவ்..."

"என்ன வாவ்..."

"ஒண்ணும் இல்ல...நீ சொன்னா மாதிரி டெலிபதினு நெனச்சேன்"

"யாருக்கு தெரியும். அவள வர சொல்லிட்டு தான் நீ ஆத்த விட்டு கிளம்பினயோ என்னமோ"

"அடிப்பாவி...இன்னும் அந்த அளவுக்கு எல்லாம் போகல"

"ஒஹோ.....ஆனா போற எண்ணம் இருக்கு போல"

"கொஞ்சம் பேசாம இரு காயத்ரி, அவ பக்கத்துல வந்துட்டா"

"ஹாய் ஷிவானி" என்றாள் காயத்ரி கார்த்தியை முந்திக்கொண்டு வேண்டுமென்றே

"ஹாய் காயத்ரி..என்ன ரெண்டு பேரும் ஜோடியா கிளம்பிடீங்க போல"

"அதெல்லாம் இல்ல ஷிவானி. காயத்ரி கோவில் போறா. நான் சும்மா இன்னிக்கி சனிக்கிழமை லீவ் தானேனு என் friend வீட்டுக்கு போறேன்" என்றான் அவசரமாக

"ஒ அப்படியா.."

"காயத்ரி நீ சீக்கரமா ஆரத்திகுள்ள கோவில் போகணும்னு சொன்னியோன்னோ. நீ வேணும்னா போய்க்கோ" என்றான் ஷிவானியுடன் தனியே பேசும் ஆசையுடன்

அதை புரிந்து கொண்ட காயத்ரி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் "ரெம்ப வழியாதடா" என்று விட்டு ஷிவானியிடம் "எங்க அக்கா புக்காத்துல இருந்து வர்றேன்னா, அதுக்குள்ள கோவிலுக்கு போயிட்டு ஆத்துக்கு போணும். சரி ஷிவானி அப்புறம் பாக்கலாம். Bye "

"Bye காயத்ரி..பாக்கலாம்...எனக்கும் கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு டைம் ஆச்சு கெளம்பறேன்" என்று விடை பெற்று செல்ல பாவமாய் நின்றான் கார்த்தி

உன்னிடம் பேசும்போது மட்டும்
உலகம் வேகமாய் சுத்துகிறதோ
பத்துமணி நேரம் கூட
பத்து நொடியாய் கரைகிறதே...

பார்க்கும்வரை பலவும் பேசிட
பலநாள் ஒத்திகைபார்க்கிறேன்
உனைப்பார்த்ததும் உலகமேமறந்து
ஊமையாகிறேனே என்னவளே...

என்னமாயம் செய்தாய்
எனையேநான் மறக்க - உன்நினைவில்
பிழைகள் தினம்செயும்
பித்தனாக்கினாயே பிரியமானவளே...

தொடரும்...

Thursday, March 25, 2010

என் சுவாச காற்றே... - பகுதி 5 (இறுதி பாகம்)

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

தன்னை தானே மன்னிக்க இயலாமல் தவித்தான். ஆனால் இந்த நிகழ்வு அவள் மேல் தான் கொண்ட காதலை அவனுக்கு தெளிவாய் உணர்த்தியது. அவள் இல்லாத ஒரு வாழ்வு சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தான்...

................

"மதி..."

"...."

"மதி ப்ளீஸ்...சாரி மதி. நான் வேணும்னு அடிக்கல...நீ அப்படி பேசினது தாங்காம தான். சாரிமா ப்ளீஸ் மதி. இப்படி பேசாம இருக்காத ப்ளீஸ். கஷ்டமா இருக்குடா ப்ளீஸ். வேணும்னா நீயும் கோபம் தீர என்னை அடிச்சுக்கோ"

"...."

"மதிம்மா ப்ளீஸ். ஒரு வாரமா என்னால தூங்கவே முடியல. நீ அழுத முகமா நின்னது தான் கண்முன்னாடி வருது. நீ ஒரு வாரம் பேசாம இருக்கறது ஒரு யுகமா இருக்கு மதி ப்ளீஸ் ப்ளீஸ் மா"

"...." அவன் பேச்சே காதில் விழாதது போல் ஏதோ புத்தகத்தை படித்து கொண்டு இருந்தாள்

"மதி....." பொறுமை இழந்தவனாய் அவள் முகத்தை கைகளில் ஏந்தி கண்களால் கைது செய்ய முயன்றான்

மனம் கவர்ந்தவளின் நெருப்பு பார்வையை தாங்க இயலாமல் கரைந்தான்

"ப்ளீஸ் குட்டிமா...நீ என்ன சொன்னாலும் கேக்கறேன். இப்படி யாரோ மாதிரி முகம் திருப்பாத"

"...." எப்பொழுதும் சண்டைக்கி வரும் ரகுவின் இந்த கொஞ்சலும் கெஞ்சலும் மனதை வருத்தினாலும் தன்னை எப்படி அவன் சந்தேகிக்கலாம் என்பதே நெஞ்சை நெரித்தது. எதுவும் பேசாமல் அவன் கை விலக்கினாள்

"மதி இங்க பாரு....மதி இப்படி பிடிவாதம் செஞ்சா எப்படிடா. நான் என்ன செஞ்சா உன் கோவம் கொறயும்னு சொல்லு"

"நீ என்ன செஞ்சாலும் என்மேல சந்தேகப்பட்டது இல்லைனு ஆய்டுமா?" ஒரு வாரத்திற்கு பின் பேசிய முதல் வார்த்தை என மகிழ்ந்தான்

"இல்ல மது...அது...சந்தேகம்னு இல்ல...நீ என்னை புரிஞ்சுகலைன்னு தான்..."

"உன்ன என்ன புரிஞ்சுக்கணும் நான்..."

மண்டையில் அடித்தது போல் இருந்தது. ஐயோ இன்னும் தன் காதலை அவளிடம் தான் கூறவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தான்

"மதி...அதை எப்படி சொல்றதுன்னு...நான் வந்து.....அது..."

"உன்கிட்ட பேச எனக்கு நேரம் இல்ல...நான் படிக்கணும்....please leave me alone . உன் தொல்ல தாங்காம தான மொட்ட மாடில வந்து படிச்சுட்டு இருக்கேன் போ இங்க இருந்து"

"மதி ப்ளீஸ் இப்படி கோபபட்டா நான் எப்படி..."

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்...இனி நீ யாரோ நான் யாரோ"

"மதி ப்ளீஸ் அப்படி சொல்லாத"

"ரகு கடைசியா சொல்றேன். நீ அப்படி பேசினத என்னால எப்பவும் மறக்க முடியாது. நீ என்ன சமாதானம் சொன்னாலும் நீ என்ன காயபடுத்தினது மாறாது. விட்டுடு"

"விட முடியாது மதி. எனக்கு நீ வேணும்...எனக்கு காலம் பூரா நீ வேணும்"

"என்ன?"

"ஆமா மது எனக்கு நீ வேணும் குட்டிமா ப்ளீஸ். என்ன கல்யாணம் பண்ணிப்பயா?"

"...." இதை எதிர்பாராத மதி பேச்சிழந்து நின்றாள்

"மதி இப்படி எதுவும் பேசாம இருந்தா பயமா இருக்கு மது ப்ளீஸ். say something "

"வெளயாடாத ரகு"

"மது நான் சத்தியமா சொல்றேன். I love you Madhu "

"ஆனா ...ஏன்.....எப்படி...."

"இதுக்கெல்லாம் என்கிட்டே பதில் இல்ல கண்ணம்மா. ஆனா நீ எனக்கு வேணும்"

"இப்படி திடீர்னு..."

"நான் உண்மைய தெளிவா சொல்லிடறேன் மதி. ரெண்டு வாரம் முன்னாடி வரைக்கும் என் மனசுல இந்த எண்ணம் எதுவும் இல்லைன்னு சொன்னா நம்பறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்"

"குழப்பற ரகு" என்றாள் நிஜமான குழப்பத்துடன்

"இல்ல...எனக்கு எந்த குழப்பமும் இப்ப இல்ல. நீ மகேஷ் கிட்ட closeஆ பேசினத என்னால ஏத்துக்க முடியல. நீ எனக்கு சொந்தமானவனு உணர்ந்த தருணம் அது. எனக்குள்ள இருந்த possessiveness அப்பத்தான் வெளிபட்டதுனு நெனைக்கிறேன்"

"அதான் சந்தேகபட்டயா?" இதை இப்போது சொல்லும் போது கூட அவள் குரல் தழுதழுத்தது. அவனால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை

அவள் சம்மதத்திற்கு காத்திருக்கும் பொறுமை கூட அற்றவனாய் அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்

அவளும் மறுக்காமல் பேசாமல் ஒட்டி நின்றாள். ஏதோ எல்லா கவலையும் பஞ்சாய் பறந்து மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில இருப்பதாய் உணர்ந்தாள். இது தான் காதல் என்பதா என்ற பாடல் மின்னலாய் மனதில் தோன்றி மறைந்தது. ஆனாலும் அவன் சந்தேகித்தது முள்ளாய் உறுத்தியது. சிறிது சிறிதாய் தேம்பல் கேவலானது. அழுததும் மனம் சமாதானம் அடைந்தது போல் இருந்தது


"ப்ளீஸ் baby . அழாத ராஜாத்தி. என் செல்லம் இல்ல, ப்ளீஸ்"

"என்னால தாங்க முடியல....எப்படி நீ...என்ன...அதுவும் மகேஷ் கூட...அவன் எனக்கு அண்ணன் மாதிரி. அவன் கூட ஒரு தடவை சொன்னான். எனக்கு உன்ன மாதிரி ஒரு சிஸ்டர் இருந்தா வீட்டுல செம ஜாலியா இருக்கும்னு"

"மது அப்போ அதை புரிஞ்சுக்கற பொறுமை எனக்கு இருக்கலடா. ஏன் நீ அவன் கூட பேசறது எனக்கு கோவம் வருதுனு புரியாம குழப்பம். என் மனசுல நீ இருகேங்கரத உணர முடியாம ரெம்ப தவிச்சுட்டேன் மது"

"இப்ப மட்டும் என்ன நிச்சியம்"

"என்ன..?" என்று புரியாமல் கேட்டான்

"நான் உன்மனசுல இருகேங்கறது இப்ப மட்டும் என்ன நிச்சியம்"

"இதோ இப்படி கைபிடிக்குள்ள நெஞ்சுக்கு பக்கத்துல வெச்சுட்டு இருக்கேனே உன்ன. இன்னும் நம்பலையா?"

