Tuesday, August 31, 2010

கேயாஸ் தியரியும் தங்கமணியும்... (தங்கமணி ரங்கமணி கலாட்டா)

தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை படிக்க இங்கே கிளிக்கவும்


"என்னங்க... நாளைக்கு நீங்க ஆபீஸ் லீவ் போடுங்க"

"ஏம்மா நீ உங்க அம்மா வீட்டுக்கு போறியா? ட்ரெயின் ஏத்தி விடணுமா?" என ஆர்வம் போங்க கேட்க

ஒண்ணும் பேசாம தங்கமணி மொறச்சதுலையே அது இல்ல மேட்டர்னு தெரிஞ்சு போச்சு... ஹும்... அததுக்கு ஒரு குடுப்பினை வேணும்னு நெனச்சுட்டே ரங்கமணி திரு திருனு முழிச்சார் எப்படி அம்மணிய தாஜா பண்றதுன்னு

"அ... அது... நீ சந்தோசமா லீவ் போடுங்கன்னு சொன்னியா... அ... அதான் நான் தப்பா புரிஞ்சுட்டேன்"

"தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டினு சொல்றாப்ல எப்படா இவ ஒழிவானே காத்துட்டு இருங்க" என சண்டைக்கு தயாரானார் தங்க்ஸ்

"ச்சே ச்சே... அப்படி இல்ல... அது சரி எதுக்கு லீவ் போட சொன்ன"

அதை பற்றி அக்கறை போல் கேட்டதும் தங்க்ஸ் கோபம் மறைந்து குஷியாய் சொல்ல தொடங்கினார்

"அது... எங்க ஏஞ்சல்ஸ் கிளப் மெம்பெர்ஸ் எல்லாம் சேந்து நாளைக்கி ஆடி தள்ளுபடி ஷாப்பிங் போறோம்... பாப்பாவை அந்த கூட்டத்துல கூட்டிட்டு போக முடியாது. அவ ஸ்கூல்ல இருந்து ரெண்டு மணிக்கு வந்துடுவா... அதுக்கு தான் உங்கள லீவ் போட சொன்னேன்"

"அடிப்பாவி... இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல"

"என்ன ஓவர்? ஷாப்பிங் போறது தப்பா?"

"அது எல்லாம் இருக்கட்டும்... நான் அன்னைக்கே சொன்னேனல்ல... மொதல்ல இந்த அபார்ட்மென்ட் லேடீஸ் கிளப் பேரை மாத்துங்கன்னு... ஏஞ்சல்ஸ் கிளப்னு வெச்சு ஏன் இப்படி கொல்றீங்க?"

"ஆமா... தம் அடிக்கறதுக்காக நீங்க ஜென்டில்மன்ஸ் கிளப் வெச்சுருக்கறது விட ஒண்ணும் மோசமில்ல"

"அது... வேற... அதை விடு... ஆடி முடிஞ்சு ஆவணியே வந்தாச்சு... ஏற்கனவே போன மாசம் போய் அந்த சாயம் போன சாரி ஒண்ணு தண்டமா வாங்கிட்டு வந்தியே... இன்னும் என்ன?"

"ஐயோ... உங்களுக்கு ரசனையே இல்ல... அது டல் பினிஷ் ஸ்டோன் வாஷ் சாரி... இப்ப அதான் பேஷன்... அதை போய் சாயம் போன சாரீனு... ச்சே ச்சே..."

"சரி பேச்சை மாத்தாதே.... இப்ப தான் ஆடி முடிஞ்சு போச்சே... இன்னும் என்ன?"

"அது... நம்ம ஐஸ்வர்யா இல்ல..."

"யாரு...நம்ம ரோபோ கதாநாயகியா?" என வழிய

"கருமம்... அலையாதீங்க... மூணாவது ப்ளோர் ஐஸ்வர்யா அனந்தகிருஷ்ணன்"

"ஓ... வீணா போன ஐடியா எல்லாம் சொல்லுமே அந்த பொண்ணா"

"அவ அளவுக்கு மூளை இல்லைன்னு உங்களுக்கு பொறாமை"

"ஹையோ ஹயோ...நல்லா ஜோக் அடிக்கற தங்கம்"

"இங்க பாருங்க எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்"

"ஓ... கோவத்துல கூட நல்லது கெட்டதுன்னு இருக்கா...ஹி ஹி ஹி"

"சகிக்கல... நீங்க நாளைக்கி லீவ் போட போறீங்களா இல்லையா?"

"மாசம் மாசம் ஷாப்பிங் போனா பட்ஜெட்ல துண்டு இல்ல ஜமுக்காளமே விழும்... இதுல லீவ் வேற போட்டா கிழிஞ்சது பொழப்பு"

"கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலைனு அந்த காலத்துலேயே சொல்லி இருக்காங்க. இப்ப அனுபவிக்காம பின்ன கெழவி ஆனப்புறமா விதவிதமா கட்ட முடியும்"

"நீ கெழவி ஆனாலும் அழகா தான் இருப்பே தங்கம்" என ஐஸ் வெக்க

"இந்த ஐஸ் எல்லாம் வேண்டாம்... சொல்றத கேளுங்க.  ஐஸ்வர்யா சொன்னா... இப்ப ஆடி சேல் எல்லாம் முடிஞ்சு மிச்சம் இருக்கற ஸ்டாக் எல்லாம் இன்னும் சீப்பா போட்டு இருப்பாங்களாம்... இப்ப வாங்கினா ரெம்ப லாபம்னு... சூப்பர் ஐடியா இல்லிங்க... எங்க கிளப்ல அவளுக்கு ஐடியா ஐஸ்வர்யானு பட்ட பேரே வந்துடுச்சு... எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கராளோ" என சிலாகிக்க

"ஹா ஹா ஹா...ஹா ஹா ஹா"

"எதுக்கு இப்ப மறை கழண்ட மாதிரி சிரிக்கறீங்க?"

"ஆடி சேலே ஒரு குப்பை கழிச்சு விடற தந்திரம் தான்... அதுலயும் கழிஞ்சதுன்னா... குப்பைல குப்பை... இது ஒரு ஐடியா... இதுக்கு பட்டம் வேற... எனக்கு என்னமோ அந்த ஐஸ்வர்யா கடைகாரனுக கிட்ட கமிஷன் வாங்கிட்டு ஆள் பிடிச்சு குடுக்கறானு தோணுது"

"உங்க புத்தி வேற எப்படி போகும்"

_________________________________

"அப்பப்பா அப்பப்பா.. என்ன கூட்டம் என்ன கூட்டம்" என்றபடியே உள்ளே வந்தார் தங்கமணி

"என்ன தங்கம் ஷாப்பிங் எல்லாம் பலமா இருக்கும் போலேயே"

"ஆமாங்க... என்ன சீப் தெரியுமா"

"குவாலிட்டி தானே... அது சீப்னு தெரிஞ்சுது தான்"

"உங்க கிட்ட பேச முடியாது"

"அது சரி கொழந்தை எங்க... துணி வாங்கற ஜோர்ல புள்ளைய எங்க விட்ட" என பதற

"ம்... உங்கள விட பாப்பா மேல எனக்கு ரெம்ப அக்கறை இருக்கு... அவள ஐஸ்வர்யா வீட்டுல விட்டுட்டு போனேன்... ம்... அவளுக்கு வாய்ச்சவர் சொன்னதும் மறு பேச்சு பேசாம லீவ் போட்டுட்டு பிள்ளைகள பாத்துகறார்" என பெருமூச்சு விட

"தங்கம்... அந்த ஆளுக்கு தாசில்தார் ஆபீஸ் உத்தியோகம்... கவர்ன்மென்ட் சம்மன் ஒண்ணும் வராது ஒரு நாள் போகலைனா... என் கதை அப்படியா"

"எதாச்சும் சாக்கு சொல்லுங்க...அதை விடுங்க... இந்த சாரீஸ் எல்லாம் பாருங்க எவ்ளோ அழகு தெரியுமா... விலையும் ரெம்ப கம்மி... இதோ இந்த மெரூன் கலர் கிரேப் சில்க் சாரி வெறும் மூந்நூறு தான்... அடக்க விலையே ஐநூறு தெரியுமா..."

"எங்க இப்படி குடு பாக்கலாம்... "என சேலையை விரித்தவர் கண்ணில் ஒரு பெரிய ஓட்டை தென்பட்டது

"என்ன தங்கம் இது... சாரில கூட இப்பவெல்லாம் ஜன்னல் கதவு இருக்கா" என நக்கலாய் கேட்க

"ஐயோ... என்ன இது... நான் கவனிக்கலையே... சரி விடுங்க... அதை சரி பண்ணிக்கலாம்... இதை பாருங்க உங்களுக்கு தான் ஷர்ட்... ப்ளூ கலர் அழகா இருக்கில்ல"

"நல்லாத்தான் இருக்கு... என்ன இது... காலர் கிட்ட வெளுத்து போய் இருக்கே... ஏதோ செவப்பு சாயம் வேற பட்டு இருக்கு"

"எதாச்சும் கொற சொல்லிட்டே இருங்க... "

"அட உள்ளத தானே சொல்றேன்"

"எல்லாம் உங்களால தான்"

"அடிப்பாவி அந்த கடை எந்த திசைன்னு கூட எனக்கு தெரியாது... நான் காரணமா" என திகைக்க

"பின்ன... நீங்க லீவ் போட்டுட்டு வீட்டுல இருந்துருந்தா... பாப்பா என்ன பண்றாளோ... சாப்டாளோனு கவலை இல்லாம நிதானமா பாத்து வாங்கி இருப்பேன்... இந்த டென்ஷன்ல சரியா கவனிக்கல"

"அடப்பாவமே... என்ன கொடும கடவுளே இது... எங்க இருந்து எங்க லிங்க் பண்றாங்க இந்த தங்கமணிக. இது உனக்கே அநியாயமா தோணலையா தங்கம்"

"என்ன அநியாயம்? தசாவதாரம்ல கமல் கேயாஸ் தியரினு சொல்வாரே கேட்டதில்ல... அதான் இது. எல்லாம் உங்களால தான்" னு சொல்லிட்டு தங்க்ஸ் எஸ்கேப் ஆய்ட்டாங்க

ரங்க்ஸ் என்ன ஆனாரா? கமல்ஹாசன்க்கு ஒரு பத்து பக்க கண்டன மடல் எழுதிட்டு இருக்கார்... ஹா ஹா ஹா... அவர் "வலி" தனி "வலி"... ஹா ஹா ஹா


தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை படிக்க இங்கே கிளிக்கவும்
...

