Wednesday, June 30, 2010

ஹாப்பி பர்த்டே டு மீ.... (ஹி ஹி ஹி)
ஹாப்பி பர்த்டே டு மீ....

ஹாப்பி பர்த்டே டு மீ....

ஹாப்பி பர்த்டே டு அப்பாவி....

ஹாப்பி பர்த்டே டு மீமீ மீமீ மீமீ மீமீ..................................

இருங்க இருங்க ஓடாதீங்க... ஒண்ணும் ஆகல எனக்கு... தெளிவா தான் இருக்கேன்...

நெஜமாவே எனக்கு ஹாப்பி பர்த்டே...எப்போவா? ஜூலை 3

(நீ பொறந்ததே கொடுமை இதுல அதுக்கு ஒரு போஸ்ட் வேறயா? - mindvoice )

"உன்னோட பர்த்டேக்கு நீயே பதிவு போட்டுகறியே...கஷ்டம் கஷ்டம்"னு யாரோ மண்டைல அடிச்சுக்கறாங்க.... நோ டென்ஷன் பாஸ் நோ டென்ஷன்...

இதுல என்ன தப்பு? நல்ல நாளும் அதுவுமா நாலு பேரு கிட்ட சொல்லி பெரியவங்கன்னா ஆசிர்வாதமும் சின்னவங்கன்னா வாழ்த்தும் வாங்கறது தானே முறை...

உடனே எல்லாரும் "வாழ்த்த வயதில்லை ...." அது இதுன்னு சொன்னா நான் டென்ஷன் ஆய்டுவேன் ஆமா... statistics என்ன சொல்லுது தெரியுமோ? மொத்தமா blog எழுதற மக்கள் தொகைல அஞ்சு சதவீதம் பேரு தான் என்னை விட சின்னவங்க... (என்னோட வயசு என்னவா? அஸ்கு புஸ்கு...சொல்ல மாட்டேன் போங்க...)

அந்த அஞ்சு சதவீதத்துல நம்ம மக்கள் ஒரு சதவீதம் தான்... மனசிலாயோ... ?

அதுல இந்த ப்ளாக்க்கு வர்றவங்க ஒரு நாலு அஞ்சு பேரு தான்னு எனக்கு நல்லாவே தெரியும் பாஸ்.... அதனால எல்லாரும் ஆசீர்வாதம் செஞ்சுட்டு போங்க... ஒகே.... (ஆசீர்வாதம் கூட மெரட்டி தான்பா வாங்க வேண்டி இருக்கு... ஹும்...) ஹி ஹி ஹி...

பிறந்தநாள் நினைவுகள் கொஞ்சம் இங்க உங்க கிட்ட பகிர்ந்துக்கணும் போல தோணுது....

இப்பவெல்லாம் பர்த்டே ஒரு பெரிய விசியமா தோன்றதில்லங்க... உடனே வயசானா அப்படிதான்னு சொல்லுவீங்கன்னு தெரியும்...

அப்படி இல்ல... நானே டிரஸ் வாங்கி... நானே ஸ்வீட் செஞ்சு நானே சாப்ட்டு... என்ன பர்த்டே போங்க...

இந்தியால தான் ரெம்ப குஷியா கொண்டாடின நாட்கள்னு எனக்கு தோணும்.. அப்போ பொறுப்பில்லாம சுத்திட்டு இருந்ததால அப்படி தோணுதோ என்னமோ... ஹி ஹி ஹி

(இப்ப ரெம்ப பொறுப்பா இருக்கறதா நெனப்போ... - mindvoice )

பர்த்டேக்கு டிரஸ் வாங்க போறதே செம அலட்டல் தான் ஸ்கூல் days ல எல்லாம்

எனக்கு ஜூலைல என் தங்கைக்கு ஆகஸ்ட்ல பிறந்த நாள்.... மறுபடி மறுபடி ஷாப்பிங் போனா ஓவர்ஆ பர்ஸ் காலி பண்ணிடுவோம்னு எங்க அப்பா ரெம்ப விவரமா (எங்க அப்பா ஆச்சே...) மே மாசம் ஸ்கூல் Uniform  வாங்க போறப்பவே ஸ்கூல் Uniform, ரெண்டு பேருக்கும் பர்த்டேக்கு டிரஸ் எல்லாம் வாங்கறது வழக்கம்

ஏப்ரல்ல annual எக்ஸாம் முடிஞ்ச நாளுல இருந்தே நச்சு நச்சுனு நச்ச ஆரம்பிச்சுடுவோம்...

மே மாசம் கோயம்புத்தூர் (காந்திபுரம்) டவுன் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல கிரௌண்ட்ல exhibition போட்டு இருப்பான்...எல்லாம் சேத்து பிளான் பண்ணிட்டு காலைல போனா நடு ராத்திரி தான் வீடு வந்து சேருவோம்

எங்க வீடு சிட்டிகுள்ள இல்ல, இருபது கிலோ மீட்டர் தள்ளி இருக்கும்... அதனால என்னமோ திருவிழா போற முஸ்தீபுல தான் கெளம்புவோம்

காலைல எட்டு மணிக்கி கிளம்பினா மொதல்ல நேரா மருதமலை கோவில் போயிட்டு, அப்புறம் பத்தரை மணி ஷோ சினிமா பாத்துட்டு, லஞ்ச் பெரும்பாலும் கிராஸ் கட் ரோடுல இருக்கற அன்னபூர்ணா தான், அப்புறம் டிரஸ் வாங்கறது தான் செம காமெடி

என்னோட பாசமலர் இருக்கே... ரெம்ப நல்லவ மாதிரி "மொதல்ல புவனாவுக்கு வாங்கலாம்" னு சொல்லுவா...

கேக்கறதுக்கு ரெம்ப அக்கறை மாதிரி தானே தோணுது, வெயிட் வெயிட்... அதுல ஒரு மேட்டர் இருக்கு... என்னன்னா எனக்கு என்ன விலைக்கு வாங்கறோம்னு பாத்துட்டு அதை விட ஒரு பத்து ரூபாயாச்சும் மேடம் அதிகமா தான் அவங்களுக்கு டிரஸ் வாங்குவாங்க... இப்ப சொல்லுங்க... உலக மகா விவரம் தானே... ஹா ஹா ஹா...

சும்மாவா சொன்னாங்க "மூத்தது மோழை; இளையது காளை" னு...

நானும் பொழச்சு போனு விட்டுடுவேன்... நான் அப்பவே அப்பாவி தான் பாருங்க...

(எப்படி எல்லாம் பில்ட் அப் பண்றா - mindvoice )

ஒரு வாட்டி எனக்கு வாங்கின டிரஸ் விட அவளுக்கு பிடிச்ச டிரஸ் ஒரு இருபது ரூபாய் கம்மியா இருந்தது... அதை விடவும் மனசில்ல... என்னை விட கம்மியா இருக்கேன்னு வேற டென்ஷன்.

என்ன பண்ணினா தெரியுமா அந்த வாலு? வாங்கின டிரஸ்க்கு மேட்ச்ஆ நாலு kerchief வாங்கினா காசை சரி கட்டறதுக்கு....எங்க அம்மாவுக்கு "எத்தனை விவரம் பாரேன்" னு ஒரே பெருமை வேற

அப்போ செம கடுப்பா இருந்தது எனக்கு... இப்போ நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது

அதுவும் எனக்கு டிரஸ் வாங்கறதுக்கு மிஞ்சி போனா ஒரு அரைமணி நேரம் ஆகும்... அவளுக்கு மினிமம் நாலு மணி நேரம்... கடை கடையா ஏறி எங்க அப்பாவுக்கு B P எகிறி திட்ட ஆரம்பிச்சா தான் அப்புறம் ஒரு வழியா எடுப்பா...

அப்புறம் exhibition போய் Giant Wheel எல்லாம் நான் வேடிக்கை மட்டும் பாப்பேன்... சின்ன அம்மணி தான் அதெல்லாம் விளையாடிட்டு வரும்... நான் அப்பவே ரெம்ப பயந்த சுபாவம்... நம்புங்கப்பா...

(ஒண்ணும் சொல்றதுகில்ல - mindvoice )

நான் சிவனேன்னு டெல்லி அப்பளம், மொளகா பஜ்ஜி, பெரியயயய.......... பஞ்சு மிட்டாய் இப்படி item எல்லாம் உள்ள தள்ளிட்டு இருப்பேன்

அப்புறம் எல்லாரும் களைச்சு போய் பத்து பதினோரு மணி வாக்குல வீடு போய் சேருவோம்...

வந்ததும் அந்த அர்த்த ராத்திரிலேயே என்னோட உடன் பிறப்பு dress எல்லாம் போட்டு கண்ணாடி முன்னாடி அரை மணி நேரம் ரசிச்சு எல்லாரும் (தாத்தா பாட்டி உட்பட) "அருமையா இருக்கு" னு சொன்னா தான் தூங்க விடுவா

என்னை எங்க அம்மா "நீயும் போய் போட்டுட்டு வாயேண்டி" னு நச்சினாலும் "போம்மா... வேற வேலை இல்ல... அங்கேயே எல்லாம் போட்டு பாத்தாச்சு"னு போய் தூங்கிடுவேன்

பொதுவா எதுக்கு எடுத்தாலும் ரெண்டு பேரும் அடி தடி தான்... அதுலயும் மல்லிகை பூ வாங்கினா அதை ரெண்டா கட் பண்றதுக்குள்ள எங்க அம்மாவுக்கு பைத்தியம் பிடிக்காதது ஒண்ணு தான் மிச்சம்

மத்த விசியத்துல எல்லாம் ஒரு அளவுக்கு விட்டு குடுத்தாலும் இதுல நானும் பிடிவாதம் தான்... பூ னா அப்படி ஒரு இஷ்டம்... அதுக்கு தான் ஆண்டவன் வெச்சார் ஆப்பு....ஹும்... மல்லிகை பூவை கண்ணுல பாத்தே வருஷம் ரெண்டு ஆச்சு... சரி அதை விடுங்க

ஒரு பூ கூட எக்ஸ்ட்ராவா விட மாட்டோம்... "காவேரி தண்ணி பிரச்சனை கூட தீரும் இது தீராது" னு எங்க அம்மா டென்ஷன் ஆவாங்க

இப்பிடி எல்லாம் ரகளை பண்ணினாலும் என்னோட தங்கை பர்த்டே அன்னிக்கி நிஜமாவே பாசமலர் ஆய்டும்...

முந்தின நாளே பூக்காரி கிட்ட சொல்லி மொக்கு மொக்கா மல்லிகை பூ கொண்டு வரசொல்லி கோழிகொண்டைனு செவப்பா ஒரு பூ இருக்குமே அதையும் வாங்கி அவ கையாலையே மொத்த பூவும் எனக்கே செண்டு மாதிரி அழகா கோத்து குடுப்பா

எங்க அம்மா கேப்பாங்க "நீயும் கொஞ்சம் வெச்சுக்கோ" னு... "இல்ல இல்ல வேண்டாம்... இன்னிக்கி அந்த பிசாசுக்கு (!!!!!) தானே பர்த்டே. அவளே full ஆ வெக்கட்டும்"னு பாசமா சொல்லும்

பிசாசுன்னு சொல்றதெல்லாம் ஒரு பாசத்தின் வெளிப்பாடு மக்களே... அதை உடனே பில்ட் அப் பண்ணாதீங்க ஒகே...ஒகே...

அப்புறம் பர்த்டே அன்னிக்கி நேரத்துல எந்திரிச்சு குளிச்சு புது டிரஸ் எல்லாம் போட்டு கோவில் போயிட்டு வந்து, ஸ்கூல்க்கு கொண்டு போறதுக்கு மிட்டாய் எல்லாம் வாங்கி டப்பால போட்டுட்டு... என்னமோ புது பட ஹீரோயின் ரேஞ்சுக்கு பந்தா எல்லாம் நடக்கும்

அன்னிக்கி என்ன லொள்ளு பண்ணினாலும் எஸ்கேப் ஆய்டலாம்... "பொறந்த நாள் அன்னைக்கி கொழந்தைய திட்டாதே"னு பாட்டி ஒரு சவுண்ட் விட்டா அப்பா அம்மா எல்லாம் off ஆய்டுவாங்க... அப்புறம் ஒரே ஜாலி தான்

அப்புறம் மொத்தமா சேத்து வெச்சு அடுத்த நாள் கெடைக்கும்கறது தனி track ... ஹி ஹி ஹி

அன்னைக்கி ஸ்கூல்க்கு கலர் டிரஸ் போட்டுட்டு போலாம்கறது ஒரே குஷி... ஸ்கூல்லயும் கலர் டிரஸ் பாத்து அன்னிக்கி பர்த்டேனு தெரியும்கறதால homework பண்ணலைனாலும் "போய் தொலை" னு விட்டுடுவாங்க மிஸ் எல்லாம்... ஹய்யா ஜாலி...

அதுக்கு பின்ன, காலேஜ் நாட்கள்ல நாங்க ஒரு குரூப் இருந்தோம்... ஒரு பதினஞ்சு பேரு... அதுல யாருக்கு பர்த்டேனாலும் மத்த எல்லாரும் சேந்து கேக் கிப்ட் எல்லாம் வாங்கி செம ரகளை பண்ணுவோம்

பி.காம் லாஸ்ட் இயர் பர்த்டே அன்னிக்கி ஒரு tragedy நடந்தது... அது இப்போ சொல்லி நான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறதா இல்ல... அதாவது இந்த நல்ல நாளுல வேண்டாம் இன்னொரு நாள் தனி பதிவா போடறேன்... ஒகே ... ஹா ஹா ஹா

(அதானே .... என்னடா பெரிய மனசு பண்ணி விட்டுட்டாளோனு பாத்தேன். பிசாசாவது விடறதாவது - mindvoice )

அப்புறம் ஒரு கம்ப்யூட்டர் சென்ட்டர்ல வேலை பாத்தேன் பார்ட் டைம்ஆ. அப்போ அங்க staff ல யாருக்கு பர்த்டேனாலும் எல்லாரும் சேந்து கேக் / கிப்ட் எல்லாம் வாங்கி செம ரகளை பண்ணுவோம்... அது நெஜமாவே எவர்க்ரீன் மெமரி தான்... இன்னும் அந்த staff ல ஒரு friend ஒரு ஒரு பர்த்டேவும் மறக்காம விஷ் பண்ணும் ஸ்பெஷல் friend ...

இப்போ பர்த்டே is like "yet another day"னு ஆய்டுச்சு...

ஆனா இப்பவும் இந்த நாளை சந்தோச படுத்தற சில விசியங்கள் உண்டு...

முந்தின நாளே கிப்ட் குடுத்து அசத்தற ரங்க்ஸ்... மத்தவங்க சொல்றதுக்கு முன்னாடி first wish ஆ இருக்கனுமாம்... (அடேங்கப்பா எப்படி எல்லாம் யோசிக்கறாங்க...ஹும்... )

காலைல நேரத்துல அப்பா அம்மா போன் பண்ணி "அர்ச்சனை பண்ணினோம் சாமி. ஹாப்பி பர்த்டே. ஸ்வீட் செஞ்சு சாப்டு" னு சொல்றது

பாசமலர் நடு ராத்திரிலயே போன் பண்ணி "தூங்கிட்டயா...ஹாப்பி பர்த்டே... சரி போய் தூங்குடி" னு ரகளை பண்றது

Cousins பட்டாளாம் "வயசாச்சில்ல... இன்னுமா பொறுப்பு வர்ல... நேரத்தோட எந்திரிடி... ஹாப்பி பர்த்டே" னு சொல்றது

ஆயிரம் வேலைகளுக்கு மத்தியிலும் மறக்காம ஈமெயில் பண்ணி வாழ்த்தற friends ....

இதெல்லாம் தான் இன்னும் இந்த நாளை சுவாரஸ்யமாக்குது...

இந்த வருஷம் இன்னும் ஒரு ஸ்பெஷல் இருக்கு...