"உம்ஹும்...."

"என்ன செஞ்சா நம்புவ சொல்லு செய்றேன்" என்றான் நிஜமான ஆதங்கத்துடன்

"எங்க அம்மா அப்பா கிட்ட பொண்ணு கேட்டு கழுத்துல தாலி கட்டு அப்புறம் நம்பறேன்"

"அடிப்பாவி நீ என்ன விட fast ஆ இருக்க"

"பொண்ணுங்க எப்பவும் முடிவு பண்ணிட்டா அப்புறம் fast தான்"

"அப்படியா பசங்க எத்தனை fast னு இப்ப காட்டட்டுமா?" என்று முகத்தை நோக்கி குனிந்தான்

"ச்சே...ரெம்ப மோசம் நீ" என்றவாறே அவன் பிடியில் இருந்து விலக முயன்றாள்

"ஒகே ஒகே நான் ஒண்ணும் செய்யல. ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பக்கத்துல இரு மது ப்ளீஸ்"

அதுவே தன் விருப்பமும் என்பது போல் உரிமையாய் அணைத்து நின்றாள்

"நம்ம வீட்டுல என்ன சொல்வாங்கன்னு நீ நெனைக்கற" என்றாள் யோசனையாய்

"இப்போதைக்கி கொஞ்ச நாள் எதுவும் சொல்ல வேண்டாம் மது. திருட்டுத்தனமா காதலிக்கறதுல ஒரு த்ரில் இருக்கு இல்லையா. அதை கொஞ்சம் அனுபவிக்கலாம். studies எல்லாம் முடிச்சுட்டு அப்புறம் சொல்லலாம் சரியா?"

"எல்லாம் நீயே முடிவு பண்ணிட்டு சும்மா பேச்சுக்கு கேக்கற இல்லையா? கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் ஒண்ணும் நடக்காது. ஞாபகம் வெச்சுக்க" என்று செல்லமாய் மது மிரட்ட அதற்கே காத்திருந்தவன் போல்

"உத்தரவு மகாராணி" என்று தலை பணிய அங்கு ஒரு இனிய சங்கமம் உதயம் ஆகியது. இனி சுவாச காற்றுக்குக்கூட அவர்களுள் இடைவெளி இல்லை....


என் சுவாச காற்றே...
சுவாசமின்றி காற்றில்லை
காற்றின்றி சுவாசமில்லை - அதுபோல்
நீயன்றி நானில்லை
நானின்றி நீஇல்லை
நம் காதலிலே
நீ நான் பேதமில்லை....

முற்றும்

இன்னும் அழகான ஒரு காதல் கதை "பிரியமானவளே..." அடுத்த வாரம்  முதல். படிக்க தவறாதீர்கள்...

Tuesday, March 23, 2010

பொண்ணு பாக்க போறோம்...

இநத பதிவோட முடிவுல சிலரை தொடர் பதிவு எழுத கூப்பிட்டு இருக்கேன். எழுதாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கை - "இன்னும் பத்து நாளைக்குள்ள தொடர் பதிவு எழுதி முடிக்கலைனா இன்னும் பத்து தொடர் பதிவுக்கு உங்களை கூப்பிடுவேன்னு பணிவு எச்சரிகையுடன் (பணிவன்புடன்க்கு எதிர்பதம்) தெரிவித்து கொள்கிறேன்"


சரி கதைக்கி போவோம் ரெண்டு வாரம் முன்னாடி எங்க family friend ஒருத்தரோட பொண்ணு போன் பண்ணி "ஆண்ட்டி எங்க அம்மா அப்பாவுக்கு 20th wedding anniversary வருது நாம எல்லாம் சேந்து ஒரு surprise பார்ட்டி செய்யலாமானு கேட்டா"

அடடா அம்மா அப்பா அசந்தா தனக்கே அலைபாயுதே ஸ்டைல்லே வெட்டிங் கொண்டாடற பசங்க இருக்கற இந்த காலத்துல பெத்தவங்க மேல இத்தனை பாசமான்னு மாடு விட்டு மேயவெக்கற ரேஞ்சுக்கு (அதாங்க புல்லரிச்சு போய்னு சொல்ல வந்தேன்) feel பண்ணி "கண்டிப்பா செய்யலாம்"னேன். நமக்கு தான் மத்தவங்கள ஜெர்க் அடிக்க வெச்சு பாக்கறதுல தனி சுகமாச்சே

இன்னும் ரெண்டு தங்கமணிக கூட கூடி கும்மி அடிச்சு அப்படி இப்படி தேத்தி ஒரு மொக்க பிளான் போட்டாச்சு. அந்த தம்பதிக்கு ஹார்ட் அட்டாக் வர்ற ரேஞ்சுக்கு Surprise ம் குடுத்தோம். அது தனி பதிவா போடற அளவுக்கு பெரிய கலாட்டா. அது இன்னொரு தரம் சொல்றேன்

இநத பொண்ணு பாக்க போறோம் தலைப்பு எங்க வருதுன்னா...இந்த surprise பார்ட்டில அந்த தம்பதிய கலாட்டா பண்ணலாம்னு யாரோ ஒருத்தர் அந்த ரங்கமணி கிட்ட "பொண்ணு பாக்க போன கதைய சொல்லுங்க" னு கேட்டாங்க

அப்படி ஆரம்பிச்சது அப்படியே எல்லாரும் ரெம்ப ஆர்வமா சொல்ல ஆரம்பிச்சாங்க. சிரிச்சு சிரிச்சு திரும்பவும் பசிக்கவே ஆரம்பிச்சுடுச்சு (எல்லாருக்கும் பொதுவா சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்கும் எனக்கு என்னமோ பசிக்கும்...ஒரு வேள விழுந்து விழுந்து சிரிக்கறதால exercise மாதிரி ஆகி பசிக்க ஆரம்பிச்சுடுது போலனு ரங்கமணி கிட்ட சொன்னா...வித்தியாசமா இருக்கறதால தான் நீ தங்கமணினு ரங்கமணி கமெண்ட் வேற..எல்லாம் நேரம்)

அதுல ஒருத்தர் தன்னோட மனைவிய பொண்ணு பாக்க போனது மட்டும் இல்லாம அதுக்கு முன்னாடி பொண்ணு பாக்க போன கதை எல்லாம் பேரு ஊரு detail எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாரு பின் விளைவுகள் பத்தி யோசிக்காம (அடுத்த நாள் போன் பண்ணி எந்த hospital ல இருக்கார்னு கேக்கனும்னு நெனச்சேன்...ஆனா நம்ம சின்ன கலைவாணர் விவேக் சொல்ற மாதிரி அவங்க அவங்க பிரச்சனைய அவங்க அவங்க தான் deal பண்ணனும்னு விட்டுட்டேன்)

ஆனா அது தான் அந்த பார்ட்டியோட மேல் விளக்கா (அதாவது highlight ) ஆய்டுச்சு

அப்ப தான் தோணுச்சு இதை ஏன் ஒரு தொடர் பதிவா போட கூடாது. அவங்க அவங்க மனசு பாரத்த எறக்கி வெசாப்பலையும் இருக்குமேன்னு நெனச்சேன். ஏதோ நம்மளால ஆனா ஒரு சிறு உதவி

மொதல்ல என் (சோக) கதைய சொல்றேன் கேளுங்க

என்னை பொண்ணு பாக்க எல்லாம் வரலங்க....அப்பவே பாக்கற மாதிரி கூட இல்லையான்னு கேட்டா அப்புறம் உங்கள நித்யானந்தா சாமி கிட்ட புடிச்சு குடுத்துடுவேன்...பொறந்ததுல இருந்தே பாக்கற மூஞ்சிய என்ன புதுசா பாக்கறதுன்னு தான்...ஆமாங்க, ரங்கமணி வேற யாரும் இல்லைங்க. சொந்தம் தான். ஒரு வகைல மாமா மொற (மொறமாமானு தினமும் மொறச்சு மொறச்சு நிரூபிச்சுட்டு தான் இருக்காக), இன்னொரு வகைல அத்தை மகன். அது என்ன வகைன்னு எங்க அம்மாவும் நெறைய வாட்டி சொல்லிடாங்க, எனக்கு தான் விளங்கல. எந்த வகையா இருந்தா என்ன...அதான் வகையா சிக்கியாச்சே...

