Sunday, May 30, 2010

என் பௌர்ணமி... (விகடன்)


(எனது மற்றுமொரு கவிதை விகடனில்... உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி)


இத்தனை வருடமாய்
இனிமையாய் இருந்தஎன்வீடு
இன்றுஏனோ அந்நியமானது
பிறந்தவீட்டில் சீராட
பறந்துநீ போனபின்னே

அதேஅறை தான்
அதேநான் தான்
தூக்கம் மட்டும்தான்
தூரமாய் போனதிப்போ

ஏக்கமாய் நான்சோர்ந்திருக்க
எள்ளிநகை ஆடியது
சன்னலில் எட்டிப்பார்த்த
சன்னமான மூன்றாம்பிறை

அருகில்நீ இருந்தபோதில்
அதைநான் புறக்கணித்தேனாம்
சமயம்பார்த்து சாடியது
சாபம்தான் என்தனிமைஎன்றது

என்பௌர்ணமி நீஅருகில்இருக்க
எங்கோ உள்ளநிலவைக்காண
எனக்கென்ன பைத்தியமா
ஏன்புரியவில்லை இந்நிலவுக்கு?

பௌர்ணமிதான் நானும்
பிரதிமாதம் ஒருமுறைஎன
பொறாமையில் வாதம்செய்தது
பொறுக்காத வான்நிலா

மாதம் ஒருமுறைதான்
மலர்வாய்நீ பௌர்ணமியாய்
முப்பது நாளுமே
முழுநிலவு என்னவள்என்றேன்
மூக்குடைந்த அந்நிலா
முகம்காட்ட முடியாமல்
மேகத்தில் தனைமறைத்து
வேகமாய் மறைந்ததடி!!!

போனால் போகட்டும்
புரியாத குறைநிலா
என்பௌர்ணமி நீவிரைந்து
என்னிடம் வந்துவிடு
புரியாத நிலவிற்கு
புரியவைப்போம் நம்காதலால்!!!

Thursday, May 27, 2010

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு...


நீங்கள் பார்த்து கொண்டு இருப்பது அப்பாவி டிவியின் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

பொற்கொடி என்ற இயற்பெயரும் கேடி மற்றும் பல துணை பெயர்களும் (இங்கு இடமும் நேரமும் போதாது என்பதால் அந்த பெரிய லிஸ்ட் போடலை) கொண்ட ஒரு அப்பாவி (!!!!!!!) பெண்ணை காணவில்லை

கடந்த ஒரு மாதமாக சரியாக சொல்லவேண்டுமென்றால் மே நான்காம் தேதி அன்று தனது வலைப்பூவில் ஒரு பதிவை எழுதியவர் அதன் பின் யார் கண்ணிலும் படவில்லைஎன அறியப்படுகிறது

காணாமல் போன அன்று ஏதோ ஒரு நிறத்தில் சட்டையும் அதே நிறத்தில் கால் சட்டையும் அணிந்து இருந்தார் என கூறப்பட்டுள்ளது

அதோடு அவர் கையில் ஒரு பெட்டி நிறைய அமரர் சுஜாதா எழுதிய நாவல்களும் இரண்டு கத்தி மற்றும் மூன்று ரிவால்வர்கள் இருந்ததாக தகவல். பயப்படவேண்டாம், அவர் மனிதர்களை கொள்வதில்லை, ரோபோக்களை மட்டும் தான்

காணாமல் போன அன்று அவருடன் ஆண்டாள் என்ற ஒரு ரோபோ இருந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன

அந்த ரோபோ பார்ப்பதற்கு ஒரு நிஜ பெண்ணை போலவே இருக்கும் என்றும் அதை பெண் என்றே நம்பி பின் ரோபோ என்று தெரிந்ததும் பல இளைஞர்கள் தாடி வளர்த்து அலைவதாயும் சற்று முன் கிடைத்த தகவல் சொல்கிறது

அவருடைய ப்ளாக்ல இருந்து எடுக்கப்பட்ட அவருடைய படம் இங்கே


பொற்கொடியை நேரில் கண்டாலோ அல்லது அவரை பற்றி தவகல் எதுவும் அறிந்தாலோ உடனே ஒரு நூறு அடி தள்ளி சென்று நின்று கொண்டு பின்பு எங்களுக்கு தகவல் சொல்லவும்

நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி

மிஸ்டர். ரோபோ
ப்ளாக் மூன் அபார்ட்மென்ட்ஸ்
# 13 கணேஷ்வசந்த் தெரு
ராஜி குறுக்கு சந்து
ஆண்டாள்புரம்

தகவல் அளிபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். ஆனால் பின் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல

இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் "மாப்பிள்ளை விநாயகர் பன்னீர் சோடா" from அனன்யா ஏஜென்சிஸ். விளம்பர இடைவேளைக்கி பிறகு நிகழ்ச்சி தொடரும்

________________________________________

விளம்பரம்:

கேட்டீங்களா கேட்டீங்களா... LK தாத்தாவுக்கு SOS பட்டம் குடுத்து இருக்காங்களாம் www .engalcreations .blogspot .com ல இருந்து

படிச்சீங்களா படிச்சீங்களா... தக்குடு புளியோதரை கதை இரண்டாவது வாரமா வெற்றி நடை போடுதாமே? சுறா பட வசூலே இதனால தான் கம்மின்னு ஊரெல்லாம் பேசிக்கறாங்க

கேள்விபட்டீங்களா கேள்விபட்டீங்களா... அப்பாவி தங்கமணி இட்லிக்கு demand அதிகமாகி US ல Green Card லாட்டரி மாதிரி புவனா இட்லி லாட்டரி அறிவிச்சு இருக்காங்களாம் கனடா அரசாங்கம் (No tension no tension)

பாத்தீங்களா பாத்தீங்களா... ஒண்ணும் இல்லைங்க... சும்மான்னச்சிக்கும் ....  ஹி ஹி ஹி

__________________________________________

விளம்பர இடைவேளைக்கி பிறகு காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு தொடர்கிறது

கடந்த சில வாரங்களாக காணாமல் போன இவர் பேச்சு / செயல் / எழுத்து எல்லாம் Johnywalker ரகம் என்றாலும் பெயரில் Complan ஐ அடைமொழியாக கொண்டவர். பெயர் சூர்யா

அவருடைய படம் இங்கே


இவரது வலைப்பூ கூட செயல்பாட்டில் இல்லை என தெரியவருகிறது

பொற்கொடியின் அறிவிப்பில் சொன்னபடி ஆண்டாள் ரோபா என அறிந்த பின் தாடி வளர்த்த வாலிபர்களில் இவரும் ஒருவர்

அந்த விரக்தியில் தான் காணாமல் போனாரோ என்றும் ஒரு தரப்பு செய்தி சொல்கிறது

இன்னொரு தகவல் அப்பாவி தங்கமணியின் கதையில் வரும் சுதா என்ற பெண்ணின் முகவரி மறுக்கப்பட்டதால் தான் கோபித்து கொண்டு காணாமல் போனார் என்றும் ஒரு செய்தி குறிப்பு சொல்கிறது

காணாமல் போன அன்று நீல நிற சட்டையும் பச்சை நிற அரைகால் சட்டையும் அணிந்து இருந்தார்

இவருக்கு wrongnumber உடன் மணிக்கணக்கில் பேசும் வியாதி இருக்கிறதென அவர் வலைபூவில் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். எனவே ஏதேனும் டெலிபோன் பூத்தில் மணிக்கணக்கில் பேசும் நபரை கண்டால் உடனே தெரிவிக்கவும்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மிஸ். Wrongcall
# 1 பிரியமானவளே layout
காயத்ரி தெரு
சுதா குறுக்கு சந்து
காம்ப்ளான்பாளையம்

இத்துடன் இன்றைய அறிவிப்புகள் முடிவடைந்தன. மீண்டும் நாளை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வடை... மன்னிக்கவும் .... விடை பெறுவது உங்கள் அபிமான அப்பாவி....அப்பாவி....அப்பாவி....

டொன் டொன் டொயன்....................(மீசிக் மீசிக் ....)

Wednesday, May 26, 2010

விருது விருது... வருது வருது...

இந்த வாரம் விருது வரம் தான் போங்க

ரெம்ப சந்தோசமா இருக்கு. என்னோட பதிவு ஒண்ணு விடாம படிச்சு முடிஞ்ச வரை முதல் கமெண்ட் போடற ஒருத்தர் கிட்ட இருந்து "சிறந்த எழுத்தாளர்" விருது கெடைச்சது ரெம்ப ரெம்ப சந்தோஷம்

குடுக்கவும் ஒரு மனசு வேணும்... மிக்க நன்றிங்க LK . Thank you so much, this award made my day

விருதை காண இங்க கிளிக்ங்க http://lksthoughts.blogspot.com/2010/05/blog-post_24.html

 

"குடுக்கற தெய்வம் கூரைய பிச்சிகிட்டு குடுக்கும்"னு சொல்றாப்ல நண்பர் அஹமது இர்ஷாத் அவர்களும் இந்த வாரம் ஒரு விருது குடுத்து இருக்கார். மிக்க நன்றிங்க

விருதை காண இங்க கிளிக்ங்க http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html


Tuesday, May 25, 2010

பிரியமானவளே (2nd கிளைமாக்ஸ் - இறுதிப்பகுதி)

ஆபரேஷன் ஆரம்பித்ததும் கார்த்தி மருத்துவமனையின் பின் புறம் இருந்த பிள்ளையார் கோவில் முன் சென்று அமர்ந்தவன் ஆபரேஷன் நடந்த நான்கு மணி நேரமும் கண் திறக்காமல் ப்ராதித்தான்......

தோள் மீது ஸ்பரிசம் உணர்ந்து கண் திறந்தான். கௌரி கண்களில் நீர் வழிய நின்றிருக்க இவன் இதயம் வேகமாய் அடித்து கொண்டது. இனி அழக்கூட தெம்பில்லை என்பது போல் கண்கள் வற்றியிருந்தது

அவன் தவிப்பை உணர்ந்த கௌரி "உன்னோட பிரார்த்தனை வீண் போகல கார்த்தி, ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சதுன்னு டாக்டர் சொன்னார்" எனவும் ஆனந்தத்தில் கண்கள் பனித்தது

உடனே அவளை காணவேண்டுமென மனம் தவிக்க "நீ பாத்தியா கௌரி. எப்படி இருக்கா? நான் போய் பாக்கறேன்" என எழுந்தவனை கை அமர்த்தினாள் கௌரி

"இல்ல கார்த்தி. சர்ஜரி தலைலைங்கரதால 72 hours போஸ்ட்-ஆப்பரேடிவ் வார்டுல தான் வெச்சிருப்பாங்கலாம். யாரும் பாக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்" என்று கௌரி கூற சற்று முன் மலர்ந்த முகம் சோர்ந்து போனது

____________

வாழ்வின் மிக நீளமான 72 மணி நேரமாய் அது தோன்றியது கார்த்திக்கு

அதன் பின்னும் அவளைக்காண அனுமதிக்கவில்லை

"கொஞ்ச நேரம் முன்னாடி காயத்ரிக்கு கான்சியஸ் வந்தது. பட் பல்சும் பிரசரும் கண்ட்ரோல்ல இல்ல. இன்னும் ரெண்டு நாள் sedation ல வெச்சுருக்கறது தான் பெட்டர்" என டாக்டர் கூறி செல்ல உடைந்து போனான்

அவள் அபாயகட்டத்தை தாண்டி விட்டாள் என டாக்டர் கூறியதை கூட மனம் நம்ப மறுத்தது

"எதுவும் பிரச்சனை இல்லேன்னா ஏன் பாக்க கூட விட மாடேங்கரா..." என கௌரியிடம் புலம்பி தீர்த்தான்

மேலும் மூன்று நாட்களுக்கு பின் பார்க்க அனுமதித்தனர். ஆனால் டாக்டர் அப்போது சொன்ன எச்சரிக்கை கார்த்தியை உள்ளே செல்ல விடாமல் தடுத்தது

"காயத்ரி அபாயகட்டத்த தாண்டி இருந்தாலும் இன்னும் ரெம்ப பத்திரமா இருக்கணும். ஒரு ஒருத்தரா போய் பாருங்க. ரெம்ப நேரம் பேச வேண்டாம். முக்கியமா அவங்க உணர்ச்சிவசபடக்கூடாது. இன்னும் full ரெகவரி ஆகல. சோ, பிரஷர் அதிகமானா மறுபடியும் rupture ஆகற சான்ஸ் இருக்கு.By God's grace head injury ஆகியும் கூட கை கால் இயக்கத்துல எந்த பிரச்சனையும் இல்ல. But as I said, be very careful" என எச்சரிக்கை செய்ய கார்த்தி பின் வாங்கினான்

காயத்ரியின் அம்மாவும் அப்பாவும் பார்த்து விட்டு வந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்

கௌரி உள்ளே செல்லும் முன் கார்த்தியை அழைக்க "இல்ல.... நீ போயிட்டு வா" என்று விலகினான்

அவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்

____________

"பாக்கணும் பாக்கணும்னு துடிச்ச.... பாக்க கூப்ட்டா வர்ல... இப்போ தனியா பிள்ளையார் முன்னாடி உக்காந்து அழுந்துண்டுருக்க. என்னாச்சு கார்த்தி நோக்கு?" என கௌரி கேட்க அவளை அங்கே எதிர்பாராதவன் அவசரமாய் கண்ணீரை மறைக்க முயன்று "இல்ல... ஒண்ணும் இல்ல..." என மழுப்பினான்

"ஏன் உள்ள வரலேன்ன?" என விடாமல் கேட்க

"......" பதில் கூறாமல் வேறு எங்கோ பார்த்தான்

"உன்ன பாத்தா உணர்ச்சி வசப்படுவான்னு பயமா? சொல்லு கார்த்தி" என நேரடியாய் தாக்க அதை எதிர்பாராத கார்த்தி மௌனமானான்

அவனது தவிப்பு மனதை நெகிழச்செய்ய "இத்தன ஆசைய மனசுல வெச்சுண்டு ஏன் அவ காதல மறுத்த கார்த்தி" என முகத்திற்கு நேராய் கேட்க அதிர்ச்சியில் உறைந்தான்

"சொல்லு கார்த்தி. எதுக்கு இந்த நாடகம்?" நாடகம் என்றதும் தாங்க முடியாமல்

"நாடகம் இல்ல கௌரி. அப்போ என் மனசுல.... அப்படி எதுவும்....." என வார்த்தை வராமல் தடுமாறினான்

"அப்போ இல்லேன்னா...?? என்ன அர்த்தம் இதுக்கு??" என கௌரி விடாமல் கேட்க

"கீழ விழுந்ததும் அம்மானு கூட சொல்ல மறந்து கார்த்தினு கத்தினாளே... உள்ளுக்குள்ள என்னமோ பண்ணிடுச்சு கௌரி... ரெண்டு க்ஷ்ணம் மூச்சு விட மிச்சம் இருந்த உயிர் மொத்தத்தையும் கண்ணுல தேக்கி I Love you கார்த்தினப்ப.... அவ கண்ல தெரிஞ்ச அந்த ஏக்கம்.... வலி.... காதல்.... என்னை மொத்தமா புரட்டி போட்டுடுச்சு. அவ மொத்தமா என்னை விட்டு போயடுவாளோன்னு நின்னப்ப தான்.... அவ இல்லாத வாழ்க்கை எனக்கு இல்லைன்னு உணர்ந்தேன் கௌரி....இப்போ.... ரெம்ப பயமா இருக்கு... " என்றவன் அதற்கு மேல் பேச இயலாமல் முழங்காலில் முகம் புதைத்தான்

சற்று நேரம் அழுது ஓயட்டும் என பொறுத்தவள் "அழாத கார்த்தி. அதான் இப்போ எல்லாம் சரி ஆய்டுத்தே" என ஆறுதல் படுத்த முயன்றாள்

''இல்ல கௌரி... அவள ரெம்பவே கஷ்டபடித்திட்டேன் .....நோக்கு தெரியாது....ரெண்டு வருஷமா..." என அங்கலாய்க்க

"தெரியும்..." என்றாள் கௌரி மெதுவாய்

"நோக்கு எப்படி? காயத்ரி எதுனா...."

"இல்ல கார்த்தி அவ எதுவும் சொல்லல. ஒரு நா அவ ரூம்ல பழைய certificate ஏதோ தேடினப்போ அவ டைரி கண்ணுல பட்டது. கொஞ்ச நாளாவே அவ சரி இல்லைன்னு அம்மா பொலம்பினது ஞாபகம் வர என்னனு தெரிஞ்சா வழி பண்ணலாம்னு தான் படிச்சு பாத்தேன். ஆனா பிரச்சனைய தீக்க வழி தெரியாததால அவ கிட்ட தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல" எனவும்

"ரெம்ப வருத்தப்பட்டு எழுதி இருந்தாளா?" என வேதனையாய் கேட்டான்

ஆமாம் என்று சொல்ல மனமின்றி "இப்போ தான் எல்லாம் சரி ஆயாச்சே... இனி எதுக்கு பழைய கதை எல்லாம்" என மழுப்பினாள்

"அவளுக்கு சீக்கரம் குணம் ஆய்டும் தானே கௌரி" என எதிர்பார்ப்புடன் கேட்க

"ம்... அடுத்த வாரத்துக்கு கல்யாண சத்திரம் புக் பண்ணிடலாம்.... சரி தானே மாப்பிள்ளை சார்" என கேலி பேசி இலகுவாக்க முயன்றாள்

அவள் முயன்றது வீண் போகாமல் அவனும் கல்யாணம் என்றதும் சிந்தனை மாற சற்று நெகிழ்ந்தான்

"என்னோட மனமாற்றம் தெரிஞ்சா காயு ரெம்ப சந்தோசப்படுவா இல்ல கௌரி" என அந்த கற்பனை காட்சியாய் கண் முன் விரிய மகிழ்வுடன் கேட்டான்

"ஆமாம் கார்த்தி...அதை விட பெரிய சந்தோஷம் அவளுக்கு இந்த உலகத்துல எதுவும் இருக்க போறதில்ல" என்றாள் அவன் மகிழ்ச்சியில் தானும் கலந்து

"அதனால தான் இப்போ அவள பாக்க நேக்கு ரெம்ப பயமா இருக்கு கௌரி. அவள பாத்தா எந்த அளவுக்கு என்னை கட்டுபடுத்திக்க முடியும்னு நேக்கு தெரியல" காதல் கொண்ட மனதின் வெளிப்பாடாய் உரைத்தான்

"வாஸ்தவம் தான் கார்த்தி. ஆனா டாக்டர் இன்னொரு விசயம் கூட சொன்னார் இல்லையா. அவ குணமாகறது எங்க மருந்து மாத்திரைல மட்டும் இல்ல, அவ மனசுலயும் நம்பிக்கை வரணும்னு. உன்ன பாத்தா நிச்சியம் அவ நம்பிக்கை ஆய்டுவா. நீ பாக்காமயே இருந்தா அதுவும் அவளை பாதிக்கும். அதிகம் பேசாம பாத்துட்டு வந்துடு. நானும் உன்னோட வரேன்" என்றாள் தன் தங்கையின் மனதை படித்தவள் போல

_________________

"காயத்ரி...யாரு வந்திருக்கா பாரு? கார்த்திய பாரு" என கௌரி பேச வெகு ப்ராயதனப்பட்டு கண்களை திறந்தாள்

கார்த்தியை பார்த்ததும் பேச முயன்று அதற்கு உடல் ஒத்துழைக்காமல் போக கண்ணீரால் பேசினாள்

"ஏன் காயு? ரெம்ப வலிக்கறதா?" என்றான் கார்த்தி அவள் அழுவதை காண சகியாமல்

"இல்லை" என்பது போல் மெதுவாய் தலை அசைத்தாள்

அவளது ஏக்க பார்வை மனதை அறுக்க தன் மனமாற்றத்தை சொல்லவும் இயலாத நிலை கார்த்தியை கொன்றது

ஆதுரமாய் அவள் கைகளை பற்றினான். அதுவே பல விசியங்களை பேசாமல் பேசியது

சொற்கள் நூறு
சொல்ல இயலாததை
சொல்லாமல் சொன்னது
செல்லமேஉன் ஸ்பரிசமொன்று

அவன் தொடுகையில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள் காயத்ரி. உடல் மொத்தமும் புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ச்சி குவியலானாள்

திடீரென அருகில் இருந்த கருவி "பீப் பீப்..." என ஒலி எழுப்ப காயத்ரி மூச்சி திணற அவன் கைகளை இறுக்க "கௌரி டாக்டரை கூப்டேன்....ஐயோ...." என பதறினான்

அதற்குள் அங்கு வந்த நர்ஸ் "என்ன நீங்க? patient ஐ எதுக்கு டென்ஷன் ஆக வெக்கறீங்க.... போங்க எல்லாரும் வெளிய... டாக்டர் வந்து என்னை தான் திட்டுவார்" என கத்தினாள்