Thursday, August 26, 2010

அதே கண்கள்... (பகுதி 6)
பகுதி 1 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 2 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 3 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 4 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 5 படிக்க - இங்கே கிளிக்கவும்
 
சுரேஷ் அந்த செல் போன் எண்ணை பார்த்ததும் அதிர்ச்சியானான்

"சுரேஷ்...சொல்லுங்க... இந்த நம்பர் யாருன்னு தெரியுமா?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"இது... இந்த நம்பர்க்கு எதுக்கு சுமி போன் பண்ணினா... அதுவும் அந்த நேரத்துல... ..." என உளறினான் சுரேஷ்

"சுரேஷ் ப்ளீஸ்... டெல் மீ... யாரு இது..." என சூர்யா பதற

"அது...வந்து....அது...."

"சுரேஷ் ப்ளீஸ் சொல்லுங்க" என சூர்யா கெஞ்ச

"இது என் கசின் கணேஷோட நம்பர்"

"கசின்னா? எப்படி உறவு?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"எங்க அத்தை மகன்" என்றான் சுரேஷ்

சூர்யாவிற்கு ஏதோ நெருடியது

"சரி... உங்க கசின் நம்பர்க்கு இப்ப ட்ரை பண்ணி பாருங்க... சுமேதா அவர்கிட்ட எதாச்சும் சொல்லி இருக்கலாம் இல்லையா" என இன்ஸ்பெக்டர் கூற சுரேஷ் தன் அலை பேசியில் இருந்து கணேஷிற்கு அழைத்தான்

சில நொடிகளுக்கு பின் அழைப்பு துண்டிக்கப்பட்டது. மறுபடியும் அழைத்தான்... இந்த முறை எடுத்ததும் துண்டிக்கப்பட்டது. மறுபடியும் அழைக்க "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது உபயோகத்தில் இல்லை" என கூறியது

சுரேஷ் சூர்யா இருவரின் முகமும் வெளிறியது

"உங்க கசின் பாமிலி கூட உங்க உறவு எப்படி... பாமிலி ப்ரோப்ளம் எதாச்சும்?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"இல்ல இன்ஸ்பெக்டர் அப்படி எதுவும் இல்ல" என்றான் சுரேஷ் நடுக்கத்துடன்

அனுபவம் வாய்ந்த இன்ஸ்பெக்டர்க்கு அவன் ஏதோ மறைப்பது போல் தோன்ற

"மிஸ்டர் சுரேஷ் நீங்க எதாச்சும் விசயம் மறைச்சா அது கூட உங்க சிஸ்டர்க்கு ஆபத்தா முடியலாம்... அதுக்கு மேல உங்க இஷ்டம்" என்றார்

"இல்ல சார்...அது"...என ஏதோ கூற வர அதற்குள் சுரேஷின் செல் போன் அலறியது. கணேஷ் தான் அழைக்கிறான் என கூறவும் "பேசுங்க...ஸ்பீக்கர்ல போடுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்

"ஹலோ" என்றான்

"ஹலோ... சுரேஷ்... போன் பண்ணி இருந்தியா? சாரி சிக்னல் சரியா இல்ல... அதான் கட் ஆய்டுச்சு" என்றான் கணேஷ்

"கணேஷ்...நீ இப்ப எங்க இருக்க?"

"நான்... ஏன் கேக்கற?" என தயங்கினான்

போன் ஸ்பிக்கரில் போட்டு இருந்ததால் அதை கேட்ட இன்ஸ்பெக்டர்

"எதுவும் கூற வேண்டாம்... எங்கேன்னு கேளுங்க" என இன்ஸ்பெக்டர் ஜாடை செய்தார்

"சொல்லு... எங்க இருக்க கணேஷ்?"

"இங்க... KG தியேட்டர் பக்கத்துல... ஏன் ?" என்றான் மறுபடியும் கேள்வியாய்

பேசியை தாழ்த்தி வைத்து... என்ன செய்யணும் என இன்ஸ்பெக்டரிடம் கேட்டான் சுரேஷ்

"சுமேதா போன் செஞ்சாங்களான்னு கேளுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்

"கணேஷ்... சுமி உனக்கு போன் பண்ணினாளா நேத்து?"

"...." பதில் வராமல் போக

"ஹலோ... கணேஷ் லைன்ல இருக்கியா? சுமி போன் பண்ணினாளானு கேட்டேன்" என்றான் சற்று கடுமையாய்

"...இல்ல... பண்ண...ல" என்றான் கணேஷ் நடுங்கிய குரலில்

இன்ஸ்பெக்டர்க்கு ஏதோ சந்தேகம் வர "அப்படியே பேச்சு குடுங்க... மேட்டர் சொல்ல வேண்டாம்... இந்த கால் எங்க இருந்து வருதுன்னு ட்ரேஸ் பண்ணலாம்..." என ஒரு பேப்பரில் எழுதி சுரேஷின் முன் வைத்தார் இன்ஸ்பெக்டர்

"வேற ஒண்ணும் இல்ல கணேஷ்... ஊட்டி போய் சேந்ததும் போனே காணோம்... அவ போன் கூட ரீச் ஆகல அதான் உனக்கு எதுனா கூப்டாளோனு கேக்கலானு..."

"இல்..ல...பேச..ல... "என்றவனின் குரலில் இன்னும் நடுக்கம் இருந்தது

"ஓ... அப்புறம் என்ன இன்னைக்கி KG தியேட்டர் பக்கம் மார்னிங் ஷோவா" என இயல்பாய் பேசுவது போல் பேசினான் சுரேஷ்

"அது... சும்மா.... பிரெண்ட்ஸ் பாக்கலான்னு... வந்...தேன்" என தடுமாறினான்

"இன்னிக்கி வேலைக்கி லீவா?"

"ஆமாம்..."

"ஒகே... அப்புறம் வேற என்ன?" என பேச்சை வளர்க்க முயன்றான்

"வேற... என்ன... ஒண்ணு...மில்ல... " என்றவனின் பேச்சில் இன்னும் நடுக்கம் குறையவில்லை

அதற்குள் கட்டை விரலை உயர்த்தி காட்டினார் இன்ஸ்பெக்டர்... போதும் என சொல்வது போல்

"சரி கணேஷ் அப்புறம் பேசறேன்..." என துண்டித்தான்

"என்னாச்சு இன்ஸ்பெக்டர்?" என சூர்யா பதற

"நான் சந்தேகப்பட்டது சரி தான்... உங்க கசின்கிட்ட ஏதோ தப்பு இருக்கு... இப்ப அவர் பேசினது ஊட்டில இருந்து தான்... பொட்டானிகல் கார்டன் பக்கத்துல இருக்கற டவர் பக்கத்துல காட்டுது" "நானே அங்க போய் பாக்கறேன் இன்ஸ்பெக்டர்... ஏன் இங்க இருந்துட்டு பொய் சொன்னடானு நாலு அரை விட்டு கேக்கறேன்" என கோபமாய் பேசினான் சுரேஷ்

"சுரேஷ்... அவசரப்பட்டு காரியத்த கெடுத்துடாதீங்க.. லெட்ஸ் மூவ் வைஸ்... நாம எல்லாரும் ஒண்ணாவே போகலாம்... முருகேசன் ஜீப் எடுங்க" என உத்தரவிட்டார்

ஜீப்பில் பலத்த மௌனம் நிலவியது... அந்த மௌனத்தை கலைத்தார் இன்ஸ்பெக்டர்

"சுரேஷ்... நான் இப்ப கேக்கற கேள்விக்கு நீங்க மறைக்காம உண்மைய சொல்லணும்" என இன்ஸ்பெக்டர் கேட்க

"கண்டிப்பா சார்" என்றான்

"உங்க கசின்க்கும் உங்க சிஸ்டர்க்கும் எதாச்சும்..." என இன்ஸ்பெக்டர் இழுக்க

"சார்... அது" என சுரேஷ் தயக்கமாய் சூர்யாவை பார்க்க

"ப்ளீஸ் சுரேஷ்... எதுவா இருந்தாலும் சொல்லுங்க... என்னை பத்தி யோசிக்க வேண்டாம்... இப்ப நாம லேட் பண்ற ஒரு ஒரு நிமிசமும் ரிஸ்க்" என சூர்யா கூற

"ஐயம் சாரி சூர்யா... உங்கள புரிஞ்சுக்காம... வந்ததும் என்ன என்னமோ பேசிட்டேன்...சாரி" என மன்னிப்பு கேட்க

"இதெல்லாம் அப்புறம்... மொதல்ல என்ன ப்ராப்ளம்னு சொல்லுங்க" என்றான் சூர்யா

"அது... மொதல்ல கணேஷ்க்கு சுமிய கல்யாணம் பண்றதா ஒரு பேச்சு வந்தது ... ஆனா?" என இழுக்க

"ஆனா... என்ன சொல்லுங்க" என இன்ஸ்பெக்டர் கேட்க

"எங்களுக்கு அதுல இஷ்டம் இல்ல... கணேஷ் பெரிய வேலைல எதுவும் இல்ல...அதோட சுமி அளவுக்கு படிக்கவும் இல்ல... கொஞ்சம் வசதி குறைந்த குடும்பம்... அதோட சொந்தத்துல பண்றது சரி இல்லைன்னு எல்லாருக்கும் ஒரு உறுத்தல் வேற. அதனால அந்த பேச்சு அப்படியே நின்னுடுச்சு"

"இந்த கல்யாண பேச்சை ஆரம்பிச்சது மொதல்ல யாரு... கணேஷ் வீட்லையா?"