என்னோட தங்கைக்கு ஏற்கனவே ஒரு குட்டி வாலு இருக்கா...நாலு வயசு ஆச்சு... செம சுட்டி அவ அம்மாவை போலவே... ஆனா ஆச்சு அசல் என்னை மாதிரி இருப்பா பாக்றதுக்கு

என்னோட தங்கை கணவர் கிண்டல் பண்ணுவார் "pregnant ஆ இருக்கறப்ப யாரை அதிகம் நெனைக்கறோமோ அவங்கள மாதிரி புள்ள இருக்கும்னு ஒரு பழைய வழக்கு உண்டு (சும்மா சொல்றது தான்)... நீ உங்க அக்காவ தான் ரெம்ப நெனச்ச போல" னு வம்பு இழுப்பார்

இப்போ என்னோட தங்கை மறுபடியும் அம்மா ஆக போறா... due date என்னோட பர்த்டே சமயம் குடுத்து இருக்காங்க...

pregnancy confirm ஆகி due date சொன்ன நாள்ல இருந்து என்னோட பாசமலர் அடிக்கடி சொல்ற டயலாக் "புவனி... உன்னோட பர்த்டே அன்னிக்கி இருந்தா நல்லா இருக்கும்டி... " . பாப்போம் என்ன ஆகுதுன்னு....
பர்த்டே நினைவுகள் சொல்றேன்னுட்டு பாசமலர் நினைவுகள் சொல்றயானு திட்டுவீங்கன்னு நினைக்கிறேன்

என்ன செய்ய? அவ இல்லாத நினைவுகள் நிகழ்வுகள் எனக்கு ரெம்ப கம்மிங்க...

ஒகேங்க.... மறக்காம ஆசிர்வாதம் பண்ணிட்டு போங்க... இல்லைனா வம்பாயடும் சொல்லிட்டேன்... ஹா ஹா ஹா

அப்படியே மறக்காம இந்த கேக் ஒரு பீஸ் எடுத்துகோங்க... நான் செய்யல.... பொறந்தநாளும் அதுவுமா என்னத்துக்கு கோர்ட் கேஸ்னு... ஹி ஹி ஹி... தைரியமா சாப்பிடலாம்... ஹா ஹா ஹா

(கனடா டேக்கு சேத்து இங்க நாளைல இருந்து நாலு நாள் லீவ்... புது வீட்டுல இன்னும் இண்டர்நெட் இல்ல... அதனால பதிவை கொஞ்சம் முன்னாடியே போடறேன்... பொருத்தருள்க மக்களே... ஹி ஹி ஹி)   

Monday, June 28, 2010

அதே கண்கள்...சஸ்பென்ஸ் த்ரில்லர்... (பகுதி 3)


மேம்பாலம் தாண்டி சாய்பாபா கோவில் சிக்னலில் வண்டி நிற்க வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தாள் சுமேதா

அப்போது.... சிக்னலில் எதிர்புறம் இருந்த வண்டியில் இருந்த ஒரு உருவம் அவள் கண்ணில் பட சிலையானாள்...

தன் முகமாற்றத்தை கணவன் கண்டு கொண்டானோ என அவனறியாமல் அவனை கண்டவள் அவன் சாலையில் கவனம் செலுத்தியதில் நிம்மதியானாள்

சிக்னலின் மறுபுறம் நின்ற உருவம் ஏதோ சைகை காட்ட தலை குனிந்தாள்
_____________________

"சுமி.... வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எங்க காலேஜ் பாத்துட்டு போலாமா?"

"......" குழப்பத்தில் லயித்து இருந்தவள் எதுவும் பேசாமல் இருக்க

"ஏய்... சுமி... என்ன இப்பவே ஊட்டி போயிட்டியா?" என கேலியாய் சிரிக்க

"ம்... இல்ல...."என சிரித்து சமாளித்தாள்

"வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எங்க காலேஜ் பாத்துட்டு போலாமானு கேட்டேன்?"

"ம்....எந்த காலேஜ்?"

"கிழிஞ்சது போ... ரெண்டு மாசமா பேசினது எல்லாம் மறந்து போச்சா மேடம்க்கு"

"இல்ல...அது.... " என பேச இயலாமல் விழிக்க

"சரி விடு... நான் சொன்னது நான் UG பண்ணின கொங்கு நாடு ஆர்ட்ஸ் காலேஜ். அது ஒரு கனா காலம் தான். காலேஜ்ல ஐய்யா தான் ஹீரோ தெரியுமா... பொண்ணுங்க எல்லாம் சுத்தி சுத்தி வருவாங்க தெரியுமா?" என காலர் தூக்கி கண்ணடித்து விசிலடித்து கொண்டே கூற

"ஒரு வேளை இவனுக்கு ஏதேனும் காதல் கதை இருக்குமோ... என் நிலைமை சொன்னால் புரிந்து கொள்வானோ. சொல்வதா வேண்டாமா" என மனதினுள் பட்டிமன்றம் நடத்தினாள் சுமேதா

அவளின் முக மாற்றத்தை அவன் "பொண்ணுங்க எல்லாம் சுத்தி சுத்தி வருவாங்க"னு சொன்னதுக்கான முக மாற்றம் என நினைத்து கொண்ட சூர்யா

"ஏய்... நான் சும்மா உன்னை வம்பு இழுக்கறதுக்காக சொன்னேன். டென்ஷன் ஆய்டியா?" என சமாதானம் செய்தான்

"இல்ல... ஒண்ணுமில்ல" என சுமேதா சமாளித்து "காலேஜ் போலாமே...நீங்க சொன்ன மாதிரி" என்றாள்

"ம்... ஒகே.. " என்றவன் கல்லூரிக்கி முன் பக்கம் இருந்த இடத்தில் காரை பார்க் செய்து விட்டு இறங்க வாட்ச்மேன் எழுந்து வந்தார் "யாரை பாக்கணும் நீங்க?" என்றார் கரகர குரலில்

"இல்லங்க... நான் இங்க தான் படிச்சேன்... அப்போ சுந்தரம் அண்ணன் தான் வாட்ச்மேன்ஆ இருந்தாரு. சும்மா இந்த வழியா வந்தோம்... என்னோட wife க்கு காலேஜ் காட்டலாம்னு வந்தேன்" என சூர்யா உரைக்க

"ஓ... சரிங்க தம்பி... முன்னாடியே நின்னு பாத்துட்டு போங்க... இப்ப university ஆனப்புறம் கொஞ்சம் செக்யூரிட்டி tight " எனவும்

"ஒண்ணும் பிரச்சனை இல்லைங்ண்ணா... இங்கயே நின்னு பாத்துக்கறோம்" என்றான் சூர்யா
 

"சுமி... இந்த மரம் எல்லாம் இருக்கில்ல... இங்க தான் எப்பவும் அரட்டை கச்சேரி நடக்கும். செம ஆட்டம் போடுவோம்" என பழைய நினைவுகளில் கண்கள் பளிச்சிட கூறினான்

அவன் சந்தோசத்தில் தானும் மகிழ்ந்தவள் "ஓ.... அப்போ படிக்கற வேலை எல்லாம் இல்லையா?" என கிண்டல் செய்ய

"ஏய்... " என செல்லமாய் முறைத்தான்

இன்னும் பல கல்லூரி கால சம்பவங்களை சொல்லி கொண்டே வந்தான் சூர்யா

அவனது உற்சாகத்தை கண்ட வாட்ச்மேன் மனம் இறங்கி "தம்பி... வேணா இன்னும் கொஞ்சம் உள்ள வரைக்கும் போங்க... நான் சொல்லிக்கறேன்" என்றார்

"தேங்க்ஸ்ங்ண்ணா..." என ஒரு சல்யூட் வைத்து உள்ளே சென்றான்
 
 
 
 
 "இதான் சுமி மெயின் பில்டிங். ஆபீஸ் எல்லாம் இங்க தான் இருக்கும்" பேசிக்கொண்டே வந்தவனை செல்போன் ஒலி தடை செய்ய

"வீட்டுல இருந்து போன்" என சுமியிடம் கூறியவன்

"ஹலோ" என்றான் பேசியில்

"...."

"வந்துட்டு இருக்கோம்மா... அதுக்குள்ள காலேஜ்ல நிறுத்தினேன்... "

"....."

"இன்னும் பத்து நிமிஷம் தான் வந்துடுவோம்....சரிம்மா" என செல்போனை அணைத்தவன்

"அம்மா கெளம்பி ரெம்ப நேரம் ஆச்சே காணோம்னு டென்ஷன் ஆய்டாங்க போல...சரி சுமி கிளம்பலாம்... இன்னொரு நாள் ரிலாக்ஸ்ஆ வரலாம்" என்றவனை பின் தொடர்ந்தாள் சுமேதா
___________________

"வாம்மா மருமகளே... வலது கால் எடுத்து வெச்சு உள்ள வா" என ஆரத்தி சுற்றி மணமக்களை வரவேற்றாள் சூர்யாவின் அன்னை

"அதான் நேத்திக்கே சுத்தியாச்சே இதெல்லாம்... இப்பவும் சுத்தனுமா ம்மா" என அன்னையை கேலி செய்தான் சூர்யா

"போடா...உனக்கு வேற வேலை இல்ல... என்கிட்ட வம்பு பண்ணிட்டு... மறுவீடு வர்ரப்பவும் ஆரத்தி சுத்தறது தான்... நீ உள்ள வாம்மா" என்றாள் சுமேதாவிடம்

விருந்து முடிந்து சற்று நேரம் உண்ட களைப்பில் இளைப்பாறிய பின் மணமக்கள் தேனிலவுக்கு புறப்பட்டனர்
___________________

மேட்டுப்பாளையம் தாண்டி அழகிய பச்சை நிற வயல்களின் அழகில் எல்லாம் மறந்து உற்சாகமானாள் சுமேதா"வாவ்... ரெம்ப அழகா இருக்குங்க இந்த இடம்"
 
"நீ ஊட்டி போனதில்லையா சுமி"

"கோயம்புத்தூர்ல இருந்துட்டு ஊட்டி போகாம இருப்பாங்களா? இந்த வயல் வெளி ரெம்ப அழகா இருக்கு... பெரும்பாலும் நான் travel ல தூங்கிடுவேன்... தெளிவா பாத்ததில்ல இந்த வழி"

"ஓ....இப்ப என்கூட வர்றதால தெளிவா இருக்கேன்னு சொல்ற...இல்லையா சுமி" என சீண்ட

"நெனப்பு தான் உங்களுக்கு" என அவளும் கேலி பேசினாள்

"ஒகே....இனி ஹில் டிரைவ் ஆரம்பிச்சாச்சு... சீட் பெல்ட் நல்லா போட்டு இருக்கியான்னு பாத்துக்கோ" என்றான் சூர்யா அக்கறையாய்

"ஏன்... அவ்ளோ மோசமாவா ஓட்டுவீங்க" என அவனை ஓட்டினாள் சுமேதா

"நேரம் தான்...." என அவனும் அந்த சீண்டலை ரசித்தான்

"ட்ரைன்ல போனா இன்னும் நல்ல இருக்குமில்ல... அங்க பாருங்க ட்ரெயின் அழகா இருக்கு"


 "ஆமா சுமி...ட்ரைன்ல போனா நல்லாத்தான் இருக்கும்...ஆனா மேல போய் சுத்தறதுக்கு கார் வேணுமே... இன்னொரு வாட்டி ட்ரைன்ல வரலாம் சரியா"

"ம்...."

இப்படியே பேச்சும் சிரிப்புமாய் கடிகார முட்கள் நகர ஊட்டியின் அந்த பிரபலமான ஸ்டார் ஹோட்டல் வந்து சேர்ந்தனர்
 
சட்டென மேகம் கறுக்க சிறிது தூறல் விழ இருட்ட தொடங்கியது வானம்.... பின்னால் வரபோகும் விபரீதத்தை உணர்த்துவது போல்... ஆனால் அவர்கள் இருந்த மனநிலையில் அதை உணரவில்லை
 
அவர்களை கண்டதும் அந்த ஹோட்டல் பணியாள் வந்து பெட்டிகளை வாங்கி கொண்டான் எதுவும் பேசாமல்
 
"தேங்க்ஸ்...." என சூர்யா முறுவலிக்க பதில் பேசாமல் reception அருகில் பெட்டியை கொண்டு வைத்தான் அவன்

அவனது பார்வை ஏனோ உறுத்த சுமேதா சூர்யாவை ஒட்டி நின்றாள்

அதற்குள் reception ஆசாமி "மே ஐ ஹெல்ப் யு சார்?" எனவும்

"ஹாய்... ஒரு டபுள் ரூம் வேணும்" எனவும்

"ரூம்# 13 இருக்கு சார்... நல்ல view இருக்கும்...."

அந்த பெட்டி தூக்கிய பணியாள் திடுக்கிட்டு திரும்பினான்

எதுவும் பேசாதே என்பது போல் அவனுக்கு சைகை காட்டினான் reception ஆசாமி

"ஒகே..." என்றான் சூர்யா

பதிமூணு என்ற எண் ஏனோ சுமேதாவுக்கு உறுத்த

"வேற இருக்கானு கேளுங்க" என்றாள்

"இல்ல மேடம்... எல்லாம் புக் ஆய்டுச்சு... "

"அதனால என்ன சுமி" என மனைவியை சமாதானம் செய்த சூர்யா "அதே குடுங்க" என்றான்

அறை சாவியை பெற்ற பின் சூர்யா பெட்டியை தூக்க முயல receptionist தடுத்து "இருங்க சார் இவன் கொண்டு வந்து தருவான்" எனக் கூற அந்த வேலையாள் மீண்டும் வந்து பெட்டிகளை எடுத்து கொண்டான்

அவனது வெறித்த சிவந்த கண்கள் சுமேதாவிற்கு என்னமோ போல் இருந்தது. அவனை காண்பதை தவிர்த்து கணவனை ஒட்டி நடந்தாள்

அறைக்குள் பெட்டிகளை வைத்தவன் உணர்ச்சியற்ற ஒரு பார்வையை செலுத்தினான் அவர்களை நோக்கி

"இந்தா வெச்சுக்கோ" என சூர்யா பத்து ரூபாய் நோட்டு ஒன்றை தர வேண்டாம் என்பது போல் செய்கை செய்தான்

அவன் சென்றதும் "அவன் பார்வையே சரி இல்ல... நாம வேற ஹோட்டல் போலாமே" என சுமேதா பயத்துடன் கூறினாள்

"ச்சே... ஏம்மா அப்படி சொல்ற...? பாவம் ஊமை போல இருக்கு... பணம் கூட வாங்கிகல பாரு... நல்லவன் தான் போல... பாக்கறதுக்கு கொஞ்சம் முரடன் மாதிரி தோற்றம் அவ்ளோ தான்..."

"இருந்தாலும்...." என சுமேதா ஏதோ சொல்ல வாய் எடுக்க

"சுமி... நமக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் என்னத்துக்கு? நமக்கு வேற முக்கியமான ஆராய்ச்சி எல்லாம் இருக்கே..." என கண்ணடித்து சிரித்தான் அவள் மனதை திசை மற்றும் பொருட்டு....
____________________

அதே நேரம், ஊமையன் போல் இருந்தவன் அந்த receptionist ஆசாமியிடம்

"என்ன சார்? அந்த ரூம் வாடகைக்கி விட்டுடீங்க.... முதலாளிக்கு தெரியுமா?"

"நீ சும்மா இரு மாரிமுத்து. முதலாளிக்கி தெரியாது.... இதுக ஏதோ வெளியூர் பார்ட்டி போல இருக்கு.... இங்க நடக்கற விசயம் எல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.... இநத வாடகை கணக்குல காட்டாம நாம பங்கு போட்டுக்கலாம்... என்ன சொல்ற?" என நயமாய் பேச

"நீங்க சொல்றப்ப கேக்க நல்லாத்தான் இருக்கு.... ஆனா ...." என இழுக்க

"ஒண்ணும் ஆகாது... நீ சும்மா இரு..." என பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்
_______________________

அதே நேரம்..... இரு கண்கள் அந்த ஹோட்டல் வாசலில் நின்று வெறித்து பார்த்து கொண்டு இருந்தது....

அதே கண்கள்........

அடுத்த பகுதி - பகுதி 4 படிக்க - இங்கே கிளிக்கவும்


தொடரும்....

Thursday, June 24, 2010

அதிருதே.... நகருதே..... Table Chair தானே.....

நேத்து என்னங்க தேதி..... ஜூன் 23 ஆ? ஹுஹும்.... இனிமே வருசா வருஷம் இந்த நாளை ஜூன் 23 னு சொல்ல மாட்டேன்.... கருப்பு தினம்னு தான் சொல்லுவேன்

ஆஹா... ஆரம்பிச்சுட்டியானு திட்டதீங்கப்பா.... நானே ரெம்ப பயந்து போய் இருக்கேன்

ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்.... என்னோட போன பதிவு "ஈ அடிச்சான் காப்பி" படிச்சுட்டு எல்லாரும் கன்னா பின்னானு திட்டுநீங்களா.... உண்மைய சொல்லணும்

எனக்கு என்னமோ அதோட எபக்ட் தான் நேத்து என்னை பழி வாங்கிருச்சுன்னு தோணுது.... ஹும்....