விரைந்து வந்த டாக்டர் பரிசோதித்துவிட்டு "பிரஷர் அதிகம் ஆகி இருக்கு" என அதற்கான மருந்தை செலுத்த பணித்தார்

"என்ன மிசெஸ் கௌரி நான் எத்தனை முறை சொன்னேன் உங்க கிட்ட. she is still not 100% out of danger. Luckily, pressure ரெம்ப shootup ஆகல, அதுக்குள்ள பாத்துட்டோம். ப்ளீஸ் இனிமே யாரும் பாக்க போக வேண்டாம்" என கடிந்து கொண்டார்

அவள் மனதில் எத்தனை காதல் இருந்தால் தன் சிறு தொடுகை அவளை இத்தனை பாதிக்குமென கார்த்தி உறைந்து போனான். முடிந்தவரை அவளை காணாமல் இருப்பதே அவளுக்கு நலம் பயக்கும் என உணர்ந்தான். அது எந்த அளவுக்கு தனக்கு சாத்தியம் என புரியவில்லை அவனுக்கு

காதலை உணராத போதே தோழியாய் அவளை காணாமல் தவித்தவன் இப்போது சகலமும் அவளே என மனம் பதிந்த பின் ஒரு கணம் கூட அவளை விட்டு விலக மனம் ஒப்பவில்லை

_________________________

பத்து நாள் விடுமுறை காலம் முடிய அன்று அலுவலகத்துக்கு செல்ல மனம் இல்லாமல் சென்றான் கார்த்தி

திரும்பவும் வேறு ஒரு பணிக்காக அமெரிக்கா செல்ல வேண்டுமென அவன் மேலாளர் பணிக்க "தன்னால் செல்ல இயலாது லோக்கல் ப்ராஜெக்ட் வேண்டும்" என்றான்

அதனால் அவன் சம்பளம் கணிசமாய் குறையும் என்றதை அவன் சிறிதும் பொருட்படுத்தவில்லை

"வேலையே போகும் என்றாலும் நிச்சியம் தன்னால் இயலாது" என்று மறுத்தான்

அந்த ஊரிலேயே வேறு ஒரு ப்ராஜெக்ட்க்கு அமர்த்தப்பட்டான்

__________________________

அதன் பின் கிட்டதட்ட ஒரு மாதம் காயத்ரி மருத்துவமனையில் இருந்தாள்

ஒரு வாரத்திற்கு பின் ICU வில் இருந்து அறைக்கு மாற்றினர்

ஆனாலும் பத்திரமாய் இருக்கணுமேன டாக்டர் எச்சரித்தார்

அதன் பின் தினமும் அலுவலகம் செல்லும் முன் தன் அம்மா தயார் செய்து வைத்து இருக்கும் உணவை எடுத்து கொண்டு மருத்துவமனை சென்று காயத்ரியை பார்த்து விட்டு மீண்டும் மாலை அலுவலகம் முடிந்து நேரே மருத்துவமனை சென்று பார்த்து விட்டு வருவது தினசரி வாடிக்கை ஆனது கார்த்திக்கு

அவனை கண்டதும் செந்தாமரையாய் மலரும் அந்த முகத்தை காண நாள் முழுதும் அதே நினைவில் தவித்தான். முடிந்த வரை அவளை கண்ணோடு கண் நேரே பார்ப்பதை இருந்தான். தன்னையும் அறியாமல் தன் காதல் தன்னை இனம் காட்டி விடுமோஎன பயந்தான்

இந்த நாட்களில் இருவரும் பழைய தினங்கள் போல் இயல்பாய் பேச முயன்றனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்

மருத்துவமனை விட்டு கிளம்பிய அன்று டாக்டர் கூறியது கார்த்தியின் தவிப்பை மேலும் கூட்டியது

"காயத்ரி இப்போதைக்கி ஒகே தான். ஆனா இன்னும் பத்திரமாத்தான் இருக்கணும். மெடிக்கல் டெர்ம்ஸ்ல சொன்னா போஸ்ட் சர்ஜெரி ஸ்டேஜ். ஹெட் இஞ்சுரிக்கு இந்த போஸ்ட் சர்ஜெரி ஸ்டேஜ் ஒன் இயர் நாங்க பிக்ஸ் பண்றது. சிலர் சீக்கரமும் சரி ஆகலாம். But to be on a safer side every month செக் up வாங்க ஒன் இயர்க்கு

அப்புறம் எதுவும் problem வர சான்ஸ் இல்லை. ஆனா இந்த ஒரு வருசத்துக்குள்ள எதுனா injury or relapse ஆனா ரெம்ப ரிஸ்க். So, be careful and take complete care of her" என டாக்டர் சொல்லி முடிக்க

"ஒகே டாக்டர் நீங்க சொன்னா மாதிரி நாங்க கேர்புல்லா இருக்கோம்" என்றார் காயத்ரியின் அப்பா

கார்த்தியின் நிலை தான் கவலைக்கிடமானது

அன்று தனது ஒரு சிறு ஸ்பரிசம் அவளை பாதித்தது கண் முன் வர இன்னும் ஒரு வருடம் தன் மனதை காட்டாமல் இருப்பதே உத்தமம் என முடிவு செய்தான், அது எத்தனை கடினம் என்பது தெளிவாய் உணர்ந்தே

இரண்டு வருடங்கள்
இரும்புமனம் காட்டினேனே
எப்படி தவித்தாயோ
என்செல்லமே நீயும்
இரண்டு நிமிடம்கூட
இயலவில்லை எனக்கு
காதல் கொண்டமனதை
கட்டுப்படுத்த கரைகிறேனடி

_______________

வீட்டுக்கு சென்ற மறுநாள் காயத்ரியின் பிறந்த நாளாய் அமைந்தது எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி ஆனது, புனர் ஜென்மத்தின் முதல் பிறந்தநாள் அல்லவா அது

"ஹே காயு. ஹாப்பி பர்த்டே டா" என கௌரி முதல் வாழ்த்தை சொல்ல

"தேங்க்ஸ் கௌரி" என புன்னகையுடன் கண் விழித்தாள் காயத்ரி

"கார்த்தி ரெம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கான்... இரு வர சொல்றேன்" எனவும்

"ம்...." என ஆர்வமாய் வாயிலை நோக்கினாள்

"ஹாய் காயத்ரி... ஹாப்பி பர்த்டே" என கார்த்தியின் குரல் கேட்க மகிழ்ச்சி ததும்பியது மனதில்

"Wishes இருக்கட்டும்....என்னோட கிப்ட் எங்க?" என்றாள் உரிமையாய்

பழைய நாட்களை போல் உரிமையாய் அவள் பேச "என் மனதையே உனக்கு தந்தேனடி" என கவிதையாய் சொல்ல தோன்றிய மனதை கடிவாளம் இட்டு நிறுத்தினான் கார்த்தி

மனதின் உணர்வை மறைக்க முயன்று அவளை நேரே பார்க்க இயலாமல் பரிசு பொருளை எடுக்கும் சாக்கில் குனிந்தான்

"இதோ... கிபிட்" என கையில் கொடுக்க போனவன் "வெயிட் வெயிட்...என்னனு guess பண்ணு அப்போ தான் தருவேன்" என குறும்பாய் கூற, அதை ரசித்தவள்

"ம்... patient க்கு என்ன தருவாங்க? horlicks , bournvita வா" என அதே குறும்புடன் உரைக்க அந்த குறும்பு சிரிப்பில் தன்னை முற்றிலும் இழந்தான் கார்த்தி

அவளை அணைத்துகொள்ள துடித்த கையை இறுக பற்றி நிறுத்தினான்

அதற்கு மேல் அவள் அருகில் இருப்பது ஆபத்து என தோன்ற "நீயே பிரிச்சு பாரு" என பேச்சை மாற்றினான்

பிரித்து பார்த்தவள் மிகவும் சந்தோசமானாள்

கால் கொலுசுகள் என்றால் அவளுக்கு மிகவும் விருப்பம். எத்தனை செட் வைத்து இருந்த போதும் மீண்டும் மீண்டும் வாங்குவாள்

சில வருடங்களுக்கு முன் ஒரு முறை எல்லோரும் தீபாவளி ஜவுளி வாங்க சென்ற போது ஐம்பொன் கொலுசு வேண்டுமென அவள் பிடிவாதம் செய்ய அவள் அன்னை ஐம்பொன் கூடாது என மறுத்து விட்டாள். அன்று முழுதும் அவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தாள்

அதை நினைவு வைத்து அவன் வாங்கியது மனதிற்கு மிகவும் சந்தோஷம் அளித்தது காயத்ரிக்கு

"வாவ்...ரெம்ப நல்லா இருக்கு கார்த்தி. உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா, நான் எப்பவோ கேட்டது?" என குதூகலித்தாள்

புன்னகையுடன் அவள் சந்தோசத்தை ரசித்தான் கார்த்தி

இன்னும் ஏதேதோ வாங்கவேண்டும் என ஆசை உந்திய போதும் அது தன் மனதை காட்டி விடுமோ என பயந்து சிறியதாய் அதே நேரம் அவளுக்கு பிடித்ததாயும் வாங்கி இருந்தான்

இப்படியே மகிழ்வும் சிரிப்புமாய் நாட்கள் ஓடின

தினமும் காலையும் மாலையும் அவளை காண்பதே வாழ்வின் அர்த்தமாய் தோன்றியது கார்த்திக்கு. ஏன் தான் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி இருக்கிறதோ என கோபமாய் வந்தது. நாள் முழுதும் அவள் அருகிலேயே இருக்க தோன்றியது

காயத்ரியும் மற்ற நேரம் எல்லாம் அந்த சில மணி நேரங்களுக்காகவே காத்திருந்தாள்

ஒரு நாள் அலுவலகத்தில் சற்று நேரமாகி விட வாசலிலேயே காத்திருந்தாள்

"ஏன் கார்த்தி இத்தனை நேரம்? நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்"

"சாரி காயு. கெளம்பற நேரத்துல ஒரு வேலை. அப்படியே இழுத்துடுத்து" என்றான் அவள் தவிப்பில் உருகி

"உன்னோட செல்போன்க்கு கூட நெறைய வாட்டி ட்ரை பண்ணினேன். போன்ஏ எடுக்கல" என உரிமையாய் கோபித்தாள்

அவள் முகம் கோணியது காண பொறுக்காமல் "சாரி டா. போன் பாட்டரி ஏதோ problem . என்னோட friend கடைல குடுத்துட்டு வந்தேன். morning தான் வாங்கணும்" என சமாதானம் செய்தான்

இப்படி தவிப்பும் காதலுமாய் நாட்கள் சென்றன

தினமும் மாலை நெருங்கும் முன்னே தன்னை தயார் செய்து கொண்டு காயத்ரி காத்திருந்ததும் கார்த்தியை கண்டதும் அவளது மலர்ந்த முகமும் அவன் விடை பெற்று சென்றதும் முகம் வாடுவதும் காயத்ரியின் பெற்றோருக்கும் அவள் மனதை உணர்த்தியது

ஆனாலும் அவளாக சொல்லும் வரை பொறுமை காக்க நினைத்தனர். கார்த்தியின் வீட்டிலும் அதே நிலை தான்

அடுத்த சில மாதங்கள் பரிசோதனைக்கு சென்ற போது நல்ல முன்னேற்றம் இருப்பதாக டாக்டர் கூறியது எல்லோர் மனத்திலும் நிம்மதியை தோற்றுவித்தது

__________________

அன்று அலுவலகம் விட்டு வந்த போது காயத்ரியின் வீடு பூட்டி இருக்க மனம் பதறியது கார்த்திக்கு

ஒரு நொடிக்குள் மனம் ஆயிரம் காரணங்களை கற்பனை செய்து துடித்தது

விரைந்து தன் வீட்டை அடைந்தவன் முன்னறையில் தன் அன்னையும் காயத்ரியும் பேசிகொண்டிருப்பதை கண்டு போன உயிர் திரும்பி வந்தது போல் நிம்மதி அடைந்தான்

"வா கார்த்தி" என்றாள் காயத்ரி உற்சாகமாய் அவனை கண்டதும்

"என்னாச்சு காயத்ரி? ஏன் ஆத்துல பூட்டு போட்டிருக்கு"

"ஏன்? ஒரு நா உங்க ஆத்துல நான் இருக்க கூடாதோ"

"காலம் பூரா இங்கேயே இருக்கணும்னு தானடி தவிக்கிறேன்" என வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கினான்

"அது இல்ல.... மாமி உன்னை ஆத்தை விட்டு படி எறங்க கூட விடமாட்டாங்களே. அதான் கேட்டேன்" எனவும்

"ஆமாம் கார்த்தி. மாமிக்கு விட்டுட்டு போகவே மனசில்ல. ஆனா மாமியோட நாத்தனார் ஆத்துகாரர் தவறிட்டார். போகவும் வேணும் காயத்ரிய அழைச்சுண்டு போக இஷ்டமில்ல. நான் தான் ஒரு நா இங்க இருக்கட்டும்னு பிடிவாதம் பண்ணி அனுப்பி வெச்சேன்" எனவும்

"ஆஹா...இன்று முழுதும் இங்கயே இருக்க போறாளா" என கார்த்தியின் மனம் சந்தோசத்தில் துள்ளியது

"சரிடா... நீ போய் மொகம் அலம்பிண்டு வா... நான் காபி போடறேன். காயு நோக்கும் காபி சரிதானே" என கேட்க அவள் பதில் சொல்லும் முன் கார்த்தி முந்தினான்

"ஐயோ...என்னமா நீ? cafeine எல்லாம் நல்லது இல்லைன்னு டாக்டர் போன வாட்டியே சொன்னார். அவளுக்கு பால் இல்லைனா பூஸ்ட் குடு" என அவசரமாய் சொல்ல

"ஒரு நேரம் காபி குடிச்சா ஒண்ணும் ஆய்டாது கார்த்தி....நானே காபி போடறேன் இருங்க மாமி" என அவள் எழ

"இரு காயத்ரி நீ கார்த்தியோட பேசிண்டிரு. நான் போடறேன். அவன் சொன்னாப்ல நோக்கு பூஸ்ட்ஏ தரேன்" என அவர்களுக்கு தனிமை தந்து விலகினாள்

கதிரவன் மறைந்து நிலவு தலை காட்டிய நேரத்தில் மின்சாரம் தடைபட

"கார்த்தி உள்ளே ஒரே புழுக்கமா இருக்கு. பின்கட்டுல chair போட்டு உக்காருங்கோ நீயும் காயத்ரியும். வேப்ப மர காத்து நன்னா இருக்கும். நானும் அப்பாவும் ஒரு நடை போயிட்டு வரோம்" என கிளம்பினாள் காஞ்சனா

"Chair வேண்டாம் கார்த்தி. பின்கட்டு செவத்துல சாய்ஞ்சு அப்படியே உக்காரலாம் வா. நல்ல மேடா தானே இருக்கு" என்றாள் காயத்ரி

"தரை சில்லுனு இருக்கும் காயு" எனவும்

"இல்ல கார்த்தி. ரெம்ப நாள் ஆச்சு அப்படி ப்ரீயா இருந்து. ப்ளீஸ்" என கெஞ்ச அதற்கு மேல் மறுக்க இயலவில்லை அவனுக்கு

"ரெம்ப நல்லா இருக்கில்ல கார்த்தி"

"என்ன?" என்றான் வேண்டுமென்றே புரியாதது போல்

"ம்....இந்த இதமான வேப்பமர காத்து. சில்லுனு தரை. பௌர்ணமி நிலா.... எல்லாமே அழகா இருக்கில்ல" என உணர்ச்சி பூர்வமாய் காயத்ரி சிலாகிக்க அந்த முழுநிலவு ஒளிக்கு போட்டியாய் ஜொலித்த அவள் முகம் கார்த்தியை கவிஞன் ஆக்கியது

ஒரு கணம் சுற்றுப்புறம் மறந்தான். ஏன்? தன்னையே மறந்தான்

"இதை எல்லாத்தையும் விட நீ ரெம்ப அழகா இருக்க காயு" என்றான் காதலுடன்

காற்றின் வேகத்தில் முன் நெற்றியில் அவள் சிகை சிறிது விழ பூர்ணசந்திரனாய் ஒளிவீசும் அவள் முகத்தை ரசிக்க அது தடை செய்வதாய் தோன்ற தனிச்சையாய் தன் ஒற்றை விரலால் ஒதுக்கினான் கார்த்தி

அவன் தொடுகை தந்த அதிர்வில் உடல் சிலிர்க்க அவன் காதல் மொழியும் மனம் சிலிர்க்க செய்ய மனம் தறிகெட்டு ஓடியது காயத்ரி

ஒருநிலவுதான் பிரபஞ்சத்தில்என
ஒன்றாம்வகுப்பில் படித்தது
பொய்யானது இப்போது
பெண்ணே உனைகண்டதும்

அவன் மன மாற்றம் ஓரளவு புரிந்த போதும் அவனே வாய் விட்டு சொல்லும் வரை எதுவும் கேட்க பயமாய் இருந்தது அவளுக்கு. சூடு பட்ட பூனையாய் ஒரு முறை அனுபவித்த நிராகரிப்பே பேச தடை செய்தது

இன்னும் நூறு சதம் அப்படி தானா எனவும் அவளால் முடிவுக்கு வர இயலவில்லை. ஒரு வேளை குற்ற உணர்வில் அன்பை பொழிகிறானோ. தனக்கு தான் அது காதல் போல தோன்றுகிறதோ என பல சிந்தனையில் மனம் அலைபாய்ந்தது

ஏதேனும் பேசி இப்போது உள்ள இந்த சந்தோசத்தையும் இழந்து விடுவோமே என அஞ்சினாள். எனவே மௌனம் காத்தாள்

அவள் சிலிர்த்ததும் கார்த்திக்கு அன்று மருத்துவமனையில் நடந்தது நினைவுவந்து பயம் தோன்ற இனியும் அவள் அருகில் தனிமையில் இருப்பது உகந்ததல்ல என

"காயு... இங்க ரெம்ப சில்லுன்னு இருக்கு. அம்மா திட்டுவாங்க. வா முன்னாடி திண்ணைல போய் உக்காரலாம்" என்றான்

அவளும் மறுப்பேதும் சொல்லாமல் பின் சென்றாள்

இந்த நிகழ்வு கார்த்தியின் மனதில் காத்திருத்தலை வெறுக்க செய்தது. டாக்டர் சொன்ன ஒரு வருட கெடு முடிய மூன்று மாதம் இருந்தது அவனை பொறுமை இழக்க செய்தது

ஆனாலும் அவசரப்பட்டு பாதகம் தேடிக்கொள்ள மனம் ஒப்பவில்லை

_____________________________

கார்த்திக்கு அடுத்து வந்த மூன்று மாதம் மூன்று வருடம் போல் கழிந்தது எனலாம்

"காயத்ரி எல்லா செக்கப்பும் செஞ்சாச்சு. நான் சொன்ன ஒரு வருசமும் முடிஞ்சுது. You're perfectly alright. You can lead a normal life" என டாக்டர் கூற சுற்றி இருந்த எல்லோர் முகத்திலும் நிம்மதி பரவியது

மருத்துவமனையில் இருந்து காயத்ரி பெற்றோருடன் வீட்டிற்கு செல்ல கௌரியை தானே அவள் வீட்டில் விட்டு விடுவதாய் அழைத்து சென்றான் கார்த்தி

"நான் ஆட்டோல போய்க்கறேன் கார்த்தி. நீ இனி அது வரைக்கும் வந்துட்டு திரும்ப வரணும் வீணா" என சொன்னதை ஏற்காமல் அழைத்து சென்றான்

"என்ன கார்த்தி? உங்க லவ் ஸ்டோரி எப்படி போயிட்டு இருக்கு?" என்றாள் செல்லும் வழியில்

"அது....அதுக்கு தான் உன்னிட்ட ஒரு ஹெல்ப் கேக்கனும்னு நெனச்சேன் கௌரி"

"என்ன மாப்பிள்ளை சார்? எங்க அம்மா அப்பா கிட்ட தூது போணுமா"

"இல்ல.... ஆமா..."