"ஆமாம் இன்ஸ்பெக்டர் எங்க அத்தை கணேஷோட அம்மா தான் வந்து சுமிய பொண்ணு கேட்டாங்க"

"உங்க சிஸ்டர் மனசுல ஏதாவது"

"அப்படி எல்லாம் இல்ல சார்" என அவசரமாய் சொன்னான் சுரேஷ்

"ஆர் யு ஸூர். இல்லைன்னு கண்டிப்பா சொல்றீங்களா? நான் நல்ல மோடிவ்ல தான் கேக்கறேன்... ப்ளீஸ் பீ பிரான்க் சுரேஷ்" என இன்ஸ்பெக்டர் அழுத்தமாய் கேட்க

"அப்படி இருக்கும்னு தோணல சார்... " என்றவனின் குரலில் இப்போது ஸ்ருதி குறைந்து ஒலித்தது

சூர்யாவின் நிலை தான் பாவமாய் இருந்தது... மனதிற்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டு இருந்தது...

சுமி மனதில் இப்படி ஒரு ரகசியமா... இருக்காது... அப்படி இருந்தா மனசார என்கிட்ட பழகி இருக்க முடியுமா... ஆனா அவ கல்யாணம் ஆனதுல இருந்து இயல்பா இல்லியே... அவளோட ஒதுக்கத்தை அசதினு நான் தப்பு கணக்கு போட்டுடனோ... ச்சே... இல்ல என் சுமி அப்படி இல்ல... இப்படி மாற்றி மாற்றி யோசித்து கொண்டு இருந்தான் சூர்யா

அவனது யோசனையை இன்ஸ்பெக்டரின் குரல் கலைத்தது

"சூர்யா... இப்ப உங்க டர்ன்... மறைக்காம சொல்லுங்க... சுமேதாவோட நடவடிக்கைல உங்களுக்கு எதாச்சும் சந்தேகம் இருந்ததா"

"இல்ல சார்... ஆனா... கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தானு இப்ப தோணுது... மத்தபடி... என்கிட்ட அன்பா தான் இருந்தா சார்" என சொல்ல

"ஒகே... " என்ற இன்ஸ்பெக்டர் "முருகேசன்... ஜீப்பை இங்கயே நிறுத்துங்க... பொட்டனிக்கல் கார்டன்க்கு பக்கத்துல வந்தாச்சு இல்ல... " என்றவர் சுரேஷிடம் திரும்பி

"இப்ப உங்க கசின்க்கு போன் பண்ணுங்க சுரேஷ்... எதாவது பேச்சு குடுங்க... " என்றார்

போன் ஒரு ரிங் போனதுமே எடுத்தான் கணேஷ்

"ஹலோ... சொல்லு சுரேஷ்"

"ம்... கணேஷ்... கல்யாணத்துக்கு பண்ணின ஸ்வீட்ஸ் எல்லாம் நெறைய மிச்சம் ஆய்டுச்சு... உனக்கு தெரிஞ்ச ஆர்பநேஜ் எதுனா கேக்கலாம்னு கூப்ட்டேன்"

"அது... அப்படி எதுவும் தெரியாது... சுரேஷ்" கணேசின் குரல் நடுங்கியது... அடிக்கடி பேசும் வழக்கம் இருவருக்கும் உண்டு என்ற போதும்... இப்படி ஆலோசனை எல்லாம் கேட்கும் அளவுக்கு இல்லை என்பதால் கணேசிற்கு ஏதோ சந்தேகம் வர

"சரி சுரேஷ்... நான் கொஞ்சம்... வேலை இருக்கு... அப்புறம் பேசறேன்" என துண்டிக்க போக

"ஆங்...கணேஷ்... எங்க இருக்க? இன்னும் KG தியட்டர் பக்கத்துல தானா" எனவும்

"ம்... ஆ... மா" எனவும்

அதற்குள் அவனை அந்த மரத்தின் அடியில் பார்த்துவிட்ட சுரேஷ் விரைந்து அருகில் சென்று சட்டை காலரை பிடித்தான் "கோயம்புத்தூர்ல இருக்கறவன் எப்படிடா ஊட்டில இருந்து போன் பேசுவ" என கன்னத்தில் அறைய

"சுரேஷ்... ப்ளீஸ் நான் சொல்றத கேளு"

"என்னடா கேக்கணும்... ராஸ்கல்... என்னடா பாவம் பண்ணினோம் நாங்க உனக்கு... சுமிய என்ன செஞ்ச..சொல்லு... ஒழுங்கா சொல்லு" என அடிக்க

"சுரேஷ்... ப்ளீஸ் காம் டௌன்... என்ன சொல்றான்னு கேப்போம்" என இன்ஸ்பெக்டர் தடுத்தார்

"கணேஷ்... ஒழுங்கா உண்மைய சொல்லுங்க... சுமேதா எங்க?"

"ஐயோ.. என்ன இன்ஸ்பெக்டர் சொல்றீங்க? சுமிய காணமா?" என கேட்க

"இவன் வழிக்கு வர மாட்டான் சார்... " என சுரேஷ் மறுபடியும் அவனை அடிக்க பாய

"சுரேஷ் ப்ளீஸ்... கொஞ்சம் பொறுமையா இருங்க... இப்ப கோபபடறதுல நமக்கு தான் நஷ்டம்... ப்ளீஸ் கணேஷ்... உங்கள எதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க" என அவனை கிட்டத்தட்ட கெஞ்சினான் சூர்யா

"நிஜமா எனக்கு எதுவும் தெரியாது... "

"எதுவும் தெரியாம எதுக்கு KG தியேட்டர் பக்கத்துல இருக்கேன்னு பொய் சொன்ன"

"அது... சுரேஷ்... வந்து... "

"இப்ப நீ சொல்லலைனா... மவனே உன்னை கொலை செய்ய கூட தயங்க மாட்டேன்" என சுரேஷ் கணேசின் கழுத்தை நெரிக்கக் சூர்யா மற்றும் இன்ஸ்பெக்டர் வந்து சுரேஷை இழுத்து பிடித்தனர்

"முருகேசன்... கணேச ஜீப்ல ஏத்துங்க... ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம்"

எல்லாரும் ஸ்டேஷன் வந்து சேர்ந்தனர்

"இங்க பாருங்க மிஸ்டர் கணேஷ்... எங்க பொறுமையா சோதிக்காதீங்க... நேத்து சுமேதா உங்களுக்கு போன் பண்ணினது எங்களுக்கு தெரியும்... அவங்க போன் ரிப்போர்ட்ல கண்டு பிடிச்சுட்டோம்... தேவை இல்லாம எங்களை வயலண்டா நடக்க வெக்காதீங்க... கம் அவுட்... உண்மைய சொல்லுங்க"

"சார்...அது வந்து" என கணேஷ் தயக்கத்துடன் சூர்யாவை பார்க்க

"தயவு செஞ்சு சொல்லுங்க... ப்ளீஸ்...எதுவா இருந்தாலும் பரவாஇல்ல" என்றான் சூர்யா மனதை திடப்படுத்தியவனாய்

"நேத்து... சுமி எனக்கு போன் பண்ணினது நிஜம் தான்... ஆனா"

"டேய்... இப்ப நீ சொல்றயா... இல்ல... "என சுரேஷ் முன்னேற இன்ஸ்பெக்டர் சுரேஷை முறைத்தார்

அடுத்த கணேஷ் கூறிய செய்தி எல்லார் முகத்தையும் வெளிற செய்தது...

அது...


Tuesday, August 24, 2010

பதிவுலகில் நான்...

இந்த "பதிவுலகில் நான்...." தொடர் பதிவை எழுத புதுகை தென்றல் மற்றும் LK கூப்பிட்டு இருக்காங்க...(ஏண்டா கூப்ட்டோம்னு இப்போ பீல் பண்றதா என்னோட கனவுல வந்து சொன்னாங்க...)

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அப்பாவி தங்கமணி


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஒரு வகைல உண்மை பெயர் தான் அதுவும்... அதாவது தமிழ் இலக்கண படி சொல்றதுன்னா (கொஞ்சம் ஓவரா இருக்கோ...ஹி ஹி ஹி) குணப்பெயர்னு சொல்லலாம்... (ஒகே ஒகே... நோ டென்ஷன்....உண்மைய ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்... வேணும்னா ஜெலுசில் வாங்கி அனுப்பறேன்...ஹி ஹி ஹி)

இந்த பேரு வெக்க என்ன காரணமா... மறுபடியும் சொல்லி வெறுபேத்தறேன்னு திட்டாதீங்க... கேட்ட கேள்விக்கு தான் பதில் சொல்றேன்... என்னை represent பண்றா மாதிரி இருக்கணும்னு அப்பாவியா ஒரு பேரு செலக்ட் பண்ணினேன்... போதுங்களா...


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

Actually... you know... நான் ப்ளாக் எழுத வரலன்னா பெரிய டாக்டர் ஆகி இருப்பேன்... யு நோ... பைலட் சீட் கூட கெடைச்சது... நான் தான் அதை வேற ஒருத்தருக்கு விட்டு குடுத்துட்டேன்... இப்படி எல்லாம் நம்ம சினிமா ஹீரோயன்ஸ் மாதிரி டயலாக் பேசணுன்னு எனக்கும் ஆசையாதாங்க இருக்கு... பட் யு சி... நான் என்ன எப்படின்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்... ஹும்... என்ன இருந்தாலும் ஒரு நல்ல டாக்டர இந்த உலகம் இழந்துடுசுங்கறது மறுக்க முடியாத உண்மை... (ஹி ஹி ஹி)

சரிங்க கேட்ட கேள்விக்கு போவோம். காலு கை எல்லாம் எடுத்து வெக்கலீங்க... பேனா தான் எடுத்து வெச்சேன்... ச்சே அது கூட தப்பு... கி போர்டு தான் எடுத்து வெச்சேன்... (இந்த கேள்விய ஆரம்பிச்சு வெச்சவர் நொந்து போய் இருப்பார் ....ஹையோ ஹையோ)

நான் வலைபதிவு ஆரம்பிச்சத பத்தி போன கொஞ்ச நாள் முன்னாடி தான் "Serendipity ..." ங்கற தலைப்புல ரம்பம் போட்டேன்... மறுபடியும் எழுதினா கொலை மிரட்டல் வந்தாலும் வரும்.... வேண்டாமே...


