Saturday, June 19, 2010

என்னோட ஹீரோ....


நாளைக்கி அப்பாக்கள் தினம்... ஒரு சிறப்பு பதிவு போடலாம்னு ஆசை.... அதான் இங்க...

"இந்த ஒரு நாள் தான் அப்பாவை நினைக்கணுமா?"னு நீங்க கேக்கலாம். அப்பாவை எல்லாம் எப்படிங்க ஒரு நாளாச்சும் மறக்கறது, மறந்தா தானே நெனைக்க....

இந்த நாள் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல்ஆ அப்பாவை மட்டும் நெனைக்கறதுக்கான நாள்னு எனக்கு தோணுது

என்னடா இவ "என்னோட ஹீரோ..." னு டாபிக் வெச்சுட்டு என்ன என்னமோ சொல்றான்னு யோசிக்கரீங்களோ.... பொதுவா சொல்லுவாங்க பெண் குழந்தை இல்லாத வீட்டுல அந்த அம்மாதான் ஹீரோயின்னு அதே போல ஆண் பிள்ளைகள் இல்லாத வீட்டுல அப்பா தான் ever - lasting ஹீரோ

எங்க வீட்டுல அதே கதை தான்... அப்பா தான் எங்களுக்கு ஹீரோ... அப்பா சொல்றதுக்கு மீறி எது செஞ்சாலும் சரி வராதோன்னு ஒரு knot மனசுல சின்னதுலையே விழுந்துடுச்சு என்னையும் அறியாம

அதே போல எதாச்சும் விசியத்த அப்பா (அம்மாவும் தான்) கிட்ட மறைக்க வேண்டி வந்தா அது சரியானதில்லைனும் நாம் போற பாதை தப்புன்னும் பதிஞ்சு போச்சு...

இன்னைக்கு அது அப்படியே ரங்க்ஸ் கிட்ட தொடருது... தாய்க்கு பின் தாரம்னா... அப்பாவுக்கு பின் அவர் தானே... (ரெம்ப பேசறனோ...)

எங்க அப்பா - எல்லா அப்பாக்கள் போலவும் ஸ்பெஷல் அப்பா தான். அவங்க அவங்க அப்பா அவங்க அவங்களுக்கு ஸ்பெஷல் தானே

நான் பிறந்து அப்புறம் என் தங்கையும் பிறந்தப்ப எங்க அப்பாவை பாத்து சிலர் சொன்ன கமெண்ட் "ஆஹா... கஞ்சனுக்கு பொண்ணு பொறந்துருக்கு....அதுவும் ரெண்டும் பொண்ணு"

அதுக்கு எங்க அப்பா சொன்ன பதில் "கஞ்சனுக்கு தான் பொண்ணு பொறக்கணும்....ஊதாரிக்கி பொறந்தா எப்படி கரை சேக்கறது". என்ன ஒரு சூப்பர் பஞ்ச் டயலாக் இல்லிங்க. இதை எங்க அம்மா அடிக்கடி பெருமையா சொல்லுவாங்க

எனக்கு நினைவு தெரிஞ்சு ஒரு நாள் கூட என்னை அடிச்சதில்ல. ஆனா எக்க சக்கமா கோவம் வரும். கன்னா பின்னானு திட்டிட்டு ரெண்டு நாள் பேச மாட்டார்... அப்பறம் எங்க அம்மா மூலமா தூது வரும்

எனக்கு எங்க அம்மா எவ்ளோ திட்டினாலும் "உப்..."னு ஊதிட்டு போய்டுவேன்.... ஆனா அப்பானா டென்ஷன் தான்.... அது ஏன்னு இப்ப வரைக்கும் புரியல

நாங்க ஹை ஸ்கூல் எல்லாம் போற வரை நாங்க என்ன க்ளாஸ் படிக்கறோம்னு கூட எங்க அப்பாவுக்கு சரியா தெரியாது. எப்பவும் பிசினஸ் / வேலை இதே தான்

வேலைய விடவும் பயம், அதனால evening ஷிப்ட் வேலை பகல்ல பிசினஸ்னு ரெட்டை குதிரை சவாரி... பிசினஸ் நல்லா settle ஆன வரை இப்படி தான்....இப்போ நெனச்சா அந்த கஷ்டம் என்னன்னு புரியுது... அப்ப புரியல

தாத்தாவுக்கு பஞ்சு வியாபாரம் தான்.... அதே தான் அப்பாவும் + textile கம்பெனில வேலை. அப்புறம் நான் பிறந்தப்புறம் textile கம்பெனி ஆரம்பிச்சு ... கொஞ்சம் விவசாயம் கூட நான் ரெம்ப சின்னதுல இருந்ததா ஞாபகம்... எட்டாவது வரைக்கும் தான் படிப்பு... ஆனா உலக ஞானம் எக்க சக்கம்....