"இல்லையா...ஆமாவா... தெளிவா சொல்லு" என கேலி செய்தாள்

"அது.....நாளைக்கி காயு பர்த்டே இல்லையா. அவள நான் வெளிய அழைச்சுட்டு போக நீ தான் உங்க ஆத்துல permission வாங்கி தரணும்" என தயக்கமாய் சொல்ல

"ஓ...ஹோ... இதுக்கு தான் அக்கறையா என்னை ஆத்துல விடறதா சொல்லி அழைச்சுண்டு வந்தியா? அப்பவோ நெனச்சேன்....சோழியும் குடுமியும் சும்மா ஆடுமானு..." என வேண்டுமென்றே சீண்டினாள் கௌரி

"ச்சே..... அப்படி எல்லாம் இல்ல கௌரி" என்றான் பாவமாய்

"சரி சரி... போனா போறது.... எங்காத்துல சொல்றேன்...உங்க காதல் சமாச்சாரத்தையும் சேத்து" என்றாள் சிரிப்புடன்

___________________________

பச்சை வண்ண பட்டு சேலையில் தேவதையாய் நின்றாள் காயத்ரி

"என் கண்ணே பட்டுடும்டீ செல்லமே" என மகளுக்கு நெட்டி முறித்தாள் கோகிலா

"ஆமாம் கோகிலா.... இன்னிக்கி சாயங்காலமா திருஷ்டி கழிக்கணும் மறக்காம" என்றாள் காஞ்சனா

எதுவும் பேசாமல் கண்களாலேயே அவளை விழுங்குவது போல் பார்த்து நின்றான் கார்த்தி

இருவரும் ஜோடியாய் புறப்பட இருவரின் பெற்றோரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்த புன்னகை பூத்தனர்

முதலில் கோவிலுக்கு சென்றனர். காயத்ரியின் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் பெற்று கொண்டு காரில் அமரும் வரை இருவரும் அதிகம் எதுவும் பேசவில்லை. கார் கிளம்பியதும்

"இப்போ எங்க போறோம்னு தெரியுமா?" என கார்த்தி கேட்க காயத்ரி பதிலே பேசவில்லை

முகத்தை கடுகடுவென வைத்து இருந்தாள்

"ஏய்...காயு....என்னாச்சு..." என கவலையானான் கார்த்தி

அவள் எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்க காரை ஓரத்தில் நிறுத்தி "காயு....ப்ளீஸ் என்னாச்சுனு சொல்லு"

"ஒண்ணும் இல்ல...." என முகம் திருப்பினாள் கோபமாய்

அவள் கோபத்தின் அர்த்தம் புரியாமல் கார்த்தி குழம்பினான்

"ப்ளீஸ் காயு சொல்லு....என்ன கோவம் இப்போ?" என பாவமாய் கேட்க

"அது என்ன... என்னை வெளிய அழைச்சுண்டு போக கௌரி மூலமா permission கேக்கறது... என்னை கேக்கறதுக்கு என்ன"

"இது தான் இப்போ கோவமா? நான் என்னமோன்னு பயந்துட்டேன்"

"அப்போ.... இன்னும் வேற நெறய தப்பு செஞ்சிருக்கயா நேக்கு தெரியாம"

"ம்....ஆமா....நெறய தப்பு... செஞ்சு தான் இருக்கேன்... இன்னும் கொஞ்ச நாழில அது எல்லாம் என்னனு ஒப்பிச்சு ஒண்ணா மன்னிப்பு கேட்டுக்கறேன், சரிதானா மேடம்" என கேலி செய்ய அவன் கேலி சிரிப்பை வரவழைத்த போதும் வேண்டுமென்றே கோப முகம் காட்ட முயன்றாள் காயத்ரி

"இப்போ நாம எங்க போறோம்னு தெரியுமா?" என அவன் மறுபடியும் கேட்க

"ம்... நேக்கு ஜோசியம் எதுவும் தெரியும்னு உன்னிட்ட எப்பவாச்சும் சொல்லி இருக்கனா என்ன?" என அவளும் கேலி செய்ய இப்படியே கேலியும் சீண்டலுமாய் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் ஊருக்கு சற்று ஒதுக்குபுறத்தில் இருந்த கார்த்தியின் அப்பா வழி சொத்தான அவர்களின் பூர்வீக தோட்ட வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்

"வாவ்.... இங்க வந்து ரெம்ப நாள் ஆச்சில்ல கார்த்தி... இன்னும் அதே அழகோட இருக்கு" என சிலாகித்தாள் காயத்ரி

சிறுவயதில் எல்லாம் கார்த்தியின் தாத்தா பாட்டி இருந்த வரை ஒரு ஒரு வாரமும் குடும்பமாய் வந்து செல்வது வழக்கம். பலமுறை காயத்ரியும் இங்கு வந்து தங்கியதுண்டு

கார்த்தி பிறந்தது கூட இந்த வீட்டில் தான் என அவன் பாட்டி சொன்னதுண்டு

அதன் காரணமாய் தன் காதலை கூட அவளிடம் இங்கு வைத்து சொல்லணும் என அழைத்து வந்தான் கார்த்தி. தனிமை வேண்டுமென தோட்டத்தை பராமரித்து வந்த பணியாளை கூட விடுப்பு கொடுத்து அனுப்பி இருந்தான்

"இப்ப ஏன் இங்க வந்தோம்?" என காயத்ரி கேட்க

"ம்.... அது... உன்னிட்ட நான் ஒரு விசயம் சொல்லணும். அதுக்கு முன்னாடி... வா .... உனக்கு ரெம்ப பிடிச்ச தோப்புக்கு நடுவுல இருக்கற பவளமல்லி கிட்ட போவோம்" என அவள் கை பற்றி அழைத்து சென்றான்

பவளமல்லி மரத்தின் கீழ் திண்ணை போல் அமைக்கப்பட்டு இருந்தது. தோப்பின் நடுவில் அமர்ந்து மேற்பார்வை செய்ய வசதியாய் அவன் தாத்தா கட்டிய திண்ணை அது, இன்று பேரனின் காதலுக்கு சாட்சியாக நின்றது

"காயு.....உன்னிட்ட ஒரு விசயம் சொல்லணும்...." என தயக்கமாய் அவளை ஏறிட்டான்

காயத்ரியின் மனம் தடதடக்க அதேநேரம் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் என்ன என்பது போல் பார்த்தாள்

"அது....வந்து...." என அவள் கையை தன் கையில் சிறை பிடித்தான். சட்டை பையில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்தான்

காயத்ரிக்கு இதயம் படுவேகமாக துடித்தது. என்ன நடக்கிறதென சுதாரிக்கும் முன்னே அதை அவள் விரலில் அணிவித்தான்

"காயு.... ஐ லவ் யு டா" என அவள் பட்டு விரல்களில் இதழ் பதிக்க காயத்ரி அப்படியே கண்கள் சொருக கீழே சரிந்தாள்

கீழே விழாமல் அவளை அணைத்து பிடித்தவன் "காயு....காயு....ப்ளீஸ் கண்ணை தெற... காயு ப்ளீஸ்....ஐயோ கடவுளே....என்ன நடக்க கூடாதுன்னு ஒரு வருஷம் தவிச்சேனோ... அதே நடந்துடும் போல இருக்கே....ஐயோ செல்போன் டவர் கூட இல்லையே இங்க... என்ன செய்வேன்....காயு" என அவன் கண்ணீர் துளி அவள் முகத்தில் பட

"ரெம்ப பயந்துட்டயா கார்த்தி" என சிரித்தாள் காயத்ரி

தன் தவிப்பு புரியாமல் சிறுபிள்ளைதனமாய் அவள் வேண்டுமென்றே நினைவிழந்தது போல் நடித்தது புரிய, கோபமாய் அவளை விட்டு அகன்றான்

அவன் கோபம் அவனை மேலும் சீண்டி பார்க்க அவளை தூண்ட

"என்ன கார்த்தி கோபமா? ஒரு வருஷம் காத்தியே.... ஒரு நிமிஷம் முடியலையா" என சிரித்து கொண்டே கேட்க அவன் முகம் பாறையாய் இறுக பெரிய மூச்சுகள் எடுத்து நின்றான்

இன்னும் அவன் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது புரிய அதற்கு மேல் பொறுக்க இயலாமல்

"சாரி கார்த்தி....சும்மா விளையாட்டுக்கு தான்...இப்படி எதுனா ஆய்டுமோனு பயந்து தானே என்னை ஒரு வருசமா தவிக்க வெச்சேன்னு... சும்மா....விளையாட்டா... சாரி....கோபமா இன்னும்" என கெஞ்ச அதற்கு மேலும் கோபத்தை பிடித்து வைக்க இயலவில்லை அவனுக்கு

இருந்தாலும் மனம் ஆற்றாமையால் அவளை விலக்கி நிறுத்தியவன் அவளை தலை முதல் கால் ஆராய்ந்தான். அவளுக்கு நிச்சியமாய் எதுவும் ஆகவில்லை என உறுதி செய்து கொண்டதும் "ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சு காயு..." என கண்கள் பனிக்க கூற

"சாரி சாரி சாரி கார்த்தி...சும்மா விளையாட்டா....தெரியாம... சாரி ப்ளீஸ் சாரி" என கெஞ்சினாள்

"காயு.... இனி விளையாட்டுக்கு கூட எப்பவும் இப்படி செஞ்சுடாதே... வாழ்நாள் மொத்ததுக்குமான தவிப்பை நான் அந்த ஒரு நாளுலேயே அனுபவிச்சுட்டேன் கண்மணி" என உணர்ச்சிவசப்பட்டான்

"சாரி கார்த்தி. இனி எப்பவும் இப்படி செய்ய மாட்டேன். promise ...." என அவன் கைகளில் கை பதித்தாள்

அவன் முகம் இன்னும் இறுக்கமாகவே இருக்க "ப்ளீஸ் கார்த்தி....எனக்கு என்ன தண்டனை வேணா குடு. இப்படி இருக்காதே" என தவிப்புடன் சொல்ல அப்படியே கரைந்தான் கார்த்தி

"ம்....என்ன தண்டனை வேணா தரலாமா?" என குறும்பாய் கேட்க

"ம்.....ம்...." என்றாள் அவளும் அவன் சிரிப்பை ரசித்து மகிழ்வுடன்

"ம்..... ஒகே அப்படினா.... உடனே ஆயுள் தண்டனை விதிக்கிறேன் உனக்கு" என தேவதூதன் போல் கை தூக்கி ஆசிர்வாதம் போல் காட்ட

"ஆயுள் தண்டனையா..." என பொய்யாய் பயந்தது போல் கேட்க

"ஆமாம் கண்மணி.... ஆயுள் முழுதும் என் இதய சிறையில் கைதியாய் உன்னை சிறை வைக்கிறேன்" என சொல்ல

"ஹா ஹா ஹா ... எந்த சினிமா டயலாக் காப்பி அடிச்சே" என கலகலவென காயத்ரி நகைக்க

"ஏய் கொழுப்பா நோக்கு....? நான் கஷ்டப்பட்டு சிந்திச்சு கவிதையா பேசினா நோக்கு காப்பி மாதிரி தோணுதா" என பொய்யாய் கோபம் காட்ட

"ஆமா... நீ தெனமும் சமைச்சு போட்டு கொழுப்பு தான் நேக்கு"

"ம்....சமைச்சு வேற போடணுமா.... ஆஹா... அப்போ என்னை முழு நேர சமையல்காரன் ஆக்கிடுவ போல...கஷ்டம் தான் கல்யாணத்துக்கு அப்புறம்....ம்..." என பெருமையாய் சலித்தான்

அவன் சலிப்பை ரசித்தவள் எதுவும் பேசாமல் அவன் மார்பில் முகம் புதைத்தாள்

அவர்களின் காதலுக்கு சாட்சியாய் நின்ற அந்த கணத்தின் அமைதியை இருவரும் ரசித்து அனுபவித்தனர்

"காயு...."

"ம்...."

"ஏன்...எதுவும் பேச மாட்டேன்ற?"

"ம்..... இன்னும் இது நிஜம்னு நம்ப முடியல கார்த்தி.... கண்ணு தெறந்ததும் கனவு கலைஞ்சுடுமோன்னு..... நெறய வாட்டி இந்த மாதிரி கனவு கண்டு..." என்றவள் அதற்கு பேச இயலாமல் தேம்பினாள் அதே போல் கலைந்த கனவுகளின் நினைவில்

அவள் தேம்பல் பொறுக்கமாட்டாமல் "சாரிடா செல்லமே.... உன்ன ரெம்பவே தவிக்க வெச்சுட்டேன் காயு மா. அப்பா... ரெண்டு வருஷம்... எப்படி தவிச்சுருப்ப இல்ல. எனக்கு மனசுல இப்படித்தான்னு புரிஞ்ச அந்த நிமிசமே உன்னிட்ட சொல்லிடணும்னு எப்படி துடிச்சேன் தெரியுமா?"

"சொல்லேன் கார்த்தி...எப்போ அப்படின்னு தோணிச்சுன்னு...கேக்கனும்னு இருக்கு"

"கண்ணு மூடற நிமிஷம் போற உயிர பிடிச்சு வெச்சுட்டு  ஐ லவ் யு கார்த்தினு சொன்னியே....என்னமோ பண்ணிடுச்சுடா நேக்கு... உயிர் போற மாதிரி ஒரு வலி...இப்ப நெனச்சா கூட பயமா இருக்குடா"

"நீ சர்ஜரி முடிஞ்சு பாக்க வந்தியே அப்பவே நேக்கு சந்தேகம் தான் கார்த்தி"

"நோக்கு சந்தேகம் வந்துட கூடாதுன்னு நான் எத்தனை கட்டுபடுத்திண்டேன் தெரியுமா....அப்படியும் பிரஷர் அதிகமாகி அப்பாப்பா என்ன டென்ஷன்"

"அதனால தான் ஒரு வருசமா சொல்லலியா"

"ம்....அன்னைக்கி பௌர்ணமிய ரசிச்சுட்டு இருந்தப்ப ஒரு நிமிஷம் நான் வசம் இழந்தது நிஜம்... எப்படியோ கட்டுபடித்திண்டேன்"

"ஆமா... அன்னிக்கி தான் நேக்கு ரெம்பவே நம்பிக்கை வந்தது கார்த்தி. ஆனாலும் என்னமோ ஒரு பயம்...மொதல் முறை நீ மறுத்ததே தோணி...."

"சாரிடா...எப்படி வேதனை பட்டு இருப்பே இல்ல.... மன்னிச்சுடு கண்மணி" என அவன் குற்றஉணர்வில் தவிக்க அது பொறுக்காமல் பேச்சை மாற்றும் எண்ணமாய்

"அது சரி... கௌரிக்கு தெரியுமா? ஏன் அவகிட்ட permission கேக்க சொன்ன இன்னிக்கி வெளிய வர"

"கௌரிக்கு நீ hospital ல இருந்தப்பவே எல்லாம் தெரியும்..."

"அடிப்பாவி.... மூச்சு விடல பாவி"

"தப்பு அவ மேல இல்ல காயு... நேக்கு தான் ரெம்ப பயமா இருந்தது.... டாக்டர் வேற அநியாயத்துக்கு பயப்படுத்தி வெச்சிருந்தார். என்ன செய்ய?"

"இன்னும் நம்பவே முடியல....என்ன சொல்றதுன்னு தெரியல கார்த்தி"

"ம்.... இன்னும் நம்ப முடியலையா.... இது கனவு இல்ல நிஜம்னு புரியவெக்க என்னிட்ட வேற ஒரு புது வைத்தியம் இருக்கு. அதை செய்யவா" என அப்பாவியாய் கேட்டான்

"என்ன....வைத்தியமா....?" என புரியாமல் விழிக்க அவன் அவள் காதில் ஏதோ சொல்ல அவள் முகம் குங்குமமாய் சிவந்தது

வெட்கத்தை மறைக்க அவன் மார்பில் முகம் மறைத்தாள்

அவள் நாணத்தை கண்டு தானும் நாணி சூரியன் கூட மேகத்தில் மறைந்தது

நமக்கும் தான் இனி என்ன வேலை இங்கே...

பிரியாவரம் வேண்டி
பிறவிபல காத்திருந்தேன்
பிரியமான உனைவேண்டி
பிறவிநூறு தவம்செய்தேன்
வரம்தந்த தேவதையே
வாழ்க்கைநீயே என்னவளே
பிரியமானவளே....

முற்றும்...

Thursday, May 20, 2010

கொலம்பஸ் கொலம்பஸ்... விட்டாச்சு லீவு...

என்ன ஆச்சு? என்ன ஆச்சுனு கேக்கறீங்களா? சொல்றேன் சொல்றேன் பொறுமை பொறுமை

Annual exam முடிஞ்சு வந்து பை ஒரு பக்கம், செருப்பு ஒரு பக்கம் தெறிக்க "ஐய்யா லீவு" ன்னு ஒரு குதி குதிப்போமே... அட அட.... என்னா ஒரு சுகம் அது... ஒரே குஷி தான் போங்க... அந்த சொகம் இன்னிக்கி வரைக்கும் எதுலயும் கெடைக்கல... 

LKG ல ஆரம்பிச்சு இப்ப வேலைக்கி போற காலம் வரைக்கும் லீவுன்னா என்னா ஒரு சந்தோஷம் இல்லைங்களா...

"வெள்ளிக்கிழமை ஆனா.. என்னமோ இனி எல்லாமே முடிஞ்சு போன மாதிரி, இனி வேலைக்கே போக வேண்டியதில்லைங்கர மாதிரி அப்படி ஒரு குஷி ஆய்டுது. திங்ககிழமை வராமயா போய்டும். அது தோன்றதே இல்லை" னு என்னோட friend ஒருத்தங்க சொல்லுவாங்க. ரெம்ப சரிதான்

இப்ப என்னத்துக்கு இந்த build -up எல்லாம்னு கேக்கறது கேக்குது

இந்த வாரம் இங்க (கனடா) சனி ஞாயிறோட சேத்து திங்களும் லீவு....................... எதுக்கா? Queen Victoria Day Holiday

அது என்னனு ஒரு ஒன் லைன் சொல்லிடறேன்... (இவ ஒன் லைன் சொல்றேன்னா எப்படியும் பத்து லைன்ஆச்சும் எழுதுவான்னு யாருங்க அங்க நடுவுல முணுமுணுக்கறது....)

இந்தியா மாதிரியே கனடாவும் பிரிட்டிஷ் ஆட்சிக்கி கீழ தான் இருந்தது ஒரு காலத்துல (பிரிட்டிஷ் எதை தான் விட்டு வெச்சாங்க). 1867 ல தான் Canadian Confederation pass பண்ணி federal Dominion of Canada உருவாச்சு. ஆனா கூட இப்பவும் இங்கிலாந்து ராணி தான் head of the state. அதாவது முதல் பூரண கும்ப மரியாதை அவங்களுக்கு தான்

அரசியல்ல / நிர்வாகத்துல அவங்க தலைஈடு எதுவும் இருக்காது. சும்மா ஒரு honarary மட்டும் தான். அவங்கள கௌரவிக்கற முகமா அப்போதைய ராணியோட பிறந்த நாளான May 24th விடுமுறை நாளா கொண்டாடப்படுது. பொதுவா மே மாசம் கடைசி திங்கள் தான் விடுமுறை இருக்கும். இந்த முறை மே 24 ஏ கடைசி திங்களா வந்து இருக்கு. இது தான் வரலாறு... போதுமா? (நிறுத்தும்மா தாயேன்னு யாரோ கதரற மாதிரி இருக்கே...)


A portrait in Ottawa City Hall of Queen Victoria, first sovereign of a confederated Canada
(இந்த படத்துல இருக்கறவங்க தான் அந்த நாள் British ராணி)

எனக்கு இன்னும் பெரிய குஷி இந்த முறை இந்த மூணு நாளோட இன்னும் ஒரு நாள் சேத்து லீவு போட்டுட்டு ஊரு சுத்தலாம்னு ரங்கமணி சொனனது தான். அதை சொல்லிட்டு எல்லோரும் மூணு நாள் என்னோட தொல்லை இல்லாம நிம்மதியா இருங்கன்னு சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்...

எங்க போறோம்? எப்படி போறோம்? என்ன காரணத்துக்காக இப்ப இந்த சுத்தல்? (அது தான் முக்கியமான suspense .... அப்பாடா ஒரு suspense வெச்சாச்சு... இன்னிக்கி நிம்மதியா தூங்குவேன்...) எல்லாம் போயிட்டு வந்து அடுத்த வாரம் விவரமா (விவகாரமா) சொல்றேன்...

போயிட்டு வாரனுங்க.... (யாரு அது... ச்சே ச்சே... அழவெல்லாம் கூடாது கண்ணு... இதோ மூணே நாளு... பறந்து போய்டும்....சுருக்கா போயிட்டு சட்டுன்னு வந்துடறேன்... கண்ண தொடச்சுக்கோ கண்ணு....வாரேன்...)

நீங்களும் weekend நல்லா என்ஜாய் பண்ணுங்க... அதோட காயத்ரிக்கு என்ன ஆச்சோ? கார்த்தி நிலைமை என்ன? அப்படின்னு கொஞ்சம் டென்ஷன் ஆனாலும் ஒண்ணும் தப்பு இல்ல.... எல்லாம் ஒரு சமுக சேவை எண்ணத்தோட சொல்றது தான்...

இதுல என்ன அம்மணி சமூக சேவைனு கேக்கறீங்களா? நீங்க டென்ஷன் ஆகி உங்க BP ஏறினா உங்க ஏரியால இருக்கற டாக்டர்கெல்லாம் நல்ல வருமானம் வருமல்லங்க... அது தான் சமூக சேவை... ஹும்... என்னைக்கி தான் இந்த உலகம் இந்த அப்பாவியோட நல்ல மனசை புரிஞ்சுக்க போகுதோ தெரியல?