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் ஆகறதுக்கா...... என்ன செஞ்சேன்...? ம்ம்ம்... ஆங்... அந்த ரகசியத்த உங்க கிட்ட மட்டும் சொல்றேன்... காத இப்படி குடுங்க... நோ நோ... கம்மல் எல்லாம் திருடிக்க மாட்டேன்... ஒரு பேச்சுக்கு தான்...

அதாவது டுபாகூர் ஜோசியர் "ஜோக்கண்ணா" ஒரு வெற்றி ரகசியம் சொன்னார்... அவர் சொன்னது என்னனா... "கொஞ்சம் உன் பேச்சை கொறச்சா போதும்" னு... ஆனா சாப்டாம கூட இருக்கலாம்... பேசாம முடியுமோ... அதனால செய்யல... பிரபலமும் ஆகல...ஹும்... வேற ஏதாவது பேசிட்டே செய்யற மாதிரி ஐடியா தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்...

அந்த ஜோசியர் இன்னொன்னு கூட சொன்னார் "நீ பதிவே போடாம இருந்தா இன்னும் பிரபலமாகும்"னு .... அதையும் நான் இன்னும் ட்ரை பண்ணி பாக்கல... அப்புறம் நாட்டு மக்களுக்கு நல்லது கெட்டது (!!!) புரியாம போய்டும் பாருங்க..... ஹி ஹி ஹி


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

கொஞ்சம் ஓவராவே சொந்த கதை சோக கதை சொல்லுவேன்... இனிமே கொறச்சுக்கணும்னு ஒரு எண்ணம் இருக்கு... (ரெம்ப சந்தோஷம்னு யாரோ சொல்றது தெளிவா கேக்குது...)

ஏன் சொந்த கதை சொல்றன்னு கேட்டா... தனியா பொலம்பினா வேற ஏதோ பேராம்.. அதை விட இது மேல்னு தான் உங்க உயிர வாங்குறேன்... ஹா ஹா ஹா

சொந்த விசயம் சொன்னதுல விளைவுன்னு பாத்தா நான் ஒரு காமெடி பீஸ்னு நெறைய பேரு முடிவே பண்ணிட்டாங்க... ஒண்ணும் பண்றதுகில்ல... சொந்த செலவுல சூனியம் வெச்சுகிட்டாச்சு...

(இந்த இமேஜை எப்படி மாத்தறதுன்னு யாராச்சும் ஐடியா சொன்னா அவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு...ஹி ஹி ஹி)


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஊட்டில ஒரு எஸ்டேட்... கொடைக்கானல்ல ஒரு பங்களா... குளுமணாலில (ச்சே ரெம்ப கஷ்டமான ஸ்பெல்லிங்...) ஒரு பனி மலை... அப்புறம் நெறைய சொத்து எல்லாம் ப்ளாக் அண்ட் வைட்ல ப்ளாக் எழுதி சம்பாரிச்ச காசுல வாங்கி போட்டு இருக்கேன்...

ஹையோ ஹையோ...  ஒரே காமெடிங்க இந்த கேள்விய கண்டுபிடிச்சவருக்கு
 
சம்பாதிக்கறதா... நம்ம பதிவெல்லாம் மக்கள் படிக்கறதே பெரிய விசயம்,... இந்த கேள்வி எல்லாம் அவங்க காதுல விழுந்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க... ஹும்...

ஆனா நெறைய நண்பர்களை சம்பாரிச்சுட்டேன்... அதுவேணா உண்மையான சம்பாத்தியம்...

காசு என்னங்க காசு... இன்னிக்கி வரும் நாளைக்கி போகும்... (அப்படின்னா என்னனு தான் புரியல...எல்லாரும் சொல்றாங்கன்னு நானும் சொல்றேன்... ஹி ஹி ஹி)


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

நல்லா கேட்டீங்க கேள்வி... இந்த ஒன்ன வெச்சே முடியல... இன்னொன்னு வேறயா... அந்த தப்ப மட்டும் நான் செய்யவே மாட்டேன்... (இன்னொன்னு இருந்தா ஆபீஸ் டைம் இல்லாம ஓவர் டைம் தான் பாக்கணும் போங்க...ஹி ஹி ஹி )

ஒன்னே ஒண்ணு தான்... கண்ணே கண்ணு தான்... அப்பாவி தங்கமணி தான்... அது தமிழ் மட்டும் தான்...

தமிழ் வலைபதிவா... அப்புறம் ஏன் ஆங்கில வார்த்தை எல்லாம் வருதுன்னு நீங்க கேக்கலாம் ...அதெல்லாம் உங்களுக்கு புரியனுங்கர நல்ல எண்ணத்துல தான்.... என்னங் நான் சொல்றது...

"நீர் வார் கண்ணே எம்முன் வந்தோய், யாரையோ நீ மடக்கொடியோ" னு நான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினாப்ல செந்தமிழ்ல செய்யுள் நடைல எழுதினா எல்லாம் தெறிச்சு ஓடிர மாடீங்களா... அதான் உங்களுக்காகத்தான்... ஹும்....நம்ம நல்ல மனச யாரு புரிஞ்சுக்கறா...


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஏனுங்க? இல்ல ஏனுங்ககறேன்...? இந்த கேள்விய ஆரம்பிச்சு வெச்சவர் பயங்கரமான ஆளா இருப்பார் போல இருக்கே... "சும்மாவே ரங்கமணிகள் எதிர்ப்பு பிரசாரம் செய்யறையா நீ"னு அப்போ அப்போ மிரட்டல் எல்லாம் வருது

ஏன் சொல்லலைன்னு நீங்க அக்கறையா கேக்கறது புரியுது?... சொல்லி உங்களை எல்லாம் மனசு கஷ்டபட வெக்க வேண்டாமேன்னு தான்... (அப்பாவி இப்படியே maintain பண்ணு... மிரட்டல் எல்லாம் வருதுன்னு சொன்னாத்தான் பெரிய பதிவர்னு நெனப்பாங்கன்னு டுபாகூர் ஜோசியர் சொன்னருல்ல...ஹி ஹி ஹி)

கோபம் எல்லாம் யார் மேலயும் இல்லிங்க... அவங்க அவங்களுக்கு தோணுறத எழுதறாங்க... எழுத்து சுதந்திரம் உள்ள உலகம் இது... அவங்க எழுதறது பிடிக்கலைனா கமெண்ட் போடாம பேசாம வந்துறதுதேன்... என்னத்துக்கு கோவம் எல்லாம்...அப்புறம் BP வரும்... பின்னாடியே ஹார்ட் அட்டாக் வரும்... வம்ப பாரு.... அப்புறம் எப்படி ப்ளாக் எழுதி மத்தவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வெக்கறது... ஹையோ ஹையோ

பொறமை இல்ல... admire பண்ணி இருக்கேன் சிலர் எழுத்தை பாத்து... அது பெரிய லிஸ்ட்... இங்க போட்டா இன்னிக்கி முடியாது... (என்கிட்டயேவா...ஹி ஹி ஹி)


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

இதையும் "Serendipity .." லையே சொன்னேன்.. ஆஷானு ஒரு பதிவர்... அவங்க போட்ட கமெண்ட்...இதோ...

//இதுக்கெல்லாம அழுவாங்க?
அவரில்லே அழுவனும்..சரி சரி கண்ணே தொடைச்சிக்கொங்க..
எவ்ளோவோ பண்ணிட்டோம் இதே பண்ண மாட்டோமா? //

சூப்பர் மொதல் கமெண்ட் இல்லங்க... ஆனா.. என்னமோ அந்த அம்மணி அதுக்கப்புறம் நம்ம பக்கமே வருலீங்க... ரெம்ப பயந்துடாங்களோ என்னமோ.. ஹும்...

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தெரியவேண்டியது தெரியகூடாதது எல்லாமும் ரெம்பவே ஏற்கனவே ஒளறிட்டேன்... இதுக்கு மேலயும் சொன்னா... படிக்கறவங்க என்னோட சுய சரிதையே எழுதற அளவுக்கு மேட்டர் தேறிடும்... வேண்டாம்... நீங்களும் பாவம் நானும் பாவம்.. விட்ருவோம்... ஹா ஹா ஹா

பின்னூசி குறிப்பு:
பத்து வரில கேள்வி கேட்டா பத்து வரில தான் பதில் சொல்லணும்னு எந்த கண்டிஷன்ம் இல்லாத காரணத்தினால் ஸ்கூல்ல பக்கம் பக்கமா பதில் எழுதியே மார்க் வாங்கின technique ஏ இங்கயும் யூஸ் பண்ணி இருக்கேன்... டென்ஷன் ஆகாம இந்த பின்னூசி குறிப்பு வரைக்கும் படிச்ச லட்சோப லச்சம் ரசிகர் பெருமக்களுக்கு (ஒகே ஒகே ஒண்ணு ரெண்டு பேருக்கு) நன்றி நன்றி நன்றி

இந்த தொடர்பதிவு ஒரு பெரிய சுத்து ஏற்கனவே வந்துடுச்சு.. யாரை மாட்டி விடறதுன்னு தெரியல... எல்லாரும் எழுதிட்ட மாதிரி தான் இருக்கு... நானும் ஒரு பத்து இருபது ப்ளாக் போய் பாத்தேன்... எல்லாரும் எழுதியாச்சு... அதனால் எழுதாதவங்க எழுதிடுங்கப்பா... நன்றிங்க அப்புறம் பாக்கலாம்...

...
....