நான் எங்க அப்பாவை வா போ னு தான் சொல்லுவேன். வாங்க போங்கனு பேசினா யாரோ third - person மாதிரி தோணும்.... அப்பாவும் அதேயே ரசிச்சதால இப்பவும் அப்படி தான்

எக்க சக்கமா செல்லமும் குடுப்பார்... கண்டிப்புன்னு ஆரம்பிச்சா அவ்ளோ தான்

எல்லா அப்பா போலவே எங்க அப்பாவும் ஓவர்-protective தான்.... சாயங்காலம் கம்ப்யூட்டர் க்ளாஸ்ல பத்து நிமிஷம் லேட் ஆனா... கம்ப்யூட்டர் சென்ட்டர் முன்னாடி அப்பா பைக் சத்தம் கேக்கும்

ஆனா அந்த வயசுல அதை அக்கறை / பாசம் / protectiveness னு எடுத்துக்க தோணல

"என் மேல உனக்கு சந்தேகமா... நம்பிக்கை இல்லையா.... நான் என்ன கொழந்தையா" னு வார்த்தையால வதைச்சு இருக்கேன்

ஆனா அதையும் வளந்த குழந்தையோட மழலையா தான் எல்லா அப்பாக்களும் எடுத்துப்பாங்க போல, எங்க அப்பாவும் அப்படியே

தான் படிக்கலைனாலும் எங்களை நல்லா படிக்கவெக்கனும்னு ரெம்ப ஆசை.... நாங்க ஒரு ஒரு படி மேல போறப்பவும் அவர் முகத்துல மத்தவங்க முன்னாடி தெரியிற பெருமிதத்துகாகவே இன்னும் சாதிக்கணும்னு தோணும்...

அவர் ஆசைப்படியே எங்க ஊர்லையே ஒரு காலேஜ்ல lecturer ஆனேன்...எனக்கும் டீச்சிங் தான் இஷ்டமா இருந்தது ... ஆஹா... நான் மொதல் நாள் வேலைக்கி போன  அன்னிக்கி பாக்கணுமே அவர் முகத்த... சான்சே இல்லிங்க....

"இவ எல்லாம் பெரிய மேடம் ஆய்ட்டா... இனி நம்மள எங்க கண்டுக்க போறா" னு எங்க மாமாகிட்ட கிண்டல் பண்ற மாதிரி பெருமையா சொன்னாரு... இப்போ நெனைக்கரப்ப கூட சந்தோசமா இருக்கு அந்த உணர்வு

என்னோட கல்யாணதன்னைக்கி "தாரை வார்த்து குடுக்கரப்ப" எங்க அப்பா அழுதது வீடியோல அப்படியே இருக்கும். அதை பாக்குறப்ப எல்லாம் நான் ஓவர் சென்டியாயிடுவேன்

அதுக்கு என்னோட தங்கை சொல்ற கமெண்ட் "அது ஒண்ணுமில்லடி... அப்பாடானு சந்தோசத்துல ஆனந்த கண்ணீர்" னு கலாய்ப்பா

அதுக்கு மேல இருக்கும் ரங்க்ஸ் சொல்ற விளக்கம் "நல்லா பாரு... அவர் நம்ம கல்யாணத்துல என்னை பாத்து அழற மாதிரி தான் எனக்கு தோணுது....ஐயோ பாவம் சிக்கிட்டான்"னு வம்பு பண்ணுவார்

இப்பவும் நான் ஒரு ஒரு முறை ஊருக்கு லீவுக்கு போயிட்டு கிளம்பறப்ப airport ல நான் அப்பா முகத்த நேருக்கு நேரா பாக்கவே மாட்டேன். அம்மா அந்த வகைல கொஞ்சம் தைரியம் பண்ணிக்குவாங்க. அப்பா செம sensitive என்னை போலவே

ஹா ஹா ஹா... மாத்தி சொல்றேன்... அப்பாவ போலவே நான் ரெம்ப sensitive

ரெண்டு வருஷம் ஆச்சு அப்பாவ பாத்து... வாரத்துக்கு ரெண்டு தரம் போன் பேசினாலும் எப்போ பாப்போம்னு இருக்கு.... தங்கையும் நானும் turn வெச்சுட்டு வேற வேற நாள் பேசுவோம்... தினமும் ஒருத்தராச்சும் பேசற மாதிரி இருந்தா நல்லா இருக்குமேன்னு...