ஒகே ஒகே நிறுத்திடறேன்... கண்டிப்பா நிறுத்திடறேன்... TA TA... bye bye... see you...

Tuesday, May 18, 2010

வீட்டை வித்துப்பார்..."வீட்டை கட்டி பார் கல்யாணம் பண்ணி பார்" தானே பழமொழி, இவ என்ன சம்மந்தமே இல்லாம சொல்றான்னு பாக்கறீங்களா. சொந்த (நொந்த) அனுபவம் அப்படி

இனிமே "வீட்டை வித்து பார்... புரோக்கர் கமிஷன் குடுத்து பார்" தான் என்னோட புதுமொழி

இருக்கற ஊரு அப்படி, நடந்த கதை அப்படி. இது.... கதையல்ல நிஜம்... மக்களே.... கேளுங்க சொல்றேன்

நான் மொதல்லையே ஒரு பதிவுல சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன். தினமும் ஆபீஸ் போறது என்னமோ திருப்பதி மலை ஏறி எறங்கற மாதிரி தான் எனக்கு. ஆபீஸ் மலை மேலயான்னு எல்லாம் நக்கல் பண்ணினா இட்லி பார்சல் வரும்... ஆமா... சொல்லிட்டேன்...

தினமும் travel டைம் மட்டும் கிட்டதட்ட 3.5 to 4 hours ஆய்டுது. winter னா இன்னும் கொடுமை. இதுல ரங்கமணி வேற ரயில்வே ஸ்டேஷன்ல கொண்டு போய் விட்ரதுக்கே என்னமோ ஆபீஸ் வாசல்ல டிராப் பண்ற மாதிரி "என்னை டிரைவர் வேலை பாக்க வெக்கறே"ன்னு டென்ஷன் ஆவார் அப்போ அப்போ

"மாசம் முந்நூறு டாலர் பார்கிங் குடுங்க நானே கார் எடுத்துட்டு போய்க்கறேன்"னு சொன்னா மட்டும் selectivehearingasia வந்துடும், அது என்னவா? selectiveamnesia மாதிரி இதுவும் ஒண்ணு, ரங்கமணிகள் ஸ்பெஷல், "வேண்டாங்கறது மட்டும் காதுல விழாது" ங்கறது அதோட தமிழாக்கம். இந்த விசியத்துல ரங்கமணிகள் PHD தான் (என்ன நான் சொல்றது சரி தானே...?)

சரி வீட்டு கதைக்கி போவோம். இந்த வம்பெல்லாம் வேண்டாம்னு பேசாம வீட்டை வித்துட்டு ட்ரெயின் ஸ்டேஷன் பக்கமா எதுனா வாங்கிக்கலாம்னு கிட்டத்தட்ட ஒரு வருசமா போராடி ரங்கமணிய ஒத்துக்க வெச்சாச்சு. அப்போ எனக்கு தெரியல அதை விட பெரிய போராட்டம் எல்லாம் இனிமே தான்னு (ச்சே... இதே தொடர் கதையா இருந்தா "வர போகும் விபரீதத்தை அறியாமல்"னு ஒரு "தொடரும்" போட்டு எல்லாரையும் டென்ஷன் பண்ணலாம்....ஹும்... இங்க முடியாதே...)

நாங்க இருக்கறது இந்த ஊரு பாஷைல சொல்லணும்னா semi-detached single family home . அதாவது ரெண்டு ரெண்டு வீடு சேந்து இருக்கும். தனி வாசல் தனி backyard , தனி கார்டன், தனி கார் garage எல்லாம் இருக்கும்.நடுல இருக்கற சுவர் மட்டும் ரெண்டு வீட்டுக்கும் பொதுவா இருக்கும்

வீடு விக்கறதுன்னு முடிவு பண்ணினதும் ஆள் ஆளுக்கு ஐடியா அம்புஜன்களா மாறி ஐடியா சொல்ல ஆரம்பிச்சுடாங்க. சிலர் பயப்படுத்த ஆரம்பிச்சாங்க.

சில dialogues எல்லாம் இதோ உங்களுக்காக....

"புவனா... எதுக்கும் ஒரு பத்து பதினஞ்சாயிரம் டாலர் renovation க்கு எடுத்து வெச்சுடு.அப்புறம் புரோக்கர் கமிஷன் ஒரு பதினஞ்சாயிரம். அப்புறம் இந்த lawyer பீஸ், பேங்க் பெனால்டி etc etc எல்லாம் சேந்து.... எப்படியும் ஒரு மூணு நாலாயிரம் வந்துடும்.....ரெடிஆ இருங்க" அப்படின்னு ரங்கமணிய ஓர கண்ணுல பாத்துட்டே பத்த வெச்சுட்டு போய்டாங்க...

"இதெல்லாம் தேவையா..." னு ஒரு லுக், வேற யாரு ரங்கமணி தான் (எனக்கு இந்த சமயத்துல கை குடுத்தது selectivevisionasia ..... விளக்கம் தேவை இல்லைன்னு நெனைக்கிறேன்...)

இன்னொருத்தர் சொன்னாரு "நல்ல காஸ்ட்லி furniture , ஆர்ட் வொர்க், flowers , decoration , candles எல்லாம் வெச்சா சீக்கரம் வித்திடும்" னாரு

எனக்கு ஒரே சந்தேகமா போச்சு...நாம விக்கறது வீட்டை தானே... furniture flowers இல்லையேனு

நான் தான் உலகம் தெரியாத அப்பாவின்னு உங்களுக்கு தெரியுமே...

இன்னும் ஒருத்தர் என்னனா "நாங்க வீட்டை sale போட்டுட்டு நொந்துட்டோம்...  ரெண்டு மாசம் வீட்டுல சமைக்க கூட முடியல... வெறுத்து போய்டுச்சு போங்க" னு புளியக் கரைச்சாரு

இப்படி இருந்த சமயத்துல ஒரு agent ஐ (புரோக்கர் தாங்க...) கூப்ட்டு "preliminary showing " வெச்சோம். அது என்னனா நமக்கு தெரிஞ்ச மாதிரி வீட்டை சீவி சிங்காரிச்சி அலங்காரம் பண்ணி "எப்படி....?" அப்படின்னு கேக்கறது தான். சரியா சொல்றதுன்னா பொண்ணு பாக்க வர்ற கதை மாதிரி தான். அதுல கூட சொஜ்ஜி பஜ்ஜியோட போகும், இங்க மகா கொடுமை

புரோக்கர் வந்து பாத்துட்டு வீடு எப்படி ஒகேவா இல்ல என்ன என்ன மாற்றங்கள் பண்ணனும்... என்ன விலைக்கி போடலாம், என்ன மாதிரி மார்க்கெட்டிங் technique எல்லாம் பண்ண போறார்னு ஒரு மீட்டிங் நடக்கும் நம்ம வீட்டுல. இந்த கொடுமைக்கு பேரு தான் "preliminary showing "

பொண்ணு பாத்துட்டு போய் புடிக்கலைன்னு சொன்னா இல்ல எதுனா கொறை சொன்னா "போய்யா... நீ குடுத்து வெச்சது அவ்வளவு தான்னு" சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்... ஆனா வீடு அப்படி இல்லியே... புரோக்கர் வர்றார்னதும் வீட்டையே கொட்டி கவுத்தி ஒரு வழி பண்ணினோம்

அதுக்குள்ள ஒரு நூறு சண்டையாச்சும் போட்டோம்ன்னு சொல்லி தெரிய வேண்டியதில்ல... சண்டை எதுக்கா? Difference of Opinion அப்படின்னா அதுக்கு முழு அர்த்தமே கணவன் மனைவி தானே... அப்புறம் வீட்டை அலங்கரிக்கதுல சண்டை வராமயா இருக்கும்

நான் சோபா இங்க போடலாம்னு அவர் ஏன் அங்க போட்டா என்னனுவார். நான் டிவி அங்க வெக்கலாம்னா ஏன் இங்க வெச்சா நல்லா இருக்குமேனு அவர்

இப்படியே ஒரு நாள் பூரா சண்டையும் காமெடியுமா வீட்டை நேராக்கினோம்... (அப்படின்னு நாங்களா சபாஷ் போட்டுகிட்டோம்... புரோக்கர் வந்தப்புறம் தான் தெரிஞ்சுது கொடுமை...தொடரும் போட கை துருதுருங்குது....)

புரோக்கர் வந்து பாத்தார். கைல ஒரு பேப்பர் பேனா எல்லாம் எடுத்துட்டு என்னமோ income tax raid வந்த மாதிரி வீட்டை சுத்தி சுத்தி பாத்தார். வாங்கினப்ப கூட நாங்க அப்படி பாத்ததா நினைவில்ல...

ஒரு ஒரு ரூம் அவர் பாக்கறப்ப நானும் ரங்கமணியும் அவர் முகத்த பார்க்கறது அப்புறம் நாங்க ஒருத்தர் முகத்த ஒருத்தர் பாத்துக்கறது.... வேற என்ன... reaction read பண்றோமாம்... கொடுமைடா சாமி....

இதுல இன்னொரு கொடுமை என்னன்னா...அந்த புரோக்கர் பஞ்சாபி... நல்ல மனுஷன் சும்மா சொல்லக்கூடாது... பெரும்பாலும் இங்கிலீஷ்ல தான் பேசுவார்... நல்லாவே பேசுவார் இந்த ஊர் slang கூட... திடீர்னு எதுனா ஜோக் அடிக்கறப்ப இல்ல எதுனா சொல்றப்ப அவரும் ரங்க்ஸ்ம் டக்குனு ஹிந்தில பேச ஆரம்பிச்சுடுவாங்க. நமக்கு தெரிஞ்ச ஹிந்தி எல்லாம் "Dilwale dulhania le jayenge"...."hum aapke hein kon" அளவு தான்

சனிக்கிழமை சனிக்கிழமை தூர்தர்சன்ல ஹிந்தி படம் பாத்து வளந்த knowledge நம்முது... இதுல இவிக பேசறது பாதிக்கும் மேல புரியாது.... நான் புரியாம திரு திருன்னு முழிச்சா ரங்கமணி மொகத்துல சந்தோசத்த பாக்கணுமே...  கல்யாணதன்னைகிகூட மனுஷன் மொகத்துல அப்படி ஒரு பிராகாசத்த பாக்கல போங்க...
அப்புறம் ஆரம்பிச்சது ராமாயணம்... மகாபாரதம் எல்லாம்....

புரோக்கர் குடுத்த லிஸ்ட்: (இதை கௌரவமா recommendations அப்படின்னு சொல்லுவாங்க....)

  1. Kitchen appliances (fridge/stove/dishwasher/rangehood microwave) to be replaced from white to stainless steel kind
  2. Painting to be done in Kitchen and all 3 bathrooms  
  3. Painting to be done in entrance foyer and all windows
  4. TV to be moved to basement (ரங்கமணிய பாத்து ஒரு லுக் விட்டேன் "அப்பவே சொன்னேன்ல" னு)
  5. Decorate thoroughout the house with flower pots,air freshners and candles

இப்படியே..... தொடர் கதையா "மணல் கயிறு" ல எஸ்.வி. சேகர் போட்ட லிஸ்ட் விட பெருசா போயிட்டே இருந்தது. எங்க ரெண்டு பேருக்கும் BP எகிறிடுச்சுனு சொல்லித்தான் தெரியணுமா...

"அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு"னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க....

அப்புறம் என்ன..... வேலை வேலை வேலை...வேலை தவிர வேறறியேன் பராபரமே தான்... செஞ்சு முடிச்சோம்... அப்பாடா முடிஞ்சதா புராணம்னு சந்தோசபடாதீங்க.... நான் கூட அப்படி தான் ஏமாந்தேன்...

இந்த ஊர்ல வீட்டை பாக்க ஆளுக வர்றாங்கன்னா, நாம வீட்டுல இருக்க கூடாது (சட்டப்படி அப்படி இல்ல... ஆனா புரோக்கர் சொல்றது அது தான் நல்லதுன்னு...என்ன நல்லதோ போங்க...)

போன வாரத்துக்கு முந்தின சண்டே வெற்றிகரமா புரோக்கர் வந்து வீட்டை போட்டோ எல்லாம் எடுத்து (பொண்ணு பாக்கற மாதிரின்னு நான் சொன்னது சரி தானே...) லிஸ்டிங் போட்டாரு

சண்டேவே ஒரு நாலு பேரு வந்து பாத்தாங்க. அப்புறம் அடுத்த நாலு நாளும் தினமும் நெறைய பேரு வந்து பாத்துட்டே இருந்தாங்க. தினமும் நைட் ஒம்பது மணி வரை வீட்டுக்குள்ள போக முடியாது. வெளியவே ஹோட்டல்ல சாப்டுட்டு (ஒரு வாரம் நோ சமையல் நைட்க்கு...ஹி ஹி ஜாலி தான் போங்க அந்த விசியத்துல....) காலைல ஏழு மணிக்கி ஆபீஸ் ஓடிடுவோம்...

தினமும் காலைல ஆபீஸ் போறதுக்கு முந்தி எல்லாம் ஒரு quick கிளீனிங் பண்ணி வீட்டை சிங்காரிச்சி வெச்சுட்டு போகணும்.... இப்படி போயிட்டு இருந்தப்ப....

புதன்கிழமை புரோக்கர் போன் பண்ணி இந்த வீக்எண்டு "openhouse " போடலாம்னு சொன்னாரு. Openhouse னா என்னனா... பொண்ணு உதாரணமே எடுத்துக்குவோம்.... ஜாதகத்தை புரோக்கர்கிட்ட குடுத்து வெச்சு இப்படி ஒரு பொண்ணு இருக்கு மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்கனு சொல்றது மாதிரி வேணுங்கறவங்க மட்டும் அவங்க புரோக்கர் மூலமா appointment வாங்கிட்டு வந்து வீட்டை பாக்கறது ஒரு ரகம், அது தான் மொதல் நாலு நாளு நடந்தது

அதே அந்த காலம் மாதிரி சுயம்வரம் வெச்சா...அது தான் openhouse . சனிக்கிழமை இல்லைனா ஞாயத்துக்கிழமை ஒரு ரெண்டு மணி நேரம் யாரு வேணா... வழில போறவன் கூட வந்து பாக்கலாம் (நானே சும்மா பொழுது போறதுக்கு அப்படி நெறைய பாத்து இருக்கேன்...இப்ப தான் புரியுது... அந்த வீட்டு ஓனர் எத்தனை கஷ்டப்பட்டு அலங்கரிச்சு வெச்சா நாம பொழுது போக பாத்தது கேட்டா நொந்து போயிருக்க மாட்டான்... யாரோ வயித்தெரிச்சல் எல்லாம் தான் இந்த பாடு படுத்துது...)

இந்த openhouse ல பாத்துட்டு யாருக்கு பிடிச்சு இருக்கோ அவங்க கேக்கற விலைக்கி கேக்கலாம். சில சமயம் ரெண்டு மூணு பேரு கேப்பாங்க. அப்போ யாரு அதிக விலை குடுக்கறாங்களோ அவங்களுக்கு போகும்

அந்த மாதிரி செய்யலாம்னு புரோக்கர் சொல்லிட்டு அதை அவங்க இன்டர்நெட் லிஸ்டிங் சைட்ல பப்ளிஷ் பண்ணினாரு. அதை பாத்ததும் ஒருத்தங்க openhouse னா ஆள் ஆளுக்கு பேசி விலை ஏத்தி விட்டுடுவாங்கன்னு விவரமா வியாழக்கிழமையே offerletter குடுத்தாங்க... நாங்க சொன்ன விலை விட ஒரு மூணு ஆயிரம் டாலர் தான் கம்மி அவங்க கேட்ட விலை. நாங்க எதிர்பாத்தது தான்

வீக்எண்டு openhouse வெச்சா கொஞ்சம் கூட விலை கெடைக்கலாம் இல்ல கெடைக்காமலும் போகலாம்.... அரசன நம்பி புருசன விட்ட கதை ஆய்ட கூடாதுன்னு... அந்த offer கே ஒத்துக்கிட்டோம்... ஓவரா ஆசைப்படக்கூடாது இல்லையா... இதோட முடிஞ்சதானா... அதான் இல்ல...

இங்க offer ஒகே ஆனப்புறம் வாங்கறவங்களுக்கு ஒரு வாரம்  டைம் இருக்கும். எதுக்குன்னா... homeinspection னு ஒரு formality இருக்கு. அதுக்குன்னு படிச்சுட்டு ceritification வாங்கி இருக்கறவங்கள கூட்டீட்டு வந்து இந்த வீட்டுல எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணனும். அது நம்ம வேலை இல்ல வாங்கறவங்க பொறுப்பு அவங்க செலவு தான்

ஆனாலும் என்ன சொல்ல போறானே என்னமோன்னு நமக்கு டென்ஷன் தானே. பொண்ணு பாத்துட்டு போயிட்டு எல்லாம் ஒகேன்னுட்டு... மாபிள்ளையோட அத்தை வந்து பாத்துட்டு சரின்னதும் முஹுர்த்தம்  குறிச்சுக்கலாம்னு சொல்றாப்ல தான் போங்க... (எனக்கு ஏன்தான் இப்படி comparision எல்லாம் தோணுதோ இன்னிக்கி தெரியல....)

இன்னொன்னு வீடு வாங்கறவங்க பேங்க்ல இருந்து லோன் approval லெட்டர் வாங்கி தரணும். இது ரெண்டும் முடிக்க தான் ஒரு வாரம் டைம். இது முடியற வரை விக்கறது நிச்சியம் இல்ல

அந்த ஒரு வாரமும் செம டென்ஷன். இதை நம்பி Openhouse யும் கான்சல் பண்ணிட்டு... சரியா தூங்க கூட இல்ல போங்க...

ஒரு வழியா போன வியாழக்கிழமை... எல்லாம் நல்லவிதமா முடிஞ்சுது... இனி ரெண்டு மாசாத்துல வீட்டை காலி பண்ணி தரணும்... அவ்வளவு தான் அப்பாடா.... (நீங்களும் அதே தான் சொல்றீங்கன்னு நல்லா கேக்குது....)

இப்ப சொல்லுங்க "வீட்டை வித்து பார். புரோக்கர் கமிஷன் குடுத்து பார்" னு நான் சொன்னதுலே எதுனா தப்பு இருக்கா?

ரெண்டு நாளா வேற ஒரு கவலை ஆரம்பிச்சாச்சு "ஐயோ... நமக்கு சரியா வீடு கெடைக்கணுமே ரெண்டு மாசத்துக்குள்ள"னு. ஒண்ணு விட்டா ஒண்ணு இருந்துட்டே இருக்கணுமே கவலை....

இதுல இருந்து நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னனா "கவலை எதுவும் இல்லைனா அதுவே ஒரு கவலை ஆய்டும் மனுஷனுக்கு". அப்படி ஒரு ஜென்மம் மனுஷ ஜென்மம்

இப்போதைக்கி வாடகை வீட்டுக்கு போயிட்டு அப்புறம் புதுசா கட்ற வீடு எதுனா புக் பண்ணிக்கலாம்னு தேடிட்டு இருக்கோம் வாடகைக்கி... எங்கயாச்சும் tolet போர்டு பாத்தா சொல்லுங்க என் இனிய தமிழ் மக்களே... (வீடு தேடற கதை என்ன ஆச்சுனு அடுத்த வாரம் சொல்றேன்... இருங்க இருங்க... நோ நோ ... என்னோட ப்ளாக்யை block எல்லாம் பண்ண கூடாது...இதெல்லாம் நல்லா இல்லை... சொல்லிட்டேன்....ஆமா... அப்புறம் இட்லி பார்சல் தான்... அதுக்கு மேல உங்க இஷ்டம்...)

இப்போ இன்னும் ஒரு கூடுதல் கவலை. இத்தனை நாள் இருந்த வீட்டை அதுவும் மொதல் மொதலா நாங்க ரெண்டு பேரு சேந்து வாங்கின வீட்டை மிஸ் பண்ணுவோமேன்னு கஷ்டமா இருக்கு. என்ன செய்ய? பொறந்து வளந்த வீட்டையே விட்டுட்டு வந்தாச்சு...இனி எந்த எடமும் நிரந்தரம் இல்லை தான் இல்லையா...

ஊர்ல எல்லாம் "இங்க உக்காந்து தான் உனக்கு தினமும் சாப்பிட வெப்பேன்" அப்படின்னு அம்மாவும்

" புவனா இந்த செவத்துல தான் ABCD எழுதி பழகினா" அப்படின்னு எங்க அப்பாவும் பெருமையா சொல்ற அந்த சுகமான பழைய நினைவுச்சின்னங்கள்  அடுத்த தலைமுறைக்கி நிச்சியம் இல்லை.... அது தவிர்க்க முடியாத மாற்றம்... காலத்தின் கோலம்... சரிங்க அப்புறம் பாக்கலாம்....