பொண்ணு பாத்த கதை தான் இல்ல...எப்படி கல்யாணம் முடிவு ஆச்சுனு சொல்றேன்... தமிழ் சினிமால வர்ற மாதிரி மொறை வெச்சு எல்லாம் பேசி பழக்கம் இல்ல. பெரியவங்களும் அப்படி எல்லாம் யோசிச்சதில்ல. பெரிய கொடுமை என்னன்னா இவர நான் அண்ணான்னு தான் கூப்பிடுவேன். நாங்க பாண்டவர் பூமி படத்துல வர்ற மாதிரி பெரிய குடும்பம். எட்டு cousins சேந்து அந்த ஏரியாயவே கலக்குவோம்...அது எல்லாம் ஒரு காலம்...அந்த ஊரே எங்கள பாத்து பொறாம பட்ட காலம் அது (இது கொஞ்சம் ஓவர் build up தான்...)

அந்த எட்டு cousins ல இவர் எல்லாம் இல்ல. ஏன்னா எப்ப பாத்தாலும் எங்க எட்டு பேரையும் மார்க் சீட் வாங்கற அன்னிக்கி எல்லாம் ஒரு example வெச்சு திட்டரதுன்ன இவர வெச்சு தான் திட்டுவாங்க. படிப்பாளி, பண்பாளி, அறிவாளி, பொறுப்பாளி, பப்பாளி.... இப்படி இன்னும் என்ன என்னமோ இவர் புகழ் பாடி தான் அர்ச்சனை நடக்கும். அதன் காரணமா சில சமயம் இவர் மேல கோபம் தான் வரும்

ஒரு ஒரு வருசமும் அவங்க ஊர்ல நடக்கற தேர் திருவிழாவுக்கு போய் ஒரு கலக்கு கலக்கிட்டு வருவோம் நாங்க எட்டு பேரும். என்னடா இவ கீறல் விழுந்த ரெகார்ட் கணக்கா எட்டு எட்டு னு சொல்றான்னு நெனைக்கறீங்களோ....என்னோட கல்யாண பத்திரிக்க friends க்கு எல்லாம் குடுக்க கூட நாங்க எட்டு பேரு சேந்து தான் போனோம் அதுவும் ஒரே ambassador கார்ல (இன்னிக்கி இருக்கற சைஸ்க்கு அந்த கார் எங்கள்ள 4 பேர கூட தாங்கதுங்கறது தனி கதை...)

அவங்களும் அப்ப அப்ப எங்க வீட்டுக்கு வருவாங்க

இப்படி இருந்த சமயத்துல இவரு துபாய்க்கு வேலை கெடைச்சு போய்ட்டாருனு ஒரு நியூஸ் வந்தது. சொல்லவே இல்ல பாருனு எங்க cousins குள்ள பேசிகிட்டோம். நாங்க பேசினது கேட்டுச்சோ இல்ல திடீர் நாநோதயமோ எங்க எட்டு பேரு வீட்டுக்கும் லெட்டர் போட்டாரு...உடனே நீங்க எதாச்சும் கற்பனை பண்ணிகாதீங்க...எங்க அம்மா அப்பாவுக்கு தான் லெட்டர் போட்டாரு எனக்கு இல்ல

அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு லீவ்க்கு இந்தியா வந்தப்ப வீட்டுக்கு வந்தாரு போனாரு. அப்புறம் ஒரு ஒரு வருசமும் இது ஒரு வழக்கமாச்சு. அப்ப அப்ப ஈமெயில் எல்லாம் கூட வரும், நானும் அனுப்பறதுண்டு

இவருக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கறாங்கன்னு நியூஸ் வந்தது. எங்க அப்பா கூட நெறைய ஜாதகம் எல்லாம் வாங்கி குடுத்தாரு. அப்படியும் ஒண்ணும் அமையல (அதுக்கு ரங்கமணி இப்ப சொல்ற கமெண்ட் என்ன தெரியுமா "உன்ன என் தலைல கட்டணும்னு உங்க அப்பா வேணும்னே பொருந்தாத ஜாதகம் குடுத்து ஏமாத்திட்டாருன்னு"....நல்லதுக்கு காலம் இல்ல)

நானே ஒரு தடவ இவங்க வீட்டுக்கு போனப்ப (எப்பவும் போல எட்டு பேரும் தான்) துபாய் creek கிட்ட(கடல் கரை மாதிரி) இவர் நிக்கற மாதிரி ஒரு போட்டோவ செலக்ட் பண்ணி பொண்ணு பாக்கறப்ப குடுங்கன்னு அவரோட தங்கை கிட்ட சொன்னேன் (அப்படியும் விதி விடல...)

திடீர்னு ஒரு நாள் இவங்க வீட்டுல இருந்து என்னோட ஜாதகம் கேட்டாங்க. ஒண்ணும் புரியல. ஜாதகத்த பாத்த ஜோசியர் வேற பத்துக்கு பன்னண்டு பொருத்தம்னு ஒரே அடியா அடிச்சுட்டாரு (ஒரு ஒரு வாட்டி இப்ப சண்டை வர்றப்ப எல்லாம் நிச்சியம் அந்த ஜோசியர் மண்டை உருள்றது தனி கதை...)

அப்புறம் அந்த வீட்டுல பேசி இந்த வீட்டுல பேசி முடிவு பண்ணிடாங்க. அப்புறம் என்ன "மாங்கல்யம் தந்து நானே..." தான்

நெறைய சினிமா எல்லாம் பாத்து பொண்ணு பாக்க வர்றத பத்தி நெறைய கற்பனை எல்லாம் பண்ணி வெச்சு இருந்தேன். எல்லாம் கனவாவே போச்சு...இருந்தாலும் மனம் போல் மாங்கல்யம்னு ஒரு "சுபம்" போட்டதால சமாதானம் பண்ணிகிட்டேன்

எனக்கு தான் பொண்ணு பாக்க வந்த அனுபவம் இல்ல...உங்க அனுபவத்த சொல்லுங்க...கேட்டு மனச தேத்திகறேன்


நீங்க தங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க வந்த கதையையும்...ரங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க போன கதையையும்...இன்னும் கல்யாணம் ஆகலேன்னா எப்படி இருக்கணும்னு உங்களுக்குள்ள இருக்கற கற்பனையும் அள்ளி வீசுங்க

இந்த பதிவ தொடரனும்னு இவங்கள எல்லாம் கேட்டுக்கறேன்(எச்சரிக்கறேன்) :-

பொற்கொடி

கண்மணி

சின்ன அம்மணி

கண்ணகி

Dubukku

My Days (Gops )

பத்மா

ப்ரியா

தக்குடுபாண்டி

ஐந்திணை

அனன்யா மகாதேவன்

முத்துலெட்சுமி

Dhans

புதுகை தென்றல்

அறிவிலி

Monday, March 22, 2010

என் சுவாச காற்றே... - பகுதி 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

மருண்ட பார்வையுடன் இத்தனை நெருக்கத்தில் அவளை கண்டவுடன் காலை முதல் தனக்குள் இருந்தது வெறும் கோபம் அல்ல என்பதை அவன் மனம் உணர்ந்தது. மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த ஒரு புதிய உணர்வில் தத்தளித்தான்...

ரகுவின் இந்த புதிய பார்வையின் அர்த்தம் விளங்காமல் அவன் பிடியில் இருந்து திமிறினாள் மதி

அவளை விட்டுவிட மனம் இன்றி "மதி ப்ளீஸ் கோபப்படாம சொல்றத கேளு"

"முடியாது நான் சொல்றத நீ எப்பவாச்சும் கேட்டு இருக்கயா?"

தன்னை அவள் உணரவில்லையே என்ற ஆதங்கம் கோபமாய் மாற "மதி...." என்று பிடியை இறுக்கினான்

அதை ரகுவின் வழக்கமான கோபம் என நினைத்து "விட்றா...இல்லேன்னா பாட்டிய கூப்பிடுவேன்" என்றபடி "பாட்டி...." என்று சத்தமாக அழைத்தாள்

"டேய் ரகு. என்னடா அவளோட வம்பு" என பாட்டி கேட்டுகொண்டே சமையல் அறைக்கு வர அவளை பிடித்து இருந்த கை விட்டு விலகி நின்றான்

"ஒண்ணும் இல்ல பாட்டி. சக்கர கொஞ்சம் extra போடசொன்னா சண்டைக்கு வர்றா" என சமாளித்தான்

"என்ன மதிம்மா இது?" என்ற பாட்டியிடம்

"இல்ல பாட்டி...அவன் தான்...'' அவள் முடிக்கும் முன் பாட்டிக்கு பின் நின்றபடி ஆட்காட்டி விரல் உயர்த்தி கோப பார்வையால் அடக்கினான் அவளை. அவளும் ஏனோ மௌனம் காத்தாள்

"சரி விடு...ரகு மகேஷ் தம்பிகிட்ட நம்ம கோவில் பத்தி சொல்லிட்டு இருந்தேன், பாக்கணும்னுச்சு. காப்பிய குடிச்சுட்டு இருட்டறதுக்குள்ள வெரசா போயிட்டு வாங்க"

"சரி பாட்டி" என்று ரகு முடிக்கும் முன்

"நானும் போறேன் பாட்டி" என்று வேண்டுமென்றே மதி கூற

"ஒரு மண்ணும் வேண்டாம். நீ வீட்லயே இரு" என்று ரகு மறுக்க

"நான் வந்தா உனக்கு என்ன? பாரு பாட்டி இவன"

"கூட்டிட்டு தான் போயேண்டா. இவளுக்கு தனியாவா வண்டி கட்ற. நடந்து போறது தான"

