Thursday, October 28, 2010

அவள் பறந்து போனாளே... (டாட்டா... பை பை...)எவள் பறந்தா? எங்க பறந்தா?

அந்த "அவள்" வேற யாருமில்ல...சாட்சாத் இந்த அப்பாவி தான்... ஹி ஹி ஹி

எங்க பறந்தானு கேக்கறீங்களா? Actually, sorry there is a gramatical error in that statement

அவள் பறந்து போனாளேனு past tense ல சொன்னது தப்பு... actually it is future tense... இனிமே தான் பறந்து போக போறேன்... எங்கயா?

எல்லாம் நம்ம தாய் நாட்டுக்கு தான்... மூன்று வருடங்களுக்கு பின் என் இந்திய மண்ணில் காலடி தடம் பதிக்க போகும் அந்த தருணத்தை...

(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... இவ போற flight ஐ எவனும் ஹைஜாக் பண்ணினா கோடி புண்ணியமா போகும் அவனுக்கு - மைண்ட்வாய்ஸ்)

ஏய்... மைண்ட்வாய்ஸ் நான் ஊருக்கு போயிட்டு வந்து உன்னை டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்... ரெம்ப நோசை நுழைக்கர நீ வர வர...

(ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே - மைண்ட்வாய்ஸ்)

அத உடுங்க... ஊருக்கு போறத நெனச்சாலே flight ஏறாமலே பறக்கற மாதிரி தான் இருக்கு போங்க...

பெரிய லிஸ்ட் போட்டு வெச்சுருக்கேன், என்னவெல்லாம் செய்யணும்னு... பாப்போம் எவ்ளோ நடக்குதுன்னு

- லிஸ்ட்ல மொதல் விஷயம் அம்மாகிட்ட மூணு வருஷ கதை பேசணும்... என்னதான் போன்ல பேசினாலும் நேர்ல பேசறாப்ல வருமா  

- பாட்டி கையால உருட்டி தர்ற கலந்த சாதம் சாப்பிடணும் 

- தங்கையோட மூணு வருஷம் போடாம விட்ட சண்டையெல்லாம் போடணும்...ஹா ஹா ஹா

- என் உடன்பிறப்பு சின்னதுல பண்ணின ரகளை எல்லாம் அவ நாலு வயசு வாண்டுகிட்ட சொல்லி குடுத்து அதையெல்லாம் ரிபீட் பண்ண சொல்லணும்... இதெப்படி இருக்கு? ஹா ஹா அஹ  

- நானும் தங்கையும் சேந்து முடிஞ்ச வரை எங்க அப்பா/தாத்தாகிட்ட வம்பு இழுக்கணும் like gold old days...

- டெய்லி மூணு மொழம் மல்லி/முல்லைனு பூ வாங்கி தல நெறைய வெச்சுக்கணும்  

- சொந்தம் பந்தம் ஊரு உறவு நட்பு எல்லாரோடையும் வாய் வலிக்க பேசணும்  

- அப்புறம் அம்மா கை மணத்தில் மல்லிகை பூ இட்லி சாப்பிடணும்  

- கரண்ட் எப்படியும் போகும்... அப்ப மொட்டை மாடி நிலா வெளிச்சத்துல அம்மா மடில தல வெச்சுட்டு நானும் தங்கையும் ஸ்வீட் non-sense பேசணும், பாட்டுக்கு பாட்டு விளையாடணும்  

- கைல அம்மா குடுக்கற காபி டம்ளர் வெச்சுட்டு பின் கட்டு படில உக்காந்துட்டு வேற எதை பத்தியும் யோசிக்காம எந்த இலக்கும் இல்லாம ரோட்டை வேடிக்கை பாக்கணும், பக்கத்து வீட்டு அக்கா கூட அரட்டை அடிக்கணும் 

- அதிகாலை எட்டு மணிக்கே (!!!) எந்திரிச்சு எங்க வீட்டு கேட் முன்னாடி ஸ்கூல் பஸ்க்கு நிக்கற குட்டி வாண்டுகள பாத்து மலரும் நினைவுகள அசை போடணும் 

- இந்த கருமம் பிடிச்ச ஸ்வெட்டர் / விண்டர் டிரஸ் எல்லாம் மறந்து தினமும் ஆசை தீர புடவை கட்டிட்டு  வீட்டு பக்கத்துல இருக்கற கோவில் எல்லாம் போய் பாக்கணும்  

- எங்க ஸ்கூல் காலேஜ் எல்லாம் ஒரு முறை போய் பாக்கணும்  

- எல்லாத்தையும் போட்டோ வீடியோனு பதிவு செஞ்சு வெச்சுக்கணும்  

- அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் ருசிக்கணும், Hot chips ல நேந்திரம் சிப்ஸ் வாங்கி கொரிக்கணும்  

- நெறைய ரமணிச்சந்திரன் புக்ஸ் வாங்கணும்...மத்த புக்ஸ்ம் கூட வாங்கணும்  

- கிராஸ் கட் ரோடு, டவுன் ஹால், ஆர்.எஸ்.புரம் எல்லா பக்கமும் கடை கடையா ஏறி எறங்கி கொஞ்சமா(!!!) ஷாப்பிங் செய்யணும், எங்க ஊரு டவுன் பஸ்ல போகணும்  

- இங்க இருக்கறப்ப ரங்க்ஸ் ஓவர் பிஸி act குடுக்கறதுக்கெல்லாம் சேத்து வெச்சு அங்க போய் பிஸியா கண்டுக்காம பழி வாங்கணும்... ஹா ஹா ஹா (ஜஸ்ட் கிட்டிங்....) 

இப்படி லிஸ்ட் போட்டுட்டே போனா.... இன்னிக்கி முடியாது.. அவ்ளோ இருக்கு... பாவம் நீங்க... விட்டுடறேன்...

(அப்பாவி உன் கருணையே கருணை - மைண்ட்வாய்ஸ்)

கடைசியா ஒன்னே ஒண்ணு... என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செஞ்சு இன்னும் மூணு வருசத்துக்கு தாக்கு பிடிக்கற மாதிரி வேண்டிய நினைவுகள சேமிச்சுட்டு வரணும்...

ஏர்போர்ட்ல கண்ண கசக்கி அம்மாவ அழ வெக்காம flight ஏறி திரும்பி வரணும்... அவ்ளோ தான்...

சரிங்க... டாட்டா பாய் பாய்... ஒரு மாசம் கழிச்சு பாக்கலாம்... அச்சச்சோ... என்னதிது... அழவெல்லாம் கூடாது... ஒரே மாசம்... இப்படி போய்டும் கண்ணமூடி தெரக்கராப்ல... வந்துடறேன்... சரியா

(ஹும்... நெனப்ப பாருங்க இவளுக்கு... நாமெல்லாம் ஆனந்த கண்ணீர் விடறோம்னு புரியாம ஓவர் பில்ட் அப் பண்ணுது - மைண்ட்வாய்ஸ்)

டாட்டா... சி யு....
 
(விடுதலை விடுதலை விடுதலைனு ஏதோ பாட்டு கேக்குதே... என்னோட பிரமையோ... என்னமோ போங்க... ஹா ஹா அஹ)

கடைசியா ஒரு விஷயம், அக்டோபர் 12th தேதி தினத்தந்தில வந்த "கோவை விமான நிலையத்திற்கு தீவிரவாதிகள் மிரட்டல்... போலீஸ் படை குவிப்பு" னு வந்த அந்த நியூஸ்க்கும் நான் ஊருக்கு போறதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்றேன்... (உள்ளூர நடுங்கியபடியே... ஹும்... )

இது நெஜமாவே தினதந்தில வந்த நியூஸ்... எனகென்னமோ என் ப்ளாக் படிச்ச யாரோட சதியோ இதுனு யோசனையாவே இருக்கு? ஹும்... கடவுளே... ஒழுங்கா திரும்பி வந்து சேந்தா உனக்கு தேங்காய் ஒடைக்கிறேன்...

அப்படி வராம போனா என்னோட ப்ளாக்ஐ யாருக்கு உயில் எழுதி வெக்கறதுன்னு நான் தீவிரமா யோசிச்சப்ப, ஐயோ வேண்டாம் ஐயோ வேண்டாம்னு யாரோ கத்தற சத்தம் கேட்டது... சரி உடுங்க... பொது சொத்தாவே இருந்துட்டு போகட்டும்... ஹும்

Happy Deppavali to all of you!!!

ஒகே Bye Bye...

கடைசியா ஒரு விஷயம்...

(டாட்டா... பை பை சொல்லி ஏழு மணி நேரமாச்சு... இவ கெளம்ப மாட்டா... இந்த ஜென்மத்துல... - மைண்ட்வாய்ஸ்)

அப்பாவியின் அப்பாலஜி:
கடந்த ரெண்டு மூணு வரமா உங்க ப்ளாக் பக்கமெல்லாம் அதிகம் வர முடியல... தப்பா நெனைக்க வேண்டாம். ஊருக்கு போறதால ஆபீஸ்ல கொஞ்சம் ஆணி அதிகம்... அதுவுமில்லாம கொஞ்சம் நேரம் கிடைச்சப்ப கூட கர்ம சிரத்தையா "அதே கண்கள்..." எழுதவே சரியா போச்சு. முடிக்காம ஊருக்கு போனா உங்க சாபத்துல flight ஏ வெடிச்சுடுமோனு ஒரு பயம் தான்... சரிங்க ஊரு போயிட்டு வந்து உங்க ப்ளாக்ல விட்டதெல்லாம் படிச்சு பக்கம் பக்கமா கமெண்ட் போட்டு உயிரை வாங்குவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்... (தக்குடு இப்பவே காத தூரம் ஓடற மாதிரி இருக்கே... ஹா ஹா)

ஒகே... ஒகே... ஐ வில் ஸ்டாப் நௌ... நெஜமாவே டாட்டா... பை பை...  

மாவடுவும் மல்லிகையும்  
மணக்கும் பருப்புபொடியும் 
அதிரசமும் அச்சுமுறுக்கும்
அத்தனையும் வேணுமுன்னு 
அம்மாகிட்ட ஆசையசொன்னேன்  
அவளுந்தான் உருகிப்போனா....

என்னவாங்கி வரட்டுமுன்னு  
என்தாய நானும்கேக்க 
என்புள்ள நீவந்தாபோதும் 
'எனகென்ன வேணுமடி' னா

அம்மா...
குடுக்கத்தான் தெரியுமுனக்கு 
கேக்கத்தான் தெரியுமெனக்கு...
....

Wednesday, October 27, 2010

அதே கண்கள்... (இறுதி பகுதி)இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

கார் சற்று ஓட தொடங்கியதும் "நான் நான்..." என சுமேதா ஏதோ கூற தடுமாற

"நீ...நீ... எதுவும் பேச வேண்டாம்... வீட்டுல போய் பேசிக்கலாம்" என சூர்யா அவள் தவிப்பை ரசித்து சிரித்து கொண்டே கூறினான்

"நான்... வீட்டுக்கு வர்ல..." என்றாள் சுமேதா கோபமாய்

"சரி... வீட்டுக்கு வேண்டாம்... வேற என்ன போலாம் சொல்லு... எங்கயாச்சும் வெளியூர் போலாமா?" என்றான் மென்மையாய்  அவள்  கைகளை  அழுத்தியவாறே

சட்டென அவன் கையை உதறியவள் "ஏன்... என்னை கொல பண்ண வேற வெளியூர்ல புதுசா எதாச்சும் பிளான் பண்ணி இருக்கீங்களா?" கோபம்  சற்றும் குறையாத குரலில் சுமேதா கேட்க,  அப்படி  ஒரு கேள்வியை  எதிர்பாராத  சூர்யா ஒரு கணம் செயல்பட இயலாதவன் போல் காரை அவசரமாய் நிறுத்தினான்

அந்த அதிர்வில் தன்னை நிலைபடுத்திக்கொள்ள தன்னையும் அறியாமல் அவன் கையை பற்றியவள் அவசரமாய் விலகினாள்

சூர்யா இன்னும் அவள் கேள்வியின் தாக்கத்தில் இருந்து வெளி வர இயலாமல் அவளையே வேதனையோடு பார்த்தான்

அவன் கண்களில் தெரிந்த வேதனை தன்னை அசைத்த போதும் அதை தன் கண்களில் அவன் கண்டுகொள்வானோ என பயந்தவளாய் முகத்தை வேறு புறம் திருப்பினாள் சுமேதா

அதற்கு மேல் வீட்டிற்கு வரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. கார் நின்றதும் தான், வீட்டிற்கு வந்திருப்பதை உணர்ந்த சுமேதா "நான்... போகணும்..." என்றாள் அவன் முகத்தை கூட பாராமல்

"போ...நான் தடுக்கல... அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசணும் சுமி" என அவன் குரல் நிதானமாய் ஒலித்தது

"எனக்கு... எதுவும் கேக்க வேண்டாம்..." என சுமேதா வெளியே கேட்  பக்கம்  நடந்தாள்

அவள் முன் வந்து மறித்தவன் "உள்ள வா.... உன்கிட்ட பேசணும் ப்ளீஸ்..." என்றான் அவள் கண்களை நேராய் பார்த்து

"வழி விடுங்க நான் போகணும்" என அவனை மீறி செல்ல முயன்றாள்

சட்டென அவள் கைகளை தன் கரங்களுக்குள் சிறை பிடித்தான் சூர்யா

அவன் தொடுகை தன்னை பலமிழக்க செய்வதை உணர்ந்தவள் அவன் பிடியில் இருந்து விடுவித்து கொள்ள போராடினாள்

என்ன செய்தாலும் உன்னை விடுவதாய் இல்லை என முடிவு செய்தவன் போல் சூர்யா இன்னும் தன் பிடியை இறுக்கினான்

இயலாமை கோபத்தை கிளற, அவன் பிடியை தளர செய்ய ஒரே ஆயுதமாய் தன் பேச்சை பயன்படுத்த எண்ணினாள் சுமேதா

"இப்ப என்ன? யாரும் இல்லாதப்ப என்னை கொன்னு எங்கயாச்சும் கொண்டு போய் போட போறீங்களா? உங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம். நானே எங்கயாச்சும் போய் விழுந்துடறேன்" என்றாள்

அவள் வார்த்தை மனதை வேதனையுற செய்த போதும் தன்னை பலவீனபடுத்தி தன்னை விட்டு விலகவே அப்படி செய்கிறாள் என்பதை உணர்ந்த சூர்யா பேச்சை மாற்றும் எண்ணமாய்

"தனியா கொல தான் செய்யணும்னு இல்ல சுமி... இன்னும்...." என மையலாய் புன்னகையுடன் நோக்கியவனை இடைமறித்தாள்

"போதும் நிறுத்துங்க... விடுங்க நான் போகணும்" என்றாள் தீர்மானமாய்

"நீயே வீட்டுக்குள்ள வர்றயா? இல்ல நான் தூக்கிட்டு போகணுமா?" என தான் அதற்கும் தயார் என்பது போல் அவளை தூக்க தயாராவது போல் பாவனையுடன் நெருங்கினான் சூர்யா சிறு முறுவலோடு

அவன் கோபத்தை கூட தாங்கி நின்று பழகியவள் இப்போது அவன் நெருக்கத்தை தாங்க இயலாமல் "விடுங்க வரேன்... "  என்றாள்

அவளை விடுவிக்க மனமில்லாத போதும் அவள் பிடிவாதத்தை உணந்தவனாய் விலகி நின்றான்

சுமி எதுவும் பேசாமல் வீட்டினுள் சென்றாள்
 
உள்ளே சென்றதுமே "நான் தான் டைவர்ஸ் பேப்பர்ஸ் எல்லாம் சைன் பண்ணிட்டனே... இன்னும் என்ன வேணும்?" என எங்கோ பார்த்து கொண்டு சுமேதா கேட்க

"நீ தான் வேணும்..." என்ற சூர்யா அதற்கு மேல் விலகி நிற்க இயலாமல்  அருகில் சென்று அவள்  முகத்தை கைகளில் ஏந்தினான்

அவன் பார்வையை நேரே சந்திக்க இயலாமல் அவனை விட்டு விலகியவள்

"நான்... நான்... இங்க இருக்க மாட்டேன்... நான் உங்களுக்கு தேவை இல்ல" என்றவளின் குரலில் கோபம் மிகுந்து இருந்ததை உணர்ந்தான் சூர்யா

"சுமி ப்ளீஸ்... அப்படி சொல்லாத... நான் பண்ணினது தப்பு தான்... மன்னிக்கவே முடியாத தப்பு தான்... ஆனா அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை வேண்டாம் சுமி..." என உணர்ச்சி மேலிட கூற

"இதுவும் உங்க டிராமால ஒரு பகுதியா...?" என இரக்கமில்லாமல் அவள் குரல் வெளிப்பட்டது

சற்று நேரம் அவன் எதுவும் பேசவில்லை. திரும்பி அவனை பார்த்தவள் அவன் துயரம் நிறைந்த முகம் மனதை பிசைய பார்வையை விலக்கினாள்

"சுமி... உன் கோபம் நியாமானது தான்... அதுக்கு காலம் பூரா நான் மன்னிப்பு கேக்க தயார். ஆனா எனக்கு நீ வேணும்" என அவள் அருகில் வர அவனருகில் தன் உறுதி தளர்வதை உணர்ந்தவள் விலகி சென்றாள்

"சுமி...நான் சொல்ல வேண்டியத சொல்லி முடிச்சுடறேன்... அதுக்கு மேல உன் விருப்பம்" என அவன் நிறுத்த அவள் பதிலேதும் பேசாமல் நின்றாள்

மீண்டும் அவனே தொடர்ந்தான் "ஆரம்பத்துல அனிதாவோட இந்த நிலைமைக்கு காரணமான அந்த ரெண்டு பேரை கண்டுபிடிக்க முடியாம போனப்ப, இதை ஆரம்பிச்சு வெச்சது நீ தான்னு அது ஒண்ணு தான் மனசுல இருந்தது. நான் பொய் சொல்ல விரும்பல... உன்னோட போட்டோவ தரகர் கொண்டு வந்தப்ப கல்யாணம் நிச்சியம் மட்டும் பண்ணி அப்புறம் விலகிடனும்... அப்படி தான் உன்னை பழி வாங்கணும்னு மட்டும் தான் எண்ணம் இருந்தது. ஆனா உன்னோட பழக ஆரம்பிச்சப்புறம் என்னையும் அறியாம எனக்கு மட்டும் தான் நீ சொந்தம்னு தோண ஆரம்பிச்சது" என்றவனை நம்பாமல் ஏறிட்டாள்