Saturday, May 15, 2010

பிரியமானவளே (2nd கிளைமாக்ஸ் - பகுதி 1 )

(முன்குறிப்பு: சுருக்கி எழுதினா கதைக்கு ஞாயம் சேர்க்க முடியாதுன்னு அப்படியே எழுதிட்டேன். ஒரே பகுதில முடிக்கணும்னு செஞ்ச முயற்சி நடக்கல. ரெண்டு பகுதியா போடறேன். இதுவே.... கொஞ்சம்.... இல்ல இல்ல ரெம்ப பெரிய பதிவா போய்டுச்சு, மன்னிக்கணும். நடுவுல டீ பிரேக் எடுத்துட்டு படிச்சாலும் கோச்சுக்க மாட்டேன்....)

_____________________________

இது 2nd கிளைமாக்ஸ்ங்கறதால பகுதி 8 ல ஆரம்பத்துல காயத்ரி / கார்த்தி சண்டை எல்லாம் அதே தான். அதுக்கப்புறம் தான் கதை மாறுது

________________________________

அதன் பின் இருவரும் பேசிகொள்ளவேயில்லை. கார்த்தி campus interview வில் தேர்வு பெற்று சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டான் என காயத்ரி அவள் அன்னை மூலம் அறிந்தாள்

இது வரை போன பகுதில படிச்சு இருப்பீங்க... இனி.......................

_________________________________

இருமுறை நடுவில் ஊருக்கு கார்த்தி வந்த போதும் காயத்ரியை காணும் வாய்ப்பு அமையவில்லை

வேலையில் சேர்ந்த மூன்று மாதத்தில் அவனுக்கு வேலை விசியமாய் ஒரு வருடம் அமெரிக்கா செல்ல வேண்டிய தருணம் வந்தது

அதற்கு முன் ஒரு முறை அவளுடன் பேச வேண்டும் என மனம் தவித்தபோதும் அவள் பேசிய கடைசி வார்த்தைகள் மனதை வருத்த பேசாமல் தவிர்த்தான்

ஒரு வருடம் மிக வேகமாய் ஓடியது...

காயத்ரிக்கும் கல்லூரி முடிந்தது. அவள் அங்கேயே ஏதேனும் வேலை தேடும் முயற்சியில் இருந்தாள்

____________________________________

"ஹலோ...."

"ஹலோ, அம்மா நான் கார்த்தி பேசறேன்"

"கார்த்தி... கண்ணா... நன்னா இருக்கியாடா?" என காஞ்சனா மகன் குரல் கேட்டதும் உருகினாள்

"இருக்கேம்மா...அப்பா, நீ எல்லாரும் எப்படி இருக்கேள்?"

"நன்னா இருக்கோண்டா...அங்க இன்னும் நல்ல குளிராப்பா?"

"இப்போ தேவலமா. அங்க நல்ல வெயில்னு சொன்ன. இப்ப எப்படி?"

"அப்படியே தான் இருக்கு கார்த்தி. எப்போடா ஊருக்கு வர்ற?"

"வரேம்மா... இன்னும் ப்ராஜெக்ட் முடியலியே"

"கண்ணுலேயே இருக்கடா... இனிமே இந்த ப்ராஜெக்ட் எல்லாம் வேண்டாம். இங்கயே இருக்கறாப்ல எதுனா வேலை பாரு"

"ம்... " என்றான் யோசனையை

ஒரு ஒரு முறையும் காயத்ரி பற்றி கேட்க நினைத்து தவிர்த்து வந்தான். இன்று ஏனோ அவள் நினைவு துரத்தியது

மகனின் மனதை படித்தது போல் காஞ்சனா "கார்த்தி, நேரம் கெடைக்கரச்ச காயத்ரி ஆத்துக்கு ஒரு போன் பண்ணிடு"

"என்னமா ஆச்சு... ?"என பதறினான். ஒரு கணத்திற்குள் மனம் என்ன என்னவோ கற்பனை செய்து தவித்தது

"மாமிக்கு கொஞ்சம் ஒடம்புக்கு முடியல கண்ணா. Uterus ல ஏதோ பிரச்சனைன்னு ஆபரேஷன் பண்ணி இருக்கா. காயத்ரி கூட இங்கியே வந்துட்டா" எனவும் இப்போதே அவளை காண மனம் வேண்டியது

"சரிம்மா. நான் பேசறேன். அப்பாவ கேட்டேன்னு சொல்லுமா. வெச்சுடவா?"

"சரிப்பா. ஒடம்ப பாத்துக்கோடா"

ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே காயத்ரியின் வீட்டிற்கு அழைத்தான்

"ஹலோ......" என காயத்ரி சொல்ல, வெகு நாட்கள் கழித்து அவள் குரல் கேட்டதும் கண்ணில் நீர் கோர்த்து கார்த்திக்கு

"ஹலோ... யாரு பேசறீங்க? ஹலோ..."

"காயத்ரி...நான் கார்த்தி பேசறேன்...."

"........" அவன் குரல் கேட்டதும் பேச்சே வரவில்லை அவளுக்கு

"காயத்ரி... லைன்ல இருக்கியா? ஹலோ..."

"ம்...." என்றாள்

என்ன பேசுவது என புரியாமல் "மாமிக்கு நன்னா இல்லைன்னு அம்மா சொன்னா... அதான் பேசலான்னு...." என்றான் பட்டும் படாமல்

"அப்போ என்னோட பேசணும்னு கூப்பிடலையா" என மனதில் தோன்ற துக்கம் அடைத்தது காயத்ரிக்கு. மனம் நினைத்ததை வாய் விட்டு கேட்க இயலவில்லை

"ஒரு நிமிஷம்...அம்மா கிட்ட தரேன்..."

"காயத்ரி... ஒரு நிமிஷம்... உன்னிட்ட...." என்பதற்குள்

"ஹலோ... கார்த்தி...நன்னா இருக்கியாப்பா?" என கோகிலாவின் குரல் கேட்டது

கோகிலாவிடம் ஷேமம் எல்லாம் விசாரித்து விட்டு காயத்ரியை பேச சொல்லி கேட்க

"அவ ஏதோ சாமான் வாங்கணும்னு சொல்லிண்டுருந்தா. கடைக்கு போய்ட்டா போல இருக்கு கார்த்தி" எனவும் கார்த்தியின் மனம் சோர்வுற்றது. தன்னிடம் பேசுவதை தவிர்க்கவே வெளியே சென்று விட்டாள் என புரிய "இன்னுமா என்னிடம் கோபம்" என வேதனை வாட்டியது

காயத்ரிக்கோ மனம் நிலை கொள்ளவில்லை. Out of sight, out of mind என்று நினைத்ததெல்லாம் சுக்குநூறாகியது. இத்தனை நாட்களுக்கு பின் கேட்ட அவனுடைய குரல் தன்னை இத்தனை பாதிக்குமென அவள் நினைக்கவில்லை. அன்று இரவு இருவருக்கும் தூக்கம் தொலைந்தது

அதற்கு பின் ஒரு ஒரு நாளும் ஒரு யுகமாய் கழிந்தது

இரண்டு மாத ப்ராஜெக்ட் வேலையை இரவும் பகலும் செய்து ஒரு மாதத்தில் முடித்து விட்டு ஊருக்கு கிளம்பினான் கார்த்தி

பெற்றவளிடம் கூட வருவதை பற்றி கூறவில்லை

அவனை கண்டதும் காஞ்சனாவிற்கு மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை. இப்படி ஆச்சிர்யப்படுத்தவே சொல்லாமல் வந்ததாக கூசாமல் பொய் சொன்னான்

வந்த சிறிது நேரத்திலயே காயத்ரியை காண சென்றான்

______________________

"அடடே... கார்த்தியா....? என்னப்பா உங்கம்மா நீ அடுத்த மாசம் தான் வருவேன்னு சொல்லிண்டுருந்தா?" என கோகிலா கேட்க

"ஆமாம் மாமி... அப்படி தான் இருந்தது.... திடீர்னு வேலை முடிஞ்சுது. கிளம்பிட்டேன். உங்க health எல்லாம் நன்னா இருக்கா மாமி?" என்றவனின் கண்கள் காயத்ரியை தேடியது

அதற்குள் பின் கட்டில் இருந்து வந்த காயத்ரி அவனை கண்டதும் ஒரு கணம் சிலையானாள்

கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு பின் எதிர்பாராத இந்த சந்திப்பின் அதிர்ச்சியில் உறைந்தாள். கீழே விழாமல் இருக்க அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்றாள்

உடல் மெலிந்து சிரிப்பு மறந்த கண்களுடன் அவளை காண என்னவோ போல் இருந்தது கார்த்திக்கு

குளிர் பிரதேசத்தின் வாசம் கார்த்தியை மெருகேற்றி இருந்தது. அவன் கண்களை நேரே சந்திக்க இயலாமல் வேறு எங்கோ பார்வை பதித்தாள்

"என்ன காயத்ரி? யாரையோ புதுசா பாக்கராப்ல முழிக்கற? கார்த்தி கேக்கறதுக்கு பதில் சொல்லாம நிக்கற?" என கோகிலா கேட்க சுய நினைவுக்கு வந்தாள்

"நன்னா இருக்கியா காயத்ரி?"

"ம்..." என்றாள் வார்த்தை தொண்டையில் அடைக்க

"ஏன் இப்படி எளைச்சுட்ட....?" என நிஜமான அக்கறையுடன் கார்த்தி கேட்க

"நானும் இதே தான் தெனமும் சொல்றேன் கார்த்தி. சாப்பிடறதே என்னமோ கொரிக்கராப்ல தான். முன்னி இருந்த அந்த காயத்ரியே இல்ல இப்ப. இதுல நான் வேற முடியாம படுத்துக்கவும், ஆத்துலயும் எல்லா வேலையும் செய்யறாளா, பாவம் ஆளே உருமாறி போயிட்டா" என கோகிலா புலம்ப

"எதுக்கும்மா இப்ப பொலம்பற... நான் காபி போடறேன்" என இருவருக்கும் பொதுவாய் கூறி அங்கிருந்து நழுவ முயல

"காபி வேண்டாம் காயத்ரி. இப்போ தான் அம்மா குடுத்தா. நான் பெருமாள் சன்னதிக்கி போறேன். வாயேன் நீயும்... "என்றான் அவளுடன் தனியே பேசும் ஆவலில்

வேறு வினையே வேண்டாம் என தோன்ற காயத்ரி "இந்த நேரத்துல ஆரத்தி எல்லாம் கூட ஆய்ருக்குமே. உச்சிக்கு நடை சாத்தற நேரம்" என தவிர்க்க முயன்றாள்

"பரவால்ல...சும்மா போயிட்டு வரலாம் வா..." எனவும்

"இல்ல...நேக்கு ஆத்துல கொஞ்சம் வேல இருக்கு" என தவிர்த்தாள்

"வேல கெடக்கு போ காயத்ரி. எத்தன நாள் கழிச்சு கார்த்தி வந்திருக்கான்... நீயும் நாள் பூரா ஆத்துலேயே பழியா இருக்க... சன்னதிக்கி போயிட்டு வா" என கோகிலா வற்புறுத்த, மறுக்க முயன்று தோற்று வேறு வழியன்றி உடன் சென்றாள்

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை

"ரெம்ப எளைச்சுட்ட காயத்ரி. மாமி சொல்றாப்ல சரியா சாப்பிடறதில்லையா?"

"இல்ல... அதெல்லாம் இல்ல" என்றாள் அவனை நேரே காண்பதை தவிர்த்து

அவளது அந்த செய்கை மனதை வருத்த "இன்னும் எம்மேல கோவமாதான் இருக்கியா?" என தவிப்புடன் கேட்க அழுது விடாமல் இருக்க பெரிதும் முயன்றாள்

"சொல்லு காயத்ரி... இன்னும் கோவம் தீரலியா?"

அதற்குள் கார்த்தியை கண்டதும் தெருவில் சிலர் நலம் விசாரிக்க வர பேச்சு தடைபட்டது

கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு அங்கிருந்த சிலரின் விசாரிப்புகளுக்கு எல்லாம் பதில் உரைத்து விட்டு கோவிலுக்கு பின் புறம் இருந்த ஒரு பெரிய மரத்தின் திட்டில் சென்று அமர்ந்தனர்

கார்த்தி எதுவும் பேசாமல் காயத்ரியயே பார்த்தான். வாய்க்கு வாய் வாயாடி சிரிப்பும் விளையாட்டுமாய் தான் கண்ட காயத்ரி தொலைந்து போனதை உணர்ந்தான். அதற்கு தானே காரணம் என மருகினான்

காயத்ரிக்கு தனியே சென்று ஒரு பாடு அழுது தீர்க்க வேண்டும் போல் தோன்றியது

"சொல்லு காயத்ரி... இன்னும் கோவம் தீரலியா?" என விட்ட இடத்தில் இருந்து பேச்சை தொடர்ந்தான் கார்த்தி

"......." எதுவும் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்

"ப்ளீஸ் காயத்ரி... இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க போறோம் சொல்லு"

"ப்ளீஸ் கார்த்தி. என்னை எதுவும் கேக்காத"

"காயத்ரி நான் என்ன தப்பு பண்ணினேன். நேக்கு தோணாத ஒண்ணை சும்மாவாச்சும் ஆமான்னு ஒத்துண்டா என்னை நல்லவன்னு ஏத்துபயா"

"என்னை அழ வெச்சு பாக்கணும்னு தான் இங்க வந்தியா கார்த்தி"

"இல்ல... எப்பவும் நீ அழறது நேக்கு இஷ்டம் இல்ல காயத்ரி. நேக்கு என் தோழி காயத்ரி வேணும்"

"அவ செத்துட்டா" என்றாள் வெறுப்பாய்

"என்ன பேச்சு இது காயத்ரி" என கடுமையாய் சற்று உரக்கக்கேட்டான்

அந்த மதிய நேரத்தில் உச்சி பூஜை முடிந்து எல்லாரும் சென்று விட்டு இருந்தனர். எனவே அவர்கள் பேச்சுக்கு எந்த தடையும் இருக்கவில்லை

"அந்த ஷிவானி கிட்ட தோணின உணர்வு கூட என்னிட்ட தோணாத அளவுக்கு நான் மோசமா இருக்கேனா? அவள விட தான் எதுல கொறஞ்சு போயிட்டேன். சொல்லு கார்த்தி" என இத்தனை நாள் மனதில் கொந்தளித்து கொண்டிருந்ததையெல்லாம் கேள்வியாய் கொட்டினாள் அழுகையுடன்

"பைத்தியக்காரத்தனமான comparision காயத்ரி. ஷிவானி ஒரு.... சின்ன.... அந்த வயசு crush . ஆனா நீ என்னோட வாழ்நாள் தோழி" என்றான் கோபமும் சமாதானமுமாய்

"இந்த நழுவற வார்த்தைகள் எல்லாம் வேண்டாம் கார்த்தி"

"அப்படி எல்லாம் இல்ல காயத்ரி. உன்கிட்ட எந்த கொறையும் இல்ல. இருந்தாலும் என் கண்ணுக்கு அது கொறையா தெரியாது. ஏன்னா நீ என்னோட உயிர் தோழி"

"Just stop it கார்த்தி. தோழி தோழினு என்னை கொன்னது போதும்" என அழுது கொண்டே எழுந்தாள்

திட்டில் இருந்து கீழே இறங்க முயன்றவள் கண்களில் கண்ணீர் மறைக்க ஒரு படி தவறி கீழே கால் வைக்க அப்படியே மறுபுறம் சரிந்தாள். கார்த்தி எழுந்து பிடிக்கும் முன் அவள் தலை அங்கு இருந்த ஒரு கல்லில் மோதியது

"கார்த்தி...." என கத்தியவாறே சரிந்தாள்

கார்த்திக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. பதறி அவளை தான் மடியில் இருத்த முயன்றான். தன்னையும் அறியாமல் கண்ணில் நீர் வழிந்தது

"காயத்ரி... காயத்ரி...ப்ளீஸ் இங்க பாரு...ஒண்ணும் இல்ல... ப்ளீஸ் என்னை பாரு" என அவள் கன்னத்தில் தட்டினான்

மெல்ல கண்ணை திறந்தவள் ஏதோ சொல்ல முயன்று பேச இயலாமல் தோற்றாள்

அதற்குள் கார்த்தியின் சட்டை முழுதும் அவள் ரத்தத்தால் சிவந்தது

"ஐயோ...என்ன இது. யாராச்சும் வாங்கோளேன். ப்ளீஸ்... ஹெல்ப்" என கத்தினான்

அவன் கத்தலில் மெல்ல மீண்டும் கண் திறந்த காயத்ரி காதல் நிறைந்த கண்களுடன் "கார்த்தி.." என அழைக்க

"காயு....ஒண்ணும் ஆகாது... சீக்கரம் hospital போய்டலாம்...சரியா" என தனக்கே தைரியம் சொல்லி கொண்டான்

"கா....ர்...த்தி...." என திக்கியவள் அவன் கைகளை இறுக பற்றி "I... love....you....I love you கார்த்தி...." என மொத்த உயிரின் பலத்தையும் தேக்கி உரைத்து விட்டு கண்களை மூடினாள்

ஒரு கணம் அப்படியே உறைந்தான் கார்த்தி. தன் உயிரே காற்றோடு கலந்து விட்டது போல் மூச்சு விட மறந்தான்

அதற்குள் அவன் உதவி கேட்டு கத்தியதை கேட்டு கோவிலுக்கு முன் புறம் கடையில் இருந்த சிலர் ஓடி வந்தனர்

அவசரமாய் டாக்ஸி வரவழைத்து மருத்துவமனைக்கு விரைந்தனர்

"காயத்ரி....காயத்ரி...." என கார்த்தி அரற்றி கொண்டே வந்தான்

"கால் எல்லாம் சில்லிட்டு போச்சு....எனகென்னமோ நம்பிக்கை இல்ல" என காரின் முன் புறம் அமர்ந்திருந்த இருவர் அவர்களுக்குள் மெல்லிய குரலில் பேச கார்த்தியின் கண்களில் கட்டுபாடின்றி நீர் பிரவாகம் ஆனது. ஒரு நொடியில் உலகின் கடவுள்கள் எல்லாரையும் வேண்டினான்

______________________

"என்ன நடந்தது?" என டாக்டர் கேட்க

"அது....கோவில்...கல்லு...தலை பட்டு....ரத்தம்....கண்ணு எல்லாம்....." என கோர்வையாய் சொல்ல முடியாமல் கார்த்தி தடுமாற உடன் வந்தவர்கள் நடந்ததை விவரிக்க சிகிச்சை ஆரம்பமானது

அதற்குள் விசயம் கேட்டு காயத்ரியின் பெற்றோர், அக்கா, கார்த்தியின் பெற்றோர் எல்லோரும் வந்து சேர பதட்டம் மேலும் கூடியது

எல்லோரும் கார்த்தியிடம் என்னவென விசாரிக்க முயல "எல்லாம் என்னால தான்....எல்லாம் என்னால தான்...." என்பதை தவிர அவன் எதுவும் பேசவில்லை. அதிரிச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தான்

அழுகை கூட வர மறந்தது போல் உறைந்து போனான்

கோகிலாவை சமாதானம் செய்வதே எல்லோருக்கும் பெரும் பாடானது

நேரம் ஓடி கொண்டே இருந்தது

கிட்டதட்ட இரவு நெருங்கிய வேளையில் டாக்டர் அழைப்பதாய் நர்ஸ் வந்து சொல்ல என்ன சொல்வாரோ என பயந்து யார் உள்ளே செல்வது என புரியாமல் தடுமாற கௌரியும் கார்த்தியும் சென்றனர்

_________________________

"நீங்க patient யோட husband ஆ" என கார்த்தியின் தவிப்பை பார்த்து கேட்டார் டாக்டர்

கார்த்தி எதுவும் பேச இயலாமல் தடுமாற "இல்ல அவர் காயத்ரியோட friend கார்த்தி. நான் அவளோட சிஸ்டர் கௌரி" என்றாள் கௌரி

"ஒகே கௌரி. உங்க சிஸ்டர்க்கு பின் மண்டைல பலமா அடிபட்டதுல ஒரு blood vessel rupture ஆகி இருக்கு. அதை surgery பண்ணனும். அதுவும் சீக்கரம் பண்ணனும். இன்டெர்னல் ப்ளீடிங் ரெம்ப ரிஸ்க் ஆய்டும் லேட் பண்ணினா"