"என் friends கூட நான் ஜாலியா இருந்தா அவளுக்கு பொறுக்காது பாட்டி. அதை கெடுக்க தான் வர்றேன்கறா" என்று ஏதேதோ சொல்லி அவளை அழைத்து செல்வதை தவிர்க்க முயன்றான்

"எல்லாம் சும்மா பாட்டி. இவன் பண்ற திருட்டுத்தனம் எல்லாம் எனக்கு தெரிஞ்சுடும்னு..." வேண்டுமென்றே ரகுவிற்கு ஏட்டிக்கு போட்டியாய் மதி பேச

"மதி நீ போய் மொகம் அலம்பி கெளம்பு. ரகு அவளையும் கூட்டிட்டு சீக்கரம் போயிட்டு வா" என்று பெரியவள் கட்டளை போல் சொல்ல அதற்கு மேல் பேச வழியற்று மௌனியானான் ரகு

"கடவுளே எப்படி தான் நாளைக்கி வரைக்கும் சாமாளிக்க போறேனோ? நைட் தங்கமாட்டோம் என்ற நண்பர்களை நிச்சியம் தங்கவேண்டும் என வற்புறுத்தி அழைத்தது தான் தானே" என மனதிற்குள் நொந்து கொண்டான் ரகு

"இந்த மதி ஏன் இப்படி நடந்துக்கறா? ச்சே சித்ரவதையா இருக்கு" என மேலும் குழம்பினான்

---------------

ரகுவிற்கு இந்த புதிய உணர்வு முழுதாய் புரிபடவில்லை என்றே சொல்லலாம். புதியதாய் காணும் பெண் என்றால் மனமாற்றத்தை உணர்வது எளிதாக இருக்கும். குழந்தை பருவம் முதல் ஓடி விளையாடிய உறவில் உண்டான மாற்றத்தை இனம் காண முடியாமல் தவித்தான்

மதிக்கும் ரகுவின் மனமாற்றம் புரியவில்லை. தான் அவன் நண்பர்களுடன் பேசினால் ரகுவை பற்றிய ரகசியங்களை மதி அறிந்து கொள்வாள் என அவன் கோபப்படுவதாய் எண்ணினாள்

கோவிலுக்கு என்பதால் அழகிய பாவாடை தாவணியில் தேவதையாய் நின்ற மதியை கண்டதும் மனதில் இருந்த கோபம் எல்லாம் பனியாய் உருக முகம் மலர்ந்தான் ரகு

அதற்குள் அங்கு வந்த மகேஷ் "சூப்பர் மதி. மகாலட்சுமி மாதிரி மகாலட்சுமி மாதிரின்னு சொல்லி கேட்டு இருக்கேன். இப்ப தான் நேர்ல பாக்கறேன்" எனவும் மலர்ந்த ரகுவின் முகம் கோபத்தில் சிவந்தது

"தேங்க்ஸ் மகேஷ். சில ரசனை கெட்ட ஜென்மங்க நான் தாவணி போட்டா பட்டிகாடுனு சொல்லும்" ரகு முன்பொருமுறை தன்னை கேலி செய்ததை மறைமுகமாய் சொல்லி காட்டினாள் மதி

"நோ நோ...நெஜமாவே உனக்கு ரெம்ப நல்லா இருக்கு" மகேஷ் சொல்லி முடிக்கும் முன்

"சரி போலாம் டைம் ஆச்சு" என்றான் ரகு

எப்படியோ ஒரு யுகமாய் ஒரு நாளை நகர்த்தினான் ரகு. நண்பர்கள் புறப்பட்டதும் தான் மனம் நிம்மதியானது. மகேஷ் விடைபெற்றபோது மதியின் வாடிய முகம் வேறு குழப்பியது

----------------

அடுத்து வந்த ஒரு வாரம் மதியின் பெற்றோர் வரவு அவளை தனியே காணும் வாய்ப்பே இல்லாமல் போனது ரகுவிற்கு. மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் மட்டுமே உடன் இருக்கும் பெற்றோரை விட்டு ஒரு கணமும் விலக மாட்டாள் மதி

ஒரு வாரம் காத்திருந்து அவளுடன் தனியே பேசும் வாய்ப்பு அன்று

பாட்டி  தோட்டத்தில் ஏதோ வேலையென சென்று விட்டாள்

"மதி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் ரகு

"என்ன?"

"வந்து....."

"போன் அடிக்குது அதை மொதல்ல எடு. அப்புறம் வந்து போய் எல்லாம் பேசலாம்" என்றாள் கேலியாக

மற்றொரு சமயம் என்றால் சண்டை வலுத்திருக்கும். இப்போது எதுவும் பேச தோன்றாமல் தொலைபேசியை எடுத்தான்

"ஹலோ"

"....."

"ஹலோ யாரு?"

"......"

"மகேஷ் நான் அப்புறம் கூப்பிடறேன்..." அவன் சொல்லி முடிக்கும் முன்

"ஐ... மகேஷா?" என்று போன்ஐ பிடுங்கினாள்

"ஹாய் மகேஷ் எப்படி இருக்க?"

"...."

"ம்.....நான் நல்லா இருக்கேன்"

"...."

"ம்....அந்த சிடு மூஞ்சி நல்லா தான் இருக்கு" என்றாள் இவனை பார்த்த படி. கோபத்தில் ரகுவின் முகம் சிறுத்ததை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தாள்

"ம்... சொல்லு மகேஷ் சாப்டாச்சா"

"...."

"ஒ எஸ். சாப்டேன். தோசை தக்காளி சட்னி"

"...."

"அப்படியா. அடுத்த தரம் வர்றப்ப கண்டிப்பா செஞ்சு தரேன்"

"...."

"ஹா ஹா ஹா ...." அடக்கமாட்டாமல் சிரித்தாள்

எரிச்சல் மிக "மதி போன் குடு" என்று இழுத்தான்

"விடு பேசிட்டு இருக்கேன்ல manners இல்லையா?"

"மதி...ஒழுங்கா குடு...." பிடுங்கி இழுத்து "மகேஷ் நான் அப்புறம் பேசறேன்" என்று பதிலை கூட எதிர்பாராமல் இணைப்பை துண்டித்தான்

"டேய் உனக்கு கொஞ்சமாவாது மூளை இருக்கா. பேசிக்கிட்டு இருக்கறப்ப வாங்கி கட் பண்ற"

"பேசினது போதுணும்னு தான்"

"நான் பேசினா உனக்கு என்ன"

"எதுக்கு அப்படி ஊருக்கே கேக்கற மாதிரி சிரிச்சு பேசற"

"உனக்கு என்ன?"

"மதி என் கோவத்த கிளப்பாதே"

"உனக்கு தான் கோவம் வருமா எனக்கு வராதா"

"மதி...கொஞ்சம் பொறுமையா கேளு"

"எதுக்கு இப்ப போன் கட் பண்ணின. அதை மொதல்ல சொல்லு"

"நீ பொண்ணா லச்சணமா இல்லாம அவன் கூட அப்படி பேசறது எனக்கு புடிக்கல போதுமா?"

"அப்ப....அப்ப...நீ என்ன சந்தேக படற. அப்படி தான"

"மதி...ப்ளீஸ்...நான் சொல்றத கொஞ்சம்"

"நான் கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லு. என்மேல சந்தேக படறயா?" அவள் பிடிவாதம் ஆத்திரமூட்ட

"ஆமா அப்படி தான்" ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டினான்

"அப்படிதாண்டா பேசுவேன்...அதை கேக்க நீ யாரு"

"நான் யாரா?" கோபத்தில் நிதானம் இழந்து என்ன செய்கிறோம் என்றே உணராமல் தான் உயிராய் நினைப்பவள் தன்னை யார் என்று கேட்டதை தாங்கமாட்டாமல் அவள் கன்னத்தில் விரல் பதிய அறைந்தான்

ஒரு கணம் தான், மதியின் கலங்கிய கண்கள் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது

தன் தவறை உணர்ந்து "மதி..."என்று சமாதானம் செய்ய முயல

வலி கோபம் வருத்தம் எல்லாம் ஒன்று சேர "போதும்...நீ எதுவும் சொல்ல வேண்டாம்...இந்த ஜென்மத்துல என்கூட பேசாத"

"மதிம்மா...ப்ளீஸ்" கண்ணீர் வழிய அவள் நின்றதை காண இயலாமல் மார்போடு அணைக்க விழைய

"என்ன தொடாத....I hate you ... I just hate you ..." பேச்சிழந்து அவன் நிற்க கதறியவளாய் தன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள். எத்தனை கெஞ்சியும் பேச மறுத்தாள்

ரகுவிற்கு அன்று இரவு ஒரு நிமிடம் கூட கண்மூட இயலவில்லை. மதியின் கலங்கிய முகமே கண்முன் வந்து சித்ரவதை செய்தது

இதற்கு முன் எத்தனையோ முறை இருவரும் சண்டை இடும் போது அவன் அவளை அடித்ததுண்டு. அவளும் திருப்பி அடிப்பாள். சில சமயம் அழுதும் இருக்கிறாள். கொஞ்ச நேரத்தில் சமாதானம் ஆகிவிடுவாள்

ஆனால் இன்று அவள் கலங்கிய கண்களுடன் தான் அவளை சந்தேகம் கொண்டதை தாங்க இயலாமல் கதறிய காட்சி நெஞ்சை அறுப்பதாய் இருந்தது

தன்னை தானே மன்னிக்க இயலாமல் தவித்தான். ஆனால் இந்த நிகழ்வு அவள் மேல் தான் கொண்ட காதலை அவனுக்கு தெளிவாய் உணர்த்தியது. அவள் இல்லாத ஒரு வாழ்வு சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தான்...