Monday, August 16, 2010

ப்ரியசகி...முன் குறிப்பு:
இந்த கவிதை எல்லாம் நீங்க மொதலே எங்கயோ படிச்சு இருக்கீங்க. எங்க யாருதுன்னு கரெக்ட்ஆ கண்டுபிடிங்க பாக்கலாம்? கண்டு பிடிச்சா... கண்டுபிடிச்சா... என்ன வெகுமதினு கேக்கறீங்களா? அது சஸ்பென்ஸ்...

கண்டுபிடிக்க முடியலைனா ஸ்க்ரோல் டௌன் டு எண்டு... இப்பவே இல்ல... எல்லா கவிதையும் படிச்சு முடிச்சப்புறம் தான்... இல்லேனா answer தானே மறஞ்சு போற மாதிரி செட்டிங்க்ஸ் செஞ்சு வெச்சு இருக்கேன்... ஆமா சொல்லிட்டேன்... (ஹி ஹி ஹி...)

ஒகே ஸ்டார்ட் ரீடிங்....

______________________________________

ப்ரியசகி...
சிந்தனை மழுங்கச்செயும் சிரிப்பும்
சிரிக்கவே மறக்கசெய்யும் கோபமும்
என்னையே இழக்கசெய்யும் அபிநயமும்
எந்த தேவதையிடம் கற்றாய்
கெஞ்சிகேட்கிறேன் சொல்லிவிடு
கொஞ்சமேனும் தூங்கவிடு...

கண்பேசும் வார்த்தைகள் மட்டுமல்ல
கனிவாய்பேசும் வார்த்தைகள்கூட
புரியத்தான் இல்லைஎனக்கு
புரியாத புதிரே
புத்தனாய் இருந்தஎன்னை
புதுமை பித்தனாக்கினாயே...
______________________________________

இனியவனே...
பேசிய வார்த்தைக்கெல்லாம்
புதுஅர்த்தம் தோன்றுவதேன்
பேசாத வார்த்தைகூட
பலஅர்த்தம் சொல்லுவதேன்

அருகில் நீவேண்டுமென
ஆதங்கம்எனை கொல்வதேன்
ஆயுள்எல்லாம் உனக்கேஎன
ஆசைமனம் சொல்வதேன்
______________________________________

கண்ணாளனே...
உன் ஒவ்வொரு அசைவும்
ஓராயிரம் சேதி சொல்கிறதே
உன் ஒவ்வொரு சொல்லும்
ஒன்றே பணியாய் கொல்கிறதே

பார்க்கும் இடமெல்லாம்
பாவிமனம் உனை தேடுகிறதே
பனியாய் நீ உருக
பாவை நான் கரைகிறேனே
______________________________________

மனதில் கள்ளம் புகுந்ததும்
மற்றதெல்லாம் துச்சமடி
உன்கண்ணில் காதல் கண்டதும்
உலகம் மொத்தம் உறைந்ததடி!!!

சிரிக்கும் உன் கண்களில்
சிறைவைத்தாயே என்னை
விடுதலை என்றுமே விரும்பாத
வித்தியாசமான கைதி நான்!!!

எண்ணம் பொருள் காட்சி
எல்லாம் நீயே ஆனாய்
என்னதவம் செய்தனை
எனது வரமாய் நீகிடைக்க!!!
______________________________________

நம்நட்புக்கு ஈடாய்
நான் எதையும்ஏற்றதில்லை
எதையும்நீ கேட்டநொடி
எப்படியேனும் பெற்றுதருவேன் - இன்று
என்நட்பையே கேட்கிறாயே
எப்படிதருவேன் சொல்லடி!!!
______________________________________

உன்கண்ணீருக்கு முன்
உடைந்துபோனது என்தவம்
உன்அருகாமையற்ற வாழ்வில்
உயிர்இருந்தும் நான்சவம்!!!

உனைகாணா நாட்கள்
உலகில் வாழாநாட்கள்
உன்குரல் கேளாகணங்கள்
உயிர்வதை க்ஷணங்கள்!!!

ஊன்உறக்கம் வேண்டேன்
உலகில் மற்றெதுவும்வேண்டேன்
உன்புன்னகை போதுமடி
உயிர்வாழ்வேன் நான்!!!
______________________________________

உயிர்போன வலியை
உயிரோடே உணர்ந்தேனடி
காலம் முழுமைக்கும்
கண்மணிஇது போதுமடி

காலன்தனை வென்று
கண்மலர்ந்திடு தேவதையே
கண்ணீரேஇனி வேண்டாமென
கண்ணீரில் கரைகிறேனடி
விரைந்துஎன்னிடம் வந்துவிடு
விதியைநீயும் வென்றுவிடு !!!
______________________________________

சொற்கள் நூறு
சொல்ல இயலாததை
சொல்லாமல் சொன்னது
செல்லமேஉன் ஸ்பரிசமொன்று
______________________________________

இரண்டு வருடங்கள்
இரும்புமனம் காட்டினேனே
எப்படி தவித்தாயோ
என்செல்லமே நீயும்
இரண்டு நிமிடம்கூட
இயலவில்லை எனக்கு
காதல் கொண்டமனதை
கட்டுப்படுத்த கரைகிறேனடி
______________________________________

ஒருநிலவுதான் பிரபஞ்சத்தில்என
ஒன்றாம்வகுப்பில் படித்தது
பொய்யானது இப்போது
பெண்ணே உனைகண்டதும்
______________________________________

பிரியாவரம் வேண்டி
பிறவிபல காத்திருந்தேன்
பிரியமான உனைவேண்டி
பிறவிநூறு தவம்செய்தேன்
வரம்தந்த தேவதையே
வாழ்க்கைநீயே என்னவளே
பிரியமானவளே....
______________________________________

இப்ப கண்டுப்பிடிசீங்களா? அந்த கடைசி வரிய பாத்ததும் சிலர் கண்டுபிடிச்சு இருக்கலாம்... சிலர் confuse ஆகி இருக்கலாம்... சரி சரி நோ டென்ஷன்... நானே சொல்லிடறேன்... இது எல்லாமும் நான் சில மாதங்களுக்கு முன்ன எழுதின "பிரியமானவளே..." தொடர் கதைல அங்க அங்க வந்த கவிதைகள் (!!!) ....கரெக்ட்ஆ கண்டு பிடிச்சவங்களுக்கு பத்து மார்க்...

இப்ப உங்க reaction என்னனு எனக்கு நல்லா தெரியும்...
"இதெல்லாம் ஒரு பொழப்பு"
"இப்படீல்லமா ஒரு போஸ்ட் தேத்தனும்"
அப்படினெல்லாம் உங்களுக்கு தோணினா... இட் இஸ் நார்மல்... மனுசன்னா கோபம் வர்றது சகஜம் தானே... ஆனா மனசுக்குள்ளயே திட்டிக்கோங்க... பப்ளிக்ல வேண்டாமே... பாவமில்லையா அப்பாவி தங்கமணி

பின் குறிப்பு:
உண்மைய சொல்லணும்னா... இன்னிக்கி என்னமோ திடீர்னு ஒரு மாறுதலுக்கு என்னோட ப்ளாக்ஐ நானே படிச்சேன்... (ஏன் இந்த தற்கொலைனு நீங்க முணுமுணுக்கறது கேக்குது...)

அப்போ நான் எழுதின இந்த பழைய கதை படிச்சேனா... அந்த கவிதை எல்லாம் என்னமோ கொஞ்சம் நல்லா இருக்கறா மாதிரி தோணுச்சா... (அதை நாங்க சொல்லணும்னு சொல்றீங்களோ...ஹி ஹி ஹி)

அதை உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு தொகுத்து போட்டேன்... வேற ஒண்ணும் இல்ல...

மேல போட்டு இருக்கற வைரமுத்து படத்துக்கும் இந்த கவிதைக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... சும்மா உங்கள குழப்பறதுக்கு தான்... ஹி ஹி ஹி... மீ எஸ்கேப்...

(இல்லேனா மட்டும் உன்னோட கொடுமை கிறுக்கல வைரமுத்துதுன்னு நாங்க நம்பிடுவோமா. என்ன கொடும சார் இது? நான் லீவுல போனதும் இவ கொடும ஓவர் ஆய்டுச்சு போல இருக்கே - mindvoice )

 டாட்டா Bye Bye ... சி யு....


....

Friday, August 13, 2010

அதே கண்கள்... (பகுதி 5 )


பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த சூர்யா பதறியவனாய் "என்ன சார்... என்ன கேஸ்? ப்ளீஸ் டெல் மீ" என்றான்

"மிஸ்டர் சூர்யா ... அந்த 13 ம் நம்பர் ரூம்ல கடந்த மூணு மாசத்துல மூணு பேரு மர்மமான முறைல இறந்து போய் இருக்காங்க... அதுக்கு என்ன காரணம்னு இன்னும் investigation நடந்துட்டு இருக்கு...இது தெரியாம நீங்க அந்த ரூம்ல தங்கி இருக்கீங்க... பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... நியூஸ் எல்லாம் பாக்கறதில்லையா?"

"ஐயோ... என்ன சார் சொல்றீங்க... ? நான் இந்த ஊர் இல்ல... இந்த நியூஸ் நான் எதுலயும் பாக்கலையே... ஐயோ... இப்ப என்ன செய்வேன்...சுமி... எங்க இருக்க நீ" என கிட்டத்தட்ட அழும் நிலைக்கு தயாரானான்

"காம் டௌன் மிஸ்டர் சூர்யா... லெட்ஸ் ஹோப் நத்திங் பாட் happened " என மனித நேயத்துடன் அவனை சமாதானம் செய்தார் அந்த காவல் துறை அதிகாரி

"சார் ப்ளீஸ்... என் மனைவிய கண்டுபிடிச்சு குடுங்க"

"ஸூர்... எவ்ளோ நேரமா உங்க மனைவிய காணோம்"

"கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் சார்"

"வாட்... இவ்ளோ நேரம் என்ன செஞ்சீங்க?"