"ஆனா அப்போ அதை வாய் விட்டு சொல்லவோ மனசால ஏத்துக்கவோ முடியல சுமி... உன்மேல என் கவனம் பதிய பதிய என்னை இப்படி அடிமைப்படுத்தறேனு அதுக்கும் உன் மேல கோவம் தான் வந்தது. ஆனாலும் கல்யாணத்த நிறுத்த மனசு வரல. அனிதாவோட நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிட்டே போச்சு. நம்ம கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி அனிதாவ பாக்க போனப்ப அவ என்னை கூட அடையாளம் தெரியாம கத்தினது தாங்க முடியல... அந்த கோபம் மொத்தமா உன்மேல தான் திரும்புச்சு... அப்ப தான் நான்...." என சொல்ல வந்ததை சொல்ல இயலாமல் சூர்யா நிறுத்த

"என்னை கொல்லனும்னு முடிவு பண்ணினீங்களா?" என வேதனை நிறைந்த குரலில் சுமேதா அவனை நேருக்கு நேராய் பார்த்து கேட்டாள்

அவளின் வேதனை நிறைந்த குரலும் கலங்கிய கண்களும் அவன் குற்ற உணர்வை மேலும் கூட்ட கட்டுப்படுத்த இயலாமல் அவள் கைகளை பற்றி தன் நெஞ்சோடு வைத்து கொண்டான் சூர்யா

"சுமி... ப்ளீஸ்... நான்...  நான் ஒரு ஒரு நாளும் நெனச்சு நெனைச்சு என்னையே வெறுக்கற ஒரு விஷயம் அது"

அவன் சொன்ன  சமாதானத்தை  ஏற்க  இயலாதவள்  போல்  அவன்  கையை  உதறியவள் "எப்படி சூர்யா? நெஜமாவே உங்க மனசுல நான் சின்ன பாதிப்பயாச்சும் ஏற்படுத்தி இருந்தா என்னை... என்னை... அந்த நடு காட்டுல... " என்றவள் அதற்கு மேல பேச இயலாமல் அந்த பயங்கரமான நினைவில் தடுமாற

"சுமி..." என பதறியபடியே விரைந்து அவளை தன்னோடு அணைத்தான்

"நோ... என்னை தொடாதீங்க" என விலகினாள் சுமேதா

அவள் விலகியது பொறுக்காமல் "ப்ளீஸ்டா... சாரி சுமி...ப்ளீஸ்... சத்தியமா சொல்றேன்... அதை நெனச்சு உன்னை விட அதிகமா வேதனை படறவன் நான் தான் சுமி..." என தன்னிலையை அவளுக்கு புரிய வைக்க முயன்றான்

ஆனாலும் சற்றும் சமாதானமாகாத சுமேதா "இதை நான் நம்பனுமா?"  என்பது போல் ஒரு பார்வை பார்க்க

"நான் சொல்ல வந்தத சொல்லி முடிச்சுடறேன் சுமி... அந்த நிமிச கோபத்துல வேகத்துல உன்னை அப்படி தனியா விட்டுட்டு வந்துட்டு உனக்கு எதுவும் ஆகி இருக்க கூடாதுன்னு என்னோட இன்னொரு மனசு ஏங்கினது எனக்கு தான் தெரியும் சுமி... அந்த நாள் எனக்குள்ள இருந்த மிருகம் என்னை பலவீனமாக்கிடுச்சு... "

"ஒருவேள நான் செந்திருந்தா..." என சுமேதா  கேட்க ஒருகணமும் தாமதியாமல் "நான் அதுக்கப்புறம் உயிரோட இருந்துருப்பேனு தோணல" என்றான் சூர்யா

"ஹும்...அதான் திரும்பி வந்ததும் அவ்ளோ நல்லா பாத்துகிட்டீங்களா?" என ஏளனம் போல் கேட்டாள்

ஏளனத்தையும் மீறி அவள் குரலில் இருந்த வேதனையை உணர்ந்தவன் தன் மனதை மறைக்காமல் எடுத்துரைத்து அவள் வேதனையை போக்க எண்ணினான்

"திரும்பி வந்தப்ப மொதல்ல உன்னை face பண்ற தைரியம் எனக்கு இருக்கல சுமி... உனக்கு உண்மை தெரிஞ்சுடுச்சுனு புரிஞ்சப்ப நீ இனி என்னை முழு மனசோட நேசிக்க மாட்டேன்னு மனசுல ஒரு எண்ணம் வந்தது. என்னால அதை தாங்க முடியல...

உன்னை இனி இழந்துடுவேங்கர எண்ணமே என்னை பைத்தியமாக்கிடுச்சு. எப்படி என்னை உனக்கு புரிய வெக்கறதுன்னு புரியாம தவிச்சுட்டேன் சுமி. எல்லா உண்மையும் சொன்னா அந்த நிமிசமே நீ என்னை விட்டு போய்டுவயோனு பயம்

நீ கணேஷ்கிட்ட பேச முயற்சி பண்ணினப்ப, அருணை தேடி போனப்பவெல்லாம் நீ என்னை விட்டு விலகறயோனு... அதான் கோபமா வெளிப்பட்டது சுமி... சத்தியமா அதான் உண்மைடா... ப்ளீஸ் என்னை நம்பும்மா ப்ளீஸ்..." என அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன்

"நீ அனிதாவ பத்தி தெரிஞ்சுக்க தான் அருணை தேடினேனு சொன்னப்ப அனிதாவ பாக்க போகனுங்கற அந்த பதட்டத்துலயும் என் மனசுல ஏற்பட்ட சந்தோஷம் உனக்கு புரியாது சுமி..."

சட்டென அவன் கையை விலக்கியவள் "அப்போ... என்னை அருண் கூட வேற விதமா தப்பாவும் யோசிச்சு இருக்கீங்க இல்லையா?" என கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு சுமேதா கேட்க

"ஐயோ... இல்லடா... நான் பண்ற கொடுமை தாங்காம... ஒருவேள..." என சூர்யா தடுமாற

"அவன்கிட்ட போய்டுவேன்னு நெனச்சீங்க இல்ல?" என அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்,  தன்னை எப்படி அவன் அவ்வாறு நினைக்கலாம் என தாங்காமல்

"ப்ளீஸ் சுமி...அப்படி பாக்காத...  என்னோட நெலமைல இருந்து ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு... ஏன் நீ நெனைக்கலையா? அனிதா உங்க காதலியான்னு கேக்கலையா? என் மேல உள்ள அன்புனால தானே அப்படி கேட்ட... ப்ளீஸ்டா என்னை நம்பு... ஐ லவ் யு சுமி... எனக்கு நீ வேணும்மா" என்றவனின் குரலில் இருந்த அன்பும் காதலும் அவள் பிடிவாதத்தை தகர்க்க அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அவள் கண்ணீர் அணை மீறியது

அவள் அழுவதை காண சகியாமல் அவளை தன்னோடு அணைத்தவன் "ப்ளீஸ் சுமி... அழாதடா ப்ளீஸ்... ப்ளீஸ்...ப்ளீஸ்..." என சூர்யா அவளை  சமாதானப்படுத்த  முயல  அவள் அழுகை மேலும் வலுத்ததே ஒழிய குறையவில்லை

"எ...என்னால... தா... தாங்க முடியல.... " என கதறினாள். துக்கம் தீரும் வரை அழுது ஓயட்டும், இனி எப்போதும் அவள் கண்ணில் நீர் வர தான் காரணமாய் இருக்க கூடாது என உறுதி பூண்டவன் போல் ஆதரவாய் அவளை அணைத்து நின்றான்

கதறல் தேம்பலாகி கேவலில் தொடங்கி விசும்பலில் வந்து நின்றது

"என்னால இன்னும் நடந்ததெல்லாம் நெனச்சா, தாங்க முடியல சூர்யா" என அவள் விசும்ப

"சாரிடா ப்ளீஸ்... நடந்த எதையாச்சும் மாத்த முடியும்னா அதுக்காக என்ன விலை குடுக்கவும் நான் தயார் சுமி... என்னை நம்புமா ப்ளீஸ்..." என ஆதரவாய் அவளை தன் மார்போடு அணைத்தான்

மெல்ல அவளை விலக்கி முகத்தை பார்த்தவன் அவளின் அழுது சிவந்த கண்களில் இதழ் பதித்தான். மீண்டும் தன்னோடு அணைத்து கொண்டான்

தனக்கும் அதுவே சம்மதம் என்பது போல் அவன் அணைப்பில் அசையாமல் நின்றாள் சுமேதா

அதற்கு பின் எதுவும் பேசக்கூட வேண்டியதில்லை என்பது போல் இருவரும் மௌனமாய் இருந்தனர்

சில நேரங்களில் பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனம் பல செய்திகளை சொல்வதை இருவரும் அந்த கணம் அனுபவப்பூர்வமாய் உணர்ந்து நின்றனர்

திடீரென ஏதோ நினைவு வந்தவள் போல் "அனிதாவ பத்தி அத்தை கூட என்கிட்ட எதுவும் பேசினதில்லயே... ஏன்?" என கேட்க

"அவள பத்தி பேசினாலே நான் ரெம்ப அப்செட் ஆய்டுவேன், சரியா சாப்டாம தூங்காம இருப்பேன்னு அந்த பேச்சே வீட்டுல இருக்காது சுமி. அம்மாவுக்கும் அவ மேல உயிர். அவளுக்கு எங்க யாரையும் அடையாளம் தெரியாம எங்களை பாத்தாலே பயந்து கத்தினப்ப அம்மாவால தாங்க முடியல. அவளுக்கு குணமாகற வரை பாக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க" என வருத்தம் மேலிட கூற

"என்னாலையே அவளை அப்படி பாக்க முடியல... சாரிப்பா... " என சுமேதா நிஜமான வருத்ததோடு கூற

"இனி பழச பத்தி பேச வேண்டாம் சுமி... அனிதா குணமாகி வர்றப்ப உன்னை அவ அண்ணியா பத்தா சந்தோசத்துல குதிக்க போறா பாரேன்" என தங்கையின் அன்பை நினைவு கூர்ந்தான்

"ம்... நானும் அந்த நாளுக்காக காத்துட்டு இருக்கேன்" என்றாள் சுமேதா

"சுமி... அனிதா மனசுல அருணோட பிம்பம் அப்படி பதிஞ்சு போய் இருக்குன்னா அதுக்கு என்ன காரணம்னு உன்னால யூகிக்க முடியுதா?" என சூர்யா அர்த்தத்துடன் அவளை பார்க்க

"அவ மனசுல அருண் முக்கியமான எடத்துல இருக்கான்னு தோணுது. அருணும் அனிதா மாதிரியே சின்ன வயசுலேயே பெத்தவங்கள இழந்து அன்புக்கு ஏங்கினவன்...அதான் நான் நட்பா காட்டின அன்ப கூட..." என தயக்கமாய் நிறுத்த

"எனக்கு புரியுது சுமி... ஆனா நாம நேத்து பாத்த அருண் பழைய அருண் இல்ல. நல்ல மாற்றம் தெரியுது... ரெண்டு பேருக்கும் விருப்பம் இருக்கும்னா அருண் தான் இந்த வீட்டு மாப்பிள்ளை" என மகிழ்வோடு கூற

"எனக்கும் அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்தப்ப அப்படிதாங்க தோணுச்சு" என தானும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினாள் சுமேதா

"ஆஹா... இதான் made for each other போல இருக்கே" என அவன் சிரிக்க அவளும் அவன் சிரிப்பில் கலந்தாள்

அதற்கு பின் வெகு நேரம் இருவரும் ஏதேதோ பேசி ஒருவர் மேல் மற்றவர் கொண்ட அன்பை ஏதோ ஒரு விதமாய் பறைசாற்றி கொண்டிருந்தனர்

"சுமி... நான் விலகி விலகி போனப்பவெல்லாம் என் கோபத்த கூட பொருட்படுத்தாம இருந்த நீ... இப்ப... எப்படி சுமி உனக்கு மனசு வந்தது... மொத்தமா போறேன்னு எழுதி வெச்சுட்டு போக... ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சு அதை படிச்சப்ப" என அவன் நெகிழ

"நீங்க கோபபட்டப்ப அதுக்கு என்ன காரணம்னு தேடுச்சு மனசு. ஆனா அமைதியானப்ப பயம் வந்துடுச்சு. ஒருவேள போ வெளியனு சொல்லிடுவீங்களோனு பயம். அதை தாங்கற சக்தி எனக்கில்ல. அதான் நானே விலகிடனும்னு... சாரிங்க... அந்த நிமிச வேகத்துல அப்படி எழுதிட்டேன்" என கூற அவள் குரலில் தெறித்த வேதனை தாங்காமல் பேச்சை மாற்றும் எண்ணத்துடன்

"அது சரி... உங்க அம்மாகிட்ட ஒரு வாரம் அங்க தங்க போறதா சொன்னயாமே... அப்புறம் என்ன செய்யறதா உத்தேசம் இருந்தது மேடம்க்கு" என கேலி போல் கேட்க

"ம்... உண்மைய சொல்லணும்னா... அதுக்குள்ள நீங்களே வந்து கூப்ட்டுட்டு போய்டுவீங்கன்னு ஒரு பேராசை... உள்மனசுல..." என்றவளின் குரலில் தன் மீது அவள் கொண்ட நம்பிக்கையும் காதலும் வெளிப்பட

"அது பேராசை இல்லடா கண்மணி... அன்பு மேல உள்ள நம்பிக்கை" என அவள் நெற்றியில் இதழ் பதித்தான் சூர்யா

திடீரென ஏதோ நினைவு வந்தவள் போல் சுமேதா "ஐயோ... அத்த மாமா வர்ற நேரமாச்சே... " என அவனிடமிருந்து தன்னை விலக்கி கொள்ள முயல

"ப்ளீஸ் சுமி... என்னை விடு நகராத" என அணைத்தான், ஒருகணமும் அவளை விட்டு பிரிய மனமில்லாதவன் போல்

"அத்த மாமா... " என அவள் தொடங்க

"அவங்க இன்னைக்கி வரல..." என சூர்யா கூற, அவள் தலை உயர்த்தி கேள்வியாய் நோக்க அவன் விஷமமாய் சிரித்தான்

"பொய் சொன்னீங்களா?" என பொய் கோபம் காட்ட

"அது தான் நான் உன்கிட்ட சொல்ற / சொன்ன கடைசி பொய்... இனி வாழ்நாள் முழுக்க உன்கிட்ட உண்மை தவிர வேற எதுவும் பேச மாட்டேன்... இது என் காதல் தேவதை உன் மீது ஆணை" என ஏதோ வசனம் போல் சூர்யா பேச சுமேதா வாய் விட்டு சிரித்தாள்

அவள் சிரிப்பை மனதார ரசித்தவன் "இந்த சிரிப்ப பாத்து எவ்ளோ நாளாச்சு சுமி... இனி எப்பவும் நீ சிரிச்சுட்டே இருக்கணும்...." என அன்பு ததும்ப கூற

"எப்பவும் சிரிச்சுட்டே இருந்தா அதுக்கு பேரு பைத்தியம்" என அவள் கேலி செய்ய

"அது தெரிஞ்சுது தானே..." என அவனும் வம்பு செய்ய

"என்னது?" என அவள் செல்லமாய் அடிக்க, அந்த மெல்லிய கைகளை பற்றி அவள் விரல்களில் இதழ் பதித்தான் சூர்யா

தன் சிவந்த முகத்தை மறைக்க அவன் மார்பில் முகம் புதைத்தாள் சுமேதா

ஊடலின் ஆதாரம்
உரிமையின் ஸ்வீகாரம்
உரிமையற்ற உறவுகளில்
ஊடல் ஊடுவதில்லை

ஊடலற்ற காதல்
உயிரற்ற உடல்
ஊடலின் பின்னானநேசம்
உயிர்நிறைக்கும் சுவாசம்

உயிர்நிறைக்கும் சுவாசமாய்
உள்ளம்புதையும் நேசமாய்
உன்னில்என்றும் கலந்திருப்பேன்
உயிராய்என்னில் சுமந்திருப்பேன்!!!

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

முற்றும்)

...

Monday, October 25, 2010

அதே கண்கள்... (பகுதி 23)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

இங்கு தனியாய் இன்னும் சற்று நேரம் இருந்தால் தானே மனம் மாறிவிடக்கூடும் என தோன்ற விரைந்து தன் பொருட்களை சேகரித்து கொண்டு கிளம்பினாள் சுமேதா

கிளம்பும் முன் டைவர்ஸ் பேப்பர்களை மேஜை மீது வைத்தவள் அதன் மேல் ஒரு குறிப்பையும் எழுதி வைத்தாள் "போகிறேன்... மொத்தமாய் போகிறேன்... நான் செய்த தவறை ... முடிந்தால் மன்னிக்கவும்...  - சுமேதா"
______________________________________________________
 
அதே நேரம் அலுவலகத்தில் நிலைகொள்ளாமல் தவித்தான் சூர்யா

எப்போது சுமேதாவை காண்போமென்ற எண்ணமே அவனை முழுவதும் ஆக்ரமித்திருந்தது

உடனே அவள் குரலை கேட்க வேண்டுமென தோன்ற தன் வீட்டு எண்ணுக்கு அழைத்தான்

வெகு நேரம் மணி அடித்தும் சுமி எடுக்காமல் போக என்ன ஆனதோ என பதறினான்

ஒருவேளை கணேஷ் வீட்டிலேயே இருக்கிறாளோ, மிகவும் சோர்வாக வேறு இருந்தாளே என தோன்ற உடனே கணேசின் செல்போன் எண்ணுக்கு அழைத்தான்

"சொல்லுங்க சூர்யா..."