கண்மணி...
இத்தனை சக்தியா உன் கண்ணீருக்கு
இதயத்தையே சுக்குநூறாக்கி விட்டதே
இன்னொரு முறை கலங்கிவிடாதே
இழக்க இன்னோர்இதயம் இல்லை என்னிடம்
மன்னித்துவிடு கண்ணம்மா
மனதார பொய் சொன்னதற்கு
இன்னோர் இதயம் இருக்கிறது
இழக்கத்தான் மனமில்லை எனக்கு
இது உன்னிடமிருந்து திருடியது என்பதால்...


தொடரும்...அடுத்த அத்தியாயத்தில் முடியும்...

Friday, March 19, 2010

என் சுவாச காற்றே... - பகுதி 3

பகுதி 1 பகுதி 2

சிறுவயது முதலே மதிக்கு பிடிக்காததை ரகுவும் ரகுவுக்கு பிடிக்காததை மதியும் செய்து வெறுப்பேற்றுவது அவர்களின் விளையாட்டு பொழுதுபோக்கு. அதையே தான் இப்போது மதி செய்தாள், அதனால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்...

மகேஷ்: "என்னடா ரகு. அதுக்குள்ள சாப்டாச்சா? நீ எந்திரிச்சு வந்ததையே நான் பாக்கல?"

ரகு: (மனதிற்குள்) உனக்கு அவளத்தவிர எதுவும் தான் இப்ப கண்ணு தெரியறது இல்லையே

மகேஷ்: "என்னடா ரகு நான் பேசிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்ல மாட்டேன்கற"

ரகு: "கொஞ்சம் தலைவலியா இருக்கு மகேஷ், வேற ஒண்ணும் இல்ல" என்று சமாளித்தான்

"யாருப்பா வெத்தல போடறீங்க" என்றபடி பாட்டி வந்தார்

"இல்ல பாட்டி நீங்க போடுங்க" என்றான் மகேஷ்

"கடைல பீடானு வித்தா போடுவீங்க. இந்த கெழவி குடுத்தா புடிக்குமா உங்களுக்கு"

"அப்படி இல்ல பாட்டி''

"மகேஷ், எங்க பாட்டி வெத்தல இடிச்சு குடுத்தா சூப்பர்ஆ இருக்கும்" ரகுவின் வெளிறிய முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தும் பார்காதவளாய் மதி சொல்ல

"மதி சொன்னா சரியாதான் இருக்கும் குடுங்க பாட்டி" என்று மகேஷ் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற

அதற்கு மேல் தாங்க இயலாதவனாய் "ரெம்ப தலை வலிக்குது. நான் மாத்திரை போட்டுட்டு கொஞ்ச நேரம் படுக்கறேன்டா. நீங்களும் ரெஸ்ட் எடுங்க" என்றான் ரகு

"சரிடா நீ ரெஸ்ட் எடு நாங்க அப்படியே தோட்டத்துக்குள்ள ஒரு சுத்தி சுத்திட்டு வரோம் " என்றனர் நண்பர்கள்

"ரகு கண்ணு நீ சரியா சாப்ட்ட மாதிரியும் தெரியல. கொஞ்சம் சூடா ரசம் சாதம் கரைச்சு தரவா?" என்று பாட்டி கேட்க

"இல்ல பாட்டி கொஞ்ச நேரம் கண்ண மூடி படுத்தா சரி ஆய்டும்" என்றான் ரகு

மதி வேண்டும் என்றே ரகுவின் பார்வையை தவிர்த்து கண்ணாமூச்சி ஆடினாள்

-------------

மதியின் சிரிப்பு சத்தம் கேட்டு கண் விழித்த ரகு சுவர் கடிகாரத்தை பார்த்து "அடடா ரெண்டு மணி நேரமா தூங்கினேன்" என தனக்கு தானே கூறியபடி எழுந்தான். அதற்குள் மகேஷின் பேச்சும் மதியின் தொடர்ந்த சிரிப்பும் பொய்யாய் சொன்ன தலைவலி நிஜமாய் வரும்போல் தோன்றியது

அறை வாயிலில் தயங்கி நின்றவனை கண்டும் காணாதது போல் மதி உரையாடி கொண்டு இருந்தாள். மகேஷும் மற்ற நண்பர்களும் பாட்டியும் கூட மதிக்கு எதிர்புறம் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்ததால் பத்தடி தொலைவில் அறை வாயிலில் நின்ற ரகுவை கவனிக்கவில்லை

"மதி உன்னோட fullname மதி தானா" என்று மகேஷ் கேட்க

"ஆமா தம்பி. எங்க மதி பெறந்தப்ப நிலா கணக்கா அத்தன அழகா இருப்பா. அவங்க அப்பா தான் மதின்னா நிலான்னு அர்த்தம்னு இந்த பேரு வெச்சாரு" என்று பாட்டி தன் மருமகனின் பெருமை பேச

"பாட்டி மதின்னா மலையாளத்துல அறிவுனு கூட ஒரு அர்த்தம் இருக்கு" என்றான் மகேஷ்

"இதோட ஏன் நிறுத்திட்ட. இன்னும் மத்த உலக பாஷை எல்லாத்துலயும் இந்த சனியன் புடிச்சவ பேருக்கு என்ன அர்த்தம்னு ஆராய்ச்சி பண்ணி phd வாங்க வேண்டியது தான" என்று ரகுவின் மனதிற்குள் சுனாமி பொங்கியது

"மதி எங்க எல்லாருக்கும் ரகுவோட வயசு தான். எங்கள நீ வாங்க போங்கனு சொல்றது ஒரு மாதிரி இருக்கு. வா போனே சொல்லு. நான் சொல்றது சரி தானே பாட்டி" என்று உரிமையுடன் மகேஷ் சொல்ல மற்ற நண்பர்களும் ஆமோதிக்க

கூட பொறந்த பொறப்பு மாதிரி கள்ளமில்லாம பேசறாங்க நல்ல பிள்ளைக என்று நினைத்த பாட்டி "மகேஷ் சொல்றது சரி தான் மதி. ஏன் வித்தியாசமா பாக்கற" என்று பாட்டியும் கூற மதி சரி என்றாள்

ரகுவின் எரிக்கும் பார்வை மதியை அவனை மேலும் சீண்டி பார்க்கும் ஆவலை தூண்ட "மகேஷ் ஒரு விசயம் கவனிச்சயா? நம்ம ரெண்டு பேர் பேரும் ஒரே லெட்டர்ல ஆரம்பிக்குது"

"வாவ். நல்ல ஒற்றுமை இல்ல மதி" என்று மகேஷ் மகிழ

ரகு: (மனதிற்குள்) "ரெண்டு பேருக்கும் மூளையே இல்லைங்கறது கூட நல்ல ஒற்றுமை தான். அதை ஏன் விட்டீங்க" என்று பெருமினான்

இதுக்கு மேல இவங்கள பேச விட்டா சரிவராது எனத்தோன்ற தொண்டையை செருமியபடி ரகு வந்தான்

மகேஷ்: "ஹேய் ரகு. இப்ப தலைவலி எப்படிடா இருக்கு?"

ரகு: (மனதிற்குள்) "நீ கெளம்பற வர அப்படியே தான் இருக்கும்" (வெளியே) "ஓகே டா. பரவால்ல"

"காபி சாப்பிடறயா ரகு, நாங்க எல்லாம் சாப்டாச்சு" என்று பாட்டி கேட்க

மதி: "நீ இரு பாட்டி நான் காபி போடறேன்" என்று நழுவ இதுதான் சமயமென அவளை தொடர்ந்தான் ரகு

ரகு: "மதி என்ன நெனைச்சுட்டு இருக்க?" என்றான் அடிக்குரலில்

மதி: "என்ன?" என்றாள் வேண்டுமென்றே சத்தமாக

ரகு: "கத்தாதே, மெதுவா பேசு"

மதி: "இப்ப என்ன வேணும் உனக்கு?" என்றாள் ஒன்றும் தெரியாதது போல்

ரகு: "எதுக்கு இப்படி லொடலொடன்னு எல்லாரோடவும் பேசற"

மதி: "நான் எப்பவும் போல் தான் இருக்கேன். உனக்கு தான் என்னமோ கெளம்பிருச்சு" என முதுகு காட்டி நின்றாள்

ஆவேசத்துடன் அவளை தன் புறம் திருப்பினான். இதுவரை எத்தனையோ முறை அடித்து கொண்டபோது இருந்த தொடுகை போல் இல்லாமல் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள்

என்னவாயிற்று இவனுக்கு என்று அவன் கண்ணை நோக்கியவள் ஒரு கணம் பேச்சிழந்தாள்

ரகுவின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவள் நெஞ்சை உலுக்குவது போல் தோன்றியது

மருண்ட பார்வையுடன் இத்தனை நெருக்கத்தில் அவளை கண்டவுடன் காலை முதல் தனக்குள் இருந்தது வெறும் கோபம் அல்ல என்பதை அவன் மனம் உணர்ந்தது. மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த ஒரு புதிய உணர்வில் தத்தளித்தான்...


இந்த அவஸ்தையின் பெயர் தான் காதல் என்றால்
ஈரேழு ஜென்மமும் எனக்கிது வேண்டும்...
இதயம் பிசையும் இந்த வலி
இன்னும் வேண்டுமென தோன்றுவதேன்...
இந்த நிமிடமே மரணித்தாலும் சரியென
இதுஎன்ன கொடுமையான தோணல்...
இன்றே புதியதாய் பிறந்து போல் உணர்வு
இதை எப்படி உணர்த்துவேன் உனக்கு - கண்மணி
சேயாய் தவிக்கும் எனக்கு
உன்தாய் மடி தருவாயா?... 