"பக்கத்துல எங்கயாச்சும் போய் இருப்பான்னு எல்லா எடமும் தேடினேன் சார்"

"ஒகே...மொதல்ல ஹோட்டல்ல ஒரு ரவுண்டு பாத்துட்டு இந்த ஏரியால ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடலாம்... அனேகமா பக்கத்துல எங்கயாச்சும் போய் இருந்தாலும் இருப்பாங்க... "

"சார் நான் இந்த ஏரியா பூரா பாத்துட்டேன் சார்... சின்ன சின்ன சந்து கூட நடந்து போய் பாத்தேன்... எங்கயும் காணோம் சார்... பயமா இருக்கு சார்" என கலங்கினான் சூர்யா

"நீங்க பாத்து இருந்தாலும் இட்ஸ் மை டூட்டி... நீங்களும் என்னோட வரணும்"

"ஸூர் சார்..." என்ற சூர்யா இன்ஸ்பெக்டர் உடன் சென்றான்

ஒரு மணி நேரத்திற்கும் மேல் அந்த ஏரியா முழுக்க தேடியும் சுமேதாவை எங்கும் காணவில்லை.

"சார்... எனக்கு ரெம்ப பயமா இருக்கு... சுமி ரெம்ப பயந்த சுபாவம்... இந்த எடத்துக்கெல்லாம் தனியா வந்தே இருக்க மாட்டா" என்றான் சூர்யா

"அப்படி நிச்சியமா சொல்ல முடியாது... நீங்க ஊட்டிக்கு வந்ததுல இருந்து என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்

சூர்யா நடந்தது ஒன்று விடாமல் கூறினான்

"ஒகே... நீங்க இருந்த ரூம்ல எதாச்சும் தடயம் கெடைக்குதான்னு பாப்போம்..."

"சார் ப்ளீஸ்... அந்த மூணு கேஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க... ?" என்றான் சூர்யா

"அது... மொதல் கேஸ் உங்கள போல ஒரு யெங் கபில் தான்... அவங்க ஹோட்டல்க்கு வந்த ரெண்டு நாளுல மனைவி கொலை செய்யபட்டு இருந்தாங்க. இன்னொரு கேஸ் ஒரு பிசினஸ்மேன். அடுத்தது ஒரு பாமிலி...அவங்க சின்ன கொழந்த கொலை செய்யப்பட்டு கிடந்தது"

"ஐயோ என்ன சார் சொல்றீங்க" என சூர்யா பதற

"அப்படி எதுவும் ஆகி இருக்காது... லெட்ஸ் பி பாசிடிவ்"

"இங்க ஆவி நடமாட்டம் இருக்கறதா அந்த ஆளு கண்ணன் வேற பயமுறுத்தினான் சார்"

"புல் ஷிட் ... நீங்க படிச்சவர் தானே... இந்த மூட நம்பிக்கை கதைகள் எல்லாம் நம்பறீங்களா?" என கடிந்து கொண்டார் இன்ஸ்பெக்டர்

"நாம பயத்துல இருக்கறப்ப என்ன சொன்னாலும் நம்பற மனநிலை தான் இருக்கு சார்... ப்ளீஸ் சார்... சுமேதாவ எப்படியாச்சும் கண்டுபிடிங்க ப்ளீஸ்..."

"கண்டிப்பா.." என்றவர் கண்ட்ரோல் ரூமிற்கு அழைத்து விபரம் கூறி செக்க்போஸ்ட்ல் எல்லாம் பார்க்க சொல்லிவிட்டு ஹோட்டல் நோக்கி ஜீப்பை செலுத்தினார்

___________________

"சூர்யா... இந்த ரூம்ல உங்க பொருள் ஏதாவது மிஸ் ஆனா மாதிரி தெரியுதா?"

"இல்ல சார்... நாங்க கொண்டு வந்ததே இந்த ரெண்டு சூட்கேஸ் தான்.... அது அப்படியே இருக்கு"

"சூட்கேஸ் ஓபன் கூட பண்ணல போல இருக்கே. நீங்க கார்க்கு செல்போன் எடுக்க போனப்ப உங்க மனைவி குளிக்க போக போறதா சொன்னதா சொன்னீங்க இல்லையா?"

"எஸ் சார்"

"ஆனா சூட்கேஸ் பூட்டு கூட திறக்கலியே"

அப்போது தான் அதை கவனித்தான் சூர்யா....

"ஒருவேளை...குளிக்க போறதுக்கு முன்னாடியே அவ கடத்தப்பட்டு இருப்பாளோ?"

"கடத்தல் தான்னு எப்படி உறுதியா சொல்றீங்க சூர்யா?" என்றார் இன்ஸ்பெக்டர் போலீஸ் பார்வையுடன்

"என்ன சார் இது? என்னை குற்றவாளி மாதிரி விசாரிக்கறீங்க?"

"அது எங்க டூட்டி மிஸ்டர் சூர்யா...சொல்லுங்க... உங்களுக்கு யாரு மேலயாச்சும் சந்தேகம் இருக்கா... உங்களுக்கோ உங்க மனைவிக்கோ வேண்டாதவங்க யாராச்சும் இருக்காங்களா?"

"அப்படி யாரும் இல்ல சார்..."

"உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ வருஷம் ஆச்சு..."

"எங்களுக்கு நேத்து தான் கல்யாணம் ஆச்சு சார்... "

ஒரு நிமிடம் திகைத்த இன்ஸ்பெக்டர் "ஒ... ஐ சி... இந்த பர்சனல் கேள்வி கேக்கறதுக்கு மன்னிக்கணும்"

"கேளுங்க சார்"

"உங்களுக்கு.... முதல் இரவு நடந்ததா..."

"அது... அது வந்து..." என சூர்யா தடுமாற

"சூர்யா.. ஐ நோ திஸ் இஸ் என் எம்பாரசிங் கொஸ்டின்... பட் இந்த கேஸ்க்கு வேண்டியதால தான் கேக்கறேன்...."

"இல்ல சார்... அவ ரெம்ப டயர்ட்ஆ இருந்தா... அதனால கம்பெல் பண்ணல"

"நீங்க உண்மைய சொல்ல வேண்டியது ரெம்ப முக்கியம் மிஸ்டர் சூர்யா... இல்லேனா உங்க மனைவிய என்னால கண்டுபிடிக்க முடியாது... உங்களுக்குள்ள எதாச்சும் பிரச்சனையா"

"ஐயோ இல்ல சார்... அப்படி எதுவும் இல்ல..."

"ஒகே... நான் இப்ப கேக்கபோற கேள்வி உங்கள கோபப்படுத்தலாம்... ஆனா தவிர்க்க முடியாது...உங்க மனைவிக்கு திருமணத்துக்கு முன்னாடி காதல் ஏதாவது....." இன்ஸ்பெக்டர் முடிக்கும் முன்

"இன்ஸ்பெக்டர்... வரம்பு மீறுறீங்க..." என பாய்ந்தான் சூர்யா

"சூர்யா... நீங்க விசாரணைக்கு ஒத்துழைக்கலைனா என்னால ஒண்ணும் பண்ண முடியாது"

"சாரி இன்ஸ்பெக்டர்... என்னோட சுமேதா அப்படிபட்டவ இல்ல"

"கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆச்சுனு சொன்னீங்க...இவ்ளோ நம்பிக்கையா? அதுவும் இல்லாம காதலிக்கறது கொலை குற்றம் இல்லையே மிஸ்டர் சூர்யா"

"சார்... எங்களுக்கு கல்யாணம் முடிவாகி மூணு மாசம் கழிச்சு தான் கல்யாணம் ஆச்சு... இந்த மூணு மாசத்துல நான் சுமேதாவ சந்திக்காம இருந்த நாட்கள் ரெம்ப கம்மி... அவளும் என்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணிகிட்டானு எனக்கு நிச்சியமா தெரியும்...அதுல எந்த சந்தேகமும் இல்ல..."

"ஒகே... ஆனா... கல்யாணம் ஆன மறுநாள் உங்க மனைவி காணாம போய் இருக்காங்கன்னா சட்டரீதியா முதல் சந்தேகம் உங்க மேல தான் வரும்..."

"இன்ஸ்பெக்டர்... அந்த மூணு கேஸ்ஐ நீங்க கண்டுபிடிச்சு இருந்தா ஒருவேளை இப்படி ஒரு விபரீதம் நடக்காமையே இருந்து இருக்கும்... உங்க டிபார்ட்மென்ட் டுட்டியை ஒழுங்கா செய்யாம என்மேல தப்பு கண்டுபிடிக்க பாக்கறீங்களா... இப்படி தான் எல்லா கேஸ்யையும் திசை திருப்பி ஈஸியா கேஸ்ஐ க்ளோஸ் பண்ணுவீங்க போல இருக்கு"" என கோபமானான் சூர்யா

"மிஸ்டர்... எங்க டூட்டிய நாங்க செஞ்சுட்டு தான் இருக்கோம்... உங்க அட்வைஸ் எனக்கு தேவை இல்ல... நான் சட்டப்படி உள்ளத சொன்னேன்... வரதட்சணை பிரச்சனயோங்கர கோணத்துல தான் முதல் விசாரணை இருக்கும். உண்மைய சொல்லுங்க எதாச்சும் பிரச்சனையா உங்க ரெண்டு பேருக்குள்ள" என மறுபடியும் மிரட்டும் தொனியில் கேட்டார் இன்ஸ்பெக்டர்

"இன்ஸ்பெக்டர்... நீங்க ஏன் இப்படி பேசறீங்கன்னு எனக்கு புரியுது... இந்த கேள்விக்கு நான் பயந்து உளறினா என் மேல தான் தப்புங்கற கோணத்துல விசாரிக்க தானே" என சூர்யா கேட்க அவனது மடக்கிய பேச்சில் மௌனமானார் இன்ஸ்பெக்டர்

"இன்ஸ்பெக்டர்... நீங்க என்னை சந்தேகப்பட்டு நேரத்த விரயம் பண்ணிடாதீங்க... அப்படி எதுவும் இல்ல சார்... ப்ளீஸ்... நம்புங்க... என்னோட சுமேதா என்ன விதமான ஆபத்துல இருக்கானு தெரியல... இப்படி நேரத்த வேஸ்ட் பண்றது ரிஸ்க் சார் " என கண்கள் பனிக்க கூற

"ஒகே மிஸ்டர் சூர்யா... உங்க மனைவி மேல உங்களுக்கு இருக்கற நம்பிகைய பாராட்டுறேன்... உங்க மனைவி செல்போன்க்கு மறுபடியும் ட்ரை பண்ணி பாருங்க ஒரு முறை"

Switched off என்றே பதில் வந்தது

"நீங்க சொல்ற மாதிரி கடத்தபட்டு இருந்தா, அதுக்கு ஒரு மோடிவ் இருக்கணும்... பணம் அல்லது பகை அல்லது.... பெண்"

"என்ன சார் சொல்றீங்க?"