"கணேஷ்... ம்... சுமி இருக்காளா...? சும்மா... பேசலான்னு தான்" என தடுமாற

"சுமிய அப்பவே வீட்டுல டிராப் பண்ணிட்டனே சூர்யா... அம்மா இருன்னு எவ்வளவு சொல்லியும் கேக்கல... " என கணேஷ் கூற பதறிய மனதை கட்டுபடுத்திய சூர்யா

"ஒகே கணேஷ் நான் வீட்டுக்கு கூப்பிட்டு பாக்கறேன்" என சமாளித்து பேசியை துண்டித்தான்

என்ன ஆனது, எங்கு போனாள் என எதுவும் அனுமானிக்க இயலாமல் யாரை கேட்பது என எதுவும் தோன்றாமல் சற்று நேரம் மௌனமானான் சூர்யா

"ஏதேனும் தவறாய் முடிவு எடுத்து இருப்பாளோ" என தோன்றிய கணம் இதயம் சற்று நின்று இயங்கியது

"இல்லை, அப்படி செய்யும் கோழை இல்லை என் சுமி... " என உடனே தன்னை தானே சமாதானம் செய்து கொள்ள முயன்றான்

"வேண்டுமென்றே தன் மேல் உள்ள கோபத்தில் வீட்டில் தொலைபேசி எடுக்காமல் இருக்கிறாளென" மனதை அமைதிப்படுத்த முயன்றான்

அடுத்த கணமே இரவு கார் கண்ணாடியில் தெரிந்த அந்த வேதனை நிறைந்த முகம் கண் முன் வர உடனே அவளை பார்த்தால் தவிர தன்னால் மூச்சு விடவும் இயலாது என நினைத்தான்

ஆனால் அலுவலக வேலைகள் அவனை நகரவும் விடாமல் தடுத்தன. இன்னும் சற்று நேரம் பாப்போம் என வேலையில் கவனத்தை செலுத்த முயன்றான்
_____________________________________________

மகள் பெட்டியுடன் வீட்டினுள் நுழைந்ததை கண்ட சுமேதாவின் அன்னை துணுக்குற்றாள்

"என்ன சுமி? என்ன இந்த நேரத்துல தனியா? அதுவும் பெட்டி எல்லாம்" என பதற என்ன சொல்வதென புரியாமல் ஒரு கணம் சுமேதா விழித்தாள்

எப்படியும் சொல்ல வேண்டியது தானே என பேச தொடங்கியவள் பெற்றவளின் உடல் நிலை பற்றிய கவனம் வர, அண்ணனும் அப்பாவும் அருகில் இருக்க கூறுவது தான் சரியென மௌனமானாள்

"அது வந்தும்மா... ஒரு வாரம் இங்க இருக்கலாம்னு... ரெம்ப நாள் ஆச்சே நம்ம வீட்டுல ரெண்டு நாள் சேந்த மாதிரி இருந்து... என்னோட ட்ரெஸ் எல்லாம் அங்க இருந்தது... அதான் பெட்டி... "என ஏதோ சமாளித்தாள்

மகள் தன்னுடன் ஒரு வாரம் இருக்கபோகிறாளென்ற சந்தோசத்தில் பெற்றவளுக்கும் வேறு எதுவும் தோன்றவில்லை

"அப்படியா... இப்பவாச்சும் மாப்பிளைக்கு உன்னை அனுப்ப மனசு வந்ததே... " என பெற்றவள் மகிழ

"என்னை மொத்தமா அனுப்பணும்னு தானேமா இவ்ளோ நாளா போராடினாரு" என மனதில் தோன்றிய வார்த்தைகளை விழுங்கினாள் சுமேதா

"சரி சுமி... நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா... நான் உனக்கு பிடிச்ச காரக்கொழம்பு செய்யறேன் இன்னிக்கி" என அவள் அம்மா அன்பு மேலிட உரைக்க அது தன்னை பலவீனமாக்குவதை உணர்ந்த சுமேதா அந்த இடத்தை விட்டு அகன்றாள்

தன் அறைக்கு சென்றவள் சற்று மனதை நிலைபடுத்த முயன்றாள். அதே நேரம் அன்னை அழைக்கும் குரல் கேட்க வெளியே வந்தாள்

"இருங்க மாபிள்ள... சுமிகிட்ட குடுக்கறேன்..." என அவள் கையில் தொலைபேசியை கொடுத்துவிட்டு அவள் அன்னை நகர என்ன செய்வதென புரியாமல் அமைதியாய் நின்றாள்

பொறுமை இழந்த சூர்யா "சுமி...சுமி... லைன்ல இருக்கியா... சுமி" மீண்டும் மீண்டும் அழைக்க அவன் குரலை ஒரு முறை கேட்கும் ஆவல் தூண்ட "ம்..." என்றாள் மெதுவாய்

"என்ன சுமி இது? அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போய் இருக்கலாம்ல... வீட்டுல நீ போன் எடுக்காம.. எங்க போனயோனு...." என அந்த கணத்தின் நினைவில் பேச இயலாமல் நிறுத்த அவன் குரலில் தெறித்த உணர்வுகள் தன்னை தாக்குவதை உணர்ந்த சுமேதா

"நான் வெச்சுடறேன்..." எனவும்

"சுமி... ப்ளீஸ் ப்ளீஸ்... " என அவசரமாய் தடுத்தான்

"என்ன? சொல்லுங்க" என முற்றிலும் உணர்ச்சி துடைத்த குரலில் சுமேதா கேட்க அவள் குரலில் தெரிந்த மாற்றத்தை புரிந்து கொண்டவன் போல்

"சுமி... நான் உன்கிட்ட நெறைய பேசணும்டா..."

"வேண்டாம்...எனக்கு எதுவும் கேக்க வேண்டாம்..." என அவனை இடைமறித்தாள்

"சுமி ப்ளீஸ்... "

"குட் பை..." என துண்டித்தாள்

அவள் தன்னிடம் பேச மறுத்தபோதும் அவள் தாய் வீட்டில் தான் பத்திரமாய் இருக்கிறாளென அறிந்ததும் சற்று நிம்மதியானான் சூர்யா

அதன் பின் நடு இரவு வரை வேலை நகர விடாமல் பிடித்தது

ஒரு வழியாய் எல்லாம் முடித்து நாளை தான் அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லாதபடி எல்லாம் முடித்துவிட்டு கிளம்பினான் சூர்யா

"நேரே அவள் அம்மா வீட்டுக்கு இப்போது சென்றால் என்ன?" என தோன்றியது சூர்யாவிற்கு

ஆனால் நடு இரவில் சென்று கதவை தட்ட என்னமோ போல் தோன்ற, அதுவும் இல்லாமல் அவளிடம் நிறைய தனிமையில் பேச வேண்டியதும் உறைக்க காலையில் செல்வதே சரியென முடிவு செய்தான்
______________________________________________
தன் வீட்டுக்குள் நுழைந்த அந்த கணமே சுமி இல்லாத வெறுமையை அவன் மனம் உணர்ந்தது

தன் அறைக்கு சென்றவன் அங்கு மேஜை மேல் இருந்த டைவர்ஸ் பத்திரம் கண்ணில் பட துவண்டு போனான்

அதற்கும் மேலாய் அவளது குறிப்பு அவனது மனதை மொத்தமாய் கொன்றது "போகிறேன்... மொத்தமாய் போகிறேன்... நான் செய்த தவறை... முடிந்தால் மன்னிக்கவும்... - சுமேதா"

சுமேதாவின் அழகிய கையெழுத்தை கண்டதும், தன்னையும் அறியாமல் அவன் விரல்கள் அந்த எழுத்தை வருட, பின் தன் மார்போடு அணைத்து கொண்டான்

தான் விலகி சென்றபோதெல்லாம் தன் மனதை கொள்ளை கொள்ள முயன்றவள் இப்போது தான் மொத்தமாய் அவளிடம் சரணடைந்தபின் இப்படி விலகி செல்கிறாளே என வேதனைப்பட்டான்

அவளை தான் ஊட்டியில் வைத்து கொல்ல முயன்றேன் என்று அறிந்த பின்னும் மனதில் அத்தனை அன்பை தேக்கி கொண்டிருந்தவள், எத்தனை வேதனை ஆட்கொண்டிருந்தால் இப்படி விலகி செல்ல முடிவு செய்திருப்பாள் என தோன்ற, அதற்கு காரணமான தன் மீதே கோபமாய் வந்தது சூர்யாவிற்கு

ஒரு கணமும் கண் மூட இயலவில்லை அவனுக்கு

முந்தின தினம் உறங்காமல் நீண்ட நேரம் பயணித்து அன்று நாள் முழுவதும் வேலை நெரித்தும் கூட உறக்கம் அவனை தழுவவில்லை

தன் மனதில் நிறைந்திருப்பவளை கண்ணில் காணும் வரை உறக்கத்தை கூட தழுவ விட மாட்டேன் என்பது போல் பிடிவாதமாய் நேரத்தை கொல்ல முயன்றான்

முதல் முறையாய் தங்கள் திருமண ஆல்பத்தை ஆசையோடு பார்த்தான்

அதில் உலகின் சந்தோஷம் மொத்தமும் தனக்கே சொந்தம் என்பது போல் மகிழ்வாய் சுமேதா சூர்யாவை பார்த்து கொண்டிருந்த ஒரு புகைப்படம் அவன் கண்களை நிறைத்தது

எத்தனை கனவுகளோடும் ஆசைகளோடும் தன்னை மணந்திருப்பாள்... தான் செய்ததென்ன... ச்சே... என தன்னையே வெறுத்தான் அந்த கணம்

ஒரு வழியாய் ஜன்னல் வழியே மெதுவாய் விடியல் கண்ணுக்கு புலப்பட, அன்று தங்கள் வாழ்விலும் விடியலாய் இருக்குமென்ற நம்பிக்கையோடு எழுந்தான் சூர்யா
_______________________________________________________

"ஹாய் சுரேஷ்" என சூர்யா சுமேதாவின் அம்மா வீட்டினுள் நுழைய, அந்த காலை நேரத்தில் சூர்யாவை அங்கு எதிர்பாராத சுமேதாவின் அண்ணன் சுரேஷ் ஆச்சிர்யமாய் நோக்கியவன்

"வாங்க சூர்யா உள்ள வாங்க" என மகிழ்வோடு அழைத்தான்

"நீங்க ஆபீஸ் கெளம்பற நேரத்துல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்..சாரி சுரேஷ்"

"ஐயோ... என்னங்க சூர்யா இது... நம்ம வீட்டுக்கு நீங்க வர்றதுக்கு... என்ன இது..." என்றவன் "அம்மா.. சூர்யா வந்திருக்காரு"என உள்நோக்கி குரல் கொடுத்தான்

"வாங்க மாபிள்ள..." என்றபடி சுமேதாவின் பெற்றோர் வெளியே வர அவர்களிடம் சம்பிரதாயமாய் வாய் பேசிய போதும் சூர்யாவின் கண்கள் சுமேதாவை தேடியது

அதை புரிந்து கொண்ட சுரேஷ் "சுமி எங்கம்மா?" என தன் அன்னையிடம் கேட்க

"இங்க தானே இருந்தா... இருங்க கூப்பிடறேன்... " என உள்ளே சென்றார்

சூர்யா மனதை அமைதிபடுத்த முயன்று தோற்று தவித்தான்

அதே நேரம் தன் அன்னையுடன் சுமேதா வரவேற்பறைக்கு வர "நேரத்துலையே எழுதுட்டயா சுமி?" என என்னமோ அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் இயல்பாய் கேட்டான் சூர்யா

"ம்... " என்றவள் அதற்கு மேல் என்ன பேசுவதென புரியாமல் அமைதியாய் நின்றாள்

"சரி மாபிள்ள... நீங்க பேசிட்டு இருங்க... நான் டிபன் ரெடி பண்றேன்... " என அவள் அன்னை உள்ளே சென்றார்

சுமேதாவும் அவள் அன்னையின் பின்னோடு செல்ல அவளுடன் தனியே பேச இயலாமல் பொறுமையை இழுத்து பிடித்தான் சூர்யா

காலை உணவு ஆன பின் சற்று நேரம் பேசி கொண்டிருந்தவன் "சரி சுமி... டைம் ஆச்சு... போலாமா?" என அவளை பார்த்து கேட்க,  என்ன சொல்வதென புரியாமல் விழித்தவள்

"நான்... என் பிரெண்ட் திவ்யா கல்யாணத்துக்கு..." என ஏதோ கூற வர

"ஆமா... சொல்லிட்டு இருந்தெல்ல... ம்...ரெண்டு பேருமே போலாம்... கிப்ட் எதாச்சும் வாங்கனுமா?" என எல்லாம் அறிந்தவன் போல் பேசி கொண்டே போனான்

"இல்ல... நான்..."

"ஓ... கிப்ட் வாங்கிட்டயா? ஒகே சுமி... டைம் ஆச்சு கெளம்பலாம்" என கடிகாரத்தை பார்த்து கொண்டே கூறினான், அவளுக்கு பேசவே அவகாசம் தராமல்

"என்ன சுமி... ஒரு வாரம் இருக்கேன்னு பெட்டி எல்லாம் தூக்கிட்டு வந்த..." என அவள் அன்னை குற்றம் சாட்டுவது போல் கூற அப்படியா என்பது போல் அவளை பார்த்தான் சூர்யா

"அது..." என சுமேதா ஏதோ கூற விழைய

"அது...அது வந்து அத்த... அம்மா அப்பா ஊர்ல இருந்து அடுத்த வாரம் தான் வர்றதா இருந்தது... அதான் சுமி இங்க இருக்கட்டும்னு நெனச்சேன்... ஆனா அவங்க இன்னைக்கே வராங்க... அதான்...  அப்புறம் நெக்ஸ்ட் வீக் கொண்டு வந்து விடறேன் அத்த" என சூர்யா அவளுக்கும் சேர்த்து பேச அதற்கு மேல் மறுக்க இயலாமல்

"சரி சுமி... அடுத்த தரம் வரப்பவாச்சும் சேந்த மாதிரி ஒரு வாரம் இருக்கறாப்ல வா சரியா" என மகளுக்கு மனமின்றி விடை கொடுத்தாள் அன்னை

அதற்கு மேல் என்ன செய்வதென எதுவும் புரியாமல் அவனுடன் கிளம்பினாள் சுமேதா

கார் சற்று ஓட தொடங்கியதும் "நான் நான்..." என சுமேதா ஏதோ கூற தடுமாற

"நீ...நீ... எதுவும் பேச வேண்டாம்... வீட்டுல போய் பேசிக்கலாம்" என சூர்யா அவள் தவிப்பை ரசித்து சிரித்து கொண்டே கூறினான்

"நான்... வீட்டுக்கு வர்ல..." என்றாள் சுமேதா கோபமாய்

"சரி... வீட்டுக்கு வேண்டாம்... வேற என்ன போலாம் சொல்லு... எங்கயாச்சும் வெளியூர் போலாமா?" என்றான் மென்மையாய் அவள் கைகளை அழுத்தியவாறே

சட்டென அவன் கையை உதறியவள் "ஏன்... என்னை கொல பண்ண வேற வெளியூர்ல புதுசா எதாச்சும் பிளான் பண்ணி இருக்கீங்களா?" கோபம் சற்றும் குறையாத குரலில் சுமேதா கேட்க, அப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத சூர்யா ஒரு கணம் செயல்பட இயலாதவன் போல் காரை அவசரமாய் நிறுத்தினான்

அந்த அதிர்வில் தன்னை நிலைபடுத்திக்கொள்ள தன்னையும் அறியாமல் அவன் கையை பற்றியவள் அவசரமாய் விலகினாள்

சூர்யா இன்னும் அவள் கேள்வியின் தாக்கத்தில் இருந்து வெளி வர இயலாமல் அவளையே வேதனையோடு பார்த்தான்

குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்      

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)


....

Saturday, October 23, 2010

அதே கண்கள்... (பகுதி 22)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

"சூர்யா... அருண் இங்க கொஞ்ச நாள் அனிதா கூட தங்கினா அவ சீக்கிரம் குணமாகற வாய்ப்பு இருக்குங்கறது என்னோட தியரி... ஏன்னா அவ புரிஞ்சுக்கற ஒரே குரல் அருணோடது  தான்.  அருண்கிட்ட நான் ஏற்கனவே கேட்டுட்டேன். அவருக்கு ஆட்சேபனை இல்லைன்னு சொன்னார். இதுக்கு அவளோட கார்டியன்ங்கற முறைல உங்க சம்மதம் தான் வேணும்" என டாக்டர் கூற சூர்யா அருணை புதிதாய் பார்ப்பதை போல் பார்த்தான்

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த அருண் அப்போது பேசினான்  "சூர்யா, தெரிஞ்சோ தெரியாமலோ அனிதாவோட நிலைமைக்கு நானும் ஒரு காரணமாயட்டேன். இதுல வேண்டானு மறுத்த சுமேதாவையும் சம்மந்தப்படுத்தி கஷ்டப்படுத்திட்டேன். அந்த தவறுக்கு ஒரு பிராயச்சித்தம் செய்ய இந்த வாய்ப்பை எனக்கு குடுங்க சூர்யா ப்ளீஸ். சுமேதா நீ அவர்கிட்ட சொல்லு ப்ளீஸ்" என கெஞ்சலாய் இருவரையும் பார்த்தான் அருண்

சுமேதா என்ன சொல்வது என புரியாமல் சூர்யாவை பார்க்க அவன் பார்வை  சுமேதாவின் முகத்தில் பதிந்தது, அவள் கருத்தை படிக்க முயல்வது போல்  

பிறகும் சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க "உங்களுக்கு விருப்பம் இல்லைனா நாங்க கட்டாயப்படுத்த முடியாது சூர்யா... ஆனா என்னோட அனுமானம் சரின்னா அருணோட உதவி நிச்சியம் அனிதாவுக்கு அவசியம்னு தான் சொல்லுவேன்" என டாக்டர் கூற

"ஒகே டாக்டர்... அவ நல்லதுக்குன்னா எனக்கு ஆட்சேபனை இல்ல" என்றான் சூர்யா பெருமூச்சோடு 

"தட்ஸ் குட்... அருண் இங்க விசிட்டர்ஸ் ரூம்ல ஸ்டே பண்றதுக்கு உங்களுக்கு பாஸ் குடுக்க சொல்றேன். நீங்க வெளிய நர்ஸ்கிட்ட வாங்கிகோங்க" எனவும்

"ஒகே டாக்டர்... நாங்க கிளம்பறோம்" என சூர்யா விடை பெற மற்ற எல்லோரும் கூட வெளியே வந்தனர்
_______________________________________________

வெளியே சற்று இருட்ட தொடங்கி இருந்தது

"கணேஷ் நீங்க ஊருக்கு தானே வரீங்க. வாங்க எங்களோடயே போய்டலாம்" என சூர்யா அழைக்க

"காலைல இருந்து டிரைவ் பண்ணி இருக்கீங்களே சூர்யா. தங்கிட்டு நாளைக்கி போனா என்ன? நான் ட்ரெயின்ல புக் பண்ணிட்டேன் நைட்க்கு" எனவும்

அப்படி செய்தால் என்ன என நினைத்தவன் சுமேதாவை பார்க்க அவளது உணர்ச்சி துடைத்த  முகம் அவனுக்கு எதையோ உணர்த்த

