Friday, March 19, 2010

என் சுவாச காற்றே... - பகுதி 3

பகுதி 1 பகுதி 2

சிறுவயது முதலே மதிக்கு பிடிக்காததை ரகுவும் ரகுவுக்கு பிடிக்காததை மதியும் செய்து வெறுப்பேற்றுவது அவர்களின் விளையாட்டு பொழுதுபோக்கு. அதையே தான் இப்போது மதி செய்தாள், அதனால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்...

மகேஷ்: "என்னடா ரகு. அதுக்குள்ள சாப்டாச்சா? நீ எந்திரிச்சு வந்ததையே நான் பாக்கல?"

ரகு: (மனதிற்குள்) உனக்கு அவளத்தவிர எதுவும் தான் இப்ப கண்ணு தெரியறது இல்லையே

மகேஷ்: "என்னடா ரகு நான் பேசிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்ல மாட்டேன்கற"

ரகு: "கொஞ்சம் தலைவலியா இருக்கு மகேஷ், வேற ஒண்ணும் இல்ல" என்று சமாளித்தான்

"யாருப்பா வெத்தல போடறீங்க" என்றபடி பாட்டி வந்தார்

"இல்ல பாட்டி நீங்க போடுங்க" என்றான் மகேஷ்

"கடைல பீடானு வித்தா போடுவீங்க. இந்த கெழவி குடுத்தா புடிக்குமா உங்களுக்கு"

"அப்படி இல்ல பாட்டி''

"மகேஷ், எங்க பாட்டி வெத்தல இடிச்சு குடுத்தா சூப்பர்ஆ இருக்கும்" ரகுவின் வெளிறிய முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தும் பார்காதவளாய் மதி சொல்ல

"மதி சொன்னா சரியாதான் இருக்கும் குடுங்க பாட்டி" என்று மகேஷ் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற

அதற்கு மேல் தாங்க இயலாதவனாய் "ரெம்ப தலை வலிக்குது. நான் மாத்திரை போட்டுட்டு கொஞ்ச நேரம் படுக்கறேன்டா. நீங்களும் ரெஸ்ட் எடுங்க" என்றான் ரகு

"சரிடா நீ ரெஸ்ட் எடு நாங்க அப்படியே தோட்டத்துக்குள்ள ஒரு சுத்தி சுத்திட்டு வரோம் " என்றனர் நண்பர்கள்

"ரகு கண்ணு நீ சரியா சாப்ட்ட மாதிரியும் தெரியல. கொஞ்சம் சூடா ரசம் சாதம் கரைச்சு தரவா?" என்று பாட்டி கேட்க

"இல்ல பாட்டி கொஞ்ச நேரம் கண்ண மூடி படுத்தா சரி ஆய்டும்" என்றான் ரகு

மதி வேண்டும் என்றே ரகுவின் பார்வையை தவிர்த்து கண்ணாமூச்சி ஆடினாள்

-------------

மதியின் சிரிப்பு சத்தம் கேட்டு கண் விழித்த ரகு சுவர் கடிகாரத்தை பார்த்து "அடடா ரெண்டு மணி நேரமா தூங்கினேன்" என தனக்கு தானே கூறியபடி எழுந்தான். அதற்குள் மகேஷின் பேச்சும் மதியின் தொடர்ந்த சிரிப்பும் பொய்யாய் சொன்ன தலைவலி நிஜமாய் வரும்போல் தோன்றியது

அறை வாயிலில் தயங்கி நின்றவனை கண்டும் காணாதது போல் மதி உரையாடி கொண்டு இருந்தாள். மகேஷும் மற்ற நண்பர்களும் பாட்டியும் கூட மதிக்கு எதிர்புறம் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்ததால் பத்தடி தொலைவில் அறை வாயிலில் நின்ற ரகுவை கவனிக்கவில்லை

"மதி உன்னோட fullname மதி தானா" என்று மகேஷ் கேட்க

"ஆமா தம்பி. எங்க மதி பெறந்தப்ப நிலா கணக்கா அத்தன அழகா இருப்பா. அவங்க அப்பா தான் மதின்னா நிலான்னு அர்த்தம்னு இந்த பேரு வெச்சாரு" என்று பாட்டி தன் மருமகனின் பெருமை பேச