"பணமா இருக்கும்னு எனக்கு தோணல...அப்படி இருந்தா இந்த பேட்டிகள் உடைக்கப்பட்டு இருக்கணும்... பகை எதுவும் இல்லைன்னு நீங்க சொல்றீங்க... ஒருவேளை... உங்க மனைவி நெறைய நகை போட்டு இருந்தாங்களா... நேத்து தான் கல்யாணமாச்சுனு சொன்னீங்க இல்ல..."

"இல்ல சார்...சுமிக்கு நகைல ரெம்ப இண்டரெஸ்ட் இல்ல... ஒரு செயின் மட்டும் தான் போட்டு இருந்தா... அப்புறம் தாலி... அவ்ளோ தான்..."

"எதுக்கும் உங்க மாமனார் வீட்டுக்கு ஒரு போன் பண்ணி பாருங்களேன். அங்க எதுனா போன் பண்ணினாங்களான்னு"

"சார்....இந்த நேரத்துல... போன் பண்ணி காணோம்னு சொன்னா... என்ன சார் நெனைப்பாங்க? ரெம்ப பயந்துடுவாங்க சார்"

"மிஸ்டர் சூர்யா... இப்ப உங்க கெளரவம் முக்கியமா... இல்ல உங்க மனைவிய கண்டுபிடிக்கறது முக்கியமா?"

"சார்..."

"அப்போ உங்ககிட்ட தான் ஏதோ தப்புனு எனக்கு சந்தேகம் வருது"

"ஐயோ... என்ன சார் இது? ப்ளாக்மெயில் பண்றீங்க... இதோ இப்பவே பேசறேன்..."

சுமேதாவின் வீட்டு தொலைபேசி அந்த அகால நேரத்தில் அலறியது

தொலைபேசியை எடுத்த சுமேதாவின் அன்னை விசியம் கேள்விபட்டதும் அங்கேயே மயங்கி விழுந்தாள்

அவளது அண்ணன் முதலில் அதிர்ச்சியில் பேச மறந்து, சுமேதா அங்கே அழைக்கவில்லை என்பதை உரைத்து உடனே தான் கிளம்பி வருவதாகவும் கூறினான்

___________________

ஸ்டேஷன்க்கு அழைத்து சென்று இரவு முழுவதும் சூர்யாவை பல கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்தார் இன்ஸ்பெக்டர். அவருக்கு சூர்யாவின் மேல் இருந்த சந்தேகம் விலகவில்லை

சுமேதாவின் அண்ணன் வந்து சேர்ந்தான்

"சுமி எங்க சூர்யா?" என கோபமாய் கேட்க, அவன் கோபத்தை தவிப்பு என புரிந்துகொண்ட சூர்யா நடந்ததை எல்லாம் கூற தொடங்கினான்

அதை கேட்கும் பொறுமை அற்ற சுரேஷ் "டேய்... உண்மைய சொல்லுடா...என் தங்கச்சிய என்ன பண்ணின... ? உன்ன சும்மா விட மாட்டேன்" என சூர்யாவின் சட்டையை பிடிக்க

"சுரேஷ்...என்ன ஒளர்ரீங்க... சுமி காணாம போனதுல உங்கள விட பாதிக்கபட்டவன் நான் தான். பைத்தியகாரதனமா பேசாதீங்க" என எகிற

"ஸ்டாப் இட் ஐ சே... உங்க மாமன் மச்சான் சண்டை எல்லாம் வீட்டுல போய் வெச்சுகோங்க... இது போலீஸ் ஸ்டேஷன்... ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போட்ருவேன் ஆமா" என இன்ஸ்பெக்டர் எகிறினார்

சுரேஷ்டமும் விசாரணை செய்யப்பட்டது

காலை கதிரவன் கவலை இன்றி விடிய... அங்கு இருந்தவர்களின் முகத்தில் மட்டும் கவலை கொட்டி கிடந்தது

"சூர்யா... சுமேதா செல் போன் நம்பர் சொல்லுங்க... அந்த நம்பர்ல இருந்து கடைசியா கால் எதாச்சும் போய் இருக்கானு ட்ராக் பண்ணனும்.. "

சூர்யா செல் போன் எண்ணை கூற...உடனே கண்ட்ரோல் ரூமிற்கு ஆணை பறந்தது

சற்று நேரத்தில் தொலைநகலில் (fax ) சுமேதாவின் செல் போன் ட்ராக்கிங் ரிப்போர்ட் வந்தது

நேற்று இரண்டு அழைப்புகள் அந்த போன்இல் இருந்து சென்று இருந்தன... இரண்டும் ஒரே எண்ணுக்கு. அதுவும் இரவு சூர்யா கார்க்கு செல் போன் எடுக்க போனதாக சொல்லப்பட்ட அந்த நேரத்தில் செய்யப்பட்டு இருந்தது

சூர்யாவிடம் அந்த ரிப்போர்ட்ஐ குடுத்து அந்த நம்பர் பரிச்சியமானதா என கேட்க... இல்லை என தலை அசைத்தான்... அவன் முகம் வெளுத்ததை இன்ஸ்பெக்டர் கவனிக்க தவறவில்லை... யாருக்கு பேசி இருப்பாள் அதுவும் தான் சென்ற உடனே என அவன் முகம் மாறியது

சுரேஷ் அந்த செல் போன் எண்ணை பார்த்ததும் அதிர்ச்சியானான்

"சுரேஷ்...சொல்லுங்க... இந்த நம்பர் யாருன்னு தெரியுமா?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"இது... இந்த நம்பர்க்கு எதுக்கு சுமி போன் பண்ணினா... அதுவும் அந்த நேரத்துல... ..." என உளறினான் சுரேஷ்

"சுரேஷ் ப்ளீஸ்... டெல் மீ... யாரு இது..." என சூர்யா பதற

"அது...வந்து....அது...."

அடுத்த பகுதி - பகுதி 6 படிக்க - இங்கே கிளிக்கவும்


(தொடரும்...)


...

Friday, August 06, 2010

கடவுளும் நானும்....


"கடவுளும் நீயுமா? அந்த கடவுள கூட உன்கிட்ட இருந்து காப்பாத்த முடியலையா... மீ எஸ்கேப்" என தலைப்பை பாத்து தலை தெறிக்க ஓடியவர்கள் போக அஞ்சா நெஞ்சுடன் மிச்சத்தையும் படிக்கும் மீதம் உள்ள தோழிகளே தோழர்களே... பொது மக்களே பிரைவேட் மக்களே... ஒகே ஒகே... மீ ஸ்டாப் மொக்கை நௌ...

இந்த தொடர் பதிவை சுசி கூப்பிட்டது... அது ஆச்சுங்க ரெண்டு மாசம்... நானும் எழுதணும் எழுதணும்னு நெனச்சுட்டே இருக்கேன்... முடியல... ரெம்ப பிஸினு எல்லாம் தப்பு கணக்கு போட்டுட வேண்டாம்... அது அதுக்கு ஒரு நேரம் வரணுமல்ல...

அதுவும் சாமிய பத்தி எழுதறதுக்கு சாமி வரம் தரனுமல்ல...

எனக்கு கடவுள் நம்பிக்கை பிளஸ் பயம் எப்பவும் உண்டுங்க... ஆனா ஸ்கூல் காலேஜ் நாட்கள்ல எல்லாம் ரெம்ப சீரியஸ்னஸ் இருந்ததில்ல

அதுவும் ஒரு ஜாலி ஜோலி மாதிரி இருப்பேன்... நாத்திகம் எல்லாம் இல்ல... பொறுப்பா யோசிக்கற வயசு இருக்கலைன்னு சொல்லலாம்

எங்க வீட்டுல ஜாதி மதம் பிரிச்சு பேசுற பழக்கம் எப்பவும் இருந்ததில்ல... எல்லாமும் சமம்னு தான் கேட்டு வளந்தோம்

நான் என் கிறிஸ்டியன் பிரெண்ட்ஸ் கூட சர்ச் கூட போவேன் சில சமயம்... அம்மா எதுவும் சொன்னதில்ல

அதே போல எனக்கு முஸ்லிம் பிரெண்ட்ஸ்ம் உண்டு. வித்தியாசமா பாக்க தெரியாது எப்பவும்

இசை மேல உள்ள ஆசைல... பெரிய பி. சுசீலா எல்லாம் இல்லிங்க... என்னமோ ஒரு இஷ்டம்... ஈர்ப்பு... அந்த ஆசைல அம்மா பாட்டி கூட மார்கழி பஜனை எல்லாம் போவேன்... விடிய காலைல என்னை எழுப்பி கூட்டிட்டு போறதுக்குள்ள ரெம்ப கஷ்டபடுவாங்க... I'm not a morning person... ஆனா விட்டுட்டு போனாலும் சண்டை போடுவேன்

அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் போவேன்... அதுல ஒரு ரகசியம் உண்டு...