"இல்ல கணேஷ்... யார் கிட்டயும் சொல்லல இங்க வர்றத பத்தி. ஆபீஸ்லயும் முக்கியமா ஒரு மீட்டிங் இருக்கு நாளைக்கி. கிளம்பறது தான் பெட்டர்... எனக்கு டிரைவிங் ஒண்ணும் கஷ்டமில்ல... நீங்களும் வாங்க...ட்ரெயின் எதுக்கு" என அன்பு கட்டளை போல கூற அதற்கு மேல் மறுக்க இயலாமல் சரி என்றான் கணேஷ்

அருணும் அவர்களுடன் கார் வரை வந்தான். யாரும் எதுவும் பேசிக்கொள்ள முயலாமல் மௌனமாய் இருக்க அருண் தான் அந்த மௌனத்தை உடைத்தான்

"சுமேதா, நான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும். உன் மனச புரிஞ்சுக்காம ரெம்ப கஷ்டபடித்திட்டேன். ஐ அம் ரியல்லி சாரி. சூர்யா நீங்களும் என்னை மன்னிச்சுடுங்க" என அருண் உண்மையான வருத்ததோடு கூற

"இட்ஸ் ஒகே... " என சூர்யா சுமேதா இருவரும் ஒரே குரலில் கூறவும் கணேஷ் அதை பற்றி கூறி சிரிக்க, சூர்யா சுமேதாவும் உடன் முறுவலித்தனர். இறுக்கம் தளர சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்

சுமேதாவின் முகத்தில் இன்னும் இறுக்கமாய் ஏதோ யோசனையோடு இருக்க அதை சோர்வு என நினைத்து கொண்ட கணேஷ்

"என்ன சுமி பசிக்குதா? சாப்ட்டுட்டு கிளம்பிடலாமே சூர்யா. நடுவுல மறுபடியும் நிறுத்த வேண்டாமே" என கேட்க

"சரி கணேஷ்... இங்க பக்கத்துல ஏதோ கடை இருக்கும் பாத்திருக்கேன்... " எனவும்

"இங்க உள்ளே கான்டீன் கூட நல்லாத்தான் இருக்குங்க சூர்யா" என அருண் கூற சரியென கான்டீன் சென்றனர்

"எனக்கு எதுவும் வேண்டாம்... நீங்க மூணு பேரும் சாப்பிடுங்க" என சுமேதா மறுக்க

"கொஞ்சமாச்சும் சாப்பிடு... காலைல இருந்து ஒண்ணும் சாப்பிடலை தானே" என சூர்யா அவள் பதிலை எதிர்பாராமல் அவளுக்கும் சேர்த்து தருவித்தான்

கட்டாயப்படுத்தி சிறிது உண்ணவும் செய்வித்தான். அவன் செய்கையை கண்ட அருண் கணேஷ் இருவரும் நிறைந்த மனதோடு முறுவலித்தனர்

கிளம்பும் முன் அருணின் கைகளை பற்றி கொண்ட சூர்யா "அருண்... அனிதா எனக்கு உயிர். உங்கள நம்பி ஒப்படைச்சுட்டு போறேன்... பத்திரமா பாத்துப்பீங்கன்னு நம்பறேன்" என கண்கள் பனிக்க கூற

"நிச்சியமாங்க... அனிதாவ பத்தி நீங்க இனி கவலை பட வேண்டாம்... பழைய அனிதாவ உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்... " என அருண் வாக்கு போல் கூற நிம்மதியாய் விடை பெற்றான் சூர்யா
__________________________________________________

தான் சற்று உறங்க வேண்டும் என சுமேதா பின் இருக்கையில் ஏறிக்கொள்ள கணேஷ் காரில் முன் பக்கம் அமர்ந்து கொண்டான்

ஆனால் தன் அருகில் அமர்வதை தவிர்க்கவே அப்படி செய்கிறாள் என்பதை சூர்யா புரிந்து கொண்டான். ஆனாலும் கணேஷ் முன் எதுவும் பேச இயலாமல் மௌனமானான்

சுமேதாவின் மனதில் மிக பெரிய போராட்டம் நடந்து கொண்டு இருந்ததை சூர்யா அறியவில்லை

அதே போல் சூர்யாவின் மனதில் தோன்றி இருந்த மாற்றத்தையும் சுமேதா அறியவில்லை

ஆரம்பம் முதலே அவள் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருந்ததால் தான் திருமணம் என்ற எண்ணம் மனதில் தோன்றியது என்பதை சூர்யா இப்போது புரிந்து கொண்டான்

அப்படி இல்லாமல் வெறும் பழி வாங்கலுக்காக மட்டும் வாழ்வையே சோதிக்கும் எண்ணம் எப்படி சாத்தியம் என நினைத்தான்

அதிலும் அருண் கூறியதில் இருந்து அவள் மேல் எதுவும் தவறு இல்லை  என்பது புரிந்தது  முதல் அவளிடம் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்கும் தருணத்திற்காய் காத்திருந்தான் சூர்யா       

ஒருவரை பற்றி ஒருவர் அறியாமலே தவிப்பு மிகுந்த நெஞ்சோடு நேரத்தை கொன்று கொண்டு இருந்தனர்

சுமேதா முன்பே தீர்மானித்தது போல் ஊருக்கு சென்றதும் அவனை விட்டு விலகி விட வேண்டுமென்ற முடிவோடு அதை செயல்படுத்தும் முறை பற்றி யோசித்து கொண்டிருந்தாள்

இப்படி செய்வது என தீர்மானிப்பது வேறு, அதை செயல்படுத்தும் நேரம் நெருங்கும் போது தான் அதன் வேதனை அவளுக்கு மலை போல் பாரமாய் மனதை அழுத்தியது

அம்மா அப்பாவிடம் என்ன சொல்வது... அண்ணாவை எப்படி சமாதானம் செய்வது என மனதில் சிந்தனை ஓடியது

எல்லாவற்றிற்கும் மேலாய் தான் எப்படி இந்த பிரிவை ஏற்று கொள்ள போகிறோம் என்ற எண்ணமே மேலோங்கியது

அவன் அவளை ஒரு பொருட்டாக கூட நினையாமல் வெறுத்த போதும் அவளால் அவனை மனதை விட்டு விலக்க இயலவில்லை, ஒரு தலை காதல் போலும் என நினைவே அவள் கண்களில் நீர் பெருக செய்தது

அதே நேரம் சூர்யா ஏதோ நினைத்தவன் போல் காரின் ரியர் வியு கண்ணாடி வழியாய்  பின் சீட்டில் இருந்த சுமேதவை பார்க்க அவள் கண்களை துடைத்து கொள்வதை பார்த்தவனுக்கு மனம் வேதனையில் தவித்தது

கணேஷ் சொன்னது போல் அங்கேயே தங்கி இருக்க வேண்டுமோ அல்லது கணேசை ட்ரெயின்ல் செல்ல அனுமதித்துவிட்டு,  தனிமை தருணத்தில் தன் மனமாற்றத்தை அவளுக்கு உடனேயே வெளிப்படுத்தியிருக்க வேண்டுமோ என குற்ற உணர்வில் மருகினான்

எத்தனை நாட்கள் அவள் இப்படி தவித்திருப்பாள் என்பது மனதிற்கு  உறைக்க இன்னும் வேதனையானது

இவர்களுக்குள் உள்ள போராட்டம் புரியாத கணேஷ் "சூர்யா நீங்க நெஜமாவே கிரேட் தான்... இந்த காலத்துல கூட பிறந்த சொந்தங்களையே உதறி தள்ளுற மனுசங்க இருக்கறப்ப உங்க சித்தி பொண்ணுக்காக இவ்ளோ அக்கறை எடுத்துக்கறது பெரிய விஷயம்... எங்க சுமி ரெம்ப லக்கி தான்" என பெருமை போல் கூற

கணேசிற்கு கூறும் பதிலில் தன் மனதை தன் மனதில் பதிந்தவளுக்கு புரிய வைக்க இயலுமா என யோசித்தான் சூர்யா

"இதுல என்ன இருக்குங்க கணேஷ். அனிதா என் கூட பிறக்கலையே தவிர அவ என் தங்கை தான். அவளுக்கு ஒண்ணுனா என்னால தாங்க முடியறதில்ல... அதான் அருண் மேல கூட அவ்ளோ கோவம் வந்தது அங்க அவரை பாத்தப்ப. ஆனா உண்மை புரிஞ்சதும் கோபம் போய்டுச்சு" என கூறியவன் உட்பொருளாய் சுமேதாவிடம் உண்மை அறிந்த பின் உன்னிடமும் கோபம் இல்லை என கூற முயன்றான்

ஆனால் அது அவள் கருத்தில் பதியவில்லை. //அவளுக்கு ஒண்ணுனா என்னால தாங்க முடியறதில்ல... அதான் அருண் மேல கூட அவ்ளோ கோவம் வந்தது // என்றது மட்டுமே பற்றி கொண்டாள்

மீண்டும் அவளை கண்ணாடியில் பார்த்தவன் அவளிடம் எந்த மறுதலிப்பும் இல்லாமல் போக மீண்டும் கணேசிடம் திரும்பி "ஆனா நீங்க சொன்னது போல உங்க சுமி லக்கியா இல்லையானு எனக்கு தெரியாது. நான் ரெம்ப லக்கி" என சந்தோசமாய் சிரித்தான் சூர்யா

"என்ன சுமி... சூர்யா சொல்றதை கேட்டியா?" என கணேஷ் கேலி போல் சிரிக்க சுமேதா உறங்குவது போல் கண்களை மூடி கொண்டாள்

அவளிடமிருந்து பதில் வராமல் போக திரும்பி பார்த்த கணேஷ் "தூங்கிட்டா போல இருக்கு" என்றான் சற்று மெல்லிய குரலில்

ஆனால் அவள் உறங்கவில்லை என்பதை சூர்யா உணர்ந்தே இருந்தான். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே, அதன் பின் உன்னை எப்போதும் அழ விட மாட்டேன் கண்மணி என மனதிற்குள் கூறி கொண்டான் சூர்யா

நான் ரெம்ப லக்கி என சூர்யா கூறியதை கேட்ட போதும் கூட "இதுவும் அவன் நாடகத்தில் ஒரு பகுதி போல" என தனக்குள்ளே கூறி கொண்டாள் சுமேதா

அது தான் விசித்திரமான மனித மனம் போலும். ஒன்றின் மீது பிடிப்பும் நம்பிக்கையும் உள்ள வரை சிறு துரும்பை கூட பற்றி படர எண்ணும் மனம் அந்த பிடிப்பு தளர்ந்து போனால் எதையும் சமாதானமாய் ஏற்க மறுக்கிறது

சில மணி நேர பயணத்திற்கு பின் காபி சாப்பிடலாம் என கணேஷ் கூற சூர்யாவிற்கு விரைவில் இல்லம் செல்லவே மனம் பறந்தது

விரைவில் தன் மனமாற்றத்தை தன்னவளுக்கு உணர்த்த மனம் பரபரத்தது, அதிலும் அவள் வாடிய முகம் அந்த வேகத்தை இன்னும் கூட்டியது

இருந்தாலும் கணேசை மறுக்க இயலாமல் வழியில் ஒரு இடத்தில் நிறுத்தினான் சூர்யா. சுமேதாவை எழுப்ப முயல அவள் நிஜமாகவே நல்ல உறக்கத்தில் இருந்தாள்

"எனக்கும் சேத்து வாங்கிட்டு வந்துடுங்க கணேஷ்.. நான் சுமி கூட இருக்கேன்" என சூர்யா கூற கணேஷ் சரியென சென்றான்

கணேஷ் அகன்றதும்  சூர்யா பின் பக்கம் திரும்பி சுமியை எழுப்ப முயன்றான். எத்தனை நாள் தூங்காத தூக்கமோ என்பது போல் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தவளை விழி அகலாமல் பார்த்தான்

மானசீகமாய் அவளிடம் மன்னிப்பு கேட்டான். கணேஷ் வருவதற்குள் அவளிடம் ஒரு வார்த்தையேனும் பேசிவிட  துடித்த  மனதை  கட்டுபடுத்தினான்

அப்படி ஒரு வார்த்தையில் பேசி அவள் மனகாயத்தை ஆற்ற  இயலாது  என்பதை அவளை ஜென்ம ஜென்மமாய் அறிந்தவன் போல் உணர்ந்தான்

ஒருவழியாய் கணேஷ் திரும்பி வர அவர்கள் பயணம் தொடர்ந்தது

வழியில் நல்ல டிராபிக் இருக்க அவர்கள் வந்து சேர நினைத்ததை விட மிகவும் தாமதம் ஆனது

கோவையை சமீபிக்க சில மணித்துளிகள் இருக்கும் போது சுமி விழித்தாள், வெய்யில் கண்ணாடி வழியே ஊடுருவி கண்களை கூச செய்தது

அவளை பார்க்காமலே அவள் விழித்ததை உணர்ந்தவன் போல் சட்டென திரும்பி "நல்ல தூக்கமா சுமி?" என்றான் சூர்யா

அவன் கவனிப்பான் என எதிர்பாராதவள் அதிர்ந்தாள், சுதாரித்து "ம்... " என்றாள் ஒற்றை வார்த்தையாய் சோம்பல் போல

"என்ன சுமி? கஷ்டப்பட்டு டிரைவ் பண்றது சூர்யா. அவர் இவ்ளோ பிரிஸ்கா இருக்கார், நீ இந்த தூக்கம் தூங்கற?" என கணேஷ் கேலி செய்ய என்ன பேசுவதென தெரியாமல் முறுவலித்தாள்

அப்போது அவள் பார்வை தன்னையும் அறியாமல் சூர்யாவின் முகத்தில் பதிந்தது

அவன் முகத்தில் இதுவரை இருந்த  இறுக்கம் தளர்ந்து தெளிவாய், இன்னும் சொல்லப்போனால் சற்று சந்தோஷம் பரவி இருந்ததை அவள் உணர்ந்தாள்

இப்போது எல்லா புதிர்களும் விடுபட்டுவிட தான் அவனை விட்டு விலக போகிறேன் என்பதால் தான் அவன் முகத்தில் இந்த தெளிவோ என அவள் பேதை மனம் வாடியது

அவள் தன்னை கண்ணெடுக்காமல் பார்ப்பதை உணர்ந்து  கணேஷ்  பேசுவது எதுவும் மனதில் பதியாமல் இருந்தான் சூர்யா

ஒரு கட்டத்தில் தன்னை கட்டுப்படுத்த இயலாமல் கார் சிக்னலில் நின்ற போது அவளை திரும்பி பாத்தான், ஆழமாய் அவள் கண்களை ஊடுருவ முயன்றான்

அவன் பார்வையின் கூர்மையை தாங்க இயலாமல் அவள் முகம் வேறு புறம் திரும்பியது

அவன் பார்வைக்கான அர்த்தத்தை தேட முயன்றாள். எதுவும் புலப்படாமல் மௌனமானாள்
சூர்யாவிற்கோ அந்த கணமே அவளை கைகளில் ஏந்தி கொள்ள மனம் தவித்தது. அதே நேரம் சூர்யாவின் செல்போன் அலறியது

"ஹலோ... "


"...."

"எஸ்... சொல்லு பிரகாஷ்"

"...."

"ஆமா இன்னிக்கி ஆபீஸ் வரேன்..."

"...."

"இல்ல... கொஞ்ச லேட்டா வரேன்..."

"..."

"இல்ல பிரகாஷ்... மேனேஜ் பண்ணு எப்படியாச்சும்... கொஞ்ச நேரம்..."

"...."

எதிர்முனையில் உள்ளவர் என்ன கூறினாரோ சூர்யாவின் குரலில் சற்று முன் இருந்த அமைதி காணாமல் போக "ஒகே... I will be there as soon as possible" என சற்று சலிப்பு கலந்த குரலில் கூறினான்

கோபமாய் அவன் செல்போனை கீழே வீசுவது போல் வைக்க "என்னாச்சு சூர்யா? எனி ப்ராப்ளம்?" என கணேஷ் பதட்டமாய் கேட்க

"இல்ல கணேஷ்... கொஞ்சம் அவசரமா ஆபீஸ் போகணும்... யு. எஸ் ல இருந்து clients வர்றாங்க இன்னைக்கி... நேத்து எதிர்பாராம லீவ் எடுக்க எடுத்ததால  முடிக்க வேண்டிய வேலை எல்லாம் பெண்டிங்... அதான்... " என்றவன் திரும்பி சுமேதாவை பாவமாய் பார்க்க, அவள் தன் முகத்தை தாழ்த்தி அவனை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள்

"சூர்யா... அப்படினா ஒண்ணு பண்ணலாம்... எங்க வீட்டுக்கு இன்னும் பத்து நிமிசத்துல போய்டலாம் தானே. சுமிய இங்க விட்டுட்டு போங்க. நான் வீட்டுல டிராப் பண்ணிடறேன்... நீங்க உங்க வீட்டுக்கு போயிட்டு அப்புறம் மறுபடி இந்த பக்கம் உங்க ஆபீஸ் வரணும்னா ரெம்ப டைம் ஆய்டும்... நீ என்ன சுமி சொல்ற?" என கணேஷ் கேட்க

"ம்.. சரி... நான் இங்கயே இறங்கிக்கறேன்..." என்றாள் சூர்யாவின் பார்வை தவிர்த்து

அது தான் நல்லது என அவளுக்கும் தோன்றியது.  மீண்டும் அவனை  தனியே  சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பதே நல்லதென அவளுக்கு தோன்றியது

அப்படி பேச நேர்ந்தால் தன் உறுதி தளர்ந்து விடுமோ என பயந்தாள்

அது மட்டுமில்லாமல்  அவன் முன் போல் ஏதேனும் கோபமாய் பேசினால்  தான் இன்றுள்ள மனநிலையில் தன்னால் தாங்கவும் இயலாது என உணர்ந்தாள்      

சூர்யாவோ ஒரு பத்து நிமிடமேனும் அவளுடன் தனியே பேச வேண்டும் போல் துடித்தான். ஆனால் வேறு வழி இல்லாமல் கணேஷ் சொன்னது போல் சுமேதாவை கணேஷ் வீட்டில் விட்டு விட்டு கிளம்பினான்

கிளம்பும் முன், "சுமி... "என அழைத்தவன் "நான்.... நான் சீக்கரம் வர ட்ரை பண்றேன்... நீ ரெஸ்ட் எடு" என்றான் சூர்யா, ஏதோ சொல்ல வந்து ஏதோ சொல்வது போல்