தொடரும்...

Wednesday, March 17, 2010

என் சுவாச காற்றே... - பகுதி 2

பகுதி 1 படிக்க

அத்தை மகள் மாமன் மகன் என்றால் ஜாலி கலாட்டா இல்லாமல் பாம்பும் கீரியுமாய் இருக்க காரணம் என்ன? அதுக்கு ஒரு பயங்கரமான flashback இருக்கு....அது என்னன்னா...

Transfer ஆகற அரசு வேலைல அப்பாக்கள் இருக்கறதால காலேஜ் சேந்ததும் ரகுவும் மதியும் பாட்டியிடம் சேர்ந்தனர். கணவரை இழந்து தனியாய் இருந்த பாட்டிக்கு சிறந்த துணையாகவும் இருந்தனர். ரகு இன்ஜினியரிங் மூன்றாம் வருடமும் மதி BBM முதல் வருடமும் படித்து வந்தனர்

ரகுவின் அப்பா ராம்குமாரும் மதியின் தாய் ரஞ்சனியும் பாசமான அண்ணன் தங்கை. ஆனால் ரஞ்சனி அண்ணனின் திருமணத்திற்கு பின்னும் அண்ணனிடம் அதே உரிமையும் எதிர்பார்ப்பும் கொண்டது தான் பிரச்சனையின் ஆணி வேர்

பல சமயங்களில் தன் பெற்றோர் அத்தையின் பொருட்டு சண்டை இடுவதை பார்த்த ரகு அந்த கோபத்தை மதியின் மேல் காட்டி வந்தான். அதே போல் தன் உரிமையை ரகுவின் அம்மா தட்டி பறிப்பதாய் பல முறை கண்ணீர் சிந்தும் அன்னையை கண்டு அந்த கோபத்தை ரகுவிடம் தீர்த்து கொள்வாள் மதி

(நீங்க வேற எதாச்சும் கற்பனை பண்ணி இருந்தீங்களோ...)

ஆனா இப்படியே மொறைச்சுட்டு இருப்பாங்களான்னு guarantee இல்ல. என்ன வேணா நடக்கலாம்...எல்லாம் கலா மாஸ்டர் கிட்ட தான் கேக்கணும்...அவங்க தானே chemistry expert ...

இனி...நடக்க போற கூத்தை பாருங்க...sorry படிங்க

சனிக்கிழமை நண்பர்கள் புழாம் சூழ ரகு மகிழ்ச்சியில் இருந்தான்

"வாவ் உங்க வீடு சூப்பர்ஆ இருக்கு ரகு"

"தேங்க்ஸ் மகேஷ். என்ன சாப்பிடறீங்க எல்லாரும்?"

"ரகு இந்தாப்பா...எல்லாருக்கும் ஜூஸ் எடுத்து குடு" என்றபடி பாட்டி வந்தாள்

"தேங்க்ஸ் பாட்டி" என்றனர் எல்லோரும்

"மதிம்மா நீயும் கொஞ்சம் ஜூஸ் சாப்பிடு வா"

"எனக்கு வேண்டாம்" உள் இருந்தபடியே குரல் கொடுத்தாள்

"யாரு அது" என்று கேட்ட மகேஷிடம்

"அவ என் பேத்தி, ரகுவோட அத்தை பொண்ணு"

மதி வெளியே வந்தால் நண்பர்கள் முன் ஏதேனும் வம்பு செய்வாளோ என "பாட்டி நாங்க தோட்டத்துக்குள்ள போயிட்டு வரோம்"

"வெயில் நேரம் ஆய்டுச்சு ரகு. சாபிட்டுட்டு வெயில் தாழ போலாமே"

"இல்ல பாட்டி. இப்ப தான ஜூஸ் குடிச்சோம். கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறோம். ஒரு சின்ன ரவுண்டு போயிட்டு வரோம்" என்றபடி ரகு நண்பர்களுடன் நழுவினான்

தோட்டத்திற்குள் நடக்க தொடங்கியதும் "டேய் ஆனந்த். பாத்தியாடா இந்த ரகுவ. வீட்டுலையே ஒரு மொற பொண்ணு. இது வரைக்கும் மூச்சு விட்டு இருக்கானா?" என்று மகேஷ் வார

ரகு: "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கும் அவளுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். அதான் சொல்லல"

ஆனந்த்: "அட அட...இதை நாங்க நம்பணுமா?"

மகேஷ்: "ஆகாத அத்தை மகளை கொஞ்சம் எங்களுக்கு introduce பண்ணினா நாங்களாச்சும்...." முடிக்கும் முன்

"டேய்...மகேஷ் என்ன ஒளர்ற" என்றான் ரகு நிஜமான கோவக்குரலில்

மகேஷ்: "ரகு டென்ஷன் ஆகாதடா. சும்மா ஜோக் பண்ணினேன். ஏழாம் பொருத்தமாம். சும்மா ஒரு பேச்சுக்கு இப்படி கோவம் வருது...ம்...நம்பிட்டோம்...நம்பிட்டோம்"

"ஓஹோ" என்று நண்பர்கள் கலாய்க்க, தனக்கு ஏன் இப்படி கோவம் வந்தது என புரியாமல் திகைத்தான் ரகு

"என்ன சார் அதுக்குள்ள டூயட்ஆ" மகேஷ் கேட்க

"ச்சே...அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவ என் cousin thats it " என்றான் ரகு

"ஒகே ஒகே...." என்றனர் கோரசாக

திரும்பி வந்த போது மதி வாசல் திண்ணையில் இருந்தாள். பாட்டி அவள் தலைக்கு சம்பராணி புகை போட்டு கொண்டு இருந்தாள்

அவள் நிறத்திற்கேற்ற சிவப்பு சல்வாரில் காற்றில் கூந்தல் பறக்க தேவதை போல் இருந்தாள் (sorry ...தமிழ் சினிமா ஸ்டைல் வந்துடுச்சு....)

அனைவரிடமும் பொதுவாக "ஹாய்" என்றாள்

மகேஷ்: "நீங்க தான் ஜூஸ் குடிக்க கூப்டப்ப வெளிய வராததா?"

மதி: "சாரி, கொஞ்சம் தலை வலியா இருந்தது. அதான்"

மகேஷ்: "இட்ஸ் ஒகே. இப்ப தலை வலி பரவால்லையா?"

மதி: "ம்..இப்ப ஒகே" என்று சிரித்தபடி கூறியவள் தன்னை யாரோ உற்று நோக்குவதாய் தோன்ற அந்த திசையை பார்க்க ரகுவின் கோப பார்வைக்கான அர்த்தம் புரியாமல் விழித்தாள்

எப்பொதும் சண்டை இடும் போது பார்க்கும் கோப பார்வைக்கும் இந்த பார்வைக்கும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள். ஆனால் அது என்னவென புரியவில்லை அவளுக்கு

"சரி எல்லாரும் சாப்பிடலாம் வாங்க" என்று பாட்டி அழைத்தார்

மதி இலை போட்டு தண்ணீர் வைத்தாள். அனைவரும் அமர "மதி, நீயும் உக்காரு. நான் போடறேன்" என்று பாட்டி கூற

"இல்ல பாட்டி நான் வெக்கறேன். நீங்க உக்காருங்க"

என்ன இவ இன்னிக்கி இப்படி சீன் போடறா ஒரு நாளாவது எனக்கு ஒரு டம்ளர் தண்ணி குடுத்து இருப்பாளா, இன்னிக்கி எவன் எவனுக்கோ சாப்பாடு போடறா என்று யோசனையாய் ஏறிட்டான் ரகு

ச்சே என்னோட friends ஐ நானே அப்படி நெனைக்க கூடாது என்று சமாதானம் செய்து கொண்டான்

"எல்லாமே ரெம்ப நல்லா இருக்கு பாட்டி. அல்வா தான் சூப்பர்" என்றான் மகேஷ்

"அல்வா மதி செஞ்சது தம்பி. எங்க மதி ரெம்ப நல்லா சமையல் செய்வா" என்று பாட்டி பெருமை பேச "ரெம்ப அவசியம்" என்று மனதிற்குள் புழுங்கினான் ரகு

"வாவ்...நான் எதிர்பாக்கவே இல்ல மதி. நீங்க சமையல் கூட செய்வீங்களா?"

"ஏதோ சுமாரா செய்வேன்"

"இது சுமாரா...சூப்பர்ங்க...இந்த அல்வாவுக்கே சொத்தை எழுதி வெக்கலாம்" என்று மகேஷ் புகழ ரகு இடத்தை விட்டு அகன்றான்

கலாட்டாவில் அவன் எழுந்து சென்றதை கூட யாரும் கவனிக்காதது அவனை மேலும் வருத்தியது

ஆனால் அவன் எழுந்து சென்றதை கண்டு ஒரு உள்ளம் சிரிப்பாய் சிரித்தது. அது வேறு யாரும் அல்ல. ரகுவின் அத்தை பெற்ற ரத்தினம் மதி தான்


சிறுவயது முதலே மதிக்கு பிடிக்காததை ரகுவும் ரகுவுக்கு பிடிக்காததை மதியும் செய்து வெறுப்பேற்றுவது அவர்களின் விளையாட்டு பொழுதுபோக்கு. அதையே தான் இப்போது மதி செய்தாள், அதனால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்...