"அவ உயிருக்கு எதுவும்...." என கார்த்தி மொத்த பலத்தையும் திரட்டி கேட்டான்

"100 % எதுவும் சொல்ல முடியாது மிஸ்டர் கார்த்தி. ஹெட் இஞ்சுரி எல்லாம் சர்ஜரி முடியற வரை சொல்ல முடியாது. Probability வேணா ஒரு அளவு சொல்லலாம். காயத்ரி கேஸ் Brain ல டைரக்ட்ஆ அடி இல்லைங்கரதால 60 % சான்ஸ் இருக்குனு சொல்லுவேன். எங்கள பொறுத்தவரை 50 % க்கு மேல இருக்கற எல்லாமே high probability " என டாக்டர் கூற கார்த்தியும் கௌரியும் ஒருவரை ஒருவர் ஆறுதலுடன் பார்த்து கொண்டனர்

"சர்ஜரி எப்ப பண்ணனும் டாக்டர்" என கௌரி கேட்க

"Earlier the better Mrs . கௌரி. நாளைக்கி மார்னிங் chief ப்ரீயா இருக்கார். அவரும் இருந்து செய்றது பெட்டர்னு நான் பீல் பண்றேன். மத்த billing details எல்லாம் reception ல கேட்டு கட்டிடுங்க" என்றார் டாக்டர் அவ்வளவு தான் என்பது போல

வெளியே வந்ததும் எல்லாரும் சூழ்ந்து கொண்டு கேள்வி கணை தொடுக்க கௌரியே எல்லாருக்கும் பதில் கூறினாள்

அப்போதே ஒரு லட்சம் கட்ட வேண்டுமென reception இல் கூறினார். அந்த இரவு நேரத்தில் பேங்க் கூட இருக்காதே என யோசித்து கௌரியின் கணவர் தன் நண்பர் ஒருவரிடம் கேட்பதாக சொல்ல கார்த்தி அதை மறுத்து தானே பொறுப்பேற்றான்

"அம்மா சாவி குடு. ATM கார்டு ஆத்துல இருக்கு. நான் போயிட்டு வந்துடறேன்" என கார்த்தி கேட்க

"இரு கார்த்தி நானும் ஆத்துக்கு வந்து எல்லாரும் சாப்பிட எதுனா செஞ்சுட்டு வந்துடறேன்" என காஞ்சனாவும் கிளம்பினாள்

"கார்த்தி நீ இப்ப வண்டி ஓட்ட வேண்டாம். நானே கார் எடுத்துட்டு வரேன்" என அவன் தந்தையும் உடன் சென்றார்

_________________

காயத்ரியின் வீட்டை கடந்து சென்ற போது கார்த்தி மேலும் பலவீனமானான். தன் அறைக்குள் நுழைந்ததும் அந்த தனிமை துக்கத்துக்கு தூபம் போட்டது

சிறுவயதில் கார்த்தியும் காயத்ரியும் கை கோர்த்து வழியும் சிரிப்பை மறைக்க முயன்று தோற்றபடி நின்றிருந்த அவன் அறையின் சுவரில் இருந்த பழைய புகைப்படம் அவனை முற்றிலும் நிதானம் இழக்க செய்தது

அதற்கு மேல் தாங்க இயலாமல் கதறி அழுதான்

காஞ்சனா அவசரமாய் கலந்த சாதம் தயார் செய்து கொண்டிருக்க மகனின் கதறல் கேட்டு ஓடி வந்தாள் அவன் தந்தையும் போட்டது போட்டபடி வந்தார்

"கார்த்தி...என்னடா இது... எங்களுக்கெல்லாம் தைரியம் சொல்றவன் நீ. இப்படி ஒடஞ்சு போனா எப்படி" என இருவரும் சமாதானம் செய்ய முயல

"ஐயோ....அம்மா... என்னால முடியலையே.... நான் வந்தே இருக்க கூடாது. நான் US லையே இருந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.... எல்லாமே என்னால தான்....என்னால தான்... " என கதறினான்

வளர்ந்த பிள்ளை அழுது கண்டிராத காஞ்சனா தாங்க மாட்டாமல் "என்ன கார்த்தி இது? ஏன் இப்படி எல்லாம் சொல்ற. அவ நேரம் அப்படி நடக்கனும்னு இருக்கு... அதுக்கு நீ என்ன செய்வ"

"இல்லமா... அவளுக்கு எதாச்சும் ஆய்ட்டா....நான்....." அதுக்கு மேல் அவனால் பேச இயலவில்லை

"எதுவும் ஆகாது கார்த்தி. இப்படி தைரியம் இழந்துட்டா அதுவே நெகடிவ் energy ஆய்டும்னு சொல்லுவா" என அவன் தந்தை அவன் அழுகையை நிறுத்த முயன்றார்

__________________

அன்று இரவு ஒருவரும் உறங்கவில்லை. கார்த்தி பத்து நிமிடத்துக்கு ஒரு முறை ICU கண்ணாடி வழியே சென்று காயத்ரியை பார்த்து கொண்டே இருந்தான், பார்க்காமல் விட்டால் அவள் விட்டு சென்று விடுவாளோ என பயந்தது போல்

___________________

ஆபரேஷன் ஆரம்பித்ததும் கார்த்தி மருத்துவமனையின் பின் புறம் இருந்த பிள்ளையார் கோவில் முன் சென்று அமர்ந்தவன் நான்கு மணி நேரம் கண் திறக்காமல் ப்ராதித்தான்......

இனி....

உயிர்போன வலியை
உயிரோடே உணர்ந்தேனடி
காலம் முழுமைக்கும்
கண்மணிஇது போதுமடி

காலன்தனை வென்று
கண்மலர்ந்திடு தேவதையே
கண்ணீரேஇனி வேண்டாமென
கண்ணீரில் கரைகிறேனடி

விரைந்துஎன்னிடம் வந்துவிடு
விதியைநீயும் வென்றுவிடு !!!

தொடரும்....அடுத்த பகுதியில் முடியும்

Friday, May 14, 2010

நன்றி சொல்ல உனக்கு...."நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"

என்னடா இவ திடீர்னு சொற்பொழிவு ஆரம்பிச்சுட்டானு யோசிக்கறீங்களா? பயப்பட வேண்டாம். அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க

நன்றி பாராட்டு எல்லாம் எப்பவும் சேத்து வெச்சுக்க கூடாது, அப்ப அப்ப சொல்லிடணும். இது நம்ம பாலிசி

அரசியல்ல 33 % குடுத்தாங்களா இல்லையான்னு தெரியாது, நம்ம சேட்டைக்காரன் அவர்கள் எங்களுக்கு (பெண்களுக்கு) தன்னோட பதிவுல குடுத்துட்டார். அதுக்கு தான் இந்த நன்றி பதிவு

பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்
http://blogintamil.blogspot.com/2010/05/blog-post_14.html

அதுவும் சும்மா இல்ல... உலகம் போற்றும் பெண் கவிஞை அவ்வை பிராட்டி வாயல அதை வாங்கறது இன்னும் பெருமை தான் போங்க

ரெம்ப ரெம்ப நன்றிங்க சேட்டை என்னையும் உங்க பதிவுல சேத்ததுக்கு. நிச்சியம் நெறைய நேரம் செலவு பண்ணி எல்லா வலைபூக்களையும் படிச்சு தொகுத்து இருக்கீங்க. நன்றி

நெறைய புது வலை தோழிகளையும் அறிமுகம் செஞ்சு வெச்சதுக்கு மிக்க நன்றி

பதிவுலக பெண்களின் சார்பாக உங்களுக்கு நீங்கள் விரும்பிய வண்ணம் டாக்டர் பட்டம் அளித்து கௌரவப்படுத்துக்கிறோம்

டாக்டர் சேட்டை வாழ்க வாழ்க!!!

Wednesday, May 12, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள் (தொடர் பதிவு)


"எனக்கு பிடித்த பத்து படங்கள்" இந்த தொடர் பதிவை எழுத அழைத்த பத்மா மற்றும் Dreamer க்கு மிக்க நன்றி

இந்த Top 10 லிஸ்ட் எல்லா விசியத்துலையும் எப்பவும் மாறிட்டே இருக்கும். ஆனாலும் எவர்க்ரீன் அப்படின்னு சிலது இருக்குமில்லையா. அதை தான் இப்போ இங்க சொல்லலாம்னு இருக்கேன்

1 . டும் டும் டும்:

அது என்னமோ இந்த படம் எத்தனை வாட்டி பாத்தாலும் எனக்கு சலிக்கரதில்ல. இது சராசரி மசாலா சினிமாவா இல்லாம கொஞ்சம் வித்தியாசமான கதைங்கரதால பிடிச்சுருக்குன்னு நெனைக்கிறேன்.

பாடல்களும் அருமை. காதல்/காமெடி/கலாட்டா/nativity / ஸ்வாரஸ்யம் எல்லாம் சரி விகிதமா கலந்து இருக்கறதால என்னோட favourites லிஸ்ட்ல வந்துடுச்சுன்னு நெனைக்கிறேன். இதுல எனக்கு ரெம்ப பிடிச்ச கேரக்டர் ஜோதிகாவோடது. அழகான அளவான நடிப்பு. எந்த costume / nativity க்கும் பொருந்தற ஒரு அழகு ஜோதிகாவோட பிளஸ். அது இந்த படத்துக்கும் பிளஸ் ஆய்டுச்சு

இதை அப்படி காட்டி இருக்கலாம், அந்த துணை கதை என்ன ஆச்சுன்னு நம்மள ஒரு நாள் டைரக்டர்ஆ கற்பனை குதிரை ஓட வெக்காத flawless screenplay

"பார்க்காமல் காதல்
பேசாமல் காதல்
பலதும் பாத்தாச்சு
பழையசோறு அதுஆச்சு
நிச்சியத்தில் தொடங்கி
நிச்சியமின்றி நின்று
அழகு காதலாகி
அரங்கேறியது டும்டும்டும்"

2 . மூன்றாம் பிறை:

இதுக்கு ஈடு சொல்ற மாதிரி ஒரு சினிமா நான் இதுவரைக்கும் பாக்கல. ஸ்ரீதேவியோட அழகு / கமலோட நடிப்பு / அது வரைக்கும் தமிழ் சினிமால சொல்ல படாத ஒரு கதை. கவிஞர் கண்ணதாசன் கடைசியா எழுதின "கண்ணே கலைமானே" பாட்டு ஒரு மகுடம் இந்த படத்துக்கு

தப்பான எடத்துல சந்திக்கற ஒரு பொண்ண காப்பாத்தற எண்ணத்தோட தன்னோட அழைச்சுட்டு போற விசயம் அந்த காலகட்டத்துல ரெம்ப பெரிய விசயம் (இப்பவும் தான்). எப்பவும் நம்ம வாழ்க்கைல பாக்க முடியாத / அனுபவிக்க முடியாத விசியங்கள் நம்மை அதிகமா ஈர்க்கும். அந்த வகைல இந்த சினிமா ஒரு ஈர்க்கும் விடயமா பெரிய வெற்றி அடைஞ்சது. என் மனதையும் கவர்ந்தது

"தன்னிலை மறந்தவளை
தன்னவளாய் நினைக்கும்மனசு
கதைக்கே என்றாலும்
கண்டதில்லை அதுவரை
சினிமா வானில்
சில்வர் ஜூப்ளிகண்ட
முத்தான முத்தல்லவோ
மூன்றாம் பிறை"

3 . Final Destination :

எனக்கு எப்பவும் இந்த அமானுஷ்ய கதைகள் மேல ஒரு ஈர்ப்பு உண்டு. நம்பறேனோ இல்லையாங்கறது வேற ஆனா அதுல இருக்கற த்ரில் அப்புறம் அந்த மர்மம் புரியறப்ப ஒரு ஸ்வாரஸ்யம் எனக்கு பிடிக்கும். தமிழ்ல கூட இந்த மாதிரி பல படங்கள் வந்திருந்தாலும் படம் முழுக்க சீட் நுனில உக்கார வெச்ச இந்த Final Destination படம் ஒரு செம த்ரில்லர்

இந்த படம் பிடிக்கும் in the sense பயப்படவெச்ச terror thriller கர வகைல

படம் பாக்கதவங்களுக்கு ஒரு ஒரு வரி சொல்லிடறேன் இந்த கதை என்னனு. ஒரு செட் of students ட்ரிப் போறதுக்காக flight ல ஏறி இருப்பாங்க. அதுல ஒரு student க்கு அந்த flight வெடிக்க போகுதுன்னு ஒரு கனவு மாதிரி தோணும். அவன் பண்ற கலாட்டால அவன் மற்றும் அவனோட சில நண்பர்கள் விமானம் விட்டு எறங்கிடுவாங்க. அப்புறம் அந்த விமானம் அவன் கனவுல வந்த மாதிரியே விபத்தாகி மத்த எல்லாரும் இறந்துடுவாங்க

தப்பிச்ச அந்த சில friends மர்மான முறைல ஒரு ஒருத்தரா செத்துடுவாங்க. விதி எங்க போனாலும் விடாதுங்கறது தான் கான்செப்ட். இதே கான்செப்ட்ல பார்ட் 2 பார்ட் 3 வந்தது. ஆனா இந்த படம் மனசுல நின்னதுக்கு காரணம் நான் படிச்ச ஒரு உண்மை சம்பவம்

2009 ஜூன் மாசம் Air France விமானம் வெடிச்சு அதுல இருந்த எல்லாரும் இறந்தது நீங்க படிச்சுருபீங்க. அந்த flight ல ஏற வேண்டிய ஒரு லேடி லேட்ஆ வந்ததால flight மிஸ் பண்ணிடுச்சு. விபத்துல இருந்தும் தப்பிச்சுருச்சு. ஆனா அடுத்த வாரமே ஒரு கார் விபத்துல அந்த லேடி இறந்துடுச்சு. அதை பத்தி படிக்க இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க

http://finchannel.com/index.php?option=com_content&task=view&id=39801&Itemid=13

"விதியை மதியால்வென்ற
விடயங்கள் பலகேட்டோம்
காத்து பிடித்தவிதியை
கேட்கவும் சிலிர்கிறதே"

4 . மொழி:

சீரியஸ் ஆன ஒரு subject ஐ அத்தன ஜனரஞ்சகமா சொல்ல முடிஞ்சுது தான் இந்த படத்தோட வெற்றிக்கி முக்கிய காரணம். ஜோதிகாவோட career ல ஒரு மைல்கல் இந்த சினிமா. டைரக்டர்ஸ் டச்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி ராதாமோகன் டச் அப்படின்னு எல்லார் மனசுலயும் ஒரு பெஞ்ச்மார்க் உருவாக்கின ஒரு படம்

என்னோட பிடிச்ச படங்கள் லிஸ்ட்ல என்னையும் அறியாம சேந்த ஒரு படம்

கரகாட்டகாரன் வாழைப்பழ ஜோக் மாதிரி "ஒரு பொண்ண பாத்தா மணி அடிக்கணும் பல்பு எறியணும்" அப்படின்னு ஒரு எவர்க்ரீன் காமெடி மறக்க முடியாத பிளஸ்

"பேசாத மொழியால்
பேசவைத்த மொழி
வர்ணமற்ற பாஷையால்
வரலாறுகண்ட மொழி
மொழிகடந்து உலகையே
மறக்கடித்த மொழி"

5 . சிந்துபைரவி:

இந்த படத்த எத்தனை வாட்டி பாத்தேன்னு ஒரு கணக்கே இல்ல... பாட்டுக்காகவா இல்ல சுஹாஷினிகாகவா இல்ல வித்தியாசமான கதையா என்னனு தெரியல... நெறைய வாட்டி பாத்து இருக்கேன். ரங்க்ஸ் நெறைய சினிமா பாக்க மாட்டார் (I mean கல்யாணத்துக்கு முந்தி..... இப்போ எல்லாம் நம்ம செட் சேத்தாச்சு..) . அவரே இந்த படத்தை நெறைய வாட்டி பாத்ததா சொன்னார்

பாட்டு ஒண்ணு ஒண்ணும் முத்து தான்... அதுலயும் "பாடறியேன்" மற்றும் "கலைவாணியே" கிளாசிக்....

"ஹாசினியா
 ஹாஸ்யமா
ஏதோஒன்று
ஏனோஈர்த்தது
சலிக்கபாத்தாச்சு
சலிக்கதான்இல்லைஇன்னும்"

6.அபியும் நானும்:

இந்த படம் பாத்தப்ப நதியா & சிவாஜி நடிச்ச "அன்புள்ள அப்பா" ஞாபகம் நிச்சியம் வந்தது. ஆனா இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி சூப்பர் screenplay . எனக்கு என்னமோ எப்பவும் இந்த reverse screenplay படங்கள் ரெம்ப பிடிக்கும்... அதாங்க கொசுவத்தி சுத்தறது. நேரா போற கதைகள விட. முடிவுல ஆரம்பிச்சு flashback போற கதைகள் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடன்னு தோணும்

அதுவும் இந்த கதை ரெம்ப நல்லா கொண்டு போய் இருக்கார் டைரக்டர். அம்மாக்களை தூக்கி வெச்ச படங்கள் தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா

ஆனா அப்பாவோட கோணத்துல இருந்து எடுக்கபட்ட படங்கள் மிக சில (அன்புள்ள அப்பா, தவமாய் தவமிருந்து இன்னும் சில). ஆனா இந்த கதை சம்திங் ஸ்பெஷல். எனக்கு பிராகாஷ்ராஜ் பிடிக்கும்கரதால அப்படி தோணுச்சோ என்னமோ. ஆனா யாருக்கும் குடுக்காம save பண்ணி வெச்சு இருக்கற CD collection ல இதுவும் ஒண்ணு

போன சண்டே இங்க ஒரு நார்த் இந்தியன் restaurant போனப்ப buffet ல ராஜ்மானு ஒரு item பாத்ததும் நானும் ரங்க்ஸ்ம் சிரிக்க ஆரம்பிச்சுட்டோம். இந்த படத்துல பிரகாஷ்ராஜ் சாப்பிடறப்ப ஐஸ்வர்யா singh மருமகனுக்காக ராஜ்மா செஞ்சு வெச்ச கோபத்துல "அந்த ராஜாமாவ கொஞ்சம் கொட்டு" னு சொன்னது சூப்பர் timing காமெடி sense

"பிள்ளை வளந்தபின்
பெத்தவர் பிள்ளைஆன
அப்பாவின் மனதை
அழகாய் சொன்னகதை
எனதுஅப்பா கூட
எப்பவும் இப்படிதான்னு
பெருமையாய் சலிக்கசெய்த
பெயர்சொன்ன கதை"

7. பஞ்சதந்திரம் :

பேரு போடறது தொடங்கி வணக்கம் போடறது வரை வயிறு வலிக்கக் சிரிக்க செஞ்சது தான் இதோட ஹிட்க்கு காரணம். கமல் தவிர வேற யாரும் இப்படி செஞ்சிருக்க முடியுமான்னு தெரியல, such a versatile personality to fit there in everything he does. இதுக்கு மேல வேற என்ன சொல்றதுன்னு தெரியல. Ofcourse கிரெடிட் எல்லாம் Crazy மோகன்க்கு தான், இல்லைங்கல, ஆனா கூட அந்த ரோல்க்கு கமல் தான் அப்படி ஒரு பொருத்தம்

அந்த படத்துல வந்த இந்த dialouge எங்க வீட்டுல அடிக்கடி கேக்கலாம் "கேள்வி கேக்கறது ரெம்ப சுலபம் மாமா... ஆனா பதில் சொல்றது எத்தனை கஷ்டம் தெரியுமா?" ஹா ஹா ஹா. ஏன்னா ரங்கஸ் இருக்காரே, சரியான "கேள்வியின் நாயகன்". அது ஒரு தனி பதிவாவே போடற அளவுக்கு பெரிய கதை. இப்ப வேண்டாம் விடுங்க

"பஞ்சதந்திரம் பாத்து
பஞ்சாச்சு மனசு
சிரிச்சு சிரிச்சு
சுளுக்கிதான் போச்சு"

8. கோதாவரி: (Telugu)

ஒரு Boat லையே படம் முக்கால்வாசியும். அந்த வித்தியாசமான யோசனை தான் இதோட வெற்றி. கோதாவரி ஆத்து அழகை அள்ளி அள்ளி கொடுத்த படம். சிம்பிள்ஆன காதல் கதை, சொன்ன விதம் தான் அருமை

பாடல்கள் கூட மறுபடி மறுபடி கேக்கவெக்கற ரகம் தான். அதுல வர்ற குட்டிஸ் லூட்டி ரெம்ப ரசிக்க வெச்சது. கோதாவரிய சுத்தி இருக்கற ஊர்களை எல்லாம் அழகா காட்டி இருப்பார் இந்த படத்துல. ஒரு வாட்டியாச்சும் இந்த ஊரை நேர்ல பாக்கணும்னு தோணவெச்ச cinematography

9. சதிலீலாவதி:

உண்மைய ஒத்துக்கறேன்... இந்த படம் பிடிச்சதுக்கு முக்கிய காரணம்... இதுல வர்ற எங்க ஊரு தமிழ் (கோயம்புத்தூர்). அதுலயும் நம்ம அம்மணி கோவை சரளா கலக்கல் தான் போங்க. அந்த தமிழே கேக்க கேக்க இனிக்கும், கதையும் கூட நல்ல கதை தான்

கமலோட மத்த படங்கள் மாதிரி வயறு குலுங்க சிரிக்க வெக்கலைனாலும் நல்ல கதை, நல்ல காமெடி. மாருகோ மாருகோ பாட்டு ஒரு சூப்பர் டூப்பர் தான்

"எங்கூரு பாஷையில
என்னசொக்க வெச்சபடம்
எல்லாஊரு மக்களையும்
ஏத்துக்கவெச்ச கதை"

10. மௌன ராகம்:

இதுவும் ஒரு reverse screenplay ரகம் தான். படத்தோட பேரே ஒரு கவிதை மாதிரி அழகா இருக்கு. அதுக்கேத்த மாதிரி அருமையான கதை. ரெம்ப மசாலா கலக்காத ஒரு அழகான காதல் கதை. காதல் வயப்பட்ட ஒரு பொண்ணோட உணர்வுகள அழகா சொன்ன கதை

இப்பவும் எங்கயாச்சும் "சந்திரமௌலி" ங்கற பேரை கேட்டா இந்த படத்துல வந்த அந்த சீன் கண்ணு முன்னால வரும் எனக்கு. காதல்/காமெடி/கவிதை/கலாட்டா எல்லாம் கலந்த ஒரு நல்ல படம்

"மௌனமாய்
மனதின்மொழியை
ராகமிசைத்த
ராகமாலிகா"

இந்த தொடர் பதிவு ஏற்கனவே பெரும்பாலும் எல்லாரும் எழுதியாச்சு. யாரையாச்சும் கூப்ட்டா ஆட்டோ வந்தாலும் வரும்...... அதுனால விருப்பபடரவங்க எழுதுங்க. ரெம்ப நன்றி

அனன்யா அழைச்ச "எனக்கு பிடிச்ச அஞ்சு பாடகர்கள் தொடர் பதிவு" அடுத்த வாரம் ரிலீஸ்

Monday, May 10, 2010

பிரியமானவளே...பகுதி 8

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7

"நாம கல்யாணம் பண்ணிக்கலாம் காயத்ரி... இன்னைக்கே எங்க அம்மாவ மாமி கிட்ட பேச சொல்றேன்" என்றான் கார்த்தி தீர்மானமாய் ................