(செஞ்ச பாவம் சும்மாவா விடும் - mindvoice )

நேத்து என்ன நடந்ததுன்னு சொல்றதுக்கு முன்னாடி இங்க இருக்கற நிலவரம் மொதல்ல சொல்லிடறேன்... அப்போ தான் பின்னாடி சொல்றது தெளிவா புரியும்

(புரிஞ்சுட்டாலும்..... - mindvoice )

இங்க Toronto ல G20 Summit நடக்குது.... நம்ம மன்மோகன் சிங்க் எல்லாம் கூட வர்றாருன்னு கேள்விபட்டேன்... எங்க ஆபீஸ் செக்யூரிட்டி பெரிமீட்டர்குள்ள வருது... அதனால போன வாரமே எங்க ஆபீஸ்ல எல்லாருக்கும் ஈமெயில் வந்தது... இந்த வாரம் வியாழன் வெள்ளி work from home .... புதன் கிழமையே செக்யூரிட்டி tight ஆ தான் இருக்கும்.... எப்பவும் ID வெச்சு இருக்கணும்... எப்ப வேணா போலீஸ் யாரை வேணா செக் பண்ணுவாங்கன்னு எல்லாம் சொல்லி இருந்தாங்க.... நாங்க பாக்காத செக்யூரிட்டிஆ போங்கப்பானு நானும் assault ஆ டயலாக் விட்டுட்டு இருந்தேன்

(terrorist மாதிரியே பேசு - mindvoice )

சரி இனி மேட்டர்க்கு போவோம்... (இன்னும் போலயா நீ - mindvoice )

நேத்து எந்த ராகு காலத்துல வீட்டுல இருந்து கிளம்பினேனோ தெரியல.... சோதனை மேல் சோதனை

ட்ரெயின்ல பாதி தூரம் போயிட்டு இருக்கறப்பவே ஒரு announcement பண்ணினாங்க ட்ரெயின்ல... அது என்னன்னா நான் எறங்க வேண்டிய ஸ்டாப்க்கு ரெண்டு ஸ்டாப் முன்னாடி ஆரம்பிச்சு நான் எறங்க வேண்டிய ஸ்டாப்க்கு ரெண்டு ஸ்டாப் தள்ளி இருக்கற ஸ்டாப் வரைக்கும் ட்ரெயின் நோ சர்வீஸ்

கொழப்பறேனா? இது எலெக்ட்ரிக் ட்ரெயின்ங்க... எந்த ஸ்டாப் ஓட வேணும்னாலும் ஸ்டாப் பண்ணி அப்படியே திருப்பிடுவாங்க... அப்புறம் பிரச்சனை இல்லாத ஸ்டேஷன்ல இருந்து ஒரு ட்ரெயின் ஸ்டார்ட் ஆகும்.. நடுவுல மட்டும் சர்வீஸ் நஹி....

என்னையா பிரச்சனைன்னு கேட்டா "யாரோ ட்ரெயின் ஸ்டேஷன்ல ஒரு suitcase வெச்சுட்டு போய்ட்டாங்களாம். இந்த G20 செக்யூரிட்டி அலப்பறைல அதுல bomb இருக்குமோனு சந்தேக பட்ரதால போலீஸ் investigation நடக்குதாம்"என்ன கொடுமை சார் இது? அப்புறம் அந்த மக்கள் வெள்ளத்துல நீந்தி ஸ்டேஷன் விட்டு வெளிய வந்து பஸ் எடுத்து... அப்புறம் ஒரு tram எடுத்து ஒரு வழியா பத்து மணிக்கி ஆபீஸ் போனேன்

அங்க போனா ஆபீஸ் பில்டிங் வாசல்ல "பீம் பாய் பீம் பாய் அந்த ஆறு லட்சத்த" ல வர்ற பீம் பாய் மாதிரியே நாலு பேரு நிக்கறாங்க

"ஐயோ.... நான் எந்த தப்பும் பண்ணலைங்ண்ணா..."னு சொல்றமாதிரி என் பேருக்கு ஏத்த மாதிரி அப்பாவியா மூஞ்சிய வெச்சுட்டு நானும் போனேன்

ID கார்டு, access கார்டு எல்லாம் வாங்கி பாத்துட்டு "போலாம்"னு கதவை தெறந்து விட்டார் அந்த பீம் பாய் அண்ணாநானும் ஆபீஸ்ல போய் ரெம்ப அலப்பறையா அதை சொல்ல "அட உனக்கு மட்டும் இல்ல.... இன்னிக்கி உள்ள வர்ற எல்லாருக்குமே அப்படி தான்" னு சொல்லி பொங்குன பாலுல தண்ணிய ஊத்தின மாதிரி என்னை ஆப் பண்ணிடாங்க

அப்பாடா முடிஞ்சதுனு பெரு மூச்சு விடறீங்களோ.... நானும் அப்படி தாங்க நெனச்சேன்.... அந்த விபரீதம் நடக்கறதுக்கு முன்னாடி வரைக்கும்.... (என்னடா இன்னும் டயலாக் காணோமேனு பாத்தேன் - mindvoice )

நான் நேத்து லஞ்ச் எடுத்துட்டு போகல.... சரி வெளிய போய் வாங்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்ப என்னோட ரூம் வாசல்ல நிழலாடுச்சு.... I mean ஒரு பொண்ணு.... (ஐயோ ஐயோ - mindvoice )

"வாட் Erica ?" னேன்

"Did you feel something?" னா அவ

நான் "எனக்கு 1008 பீலிங் இருக்கு அதை பத்தி என்ன.... எனக்கு என்னோட இட்லி பிரச்சனய நெனச்சா கூட பீலிங் தான்... நீ தீத்து வெப்பியா"னு மனசுக்குள்ள நெனச்சுட்டு... பின்ன இதெல்லாம் அவ கிட்ட சொல்ல முடியுமா சொன்னாலும் உங்கள மாதிரி புரிஞ்சுப்பாளா என்ன? ஹும்.... (ஐஸ் பாக்டரியே தூக்கி வெச்சாச்சு - mindvoice )

நான் இதெல்லாம் யோசிச்சுட்டு பேசாம இருக்கவும் மறுபடியும் "Did you feel something?" னா அவ

"what feel ?"னு நான் நக்கலா சிரிச்சேன் (சின்ன பொண்ணு தான்... நல்லா காமெடி பண்ணுவோம் எல்லாரும் அவளை வெச்சு....அவளும் பெருசா எடுத்துக்க மாட்டா...)

"I felt like the whole building is shaking" னு சொன்னா அவ

நான் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு ஒரு காரணம் இருக்கு...சொல்றேன் சொல்றேன்... அந்த பொண்ணு wine shop யே ஒரே வாய்ல முழுங்கரவங்கறது ஆபீஸ் அறிந்த ரகசியம்

அதனால நான் கேட்டேன் "what? Day-time only you started?" னு கிண்டலா கேட்டேன்

அப்படி கேட்டது தான் தெரியும்.... அதுக்கப்புறம் ஒரு பத்து செகண்ட் என்ன நடந்ததுன்னே எனக்கு தெரியலங்க.... பயத்துல ஒறைஞ்சி போயிட்டேன்....

பின்ன.... டேபிள்ல இருக்கறதெல்லாம் நகருது... நான் உக்காந்திருந்த chair முன்னாடி பின்னாடி நகருது... ஒண்ணும் புரியல... எல்லாரும் அவங்க அவங்க ஆபீஸ் ரூம் விட்டு வெளிய வந்து ஹால்ல நின்னுட்டோம்....

"is that an earthquake?" னு ஒருத்தர் ஆரம்பிச்சார்

எனக்கு நிக்கவே முடியல.... கை கால் எல்லாம் நடுங்குது...

இன்னொருத்தர் "it could be a bomb. anything could happen due to G20 issues"னார்

அடபாவிங்களா... ஏன் இப்படி ஆள் ஆளுக்கு கொல்றீங்கன்னு யோசிச்சுட்டு இருக்கறப்பவே எங்க firemarshall (ஆபீஸ் staff லையே ஒருதர்ருக்கு வேண்டிய ட்ரைனிங் குடுத்து firemarshall னு வெச்சு இருப்பாங்க இங்க) வந்து

"everybody vacate vacate" னு கத்தினார்

மொதல் ஆளா பாஞ்சு போய் elevator பக்கத்துல நின்னேன்

பின்னாடியே வந்த firemarshall "no one is allowed to take elevator as per fire regulations. you need to take the stairs" னு சொன்னார்

அடகொடுமையே.... பத்து மாடி எறங்கறதுகுள்ளையே பாதி உயிர் போய்டுமே.... அப்புறம் நிலநடுக்கம் வந்தா என்ன வராட்டி என்ன? னு நொந்து போய் வேற வழி இல்லாம எறங்க ஆரம்பிச்சோம்

நெஜமா சொல்றேங்க.... வாழ்க்கைல அத்தனை வேகமா நான் படி ஏறங்கினது இல்ல... சொன்னா நம்ப மாடீங்க அஞ்சே நிமிசத்துல பத்து மாடி இறங்கினோம்

இந்த கொடுமைல டைம் எல்லாம் பாத்தியான்னு கேக்காதீங்க... நான் எங்க பாத்தேன்.. எனக்கு படிய பாத்து ஏறங்கறதே பெரிய பாடா போச்சு... எங்க firemarshall தான் சொன்னார் "good.... we made it in 5 minutes" அப்படின்னு

கீழ வந்து பாத்தா ஒரே ஜன கடலா இருக்கு... போதா கொறைக்கு G20 நடத்த கூடாதுன்னு போராட்டம் பண்றதுக்கு ஒரு கூட்டம்... அவங்கள கண்ட்ரோல் பண்றதுக்கு ஒரு நூறு போலீஸ்... என்னமோ warzone குள்ள போன எபக்ட்

கொஞ்ச நேரத்துல..... அது earthquake தான்... ஆன பெருசா இல்ல... மேல (ஆபீஸ்) போலாம்னு சொன்னாங்க

"மேலேயே மொத்தமா போய்டுவோமோ"னு பயந்து போய் இருக்கற என்கிட்ட மேல போலாம்னு சொன்னா எப்படி இருக்கும், அழுகை வராதா கொறை தான்

அப்புறம் ரெம்ப நேரம் கழிச்சு எல்லாரும் போனப்புறம்.... கை கால் நடுக்கம் எல்லாம் சரி ஆனப்புறம் நானும் போனேன்

ரங்க்ஸ்க்கு போன் பண்ணி ஒரு பாட்டம் அழுது முடிச்சப்புறம் ... "என்னது earthquake ஆ?" அப்படின்னு கிண்டலா கேட்டார்..... எனக்கு எப்படி இருந்து இருக்கும்... அப்புறம் தான் தெரிஞ்சுது ரெம்ப சின்ன quake ங்கறதால ground floor ல இருந்தவங்களுக்கு எல்லாம் ஒண்ணுமே எபக்ட் தெரியலயாம்

என்ன கொடுமை சார் இது?

வர்ற சனிக்கிழமை தான் வீட்டுல இருந்து அபார்ட்மென்ட் move பண்றோம் அதுவும் பதினேழாவது மாடினு வேற நேரம் காலம் இல்லாம ஞாபகம் வந்து தொலஞ்சது....ஆஹா.... நல்ல நேரம் தான் போங்க

அப்புறம் எப்படியோ சாயங்காலம் ட்ரெயின் பிரச்சனை எதுவும் இல்லாம வந்தது.... ஆனா.... விதின்னு ஒண்ணு இருக்கே.... ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா......

ட்ரெயின் ஸ்டேஷன்ல எப்பவும் ரங்க்ஸ் பிக் பண்ற எடத்துல வந்து வெயிட் பண்றேன் வெயிட் பண்றேன் வெயிட் பண்றேன்... ஆளே காணோம்.... எனக்கு என்ன என்னமோ விபரீதமா எல்லாம் கற்பனை.... செம டென்ஷன்

செல்போன் அடிச்சு அடிச்சு நொந்து போயிட்டேன்... ஒரு வழியா போன் எடுத்தார்... "G20 க்காக highway க்ளோஸ் பண்ணிட்டான் சுத்திட்டு வர்றேன்...." னு சொன்னார்

ம்.... க்ளோஸ் பண்றது பண்ணி தொலைக்கட்டும் மொதலே சொல்ல வேண்டியது தானே....னு கோபமா வந்தது

இந்த G20 Z20 எல்லாம் மக்கள் அதிகம் இல்லாத நார்த்ல எங்கயாச்சும் வெக்கலாமேனு தோணுச்சு... நான் சொல்றத யாரு கேக்க போறா.... ரங்க்ஸ்ஏ கேக்க மாட்டார்... இதுல Steven Harper எங்க கேக்க போறார்... அவர் யாரா? கனடாவோட பிரதமர்.....

இப்ப சொல்லுங்க... நான் கருப்பு தினம்னு சொன்னது தப்பா....???????

ஆன ஒண்ணுங்க "உயிர் பயம்னா என்னனு என்னிக்கி உணர்ந்துடேங்க... அந்த நிமிஷம் என் மனசுல தோணினது .......ஐயோ....ரங்க்ஸ் என்ன பண்ணுவார்? ஐயோ... கடைசியா ஒரு வாட்டி ஊருக்கு போய் எல்லாரையும் பாத்துட்டு வந்து இருக்கலாமே...? இதான்.... வாழ்க்கை ரெம்ப குறுகியது அதுக்குள்ள எதுக்கு இந்த சண்டை தேடல் ஓட்டம் எல்லாம்னு தோணுச்சு...."

ரெம்ப தத்துவம் பேசறேனோ.... சரி விடுங்க....

ஆபீஸ் போனப்புறம் அந்த Erica என்கிட்ட வந்து "what did you say? Am I drunk?"அப்படின்னு மொறச்சா.... நான் வழக்கம் போல ஹி ஹி ஹி னு சிரிச்சு சமாளிச்சேன்

அதுக்கு முன்னாடியே லேசா ஆடி இருக்கு... அது எனக்கு தெரியலையா.... இல்ல என்னை அசைக்கற அளவுக்கு அது ஆடலயானு இன்னும் புரியல....

அதுக்கப்புறம் வெளிய போய் லஞ்ச் வாங்க கூட தோணல.... கொலை பட்டினி.... கொடுமை தான் போங்க
ஓ.... இன்னிக்கி work from home ஆச்சே... மறந்தே போயிட்டேன்... போய் கொஞ்சமாச்சும் வொர்க் பண்றேன்...

bye bye ...

பின் குறிப்பு:
இந்த எதிர்பாராத நிகழ்வுகளால் "அதே கண்கள்...." தொடர் கதை சற்று தாமதமாக வெளி வரும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்... நன்றி நன்றி நன்றி....

Monday, June 21, 2010

ஈ அடிச்சான் காப்பி...
 மேல போட்டோஸ் பாத்துட்டு ரெம்ப டென்ஷன் ஆகிட்டீங்களோ... ஹி ஹி ஹி...கூல்.... கூல்...

தலைப்ப பாத்துட்டு... "இவ என்ன பிராடுத்தனம் பண்ணினா"ன்னு ஆவலாக பார்க்க வந்துள்ள இனிய தமிழ் மக்களே.... எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே.... (அரசியல்ல கிரசியல்ல குதிச்சுட்டாளோ ஓவர் நைட்ல... நடந்தாலும் ஆச்சிர்யமில்ல... இப்பவெல்லாம் அதானே பேஷன் - mindvoice )

ஹி ஹி ஹி.... நீங்க நெனைக்கற மாதிரி இங்க ஒண்ணும் என்னை வம்பிழுக்க மேட்டர் தேறாது... (நாங்களும் உசாராய்ட்டமல்ல....ஹா ஹா அஹ)

சரி சரி... அதுக்காக கோவிச்சுட்டு போகாதீங்க... இருங்க வேற ஒரு சுவாரஸ்யமான மேட்டர் இருக்கு

ஆனா ஒண்ணு.... இதை படிச்சுட்டு..............

"வேற பொழப்பே இல்லையா"

"வெட்டி ஆபிசர்னு தெரியுது"

"இதுவும் ஒரு பொழப்பு"

"இப்படியுமா போஸ்ட் தேத்தனும்....(sensored )"

"வேண்டாம்... எதாச்சும் சொல்லிருவேன்"

"நல்லாதானே இருந்த"

"காலைல உன்னோட இட்லி சாப்டியோ"

இன்னும் இது போன்ற என்னோட இமேஜை குலைக்கும் கருத்துகளுக்கு அனுமதி லேது....