புதன் காலை சனிக்கிழமை காலை போன் பக்கத்துலையே உக்காந்துட்டு இருப்பார்... போன் அடிச்சதும் "ஹலோ" கூட சொல்ல மாட்டார் "சாமி நல்லா இருக்கியா?" னு தான் ஆரம்பிப்பார். நானாத்தான் இருக்கும்னு ஒரு நம்பிக்கை

அதாங்க நமக்கான ஆதாரம். ரங்க்ஸ் சொல்லுவார்  "நம்ம அப்பா அம்மா இருக்கற வரை தான் நமக்கு  இந்த உணர்வு சாத்தியம். அவங்க தான் நம்மள எப்பவும் குழந்தையா பெருமிதமா பாப்பாங்க. அப்புறம் எத்தனை பேரு இருந்தாலும் அது வேற தான்"

ஒரு வாசகம்னாலும் திருவாசகம் தான் இது

அக்டோபர்ல ஊருக்கு  போவோம்னு நெனைக்கிறேன்... count-down ஸ்டார்ட் ஆய்டுச்சு இப்போவே அங்கயும் இங்கயும்...

எங்க அப்பாவ பத்தி பேசினா பேசிட்டே இருப்பேன்... உங்களுக்கு தான் போர் அடிக்கும்...

"அபியும் நானும்" படம் பாத்துட்டு ஓவரா கொசுவத்தி சுத்தி அப்பா புராணம் பாடி ரங்க்ஸ் அன்னிக்கி நொந்துட்டார்... (இப்ப நாங்களும் தான்னு சொல்றீங்களா....)

சரிங்க.... அப்புறம் பாப்போம்...

பிஞ்சுபாதம் கொஞ்சி
பிறவிப்பயன நீஅடஞ்ச
நடக்கநீதான் கத்துகுடுத்த
நாலும்மேலும் சொல்லிதந்த!

காலுரெண்டு தான்மொளச்சு
கைய பிச்சுகிட்டுஓடினப்ப
பிரிவுக்கு ஒத்திகைனு
பதறித்தான் போனநீயும்!

பேசினஎன் ஆங்கிலத்த
புரியாமையும் நீரசிச்ச
அன்புக்கு மொழியேது
அப்போநான் அறியலியே!

நாட்டுநடப்பும் வீட்டுநடப்பும்
நல்லதும் கெட்டதும்கூட
தெரியணுமுன்னு சொல்லித்தந்த
தங்கமாத்தான் என்னவளத்த!

இத்தனையும் செஞ்சநீ
இதமட்டும் ஏன்மறந்த
உன்னபிரிஞ்சு வாழத்தான்
உரியபக்குவம் சொல்லலியே!

சீக்கரம் வந்துசேந்துடுவேன்
சிரிச்சுதான் இருப்போம்நாமும்
அந்தநாள் கனவுலதான்
அனுதினமும் கண்முழிப்பேன்!!! 

உலகின் எல்லா அப்பாக்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்... Happy Fathers day..................

56 பேரு சொல்லி இருக்காக:

Krishnaveni said...

wow...what a touching post...fabulous..."நம்ம அப்பா அம்மா இருக்கற வரை தான் நமக்கு இந்த உணர்வு சாத்தியம். அவங்க தான் நம்மள எப்பவும் குழந்தையா பெருமிதமா பாப்பாங்க. அப்புறம் எத்தனை பேரு இருந்தாலும் அது வேற தான்"
Aaayirathil oru vaarthai. Happy fathers day

சுசி said...

//இத்தனையும் செஞ்சநீ
இதமட்டும் ஏன்மறந்த
உன்னபிரிஞ்சு வாழத்தான்
உரியபக்குவம் சொல்லலியே!//

உங்க அப்பாவுக்கும், என் அப்பாவுக்கும், எல்லா அப்பாக்களுக்கும் வாழ்த்துக்கள்.

வேற வார்த்தைகள் வர்ல புவனா..

அனாமிகா துவாரகன் said...

எனக்கு இந்த அப்பாக்கள் தினம் அன்னையர் தினம் எல்லாம் எப்பன்னே தெரியாது. தெரிஞ்சுக்கவும் இஷ்டமில்லை. =)) இன்னைக்கு அபியும் நானும் பாத்திட்டு டென்ஷன்ல அவங்கள் எழுத வர அப்பாக்கள் தினம்னு சொல்லிட்டீங்க. இப்ப அதை போஸ்ட் பண்ணவா வேண்டாமா?

அப்புறம் உங்க அப்பா செஞ்ச வில்லத்தனம் பத்தி எழுதவே இல்லையே. எங்க அதிம்பேர் தலையில் உங்கள கட்டணும்னு அவர் போட்ட பிளான் வெர்க்கவுட் ஆயிடுச்சுன்னு ஒரு பிட்டு போட்டிருக்கலாமே. ஹி ஹி.


இப்படிக்கு,
மின்னல் அக்க அந்திராஸ் அனாமிகா,
தலைவர்
அந்திம்பேர்களோட‌ கண்ணீர் துடைக்கும் சங்கம்
ஆஸ்ரேலிய கிளை.

அனாமிகா துவாரகன் said...

அவங்கள் *திட்டி* எழுத வர...

பத்மநாபன் said...

அருமை ..இப்படி பாசக்கார பெண்ணைப்பெற்ற அப்பா நிச்சயம் கொடுத்து வைத்தவர் ...அப்பா க்கள் வாழ்க..