எங்க ஊரு பெருமாள் கோவில்ல மார்கழி மாசம் பஜனைல ஒரு நாள் "பூதலத்தை ஓர் அடி அளந்து ரூபமான பொற்" அப்படின்னு தொடங்கி "ராம ராம ராமனே" னு முடியற நாலு வரி பாடல், இப்படி முப்பது பாடல் வரும். அது எனக்கு ரெம்ப பிடிக்கும், முழு மனப்பாடம் கூட. அது என்ன தொகுப்புனு எனக்கு மறந்து போச்சு... யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்

எங்க விட்டேன்... ஆங்... இந்த முப்பது பாட்டு ஒரு நாள்.. இன்னொரு நாள் வேற என்னமோ ஒரு தொகுப்பு, ராமாயணம் பத்தி தான் இப்போ ஞாபகம் இல்ல...டச் விட்டு போச்சு... அது எனக்கு எவ்ளோ ட்ரை பண்ணியும் மனப்பாடம் ஆகல... அது ரெம்ப ராகம் எல்லாம் இருக்காது...சும்மா செய்யுள் மாதிரி படிப்பாங்க... அது வர்ற அன்னைக்கி கட் அடிச்சுடுவேன்...

இப்போ நெனச்சா ரெம்ப சின்ன புள்ளதனமா இருக்கு... நான் தான் சொன்னனே.. அப்போ அவ்ளோ தான் தெரியும்...

அப்புறம் முக்கியமா கோவில் போக இஷ்டபட்டது பிரண்ட்ஸ் கசின்ஸ் கூட நல்லா அரட்டை அடிக்கலாம்னு ஒரு ஆசைல கூட... உண்மைய ஒத்துக்கணும் இல்லையா... அப்போ அவ்ளோ தான் தெரியும்...

ஆனா சாமி கும்பிடரப்ப சின்சியரா கும்பிடுவோம்... அப்புறம் தான் விளையாட்டு எல்லாம்

அதுவும் எங்க ஊர்ல ஒரு பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உண்டு... அங்க பிரதோஷம் அன்னிக்கி நாங்க எங்க ஏரியால ஒரு பெரிய டீனேஜ் பெண்கள் கேங் இருந்தோம். ஒரு பத்து பேரு சேந்து தான் போவோம்...

என் தங்கை விரதம் எல்லாம் கூட இருப்பா. நந்தி காதுல எல்லாம் சொல்லுவா. எனக்கு அவ்ளோ எல்லாம் முடியாது. ஒரு நேரம் சாப்பிடலைனாலே அட்மிட் பண்ண வேண்டிய கேஸ் மாதிரி ஆய்டுவேன். So, சும்மா சாமி கும்பிடுவேன்... எனக்கு வேண்டிக்க கூட தோணினதில்லை

எங்க அம்மா கேப்பாங்க... ரெம்ப மும்மரமா கும்பிட்டுட்டு இருந்தியே, கோவில்ல என்ன வேண்டினேனு. ஒண்ணும் இல்ல சும்மா கும்பிட்டேன்னு சொன்னா சிரிப்பாங்க

ஆனா என்னோட உடன் பிறப்பு இருக்கே... ஒரு பெரிய நாப்பது பக்க புக் மாதிரி ஒப்பிப்பா... மாத்ஸ் எக்ஸாம் ஆரம்பிச்சு மாங்காய் ஊறுகா வரைக்கும் சொல்லுவா... சாமி ஊரை விட்டே ஓடிடும்னு அவளை நாங்க கிண்டல் பண்ணுவோம்

ஆனா எனக்கு கூட்டம் அவ்ளோ பிடிக்காது... பொதுவா கூட்டம் இல்லாதப்ப தான் கோவில் போக பிடிக்கும்

பொங்கல் பண்டிகை, ஆடி வெள்ளி, பௌர்ணமி பூஜை, கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி எல்லாம் எங்க வீட்டுல ரெம்ப நல்லா செய்வாங்க ... பாட்டி தாத்தானு கூட்டு குடும்பமா இருந்ததால எல்லாம் முறைப்படி நடக்கும்

அப்படி பாத்தே வளந்ததுனாலையோ என்னமோ இப்போவும் அந்த ஈடுபாடு உண்டு

இங்க வந்தப்புறம் முடியறப்ப வெள்ளிகிழமை கோவில் போறதுண்டு. அப்புறம் கார்த்திகை மாசம் அய்யப்பன் பஜனை மிஸ் பண்ணாம போவேன்... என்னமோ ஒரு இஷ்டம் அதை கேக்கறதுல

வீட்டுல இப்பவும் எல்லா பண்டிகையும் இங்க கெடைக்கற பொருட்கள் வெச்சு முடிஞ்ச வரை நல்லா செய்வோம்

இவ்ளோ தான் "கடவுளும் நானும்"

ஆத்திகம் நாத்திகம் பத்தி நெறைய பேச்சுக்கள் விவாதங்கள் நான் கேட்டு இருக்கேன்

எனக்கு பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்ச ஒண்ணு சொல்லி முடிச்சுக்கறேன்

நான் அப்போ எட்டாவது படிச்சுட்டு இருந்தேன்... எங்க க்ளாஸ் மிஸ் அமிர்தம்னு அவங்க பேரு. அவங்க சொன்னாங்க ஒரு முறை "நீ கடவுள் இருக்குனு நம்பறயோ இல்லியோ... உனக்கு மேல ஒரு சக்தி இருக்கு... அதுக்கு நீ என்ன பேரு வேணும்னாலும் வெச்சுக்கோ. சில பேருக்கு அது கடவுள். சிலருக்கு தன்னோட குரு... சிலருக்கு தன்னோட மனசாட்சி. எதுவானாலும் அதுக்கு நீ பயப்படனும். ஒரு தப்பான காரியம் செய்ய போறப்ப அந்த சக்தி உன்னை தண்டிச்சுடும் அப்படின்னு உனக்கு உறுத்தனும். அது தான் உன்னை வழி நடத்தனும் " இப்படி சொன்னாங்க

எனக்கு அந்த எனக்கு மேல இருக்கற சக்தி "கடவுள்" தான். எப்பவும் பயமும் பக்தியும் உண்டு

அந்த வார்த்தைகள் அவங்களுக்கு கூட மறந்து போய் இருக்கலாம்... எனக்கு இன்னும் மறக்கல...

எப்ப ஆத்திகம் நாத்திகம் பத்தி கேட்டாலும் இந்த வார்த்தைகள் கண் முன்னாலே எனக்கு வரும்

இப்போ உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன்... அவ்ளோ தான்

சரிங்க...அப்புறம் பாப்போம்... நன்றி

ஓ.. தொடர் பதிவு... யாரைக்கூப்பிட தொடர...

ம்... இதோ இவங்கள கூப்பிடறேன்... என்னை போல லேட் பண்ணாம சீக்கரம் போட்டுடுங்க...மிக்க நன்றி
கீதா சாம்பசிவம்

ஜலீலா

VGR

Mahi

LK

பத்மநாபன்

தமிழ் உதயம்

தேனம்மைலக்ஷ்மன்

Krishnaveni

சௌந்தர்....

Wednesday, August 04, 2010

பாட்டி...பச்சப்புள்ளயா நான் அழுக
பலநாள் நீ கண்முழிச்ச
அம்மாகிட்ட தூங்குன நெனவு
அங்கொன்னும் இங்கொன்னும் தான்

பள்ளிக்கி நான் போகயில
பகல் உணவு சொமந்துவந்த
பள்ளிவிட்டு வர்ற நேரம்
பால்சாதமும் கலந்து வெப்ப

கண்டிப்பும் கவனிப்பும்
கணக்காதான் வெச்சுக்குவ
அன்னிக்கி கசந்த நெல்லிக்கனி
இன்னிக்கி எனக்கு இனிக்கிறதே

குமரியா ஆன பின்னும்
குழந்தையா கொஞ்சி மகிழ்ந்த
கல்லூரி மொத நாளில்
கால்கடுக்க கூட வந்த

விடாம நீஎன்ன கவனிக்க
வேறவேல உனக்கில்லயானு
வள்ளுன்னு எரிஞ்சு விழுவேன்
வேறென்ன செய்யனு நீசிரிப்ப

பாக்கறவங்க கிட்டயெல்லாம்
பேத்தி புராணம் பேசிதீப்ப
பேசஉனக்கு சலிக்கலயானு
பலநாளு கேலி செய்வேன்

நாடுவிட்டு நான் வருகயில
நலிஞ்சுதான் நீயும் நின்ன
உன்ன அப்படி பாத்ததில்ல
உள்ளமெல்லாம் உருகி போச்சு

வருஷம் பல ஓடிபோச்சு
வயோதிகமும் கூடி போச்சு
நேத்து ஊருக்கு பேசயில
நடுங்குனஉன் குரல கேட்டு
மனசெல்லாம் பதறி போச்சு
பழசெல்லாம் கண்முன்ன ஆடுச்சு

என்னாச்சுன்னு நான் கேக்க
எம்பது வயசு ஆச்சில்ல
எந்தமருந்தும் கேக்குறதில்ல
எல்லாம் இனி அப்படிதான்னு
சாதாரணமா நீ சொல்ல
சகலமும் நடுங்கி போச்சு

தோழியின் பாட்டி தவறினப்ப
வயசாச்சேனு ஆறுதல் சொன்னேன்
உன் அத்திமத்த நெனக்கவும்தான்
உள்ளத்துல பலமில்ல பாட்டி

என்னைய நீ சீராட்டி வளத்த
என்புள்ளைய நீ பாக்கவேணாமா
உம்மடில பிள்ளய போட்டு
உன்பொக்கவாய் சிரிப்ப பாக்கவேணும்

இன்னும் கொஞ்ச காலம்
இருக்கத்தான் வேணும் நீயும்
உன்ன நான் சீராட்ட
உரிய சமயம் எனக்குவேணும்

கடவுள் கிட்ட கேக்குறதெல்லாம்
கழிச்சுக்கோ என்ஆயுசுல பத்து
என் பாட்டிக்கி குடுத்துடுஅத
எப்பவும் வணங்குவேன் உன்ன...


...