அதையும் மீறி போட்டால்... அப்புறம் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.... (வேற என்ன? இட்லி பார்சல் வரும்... ஒகேவா....?)

(பில்ட் அப் போதும் சொல்லித்தொலை - mindvoice )

என்கிட்ட ஒரு கெட்ட பழக்கமுங்க (ஒண்ணு தானா - mindvoice )

அது என்னனா... யாரையாச்சும் புதுசா மீட் பண்ணினா இவங்க நாம இதுவரைக்கும் மீட் பண்ணின யார் மாதிரியாச்சும் இருக்காங்களான்னு ஆராய்ச்சி பண்ணிட்டே இருப்பேன்... இதுக்கு மீடியா ஸ்டார்கள் கூட விதி விலக்கு இல்ல

இப்படி தான் கொஞ்ச நாளைக்கி முன்னாடி நாங்க ஒரு இங்கிலீஷ் படம் பாத்துட்டு இருந்தோம்...(pearl harbour னு ஞாபகம்...not very sure though )

அதுல Alec Baldwin னு ஒரு நடிகர், சொன்னா நம்ப மாடீங்கன்னு தெரியும்... அதான் இங்க போட்டோ போட்டு இருக்கேன்... அப்படியே அசப்புல நம்ம பழைய நடிகர் "ஜெய்சங்கர்" மாதிரியே இல்ல...

உலகத்துல ஏழு பேரு ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்லுவாங்க... ரெண்டு பேரை நான் கண்டுபிடிச்சுட்டேன்.... மிச்சம் அஞ்சு பேரை உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.... 
 
Alec Baldwin                Jaisankar  

எனக்கு உடனே இதை யாராச்சும்கிட்ட சொல்லலைனா மண்டை வெடிச்சுடும்னு தோண கிண்டல் அடிப்பார்னு தெரிஞ்சே ரங்க்ஸ் கிட்ட சொன்னேன் "படத்த பாக்க சொன்னா என்ன ஆராய்ச்சியோ...  கஷ்டம் கஷ்டம்" னு தலைல அடிச்சுட்டாலும்

"நீ சொன்னப்புறம் எனக்கும் கூட அப்படி தான் தோணுது" அவரே ஒத்துகிட்டார் (இது தான் சேருவார் சேர்க்கையோ...என்னமோ போங்க) 

இந்த மாதிரியான ஸ்பெஷல் observation பவர் பத்தி எல்லாம் எப்போ தான் புரிஞ்சுக்க போகுதோ இந்த உலகம்... சரி விடுங்க...

இதே போல இன்னும் ஒண்ணு ரெண்டு வெச்சு இருக்கேன்... ஆனா ஒரு நாளைக்கி ஒரு அளவுக்கு மேல அடி தாங்கமாட்டா இந்த தங்கமணி.... so அது கொஞ்ச நாள் கழிச்சு காயம் எல்லாம் ஆறினப்புறம்  பார்ட் 2 வா போடறேன்... வர்ட்டா..... (வராத...தொல - mindvoice அழுதுகொண்டே....)

Reminder : இமேஜ்-கமெண்ட்-விபரீதம்-இட்லி-ஒகே......ஒகே
(ஹி ஹி ஹி... ஜேம்ஸ் பாண்ட் படத்துல எல்லாம் இப்படி தான் hint language ல பேசிப்பாங்களாம்... தெரிஞ்சவங்க சொன்னாங்க...)
 
Tata.... bye bye.... see you...................

Saturday, June 19, 2010

என்னோட ஹீரோ....


நாளைக்கி அப்பாக்கள் தினம்... ஒரு சிறப்பு பதிவு போடலாம்னு ஆசை.... அதான் இங்க...

"இந்த ஒரு நாள் தான் அப்பாவை நினைக்கணுமா?"னு நீங்க கேக்கலாம். அப்பாவை எல்லாம் எப்படிங்க ஒரு நாளாச்சும் மறக்கறது, மறந்தா தானே நெனைக்க....

இந்த நாள் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல்ஆ அப்பாவை மட்டும் நெனைக்கறதுக்கான நாள்னு எனக்கு தோணுது

என்னடா இவ "என்னோட ஹீரோ..." னு டாபிக் வெச்சுட்டு என்ன என்னமோ சொல்றான்னு யோசிக்கரீங்களோ.... பொதுவா சொல்லுவாங்க பெண் குழந்தை இல்லாத வீட்டுல அந்த அம்மாதான் ஹீரோயின்னு அதே போல ஆண் பிள்ளைகள் இல்லாத வீட்டுல அப்பா தான் ever - lasting ஹீரோ

எங்க வீட்டுல அதே கதை தான்... அப்பா தான் எங்களுக்கு ஹீரோ... அப்பா சொல்றதுக்கு மீறி எது செஞ்சாலும் சரி வராதோன்னு ஒரு knot மனசுல சின்னதுலையே விழுந்துடுச்சு என்னையும் அறியாம

அதே போல எதாச்சும் விசியத்த அப்பா (அம்மாவும் தான்) கிட்ட மறைக்க வேண்டி வந்தா அது சரியானதில்லைனும் நாம் போற பாதை தப்புன்னும் பதிஞ்சு போச்சு...

இன்னைக்கு அது அப்படியே ரங்க்ஸ் கிட்ட தொடருது... தாய்க்கு பின் தாரம்னா... அப்பாவுக்கு பின் அவர் தானே... (ரெம்ப பேசறனோ...)

எங்க அப்பா - எல்லா அப்பாக்கள் போலவும் ஸ்பெஷல் அப்பா தான். அவங்க அவங்க அப்பா அவங்க அவங்களுக்கு ஸ்பெஷல் தானே

நான் பிறந்து அப்புறம் என் தங்கையும் பிறந்தப்ப எங்க அப்பாவை பாத்து சிலர் சொன்ன கமெண்ட் "ஆஹா... கஞ்சனுக்கு பொண்ணு பொறந்துருக்கு....அதுவும் ரெண்டும் பொண்ணு"

அதுக்கு எங்க அப்பா சொன்ன பதில் "கஞ்சனுக்கு தான் பொண்ணு பொறக்கணும்....ஊதாரிக்கி பொறந்தா எப்படி கரை சேக்கறது". என்ன ஒரு சூப்பர் பஞ்ச் டயலாக் இல்லிங்க. இதை எங்க அம்மா அடிக்கடி பெருமையா சொல்லுவாங்க

எனக்கு நினைவு தெரிஞ்சு ஒரு நாள் கூட என்னை அடிச்சதில்ல. ஆனா எக்க சக்கமா கோவம் வரும். கன்னா பின்னானு திட்டிட்டு ரெண்டு நாள் பேச மாட்டார்... அப்பறம் எங்க அம்மா மூலமா தூது வரும்

எனக்கு எங்க அம்மா எவ்ளோ திட்டினாலும் "உப்..."னு ஊதிட்டு போய்டுவேன்.... ஆனா அப்பானா டென்ஷன் தான்.... அது ஏன்னு இப்ப வரைக்கும் புரியல

நாங்க ஹை ஸ்கூல் எல்லாம் போற வரை நாங்க என்ன க்ளாஸ் படிக்கறோம்னு கூட எங்க அப்பாவுக்கு சரியா தெரியாது. எப்பவும் பிசினஸ் / வேலை இதே தான்

வேலைய விடவும் பயம், அதனால evening ஷிப்ட் வேலை பகல்ல பிசினஸ்னு ரெட்டை குதிரை சவாரி... பிசினஸ் நல்லா settle ஆன வரை இப்படி தான்....இப்போ நெனச்சா அந்த கஷ்டம் என்னன்னு புரியுது... அப்ப புரியல

தாத்தாவுக்கு பஞ்சு வியாபாரம் தான்.... அதே தான் அப்பாவும் + textile கம்பெனில வேலை. அப்புறம் நான் பிறந்தப்புறம் textile கம்பெனி ஆரம்பிச்சு ... கொஞ்சம் விவசாயம் கூட நான் ரெம்ப சின்னதுல இருந்ததா ஞாபகம்... எட்டாவது வரைக்கும் தான் படிப்பு... ஆனா உலக ஞானம் எக்க சக்கம்....

நான் எங்க அப்பாவை வா போ னு தான் சொல்லுவேன். வாங்க போங்கனு பேசினா யாரோ third - person மாதிரி தோணும்.... அப்பாவும் அதேயே ரசிச்சதால இப்பவும் அப்படி தான்

எக்க சக்கமா செல்லமும் குடுப்பார்... கண்டிப்புன்னு ஆரம்பிச்சா அவ்ளோ தான்

எல்லா அப்பா போலவே எங்க அப்பாவும் ஓவர்-protective தான்.... சாயங்காலம் கம்ப்யூட்டர் க்ளாஸ்ல பத்து நிமிஷம் லேட் ஆனா... கம்ப்யூட்டர் சென்ட்டர் முன்னாடி அப்பா பைக் சத்தம் கேக்கும்

ஆனா அந்த வயசுல அதை அக்கறை / பாசம் / protectiveness னு எடுத்துக்க தோணல

"என் மேல உனக்கு சந்தேகமா... நம்பிக்கை இல்லையா.... நான் என்ன கொழந்தையா" னு வார்த்தையால வதைச்சு இருக்கேன்

ஆனா அதையும் வளந்த குழந்தையோட மழலையா தான் எல்லா அப்பாக்களும் எடுத்துப்பாங்க போல, எங்க அப்பாவும் அப்படியே

தான் படிக்கலைனாலும் எங்களை நல்லா படிக்கவெக்கனும்னு ரெம்ப ஆசை.... நாங்க ஒரு ஒரு படி மேல போறப்பவும் அவர் முகத்துல மத்தவங்க முன்னாடி தெரியிற பெருமிதத்துகாகவே இன்னும் சாதிக்கணும்னு தோணும்...

அவர் ஆசைப்படியே எங்க ஊர்லையே ஒரு காலேஜ்ல lecturer ஆனேன்...எனக்கும் டீச்சிங் தான் இஷ்டமா இருந்தது ... ஆஹா... நான் மொதல் நாள் வேலைக்கி போன  அன்னிக்கி பாக்கணுமே அவர் முகத்த... சான்சே இல்லிங்க....

"இவ எல்லாம் பெரிய மேடம் ஆய்ட்டா... இனி நம்மள எங்க கண்டுக்க போறா" னு எங்க மாமாகிட்ட கிண்டல் பண்ற மாதிரி பெருமையா சொன்னாரு... இப்போ நெனைக்கரப்ப கூட சந்தோசமா இருக்கு அந்த உணர்வு

என்னோட கல்யாணதன்னைக்கி "தாரை வார்த்து குடுக்கரப்ப" எங்க அப்பா அழுதது வீடியோல அப்படியே இருக்கும். அதை பாக்குறப்ப எல்லாம் நான் ஓவர் சென்டியாயிடுவேன்

அதுக்கு என்னோட தங்கை சொல்ற கமெண்ட் "அது ஒண்ணுமில்லடி... அப்பாடானு சந்தோசத்துல ஆனந்த கண்ணீர்" னு கலாய்ப்பா

அதுக்கு மேல இருக்கும் ரங்க்ஸ் சொல்ற விளக்கம் "நல்லா பாரு... அவர் நம்ம கல்யாணத்துல என்னை பாத்து அழற மாதிரி தான் எனக்கு தோணுது....ஐயோ பாவம் சிக்கிட்டான்"னு வம்பு பண்ணுவார்

இப்பவும் நான் ஒரு ஒரு முறை ஊருக்கு லீவுக்கு போயிட்டு கிளம்பறப்ப airport ல நான் அப்பா முகத்த நேருக்கு நேரா பாக்கவே மாட்டேன். அம்மா அந்த வகைல கொஞ்சம் தைரியம் பண்ணிக்குவாங்க. அப்பா செம sensitive என்னை போலவே

ஹா ஹா ஹா... மாத்தி சொல்றேன்... அப்பாவ போலவே நான் ரெம்ப sensitive

ரெண்டு வருஷம் ஆச்சு அப்பாவ பாத்து... வாரத்துக்கு ரெண்டு தரம் போன் பேசினாலும் எப்போ பாப்போம்னு இருக்கு.... தங்கையும் நானும் turn வெச்சுட்டு வேற வேற நாள் பேசுவோம்... தினமும் ஒருத்தராச்சும் பேசற மாதிரி இருந்தா நல்லா இருக்குமேன்னு...

புதன் காலை சனிக்கிழமை காலை போன் பக்கத்துலையே உக்காந்துட்டு இருப்பார்... போன் அடிச்சதும் "ஹலோ" கூட சொல்ல மாட்டார் "சாமி நல்லா இருக்கியா?" னு தான் ஆரம்பிப்பார். நானாத்தான் இருக்கும்னு ஒரு நம்பிக்கை

அதாங்க நமக்கான ஆதாரம். ரங்க்ஸ் சொல்லுவார்  "நம்ம அப்பா அம்மா இருக்கற வரை தான் நமக்கு  இந்த உணர்வு சாத்தியம். அவங்க தான் நம்மள எப்பவும் குழந்தையா பெருமிதமா பாப்பாங்க. அப்புறம் எத்தனை பேரு இருந்தாலும் அது வேற தான்"

ஒரு வாசகம்னாலும் திருவாசகம் தான் இது

அக்டோபர்ல ஊருக்கு  போவோம்னு நெனைக்கிறேன்... count-down ஸ்டார்ட் ஆய்டுச்சு இப்போவே அங்கயும் இங்கயும்...

எங்க அப்பாவ பத்தி பேசினா பேசிட்டே இருப்பேன்... உங்களுக்கு தான் போர் அடிக்கும்...

"அபியும் நானும்" படம் பாத்துட்டு ஓவரா கொசுவத்தி சுத்தி அப்பா புராணம் பாடி ரங்க்ஸ் அன்னிக்கி நொந்துட்டார்... (இப்ப நாங்களும் தான்னு சொல்றீங்களா....)

சரிங்க.... அப்புறம் பாப்போம்...

பிஞ்சுபாதம் கொஞ்சி
பிறவிப்பயன நீஅடஞ்ச
நடக்கநீதான் கத்துகுடுத்த
நாலும்மேலும் சொல்லிதந்த!

காலுரெண்டு தான்மொளச்சு
கைய பிச்சுகிட்டுஓடினப்ப
பிரிவுக்கு ஒத்திகைனு
பதறித்தான் போனநீயும்!

பேசினஎன் ஆங்கிலத்த
புரியாமையும் நீரசிச்ச
அன்புக்கு மொழியேது
அப்போநான் அறியலியே!

நாட்டுநடப்பும் வீட்டுநடப்பும்
நல்லதும் கெட்டதும்கூட
தெரியணுமுன்னு சொல்லித்தந்த
தங்கமாத்தான் என்னவளத்த!

இத்தனையும் செஞ்சநீ
இதமட்டும் ஏன்மறந்த
உன்னபிரிஞ்சு வாழத்தான்
உரியபக்குவம் சொல்லலியே!

சீக்கரம் வந்துசேந்துடுவேன்
சிரிச்சுதான் இருப்போம்நாமும்
அந்தநாள் கனவுலதான்
அனுதினமும் கண்முழிப்பேன்!!! 

உலகின் எல்லா அப்பாக்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்... Happy Fathers day..................

Thursday, June 17, 2010

முப்பெரும் விருது...

முப்பெரும் விழா தெரியும் முப்பெரும் தேவியர் கூட தெரியும், அது என்னம்மா முப்பெரும் விருதுன்னு கேக்கறீங்களா? சொல்றேன் சொல்றேன்...