"......"

"காயத்ரி...ஏன் எதுவும் பேசாம இருக்க?"

"என்ன சொன்ன கார்த்தி?"

"கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன்"

"ஹும்.... ஆனா காதலிக்கறேன்னு சொல்லல"

"காயத்ரி...அது..."

"பரிதாபத்துல.... கல்யாணமா?"

"அப்படி இல்ல காயத்ரி...."

"நேக்கு அழறதா சந்தோசபட்றாதானு தெரியல"

"என்ன சொல்ற காயத்ரி?"

"என்னோட காதல் தோத்து போச்சுன்னு அழறதா... இல்ல என்னோட நட்பு சாகர வரை வேணும்கறதுக்காக கல்யாணம் பண்ணிகறேன்னு சொன்ன உன்னோட ஆழமான நட்ப நெனச்சு சந்தோசபட்ரதானு புரியல"

"இல்ல காயத்ரி... உன் விருப்பபடி நான் முன்னியே சொன்ன மாதிரி நாம கல்யாணம் பண்ணிக்கலாம்"

"இதோ... உன் வாயாலேயே சொல்லிட்ட... என்னோட விருப்பபடின்னு... உன்னோட விருப்பம் என்ன?"

"எனக்கும் சம்மதம் தான்"

"சம்மதம் வேற விருப்பம் வேற கார்த்தி"

"காயத்ரி எதுக்கு இந்த வேண்டாத வாதம்... நாம கல்யாணம் பண்ணிக்கறோம்... அவ்வளவு தான்... end of the story " என்றான் ஒரே முடிவாய்

"ஹும்... கல்யாணம்கறது end of the story இல்ல கார்த்தி... beginning of the life"

"இப்ப முடிவா என்ன சொல்ற? கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டியா?"

"ஒரு பிரச்சனைய தீக்கறதா நெனச்சுண்டு அதை விட பெரிய பிரச்சனைய கொண்டு வர்ற. எதுவும் வேண்டாம் கார்த்தி. நாம நண்பர்களா மட்டுமே இருக்கணும்கறது கடவுள் விதிச்சது... அதை நாம மாத்த வேண்டாம்... மாத்தவும் முடியாது"

"ஆனா...."

"நீ என்ன சொல்ல போறேன்னு நேக்கு தெரியும்.... பழையபடி நாம இருக்கணும்னு சொல்லுவ...நான் ஒரு சாதாரண மனுசி கார்த்தி... என்னோட உணர்வுகள அத்தனை சீக்கரம் சாகடிக்கற சக்தி நேக்கு இல்ல..." என்றாள் அழுகையை வென்று

"காயத்ரி...." என்றான் தாங்காமல்

"இரு நான் பேசி முடிச்சுடறேன்.... out of sight, out of mind னு சொல்லுவா... நானும் அதை நம்பறேன்... நேக்கு நீ எதுனா நல்லது செய்யனும்னு நெனச்சா... என்னை பாக்கவோ பேசவோ முயற்சி செய்ய வேண்டாம்... " என்றாள் மனதை கல்லாக்கி

"இது அநியாயம் காயத்ரி..." என்றான் தவிப்புடன்

"ஞாயம் அநியாயம் பத்தி நேக்கு தெரியாது... நம்ம ரெண்டு பேரு வாழ்க்கைக்கும் இது தான் நல்லது... அது மட்டும் நன்னா புரியறது" என்றாள் தீர்மானமாய்

"என்னை பாக்காம இருக்கறது தான் நோக்கு சந்தோசம்னா அப்படியே இருக்கட்டும்" என்றான் கோபமாய்

"கோபப்பட்ரா மாதிரி காட்டி என் மனசை மாத்த முயற்சி செய்யறது வீண் கார்த்தி... அந்த நிலை எல்லாம் நான் தாண்டியாச்சு... என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல" என்றாள் பிடிவாத குரலில்

"நேக்கு என்ன சொல்றதுன்னு தெரியல காயத்ரி... ஆனா உன்ன பாக்காம பேசாம இருக்கறது மட்டும் ரெம்ப கொடுமையா இருக்கும்னு நன்னா தெரியும்" என்றான் ஏக்கத்துடன்

இந்த ஒரு நிமிட நெகிழ்வு இருவரின் வாழ்கையையும் புரட்டி போட்டு விடும் என உணர்ந்தவளாய் அழுகையை கடிவாளம் இட்டு நிறுத்தினாள் காயத்ரி...

"வேற வழி இல்ல கார்த்தி... bye " என்றாள்

"காயத்ரி...." என்று இதோ சொல்ல நினைத்தவன் எதுவும் பயனில்லை என உணர்ந்து "ஒகே bye " என்றான்

"ஒரு நிமிஷம் கார்த்தி...ஒரே ஒரு கேள்விக்கி மட்டும் உண்மையான பதில் சொல்லமுடியுமா?"

"நான் எப்பவும் உன்னிட்ட பொய் சொன்னதா ஞாபகம் இல்ல காயத்ரி" என்றான் அழுத்தமாய்

ஒரு நிமிடம் மௌனம் ஆட்கொள்ள "நீ இன்னும் அந்த ஷிவானிய மனசுல நெனச்சுண்டுருக்கையா?" என கேட்டாள் தயக்கமாய்

"இன்னொருத்தன் மனைவி ஆனவளை நெனைக்கற அளவுக்கு என்னை கேவலமானவனா நீ நெனைக்கறையா? இது தான் நீ என்னை புரிஞ்சுண்டதா?" என்றான் வேதனையாய்

"இல்ல கார்த்தி... அது" என தவிப்புடன் திணற

"போதும் காயத்ரி... பேசாத பாக்காதன்னு பாதி உயிர எடுத்துட்ட... இப்ப... ஹும்... இன்னும் என்ன பேசணுமோ பேசு... கேட்டுக்கறேன்...." என்றான் பெருமூச்சுடன்

இருவரும் எதுவும் பேசவில்லை

மௌனம் இத்தனை கொடுமையானதா என இருவருமே தவித்தனர்

இறுதியாக "ஒகே காயத்ரி bye " என்று விட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் பேசியை துண்டித்தான் கார்த்தி

ஐயோ....இறுதியில் கோபமாய் சென்று விட்டானே... மன்னிப்பு கேட்போம் என தோன்றிய மனதை கட்டுப்படுத்தினாள்

குழந்தை அழுதாலும் குணமாக வேண்டி கசப்பு மருந்து கொடுப்பது போல் இந்த கோபமே நிரந்தர பிரிவுக்கான அச்சாரமாய் இருக்கட்டுமென மௌனம் காத்தாள்

_________________

அதன் பின் இருவரும் பேசிகொள்ளவேயில்லை. கார்த்தி campus interview வில் தேர்வு பெற்று சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கி சேர்ந்து விட்டான் என காயத்ரி அவள் அன்னை மூலம் அறிந்தாள்

_________________

காலமும் அலையும் தான் யாருக்கும் எவருக்கும் காத்திருப்பதில்லையே (Time and Tide waits for none)

காலங்கள் மாறின காட்சிகள் மாறின...

அன்று.....

"ஏய்... அது என்னோட Ball .... குடுடா" என நந்தினி பிடிவாதம் செய்ய

"போடி... அது என்னோடது...." என ராகவ் கத்தினான்

"குடுக்க போறியா இல்லையா இப்ப?" என நந்தினி அவனை அடிக்க போனாள்

"ஏய்.... நந்தினி எதுக்குடி அவன அடிக்கற?" என காயத்ரி தடுக்க வர

"பாரு மம்மி.... என்னோட Ball தானே இது...குடுக்க சொல்லு" என சிபாரிசு தேட

"என்னத்துக்கு இப்ப பிடிவாதம் பண்ற நந்து... ராகவ் கொஞ்ச நேரம் விளையாடட்டும்" என்றாள் காயத்ரி அதட்டலாய்

"ஏன் காயத்ரி நந்துவ மெரட்டற... எல்லாம் இந்த ராகவ் பண்றது தான்" என கார்த்தி பரிந்து பேச

"போ டாடி... நீ எப்பவும் நந்தினிக்கு தான் சப்போர்ட் பண்ணுவ" என ராகவ் முகம் திருப்பினான்

"எல்லாம் நீ குடுக்கற செல்லம் தான்... இந்த நந்தினி கெட்டு போறா" என காயத்ரி கார்த்தியின் மேல் பழி போட

"அவங்கள சண்டை போடவேண்டாம்னு சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கேளா?" என கேலியாய் கேட்டபடியே வந்தாள் மைதிலி, கார்த்தியின் மனைவி !!!!!!

"ஆமாம் மைதிலி.... காயத்ரிக்கு ஆத்துகாரர் ஊர்ல இல்லாததால பொழுது போகாம வழில போறாவா கூட எல்லாம் வம்பு இழுந்துண்டுருக்கா" என கார்த்தி கேலி செய்தான்

காயத்ரி எதுவும் பேசாமல் மௌனமாய் சிரித்தாள்

அவர்களை பார்த்தபடியே திண்ணையில் அமர்ந்திருந்த கார்த்தியின் அன்னை காஞ்சனா

"இன்னிக்கி நேத்து இல்ல மைதிலி... பத்து வயசுல இருந்தே காயத்ரியும் கார்த்தியும் எலியும் பூனையும் தான்... ஆனா கொஞ்ச நேரத்துல friends ஆயுடுவா...அவா புள்ளங்க கூட அப்படி தான் இருப்பாங்க போல எப்பவும்" என்றாள் பெருமையாய்

உடனே காயத்ரி "அவங்க நட்பாவது கடைசி வரை எந்த களங்கமில்லாம இப்படியே நட்பாய் தொடரணும்" என மனதில் பிராத்தித்தாள்

அதையே கார்த்தியும் அதே கணத்தில் நினைத்தான்

ஒரு நொடிக்கும் குறைவான நேரம் அவர்கள் இருவரின் பார்வை சந்தித்து மீண்டது... அதற்கு அந்த நொடி வீசிய தென்றல் காற்று மட்டுமே சாட்சி...

என்வாழ்வெனும் புத்தகத்தில்
எங்கும் நிறைந்தவள்நீ
என்மனமெனும் பெட்டகத்தில்
எங்கும் உறைந்தவள்நீ
என்நட்பெனும் தோட்டத்தில்
எல்லாம் நீயேஆனாய்
பிரியமானவளே.....
ப்ரிய சகியே....

முற்றும்....ஆனால் தொடரும்..... என்ன குழப்பறேனா?

12B படத்துல வருமே... ஹீரோ அந்த பஸ் ஏறி இருந்தா ஒரு மாதிரி ஏறாம இருந்தா ஒரு மாதிரினு கதை போகுமே அந்த மாதிரி இந்த கதைக்கும் ரெண்டு விதமான கிளைமாக்ஸ் (Called Multiple Climax in Industry Terms ) தோணுச்சு....  இந்த முடிவு தான் எனக்கு பிடிச்சுருக்குன்னு நெனைக்கறவங்க இதை எடுத்துக்கலாம். இல்லேனா அடுத்த பகுதிய பாருங்க


வித்தியாசமா எழுதறதா நெனைச்சுட்டு நீயும் கொழம்பி எங்களையும் குழப்பறையானு சிலர் திட்டுவீங்கன்னு நெனைக்கிறேன்... வித்தியாசமா எழுதணும்னு இப்படி செய்யல... தோணினது எழுதறேன் அதுக்கு தானே ப்ளாக்.... ஒகே அடுத்த கிளைமாக்ஸ்ல மீட் பண்ணலாம்... நன்றி

Friday, May 07, 2010

அம்மாவும் நானும்...
முன்குறிப்பு - அன்னையர் தின சிறப்பு பதிவாய் பல பிராயங்களில் அம்மா மற்றும் குழந்தையின் மனதை பதிவு செய்ய முயன்றுள்ளேன், உரையாடல் நடை கவிதையில். முதல் முயற்சி இது போல். நிறை குறைகளை சொல்லுங்கள்

பிராயம் - பிறந்த சிசு
குழந்தை:-
சிணுங்கலுக்கு கூடத்தான்
சிலிர்த்துஎழும் என்அம்மா
சீண்டித்தான் பாப்போம்னு
சிணுங்கலே என்மொழியாச்சு
அம்மா:-
எதுக்குஅழுதோ என்செல்லம்
என்னன்னு புரியலியே
எந்தாயும் இப்படித்தானே
எனக்காக தவிச்சுருப்பா

பிராயம் - மூன்று மாதம்
குழந்தை:-
சாமியபாத்து சிரிக்குதுன்னு
சலிக்காம நீசொன்ன
உன்னத்தவிர யாரயும்தான்
உன்தங்கத்துக்கு தெரியாதே
அம்மா:-
பிஞ்சுகைய பிச்சுகிட்டு
பிறகெப்படி வேலைக்கிபோவேன்
போய்த்தானே ஆகோணும்
பொழப்பத்தான் பாக்கோணும்

பிராயம் - ஆறு மாதம்
குழந்தை:-
நிமிஷம்கூட என்னவிட்டு
நகராத அம்மாநீ
நாள்பூரா காணலியே
நானும்தான் தூங்கலியே
அம்மா:-
கண்மணிநீ காப்பகத்துல
கத்திகத்தி அழுகையில
காசுபணம் தேடிப்போறேன்
கண்ணீருல கரைஞ்சுபோறேன்

பிராயம் - ஒரு வருடம்
குழந்தை:-
மணியடிச்சா சாப்பாடும்
மத்தியான தூக்கமும்
பலபேருடன் விளையாட்டும்
பழகித்தான் போயிருச்சு
ஆனாலும்உன் முகம்பாக்க
ஆசையாத்தான் தாவிவந்தேன்
அம்மா:-
தங்கம்நீ எட்டுவெச்சு
தத்திதத்தி நடந்ததையும்
அம்மானு மொதவார்த்த
ஆசையா சொன்னதையும்
ஆயாதான் சொல்லக்கேட்டேன்
அதையும்நான் காணலியே

பிராயம் - 4 வயசு
குழந்தை:-
புதுசீருட போட்டுக்கிட்டு
பள்ளிக்கூடம் நான்போனேன்
பலகதை உன்கிட்டசொல்ல
பறந்துதான் வீடுவந்தேன்
பூட்டிய வீட்டபாத்து
புன்னகையும்தான் ஓடிப்போச்சே
அம்மா:-
பூட்டுனவீட்டு திண்ணையில
பொக்குன்னுநீ இருக்கையிலே
நாலுபஸ்சு மாத்திமாத்தி
நானும்தான் பறந்துவந்தேன்

பிராயம் - 8 வயசு
குழந்தை:-
அம்மாதான் என்னோட
அன்பான தோழிஇப்போ
கேட்டதெல்லாம் செஞ்சுதருவா
கேக்காததையும் சேத்துசெய்வா
எனக்குபோல ஒருஅம்மா
எவருக்குமிங்க வாய்க்கலியே
அம்மா:-
கண்ணுமூடி திறக்கும்முன்னே
கண்ணேநீ வளந்துபோன
சமத்துஉன் பொண்ணுன்னு
சகலரும் சொல்லக்கேட்டு
பெத்தவயிறு குளுந்துபோச்சு
பெறகென்ன வேணுமெனக்கு

பிராயம் - 13 வயசு
குழந்தை:-
என்னநான் செஞ்சாலும்
ஏன்எதுக்குன்னு கேள்விகேட்டு
எரிச்சலத்தான் கிளப்புறயே
என்னாச்சு அம்மாஉனக்கு
என்னைநீ எப்பத்தான்
எள்ளளவும் புரிஞ்சுகுவியோ
அம்மா:-
பேச்சுக்குபேச்சு எதுத்துக்கிட்டு
பேசாமமுகம் திருப்பறதென்ன
சகியாஇருந்த அம்மா
சகிக்காம போனதென்ன
ஏன்எதுக்குன்னு கேக்கத்தான்
எனக்குரிமை இல்லியோடி

பிராயம் - 18 வயசு
குழந்தை:-
கல்லூரிவிட்டு வந்ததுமே
கழுத்ததான் கட்டிக்குவேன்
வாய்வலிக்க நான்பேச
வாய்மூடாம நீகேப்ப
சந்தோசம்தான் எல்லாமே
சந்தேகமா நீபாக்காதவரை
அதசெய்யாத இதசெய்யாதன்னு
அனாவிசியமாநீ சொல்லாதவரை
அம்மா:-
உம்புள்ள இப்படின்னு
ஊராரு வந்துசொன்னா
தாங்கற மனசும்தான்
தங்கமே எனக்கில்ல
தம்புள்ளைய சந்தேகிக்கற
தாயுந்தான் உலகிலில்ல
பதினெட்டு வயசானாலும்
பச்சபுள்ள நீஎனக்கு

பிராயம் - 23 வயசு
குழந்தை:-
விடியவிடிய பேசினாலும்
"வெக்கட்டுமா"னு கேட்டபின்ன
ஒருமணி நேரமாச்சும்
ஓயாம பத்திரம்சொல்லுற
எனக்குகீழ நாலுபேரு
என்பேச்சுக்கு வேலைசெய்ய
உம்புள்ள நான்வளந்துட்டேன்
உன்னும்அம்மா நீவளரலியே
அம்மா:-
காசுதேடி போனப்ப
காப்பகத்துல உன்னசேத்தேன்
ஓஞ்சுபோய் நிக்கையிலே
ஒருகாப்பகம்தான் எனக்கும்இனி
பொழுதுஇப்ப நெறையகெடக்கு
பேசத்தான் நீஇல்ல
ஆயிரம் மைல்தாண்டி
ஆகயத்துல பறந்துபோன

பிராயம் - 30 வயசு
குழந்தை:-
எதுக்குஅழுதோ என்செல்லம்
என்னன்னு புரியலியே
எந்தாயும் இப்படித்தானே
எனக்காக தவிச்சுருப்பா!!!
அம்மா:-
பச்சபுள்ளைய வெச்சுகிட்டு
பச்சஉடம்பா என்புள்ள
பட்டணத்துல தவிக்கிராளே
போகநான் தோதில்லையே
எந்தாயும் இப்படித்தானே
எனக்காக தவிச்சுருப்பா!!!

இது நான்:-
காலங்கள் மாறலாம்
காட்சிகள் மாறலாம்
அன்னைமனம் எப்பவும்
அப்படியே தானிருக்கு
 
எத்தனை உறவுவந்தாலும்
என்தாய்க்கி அதுஈடில்ல
எத்தனவயசு ஆனாலும்
என்தாய்க்கி நான்குழந்தைதான்

எனது அன்னைக்கும்
எங்கும் நிறைந்திருக்கும்
எல்லா அன்னைகளுக்கும் 
எனதுசமர்ப்பணம் இப்பதிவு!!!