அபி அப்பா said...

அன்பு புவனா! அபி ஒரு பதிவு எழுதி வச்சிருக்கா. கிட்ட தட்ட இது அது மாதிரி இருக்கு. அபிக்கு நான் ஒரு நல்ல அப்பாவா இருந்திருக்கேனான்னு அப்பப்ப ஒரு சந்தேகம் எட்டி பார்க்கும். ஆனா அவ எழுதினதை பார்க்கும் போதும், இப்ப நீங்க எழுதினதை பார்க்கும் போதும் தேங் காட்...

எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு இந்த பதிவை பார்க்கும் போது.

பை தி பை என் பதிவிலே நீங்க கேட்ட கேள்விக்கு பதில்.

அபியும் நானும் படம் மாதிரி நட்ராஜ் ஸ்கூல் போகும் போது நீங்க படிச்சுட்டு போனீங்களா?

ம் படிச்சேன். அமலாவை கண்டுபிடிச்சது ராஜேந்தர் என்பதை தவிர எல்லா கேள்வியையும் ச்சாய்ஸ்ல விட்டுட்டேன்:-)))

மகி said...

மிக யதார்த்தமா அப்பா-பொண்ணு பாசத்தை சொல்லிருக்கீங்க புவனா!
வழக்கப் போல அழகான பதிவு.

ஹேமா said...

வார்த்தைகள் அடைத்து நெகிழ்கிறது தோழி.
பெற்றவர்கள் அமைவதும் ஒருவகை அதிஸ்டமே !வாழ்த்துகள்....எல்லா அப்பாக்களுக்கும்.

பி.திரவிய நடராஜன் said...

இப்பவாவது எங்க அருமை உங்களுக்கு தெரிந்ததே! ரெம்ப சந்தோஷம்.

சின்ன அம்மிணி said...

எல்லா பொண்ணுங்களுக்கு அப்பான்னா ஸ்பெஷல்தான்.
எல்லா தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

Madumitha said...

மனசைத் தொடுகிறது
உங்கள் பதிவு.
உங்களுக்கும்
உங்கள்
அப்பாக்கும்
வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

ரங்க்சோட திருவாசகம் உண்மை.
நெகிழ்ச்சியான பதிவு, சற்றே நகைச்சுவையுடன்.
கவிதையும் நெஞ்சைத் தொட்டது.

LK said...

//
இன்னைக்கு அது அப்படியே ரங்க்ஸ் கிட்ட தொடருது... தாய்க்கு பின் தாரம்னா... அப்பாவுக்கு பின் அவர் தானே... //

கல்யாணம் வரைக்கும் அப்பாவ திட்றது அப்புறம் இப்படி சொல்றது

//இத்தனையும் செஞ்சநீ
இதமட்டும் ஏன்மறந்த
உன்னபிரிஞ்சு வாழத்தான்
உரியபக்குவம் சொல்லலியேஇத்தனையும் செஞ்சநீ
இதமட்டும் ஏன்மறந்த
உன்னபிரிஞ்சு வாழத்தான்
உரியபக்குவம் சொல்லலியே///
கிண்டல் பண்ணத்தான் வந்தேன்.. ஆனால் இந்த வரிகள் கலங்க வைத்துவிட்டன

ராமலக்ஷ்மி said...

அருமை புவனா. மிக நெகிழ்வான பதிவு.

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

asiya omar said...

அருமையான இடுகை.போரடிக்கலை,இன்னும் நிறைய எழுதுங்க,அனைத்து அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

தக்குடுபாண்டி said...

தலைப்பை பாத்துட்டு நான் கூட தக்குடுவை பத்திதான் எதோ எழுதியிருப்பேள்னு நினைச்சுண்டேன்!!...:))

உங்க நைனாவுக்கு பொறுமை அதிகம்தான்!!!..:))

அஹமது இர்ஷாத் said...

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

அநன்யா மஹாதேவன் said...

//என்னோட கல்யாணதன்னைக்கி "தாரை வார்த்து குடுக்கரப்ப" எங்க அப்பா அழுதது வீடியோல அப்படியே இருக்கும். அதை பாக்குறப்ப எல்லாம் நான் ஓவர் சென்டியாயிடுவேன்

அதுக்கு என்னோட தங்கை சொல்ற கமெண்ட் "அது ஒண்ணுமில்லடி... அப்பாடானு சந்தோசத்துல ஆனந்த கண்ணீர்" னு கலாய்ப்பா

அதுக்கு மேல இருக்கும் ரங்க்ஸ் சொல்ற விளக்கம் "நல்லா பாரு... அவர் நம்ம கல்யாணத்துல என்னை பாத்து அழற மாதிரி தான் எனக்கு தோணுது....ஐயோ பாவம் சிக்கிட்டான்"னு வம்பு பண்ணுவார்
// அதெப்படி புவனா வீட்டுக்குவீடு அதே டயலாக் தொடருது? சூப்பர்ப்பு.. இங்கே என் ரங்க்ஸ் என்னை இவர் கூட அனுப்பும்போது எங்கம்மா மாப்பிள்ளை, நீங்க......... உங்களை பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொன்னாங்களாம்.. ஊரெல்லாம் சொல்லிண்டு அலையறது!