அவள் சரி என்பது போல் தலை அசைத்தாள். அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றை படிக்க முயன்று தோற்றாள் சுமேதா
_________________________________________________________________

கணேஷின் அன்னை வற்புறுத்தியும் அங்கு நீண்ட நேரம் தங்க மறுத்து விட்டாள் சுமேதா

வீட்டில் எல்லாம் அப்படியே போட்டது போட்டபடி இருக்கிறதென கூறி உடனே கணேசை அவள் வீட்டில் கொண்டு விட செய்தாள்

கணேஷ் கிளம்பியதும் சற்று ஆசுவாசபடுத்தியவள் அடுத்து செய்ய வேண்டியதென்னவென திட்டமிட்டாள்

முதலில் தங்கள் அறைக்கு சென்று சூர்யா சில நாட்களுக்கு முன் கோபமாய் அவள் முகத்தில் வீசிய டைவர்ஸ் பேப்பர்களில் கையெழுத்திட்டாள்

பொங்கி வந்த கண்ணீரை கட்டுப்படுத்தினாள். தனது பொருட்கள் சிலவற்றை எடுத்து ஒரு பெட்டியில் வைத்தாள்

மேஜை மீது இருந்த அவனது புகைப்படத்தை எடுத்தவள் அதற்கு மேல் கட்டுபடுத்த இயலாமல் கதறினாள்

சற்று நேரம் அழுது ஓய்ந்தவள், அந்த புகைப்படத்தையும் தன் பொருட்களோடு வைத்தாள்

ஏதோ நினைத்தவள் போல் அனிதாவின் புகைப்படத்தையும் எடுத்து கொண்டாள்

இரவு சாப்பிட்டது, அதுவும் அவன் வற்புறுத்தலில் சிறிது மட்டுமே சாப்பிட்டதால் உடலும் மனதோடு சோர்வுற ஏதேனும் உண்டாலொழிய தன்னால் திடமாய் செயல்பட இயலாது என்பதை உணர்ந்தவள் போல் உண்டாள்

அந்த கணம் சூர்யா ஏதேனும் சாப்பிட்டானோ என மனதில் தோன்ற, மீண்டும் மனம் சோர்ந்தது

இனி அவன் வாழ்வில் தான் ஒரு அங்கமாய் தான் இருக்கபோவதில்லை என்ற நினைவே, அவளை பலவீனப்படுத்தியது

இங்கு தனியாய் இன்னும் சற்று நேரம் இருந்தால் தானே மனம் மாறிவிடக்கூடும் என தோன்ற விரைந்து தன் பொருட்களை சேகரித்து கொண்டு கிளம்பினாள்

கிளம்பும் முன் டைவர்ஸ் பேப்பர்களை மேஜை மீது வைத்தவள் அதன் மேல் ஒரு குறிப்பையும் எழுதி வைத்தாள் "போகிறேன்... மொத்தமாய் போகிறேன்... நான் செய்த தவறை... முடிந்தால் மன்னிக்கவும்... - சுமேதா"

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்


(தொடரும்...)

...

Wednesday, October 20, 2010

அதே கண்கள்... (பகுதி 21)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

பாறையை இறுகி இருந்த அவன் முகத்தை பார்க்க பயமாய் இருந்தது. அவன் தன்னை தவறாய் நினைப்பதை ஏற்க இயலாமல் தவித்தாள் சுமேதா

"சூர்யா நான்..." என சுமேதா ஏதோ சொல்ல முயல "பேசாதே" என்பது போல் கை உயர்த்தினான். அதற்கு மேல் பேச தைரியமின்றி ஜன்னல் வெளியே பார்ப்பது போல் முகம் திருப்பி மௌனமாய் கண்ணீர் உகுத்தாள்

சூர்யா தன்னை விரும்பி மணந்தான் அதன் பின் ஏதோ மன வருத்தம் என்பது மட்டுமே தனக்கான ஆதாரமாய் கொண்டிருந்த சுமேதா தன்னை பழி வாங்கவே மணந்தான் என்ற உண்மை முகத்தில் அறைய நொறுங்கி போனாள்

என்னதான் அவனை விட்டு விலகுவதை பற்றி முன்னமே யோசித்த போதும் அதை எந்த அளவு செயல்படுத்த இயலும் என் அவளால் நினைக்க இயலவில்லை

ஆனாலும் அன்பு நேசம் எதுவும் சிறிதும் அற்று பழி வாங்க மட்டுமே மணந்தேன் என அவனே வாய் விட்டு கூறிய பின் இனி என்ன இருக்கிறது என மனம் வெறுத்தாள்

ஊருக்கு திரும்பிய பின் அவனை விட்டு மொத்தமாய் விலகி விட வேண்டுமென மனதிற்குள் தீர்மானித்தாள். அந்த தீர்மானம் மனதில் தோன்றியதும் தன்னையும் அறியாமல் அவளிடம் இருந்து ஒரு கேவல் வெளிப்பட்டது

அதை கண்ட சூர்யாவிற்கு வேதனை கொன்றது. அதற்காக தன்னையே அவன் வெறுத்தான் என்பதும் உண்மை

இயல்பில் யாரையும் மனம் நோக பேசும் பழக்கம் கூட இல்லாத சூர்யா அனிதாவின் மீது கொண்ட அன்பினால் சுமேதவை பழி வாங்க முடிவு செய்தான், அதுவும் சந்தர்ப்பம் திருமண தரகர் மூலமே வர

இந்த வேதனையை / கொடுமையை சுமேதா அனுபவிக்க வேண்டுமென்று அவளை மணந்தவன் இப்போது அவன் நினைத்தது நடக்கும் போது ஏன் தனக்கு இந்த வேதனை என குழம்பினான்

சுமேதவை விடவும் அழகிய திறமையான பல பெண்கள் அவன் வாழ்வில் வந்ததுண்டு. அவர்கள் யாரும் ஏற்படுத்தாத ஒரு பாதிப்பை இவள் ஏன்? என தன்னையே கேள்விகளால் துளைத்தான்

இருவரும் தத்தம் தவிப்புகளில் மூழ்கி இருக்க நேரம் விரைந்து கொண்டு இருந்தது, அவன் செலுத்தி வந்த வாகனத்தை போலவே...

சுமார் மாலை நான்கு மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தனர்
__________________________________________
மருத்துவமனையில் நுழைந்த சூர்யா நேரே டாக்டர் சங்கீதாவின் அறைக்குள் செல்ல முயன்றான்

"நில்லுங்க....யாரு நீங்க? டாக்டர பாக்க அப்ப்பாயன்ட்மென்ட் இருக்கா?" என ஒரு செவிலி பெண் தடுக்க

"இல்ல சிஸ்டர்... டாக்டர் தான் வர சொல்லி போன் பண்ணினாங்க... என் சிஸ்டர் இங்க ட்ரீட்மென்ட்ல இருக்கா... பேரு அனிதா... அனிதா வெங்கடராமன்"

"உங்க பேரு?"

"சூர்யா"

"அங்க வெயிட் பண்ணுங்க... மேடம்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்" என உள்ளே விரைந்தாள்

ஐந்து நிமிட காத்திருத்தலே பல யுகமாய் தோன்றியது சூர்யாவிற்கு. அனிதாவை கண்ணால் கண்டால் ஒழிய நிம்மதி இராது என அவன் மனம் துடித்தது

சுமேதா அந்த சூழலை கண்டதும் அனிதா இங்கு வர தானும் ஒரு காரணம் என்ற உறுத்தலில் வெடிக்க முயன்ற கண்ணீரை கட்டுப்படுத்த போராடி கொண்டிருந்தாள்

அனிதாவிற்கு இப்போது என்ன ஆனது என சூர்யாவிடமும் கேட்க தைரியம் அற்றவளாய் மௌனம் காத்தாள்

சற்று நேரத்தில் டாக்டர் தானே வெளிய வர சூர்யா வேகமாய் அவரை நோக்கி சென்றான், பின்னோடு சுமேதாவும்

"டாக்டர்... அனிதாவுக்கு இப்ப எப்படி இருக்கு?" என சூர்யா பதற

"ரிலாக்ஸ் சூர்யா... ஷி இஸ் ஆல்ரைட் நௌ... வாங்க நேர்லயே போய் பாக்கலாம்" என்றவள் சுமேதவை பார்த்து "இவங்க... "என கேள்வியாய் நோக்க

"ம்..." என தயங்கியவன் "என்னோட மனைவி" என உணர்ச்சியற்ற குரலில் முடித்தான்

"ஓ...வாவ்... கங்க்ராட்ஸ்... " என கை பற்றி வாழ்த்து சொன்னார் டாக்டர் சங்கீதா

மனைவி என அறிமுகம் செய்ய சூர்யா தயங்கியது சுமேதாவை உயிரோடே புதைத்ததை போல் வேதனையில் கண்ணீர் பெருக, சூழ்நிலை உணர்ந்து தன்னை கட்டுபடுத்திக்கொண்டாள் 

நினைத்து அழத்தான் இனி காலம் முழுதும் இருக்கிறதே என அதே நினைவில் மீண்டும் மீண்டும் துடித்து போனாள்
_________________________________________________
அகநோயாளிகள் பிரிவு (inpatient ward) என ஒளிர்ந்த ஒரு கதவை விலக்கி உள்ளே செல்ல அங்கு கண்ட காட்சியில் சூர்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது

அங்கு அருண் மடியில் முகம் புதைத்து உறங்கி கொண்டிருந்தாள் அனிதா

"டேய்... ராஸ்கல்... நீ இங்க என்னடா பண்ற... அனிதா வாழ்க்கைய கெடுத்த வரைக்கும் பத்தலையா?" என சூர்யா அருண் மீது பாய

"சூர்யா... என்ன இது? ப்ளீஸ் மூவ்" என கோபமாய் டாக்டர் அவனை விலக்க

"டாக்டர் இவன்..." என சூர்யா அருண் பற்றி கூற முயல

"ஐ நோ எவரிதிங் சூர்யா... காம் டௌன்..." என்றார் டாக்டர் அழுத்தமாய்

நடப்பது எதுவும் புரியாமல் சுமேதா விழிக்க அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தான் கணேஷ்

"கணேஷ்...நீங்க எங்க இங்க?" என சூர்யா சுமேதா இருவரும் ஒரே குரலாய் அதிர்ச்சியில் இருந்து  விலகாமல் கேட்டனர்

அதே நேரம் அனிதா விழித்து எழ "அனி... அனிதா... எப்படிமா இருக்க?" என சூர்யா அவள் அருகில் செல்ல

"போ... போ... வேண்டாம்... ஐயோ... என்னை கொன்னுடாதே... போ... ப்ளீஸ்..." என சூர்யாவை தவிர்த்து அருண் பின் சென்று தன்னை மறைத்து கொண்டாள் அனிதா

தன் தங்கை யாரோ அந்நியன் போல் தன்னை கண்டு மிரண்டதில் சூர்யாவின் கண் நிறைந்தது. சுமேதாவாலும் அதை தாங்கி கொள்ள இயலவில்லை

அனிதாவின் டைரியை படித்து அவள் அண்ணனின் மேல் எத்தனை உயிராய் இருந்தாள் என அறிந்த பின் சூர்யாவின் வேதனையை அவளால் உணர முடிந்தது, அவன் தன்னை பழி வாங்க துடித்ததில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றியது இப்போது

அந்த சம்பவத்திற்கு பின் யாரை கண்டாலும் அனிதா இப்படி பயந்து கத்துவது தான் நடந்தது, அதிலும் ஆண்கள் என்றால் இன்னும் மோசம்

தங்கை தன்னை அடையாளம் கண்டு கொள்ளாதது புதியதில்லை என்றாலும் அவள் அருணை மிகவும் அறிந்தது போல் அவனிடம் பாதுகாப்பாய் உணர்ந்ததை பார்த்து புரிந்து கொள்ள இயலாமல் விழித்தான் சூர்யா

அதை உணர்ந்து கொண்ட டாக்டர் அனிதாவை பரிசோதித்து விட்டு  "சிஸ்டர் ஸ்லீபிங் டோஸ் குடுங்க...
பிரஷர் அதிகமா இருக்கு... ஷி சுட் ரெஸ்ட்... " என கூறி விட்டு எல்லோரையும் வெளியே போக சொன்னார் 

அருண் அனிதாவை விட்டு விலக முயல "ப்ளீஸ்... போகாத... ப்ளீஸ் அருண் போகாத" என அனிதா அவன் கைகளை இறுக பற்றி கொண்டு கத்த 

"எனக்கு பசிக்குதுமா... நான் சாப்பிடணும் தானே... அப்பதானே உனக்கு நெறைய கதை சொல்ல முடியும்...சரியா...  போய் சாப்ட்டுட்டு வந்துடறேன்...சரியா...நல்ல பொண்ணு தானே அனிதா" என ஐந்து வயது குழந்தையிடம் பேசுவது போல் அருண் சமாதானம் செய்ய முயன்றான்

நர்ஸ் உறங்குவதற்கான மாத்திரையை கொடுக்க அதை தூக்கி வீசினாள் அனிதா

பின்பு அருண் சமாதானம் செய்து மாத்திரை உண்ண செய்தான். அவளை உறங்க செய்து விட்டு எல்லோரும் டாக்டர் சங்கீதாவின் அறைக்கு வந்தனர்

என்ன நடக்கிறது என அறிந்து கொள்ள மனம் துடித்த போதும் டாக்டரே சொல்லட்டும் என சூர்யா மௌனமாய் கை கட்டி அமர்ந்திருந்தான்


"சூர்யா... இங்க நடக்கறதெல்லாம் பாத்து ரெம்ப குழம்பி போய் இருப்பீங்கன்னு எனக்கு புரியுது. ஐ வில் எக்ஸ்ப்ளெயின்" என டாக்டர் தொடர்ந்தார்

"இன்னிக்கி காலைல உங்க சிஸ்டர் அனிதா, நர்ஸ் அசந்த நேரம் வார்டு சாவி எடுத்து வெளிய தப்பிச்சு வந்துட்டா... மொட்டை மாடில போய் கீழ குதிக்க முயற்சி செஞ்சப்ப தெய்வாதீனமா அருண் அங்க இருந்தார்"

"அருண் இப்படி இங்க...?" என சுமேதா கேட்க

"அதை நான் சொல்றேன் டாக்டர்" என கணேஷ் இடைமறித்தான்

"ஊட்டில அந்த சம்பவம் நடந்தப்புறம் அருண் ரெம்ப டிஸ்டர்ப்டா இருந்தாரு. அங்கேயே தனியா விட்டுட்டு வந்தா நிச்சியம் தன் வாழ்கைய முடிசுப்பாருன்னு எனக்கு தோணுச்சு. அவருக்கு தேவை நல்ல கவுன்சலிங்னு தான் இங்க கொண்டு வந்து சேர்த்தேன். ஒரு மாசமா அருண் இங்கதான் இருக்காரு. Infact இன்னிக்கி அருண் டிஸ்சார்ஜ் ஆகற நாள், அதுக்கு தான் நான் இங்க வந்தேன்" என முடித்தான் கணேஷ்

"எஸ்...அண்ட் அருண் இஸ் பெர்பக்ட்லி ஆல்ரைட் நௌ.." என்றார் டாக்டர் சங்கீதா

"ஆனா பொறந்ததுல இருந்தே கூட இருக்கற என்னை கூட அடையாளம் தெரிஞ்சுக்காத  அனிதா... அருணை மட்டும் எப்படி டாக்டர்..." என சூர்யா வேதனையாய் கேட்க

"மொதல்ல நானும் இப்படி தான் ஆச்சிர்யப்பட்டேன் சூர்யா. அப்புறம் அருண்கிட்ட நடந்தது எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டதுக்கப்புறம் அனிதாவோட இந்த மாற்றம் எனக்கு புரியுது"

"எப்படி டாக்டர்..." என சூர்யா இன்னும் சமாதானமாகாமல் கேட்டான்

"சூர்யா, மனசு ரெம்பவும் சென்சிடிவான ஒரு பார்ட். அனிதா மனசுல சின்ன வயசுல பதிஞ்சு போன அந்த ரணம் அந்த பசங்க கத்தி காட்டி மெரட்டினப்ப  திரும்பவும் மேல வந்து அப்படி ஒரு சம்பவம் மறுபடியும் நடந்துடுமோங்கர பயத்துல அவ மனநிலை பாதிக்கப்பட்டதுனு உங்களுக்கு தெரியும். அதே போல அவ உள்மனசுல பதிஞ்சு போன ஒரு உருவம் தான் அருண்... அதுக்கு பேரு நட்பா, அன்பா, காதலா, அவ தான் சொல்லணும்..."

"டாக்டர்..." என அருண் உட்பட எல்லோரும் அதிர்ச்சியை காட்ட

"எஸ்... தன்னையும் அறியாம அருணோட உருவம் அவ மனசுல இருக்கு...."

"என்னால இதை நம்ப முடியல டாக்டர்...அவ டைரில கூட அருண் பத்தி  எதுவும் எழுதல... நான் அவ அண்ணன்... என்னை நினைவில்லையே... சில முறை மட்டுமே சந்திச்ச அருண் எப்படி...." என ஆதங்கமாய் சூர்யா கேட்க அவன் குரலில் தெறித்த வேதனையில் சுமேதாவின் கண்கள் நிறைந்தது

"சூர்யா... மனுசனோட மெமரி பத்தி சொல்றப்ப முக்கியமா ரெண்டு வகையா பிரிக்கலாம். Declarative Memory and Procedural Memory. இதுல declarative memory ங்கறது சம்பவங்கள் / நிகழ்வுகளை பதிவு செய்யறது. Procedural memory ங்கறது செய்முறைகள்னு சொல்லலாம். அது எப்பவும் மறக்கவே மறக்காது. அதனால தான் டிரைவிங், ஸ்விம்மிங் போல நாம கத்துகிட்ட விஷயங்கள் என்ன நடந்தாலும் மறக்காது, இது procedural மெமரில இருக்கறது..."