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!

Tuesday, May 04, 2010

இட்லியும் நானும்....


முன் குறிப்பு - இது என்னோட சில்வர் ஜூப்ளி பதிவு, அதாங்க 25 வது பதிவு

இதுகாரும் (இதுவரை) உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து என்னை வழி நடத்திய கோடானு கோடி ரசிகர் பெருமக்களுக்கு.... ஒகே ஒகே...  ஒரு சில சக பதிவர்களுக்கு மிக்க நன்றி. இந்த நேரத்தில் நான் சொல்லி கொள்வது என்னவென்றால்... (ஐயோ கல் எல்லாம் வேண்டாம் ப்ளீஸ், நிறுத்திடறேன்...)

சரி பதிவுக்கு போவோம். இந்த பதிவ எழுதி முடிச்சுட்டு போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி ரங்க்ஸ் கிட்ட படிச்சு பாருங்கன்னு சொன்னேன் (அவங்கள கேக்காம நான் எதுவும்  செய்யறது இல்ல...). படிச்சுட்டு அவர் நடு நடுவுல நெறைய கமெண்ட் அடிச்சார், அதையும் இங்க சேத்து இருக்கேன் ஒரு lively effect காக. கண்டுக்காதீங்க ஒகேவா

நான் ரெம்ப நாளா மனசுக்குள்ள சுமந்துகிட்டு இருக்கற ஒரு பாரத்த உங்க கிட்ட எறக்கி வெக்கலாம்னு இருக்கேன்... (அத நான் சொல்லணும் - ரங்கமணி)

மனசோட ஆழத்துல இருந்த இந்த கவலை இப்ப பொங்கி பிரவாகம் எடுத்ததுக்கு காரணம் நம்ம கீதா மேடம் இட்லி பத்தி கருத்து கேட்டதை படிச்சது தான் (சுத்தம், இதுக்கு நீ செய்ற இட்லி கொஞ்சம் பொங்கி இருந்தாலும் சாப்பிடவாச்சும் உதவும் - ரங்க்ஸ்)

அது என்னமோ தெரியலைங்க, எனக்கும் இந்த இட்லிக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். மத்ததெல்லாம் நல்லாவே செய்வேன் (பொய் சொல்றதுக்கு ஒரு அளவு இல்லையா - ரங்க்ஸ்)

நல்ல இட்லிக்காக நான் படாத பாடு இல்ல, கேக்காத டிப்ஸ் இல்ல. எப்படி செஞ்சாலும் எதாச்சும் சொதப்பிடும்

இட்லிக்காக நான் பாடு பட்ட சரித்திரத்த சொல்றேன் அப்புறம் நீங்களே சொல்லுவீங்க ஐயோ பாவம் நம்ம அப்பாவின்னு

என்னோட இட்லி சரித்திரம் எங்க ஆரம்பிக்குதுன்னா.... பதினெட்டாம் நூற்றாண்டு எல்லாம் இல்ல...

கல்யாணம் முடிஞ்சு நான் துபாய் போறதுக்கு முன்னாடி டேபிள் டாப் grinder எல்லாம் வாங்கணும்னு பந்தாவா ஷாப்பிங் லிஸ்ட் போட்டுட்டு இருந்தேன்

அதுக்கு முன்னாடி ஒரு முன் குறிப்பு - இது பின் வரும் தேவையான குறிப்பு என்பதால் இப்பவே சொல்றேன். எங்க ரங்க்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடியே கனடா immigration apply பண்ணிட்டு துபாய் வேலைல continue பண்ணிட்டு இருந்தார்... (நான் உங்க வீட்டுல வலது கால் வெச்ச நேரம் தான் எல்லாம் கூடி வந்து சீக்கரம் விசா வந்ததுன்னு இப்பவும் சொல்லிட்டு இருக்கேன்கறது தனி கதை.)

அங்க துபாய்ல ஒரு தமிழ் மெஸ்ல தான் அய்யா போஜனம் எல்லாம் மூணு நேரமும், நான் போற வரைக்கும் (நல்ல சாப்பாடு சாப்ட்டுட்டு இருந்தேன்... ஹும்.... - ரங்க்ஸ்)

என்னோட ஷாப்பிங் லிஸ்ட் எல்லாம் பாத்துட்டு எங்க மாமனார் என்ன நெனைச்சாரோ "இன்னும் ஒரு வருசத்துக்குள்ள கனடா போறது தானேம்மா, பேசாம அதுவரைக்கும் நீயும் அவன் சாப்பிடற மெஸ்லையே சாப்ட்டுகோயேன், இதை எல்லாம் தூக்கிட்டு போகாட்டா என்ன" னு கேட்டார் (மகனை கொஞ்ச நாளாச்சும் காப்பாத்தலாம்னு நெனச்சார் போல - ரங்க்ஸ்)

நான் ஒத்துக்கல "என்னால எல்லாம் ஒரு வருஷம் கடை சாப்பாடு சாப்பிட முடியாது. அதுவும் இல்லாம நான் கனடா போறதுக்குள்ள சமையல் எல்லாம் கத்துக்கணும்னு" ஒத்தகால்ல நின்னு grinder வாங்கினேன் (மகாஜனங்களே, நோட் தி பாயிண்ட் சமையல் கத்துக்கணும்... செய்யணும் இல்ல - ரங்க்ஸ்)

ஒரு குயர் நோட் ஒண்ணு வாங்கி எங்க அம்மா கிட்ட சமையல் குறிப்பு எல்லாம் கேட்டு எழுதிட்டு போனேன்

துபாய் போன மொதல் நாள் நான் செஞ்ச அரிசி பருப்பு சாதத்துலையே ரங்கமணி கொஞ்சம் ஜெர்க் ஆனார். அந்த கதைய நீங்க மொதலே படிச்சு இருப்பீங்கன்னு நெனைக்கிறேன். படிக்கலைன்னா இங்க கிளிக்குங்க. அடிப்படை வரலாறு (தல படம் இல்லங்க... இது என்னோட சுய சரிதை) எல்லாம் படிச்சுட்டு ஒரு யு turn எடுத்து வாங்க

சரி இட்லி கதைக்கி போவோம். ஆசையா மாவு எல்லாம் அரைச்சு இட்லி ஒரு ஈடு ஊத்தி வெச்சுட்டு மணக்க மணக்க தக்காளி சட்னி எல்லாம் செஞ்சு வெச்சுட்டு இட்லி cooker தெறந்தா.... ஐயோ நாராயணா அதை என் வாயல எப்படி சொல்லுவேன்? (இதுக்கு இனி பக்கத்துக்கு வீட்டுக்காரன் வாயவா கடன் வாங்க முடியும் - ரங்க்ஸ்)

இட்லியோட மேல் பாகம் நல்லா மல்லிகைப்பூ கலர்லயும் அடிப்பக்கம் சாம்பல் கலர்லயும் இருந்தது... சரியான பசி வேற எனக்கு, அப்படியே கண்ல தண்ணி வந்துடுச்சு

இப்ப எழுதறப்ப சாதாரணமா தெரியும், ஆனா நெஜமா அன்னைக்கி கண்ல தண்ணி வந்தது... நம்பினா நம்புங்க... அந்த கொடுமைய அனுபவிச்சவங்களுக்கு தான் அதோட வலி என்னனு புரியும்

அம்மா நாக்குல வெச்சா கரையுற பதத்துல இட்லி செஞ்சு குடுத்தாலும் நல்லா சாப்டுட்டு தினமும் இதே இட்லியானு நரம்பில்லாம பேசின நாக்குதானே... அனுபவிடி நல்லா அனுபவினு வானத்துல இருந்து ஏதோ அசிரிரி கேட்ட மாதிரி ஒரு பிரமை வேற... (சின்ன வயசுல தூர்தர்சன்ல பாஷை புரியலைனாலும் சண்டே சண்டே காத்தால பத்து மணிக்கி மகா....பா...ர.தம்.... அப்படின்னு மீசிக் கேட்டதும் ஆணி அடிச்சா மாதிரி உக்காந்து பாப்போமே அதுல வர்ற அசிரிரி மாதிரியே இருந்தது)

ஏன்? எப்படி இப்படி ஆச்சு? எங்க தப்பு நடந்தது? அப்படின்னு "நடந்து என்ன குற்றமும் பின்னணியும்" கோபிநாத் மாதிரி நானும் ரங்கமணியும் step-by-step detail analysis எல்லாம் செஞ்சோம்

ரங்கமணி வேற நடுவுல "ஒருவேள குக்கர்க்கு வெயிட் போட்டு இருக்கணுமோ" அப்படின்னு ஒரு பெரிய சந்தேகத்த கிளப்பினார். எனக்கு தான் அப்ப ஒண்ணும் தெரியாதே, அப்படி இருக்கலாமோ இது கூட தெரியாம இப்படி அப்பாவியா வளந்துட்டோமேனு எனக்கு மறுபடியும் அழுகையா வந்தது

அன்னைகின்னு பாத்து ஊர்ல இருந்து போன். என் தங்கச்சி ரெம்ப அக்கறையா ரங்க்ஸ் கிட்ட "சாப்டாச்சா" னு கேட்டா

அவ கேட்டது தான் தாமதம். ரங்க்ஸ் அப்படியே கொட்ட ஆரம்பிச்சுட்டாரு...

"உங்க அக்கா இட்லி செஞ்சா இட்லி. நீ வாழ்க்கைல எப்பவாச்சும் ப்ளாக் அண்ட் வைட் இட்லி சாப்பிட்டு இருக்கயா... நான் சாப்டேன்... அதுவும் அப்பளம் சைஸ்ல ஸ்பெஷல் இட்லி" னு வாருவாருன்னு வாரினாரு

எனக்கு ரெம்பவே பீலிங் ஆய்டுச்சு... எத்தனை கஷ்டப்பட்டு செஞ்சேன்... ஏதோ கொஞ்சம் கலர் மாறினதுக்கு இப்படி பேசிட்டாறேன்னு அன்னைக்கி பூரா சாப்பிடவே இல்ல (அந்த கொடுமைய நீ ஏன் சாப்பிடற, அதுக்கு தான் நான் இருந்தனே - ரங்க்ஸ்)

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி... பரிணாம வளர்ச்சில... அதாவது அப்பளதுல இருந்து மினி இட்லி சைஸ் வந்து அப்புறம் பணியார சைஸ்க்கு வந்து அப்புறம் ஒரு நிஜ இட்லி மாதிரி ஏதோ செய்ய ஆரம்பிச்சேன்

யாரு கண்ணு பட்டுச்சோ... அந்த நேரம் பாத்து கனடா விசா வந்தது

இந்த ஊருக்கு வந்து குளிர் கொடுமைல நொந்து நூடுல்ஸ் ஆகி (ஏன் நொந்து இட்லி ஆகினு சொல்ல கூடாது, நான் அப்படி தான் சொல்லுவேன் - ரங்க்ஸ்) இட்லி அரிசி தேடி புடிச்சு என்னோட இட்லி பயணத்த தொடரலாம்னு ஆரம்பிச்சேன்

அந்த பயணம் இனிய பயணமா இருந்திருந்தா இப்ப இதை எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காதே (நீங்களும் தப்பிச்சு இருக்கலாம்னு சொல்றீங்களா...)

ஆனா, மறுபடியும் "பழைய குருடி கதவ தெறடி" னாப்ல இட்லி சோகம் ஆரம்பிச்சது

சரி, அரிசி வித்தியாசம் தான் போல இருக்குனு பலவிதமா முயற்சி செஞ்சு பாத்தேன்

மூணு டம்ளர் அரிசிக்கி ஒரு டம்ளர் முழு உளுந்துன்னு போட்டு பாத்தேன், இட்லி அப்பளத்த விட கொஞ்சம் உப்பலா வந்தது

நாலு டம்ளர் அரிசிக்கி ஒரு டம்ளர் முழு உளுந்துன்னு போட்டு பாத்தேன் (சும்மா போட்டு இல்ல எல்லாம் ஊர வெச்சு அரைச்சு.... எல்லா சீரும் செஞ்சு தான்...) அப்பவும் இட்லி ஒரு பணியாரம் சைஸ்க்கு தான் வந்தது. அப்ப அப்ப கல்லு மாதிரியும் ஆச்சு

(வெளியில விழற பனிகட்டிய ஓடைக்க இதை use பண்ணினோம்னா பாத்துகோங்களேன் - ரங்க்ஸ்) இந்த கமெண்ட் கொஞ்சம் ஓவரா இல்ல... நீங்களே சொல்லுங்க ரங்க்ஸ் கிட்ட

போற எடத்துல எல்லாம் எல்லார் கிட்டயும் இட்லி எப்படி செய்வீங்க எப்படி செய்வீங்கன்னு கேட்டு கேட்டு ஒரு கட்டத்துல நான் போனாலே "இட்லி வந்துங்க..." அப்படின்னு எல்லாரும் சொல்ற மாதிரி ஆய்டுச்சு என் நிலைமை

இன்னும் சிலர் என்கிட்டே இருந்து தப்பிக்கறதுக்கு "எனக்கும் இட்லியே வராது"னு சொல்ல ஆரம்பிச்சுடாங்க

இட்லி cooker எல்லாம் ஒரு நாலு விதமா மாத்தி பாத்தேன் (அறுக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்... சும்மா ஒரு பழமொழி. இதுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல - ரங்க்ஸ்)

இதை விட பெரிய கொடுமை என்னன்னா நான் போடற அளவுல தான் ஏதோ தப்புன்னு நானா முடிவு பண்ணிட்டு போன வாட்டி ஊருக்கு போனப்ப எங்க அம்மா கிட்ட அவங்க இட்லிக்கு ஊற வெக்க அரிசி எடுக்கற அளவு டம்ளர் கடன் வாங்கிட்டு வந்தேன்

எந்த அளவுக்கு பீல் பண்ணி இருந்தா நான் இந்த அளவுக்கு போய் இருப்பேன்

எல்லாம் யாருக்காக... யாருக்காக... ரங்க்ஸ்காக (ஆஹா... இதென்ன புது ட்விஸ்ட் - ரங்க்ஸ்)

ஆமாங்க... எனகொண்ணும் இட்லி அத்தனை பிடித்தம் இல்ல... அவருக்கு பிடிக்குமேனு தான் இத்தனை பாடும்... ஹும்.... யாரு என்னை புரிஞ்சுக்கறா... (ஆஹா... சீன் ஸ்டார்ட் ஆய்டுச்சு... இனி நான் silent mode போறது தான் safe . இல்லைனா இட்லிலையே விழும் - ரங்க்ஸ்)

அப்புறம் யாரோ ஒரு தங்கமணி சொன்னாங்க, இந்த ஊர்ல குளிர் அதிகம்கரதால தான் மாவு புளிக்காம இந்த பிரச்சனை. மாவு அரைச்சதும் ஓவன்ல வெச்சு லைட் மட்டும் போட்டு விட்டு ராத்திரி முழுக்க விட்டா மாவு நல்லா பொங்கி இட்லியும் பொங்கும்னு நல்ல வார்த்தை சொன்னாங்க

அதானே பாத்தேன்... என்மேல தப்பில்ல... எல்லாம் இந்த ஊரு weather பண்ற சதின்னு புரிஞ்சது

அந்த விசயம் புரிஞ்சதும் அமெரிக்கவ கண்டுபிடிச்சப்ப கொலம்பஸ் பட்ட சந்தோசத விட ஒரு படி மேல சந்தோசப்பட்டேன். அந்த தங்கமணிய மனசார வாழ்த்தினேன்

கடேசியா பகவான் கண்ண தெறந்துட்டார்னு ஆனந்த கண்ணீர் எல்லாம் விட்டேன்

சனிக்கிழமை காத்தால இடி விழுந்தாலும் பத்து மணிக்கி முன்னாடி எழுந்திரிக்காத நான் (அப்பாடா இன்னிக்கி தான் உண்மை பேசி இருக்கா - ரங்க்ஸ்) அன்னைக்கி ஆறு டு ஏழரை எமகண்டம் முடிஞ்சதும் எந்திரிச்சு இட்லிக்கி ஊற வெச்சேன்

எல்லா சாமியையும் வேண்டிட்டு அரைச்சேன். சூடம் கொளுத்தி தேங்காய் உடைக்காதது தான் கொறை

அந்த தங்கமணி சொன்னாப்ல ஓவன்ல வெச்சு லைட் மட்டும் போட்டு விட்டு வெச்சுட்டு ரெம்ப எதிர்பார்ப்போட தூங்க போனேன். கனவுல எல்லாம் கூட குஷ்பு இட்லி தான் வந்தது.

அதையும் சுபசகுனமா எடுத்துட்டு காலைல எப்பவும் ரங்கமணி முகத்துல முழிக்கற செண்டிமெண்ட் கூட தியாகம் பண்ணிட்டு (அது மேட்டர் என்னனா, அன்னிக்கி எதாச்சும் மோசமா நடந்தா "உங்க மூஞ்சில தான் முழிச்சேன்" னு பழிய போடலாம் பாருங்க. அதுக்கு தான் - ரங்க்ஸ்) போய் ஓவன்ஐ ஓபன் பண்ணி பாத்தா.....

கண்ணுல தண்ணி இல்லைங்க ரத்தமே வந்தது... பின்ன ஓவரா பொங்கி எல்லா மாவும் ஓவன் பூரா மாவு அபிஷேகம் ஆகி இருந்தது. என் மனசு என்ன பாடுபட்டு இருக்கும்னு யோசனை செஞ்சு பாருங்க சக பதிவர்களே

அப்புறம் என்ன, மாவுக்கு மாவும் போச்சு... ஓவன் கிளீன் பண்ற வேலை வேற (அதை நான் தான் செஞ்சதா ஞாபகம் - ரங்க்ஸ்)

ரெம்ப நேரம் வெச்சதால ரெம்ப ஹீட் ஆகி அப்படி ஆய்டுச்சு போல

ஆனா இன்னைக்கி வரைக்கும் இட்லி எனக்கு சிம்ம சொப்பனம்தான்

சில சமயம் அரைச்சதும் அடுத்த நாள் நல்லா வரும். அப்புறம் பழையபடி பணியாரம் தான்

நான் மட்டும் இல்லைங்க இங்க பெரும்பாலான தங்கமணிகள் சொல்றது இது தான் "யாராச்சும் guest வந்தா இட்லி மட்டும் செய்யவே மாட்டோம்"னு

அதே போல இந்த potluck dinner சொல்றப்ப இட்லினா எல்லாரும் எஸ்கேப் ஆய்டுவோம்

இதுல ரங்கமணி அப்ப அப்ப வெந்த புண்ணுல வேல பாய்ச்சற மாதிரி அப்பாவி மாதிரி மொகத்த வெச்சுட்டு சில சந்தேகம் எல்லாம் கேப்பாரு... அதுல ஒரு சாம்பிள்....

"ஏன்பா.... எங்க அம்மா இட்லி செஞ்சா... சின்னதா ஊசி மொனைல குத்தினாப்ல அங்க அங்க airholes மாதிரி இருக்குமே... நீ செய்யற இட்லில ஏன் அப்படி இல்ல?"

"ம்.... அந்த airholes விட பெரிசா இட்லி இருக்கில்லையா... சந்தோசப்பட்டுகோங்க"னு சொல்லிடுவேன்

அப்புறம் போன வருஷம் எங்க மாமியார் இங்க வந்தப்ப அதே டவுட் கேக்கவும் "அது நம்ம ஊரு இட்லி தட்டுல துணி போட்டு ஊத்துற இட்லி தான் அப்படி வரும். cooker இட்லி அப்படி வராது"னு சொன்னாங்க

பாத்தீங்களா... பாத்தீங்களா... இந்த மேட்டர் எல்லாம் தெரியாமையே நம்மள மாதிரி அப்பாவி தங்கமணிக மேல இந்த ரங்க்ஸ்க எல்லாம் பழி போடறாங்க

எங்க அம்மா சமையல் மாதிரி இல்லைன்னு குத்தம் சொல்றாங்க

நாமளும் நம்ம கிட்ட தான் ஏதோ பிரச்சனைன்னு டென்ஷன் ஆய்டறோம்

இதனால சக தங்கமணிகளுக்கு நான் சொல்ல வர்றது என்னனா... fault நம்ம மேல இல்ல சிஸ்டத்துல தான்.. என்ன நான் சொல்றது?

இப்பவும் சொல்றேன்... எனக்கு இட்லி சரியா வராததுக்கு இந்த ஊரு தான் காரணம் நான் இல்ல... நான் இல்ல... நான் இல்ல.... (இப்ப எதாச்சும் பேசினா அந்த airholes சைஸ் இட்லி கூட கெடைக்காது - ரங்க்ஸ்)

சரிங்க அப்புறம் பாக்கலாம்

இன்னிக்கி சாயங்காலம் டிபன் கூட இட்லி தான்.... வாங்க சாப்பிடலாம்....

(விடு ஜூட்......... - ரங்க்ஸ்)