எனக்கு இந்த டேஸ்ல எல்லாம் நம்பிக்கை லேது. இருந்தாலும் அப்பாவைப்பத்தி நினைவுகள் ரொம்பவும் அழகா வந்திருக்கு. ஐ லெள யூ டாரின்னு ஒரு குட்டிப்பொண்ணு அண்ணாந்து பார்த்து சொல்ற மாதிரி இருந்தது! க்யூட்!

Anonymous said...

idula enna NAGAICHUVAI irukku madam?? ida en NAGAICHUVAI labela pottu irukinga??? kettadu thappuna mannichikonga...

geetha santhanam said...

அருமையான் பதிவு. நெஞ்சைத் தொடும் வார்த்தைகள்.

//ஆனா அதையும் வளந்த குழந்தையோட மழலையா தான் எல்லா அப்பாக்களும் எடுத்துப்பாங்க
போல///
///காலுரெண்டு தான்மொளச்சு
கைய பிச்சுகிட்டுஓடினப்ப
பிரிவுக்கு ஒத்திகைனு
பதறித்தான் போனநீயும்!//

வரிகளை மிகவும் ரசித்தேன். ---கீதா

Karthick Chidambaram said...

//வளந்த குழந்தையோட மழலையா தான் எல்லா அப்பாக்களும் எடுத்துப்பாங்க போல, எங்க அப்பாவும் அப்படியே//

இது உண்மை சகோதரி. வாழ்த்துக்கள். உங்க அப்பாவிடம் - "ஏன் உங்கள் திருமணத்தில் கண் கலங்கினார் ?" என்று கேடீர்களா இல்லையா ? உங்கள் மூவரில் யார் சொல்வது உண்மை என்று அவருக்குத்தானே தெரியும்.

ஜெய்லானி said...

பாராட்ட நிறைய இருக்கு .. வாழ்த்துக்கள் ...

தந்தையர் தின வாழ்த்துக்கள்.

அப்பாவி புத்திசாலியா ஆகிட்டு வருது ஹி..ஹி..

தமிழ் உதயம் said...

அதுக்கு எங்க அப்பா சொன்ன பதில் "கஞ்சனுக்கு தான் பொண்ணு பொறக்கணும்....ஊதாரிக்கி பொறந்தா எப்படி கரை சேக்கறது". என்ன ஒரு சூப்பர் பஞ்ச் டயலாக் இல்லிங்க.

என்னையும் கவர்ந்துவிட்டார் உங்க ஹீரோ.

பேநா மூடி said...

Father's day nu onnu special ah ethuku.. al day mummy day than daddy day than

புதுகைத் தென்றல் said...

ரொம்ப அழகா உங்க உணர்வுகளைப் பதிஞ்சிருக்கீங்க.

பாராட்டுக்கள்

செ.சரவணக்குமார் said...

அப்பாக்கள் எப்போதுமே கிரேட் தாங்க.

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.

நெகிழ்வாகவும்..

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

உஸ்..அப்பாடா..முடிஞ்சுதா?

ஸாரிங்க.....உண்மையிலேயே நல்லா இருந்தது!!!

அமைதிச்சாரல் said...

கொடுத்து வெச்சவங்க நீங்க!!!!

ப்ரியமுடன்...வசந்த் said...

http://i717.photobucket.com/albums/ww173/prestonjjrtr/Holidays/FathersDayDancingLetters.gif

manasu said...

வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

ஆஹா ஆஹா ! குபீர்ன்னு சிரிச்சுட்டேன். அப்படியே அனன்யா பின்னூட்டத்தை டெல்லிகணேஷ், கமல்-ஊர்வசி ஜோடியாக இந்த காம்பினேஷன்ல விஷூவலைஸ் பண்ணி பாருங்க எல்லோரும். 100% சிரிப்பு உத்தரவாதம்

Riyas said...

அருமையான பதிவு சார்.. வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல செண்ட்டியான பதிவுங்க..

இராமசாமி கண்ணண் said...

அப்பாக்கள் எப்பவுமே கிரேட்தாங்க.

கமலேஷ் said...

தந்தையர் தின வாழ்த்துக்கள் ...
நல்ல பகிர்வு மற்றும் கவிதை...

LK said...

when is the next part of the story.. seekiram varaati unga new veetuku auto anupapadum endru eccharikiren

SenthilMohan K Appaji said...

ஏங்க்கா?...உங்க பேர் தங்கமணி இல்லையா..?

sandhya said...