செல்லமே...
என் இதயத்தை சிதைப்பதில்
என்ன மகிழ்ச்சி உனக்கு...
என்னுள் இருப்பதுஉனது இதயமேஎன
எப்போது நீ உணரப்போகிறாய்...

என்னை நீ கோபித்தபோது
என்னவளின் உரிமைஎன மகிழ்ந்தேன்
இன்னொருவனுடன் நீ சிரித்தபோதோ
இதயம் வலிக்க அழுதேன்...
இன்னொருவனின் காதலியாய் உன்னை
கற்பனைகூட இயலவில்லை எனக்கு
கொலையும் செய்வாள் பத்தினி என்பதை
கொஞ்சமும் நம்பியதில்லை
இன்றுநீ என் இதயத்தை கொல்லும்வரை...


தொடரும்....

Friday, March 12, 2010

என் சுவாச காற்றே....பகுதி 1

"ஏய் வேண்டாம்டா, என்னை கொலைகாரி ஆக்காதே"

"போடி இவளே...நீ கொல்ற வரைக்கும் என் கை என்ன பூ பறிச்சுட்டு இருக்குமா?"

"கடைசியா சொல்றேன், பேசாம போய்டு"

"நானும் கடைசியா கேக்கறேன், இல்ல இல்ல கடைசியா warn பண்றேன், ஒழுங்கா ஒத்துக்கோ"

"போடா..." (sensored)

"போடி..." (sensored)

"ஏன் இப்படி ரெண்டு பேரும் அடிச்சுகறீங்க? என்ன பிரச்சனை இப்ப புதுசா?"

"பாட்டி இதுல நீ தலை இடாதே"

"ரகு, சின்ன பொண்ணுடா மதி, நீ கொஞ்சம் விட்டு குடுத்தா என்ன?"

"பாட்டின்னா பாட்டி தான், என் செல்ல பாட்டி" என்று கழுத்தை கட்டி கொண்டாள் மதி

"பாட்டி என்ன பிரச்சனைனே தெரியாம நீ அவளுக்கு சப்போர்ட் பண்ற. உன் மகளோட மக, இந்த அரை லூசு பேத்தி தான் உனக்கு முக்கியமா? உன் ஒரே மகனோட ஒரே மகன். உன்னோட மொதல் பேரன், நான் முக்கியமில்லையா?"

"டேய்...லூசு கீசுனா மண்டைய ஒடைச்சுடுவேன்"

"கொஞ்சம் சும்மா இரு மதி குட்டி. ரகு, பிரச்சனை என்னனு சொன்னா தான தெரியும்"

"பாட்டி என்னோட friends இந்த வாரம் நம்ம வீட்டுக்கு stay பண்ண வராங்க. சனிக்கிழமை ஒரு நாள் இவளோட ரூம் பெருசா இருக்கே அதை குடுன்னு கேட்டா என்னமோ சொத்தையே கேட்ட மாதிரி பிகு பண்றா"

"என்னடா ரகு, வயசு பொண்ணு இருக்கற வீட்டுல பசங்க வந்து தங்கினா பாக்கறவங்க நாலு விதமா பேச மாட்டாங்களா?"

"நீ யாரை சொல்ற? இந்த கொரங்கு மூஞ்சியவா? இதை யாரு பாட்டி பாக்க போறா"

"ரகு நீ ஓவரா பேசற, பாட்டி என்னை இப்படி எல்லாம் பேசறத நீ வேடிக்கை பாக்கற இல்ல, நான் எங்க அம்மா அப்பா கிட்டே போறேன்"

"அப்பாடா நிம்மதி, போய் தொல. ஆனா ஒரே நாளுல திருப்பி அனுப்பிடுவாங்க"

"ஐயோ ரகு கொஞ்சம் பேசாம இரேன்டா. மதிம்மா, ஒரு நாள் தானே விட்டு குடு தங்கம்"

"முடியாது முடியாது முடியாது"

"நீ என்னடி எனக்கு விட்டு குடுக்கறது. இது எங்க தாத்தா வீடு. இந்த வீட்டுக்கு ஒரே பேரன் நான். நான் போடினா நீ போகத்தான் வேணும்"

"நீ மட்டும் தான் வாரிசா. நானும் தான். எங்க அம்மா பிறந்த வீடு இது. உங்க அம்மாவ மாதிரி ஒண்ணும் சொத்துக்கு ஆசைபடற புத்தி எங்களுக்கு இல்ல. ஆனா இருக்கற உரிமைய விட்டு தர மாட்டேன்"

"எங்க அம்மாவ பத்தி பேசினா நாக்க அறுத்துடுவேன்"

"ஐயோ மறுபடியும் ஆரம்பிச்சுடீங்களா? மதி, எனக்காக இந்த பாட்டிக்காக ஒத்துக்க மாட்டியா. வீட்டுக்கு வர்றவங்களுக்கு நல்ல வசதி செஞ்சு தரணும் இல்லையா. என் செல்லம் இல்ல"

"நீ கெஞ்சற ஒரே காரணத்துக்காக ஒத்துக்கறேன் பாட்டி. ஆனா என்னோட ரூம் கிளீனா இருக்கணும். இல்லைனா நீ தான் பொறுப்பு"

"சரி சரி போய் அவங்க அவங்க வேலைய பாருங்க"

ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திருப்பி கொண்டு சென்றனர்

பெற்றோர்கள் வேலை நிமித்தம் வேறு ஊரில் இருக்க, பாட்டியுடன் வாழும் இவர்களுக்குள் ஏன் இந்த ஒற்றுமையின்மை?

அத்தை மகள் மாமன் மகன் என்றால் ஜாலி கலாட்டா இல்லாமல் பாம்பும் கீரியுமாய் இருக்க காரணம் என்ன? அதுக்கு ஒரு பயங்கரமான flashback இருக்கு. அது என்னனு அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன்....

கண்டதும் வருவது
கந்தர்வ காதல்...
மோதலில் தொடங்கி
மோகத்தில் முடிவது
சினிமா காதல்...
ஆதிஅந்தம் அறியாமல்
ஆகாசமாய் உயர்ந்துநிற்பது
அன்பே - நம்காதல்...

தொடரும்...

பகுதி 2


Monday, March 08, 2010

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...

என் வாழ்வின் பெண்களுக்கு.....

அம்மா -
அனைத்து சலுகைகளும் எடுத்து
அளவின்றி தொல்லை செய்த போதும்
அழகிய சிரிப்பை சுமந்து
அன்போடு என்னை ரசித்த உனக்கு
அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்

சகோதரியே -
சண்டைகள் நாளும்
சட்டைகள் கிழியும்
ஆக ஜென்மத்தில் பேச்சு இல்லை என
ஆளுக்கு ஒரு மூலை செல்வோம்
சற்று நேரம் கூட
சகி நீ பேசாமல் பொறுக்க மாட்டாய்
அரிதான தங்கையே உனக்கு
அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்

தோழியே -
தோழமை பலர் வாழ்வில்
தோதாக அமைவதில்லை
கூடா நட்பு பலர் வாழ்வில்
குழி பறித்ததை நாம் அறிவோம் - ஆனால்
தோழி நீ எனக்குக்கிடைக்க
தப்பின்றி புண்ணியம் செய்தேன்
இனிய இந்த நாளில்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

Friday, March 05, 2010

அச்சச்சோ.... அப்படி இல்ல... (சிறுகதை)


"ஹலோ நந்தினியா? நான் சுதா பேசறேன்"

"சொல்லு சுதா, எப்படி இருக்க? ஸ்ருதி குட்டி நல்லா இருக்காளா?"

"அவளுக்கு என்ன? நல்லா என்னை படுத்தி எடுத்துட்டு இருக்கா? அப்புறம் ஸ்ருதி பர்த்டே பார்ட்டி வர்ற சனிக்கிழமை சாயங்காலம் வெக்கலாம்னு இருக்கோம். நீ நேரத்துலையே வா நந்து எனக்கு கொஞ்சம் ஹெல்ப் வேணும்"

"கண்டிப்பா வரேன் சுதா. எதாவது ஷாப்பிங் உதவி வேணும்னா சொல்லு. நான் வெள்ளிக்கிழமை எப்படியும் இந்தியன் ஸ்டோர் போவேன்"

"சொல்றேன் நந்து. ஒகே ஸ்ருதி வர்ற நேரம் ஆச்சு நான் அப்புறம் பேசறேன். பை நந்து"

"ஒகே சுதா"

நந்தினிக்கு அப்போதே உற்சாக மனநிலை ஆனது. திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைசெல்வம் இல்லாத நந்தினிக்கு குழந்தைகள் கூடும் பிறந்த நாள் விழாக்கள் என்றால் கொள்ளை இஷ்டம்

சின்ன சிட்டுகளிடம் இருக்கும் அந்த சிறிது நேர நினைவுகளை மனதில் நிரப்பி கொண்டு அடுத்த நிகழ்வுக்காய் காத்திருப்பாள்

அப்போதே ஸ்ருதியின் பிறந்த நாள் விழா பற்றி கணவனிடம் கூற ஆவல் தோன்ற தொலைபேசியை எடுத்தாள்

"என்னங்க நான் தான்"

"சொல்லு நந்து. என்ன இந்த நேரத்துல போன் பண்ற. நான் இன்னும் ஒரு மணி நேரத்துல ஆபீஸ்ல இருந்து கெளம்பிடுவேன். எதாவது வாங்கிட்டு வரணுமா?" என அவள் கணவன் ராகவ் கேட்க

"எதாவது வாங்கிட்டு வரணும்னா தான் நான் உங்க கிட்ட பேசணுமா? சும்மா கூப்பிட கூடாதா?" என சிணுங்கினாள் நந்தினி


"ஹா ஹா... டென்ஷன் ஆகாத நந்துமா சும்மா சொன்னேன்"

"சுதா போன் பண்ணி இருந்தா. ஸ்ருதி குட்டிக்கு சனிக்கிழமை பர்த்டே பார்ட்டி வெச்சு இருக்காங்களாம்"


"அப்படியா?  இப்ப தான் ஸ்ருதியோட நாலாவது பர்த்டேக்கு  போன மாதிரி  இருக்கு... அடுத்தகுள்ள அடுத்த பர்த்டே... நாள் பறக்குது இல்ல நந்து?"