"பாட்டி மதின்னா மலையாளத்துல அறிவுனு கூட ஒரு அர்த்தம் இருக்கு" என்றான் மகேஷ்

"இதோட ஏன் நிறுத்திட்ட. இன்னும் மத்த உலக பாஷை எல்லாத்துலயும் இந்த சனியன் புடிச்சவ பேருக்கு என்ன அர்த்தம்னு ஆராய்ச்சி பண்ணி phd வாங்க வேண்டியது தான" என்று ரகுவின் மனதிற்குள் சுனாமி பொங்கியது

"மதி எங்க எல்லாருக்கும் ரகுவோட வயசு தான். எங்கள நீ வாங்க போங்கனு சொல்றது ஒரு மாதிரி இருக்கு. வா போனே சொல்லு. நான் சொல்றது சரி தானே பாட்டி" என்று உரிமையுடன் மகேஷ் சொல்ல மற்ற நண்பர்களும் ஆமோதிக்க

கூட பொறந்த பொறப்பு மாதிரி கள்ளமில்லாம பேசறாங்க நல்ல பிள்ளைக என்று நினைத்த பாட்டி "மகேஷ் சொல்றது சரி தான் மதி. ஏன் வித்தியாசமா பாக்கற" என்று பாட்டியும் கூற மதி சரி என்றாள்

ரகுவின் எரிக்கும் பார்வை மதியை அவனை மேலும் சீண்டி பார்க்கும் ஆவலை தூண்ட "மகேஷ் ஒரு விசயம் கவனிச்சயா? நம்ம ரெண்டு பேர் பேரும் ஒரே லெட்டர்ல ஆரம்பிக்குது"

"வாவ். நல்ல ஒற்றுமை இல்ல மதி" என்று மகேஷ் மகிழ

ரகு: (மனதிற்குள்) "ரெண்டு பேருக்கும் மூளையே இல்லைங்கறது கூட நல்ல ஒற்றுமை தான். அதை ஏன் விட்டீங்க" என்று பெருமினான்

இதுக்கு மேல இவங்கள பேச விட்டா சரிவராது எனத்தோன்ற தொண்டையை செருமியபடி ரகு வந்தான்

மகேஷ்: "ஹேய் ரகு. இப்ப தலைவலி எப்படிடா இருக்கு?"

ரகு: (மனதிற்குள்) "நீ கெளம்பற வர அப்படியே தான் இருக்கும்" (வெளியே) "ஓகே டா. பரவால்ல"

"காபி சாப்பிடறயா ரகு, நாங்க எல்லாம் சாப்டாச்சு" என்று பாட்டி கேட்க

மதி: "நீ இரு பாட்டி நான் காபி போடறேன்" என்று நழுவ இதுதான் சமயமென அவளை தொடர்ந்தான் ரகு

ரகு: "மதி என்ன நெனைச்சுட்டு இருக்க?" என்றான் அடிக்குரலில்

மதி: "என்ன?" என்றாள் வேண்டுமென்றே சத்தமாக

ரகு: "கத்தாதே, மெதுவா பேசு"

மதி: "இப்ப என்ன வேணும் உனக்கு?" என்றாள் ஒன்றும் தெரியாதது போல்

ரகு: "எதுக்கு இப்படி லொடலொடன்னு எல்லாரோடவும் பேசற"

மதி: "நான் எப்பவும் போல் தான் இருக்கேன். உனக்கு தான் என்னமோ கெளம்பிருச்சு" என முதுகு காட்டி நின்றாள்

ஆவேசத்துடன் அவளை தன் புறம் திருப்பினான். இதுவரை எத்தனையோ முறை அடித்து கொண்டபோது இருந்த தொடுகை போல் இல்லாமல் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள்

என்னவாயிற்று இவனுக்கு என்று அவன் கண்ணை நோக்கியவள் ஒரு கணம் பேச்சிழந்தாள்

ரகுவின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவள் நெஞ்சை உலுக்குவது போல் தோன்றியது

மருண்ட பார்வையுடன் இத்தனை நெருக்கத்தில் அவளை கண்டவுடன் காலை முதல் தனக்குள் இருந்தது வெறும் கோபம் அல்ல என்பதை அவன் மனம் உணர்ந்தது. மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த ஒரு புதிய உணர்வில் தத்தளித்தான்...