புவனா இந்த பதிவு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு பா ..உங்களை போல் ஒரு பொண்ணே பெத்த உங்க அப்பா அம்மாக்கு என் வணக்கம் +வாழ்த்துக்கள் தெறிவிக்கிறேன்..

என் அப்பா இந்த உலகத்தே விட்டு போயிட்டா ஆனா இன்னும் என் நெஞ்சில் அப்பிடியே தான் இருக்கா ...

உங்க எழுத்து படிக்கச்சே சில இடங்களில் சிரிப்பும் அழுகையும் வந்தது ..."கஞ்சனுக்கு தான் பொண்ணு பொறக்கணும்....ஊதாரிக்கி பொறந்தா எப்படி கரை சேக்கறது". என்ன ஒரு சூப்பர் பஞ்ச் டயலாக் இல்லிங்க. இதை எங்க அம்மா அடிக்கடி பெருமையா சொல்லுவாங்க "

உங்க அப்பா மனது மேலே சொன்னது படிக்கறச்சே நல்லா புரியறது ...

உங்க" ரங்கஸ் " சொன்னது உண்மை தான் ...

sriram said...

//அநன்யா மஹாதேவன் சொன்னது…
அதெப்படி புவனா வீட்டுக்குவீடு அதே டயலாக் தொடருது? சூப்பர்ப்பு.. இங்கே என் ரங்க்ஸ் என்னை இவர் கூட அனுப்பும்போது எங்கம்மா மாப்பிள்ளை, நீங்க......... உங்களை பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொன்னாங்களாம்.. ஊரெல்லாம் சொல்லிண்டு அலையறது!//

ஹலோ ஹலோ திஸ் இஸ் தி லிமிட்.. இதுக்கு மேல ரங்கமணிகளை Aunties Group கலாய்ப்பதை அனுமதிக்க முடியாது!!!!!
எல்லா வீட்டிலேயும் இருக்குன்னு அது Universal TRUTH - அப்படித்தான் இருக்கும்.
அலையறதுன்னு எல்லாம் சொல்றதை இனிமேலும் பொறுக்க முடியாது - சொல்லிட்டேன்....

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நிரந்தரத் தலைவர்
ரங்கமணிகள் உரிமை கோரும் கழகம்
தலைமையகம் - பாஸ்டன்

vanathy said...

தங்ஸ், சூப்பர். அருமையா எழுதி இருக்கின்றீர்கள்.

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி. ஆமா ஆயிரத்தில் ஒரு வார்த்தை தாங்க...

@ சுசி - ரெம்ப நன்றிங்க சுசி

@ அனாமிகா - அடிப்பாவி..... நான் எவ்ளோ பீலிங்கா எழுதினாலும் என்னை காமெடி பீசாவே பாக்குறேயே.... உன்ன.... என்ன பண்ணலாம்? ம்ம்ம்ம்..... ஒகே.. சுபஷ்ய சீக்ரம்... புரியலையா.....? .சீக்கரமா மாட்டிகிட்டு முழிக்க வாழ்த்துக்கள்

//அப்புறம் உங்க அப்பா செஞ்ச வில்லத்தனம் பத்தி எழுதவே இல்லையே. எங்க அதிம்பேர் தலையில் உங்கள கட்டணும்னு அவர் போட்ட பிளான் வெர்க்கவுட் ஆயிடுச்சுன்னு ஒரு பிட்டு போட்டிருக்கலாமே. ஹி ஹி.//
இதை அவரே மறந்தாலும் நீ மறக்க மாட்ட போல இருக்கே... (உலகமே நமக்கு எதிராதான் இருக்கு போல...ஹும்...)

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க

@ அபி அப்பா - நன்றிங்க அபி அப்பா. நீங்க சொன்னப்புறம் அபி எழுதினத படிக்கணும்னு தோணுது..... போஸ்ட் பண்ணுங்களேன் முடிஞ்சா

அமலாவை கண்டுபிடிச்சது ராஜேந்தர் என்பதை தவிர எல்லா கேள்வியையும் ச்சாய்ஸ்ல விட்டுட்டுடீங்களா.... ஹா ஹா ஹா.. சூப்பர்.. அது எந்த ஸ்கூல்ங்க அது? அட்வான்ஸ் booking பண்ணிடறோம்... ஹா ஹா ஹா

@ மகி - நன்றிங்க மகி

@ ஹேமா - ரெம்ப நன்றிங்க ஹேமா. சரியா சொன்னீங்க....

அப்பாவி தங்கமணி said...

@ பி.திரவிய நடராஜன் - இப்ப இல்லிங்க எப்பவும் அப்பாக்கள் அருமை எல்லா பிள்ளைகளுக்கும் தெரியும்.... அதை மனசு விட்டு சொல்ற வயசும் பக்குவமும் வர்றப்ப இப்படி வெளிப்படும்... நன்றிங்க ஐயா

@ சின்ன அம்மணி - உண்ம தாங்க அம்மணி. நன்றிங்க

@ Madumitha - ரெம்ப நன்றிங்க மது

@ ஸ்ரீராம் - ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி said...