"ஆமாங்க டைம் ஓடிடுது. நமக்கும் சுதா மாதிரி கல்யாணம் ஆனதும் ஒரு பாப்பா இருந்துருந்தா இப்ப ஏழு வயசு இருக்கும்...."


மனைவியின் ஏக்கம் அறிந்த ராகவ் பேச்சை மாற்ற முயன்றான்


"நந்து, ஸ்ருதிக்கு என்ன வாங்கலாம்னு யோசிச்சு வெய்யி. நாம நாளைக்கி ஷாப்பிங் போகலாம்"


"நாளைக்கா? இன்னைக்கே போகலாம். அத சொல்றதுக்கு தான் போன் பண்ணினேன்" என்றாள் அவசரமாய் 


"யாரோ கொஞ்சம் நேரம் முன்னாடி 'நான் உங்கள சும்மா கூப்பிட கூடாதான்னு' டென்ஷன் ஆனதா ஞாபகம்" என சீண்டினான் 


"போங்க நீங்க, என்னை கிண்டல் பண்ண என்ன சாக்குன்னு காத்துட்டு இருப்பீங்க"


"சரிம்மா நீ ரெடியா இரு நான் வந்ததும் ஷாப்பிங் போகலாம்"


"ஓகே பா வெச்சுடறேன்"


ராகவ் மனைவி கலங்கினால் தாங்க மாட்டான். எதாவது பேசி சிரிக்க செய்து விட்டால் தான் நிம்மதி

பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்ற போதும் குழந்தை இல்லாதது குறித்த அனைவரின் விசாரிப்பின் போதும் மனைவியை ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டான்


சனிக்கிழமை காலை முதலே நந்தினிக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா மணி மூன்றாகும் சுதா வீட்டுக்கு செல்வோமென இருந்தாள்


காரை விட்டு இறங்கியதும் ஸ்ருதி ஓடி வந்து கட்டிக்கொள்ள நந்தினி அவளை அள்ளி அணைத்தாள்

சுதா நந்தினியின் நெருங்கிய தோழி. ஸ்ருதி பிறந்தது முதல் அறிந்த நந்தினியிடம் நன்றாக ஒட்டி கொள்வாள்

"வா நந்து. வாங்க ராகவ். நந்து இவள நீ ரெடி பண்ணு, நான் மத்த வேலை எல்லாம் பாக்கறேன்"'என்றாள் சுதா

"ஒகே சுதா. ஸ்ருதி குட்டி வா நாம போய் உனக்கு மேக் அப் பண்ணலாம்"

"ஆண்ட்டி என்னோட பர்த்டே டிரஸ்  உனக்கு காட்றேன் வா" 

குழந்தைகள் எல்லாம் வரதொடங்கவும் ஒரே கலகலப்பானது. நந்தினி அனைத்து குழந்தைகளையும் அமரவைத்து சாப்பிட வைத்தாள்.

பெரியவர்கள் எல்லாம் ஒரு புறம் கதை பேசிக்கொண்டிருக்க குழந்தைகள் பட்டாளாம் தனி ரகளையாய் இருந்தது

ஸ்ருதி மற்றொரு குழந்தையுடன் ஏதோ பொம்மைக்காக சண்டையிடுவதை பார்த்து நந்தினி சமாதானம் செய்ய சென்றாள்

"ஸ்ருதி குட்டி நீ குட் கேர்ள் தானே. கொஞ்ச நேரம் உன்னோட பொம்மைய மது பாப்பா கிட்ட ஷேர் பண்ணிக்கணும் சரியா?"

"ஆன்ட்டி அவளுக்கு இந்த பேபி பொம்மைக்கி feed பண்ணவே தெரியல"

"சரி இரு மது குட்டிக்கு நான் சொல்லி தரேன். மது குட்டி இங்க பாரு பேபி பொம்மைய இப்படி மடில வெச்சுட்டு..." அதற்குள் ஸ்ருதி இடை மறித்தாள்

"அச்சச்சோ... அப்படி இல்ல... போ ஆண்ட்டி. உங்க வீட்டுல பாப்பா இல்லாததால  உனக்கு பாப்பாவ வெச்சுக்கவே தெரியல" என ஸ்ருதி கூற

நந்தினியின் கண்கள் தன்னையும் அறியாது துளிர்த்தது. அந்த மழலை சொன்ன சின்ன வார்த்தை தன்னை இப்படி நிலை குலைய செய்யுமென அவள் நினைக்கவில்லை

குழந்தை அறியாமல் அதன் அர்த்தம் கூட புரியாமல் சொன்ன சொல்  என்று தெரிந்தும் மனம் தவித்தது

குழந்தைகள் தவிர்த்து எல்லோரும் முன் பக்க அறையில் இருந்ததால் யாரும் 
இவளது  தவிப்பை காண நேரவில்லை

 ஒரு நிமிடமேனும் வெளிக்காற்றை சுவாசித்தால் தான் இயலும் என்று நினைத்தவளாய் சட்டென முன் வாசல் வழியாய் வெளியேறினாள் நந்தினி

மற்றவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் காணாத போதும் நந்தினி வெளியேறுவதை கண்ட ராகவ் மற்றவர் கவனத்தை ஈர்க்காமல் ஒரு நிமிடம் பொறுத்து மனைவியை பின் தொடர்ந்து வந்தான்

 பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்ற நந்தினி, தனிமை கிடைத்ததும் உடைந்து அழதொடங்கினாள்

பின்னோடு வந்து கொண்டிருந்த ராகவ் மனைவி அழுவதை  பார்த்து  விரைந்து அருகில் வந்தான்

பதறியவனாய் "என்ன நந்து என்னடா ஆச்சு?" என கேட்க

ராகவை கண்டதும் மேலும் உடைந்து போனாள் நந்தினி. அழுகையினூடே நடந்ததை கூறினாள்

"நந்து நீ இப்படி சென்சிடீவா இருக்க கூடாது டா. கொழந்தை ஏதோ விளையாட்டா சொன்னதுக்கு போய் இப்படி... என்ன நந்து இது?" என அவளை சமாதானம் செய்ய முயன்றான் 

"நீங்க சொல்றது எல்லாம் அறிவுக்கு புரியுதுங்க. மனசுக்கு புரியல. ஒரு கொழந்தை சொன்ன வார்த்தைல நான் நொறுங்கி போற அளவுக்கு என் மனசு ரணப்பட்டு போய் இருக்கு. குழந்தை இல்லேன்னா உலகத்துல வாழவே தகுதி இல்லைங்கற மாதிரி எல்லாரோட பேச்சும் பார்வையும் சித்ரவதையா இருக்குங்க. குழந்தை இல்லாத ஒரு ஒரு பொண்ணும் செத்து தான் போகணும்னா உலகத்துல கால்வாசி மக்கள் தொகை இல்லாம போய்டும்"

"விடு நந்து, பேசறவங்களுக்கு என்ன?" என அவளை தோளோடு சாய்த்து ஆறுதல்படுத்தினான் "விட முடியலைங்க. நெறைய பேரு நான் என்னமோ வேண்டாம்னு இருக்கற மாதிரி அக்கறை இல்லாம இருக்கற மாதிரி பேசறப்ப ரெம்ப வேதனையா இருக்கு... நாம டாக்டர் கிட்ட போறப்ப பாக்குறமே எத்தனை பேரு எத்தனை வருசமா மருந்து மாத்திரை ஊசின்னு, அது நீண்ட நாள் தொடர்ந்து எடுக்கறப்ப பல உயிராபத்தான நோய்கள் வரக்கூடிய பின் விளைவுகள் இருக்குனு தெரிஞ்சும் declaration form ல கையெழுத்து  போட்டுட்டு கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சே விஷத்த சாபிடறோமே..." என மீண்டும் கண்ணீரில் கரைந்தாள்"நந்து ப்ளீஸ் மனச போட்டு கொழப்பிக்காம இரும்மா.."

"முடியலப்பா...நிஜமா சொல்றேன், குழந்தை பெத்துக்கரவளுக்கு அந்த ஒரு நாள் வலிதாம்பா. என்னை மாதிரி இருக்கறவளுக்கு இந்த சமுதாயத்தோட ஏளன பார்வைல இருந்து தப்பிக்க முயற்சிக்கற ஒரு ஒரு நாளும் பிரசவம் தான்..." கட்டுப்படுத்த இயலாமல் உடைந்து அழுதாள் நந்தினி

செய்வதறியாது மனைவியை மார்போடு அணைத்துக்கொண்டான் ராகவ்

சமுதாயத்தின் பார்வை மாறும் வரை இந்த மாதிரி பெண்களுக்கு விடிவு காலம் இல்லை.....  

(முற்றும்)