இந்த அவஸ்தையின் பெயர் தான் காதல் என்றால்
ஈரேழு ஜென்மமும் எனக்கிது வேண்டும்...
இதயம் பிசையும் இந்த வலி
இன்னும் வேண்டுமென தோன்றுவதேன்...
இந்த நிமிடமே மரணித்தாலும் சரியென
இதுஎன்ன கொடுமையான தோணல்...
இன்றே புதியதாய் பிறந்து போல் உணர்வு
இதை எப்படி உணர்த்துவேன் உனக்கு - கண்மணி
சேயாய் தவிக்கும் எனக்கு
உன்தாய் மடி தருவாயா?... 

தொடரும்...

13 பேரு சொல்லி இருக்காக:

padma said...

வாரே வா .காதல் வந்துடுச்சு ஆசையில் ஓடி வந்தேன்

அப்பாவி தங்கமணி said...

பத்மா - ஆமாங்க பத்மா, வந்தே வந்துடுச்சு. இதையெல்லாம் அணை கட்டி நிறுத்த முடியுமா? நன்றி தொடர்ந்து படிப்பதற்கு

சின்ன அம்மிணி said...

//பாட்டி மதின்னா மலையாளத்துல அறிவுனு கூட ஒரு அர்த்தம் இருக்கு" என்றான் மகேஷ்//

போதும்னு அர்த்தம்ங்க மலையாளத்துல

தக்குடுபாண்டி said...

ம்ம்ம்ம், கதையை நல்லாதான் கொண்டுபோறீங்க!! நீங்க அப்பாவி!! இதை நாங்க நம்பனும்!!...:) அனேகமா கதை முடியும்போது உங்களை எல்லாரும் 'அடப்பாவி தங்கமணி!'னு கூப்டப்போறாங்க...:)

Porkodi (பொற்கொடி) said...

அப்பாவி தங்கமணி.. முரண்தொடைனு சொல்லலியா ஒருத்தரும் இன்னும்? :) ல‌வ் ஸ்டோரியா.. ப‌டிச்சிட்டு வ‌ர்றேன்.

Porkodi (பொற்கொடி) said...

கதை சூப்பரா போகுதுங்க! எனக்கு ஆனா ரகுவை பிடிக்கலன்னு வைங்க.. மஹேஷோட கோத்து விட்டுருங்க மதியை ப்ளீஸ்! :)

பழைய போஸ்ட்ல உங்க அரிசி பருப்பு சாதம் ஒரே சிரிப்பு.. நானும் இதே கதைதான் :)

அப்பாவி தங்கமணி said...

சின்ன அம்மணி - அது வந்துங்க மகேஷ் மதி மேல உள்ள அன்புல என்னமோ ஒளரறான் (அப்பாடா ஒரு வழியா சமாளிச்சாச்சு)
நன்றிங்க சின்ன அம்மணி சுட்டி காட்டியதற்கு. இனிமேல் கவனமாக இருக்கிறேன்

அப்பாவி தங்கமணி said...

தக்குடுபாண்டி - நன்றிங்க. நெஜமா அப்பாவி தாங்க நம்புங்க. ஆனா அப்பாவியோ அடப்பாவியோ ஏதோ ஒண்ணு சொன்னீங்கன்னா சந்தோஷம் தான்

அப்பாவி தங்கமணி said...

பொற்கொடி - அப்பாவிதானுங்க முரண்தொடை எல்லாம் இல்லைங்க. ரகு பிடிக்கலையா உங்களுக்கு. அடுத்த பகுதி படிச்சுட்டு என்ன சொல்றீங்கன்னு பாப்போம். படித்ததற்கு மிக்க நன்றி பொற்கொடி

My days(Gops) said...

முதல் தபா இங்க..... நல்ல போகுதுங்க கதை :)....

கவிதை எப்படி?

அப்பாவி தங்கமணி said...

My Days ( Gops ) - நன்றிங்க Gops நேரம் எடுத்து படித்ததற்கு. கவிதை அப்படியே போகுதுங்க

கண்ணகி said...

ஏங்க அந்தக்கவிதை நீங்க எழுதினதா...வாவ்

அப்பாவி தங்கமணி said...

//கண்ணகி said - ஏங்க அந்தக்கவிதை நீங்க எழுதினதா...வாவ்//

ஆமாங்க கண்ணகி...நான் எழுதினது தான்...நன்றி உங்க பாராட்டுக்கு

Post a Comment