மூணு பெரியவங்க எனக்கு விருது குடுத்து இருக்காங்க, அதான் முப்பெரும்  விருது, மனசிலாயோ...? பெரியவங்கன்னு சொன்னதும் "ஹலோ என்னோட birth certificate பாரு"ன்னு சண்டைக்கு வந்துடாதீங்கப்பா

தனக்கு கெடைச்சத மத்தவங்களுக்கு பகிர்ந்து குடுக்கற பெரிய மனசுகாரங்கன்னு சொல்லத்தான் அப்படி சொன்னேன்.... ஒகே வா (மொக்கை போதுமாத்தா.. விசியத்த சொல்லு - mindvoice )

விருதுகளை பத்தி சொல்றதுக்கு முன்னாடி ஒரு விளக்கம் சொல்லணும் (ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா....முடியல - mindvoice )

விளக்கம்

போன வாரம் என்னோட "பேரு வெச்ச புராணத்தை" பதிவா போட்டேன் இல்லையா. அதை படிச்சுட்டு "சேலத்துல புவனேஸ்வரி அம்மன் கோவிலா? அது எங்க இருக்கு?" னு சிலர் கேட்டு இருந்தாங்க

எனக்கும் அது நிச்சியமா தெரியாதால எனக்கு பேரு வெச்ச எங்க மாமாவுக்கே போன் பண்ணி கேட்டேன். அவர் சொன்னது....

"சேலத்துல இருந்து ஆத்தூர் போற வழில ஏழாவது மைல்ல ஸ்கந்தாஸ்ரமம் இருக்கு. அதுல புவனேஸ்வரி மாதாவை பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க. மூலக்கோவில் புதுக்கோட்டைல இருக்கு"

ஒகே விளக்கம் ஓவர்... இனி விருது....விருது கெடச்ச தேதி வாரியா சொல்லிடறேன்...

முதல் விருது - "யாவரும் நலம்" சுசி அவர்கள் கிட்ட இருந்து

மே 30 ந்தேதியே சுசி இந்த விருதை குடுத்தாங்க. அப்பவே ஒரு பதிவு போட்டு நன்றி சொல்லணும்னு நெனச்சேன்

"ஒரு ஒரு விருதுக்கும் ஒரு பதிவை போட்டு பதிவு எண்ணிக்கைய கூட்டுறையா"னு நாளைக்கு நாக்கு மேல பல்லு இல்லேன்னா பல்லு மேல நாக்கு போட்டு நாலு பேரு மூணு விதமா (எப்பவும் நாலு விதமானு சொல்லி போர் அடிக்குது...அதான் ஒரு change க்கு... ஹி ஹி ஹி) பேசிற கூடாது பாருங்க (இதுக்கு என்ன அர்த்தம்னு இப்ப வரைக்கும் தெரியாது... எல்லாரும் சொல்றாங்கன்னு நானும் சொல்றேன்...So விளக்கம் எல்லாம் யாரும் கேக்க கூடாது....)

அதனால் தான் போடல... எதாச்சும் சின்ன பதிவா போடறப்ப அதோட சேத்து சொல்லிடலாம்னு நெனச்சேன்... நானாவது சின்ன பதிவாவது... ஹும்...  நமக்கும் அதுக்கும் ரெம்ப தூரம் தான் போங்க

இதோ, இந்த பதிவையே எடுத்துகோங்க. வேற ஒருத்தர்னா அரை பக்கத்துல முடிப்பாங்க... எனக்கு ஆறு பக்கம் இழுக்கும் போல இருக்கே... (இப்படியே போனா அறுபது பக்கம் கூட இழுக்கும் - mindvoice )

லேட்டா நன்றி சொல்றதுக்கு மாப்பு கேட்டுகரனுங்க சுசி. இதோ சுசி குடுத்த ஏஞ்சல் விருது. நன்றி நன்றி நன்றி


இரண்டாவது விருது - புதுகை தென்றல் அவர்கள் கிட்ட இருந்து

ஜூன் 14 ந்தேதி இந்த வைர விருதை குடுத்தாங்க. எனக்கு இது வரைக்கும் யாருமே வைரம் குடுத்ததில்லைங்க (ரங்க்ஸ் உட்பட) எனவே இது ஸ்பெஷல். அதுவும் பதிவர் தினதன்னைக்கி குடுத்தது கூடுதல் சிறப்பு. நன்றி நன்றி நன்றி

இதோ, அந்த வைர விருது

மூன்றாவது விருது - LK அவர்கள் கிட்ட இருந்து

"அன்புடன் மலிக்கா" அவர்கள் நடத்தின கவிதை போட்டில கலந்துகிட்டு தான் வாங்கின "கவிஞர் விருதை" எனக்கு குடுத்து நான் கலந்துக்காம மிஸ் பண்ணினதை ஈடு செஞ்ச LK அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

ஆனா வாங்கின விருதுக்கு ஒரு கவிதை எழுதலைனா மனசாட்சி ஏன் ஏன்னு கேள்வி கேக்கதா?

(வாங்கற சம்பளத்துக்கு வேலை பாக்காம ஆபீஸ்ல உக்காந்து ப்ளாக் படிக்கறியே... அப்போ உன் மனசாட்சி என்ன செகண்ட் ஷோ பாக்க போயிடுச்சா? - mindvoice )

(இல்ல.. பாப்கார்ன் சாப்பிட போய்டுச்சு, நேரம் காலம் தெரியாமல் காலை வாரும் mindvoice டௌன் டௌன் - அப்பாவி)

சும்மா எதாச்சும் கவிதை எழுதறதுக்கு பதிலா எந்த கவிதை போட்டில கலந்துக்காம மிஸ் பண்ணினேனோ அதையே எழுதுவோம்னு தோணுச்சு... உண்மைய சொல்லணும்னா அந்த போட்டிக்காக குடுக்கப்பட்ட போட்டோவை பாத்ததும் எதாச்சும் கிறுக்கணும்னு ஆசை வந்தது...

சும்மா குட்டியா ரெண்டு கிறுக்கல்கள்... இதோ... பொருத்தருள்க....

அதுக்கு முன்னாடி LK குடுத்த "கவிஞர் விருது" இங்கே..."அன்புடன் மலிக்கா" போட்டிக்காக குடுத்த படம் இங்கே...


இனி.... என்னோட கிறுக்கல்கள் இங்கே...
(கவிதைனு சொன்னாதானே தெரியும்னு யாரும் கேட்டுடகூடாது பாருங்க... நாம எப்பவும் முன் ஜாக்கிரதைதான் இதுல எல்லாம்)


***********************************

வானவீதியில் காதல்மொழி
வரைந்து வைத்தேன்உனக்கு
மேகம் கலையும்முன்னே
மீட்டுவிடு என்னையும்கூட!!!

***********************************

எட்டாத உயரத்தில்
எழுதிவைத்த கடிதம்
நிலவு களவாடும்முன்
நீவந்து வென்றுவிடு!!!

***********************************

வைகறை வரும்முன்
வானவெளி பல்லக்கில்
வருவான் ராஜகுமாரனென
விழிமூடா நிலவுப்பெண்!!!

***********************************

போதும் போதும் நிறுத்துன்னு கத்தறது கேக்குது... ஒகே ஒகே stopped ..... நன்றி (ஏன்பா LK ? இது தான் வம்பை விலை குடுத்து வாங்கறதா? ஏன்? ஏன்? - mindvoice )

வாங்கற விருதை நாலு பேருக்கு குடுக்கறது தான் முறைனு சொல்றாங்க... கண்டிப்பா குடுக்கணுமா? நானே வெச்சுகறனே.... (அல்பம் அல்பம் - mindvoice )

சரிங்க.... குடுக்கறேன்... இப்டீக்கா சைடுல பாத்தீங்கன்னா.... "நான் விரும்பி படிக்கும் வலைப்பதிவுகள்" னு போட்டு இருக்கறனல்லங்க.... அதுல இருக்கறவங்களுக்கு இந்த விருதுகளை குடுக்கரனுங்க... (அதுல இருக்கற என்னோட பேரை தவிர...)

என்னோட பதிவுகளை எல்லாம் தொடர்ந்து வாசிக்கும் உங்கள் எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி...

Tuesday, June 15, 2010

Pittsburgh - ஊரு சுத்தின கதை...
போன மாசம் "கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவுன்னு" சொல்லிட்டு ஊரு சுத்த போனோமே... அதை பத்தி எழுதணும்னு நெனச்சுட்டே இருந்தேன். இப்போ தான் அதுக்கு நல்ல முஹுர்த்தம் அமைஞ்சு இருக்கு

எதுக்கு இந்த திடீர் சுத்தல்னு வந்து சொல்றேன்னு சொன்னேன், அதை மொதல்ல சொல்லிடறேன்...

அது வேற ஒண்ணும் இல்லைங்க. நான் ஆயுள் கைதி ஆன நாள்...அதாவது மாட்டிகிட்ட நாள்... இன்னும் புரியலையா? மணநாள்..... திருமணநாள்... (ஹி ஹி ஹி)

சரி சரி... வளவளக்காம ஒழுங்கா சொல்றேன்... ("உன்னால முடியாததெல்லாம் யோசிக்காதே" ங்கறீங்களா? ஹும்...என்ன செய்ய? பிறவியே அப்படியாகி போச்சு...)

மூணு நாள் லீவுன்னதும் "நீ ரெம்ப நாளா Pittsburgh வெங்கடேசபெருமாள் கோவில் போகணும்னு சொல்லிட்டு இருக்கியே.... போயிட்டு அப்படியே அங்க வேற எதுனா இருந்தா சுத்திட்டு வரலாம்" னார் அவர்

அவர் மனசு மாறரதுக்குள்ள நானும் சரின்னேன்

போன வருஷம் Chicago போனப்ப கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் எக்கசக்க கூட்டத்துல Borderல (US / கனடா)  நின்னு நின்னு வெறுத்து போச்சு... அந்த அனுபவத்துல.... "லாங் வீக்-எண்டுன்னா Borderல ரெம்ப கஷ்டமாய்டும், வெள்ளிகிழமையே  போய்டலாம்" னார்

"சரி" னேன் நான்

நான் எப்ப அவர் சொல்லி மறுத்துருக்கேன், இப்ப சொல்ல.... (ஹி ஹி ஹி....நோ கமெண்ட்ஸ் ஒகே..)

வெள்ளிகிழமை காலை 5.30 க்கு கிளம்பரதுன்னு முடிவாச்சு... அப்படி இப்படி நான் கிளம்ப 6.30 ஆய்டுச்சு.. "ஐயோ....பார்டர்ல ஏழு மணி நேரம் நிப்போம் பாரு"ன்னு ரங்க்ஸ் அப்பவே டென்ஷன் ஸ்டார்ட் மீசிக் தான்......

என்னங்க செய்ய? எனக்கு இந்த ஊரு காஞ்சு போன ரொட்டி பன்னு இலை தழை எல்லாம் சரி வராது.... கட்டு சாதம் எல்லாம் கட்டணுமே... அதான் லேட் ஆய்டுச்சு

ஆறரைக்கு வீட்டுல கிளம்பி கார்ல ஏறினப்புரம் "கேமரா எடுத்தாச்சா? ஹோட்டல் புக்கிங் பிரிண்ட் அவுட் எடுத்தியா...? GPS எங்க? எதுக்கும் map ம் backup வேணுமே அது எங்க? ஐயோ....பாஸ்போர்ட் இருக்கு தானே... எதுக்கும் driving லைசென்ஸ்ம் வேணும்.. கடன்காரன் என்ன வேணா கேப்பான் borderல.. எடுத்தோமா?" இப்படி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கேள்வி கேட்டு டென்ஷன் பண்ணிகிட்டே 7.45 க்கு border (Peace Bridge Exit) வந்து சேந்தோம்... அந்த படம் தான் மேல "Welcome to New-york - The Empire State" ......
 
அப்பவே பார்டர்ல ஒரு முப்பது கார் நிக்குது ஒரு ஒரு லைன்லயும்.... ராத்திரியே துண்டு போட்டு இருப்பாங்களோனு தோணுச்சு... ரங்க்ஸ் asusual டென்ஷன், கூடவே என்னை பாத்து ஒரு லுக் "அப்பவே சொன்னேன்ல" ங்கற மாதிரி
 
நான் எப்பவும் போல பி.சி.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு பீல் பண்ணி போட்டோ எடுக்கற மாதிரி பாவ்லா பண்ணிட்டே இருந்தேன்...

நாங்க நின்னுட்டு இருந்த லைன் ரெம்ப மெதுவா நகந்துட்டு இருந்தது... நான் சொன்னேன் "அந்த ஆபிசர் எதாச்சும் வீட்டுல சண்டை போட்டுட்டு வந்து இங்க காட்டுறாரு போல... எதுக்கு நமக்கு ஏழரை?  பேசாம அடுத்த லைன்ல போய்டலாம்னேன்" . எப்பவும் போல ரங்க்ஸ் நான் சொன்னதை கேக்கல (ஹும்..............)

ஒரு வழியா எங்க முறை வந்தது... பார்டர் ஆபிசர் ரங்க்ஸ்கிட்ட "வண்டில என்ன இருக்கு?"னான்

என்னை கேட்டு இருந்தா "டயர், லைட், பிரேக்,பெட்ரோல்..................... எல்லாம் இருக்கு" னு சரியா சொல்லி இருப்பேன்....

ரங்க்ஸ் "Nothing major " னார்.... அடடே மேஜர் சுந்தராஜன் எல்லாம் எப்போ வந்தார் நமக்கு தெரியாமனு நான் யோசிச்சுட்டு இருக்கறப்பவே அந்த ஆபிசர் "Any food / eatables?" னு கேக்க ரங்க்ஸ் "No" னார்

"ஏன் இப்படி பொய் சொல்றார்? ஒரு வேளை நம்ம கைபக்குவத்தை பாத்தா ஆபிசர் பங்கு கேப்பார்னு (ஹி ஹி ஹி) ரங்க்ஸ் பொய் சொல்றாரா" னு நான் யோசிச்சுட்டு இருக்கறப்பவே அந்த ஆபிசர் "Can I have your keys?" னார். "கிழிஞ்சது கிருஷ்ணகிரி" னு அப்பவே தோணுச்சு

ரங்க்ஸ் ரெம்ப பவ்யமா கார் சாவிய ஆபிசர் கிட்ட குடுத்துட்டு என்னை பாத்து "இதுக்கு தான் நேரத்துல போலாம்னேன்" னார்

என்ன கொடுமை சார் இது? இவர் தப்பா answer சொன்னதுக்கும் ஆபிசர் சாவி கேட்டதுக்கும் நான் லேட்ஆ கிளம்பனதுக்கும் என்னங்க சம்மந்தம்? நீங்களே கேளுங்க இந்த அநியாயத்த...

ஆபிசர் back trunk எல்லாம் ஓபன் பண்ணி செக் பண்ணிட்டு "you got some fruits in the trunk, you said no eatables, there is a $100 fine for falsifying, you know?" னார்

என்னடா இது வம்புன்னு செம டென்ஷன் ஆய்ட்டேன். நல்ல வேளை பின்னாடி சீட்க்கு கீழ இருந்த சாப்பாட்டு கூடைய பாக்கல.... fineம் போடலை...

நான் tensionல முழிச்ச முழில என்மேல ஆபிசர்க்கு சந்தேகம் வந்து நான் ஒசாமாவுக்கு ஒண்ணு விட்ட தங்கச்சின்னு நெனச்சாரோ என்னமோ மறுபடியும் ரங்க்ஸ்கிட்ட "What is your country of citizenship?"னு கேக்க எக்கசக்க டென்ஷன்ல இருந்த ரங்க்ஸ் "India" னார்

இப்போ எங்களை விட ஆபிசர் செம டென்ஷன் ஆய்ட்டார் "What? You gave me a canadian passport man!!!!?" னார் ஆபிசர்

"O...sorry .... we have dual citizenship .... so said so...." ன்னு ஒரு வழியா சமாளிச்சோம்

நான் நெனச்சேன்... அவ்ளோ தான் வண்டிய திருப்பி வீட்டுக்கு போய் கட்டு சாதத்த ஒரு பிடி பிடிச்சுட்டு ஒரு தூக்கம் போட வேண்டியதான்னு.... ஆன அந்த ஆபிசர் அப்புறம் CEO போஸ்ட்க்கு ஆளு எடுக்கற மாதிரி நெறைய கேள்வி எல்லாம் கேட்டாரு...