"ஆனா... "என சூர்யா இடைமறிக்க

"இருங்க நான் சொல்லி முடிச்சுடறேன்... அதுக்காக இந்த declarative memory ல இருக்கற எல்லாமும் மறந்து போய்டும்னு சொல்ல முடியாது. அதுலயும் சப்-கான்சியஸ் மைண்ட்ல பதியற விஷயங்கள் சில எப்பவும் மறக்காது. அனிதாவோட சப்-கான்சியஸ் மனசுல பதிஞ்ச சில விசயங்கள்ல ஒண்ணு அருணோட முகம்"

"டாக்டர்... ஆனா என்னை கூட...." என சூர்யா இடையில் பேச முயல

"உங்க ஆதங்கம் எனக்கு புரியுது சூர்யா. உங்களை கூட நினைவு இல்லாதப்ப அருண் எப்படினு கேக்கறீங்க. அதான் இப்ப என்னோட கேள்வியும். அனிதா மனசுல அருணுக்கு ஒரு தனிப்பட்ட இடம் இருக்கு அது மட்டும் என்னால சொல்ல முடியும். அதனால தான் அது சப்-கான்சியஸ் மைண்ட்ல பதிஞ்சு போய் இருக்கு. அது என்னனு அவளா சொன்னாத்தான் தெரியும். சில சமயம் வெளிப்படுத்தாம கட்டுப்படுத்தப்பட்ட விஷயங்கள் கூட இங்க பதியும்...  இதான் என்னோட அப்சர்வேஷன். Above all, human mind is very complicated Surya. It is far apart from theory we study and practices we do. Every case is different and everyday we're learning" என புன்னகையுடன் அவ்வளவு தான் என்பது போல் முடித்தார் டாக்டர்

அந்த கணம் தன்னையும் அறியாமல் சூர்யா சுமேதவை பார்த்தான். "உன் மனதில் என் இடம் என்ன?" என கேட்பது போல் இருந்தது அந்த பார்வை

யாரும் எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்க டாக்டர் மீண்டும் தொடர்ந்தார்

"சூர்யா... அருண் இங்க கொஞ்ச நாள் அனிதா கூட தங்கினா அவ சீக்கிரம் குணமாகற வாய்ப்பு இருக்குங்கறது என்னோட தியரி... ஏன்னா அனிதா புரிஞ்சுக்கற ஒரே குரல் இப்ப அருணோடது தான்... அருண்கிட்ட நான் ஏற்கனவே கேட்டுட்டேன். அவருக்கு ஆட்சேபனை இல்லைன்னு சொன்னார். இதுக்கு அவளோட கார்டியன்ங்கற முறைல உங்க சம்மதம் தான் வேணும்" என டாக்டர் கூற சூர்யா அருணை புதிதாய் பார்ப்பதை போல் பார்த்தான்

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த அருண் அப்போது பேசினான் 

Monday, October 18, 2010

அதே கண்கள்... (பகுதி 20)


எல்லோருக்கும் போக்கு காட்டி விட்டு மொட்டை மாடிக்கு சென்று கீழே குதிக்க முயன்ற கணம் "அனிதா... " என்ற குரலில் நின்றாள்

குரல் வந்த திசையில் அருண் நிற்பதை கண்டவள் ஓடி சென்று அவன் கைகளை பற்றி கொண்டாள். "அருண்... அருண் ப்ளீஸ்... என்னை கூட்டிட்டு போய்டுங்க... இவங்க என்ன கொன்னுடுவாங்க... எனக்கு பயமா இருக்கு" என அழ எதுவும் புரியாமல் திகைத்தான் அருண்   

"அனிதா என்ன ஆச்சு உனக்கு? அனிதா" என அவளை விலக்கி நிறுத்த முயன்றான். அவளோ, அவனை விட்டால் தனக்கு வேறு வழியில்லை என்பது போல் அவன் கைகளை இறுக பற்றி அவன் தோளில் தலை சாய்த்து நின்றாள்

அனிதாவின் பின்னோடு ஓடி வந்த டாக்டர் மற்றும் செவிலியர் அவளின் இந்த செய்கையில் திகைத்து நின்றனர்
______________________________________________

அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தான் சூர்யா. டெலிபோன் மணி அடிக்க நிதானமாய் வந்து எடுத்தான்

எதிர்முனையில் சொன்ன செய்தியில் பதறினான். அவன் பதட்டத்தை கண்ட சுமேதா என்னவோ என பயந்து "என்னாச்சு..." என்றபடியே அவனருகில் வந்தாள்

அவள் இருப்பை கூட மறந்தவன் போல் "என்ன டாக்டர் சொல்றீங்க? இப்ப அனிதா எப்படி இருக்கா?" என கண்களில் நீர் துளிர்க்க கேட்டான் சூர்யா

அனிதாவின் பெயரை கேட்டதும் சுமேதாவின் முகம் மாறியது... "ஐயோ என்னாச்சு... சொல்லுங்க ப்ளீஸ்" என அவன்  கையை பற்றி உலுக்க அவளை உதறினான் சூர்யா

"நான் இப்பவே வரேன் டாக்டர்... ப்ளீஸ்... இன்னொரு தரம் இப்படி நடக்காம பாத்துக்கோங்க டாக்டர்" என தொலைபேசியை கீழே வைத்தவன் உடனே அலுவலகத்துக்கு அழைத்து இன்று தான் வர இயலாது என தெரிவித்தான்

தன் அறைக்கு சென்று ஒரு பெட்டியை  எடுத்து கொண்டவன் வேகமாய் கீழே வர படிகளின் முடிவில் நின்றிருந்த சுமேதாவை பொருட்படுத்தாமல் விலகினான்

கதவின் அருகில் வந்து அவனை மறித்து நின்றாள் சுமேதா. "என்னாச்சு சொல்லுங்க... அனிதாவுக்கு என்னாச்சு?"என கேட்க

"அவளை பத்தி உனக்கென்ன தெரியும்...வழி விடு" என கத்தினான்

"எதுவும் தெரியாது... உங்க காப்போர்ட்ல அவ போட்டோ பாத்து எதுவும் புரியாம மேல தெரிஞ்சுக்கணும்னு தான் கணேசையும் அருணையும் தேடினேன்... நீங்க அதையும் தப்பாதான் புரிஞ்சுக்கிட்டீங்க" என்றவளை ஒரு கணம் எதுவும் பேசாமல் பார்த்தான்

"வழி விடு" என்றான் எதுவும் காதில் விழாதது போல்

"முடியாது... அனிதாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்னு சொல்லுங்க... அவளுக்கு என்ன ஆச்சு? எனக்கு தெரியணும்"

"எதையும் உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல" என அவளை கீழே தள்ள முயன்றான்

"ஏன்...? அவ உங்க காதலியா?" என கோபமாய் கேட்க

"ஏய்............." என அவளை அடிக்க கை ஓங்கினான். சுமேதாவின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை அடிக்கவிடாமல் தடுத்தது "ஒழுங்கா வழி விடு" என கத்தினான்

"அப்ப நீங்க போற எடத்துக்கு நானும் வரேன்... " என கதவு திறந்து வெளியேறினாள். அவன் எதுவும் பேசாமல் வெளியே வர, அவசரமாய் வீட்டை பூட்டி விட்டு வந்து காரில் ஏறினாள்

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. சுமேதா தான் ஆரம்பித்தாள் "ப்ளீஸ் சொல்லுங்க... உங்களுக்கும் அனிதாவுக்கும் என்ன உறவு?"

"நீ நெனக்கரமாதிரி எந்த உறவும் இல்ல" என்றான் உணர்ச்சியற்ற குரலில்

"ப்ளீஸ்... சொல்லுங்க" எனவும், அவளும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரமென நினைத்தானோ என்னமோ

"அவ என் சித்தி பொண்ணு... "

"என்ன....?" என்றாள் ஆச்சிர்யமாய், உடனே  "என்னாச்சு அவளுக்கு..." என பதறினாள்

"செய்யறதையும் செஞ்சுட்டு என்னனு வேற கேக்கறையா?" என கோபமாய் கேட்க

"எனக்கு எதுவும் புரியல சூர்யா... ப்ளீஸ் சொல்லுங்க" என கெஞ்சலாய் கேட்க அதற்கு மேல் தாமதிக்க விரும்பாதவன் போல்

"ஒம்பது வயசுல வீட்டுக்கு திருட வந்த ஒரு கும்பலால தன்னோட அம்மா அப்பா அக்கா எல்லாரும் கொல்ல பட்டத பாத்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் அந்த அதிர்சசியிலேயே நடை பிணமா இருந்தா... அப்ப இருந்தே அவ எங்க வீட்டுல தான் வளந்தா... எனக்கு அவ மேல உயிர்..." என்றவன் வேதனையில் முகம் சுருங்க அதற்கு மேல் பேச இயலாமல் நிறுத்தினான்

அவன் முகத்தில் இருந்த வேதனையை பார்த்தவள் எதுவும் பேசவில்லை, அவனே தொடரட்டுமென அமைதிகாத்தாள்

"கொஞ்ச கொஞ்சமா பழசெல்லாம்  மறந்து நிம்மதியா இருந்தோம் எல்லாரும். ஆனாலும் சின்ன வயசுலேயே ஏற்பட்ட அந்த அதிர்ச்சியால அவ ரெம்ப பயந்த சுபாவமாவே இருந்தா" என்றவன் காரை ஓரமாய் நிறுத்தினான்

பின் சீட்டில் இருந்த சூட்கேசில் இருந்து ஒரு டைரியை எடுத்து "இது அனிதா எழுதின கடைசி டைரி... போன வருஷ டைரி... நீயே படிச்சுக்கோ.. நீ பண்ணின பாவம் என்னனு புரியும்" என்றான் உணர்ச்சியற்ற குரலில். பின் எதுவும் பேசாமல் காரை கிளப்பினான்

சுமேதா டைரியை திறக்க முதல் பக்கத்தில் சூர்யாவின் புகைப்படம் அதன் மேல் "மை ஸ்வீட் அண்ணா" என்று எழுதப்பட்டிருந்தது  அனிதாவின் கையெழுத்தில்

//ஜனவரி முதல் நாள்: இன்னிக்கி ஒரே ஜாலி, அண்ணா புல் டே வீட்டுலையே இருந்தான்... அண்ணாதான் இந்த டைரி எனக்கு குடுத்தான். கடவுளே, எப்பவும் போல இந்த நியூ இயர் அன்னைக்கும் எனக்கு ஒரே ஒரு விஷ் தான். எனக்கு அடுத்த ஜென்மத்துலயும் இதே அண்ணா வேணும் ப்ளீஸ்....// என்பதோடு முடிக்கப்பட்டிருந்தது 

அடுத்த வந்த பல பக்கங்கள் பெரும்பாலும் சூர்யாவை பற்றியதே. சிலது அவள் பள்ளியை பற்றியும் +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர வேண்டுமென்பது பற்றியும் எழுதி இருந்தாள்.அதன் பின் சில பக்கங்கள் காலியாய் இருந்தன

//ஜூன் 28ம்  நாள்: ரெம்ப நாள் கழிச்சு டைரி எழுதறேன் இன்னைக்கி. எக்ஸாம் பிஸி, லீவ்னு அப்படியே ஓடி போச்சு. இன்னிக்கி மொதல் மொதலா காலேஜ் போனேன். ரெம்ப பயமா இருந்தது. ராக்கிங் எல்லாம் பண்ணினாங்க. அத்தன பயத்துலையும் ஒரு சந்தோஷம் ஒரு அக்காவ பாத்ததுல. அவங்க பேரு சுமேதானு அவங்க பிரெண்ட்ஸ் கூப்பிட்டப்ப தெரிஞ்சுகிட்டேன். என் அக்கா உயிரோட இருந்திருந்தா இப்படி தான் இருந்துருப்பானு ஏனோ தோணுது. அவங்கள பாக்கவே அடிக்கடி சீனியர் க்ளாஸ் பக்கம் போய் இன்னிக்கி நெறைய ராக்கிங்ல மாட்டினேன்... இருந்தாலும் ஒகே. அவங்கள பாத்துல ஹாப்பி//

இதை படித்ததும் சுமேதாவின் கண்கள் நிறைந்தது. அடுத்த வந்த பக்கங்கள் பலவும் சூர்யாவுக்கு இணையாய் தன்னை பற்றியும் அனிதா எழுதி இருந்ததை ஆச்சிர்யமாய் படித்தாள் சுமேதா

தான் அணிந்து வந்த உடைகள் பற்றியும் தன் எல்லோரிடமும் பழகும் விதம் பற்றியும் நிறைய எழுதி இருந்தாள். அனிதா தன்னை இவ்வளவு கவனித்தாள் என்பதே சுமேதாவிற்கு இன்னும் நம்ப இயலாமல் இருந்தது. அவளை போய் அருண் பேச்சை கேட்டு வருத்தினோமே என தன் மீதே கோபம் வந்தது

அதை பற்றி என்ன எழுதி இருக்கிறாள் என அரிய பக்கங்களை வேகமாய் புரட்டினாள்

//டிசம்பர் 5 : இன்னிக்கி எனக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு ரெம்ப பிடிச்ச சுமி அக்கா என்னை அழ வெச்சுட்டாங்க. யாரோ ஒருத்தர்கிட்ட போய்  ஐ லவ் யு சொல்ல சொல்லி ராக் பண்ணினாங்க. எனக்கு என் அக்கா அப்படி செஞ்சது மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு. அக்கா ஏன் இப்படி செஞ்சாங்கன்னு தெரியல... ஆனாலும் ஐ லவ் அக்கா... ஐ லவ் மை சுமி அக்கா//

இதை படித்ததும் சுமேதா டைரியை மடி மீது வைத்து விட்டு கைகளால் முகம் பொத்தி விசும்பினாள்

அவளை திரும்பி பார்த்த சூர்யா தன்னையும் அறியாமல் அவளை நோக்கி நகர்ந்த கைகளை கட்டுப்படுத்தினான். எதுவும் பேசாமல் மீண்டும் சாலையில் கவனம் செலுத்தினான்

மீண்டும் டைரியை எடுத்து படிக்கலானாள் சுமேதா

// டிசம்பர் 6 : இன்னிக்கி காலேஜ் விட்டு வெளிய வர்றப்ப யாரோ ரெண்டு பேரு வந்து "அருண்கிட்ட மட்டும் தான் ஐ லவ் யு சொல்லுவியா எங்ககிட்ட சொல்ல மாட்டியானு" மெரட்டினாங்க. அதுக்குள்ள அண்ணா என்னை கூட்டிட்டு போக வந்துட்டாரு, தப்பிச்சுட்டேன்... ஆனா ரெம்ப பயமா இருக்கு. அண்ணாகிட்ட கூட சொல்லல//

//டிசம்பர் 10 : இன்னிக்கி எனக்கு ரெம்ப மூட் அவுட். சுமி அக்கா அந்த அருண லவ் பண்றாங்க போல இருக்கு. அக்காவுக்கு இன்னும் பெட்டரா மாப்பிள்ளை இருக்கணும்னு எனக்கு தோணுது. ஆனா சொல்ல பயமா இருக்கு. லைப்ரரி பின்னாடி பார்க்ல ரெண்டு பெரும் பேசிட்டு இருந்தாங்க. எனக்கு பிடிக்கல, நான் எழுந்து போயிட்டேன்//

//டிசம்பர் 13 : இன்னிக்கி அந்த ரெண்டு பேரு மறுபடியும் வந்து மெரட்டினாங்க காலேஜ்குள்ளேயே. எனக்கு காலேஜ் போகவே பயமா இருக்கு. அதுல ஒருத்தன் ரவுடி மாதிரி இருக்கான்... ரெம்ப பயமா இருக்கு//

அதன் பின் வந்த பக்கங்கள் எல்லாம் காலியாய் இருந்தன. முன்னும் பின்னும் திருப்பு பார்த்தாள்

"அதுக்கு மேல எழுதற நெலமைல அவ இல்ல..." என்ற சூர்யாவின் குரலில் அதிர்ச்சியானாள் சுமேதா

"என்ன சொல்றீங்க? என்ன ஆச்சு அனிதாவுக்கு? ப்ளீஸ் சொல்லுங்க" என அழுது கொண்டே சுமேதா கேட்க அவளை  உணர்ச்சியற்ற பார்வையுடன் ஏறிட்டான்

"டிசம்பர் 13  தான் அவ கடைசியா எழுதினது. அதுக்கு அடுத்த நாள் அந்த ரெண்டு பேர் மறுபடியும் அவள மெரட்டி இருக்காங்க. அதுல ஒருத்தன் கத்திய காட்டினதும் அனிதா ரெம்ப பயந்துட்டா. சின்ன வயசுல கண் முன்னாடி பாத்த கொடூரம் நினைவு வந்ததோ என்னமோ ஹிஸ்டீரியா வந்தவ போல கத்திட்டே வீட்டுக்கு வந்தா அன்னைக்கி. நாங்க எவ்வளவோ கேட்டும் எதுவும் சொல்லல. நிலைமை கட்டுகடங்காம போனப்ப தான் டாக்டர்கிட்ட போனோம். இதெல்லாம் கூட டாக்டர் அவ ட்ரீட்மென்ட் அப்போ அவ வாயால சொல்ல வெச்சு தான் நாங்க தெரிஞ்சுகிட்டோம்" என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை

சற்று நேரம் சுமேதாவிற்க்கும் பேச இயலவில்லை. தான் செய்த ஒரு சிறு விளையாட்டுத்தனமான தவறு ஒரு பெண்ணின் வாழ்வையே சூரையாடிவிட்டதே என குற்ற உணர்வில் குறுகி போனாள்

"அவங்கள கண்டுபிடிக்க முடியலையா?" என அவள் மெதுவாய் கேட்க

"இந்த விஷயம் / அவ டைரி எல்லாமும் அந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூணு மாசம் கழிச்சு தான் எனக்கு தெரியும். அப்புறம் விசாரிச்சப்ப  அந்த ரெண்டு பேர் காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் இல்ல... சும்மா ஊர் சுத்தற ராஸ்கல்ஸ்னு  தெரிஞ்சுது. காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் போர்வைல உள்ள வந்து கலாட்டா செய்யற ரவுடிக. அனிதாவோட விசயம் தெரிஞ்சு ஊரை விட்டே ஓடிட்டாங்க" இதை கூறிய போது அவன் கைகள் ஸ்டீரிங் மீது இறுகியதை கவனித்தாள் சுமேதா

மீண்டும் அவனே தொடர்ந்தான் "உன்னை பத்தி அவ டைரில படிச்சப்ப நீ தான் இதை ஆரம்பிச்சு வெச்சவங்கர கோபத்துல அப்பவே உன்னை தேடி பிடிச்சு கொல்லணும்னு தோணுச்சு. ஆனா அனிதா குணமாகறவரை நான் ஜெயிலுக்கு போகக் கூடாதுன்னு கட்டுபடுத்திகிட்டேன். அப்போ தான் தரகர் மூலமா உன்னோட போட்டோ வந்தது. கடவுளே குடுத்த சந்தர்ப்பம்னு நெனச்சு சம்மதம் சொன்னேன்"

பாறையை இறுகி இருந்த அவன் முகத்தை பார்க்க பயமாய் இருந்தது. அவன் தன்னை தவறாய் நினைப்பதை ஏற்க இயலாமல் தவித்தாள்

"சூர்யா நான்..." என சுமேதா ஏதோ சொல்ல முயல "பேசாதே" என்பது போல்  கை உயர்த்தினான். அதற்கு மேல் பேச தைரியமின்றி ஜன்னல்  வெளியே பார்ப்பது போல் முகம் திருப்பி மௌனமாய் கண்ணீர் உகுத்தாள்


(தொடரும்...)