@ LK -
//கல்யாணம் வரைக்கும் அப்பாவ திட்றது அப்புறம் இப்படி சொல்றது//
சொந்த அனுபவமா? ஹா ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங்.... அப்பாவை திட்டாம யாரை திட்ட... அந்த செல்ல சண்டைகள் எல்லாம் இல்லைனா பின்னாடி நெனச்சு பாக்க என்ன இருக்கு?

//கிண்டல் பண்ணத்தான் வந்தேன்.. ஆனால் இந்த வரிகள் கலங்க வைத்துவிட்டன//
தேங்க்ஸ் கார்த்தி

@ ராமலக்ஷ்மி - நன்றிங்க ராமலக்ஷ்மி

@ asiya omar - ரெம்ப நன்றிங்க ஆசியா

@ தக்குடு - நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்...ஹி ஹி ஹி...

அப்பாவி தங்கமணி said...

@ அஹமது இர்ஷாத் - நன்றிங்க அஹமது

@ அனன்யா - ஹா ஹா ஹா... ரகளை அம்மா ரகளை ரங்க்ஸ் தான் போல... தேங்க்ஸ் அனன்யா

@ பெயரில்லா - நீங்க கேக்கறது தப்பே இல்லிங்க... நான் தான் தப்பா போட்டுட்டேன்... நன்றிங்க சுட்டி காட்டினதுக்கு

@ geetha santhanam - நன்றிங்க கீதா. ரெம்ப நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ Karthick Chidambaram - நன்றிங்க கார்த்திக். கேக்கவே வேண்டாம், எங்க அப்பாவ பத்தி என்னை தவிர வேற யார்க்கு நல்லா தெரியும்... அதனால நான் சொன்ன காரணம் தான் சரி.... (என்கிட்டயேவா????? ஹா ஹா ஹா)

@ ஜெய்லானி - நன்றிங்க ஜெய்லானி.
//அப்பாவி புத்திசாலியா ஆகிட்டு வருது ஹி..ஹி.. //
எல்லாம் உங்கள போல பெரியவங்க ஆசீர்வாதம் தான் பாஸ்... ஹி ஹி ஹி

@ தமிழ் உதயம் - நன்றிங்க தமிழ் உதயம்.... சூப்பர் ஹீரோ தான் அவர்

@ பேனா மூடி - ofcourse எல்லா day வும் மம்மி டாடி டே தான்.... இந்த days இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் for them

அப்பாவி தங்கமணி said...

@ புதுகை தென்றல் - ரெம்ப நன்றிங்க புதுகை சகோதரி

@ செ.சரவணக்குமார் - well said .. நன்றிங்க சரவணன்

@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி - ரெம்ப நன்றிங்க ராமமூர்த்தி. முதல் வருகைக்கும் நன்றி

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ் சாரல்

அப்பாவி தங்கமணி said...

@ ப்ரியமுடன்...வசந்த் - தேங்க்ஸ் வசந்த்... நல்லா இருக்குங்க

@ manasu - நன்றிங்க.... முதல் வருகைக்கும்

@ அபி அப்பா - //டெல்லிகணேஷ், கமல்-ஊர்வசி ஜோடியாக இந்த காம்பினேஷன்ல விஷூவலைஸ் பண்ணி பாருங்க எல்லோரும்//
ஆஹா... சூப்பர்... இப்படி எல்லாம் எப்படி யோசிக்கறீங்க... 200 % சிரிப்பு உத்தராவதம்....ஹா ஹா ஹா

@ Riyas - ரெம்ப நன்றிங்க ரியாஸ்... முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் (நான் சார் இல்லிங்க மேடம்...நான் அவ்ளோ கொழப்பமாவா எழுதறேன்...ஹும்...)

அப்பாவி தங்கமணி said...

@ முத்துலெட்சுமி/muthuletchumi - நன்றிங்க முத்துலட்சுமி

@ இராமசாமி கண்ணண் - சரியா சொன்னிங்க கண்ணன். நன்றிங்க

@ கமலேஷ் - ரெம்ப நன்றிங்க கமலேஷ். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

@ LK - ஐயோ.... வேண்டாமப்பா... ஆட்டோ எல்லாம் வேண்டாங்கோ... சீக்கரம் போட்டுடறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ SenthilMohan K Appaji - செந்தில்... நான் தங்கமணி தாங்க... ஆனா என் பேரு தங்கமணி இல்லிங்க... சரி சரி டென்ஷன் ஆகாதீங்க... என் பேரு புவனா... (அது சரி "சும்மானாச்சிக்கும் ஒரு ப்ளாக்" வெச்சுருக்கீங்க போல.... ஏனுங்க உங்களுக்கு நம்மூருங்களா (கோவை)....சும்மா கேட்டேன்...ஹி ஹி ஹி)