அப்புறம இப்படி கொழப்பற கேஸ்களால அமெரிக்காவுக்கு எந்த பாதகமும் வராதுன்னு நெனச்சாரோ என்னமோ போங்கன்னு விட்டுட்டார் ஆபிசர்

"உங்களுக்கு நல்ல நேரத்துல நம்ம நாட்டுப்பற்று வந்தது போங்க" ன்னு நான் அப்புறமா ரங்க்ஸ்ஐ கலாய்க்க

"ஆமா... டென்ஷன் பண்ணிட்டான் பாவி... பாம் வெக்கரவனை எல்லாம் Band வாத்தியத்தோட அனுப்பிடுவான்... நம்மள போட்டு உயிர வாங்குவான்.  இருந்தாலும்  நான் ஒண்ணும் தப்பா சொல்லலியே.... dual citizenship இருக்கறதால நான் இந்தியன் சிட்டிசனும் தானே" ன்னு ரங்க்ஸ் சாமாளிச்சார்.  என்னமோ சொல்லுவாங்களே "குப்பற விழுந்தாலும் மீசைல.... " சரி சரி விடுங்க பழகி போச்சு

இதுல நாங்க கத்துகிட்டது "ஆபிசர் கேட்டா இனிமே இருக்கறதை சொல்லிடணும்.... பாம்ஆ இருந்தாலும் சரி பின்னூசியா இருந்தாலும் சரி" ஹா ஹா ஹா....  (அப்பாடா மெசேஜ் சொல்லியாச்சு.....)

இப்படி டென்ஷன்ஆ தொடங்கின எங்க பயணம் அதுக்கப்புறம் சுபமாவே போச்சு... (இன்னிக்கி தான் "விபரீதம் கிபரீதம்" னு இல்லாம ஒரு நல்ல வார்த்தை சொல்லி இருக்கேன்னு யாருங்க அங்க முணுமுணுக்கறது..... அந்த பார்டர் ஆபிசர் எனக்கு நல்லா தெரியும் (பின்ன????) அவர் கிட்ட புடிச்சு குடுத்துடுவேன்... ஆமா....சொல்லிட்டேன்....ஹி ஹி ஹி)

பார்டர் தாண்டி கொஞ்ச தூரம் போனப்புறம் வழி பூரா ஒரே பச்சை பசேல் தான்... ஒரு வீடு / கடை கூட இல்ல... அங்க அங்க ஒரு தோட்டம் / மாட்டு கொட்டகை இல்லேன்னா குதிரை பண்ணை....அப்புறம் வெறும் மலை / காடு தான்.... கீழ இந்த படங்கள் பாருங்க....இதை எல்லாம் பாத்துட்டே அப்படியே போயிட்டு இருந்தோமா....அப்புறம்....ஐயோ....இது என்னனு யாரோ டென்ஷன் ஆகற மாதிரி இருக்கே.. y tension y tension....no tension... ஹி ஹி ஹி....எல்லாம் நம்ம கை வண்ணம் தான் (இதை படிக்கற யாராச்சும் ஜோதிட மாமணியா இருந்தா... ரேகை பாத்து எனக்கு லாட்டரி விழுமா இல்ல போக போக சோத்துக்கே லாட்டரி தானான்னு சொல்லுங்க...ஹி ஹி ஹி)

என்ன தான் அழகான பச்சை பசேல் காட்சியா இருந்தாலும் அஞ்சு மணி நேரம் பாக்க முடியுமா சொல்லுங்க? எனக்கு தூர பயணங்கள் எப்பவும் கொஞ்சம் கஷ்டம் தான்...ஒரு மணி நேரத்துல போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு

எதுனா புக் படிக்கலாம்னா "போட்டு இருக்கற சோடா புட்டி பத்தலையா?"னு ஒருத்தர் டென்ஷன் ஆவர்.... சரி எதுக்கு வம்புன்னு மருதாணி வெக்க ஆரம்பிச்சுட்டேன்

எனக்கு மருதாணினா ரெம்ப இஷ்டம்... மெஹந்தி கோன் வாங்கி வெச்சு போட நேரமே இருக்கல கிளம்பரவரை... முடிஞ்சா போடலாம்னு bag ல வெச்சேன் (இதை அந்த ஆபீசர் வேற பாத்து இருந்தா.... வம்பு தான் அப்படின்னு அப்புறம் தோணுச்சு)

வண்டி ஓட்டத்துல எப்படியோ சமாளிச்சு கோணல் மாணலா மருதாணி போட்டேன்... Just one of my ways to kill the time...ha ha ha
 
அப்புறம் Pittsburgh Holiday-Inn ல போய் செக்-இன் பண்ணிட்டு ஒரு ride போனோம்
 
அந்த ஊரே நம்ம ஊட்டி மாதிரி மலை பிரதேசம் மாதிரி தான் இருந்தது... சம வெளி ரெம்ப குறைவு தான். அப்போ அப்போ மழை வெயில்னு மாறி மாறி நம்ம கேரளா மாதிரி இருந்தது
 
அப்போ வெளிச்சம் குறைவா இருந்ததால போட்டோஸ் அவ்ளோ நல்ல வர்ல ("இது வரைக்கும் போட்டது மட்டும் நல்லா இருக்குன்னு யாரு சொன்னா"னு கேக்கறீங்களா? என்னங்க செய்ய? நம்ம திறமைக்கு ஏத்த கேமரா ரங்க்ஸ் வாங்கி தரலியே.... இந்த ஓட்டை கேமரா வெச்சு இவ்ளோ தான் எடுக்க முடிஞ்சுது....ஹி ஹி ஹி)
 
அப்புறம் கடை கடையா சுத்தினோம். சொன்னா நம்ப மாட்டீங்க... கனடா விட அமெரிக்கால dresses ரெம்ப விலை குறைவு. டாலர் value கொஞ்சம் கம்மி ஆகறப்ப ஷாப்பிங் பண்றதுக்குன்னே கனடால இருந்து பார்டர் கிராஸ் பண்ணி போறவங்க உண்டு. இல்லைனாலும் இங்க விட அமெரிக்கால வாங்கினா லாபம் தான்

அப்புறம் அடுத்த நாள் சனிக்கிழமை காலைல எழுந்து கோவில் கிளம்பினோம். சொல்லவே வேண்டாம் என்னால தான் லேட். புடவை எல்லாம் கட்டி கெளம்ப லேட் ஆகாதா என்ன? சுடிதார் போட்டா வரம் தரமாட்டேன்னு சாமி சொல்லுச்சானு இங்க ஒருத்தர் ரெம்ப டென்ஷன் ஆனது தனி கதை

சரி அதை விடுங்க... அப்பவே லேசா மழை தூர ஆரம்பிச்சது. கொஞ்சம் சின்ன குன்று மாதிரி மேல இருந்தது கோவில்.... இங்க S.V.Temple னு சொன்னா நம்ம மக்களுக்கு நல்லா புரியும்.... அதாவது ஸ்ரீ வெங்கடேஸ்வரா டெம்பிள்.... சாமிக்கும் shortform தான் போங்க....

ஒம்பது மணிக்கி சுப்ரபாத பூஜை. இந்த ஊர்ல குளிர்ல சாமிக்கி கூட லேட் திருப்பள்ளி எழுச்சி தான், கண்டுக்காதீங்க. ஒம்பதரை மணி சத்தியநாராயணா பூஜைக்கு கட்டி அதுல கலந்துகிட்டோம். நல்ல திருப்தியான பூஜை / தரிசனம்

முடிச்சுட்டு வந்து லட்டு பிரசாதம் வாங்கிட்டு அங்கேயே புளியோதரை, தயிர் சாதம், உப்புமா, சாம்பார் சாதம் எல்லாம் விக்கறாங்க. எது வாங்கினாலும் ரெண்டு டாலர். எல்லாத்துலயும் ஒண்ணு ஒண்ணு வாங்கிட்டு கிளம்பினோம்

நல்ல மழை. கோவில் முகப்பு நல்லா போட்டோ எடுக்க முடியல மழைல.... இருந்தாலும் சில கிளிக்ஸ்...இதோ....
 
 
 
 


அப்பாடா.... இப்பவே பெரிய பதிவா போச்சு.... எனவே மிச்ச ஊர் சுத்தலை இன்னொரு பதிவா போடறேனே.... சரிங்க அப்புறம் பாக்கலாம்..... bye bye ...

தொடரும்.... ("பயண கட்டுரைக்கி தொடரும் போட்ட மொத ஆள் நீ தான்" னு யாருங்க அங்க திட்டறது.... கூப்பிடுங்க அந்த ஆபிசர.... ஹி ஹி ஹி)

Sunday, June 13, 2010

அதே கண்கள்...சஸ்பென்ஸ் த்ரில்லர்... (பகுதி 2 )


மறுநாள் ஏதோ ஆடை வாங்கவென கடைவீதிக்கு சுமி தன் அன்னையுடன் சென்றாள். சிறிது நேரத்தில் ஏதோ கண்கள் தன்னை தொடர்வது போல உள்ளுணர்வு உறுத்த அந்த திசையில் பார்த்தவள் ......


அதே கண்கள்................................ தொடர துணுக்குற்றாள்....

ஒரு கணம் தன் அருகில் இருக்கும் அம்மா தன்னை கவனித்து இருப்பாரோ என பதறியவள் அவர் பூக்காரியுடன் பேரம் பேசி கொண்டு இருப்பதை பார்த்து நிம்மதி ஆனாள் சுமேதா

அந்த சந்தடி நிறைந்த கோவை மாநகரின் கிராஸ் கட் ரோட்டில் அந்த கண்களை மீண்டும் தேடினாள்

"அம்மா நீ பூ வாங்கிட்டு இரு...நான் ஒரு நிமிஷம் வந்துடறேன்" என்றவள் அவள் அம்மாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அந்த கண்களின் திசையில் சென்றாள்

___________________

"எங்க சுமேதா போன வெயில்ல இப்படி நிக்க வெச்சுட்டு? எவ்ளோ நேரம் ஆச்சு"

"இல்லமா....இங்க தான்...கடைக்கு...." என்று ஏதோ உளறினாள்

"சரி சரி....சீக்கரம் வா. ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்ல ஒரு blouse எடுக்கணும். இன்னும் கொஞ்சம் போன கடைல கூட்டம் ஆய்டும்" என துரிதபடுத்தினாள் சுசீலா

____________________

"என்ன சுமி. எப்பவும் என்னோட காதை puncture பண்ற மாதிரி லொட லொடன்னு பேசிட்டே இருப்ப. இன்னிக்கி அமைதியா இருக்க. ஏண்டா ஒடம்புக்கு எதுனா சரி இல்லையா" என காதலும் கவலையுமாய் கேட்டான் சூர்யா

அன்னபூர்ணா உணவகத்தின் பாமிலி ரூமின் ஏசி குளிரையும் மீறி வியர்த்தது சுமேதாவுக்கு

"இல்லையே...நான் எப்பவும் போல தான் இருக்கேன்" என சிரிக்க முயன்றாள் சுமேதா

"இல்ல...நீ எப்பவும் போல இல்ல.... நான் மூணு நாளு தானே ஊர்ல இல்ல அதுக்கே கோபமா இல்ல கல்யாண பயமா?" என சிரித்து கொண்டே கேட்டான்

"கல்யாண பயம் உங்களுக்கு தான் வரணும்...எனக்கு என்ன?" என்றாள் இயல்பாய், பேச்சை திசை மாற்றும் பொருட்டு

"அடிப்பாவி...அப்போ என்னை torture பண்ண நெறைய பிளான் போட்டு வெச்சு இருக்கியா?"

"ம்... கல்யாணம் நிச்சியம் ஆன அடுத்த நாளே 80 பக்க நோட் ஒண்ணு வாங்கி எழுத ஆரம்பிச்சுட்டேன்... கிட்ட தட்ட நோட் தீந்து போச்சு...." என அபிநயத்துடன் கை விரித்து சொல்ல அதை ரசித்தவன்

"ஆஹா...ஆளை விடு தாயே" என பயந்தது போல் நடித்தான்

____________________

"ஹலோ......நான் சுமேதா பேசறேன்"

"......."

"ம்...ஒகே...அப்படியே செய்யறேன்"

"........"

"ஆனா....கொஞ்சம் பயமா இருக்கு"

"........"

"ம்... உன்ன தான் நம்பி இருக்கேன்...."

"......."

"ஒகே வெச்சுடறேன்" என சொல்லி திரும்பியவள் தன் அம்மா அவள் அறை வாயிலில் நிற்பதை கண்டதும் இதயம் வேகமாக அடித்து கொண்டது சுமேதாவுக்கு

"என்ன சுமி...யாரு போன்ல? என்ன ஏதோ பயமா இருக்கு...உன்ன தான் நம்பி இருக்கேன்னெல்லாம் சொல்லிட்டு இருந்த" என பதட்டத்துடன் கேட்க

"அ...அ....அது....ஒண்ணுமில்லமா....என் friend திவ்யா தான். அது...கல்யாணத்துக்கு பியுட்டி பார்லர் அவ தானே சொல்லி இருந்தா...அந்த லேடிக்கு அன்னிக்கி வேற ஏதோ முக்கியமா ஒரு appointment னா....அதான் கடைசி நேரத்துல இப்படி சொன்னா எப்படி? பயமா இருக்கு...உன்ன தான் நம்பி இருக்கேன்ன்னு சொல்லிட்டு இருந்தேன்" என ஒருவாறு தன் அம்மாவிடம் சமாளிப்பதற்குள் சுமேதாவிற்கு முகம் வியர்த்து போனது

"பாத்து சுமி...வேற யாராச்சும் கிட்ட கூட சொல்லி வெய்யி" என சுசீலா சொல்லி சென்றார்

"கடவுளே....கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு...எப்படி சமாளிக்க போறேன்" என சுமேதா மனதிற்குள் புலம்பினாள்

___________________

அன்று... திருமண நாள்.... கோவையின் பிரபலமான ராமகிருஷ்ண திருமண மண்டபம் விழாக் கோலம் பூண்டு இருந்தது

"என்ன கல்யாண பொண்ணே...செம டென்ஷன்ஆ இருக்க? நியாயத்துக்கு மாப்பிள்ளை தானே டென்ஷன் ஆகணும்" என தோழிகளின் கேலியில் இயல்பாய் சிரிக்க முயன்று தோற்றாள் சுமேதா

அதற்குள் "முஹுர்த்ததுக்கு நேரமாச்சு...பொண்ண அழச்சுண்டு வாங்கோ" என ப்ரோகிதர் குரல் கொடுக்க மணப்பெண்ணை மணவறைக்கு (கல்யாண பந்தல்) அழைத்து சென்றனர்

மணமேடையில் அமர்ந்த சுமேதாவின் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடியது

சுமேதாவின் குழப்பமான முகம் மணமகன் சூர்யாவை அமைதி இழக்க செய்ய "சுமி" என்றான் மெல்லிய குரலில்

அவன் அழைப்பில் கவனம் மாறி முகத்தில் வலிய புன்னகையை மாட்டி மணப்பெண்ணாய் தலை குனிந்தாள் சுமேதா

"கெட்டி மேளம் கெட்டி மேளம்" என ப்ரோகிதர் கூற சுமேதாவின் கழுத்தில் சூர்யா மங்களநாண் அணிவித்தான்

சுற்றமும் நட்பும் கண்கள் பனிக்க ஆசீர்வதிக்க ஒரு ஜோடி கண்கள் மட்டும் அந்த காட்சியை ரசிக்கும் மனநிலையின்றி பதட்டத்துடன் அலைபாய்ந்தது.....

______________________

"பெண்ணே சமத்து....பத்தாவது மாசம் தொட்டில் கட்டிடணும், என்ன?" என மூத்த தலைமுறையும்

"பாத்துடி....மாப்பிள்ளை பயந்துட போறார்" என தோழிகளும் கேலி செய்ய எல்லாவற்றிற்கும் வெட்கப்படுவதை போல் நடித்து தலை குனிந்து சமாளித்தாள் சுமேதா

அதே சமயம் "அக்கா உனக்கு போன்" என தொலைபேசியை அவள் கையில் திணித்து விட்டு போனது ஒரு வாண்டு

"இந்த நேரத்துல என்ன சுமி போன்? சரி சரி... சீக்ரம் பேசிட்டு வெய்யி" என்றாள் சுசீலா

"ஹலோ...." என்றாள் நடுங்கும் குரலில்

"....."