...

Friday, October 15, 2010

அதே கண்கள்... (பகுதி 19)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

"நிறுத்துங்க சூர்யா... என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு... ஆமா, நான் யார்கூட போனா உங்களுக்கு என்ன? அதை கேக்க நீங்க யாரு..." என கூறிய கணம் இடியாய் அவன் கை அவள் கன்னத்தில் இறங்கியது    

அதை எதிர்பாராத சுமேதா வலியில் கண்ணில் நீர் வழிய உறைந்தாள். அந்த கணம் சூர்யாவின் கண்களில் அவள் கண்டது வெறுப்பை  தவிர வேறில்லை என்பது அவளுக்கு தெளிவாய் புரிந்தது

மனதில் இத்தனை வெறுப்பை கொண்டிருப்பவன் என்றேனும் தன் மனதை புரிந்து கொள்வான் என நினைப்பது முட்டாள்தனம் என்பதை அந்த கணம் உணர்ந்தாள்

இனி தன் வாழ்வில் அவனுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை தீர்மானித்தாள்

அனிதாவிற்கு என்ன ஆனது என்பதை அறிவது முக்கியம். அவளுக்கு அருணால் ஏதேனும் ஆகி இருந்தால் அதில் தனக்கும் ஒரு வகையில் பங்குண்டு

அதற்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தத்தை செய்து விட்டு தன் வழியே செல்ல வேண்டியது தான் என முடிவு செய்தாள்

கணேசின் அழைப்பிற்கு கூட காத்திருக்கும் பொறுமையின்றி மறுநாள் அருணின் இருப்பிடத்திற்கு சென்று பார்ப்பதென முடிவு செய்தாள்
_________________________________________

அன்று அதன் பின் சுமேதா சூர்யாவை நேரே பார்ப்பதை கூட தவிர்த்தாள்.  மறுநாள் சூர்யா அலுவலகம் கிளம்பி செல்லும் வரை அதிகம் அவன் கண்ணில் கூட படாமல் ஏதோ வேலையாய்  இருப்பதை போல் பாவனை செய்து கொண்டிருந்தாள்

சூர்யா கிளம்பிய பின் தன் தோழியை சந்திக்க போவதாய் சூர்யாவின் அன்னையிடம் கூறி விட்டு கிளம்பினாள் சுமேதா

அதே நேரம் அலுவலகத்தில் வேலையில் மனம் பதியாமல் சூர்யாவின் மனம் அலைபாய்ந்தது. என்ன இருந்தாலும் அவளை கை நீட்டி அடித்தது தவறென குற்ற உணர்வில் தவித்தான்

தன்னை யார் என்று கேட்டதை அவனால் ஏற்று கொள்ள இயலவில்லை. தன்னை விட வேறு யார் அவளுக்கு முக்கியமாய் இருக்க இயலும் என  மனதில் தோன்றிய கணம் அதிர்ந்தான்

என்ன இது? தான் அவளை திருமணம் செய்த நோக்கம் என்ன, ஏன் இநத தடுமாற்றம் இப்போது என தன் மேலேயே கோபம் வந்தது

அவள் செய்த பாவத்திற்கு அனுபவிக்கிறாள், நன்றாக அழட்டும், என்னை அழ வைத்ததற்கு இன்னும் அனுபவிக்க வேண்டுமென நினைத்தான்

எல்லாம் ஒரு கணம் தான். மீண்டும் அவள் தான் அடித்ததை தாங்காமல் கன்னத்தில் கை தாங்கி கண்களில் நீர் வழிய நின்ற காட்சியே கண் முன் வந்தது

அன்று காலை தன்னை பார்ப்பதை கூட தவிர்த்தாளே, என்னை மிருகம் என வெறுத்தே விட்டாளோ என வேதனை அடைந்தான்

அதே நேரம் சுமேதா காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் வந்து சேர்ந்தாள். ஒருமுறை மற்ற நண்பர்களுடன் அருணின் வீட்டிற்கு வந்திருக்கிறாள்

பஸ் நிலையத்தில் இறங்கி ஆர்.வீ  ஹோட்டல் செல்லும் வழியில் நடந்து சென்ற நினைவு இருந்தது. ஒருவழியாய் அருணின் வீட்டை கண்டுபிடித்து அருகில் செல்ல வீடு பூட்டி இருந்தது

பக்கத்து வீட்டில் இருந்தவர் அருண் வெகு நாட்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து சென்று விட்டான் என்று கூறிய செய்தி அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது

என்ன ஆயிற்றோ என்ற யோசனையுடன் மீண்டும் பஸ் நிலையம் நோக்கி நடக்க துவங்கிய நேரம் அவளை உரசுவது போல் ஒரு கார் வந்து நின்றது

அவள் அதிர்ந்து நகர கார் கதவை திறந்த சூர்யா "ஏறு வண்டில...." என்றான்

அவனை எதிர்பாராத அதிர்ச்சியில் "நீங்க... " என அவள் தடுமாற

"மொதல்ல வண்டில ஏறு..." என்றான் மிரட்டும் குரலில். அதற்கு மேல் நிற்க இயலாமல் உள்ளே அமர்ந்தாள்

அவள் அமர்ந்த கணம் கார் சீறி பாய்ந்தது. அவள் நடந்ததை கூற முயல "பேசாத... எதுவும் பேசி என்னை மிருகமாக்கிடாத...." என கத்தினான்

அவன் கண்களில் தெரிந்த கோபம் அவளை அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தது. நேரே தன் வீட்டிற்கு சென்றான். உள்ளே செல்லாமல் கேட்டின் வெளியே நிறுத்தினான்

"எறங்கு... " என்றான் கோபம் சற்றும் குறையாமல் 

"சூர்யா ப்ளீஸ்... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க..." என்றவளை கை பிடித்து காரின் வெளியே இழுத்தான்

"அம்மா அப்பா இருக்காங்கன்னு பாக்கறேன்... இல்லேனா இப்பவே வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் கொன்னு போட்டுடுவேன்..." தீவிரமாய் ஒலித்தது அவன் குரல், சொல்வதை செய்வேன் என்பது போல்

மீண்டும் அவன் கொடூர முகத்தை கண்டதும் சகலமும் அடங்க மௌனமானாள் சுமேதா

"நான் நைட் வீட்டுக்கு வர்ற வரைக்கும் நீ எங்கயாச்சும் வெளிய போனேன்னு தெரிஞ்சா அப்புறம் உயிரோட இருக்க மாட்டே..." என மிரட்டி விட்டு வேகமாய் காரில் கிளம்பினான்

அவன் கோபம் அவளுக்கு பழகியது தானென்றாலும் தன்னை அவன் இழிவாய் நினைப்பதை அவளால் ஏற்று கொள்ள இயலவில்லை

தன் பக்க ஞாயத்தை சொல்ல கூட ஒரு வாய்ப்பு தராமல் தண்டிப்பது வேதனை அளித்தது சுமேதாவிற்கு
____________________________________________

அன்று இரவு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தான் சூர்யா. வீடு மொத்தமும் இருளில் மூழ்கி இருந்தது

கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல தன் அன்னை வரவேற்பறையில் இருப்பாள் என அவன் எதிர்பாராததால் "அம்மா...இன்னும் தூங்கலையா நீ..." என தயக்கமாய் நின்றான்

"இல்ல... நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சூர்யா அதான் வெயிட் பண்றேன்" என்றார். தன் அம்மாவின் கண்களில் இருந்த தீவிரத்தை கண்டவன் சுமேதா ஏதேனும் கூறி இருப்பாளோ என அதிர்ந்தான்

"அம்மா எனக்கு டையர்ட்ஆ இருக்கு... மார்னிங் பேசலாமே..." என தவிர்க்க முயன்றான்

"இல்ல சூர்யா... இப்ப பேசணும்... காலைல நேரத்துலையே நானும் அப்பாவும் ஊருக்கு போறோம். தாத்தா பாட்டிய பாத்து நாளாச்சு. போய் ஒரு வாரம் இருந்துட்டு வரலாம்னு இருக்கோம்" எனவும்

"சரிம்மா... என்ன பேசணும்? சொல்லு" என்று சோபாவில் அமர்ந்தான்

"உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சன" என நேரடியாய் தாக்க சூர்யா தடுமாறினான்

"பிரச்சனையா...? என்ன? அப்படி ஒண்ணும் இல்லையே" என சமாளித்தான்

"இநத விசியத்துல மட்டும் ரெண்டு பேருக்கும் நல்ல ஒற்றுமை தான். அவள கேட்டாலும் இதே தான் சொல்றா... ஆனா ஏதோ பிரச்சனைன்னு மட்டும் எனக்கு நிச்சியமா புரியுது" எனவும் அவளும் எதுவும் கூறவில்லை என்றறிந்ததும் நிம்மதியாய் மூச்சு விட்டான் சூர்யா

"இல்லம்மா அப்படி எதுவும் இல்ல..." என எழுந்து உள்ளே செல்ல முயல

"ஒரு நிமிஷம் சூர்யா... நான் புத்தி சொல்ற வயசெல்லாம் நீ கடந்தாச்சு. கணவன் மனைவிக்குள்ள சின்ன சின்ன பிரச்சனைகள் வர்றது சகஜம் தான். எதுவா இருந்தாலும் அப்பப்ப  பேசி தீத்துடணும். அனுபவபட்டவ சொல்றேன். அதுக்கு மேல உன் விருப்பம்" என்று விட்டு தன் அறைக்குள் சென்றார்

சற்று நேரம் யோசனையாய் நின்ற சூர்யா தன் அறைக்கு சென்றான்.அறை இருளில் மூழ்கி இருக்க விளக்கை உயிர்ப்பித்தான்

வெளிச்சம் கண்டு சுமேதா பதறி எழ அதுவரை மறைந்திருந்த கோபம் அவளை பார்த்ததும் மீண்டும் தலை எடுத்தது அவனுள்

"என்ன? நல்லா கனவுல உன் காதலனோட டூயட் பாடிட்டு இருந்தத கெடுத்துடேனோ?" என ஏளன பார்வை பார்க்க

"சூர்யா ப்ளீஸ்...நான் சொல்றத ஒரு நிமிஷம் காது குடுத்து கேளுங்க" என கெஞ்ச

"நிறுத்து... கேட்ட வரைக்கும் போதும்... நேத்து உன்கிட்ட அப்படி மிருகத்தனமா நடந்துக்கிட்டதுக்கு என் மேலேயே எனக்கு கோவம் இருந்தது. மனசு கேக்காம உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு தான் இன்னிக்கி காலைல ஆபீஸ்ல இருந்து போன் பண்ணினேன்... நீ வெளிய போய் இருக்கேன்னு அம்மா சொன்னதுமே நீ அவன பாக்க தான் போய் இருப்பேன்னு தெரிஞ்சு தான் அங்க வந்தேன்... என் யூகம் பொய்க்கல" என கோபம் துளியும் குறையாமல் அவளை குற்றவாளி கூண்டில் நிறுத்தினான்

"கண்ணால் காண்பதும் பொய்..." என அவள் தன் நிலையை விளக்க முயல

"பேசாத... என்னை கொலகாரனாக்கிடாத...  கணேஷ் லைன்ல கிடைக்கிலைனதும் அடுத்தது அவன் தானே... இல்ல வேற ஆப்சன்ஸ் ஏதும் இருக்கா இன்னும் எனக்கு தெரியாம..."

"ஐயோ... கடவுளே..." என அவள் கதற, அவள் கதறல் அவனை சிறிதும் அசைக்கவில்லை

"என்கிட்ட இருந்து போகணும்கறது தானே உன் விருப்பம்... போ... எவன் கூட வேணும்னாலும் போ... இந்தா டைவர்ஸ் பேப்பர்ஸ்... இதுல கையெழுத்து போடு... விவாகரத்து வந்ததும் எப்படியோ போய் தொல. ஆனா இந்த வீட்டுல இருக்கற வரை எங்க குடும்ப கெளரவம் போகறத பாத்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்..." என இரக்கமின்றி வார்த்தைகளை கொட்டினான்

சுமேதா சிலையாய் சமைந்தாள். இவனிடம் இனி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்தாள். தன்னை வேசியாய் சித்தரித்து பேசுபவனிடம் என்ன சொல்லி புரிய வைப்பது.

மனதில் கடுகளவேனும் அன்பிருந்தால் நிச்சியம் அவனால் இப்படி பேச இயலுமா? அன்பும் காதலும் ஒரு பக்கமாய் இருந்து சாதிக்கபோவதென்ன என உடைந்து போனாள்

இப்படி இருப்பவனிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என தீர்மானித்தாள். அவன் சொல்வது போல் விவாகரத்து பெற்று விலகுவது தான் சரி என முடிவுக்கு வந்தாள்

அவன் பெற்றவர்கள் ஊருக்கு சென்று திரும்பி வந்ததும் அவர்களிடம் ஒரு வார்த்தை கூறி விட்டு விலகுவது என தீர்மானித்தாள்.அதற்குள் அனிதாவை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டுமென நினைத்தாள்

அந்த இரவு இருவரும் ஒரு நொடியும் கண் மூடவில்லை

சூர்யாவின் நிலைமை இன்னும் மோசமாய் இருந்தது. தன்னை விட்டு விலகும் எண்ணத்தில் தானே இன்னொருவனை தேடிப்போனாள் என்பதை அவனால் தாங்க இயலவில்லை

தான் விவாகரத்தை பற்றி கூறிய போது மறுத்து பேசாமல் நின்றாளே. அவள் மனதில் நான் இருந்தால் ஏன் இந்த மௌனம்

தான் முன்பு நினைத்தது போல் அவள் சரியானவள் அல்ல. என்னை அப்படி நம்ப செய்ய அவள் நடத்திய நாடகம் தான் அது. அவளின் பல நாடகங்களில் இதுவும் ஒன்று

இவளால் எனக்கு நேர்ந்த துன்பத்தை எல்லாம் கூட மறந்து  இவளை என் மனதில் இருத்த முயன்றேனே என தன் மீதே கோபம் கொண்டான்

மறுநாள் காலை சூர்யாவின் பெற்றோர் வெளியூர் கிளம்ப அதன் பின் இரண்டு நாட்கள் அந்த வீட்டில் மௌனமே ஆட்சி செய்தது
___________________________________________

அதே நேரம் சென்னையின் புகழ் பெற்ற அந்த மருத்துவமனையில் ஒரு நோயாளி யார் கைகளிலும் சிக்காமல் படிகளில் தாவி ஏறி கொண்டிருக்க மருத்துவமனை பணியாட்கள் பிடிக்க முயன்று கொண்டிருந்தனர்

"ஏய் நில்லு... சொன்னா கேளு... சரி நீ மருந்து சாப்பிட வேண்டாம் நில்லு" என பணியாள் கத்தி கொண்டே வர அந்த நோயாளியின் காதில் எதுவும் விழுந்ததாய் தெரியவில்லை

எல்லோருக்கும் போக்கு காட்டி விட்டு மொட்டை மாடிக்கு சென்று கீழே குதிக்க முயன்ற கணம் "அனிதா... " என்ற குரலில் நின்றாள்

குரல் வந்த திசையில் அருண் நிற்பதை கண்டவள் ஓடி சென்று அவன் கைகளை பற்றி கொண்டாள். "அருண்... அருண் ப்ளீஸ்... என்னை கூட்டிட்டு போய்டுங்க... இவங்க என்ன கொன்னுடுவாங்க... எனக்கு பயமா இருக்கு" என அழ எதுவும் புரியாமல் திகைத்தான் அருண்    

Wednesday, October 13, 2010

அதே கண்கள்... (பகுதி 18)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

வரவேற்பறையில் எங்கும் பேனா சிக்காமல் போக மேலே தங்கள் அறைக்கு சென்றாள்

சூர்யாவின் கப்போர்டில் இருக்குமோ என எண்ணியவள்  "என் பொருட்களை ஏன் கலைக்கிறாய்" என கோபம் கொள்வானோ என ஒரு கணம் தயங்கியவள், இல்லையென்றால் மட்டுமென்ன கொஞ்சவா செய்கிறான் என அவன் கப்போர்டை திறக்க முயல அது பூட்டி இருந்ததை கண்டு ஆச்சிர்யமானாள்

பூட்டி வைக்கும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறதென பார்க்கும் ஆர்வம் தலை தூக்க, ஒரு வழியாய் டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த சாவி கொத்தில் இதற்கான சாவியை  கண்டுபிடித்து திறந்தாள்

அதில் சிறிய டிராயர் போன்ற அமைப்பு  இருந்ததை பார்த்து அதில் பேனா போன்ற பொருட்கள் இருக்குமென யூகித்து அதை திறந்தவள் அதிர்ச்சியில் மயங்கி விடாமல் இருக்க அதன் கதவை பற்றிக்கொண்டாள்...

தன் கண்களால் கண்டதை இன்னும் நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் கண்களை கசக்கி கொண்டு பார்த்தாள்

தன் அன்னை தொலைபேசியில் காத்திருக்கிறாள் என்பது கூட மறந்து போனவளாய், உடலின் பலம் மொத்தமும் வடிந்தது போல் நிற்க கூட இயலாமல் கட்டிலில் அமர்ந்தாள்

சற்று நேரம் பெரிய மூச்சுகளை எடுத்து தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டவள் மீண்டும் எழுந்து வந்து கப்போர்டின் அருகே நின்றாள்.