@ sandhya - ரெம்ப நன்றி சந்த்யா. நிச்சியமா எங்க போனாலும் அப்பா உங்க கூடத்தான் இருப்பார். மிக்க நன்றி சந்த்யா மீண்டும்

@Boston Sriram - ஹலோ ஹலோ....y டென்ஷன் y டென்ஷன்.... நோ டென்ஷன் பாஸ்... ஆண்டீஸ் குரூப் கலாய்க்கரதுக்கு ஏன் தாத்தாஸ் குரூப் இவ்ளோ டென்ஷன்... ஹி ஹி ஹி... ஹா ஹா ஹா....ஹோ ஹோ ஹோ... ஹையோ ஹையோ....

@ vanathy - ரெம்ப நன்றிங்க வானதி

அனாமிகா துவாரகன் said...

இதப் பார்த்து நான் ஏன் இவ்ளோ கடுப்பானேன்னு தெரியுதா? அப்பாவை ஹீரோவா நினைச்சு நான் பண்ற அராத்த என்னாலயே தாங்க முடியாது. அவ்ளோ இருக்கு. போஸ்ட்டாவே போடறன்.

அப்புறம் எனது புது பட்டம், சங்கம் பத்தி விலாவாரியா எழுதியும் அதை கவனிக்காத டெரர் தங்கமணியை இன்னைல இருந்து வெளி நடப்பு செய்கிறேன். (ஹைன்னு தோனறதா? நினைப்புத்தான் ஹூக்கும்) திருப்பி வருவோம்ல.

//ஒகே.. சுபஷ்ய சீக்ரம்... //
இதோ பாருங்க. உங்களுக்கு எனக்கும் பிரச்சனைன்னா பேசி தீத்துக்கலாம். இப்படி எல்லாம் சாபம் விடக்கூடாது. அழுதிடுவன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நியோ said...

"நம்ம அப்பா அம்மா இருக்கற வரை தான் நமக்கு இந்த உணர்வு சாத்தியம். அவங்க தான் நம்மள எப்பவும் குழந்தையா பெருமிதமா பாப்பாங்க. அப்புறம் எத்தனை பேரு இருந்தாலும் அது வேற தான்"

ஆமாம் தோழர் !

"count-down ஸ்டார்ட் ஆய்டுச்சு இப்போவே அங்கயும் இங்கயும்... "
அங்கயும் இங்கயும்... ம்ம் ... நெகிழ வைக்கும் இரு வார்த்தைகள் ...

அபியும் நானும் எனக்கும் மிகப் பிடித்த ஒன்று ...
உங்க ரங்கஸ் க்கும் பின்னொரு நாளில் பிடிக்காமல் போகாது ...
இன்று நீங்கள் சொன்னதையெல்லாம் அன்று அவர் சொல்வார் ...
போதும் போதுமென நீங்கள் தான் சலித்துக் கொள்ள வேண்டும் ...

கவிதையில் வெளிப்படும் உணர்வு அருமை ...
அக்டோபர் வாழ்த்துக்கள் !

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஓஹோ... கதை அப்படி போகுதா... என்னது அது புது பட்டம்... நூலுனு... ஓ... அந்த அந்த்ராஸ் அனாமிகா சொல்றியா? ஹையோ ஹையோ... பாவம் பொண்ணுன்னு விட்டா நீயே வந்து சிக்கற.... ஹா ஹா அஹ

@ நியோ - தேங்க்ஸ் நியோ

அனாமிகா துவாரகன் said...

GRRRRRRRRR. I was talking about this.
//தலைவர்
அந்திம்பேர்களோட‌ கண்ணீர் துடைக்கும் சங்கம்
ஆஸ்ரேலிய கிளை//

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - அடப்பாவமே... இது ஒரு சங்கம்... இதுக்கு ஒரு தலைவர் .... இதுல என்னை அலப்பறைனு சொல்றது.... என்ன கொடுமை அனாமிகா இது? ஹி ஹி ஹி

அனாமிகா துவாரகன் said...

// அடப்பாவமே... இது ஒரு சங்கம்... இதுக்கு ஒரு தலைவர் ...//
தோடா. இருங்க இருங்க. கனடா வரும் போது கவனிச்சுக்கறேன். எப்ப வருவேன்னு கேள்வி எல்லாம் கேட்க கூடாது. வரும் போது வருவேன். 17 மாடின்னு நீங்க சொன்னப்புறம் தான் கொஞ்சம் பயமா இருக்கு. நான் பண்ற அராத்தில நீங்க தள்ளிவுட்டா அப்புறம் இங்க (Oz) இருக்கற ரோமியோக்கலோட மனசு உடைஞ்சுடுமே. ஹா ஹா ஹா.

Post a Comment