மறுமுனை என்ன கூறியதோ, முகம் வியர்க்க கண்கள் பனிக்க உடல் நடுங்க குளியல் அறைக்குள் தஞ்சமானாள் சுமேதா

______________________

ஆவலுடன் மனைவியை எதிர்நோக்கி காத்திருந்த சூர்யா, அறைக்குள் வந்த சுமேதாவின் முகம் வெளிறி இருந்ததை கண்டு குழப்பமானான்

"என்ன ஆச்சு சுமி? ஏன் இப்படி இருக்க?" என பதட்டத்துடன் கேட்க

"அ....அது...ரெம்ப தலைவலியா இருக்குங்க" என்றாள் கேள்விகளுக்கு முற்றுபுள்ளி வைக்க

"அப்படியா... காலைல இருந்து வீடியோ லைட் அடிச்சுட்டே இருந்ததல்ல... உனக்கு சேரலைன்னு நெனைக்கிறேன். உன் கண்ணு கூட சிவப்பா இருக்கு... சரி நீ ரெஸ்ட் எடு சுமி" என்றான் அக்கறையாய்

அவனது புரிந்துணர்வும் அக்கறையும் சுமேதாவின் குற்ற உணர்வை மேலும் அதிகமாக்கியது

அந்த இரவு பல ரகசியங்களை தன்னுள் தேக்கி கொண்டே உறங்கியது

________________________

மறுநாள் மறுவீடு செல்ல மாமியார் வீட்டுக்கு கிளம்பினாள் சுமேதா

"மாமா நாங்க அந்த வீட்டுக்கு போயிட்டு அப்படியே ஊட்டி போறோம் சாயங்காலம். வெள்ளிக்கிழமை வந்துடறோம்" என சூர்யா சுமேதாவின் அப்பாவிடம் கூறிக் கொண்டு இருந்தான்

"சரிங்க மாப்ள... பாத்து பத்திரமா டிரைவ் பண்ணுங்க" என்றார் தந்தைக்கே உரிய அக்கறையுடன்

"ஏய்....சுமி...இன்னும் கிளம்பலையா நீ. மாப்ள வண்டில ஏறியாச்சு" என தங்கையை துரிதப்படுத்தினான் சுரேஷ்

"ஏண்டா அவள வெரட்டற. நானே கிளம்பராளேன்னு கவலையா இருக்கேன்" என சுசீலா கண்ணில் நீருடன் சொல்ல அதுதான் சாக்கென சுமேதா அன்னையை கட்டி கொண்டு அழுதாள்

அவள் அழும் காரணம் வேறு என அங்கு யாருக்கும் புரியாதது தான் வேதனை

"சரிம்மா நான் வரேன்...வரேண்ணா... அப்பா வரேன்...." என எல்லோரிடமும் கடைசியாய் விடை பெறுவது போல் பலமுறை சொல்லி சென்றாள் சுமேதா.....

__________________

புதுமனைவியை ஓர கண்ணில் ரசித்தவாறே கார் ஓட்டினான் சூர்யா

"சுமி... தலைவலி இப்போ ஒகேவா? மாத்திரை எதுனா வாங்கனுமா"

"இல்லைங்க...இப்போ பரவால்ல" என தலை குனிந்தாள்

"ஏய்...இப்போ நாம ரெண்டு பேரு தானே இருக்கோம்.... நேத்து கல்யாண மண்டபத்துல மாதிரியே இன்னும் தலை குனிஞ்சுட்டே இருக்க..." என்ற அவன் சீண்டலில்

"அப்படி எல்லாம் இல்ல..." என சிரித்தாள்

மேம்பாலம் தாண்டி சாய்பாபா கோவில் சிக்னலில் வண்டி நிற்க வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தாள் சுமேதா

அப்போது.... சிக்னலில் எதிர்புறம் இருந்த வண்டியில் இருந்த ஒரு உருவம் அவள் கண்ணில் பட சிலையானாள்...

அதே கண்கள்....

சிக்கனம் தான்நானும்
சிலையாய் உனைவடிப்பதில்
இக்கணம்நீ வேணும்
இனிவாழும் நாள்வரை

அடுத்த பகுதி - பகுதி 3 படிக்க - இங்கே கிளிக்கவும்

தொடரும்....

Thursday, June 10, 2010

நான் பத்திரகாளியா?

இந்த தலைப்பை பாத்ததுமே ரெம்ப சந்தோசமா "என்ன மேட்டர்"னு படிக்க ஆவலா வந்து இருப்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்....

அதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும் (ஒண்ணு என்ன ஒம்பதே சொல்லு  கேக்கறதுன்னு ஆச்சு விதி யாரை விட்டதுன்னு யாரோ பொலம்பற மாதிரி கேக்குதே...ஹி ஹி ஹி)

போன வாரம் என்னோட "உபர்வாலா போஸ்ட்" (அதாங்க ஹிந்தி கொடுமை போஸ்ட்) பாத்துட்டு ரங்கமணி சொன்ன கமெண்ட்

 "உன்னோட போஸ்ட்ஐ விட அதுக்கு வர்ற கமெண்ட்ஸ் தான் ரெம்ப சுவாரஸ்யமா இருக்கு" அப்படின்னு சொல்லிட்டு ஆளு எஸ்கேப் ஆய்ட்டார்

நேரம் தான்... இதுக்கு தான் இவருக்கு எங்க குரூப்ல பஞ்ச் பரமசிவம்னு பேரே வெச்சுட்டாங்க... இருந்தாலும் அந்த கமெண்ட் போட்ட உங்க கிட்ட எல்லாம் இதை சொல்லலைனா நல்ல இருக்காது இல்லையா..அதான் சொன்னேன் (நம்ம நல்ல மனசை யாரு புரிஞ்சுக்கறா?)

சரி விடுங்க மேட்டர்க்கு போவோம்...

அதுக்கு முன்னாடி... ஒரு சின்ன கேள்வி? (இன்னுமா... ? தாங்காது பூமி... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...)

கொழந்தைக்கி பேரு வெக்கறதை பத்தி என்ன நெனைக்கறீங்க?

அது எத்தனை கஷ்டமான வேலைன்னு பட்டவங்களை கேட்டாதான் தெரியும்

என்னமோ பதினாறு பெத்து பேரு வெச்சா மாதிரி டயலாக் விடறேன்னு கேக்கறீங்களா? இதுவரைக்கும் சொந்த அனுபவமில்லைனாலும் நாம எத்தனை பேரை பாத்து இருக்கோம்

சிலர் ரெம்ப கவனமா கொழந்தையோட நட்சத்திரம் அதுக்கு வர்ற எழுத்து எல்லாம் பாத்து, அப்புறம் PHD வாங்கற அளவுக்கு numerology alphabetalogy psychology biology இன்னும் என்ன என்ன ology எல்லாம் இருக்கோ எல்லாம் படிச்சு பேரு தேடுவாங்க...

இப்படி அழகா பேரு வெச்சுட்டு கூப்பிடறது "பப்பி" "பேபி" "தம்பி" "கண்ணா" னு.... கொடுமை தான்... இதுக்கு பேசாம X Y Z ன்னு வெச்சுக்கலாம்

எங்க அத்தை பொண்ணுக்கு பொண்ணு பொறந்தப்ப "கா கௌ ஷா ச" இந்த எழுத்துக்கள் வந்தது. எங்க வீட்டுல அடுத்த தலைமுறைல மொதல் கொழந்தைன்னு எல்லாரும் ஆளு ஆளுக்கு நான் பேரு சொல்றேன் நீ பேரு சொல்றேன்னு ஒரு வழி பண்ணினாங்க

நானும் என்னோட தங்கையும் "ஷாலினி" இல்லைனா "ஷாமிலி" தான் வெக்கணும்னு ஏக ரகளை பண்ணினோம். எங்க பாட்டி அதை கேட்டுட்டு "அது என்ன கண்றாவி? ஷாலாணி அலமாரி" னு அப்படின்னு டென்ஷன் ஆய்ட்டாங்க

(ஒரு குறிப்பு: எங்க பாட்டி காலத்துல fridge எல்லாம் ஏது? அந்த காலத்துல தயிர் பால் மாவு எல்லாம் பூனை உருட்டி விடாம இருக்கறதுக்காக ஒரு மர அலமாரி மாதிரி ஒண்ணு இருக்குமுமாம். அதுக்கு ஷாலாணினு பேருன்னு அப்புறம் தான் சொன்னாங்க... எங்க வீட்டுல கூட இருந்தது நான் சின்னதுல. யாருக்கு தெரியும் அதுக்கு பேரு எல்லாம்...)

அப்புறம் அவளுக்கு கௌசல்யானு அழகான பேரு வெச்சாங்கங்கறது தனி கதை. ராமபிரானோட அம்மா பேருன்னு எங்க பாட்டிக்கு ஒரே சிலாகிப்பு... மொதல் கொள்ளு பேத்தி ஆச்சே...

சிலர் வாய்ல நுழையாத பேரா இருக்கணும்னு தேடி தேடி வெப்பாங்க, அதுல என்ன சந்தோசமோ தெரியல

ஏங்க இப்படி எல்லாம்னு பண்றீங்கன்னு? கேட்டா வித்தியாசமா வெக்கறோம்ன்னு விளக்கம் வேற, என்னமோ புதுசா ஒரு recipe ட்ரை பண்றேன்னு சொல்றாப்ல. கொடுமைடா சாமி...

இன்னும் சிலர் ரெம்ப விவரமா "அந்த பேருக்கு நைஜீரியா மொழில நல்லவன்னு அர்த்தம்"னு ஒரு சூப்பர் விளக்கம் சொல்லுவாங்க. நாம என்ன நைஜீரியா டிக்சனரியா தேடி போய் கண்டுபிடிக்க போறோம்னு ஒரு தைரியம் தான்

இன்னும் சிலர் என்னனா "அது எங்க கொள்ளு தாத்தாவோட எள்ளு பாட்டியோட பேரு"னு குண்டக்க மண்டக்க பதில் வரும்

அந்த கொழந்தைக்கு மட்டும் இந்த மேட்டர் தெரிஞ்சா எத்தனை பீல் பண்ணும் பாவம்

பேரு வெக்கறது என்னமோ வெச்சுடறாங்க. பிள்ளைங்க வளந்து பெருசு ஆனதும் பெருபாலும் "உனக்கு வேற பேரே கிடைக்கிலையா"னு ஒரு கேள்வி கேப்பாங்க. கஷ்டப்பட்டு பேரு வெச்ச அப்பன் ஆத்தா நொந்து நூடுள்ஸ் ஆகணும்

பேரு சொல்ல பிள்ளைங்கறது போய் ஏன் இந்த பேருன்னு திட்டற புள்ளை ஆய்டும் கதை

என்னோட பேரு புவனானு உங்களுக்கு தெரியும், முழு பெயர் புவனேஸ்வரி. இந்த 13 எழுத்து (in English) இருக்கற பேரை எழுதி பழகரதுக்குள்ள  பச்ச புள்ளைல நான் எத்தனை நொந்து போய் இருப்பேன்

அதாச்சும் பரவாயில்லைங்க, இந்த கொடுமை புடிச்ச ஊர்ல (canada)  என்னோட பேரு பட்ற பாடு இருக்கே... நாராயணா.....

நான் முழு பேரு எல்லாம் சொல்றதே இல்ல.. இதுக என்னோட கால்வாசி பேரையே கசக்கி புழியரப்ப முழுசும் சொன்னா முக்காடு தான் போட்டுக்கணும்

என்னோட அழகான பேரை (ஆமாம் எனக்கு என் பேரு அழகு தான் போங்க...) எப்படி எல்லாம் கொல்லுதுங்க தெரியுமா

புவானா

புவ்னா

பூ

bhoo (என்னமோ நம்ம ஊரு புள்ளைங்க சாப்பிட பூச்சாண்டி காட்டி மெரட்டற மாதிரியே இருக்கும் அதுக சொல்ற லச்சணம்)

புவாநேஸ்வாரி

புவா நீஸ் வா ரீ (இப்படி கொதறி பிச்சு பீஸ் பீஸா ஆக்கரவங்களும் உண்டு)

எனக்கு கோவம் வருமா வராதா? நீங்களே சொல்லுங்க

ஆனா ஒரு விசயம் ஒத்துக்க தான் வேணும், நாமளும் அவங்க பேரை சில சமயம் கொலை செய்யறோம் தான்... அதுக அப்பன் ஆத்தா வாய்ல நுழையாத பேரை வெச்சா நான் என்ன செய்ய? (நம்மளையும் அதுக இப்படி தன் திட்டுமோ என்னமோ?)

நான் ஸ்கூல்ல படிக்கறப்ப எங்க தமிழ் ஆசிரியர் கணேசன் ஐயா ஒரு நாள் கேட்டார் "உன்னோட பேருக்கு அர்த்தம் தெரியுமா?"ன்னு

எனக்கு ஒரே டென்ஷன் ஆய்டுச்சு. எனக்கு பேரே ஒழுங்கா அப்பத்தான் எழுத தெரியும் இதுல அர்த்தம்னா... ஆனா கேட்டது என்னோட favourite தமிழ் ஐயா ஆச்சே... பொறுமையா "தெரியலங்க சார்" னேன்

அதுக்கு அவர் சொன்ன விளக்கம்
"புவனேஸ்வரினா புவனத்தின் ஈஸ்வரி, அதாவது உலகத்தை ஆள்பவள்னு அர்த்தம்" னு சொன்னார்

நான் அப்படியே பறக்காத கொறை தான், என்னமோ அப்பவே எலக்சன்ல சீட் ஜெய்ச்சு முதல்வர் ஆன நெனப்பு தான் போங்க

ஆன இந்த பேரை சொல்லி ஒரு பஸ் சீட் கூட வாங்க முடியாதுன்னு பின்னாடி புரிஞ்சுகிட்டேன்... ஹும்...

இப்ப நீ என்னதான் சொல்ல வர்றே... தலைப்புக்கும் நீ இது வரைக்கும் போட்ட மொக்கைக்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா...சொல்றேன் சொல்றேன்... நானும் அதை தான் தேடிட்டு இருக்கேன்...இருங்க இருங்க ஓடாதீங்க... நோ டென்ஷன் நோ டென்ஷன்

நாம எல்லாரும் வாழ்க்கைல ஒரு தரமாச்சும் நம்ம அப்பா அம்மாகிட்ட "எப்படி எனக்கு இந்த பேரு செலக்ட் பண்ணினே?"ன்னு ஒரு கேள்வி கேக்காம இருந்து இருக்க மாட்டோம் இல்லையா

நான் மட்டும் விதிவிலக்கா என்ன? நானும் எங்க அம்மாகிட்ட ஒரு நாள் கேட்டேன்

எங்க அம்மா அதுக்கே காத்துட்டு இருந்தாப்ல "அது... நீ பொறந்த அன்னிக்கி உங்க மாமா (அம்மாவோட அண்ணா) சேலத்துல இருக்கற புவனேஸ்வரி அம்மன் கோவில்ல இருந்தாரு"

"கெடச்சதே போதும்னு இதுக்கு (நான் தான்) அந்த பேரை வெச்சியா?" னு ஒரு குறுக்கு கேள்வி... வேற யாரு முந்திரிகொட்டை முனியம்மா என்னோட உடன் பிறப்பு (தங்கச்சி) தான்...

அப்புறம் அவகூட ஒரு சின்ன சண்டை போட்டு எங்க அம்மா எங்களை சமாதானம் பண்ணி continue பண்ணினாங்க

"மாமா சேலத்துல இருந்து வந்ததும் உன்னோட ஜாதகம் பாத்தப்ப 'ப' 'பூ' 'பு' இந்த எழுத்துல தான் பேரு இருக்கணும்னு சொன்னாங்க. மாமா தான் அந்த கோவில் போனப்ப நீ பொறந்ததும் ஒரு செண்டிமெண்ட்ஆ  அதே எழுத்துல வரவும் புவனேஸ்வரினு வெச்சோம்" அப்படின்னு நம்ம சரித்திரத்த சொல்லி முடிச்சாங்க அம்மா

திடீர்னு என்னோட பாசமலர் பயங்கரமா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சா

"என்னடி ஆச்சு... நல்லாதானே இருந்த?" னு நானும் அம்மாவும் மாத்தி மாத்தி விசாரிச்சோம்

அவ சிரிச்சுட்டே இருந்தா, அவ கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா சிரிக்க ஆரம்பிச்சா அவ்ளோ லேசுல நிறுத்தவே மாட்டா... நமக்கு பிரஷர் ஏறிடும் இவ விசியத்த சொல்றதுக்குள்ள

அன்னைக்கும் அபப்டி தான் செஞ்சா... ஒரு வழியா சொல்ல ஆரம்பிச்சா...

"இல்ல...இல்ல...." னு மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுடுச்சு கொரங்கு. எங்க அம்மா என்னனு தெரியாமையே மக சிரிக்கற அழகுல மயங்கி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க

"நான் போறேன்... சிரிச்சு முடிச்சுட்டு சொல்லி அனுப்பு..." நான் எந்திரிச்சதும் தான் சொன்னா

அந்த பிசாசு என்ன சொல்லிச்சு தெரியுமா....

"நல்ல வேள மாமா புவனேஸ்வரி கோவிலுக்கு போனாரு. இதே பத்திரகாளி கோவிலுக்கு போய் இருந்தா உன்னோட நெலம என்ன ஆகி இருக்கும்னு நெனச்சேன்...சிரிச்சேன்.... சிரிப்பே அடக்க முடியல" அப்படின்னு சொன்னதும் மொதல்ல கோவத்துல அடிக்க கை ஓங்கிட்டு அதுக்கு மேல என்னாலையும் கண்ட்ரோல் பண்ண முடியாம சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்...

நாங்க மூணு பேரும் ரெம்ப நேரமா சிரிச்சுட்டு இருக்கவும் அப்ப தான் உள்ள வந்த எங்க அப்பா என்னாச்சுனு கேட்டதுக்கு நாங்க பதில் சொல்லாம சும்மா சிரிக்கவும்... "இன்னிக்கி பௌர்ணமி கூட இல்லியே... என்னாச்சு? சரியான லூசுங்க மூணும்" னு சொல்ல இன்னும் ஓவரா சிரிக்க ஆரம்பிச்சுட்டோம்... ஹய்யோ.... ஹய்யோ...

நேத்து ஏதோ டிவில பத்திரகாளினு ஒரு டயலாக் கேட்டப்ப கொசுவத்தி சுத்த  ஆரம்பிச்சுட்டேன்... மொதல்ல சிக்கினது ரங்க்ஸ்... இப்போ நீங்க.... ஹா ஹா ஹா....

ச்சே... "பூ" னு எழுத்து வந்ததே ஒரு "பூமிகா"னு வெச்சிருந்தா என்னவாம்... ஹும்... இந்த தமிழ் திரை உலகம் இன்னொரு பூமிகாவை மிஸ் பண்ணிடுச்சுன்னு தான் சொல்லணும்... வேற என்ன சொல்ல?

வைரஸ் புகழ் அனாமிகா போன வார ஹிந்தி பதிவு படிச்சுட்டு என்னதான் சொல்ல வரீங்கன்னு commentல கேட்டுட்டாங்க... அதனால இனிமே எல்லா பதிவுக்கும் கண்டிப்பா கருத்து சொல்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்  (Don't kill the messanger... தப்பு என் மேல இல்ல... எல்லாம் அந்த பொண்ணு பண்ணினது தான்...)

ஒகே.. இந்த பதிவுக்கான மெசேஜ்...


மெசேஜ் 1 - புள்ளைக்கு வெக்கற பேரு ஒரு மொழத்துக்கு இல்லாம சின்னதா இருந்தா பின்னாடி உங்க கொழந்தைகிட்ட திட்டு விழாம காப்பாத்திக்கலாம்

மெசேஜ் 2 - வாய்ல நுழையற பேரா இருந்தா உத்தமம் (அதுக்காக சாக்லேட்னு இல்ல.. எத்தனை நாளைக்கி தான் வாழைபழம்னே சொல்றது)

மெசேஜ் 3 - ஒண்ணும் தோணல....ஆனாலும் எப்பவும் 1 2 3 னே முடிச்சு பழகிட்டு ரெண்டோட நிறுத்த வர்ல...சோ அட்ஜஸ்ட் பண்ணிகோங்க... ஹி ஹி ஹி

ஒகே ஒகே... ஓடி போய்டறேன்... நீங்க கல்லை எடுக்கறதுக்கு முன்னாடி...

Wednesday, June 09, 2010

ஸ்கூலுக்கு நேரமாச்சு..."ஸ்ருதி இன்னும் என்ன பண்ற? ஸ்கூல்க்கு டைம் ஆச்சு" என்ற சிவாவின் குரலுக்கு

"இன்னைக்கி நான் ஸ்கூல்க்கு போகலை" என்றவளை ஏதோ கொலை குற்றம் செய்தவளை போல் பார்த்தான் சிவா.

"என்ன இது புதுசா அடம்?"

"ஒன் டே தானே?" என கெஞ்சலாய் பார்த்தாள்

"நோ ஸ்ருதி, நீ இப்பவே ரெண்டு நாள் லீவ் போட்டாச்சு, இதுக்கு மேல லீவ் போட்டா கஷ்டம்"

அதற்குள் தொலை பேசி மணி அடிக்க....
"ஹலோ சிவா here,who is this?"

"டேய் சிவா நான் அம்மா பேசறேன், எப்படி இருக்க?"

"இருக்கேன் மா" என்றான் சலிப்புடன்

"என்னடா இப்படி சலிசுக்கற?"

"எல்லாம் இந்த ஸ்ருதி பண்ற டென்ஷன் தான்மா"

"ஏன்பா... என்ன ஆச்சு?"

"ஸ்கூல்க்கு போக மாட்டேன்னு அடம், ச்சே" என்று சலிப்புடன் பேசியவனை  பார்த்து அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை அவனது அன்னை சிவகாமிக்கு

"டேய் சிவா, நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதே, இப்பவே கிளாஸ் போறது ரெம்ப அதிகம்டா... அந்த காலத்துல..."

"அம்மா அந்த கால கதை எல்லாம் சொல்லி நீ வெறுப்பேத்தாதே"

"டேய்...நான்..."

"சும்மா இரும்மா.. நீங்க எல்லாம் பண்ணின தப்புக்கு இன்னிக்கி நாங்க படறோம்"

"நாங்க என்னடா பண்ணினோம்"

"என்ன பண்ணல... எக்கச்சக்கமா காசு வாங்கற ஸ்கூல் தான் நல்ல ஸ்கூல்னு நீங்களே ஏத்தி விட்டு இப்ப கொட்டி குடுத்தாலும் சீட் இல்லைங்கற கதை ஆய்டுச்சு"

"உன்னோட நல்லதுக்கு தானே...."

"என்னோட நல்லதுக்குனு... இப்போ அடுத்த தலைமுறை தானே கஷ்டப்படுது"

"ஆனாலும்.... "

"என்ன ஆனாலும்...? உங்க காலத்துல சீட்டுக்கு மட்டும் பணம்... இப்போ அட்மிசன்  கோச்சிங் க்ளாஸ்க்கு பணம், என்ட்ரன்ஸ் எக்ஸாம் பீஸ் இன்னும்  லிஸ்ட் போட்டுட்டே போகலாம். இதுக்கே நாலு பேரு சம்பாதிக்கணும்"

"இப்ப என்ன பண்ண சொல்ற?"

"ஏன் கேக்க மாட்ட...? உன் கடமை எல்லாம் முடிஞ்சதல்ல? அப்பவே டொனேசன்  எல்லாம் குடுக்க மாட்டோம். எங்க புள்ளைகள கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க வெச்சுக்கறோம்னு நீங்க உறுதியா இருந்திருந்தா இன்னிக்கி இந்த நெலம வந்திருக்குமா?"

"யாருக்கு தெரியும் இப்படி எல்லாம் ஆகும்னு. அந்த காலத்துல எல்லாம் குழந்தை பிறக்கற வரை ஒரு துண்டு துணி கூட வாங்க மாட்டோம், இப்ப புள்ள உண்டாகறதுக்கு முந்தியே கணவன் மனைவி... "

"புள்ள உண்டாகறதுக்கு முந்தினு சிம்பிளா சொல்லாத... அட்மிசன் கார்டு கவர்மென்ட் கிட்ட சப்மிட் பண்ணினா தான் "பேபி பெர்மிட்" (குழந்தை பெத்துக்க லைசென்ஸ்) கெடைக்கும். சரி நீ போன் வெய்மா... நான் உன் மருமக ஸ்ருதிய எப்படியாச்சும் தாஜா பண்ணி கோச்சிங் க்ளாஸ்க்கு கூட்டிட்டு போறேன்... நேரமாச்சு" என்றபடி மணியை பார்த்தான் சிவா

கடிகாரம் : வருடம் 2050 - June 9 : காலை ஆறு மணி என்றது

இப்ப படிக்கறப்ப சிரிப்பா தோணினாலும் இந்த நெலமை வரத்தான் போகுது... அதுல சந்தேகமில்ல...

கடசீல வெச்சம்ல்ல மெசேஜூ...

என் இனிய தமிழ் மக்களே:  இந்த கதைக்கு நான் பொறுப்பில்ல... சிவனேன்னு  தொடர் கதை எழுதிட்டு இருந்தவளை, உனக்கு சிறுகதை குறுங்கதை எல்லாம் எழுத தெரியாதான்னு வம்பு பண்ணினது ஹுஸைனம்மா தான்...  அதான் இப்போ இந்த சின்ன torture ... (ஹி ஹி ஹி... பழிய அவங்க மேல போட்டாச்சு... ஹய்யா... ஜாலி... )

Monday, June 07, 2010

உயிரின் விலை..... ஒரு லட்சமா?The mangled remains of the mini bus that was hit by the Coimbatore-Mettupalayam special train at an unmanned level-crossing at Idigarai near Coimbatore on Friday. Five people were killed in the accident. Photo: Courtesy "The Hindu"

கோயம்புத்தூர் டு மேட்டுபாளையம் ரயில் ஒரு நாளைக்கி ரெண்டு தடவை மட்டும் போய்கிட்டு இருந்தது. நாலு நாள் முன்னாடி தான் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு ஜூன் ஒன்னாம் தேதி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு ரயில் ஓட ஆரம்பிச்சது

அந்த ரயில் தொடங்கி நாலாவது நாள் (ஜூன் 4th ) கோரமா ஒரு விபத்து அஞ்சு பிஞ்சு உயிர்கள பலி வாங்கிடுச்சு

கோயம்புத்தூர் டவுன்ல இருந்து இருபது கிலோமீட்டர் தூரம் பெரியநாயக்கன்பாளையம்

பெரியநாயக்கன்பாளையத்துக்கும் அதுக்கு பக்கத்து ஊர் நரசிம்மநாயக்கன்பாளையத்துக்கும்  நடுவுல ட்ரெயின் வந்துட்டு இருந்தப்ப ஒரு ஆள் இல்லாத லெவல் crossing ல ஒரு மினி பஸ் ரயில் தண்டவாளத்த கடக்க முயற்சி செஞ்சு இருக்கு

ட்ரெயின் கண்ணுக்கு தெரியற தூரத்துல வந்துட்டு இருக்கறத பாத்தும் பஸ்ல இருக்கறவங்க ட்ரெயின் வருது போகாதேனு சொல்லியும் கேக்கமா தண்டவாளத்துல அந்த பக்கம் நின்னுட்டு இருந்த மக்கள் வராதேனு சைகை காட்டியும் அதை எல்லாம் காதுல போட்டுக்காம அந்த மினி பஸ் டிரைவர் தண்டவாளத்த கடக்க முயற்சி செஞ்சு இருக்கான்

ஆனா கடக்க முடியல. ட்ரெயின் பிரேக் போட முயற்சி செஞ்சும் பஸ்யோட பின்னாடி பக்கத்துல மோதி ரெம்ப தூரம் இழுத்துட்டு போய் இருக்கு

அந்த மினி பஸ் டிரைவர் பஸ்ல இருந்து குதிச்சு தப்பிச்சி ஓடிட்டான்

அந்த விபத்துல ஸ்கூல் மற்றும் காலேஜ் பிள்ளைகள் அஞ்சு பேரு உயிர் போய்டுச்சுங்க. அதுல ஒரு பிள்ளை எங்க பின் வீட்டு அக்காவோட பையன். அவனுக்கு பேரு செலக்ட் பண்ணினது நாங்க தான்

நேத்து நைட் ஊருக்கு பேசினப்ப அம்மா சொன்னாங்க இந்த மாதிரி ஆய்டுச்சுன்னு. என்னால ராத்திரி பூரா தூங்கவே முடியல. அந்த பையன ரெண்டு வயசு பிள்ளையா பாத்தது. அப்புறம் அவங்க எடம் மாறி அதிகம் தொடர்பு இல்லாம போச்சு

யோசிச்சு பாருங்களேன்.. பன்னண்டு வருஷம் புள்ளைய வளத்து எமனுக்கு வாரி குடுக்கறதுன்னா அந்த தாய் மனசு என்ன பாடு படும்... எனக்கே ஒரு நாள் தூக்கம் தொலைஞ்சு போச்சுன்னா அந்த அம்மா இனி கண்ணு மூட முடியுமா?

உடனே அதிகாரிகள் கலெக்டர் எல்லாம் சம்பவ இடத்துக்கு வந்து ரயில்வே கேட் போடணும்னு தீர்மானம் போட்டு இருக்காங்களாம். இதை மொதலே செஞ்சு இருந்தா அஞ்சு உயிர் போய் இருக்காதே

அப்போ ஒரு ஒரு எடத்துலயும் உயிர் பலி ஆனதுக்கு அப்புறம் தான் நடவடிக்கை எடுபாங்கன்னா ஊரு முழுக்க எத்தனை தாய்களோட தூக்கம் தொலயணும், எத்தனை குடும்பங்கள் கண்ணீருல கரையணும்

ஹிந்து பேப்பர்ல வந்து இருக்கற இந்த செய்திய பாத்து இன்னும் கோபம் அதிகம் தான் ஆச்சு. நீங்களே படிங்க இதை

"The bus driver was unaware of the time at which the train would cross the level crossing, as the service was introduced only on June 1 . According to eyewitness accounts and the police quoting the injured passengers, the bus driver noticed the train only after getting into the level crossing area . The driver, who had joined service only recently, is said to have jumped off the bus and escaped "

இதை படிச்சா உங்களுக்கே கோபம் வரலையா? புதுசா போட்ட ட்ரெயின்ங்கறதால டிரைவர்க்கு ட்ரெயின் டைம் தெரியலயாம். என்னங்க கொடுமையான விளக்கம் இது? ட்ரெயின் டைம் தெரியாது சரி... இடிக்கற அளவுக்கு பக்கத்துல வந்துட்ட ட்ரெயின் கண்ணுக்கு கூடவா தெரியாம போய்டும்

பஸ்ல முன் பக்கம் இருந்ததால ட்ரைன்ல அடிபடாம தப்பிச்சவங்க சொன்னது "வேண்டாம்னு சொல்லியும் அந்த டிரைவர் நிறுத்தல. சீக்கரம் போய்டலாம்னு ஓட்டினான்"

அப்படி என்னங்க அவசரம்? ஒரு நிமிஷம் நின்னு இருந்தா அந்த அஞ்சு பிள்ளைக உயிரோட இருந்து இருக்குமே.... அவன் மேல தப்பு இல்லைனா அந்த டிரைவர் ஏன் தப்பிச்சு ஓடனும்? அதுவும் புதுசா வேலைக்கி சேந்தவனாம்

இதுல இன்னொரு நியூஸ் ஹிண்டுல "..........has ordered a solatium of Rs 1 lakh each to the families of the five persons who died in the accident "

அப்போ உயிரோட விலை "ஒரு லட்சமா?". இந்த அஞ்சு லட்ச ரூபாயை மொதலே செலவு பண்ணி அங்க ஒரு ரயில்வே கேட் போட்டு இருந்தா இன்னிக்கி அஞ்சு உயிர காப்பாத்தி இருக்கலாமே...

இதுல யார் மேல தப்பு சொல்றது? யாரு மேல தப்பு சொன்னாலும் போன உயிர் போனது தானே

எனக்கு இதுக்கு மேல எழுத கூட முடியலைங்க... பக்கத்துக்கு வீட்டு அக்கா குழந்தை பெத்து hospital ல இருந்து வந்த அன்னைக்கி ராத்திரி பத்து மணி வரை அந்த குழந்தைய மடில போட்டு விளையாடினவ நான்...

ஒரே பிள்ளை அவங்களுக்கு... இன்னொரு பிள்ளை கூட இல்லையே... அடுத்த முறை ஊருக்கு போறப்ப அந்த அக்காவை எப்படி பாக்க போறேன்னு கலக்கமா இருக்கு....

நாலு நாள் துக்கம் கொண்டாடிட்டு நான் வேற ஒரு கவிதையோ கதையோ எழுத ஆரம்பிச்சுடுவேன் ... அந்த குடும்பதோட துக்கம் உள்ள வரை தீருமா?

உயிர்வலிக்க உணர்ந்து
உதித்ததன் பிள்ளை
உதிரம் உறைந்துகிடக்க
உறக்கமேது இனிஅத்தாய்க்கு!!!

(சனிக்கிழமையே போடணும்னு எழுதினது... ப்ளாக் ஏதோ பிரச்சனை ஆனதால இப்போ தான் போஸ்ட் பண்ண முடிஞ்சுது...)