அங்கு இருந்த அனிதாவின் சிரித்த முகம் அவளை பார்த்து கேலி செய்வது போல் இருந்தது

"அனிதாவின் போட்டோ  எப்படி இங்கே? ஒருவேள அனிதா இவரோட காதலியோ... ஐயோ கடவுளே... வேண்டாம்... என்னால தாங்க முடியாது" என்றவளின் கண்களில் நீர் கட்டுப்படாமல் வழிந்தது

"இன்னிக்கி வந்ததும் கேட்டுட வேண்டியது தான்" என தீர்மானித்தாள். ஆனால் அடுத்த கணமே அவள் மனம் மாறியது

"ஆம் அவள் என் காதலி தான் என்று அவன் கூறிவிட்டால்...அதன் பின் என்ன செய்ய இயலும்... " என மனம் பதறியது

சில நிமிடங்கள் வெறித்து பார்த்தவள் மடங்கி அமர்ந்து சத்தமாய் அழுதாள். வீட்டில் யாரும் இல்லாத தனிமை அவள் உணர்வுகளின் வடிகாலுக்கு உதவியது

"இல்லை... அது தன்னால் இயலாது. அவன் மனதில் வேறு ஒரு பெண் என்பதை அவன் வாயால் கேட்கும் சக்தி தனக்கில்லை" என எண்ணத்தை மாற்றினாள்

"பேசாமல் தான் இதை பார்த்ததே மறந்து இன்று போலவே இருந்து விட்டால் என்ன" என எண்ணினாள்

"ஆனால் காலம் முழுக்க இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டு என்ன வாழ்க்கை இது" என அவள் மனம் கசந்தது

"அனிதா தான் காதலி என்றால் அவளை மணம் செய்யாமல் தன்னை ஏன் மணந்தான். ஒரு வேளை அனிதாவுக்கு ஏதேனும்... " என மனம் பதற "அதற்கு தன்னை ஏன் பழி வாங்க வேண்டும்..." என நினைத்த நொடி அருணின் நினைவு வந்தது

"பாவி அவன் தான் அனிதாவை ஏதேனும் செய்து விட்டானோ. தன்னையே மிரட்டியவன் ஆயிற்றே. அவன் நாடகத்தை நம்பி இருவரையும் தான் இணைக்க முயன்றது சூர்யாவிற்கு தெரிந்திருக்குமோ. அதனால் தான் என்னை தண்டிக்கிராரோ?" என பலதையும் எண்ணி மனம் குழம்பினாள்

"எப்படி இருந்தாலும் அனிதாவிற்கு என்ன ஆனது என்பதை சூர்யா அறியாமல் கண்டுபிடிக்கவேண்டும். அதன் பின் தான் தன் வாழ்வை பற்றிய தீர்மானத்தை எடுக்க இயலும்" என முடிவுக்கு வந்தாள்

எந்த சூழ்நிலையிலும் சூர்யாவை விட்டு பிரிவதை அவள் மனம் ஏற்க மறுத்தது. அவன் தன்னை பழுதாய் வெறுத்த போதும் ஏன் மனம் அவனையே நாடுகிறது என சுய பச்சாதாபம் மேலிட அழுதாள்

எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ அழைப்பு மணி சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். அத்தை மாமா தான் வந்துவிட்டார்கள் என புரிந்தவள் அவசரமாய் கப்போர்டை சாத்தி சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு கீழே வந்தாள்

அதற்குள் அழைப்பு மணி பல முறை ஒலித்தது. கதவை திறந்தவள் அங்கு சூர்யாவை எதிர்பாராததால் திணறிப்போனாள்

"நீங்க... ஏன்?" என பதற

"ஏன்... என் வீட்டுக்கு வர்றதுக்கு உன்கிட்ட  பெர்மிசன் வாங்கனுமா" என கேலியாய் கேட்டான்

"இல்ல வெளிய போன அத்தை மாமா தான் வந்துட்டாங்கன்னு..." என தடுமாறியவளை யோசனையாய் ஏறிட்டான்

"ஏன் கண்ணு செவந்துருக்கு? யாரும் வீட்டுல இல்லைன்னு சுகமான தூக்கமோ... " என கேலி போல் கேட்க

"ஆமா... " என சமாளித்தாள்

"நல்ல கனவுல நான் தொந்தரவு பண்ணிட்டனோ" என ஏளனமாய் கேட்க

"இல்ல... " என என்ன பேசுவதென தெரியாமல் அவள் விழிக்க

"வழி விடு... " என அவளை இடித்து தள்ளாத குறையாய் உள்ளே வந்தவனின் கண்களில் முதலில் பட்டது கீழே எடுத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி தான்

என்ன இது என்பது போல் அவளை பார்க்க "ஓ... அம்மா பேசிட்டு இருந்தாங்க" என்றாள் அப்போது தான் நினைவு வந்தவள் போல்

விரைந்து சென்று பேசியை எடுத்து காதுக்கு கொடுத்தவன் எந்த சத்தமும் இல்லாமல் போக "சொல்ற பொய்ய கரெக்டா சொல்லு" என்றான் இறுகிய முகத்துடன்

"இல்லங்க... நெஜமாவே அம்மாதான் பேசினாங்க. நான்..." அவளை இடைமறித்தவன்

"ஏய்... கொஞ்சம் முன்னாடி தூங்கிட்டு இருந்தேன்ன... இப்ப அம்மா போன் பேசினாங்கன்னு கதை விடற... என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல..." என கர்ஜிக்க

"இல்ல... " என நிறுத்தினாள். தூங்கவில்லை என்றால் அழுததால் கண் சிவந்தது என்றோ அதற்கான காரணத்தையோ கூற இயலுமா என மௌனம் காத்தாள்

"என்ன? ஏன் நிறுத்திட்ட? உன் வேஷம் கலைஞ்சுடும்னா?" என ஆவேசமாய் நெருங்கியவன் அவள் கழுத்தை நெரிப்பது போல் பற்ற அவள் இருந்த மனநிலையில் துவண்டு போனாள்

"கொன்னுடுங்க... . இப்படி தினம் தினம் சாகரத விட ஒரேடியா போய்டறேன்" என அவள் கதற அவன் பிடி தளர்ந்தது

கிட்டத்தட்ட ஒரு மாதமாய் தனக்கு சரியாய் வாயாடி தன் கோபத்தை வெல்ல முயன்றவள் இன்று மொத்த தைரியமும் வடிய கதறியதை காண சகியாமல் வெளியேறினான் சூர்யா
___________________________________________

அதற்கு பின் சில நாட்கள் அமைதியாய் சென்றது. இருவரும் பேசுவது கூட குறைந்து போனது. எப்போதும் சூர்யா விலகி விலகி போனாலும் சுமேதா தான் வலிய வந்து வம்பு செய்வாள்

இப்போது ஏதோ யோசனையில் அவள் எப்போதும் அமைதியாய் இருந்தாள். அவள் மீது வெறுப்பும் கோபமும் இருந்த போதும் சூர்யாவிற்கு சுமேதாவின் அமைதி வேதனையை அளித்தது

அதற்கான காரணம் புரியாமல் அவளிடம் கேட்கவும் இயலாமல் தவித்தான். அவளே சொல்லட்டுமென மௌனமானான்

சுமேதாவோ அனிதாவை பற்றி அறிந்து கொள்ள முயன்றாள். அதன் முதல் கட்டமாய் அருணை தொடர்பு கொள்ள முயன்றாள். அந்த செல் நம்பர் உபயோகத்தில் இல்லை என அறிந்தாள்

கணேஷ் மூலம் அருணை கண்டுபிடித்தால் என்ன என தோன்ற கணேசின் எண்ணுக்கு அழைத்தாள். அழைப்பு சென்று கொண்டே இருந்ததே ஒழிய எடுக்கவில்லை

பொறுமை இழந்தவள் கணேஷின் வீட்டிற்கு தொடர்பு கொண்டாள்

"ஹலோ..." என கணேஷின் அம்மா குரல் கேட்க

"ஹலோ அத்தை நான் சுமேதா பேசறேன்"  என்றாள்

"அடடா சுமிகண்ணு..  நல்ல இருக்கியாமா? கணேஷ் எல்லா விசியமும் சொன்னான். மனசுக்கு கஷ்டமா போச்சு... இப்ப எல்லாம் சரிதானேம்மா?" என உண்மையான அன்பு வழியும் குரலில் கேட்க

"இப்ப எதுவும் பிரச்சனை இல்ல அத்த... நல்லா இருக்கேன்" என கூறும் போதே தன்னையும் அறியாமல் அவள் கண்களில் நீர் வழிந்தது

"அப்புறம்மா... உங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?"

"நல்லா இருக்காங்க அத்தை. கணேஷ் இருக்காரா அத்த?"

"இல்லமா, அவன் ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருக்கான். நீ செல்லுக்கு கூப்பிட்டு பாரேன்"

"செல்லுக்கு கூப்ட்டேன் அத்த, எடுக்கல... அதான் வீட்டு நம்பர்க்கு கூப்ட்டேன்"

"சில சமயம் வெளியூர் போனா போன் சரியா எடுக்காதுன்னுவான். வீட்டுக்கு கூப்ட்டானா பேச சொல்றேன் கண்ணு"

"சரிங்க அத்த ... கண்டிப்பா பேச சொல்லுங்க... ஒகே வெச்சுடறேன்" என பேசியை அணைத்து விட்டு திரும்பியவள் அங்கு சூர்யா கண்களில் கோபம் வழிய நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்தாள்

என்ன பேசுவதென புரியாமல் அவள் விழிக்க "சபாஷ்... நான் கூட உன்ன என்னமோன்னு நெனச்சேன்... " என ஏளனமாய் சிரிக்க

"ஐயோ... நீங்க என்னை தப்பாவே புரிஞ்சுக்கறீங்க சூர்யா....நான்..." என அவள் பேச முயல

"ஆமா... ஆமா... தப்பாத்தான் புரிஞ்சுட்டேன். கொஞ்ச நாளா நீ அமைதியா இருந்தத பாத்து கொஞ்சம் திருந்திட்டயோனு தப்பாத்தான் புரிஞ்சுட்டேன்"

"இல்லங்க... ப்ளீஸ்... "

"ஏய்... வாய மூடு... ஒண்ணுக்கு ரெண்டா ஆள் ரெடியா வெச்சுருக்க. அருண் இல்லேனா கணேஷ் கரெக்டா? நீ இவ்ளோ கேவலமா இருப்பேன்னு நான் நெனக்கல" என அவன்  தன் பெண்மையையே  அசிங்கபடுத்தி பேச அதற்கு மேல் பொறுக்க இயலாதவளாய்

"நிறுத்துங்க சூர்யா... என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு... ஆமா, நான் யார்கூட போனா உங்களுக்கு என்ன? அதை கேக்க நீங்க யாரு..." என கூறிய கணம் இடியாய் அவன் கை அவள் கன்னத்தில் இறங்கியது    

அதை எதிர்பாராத சுமேதா வலியில் கண்ணில் நீர் வழிய உறைந்தாள். அந்த கணம் சூர்யாவின் கண்களில் அவள் கண்டது வெறுப்பை  தவிர வேறில்லை என்பது அவளுக்கு தெளிவாய் புரிந்தது

மனதில் இத்தனை வெறுப்பை கொண்டிருப்பவன் என்றேனும் தன் மனதை புரிந்து கொள்வான் என நினைப்பது முட்டாள்தனம் என்பதை அந்த கணம் உணர்ந்தாள்

இனி தன் வாழ்வில் அவனுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை தீர்மானித்தாள்

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)

...

Monday, October 11, 2010

அதே கண்கள்... (பகுதி 17)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

"சூர்யா ப்ளீஸ்... நீங்க என்னை பத்தி தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க"

"உன்னை பத்தி ரெம்ப தெளிவா புரிஞ்சுட்டேன்...அதுவரைக்கும் போதும்"

"சூர்யா... அருண் விசயம் தெரிஞ்சு தானே இப்படி நடந்துக்கறீங்க... என் மேல எந்த தப்பும் இல்ல... ப்ளீஸ் நம்புங்க" என்றவளை இமைக்காமல் பார்த்தான்

அந்த பார்வையில் எதையும் புரிந்து கொள்ள இயலாமல் தவித்தாள் சுமேதா

"சூர்யா ப்ளீஸ் நம்புங்க என்மேல எந்த தப்புமில்ல. அருண் தான் என் பின்னால சுத்தினான்..."

"ஆமா நீ பெரிய ரதி. உன் பின்னாலே ஊரே தான் சுத்தி இருக்கும்" என்றான் கோபம் விலகாமல்

"ஐயோ... நான் எப்படி புரிய வெக்கறது உங்களுக்கு. வேணும்னா என்னோட கசின் கணேஷ்கிட்ட கேட்டு பாருங்க. அவருக்கு எல்லாம் தெரியும்"

"வேலிக்கி ஓனான் சாட்சி" என ஏளனமாய் சிரித்தான்

"ப்ளீஸ் சூர்யா. தப்பா புரிஞ்சுகிட்டு நம்ம வாழ்கையே நாசம் பண்ணிடாதீங்க ப்ளீஸ்"

"ஏய் இங்க பாரு... நம்ம வாழ்க்கைனு என்னையும் சேக்காத"

"அப்ப ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"

"உன்னோட சுய ரூபம் தெரியாத யாரோ ஒருத்தன் பாதிக்க படக்கூடாதுன்னு  தான்" சிறிதும் பிடிகொடுக்காமல் அவன் பேச

"சூர்யா  ப்ளீஸ். சத்தியமா என் மேல எந்த தப்புமில்ல நம்புங்க"

"நம்பறதா? உன்னையா? ஹும்... " என ஏளனமாய் ஒரு பார்வை பார்க்க அதை தாங்க முடியாமல் சுமேதாவின் கண்களில் நீர் துளிர்த்தது

அங்கு நிற்க பிடிக்காமல் விலகினான் சூர்யா. அவனை விலக விடாமல் கதவை அடைத்து நின்றாள் சுமேதா

"ஏய் வழி விடு "

"முடியாது... என் பக்க ஞாயத்த நீங்க புரிஞ்சுக்கற வரை  நான் விட போறதில்ல"

"ஏய் நிறுத்துடி... சும்மா வேஷம் போடாத"

"நான் என்ன வேஷம் போட்டேன்... அதை சொல்லுங்க"

"எல்லாமே வேஷம் தானே...தனியா சொல்ல என்ன இருக்கு? இப்ப பேசறது கூட வேஷம் தான்" என்றான் இரக்கமில்லாமல்

"உங்க மோட்டிவ் என்னை சித்ரவதை பண்றது தான்னா அதுக்கான காரணம் தெரிஞ்சுக்கற உரிமை எனக்கு இருக்கு. நீங்க இப்ப பேசறத பாத்தா அது அருண் பிரச்சனை இல்லைன்னு தோணுது" என்றவளை ஆச்சிர்யமாய் பார்த்தான்

"ரெம்ப புத்திசாலி தான், ஒத்துக்கறேன். அப்ப நீயே கண்டுபிடி... இல்ல இல்ல... உண்மைய ஒத்துக்கோ"

"மனசால கூட நான் யாருக்கும் எந்த துரோகமும் நினைச்சதில்ல...ப்ளீஸ்ங்க... தயவு செய்து சொல்லுங்க"

"சபாஷ்... நீ பேசாம சினிமால நடிக்க போகலாம். ஆஸ்கார் நிச்சியம்" என கேலி போல் கூற

"இங்க பாருங்க, தூக்கு தண்டனை கைதிக்கு கூட தான் எதுக்காக தண்டிக்கப்படறோம்னு தெரிஞ்சு தான் சாகறான். இது அதை விட கொடூரம்" என விசும்பியவளை கண நேரம் இமைக்காமல் பார்த்தான்

அவள் முகத்தில் தெரிந்த வேதனை தன்னை அசைப்பதை உணர்ந்தவனுக்கு அந்த உணர்வு கோபமாய் உருமாறியது

"இந்த நீலி கண்ணீர் எல்லாம் என்கிட்ட செல்லாது. இனி காலம் பூரா இந்த வேதனை தான் உனக்கு" என உரைத்தவனின் கண்களில் தெரிந்த கோபம் அவளை பலவீனமாக்க அந்த தருணத்தை பயன்படுத்தி அவளை கதவை விட்டு விலக்கி பால்கனிக்குள் சென்று வெளிப்பக்கம் தாளிட்டு கொண்டான் சூர்யா

அவனின் இந்த செய்கை அவளுக்கு மனதில் இருந்த நம்பிக்கையை முற்றிலும் குலைத்தது. ஏதோ தவறான புரிதல் பேசினால் சரியாகிவிடுமென சற்று முன் வரை நம்பிக்கையாய் இருந்தவளுக்கு மிக பெரிய ஏமாற்றமானது

எதுவும் வேண்டாம் என உதறிவிட்டு சென்று விட்டாலென்ன என ஒரு கணம் தோன்றியது. திருமணமே செய்து கொள்ளாமல் வாழும் பெண்கள் இல்லையா என தோன்றிய நேரம் வசந்தமாய் இருந்த அந்த மூன்று மாத காலம் கண் முன் வந்தது

திருமணம் முடிவாகி இவன் தான் உனக்கானவன் என மனதில் பதிந்து மனம் ஒருமித்து சந்தோசித்த அந்த மூன்று மாத அழகிய நினைவுகள் அவளை வெளியேற விடாமல் தடுத்தது

ஆனால் அது எல்லாம் கூட அவளை திருமணம் செய்ய தான் நடத்திய நாடகத்தின் ஒரு பகுதி என்கிறானே என சோர்ந்தாள்

இருந்த போதும் அந்த மூன்று மாத கால சந்திப்புகளில் அவன் கண்களில் தான் கண்டது நிச்சியம் உண்மையான நேசம் தான் என நம்பியது அவள் மனம். அப்படி இல்லை என்றாலும் தான் அவனை மனதில் வரித்தது நிஜம் தானே

அது நிஜமென்றால் அவனை விட்டு விலகுவது என்றாலும் கூட தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை அவனுக்கு உணர்த்திய பின் தான் விலக வேண்டும் என தீர்மானித்தாள் சுமேதா
__________________________________

மறுநாள் காலை எழுந்த சூர்யா நேற்று பேசிய பேச்சில் வீட்டை விட்டே சென்றிருப்பாளென  எண்ணியவாறே அறைக்குள் வந்தான்

அங்கு அவளை காணாமல் கீழே சென்று பார்க்கலாமா என தோன்றிய கணம் காபி ட்ரேயுடன் அறைக்குள் நுழைந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்

இயல்பிலேயே நல்ல நிறம், அழகிய பெரிய கண்கள், நீண்ட கூந்தல் என  பார்ப்பவரை இன்னொரு முறை பார்க்க தூண்டும் அழகு தான் சுமேதா

இன்று புதுமலர் போல் தலை குளித்து, ஈர கூந்தலை தளர பின்னி, பூச்சூடி, அவள் நிறத்தை எடுத்து காட்டும் பொன் மஞ்சள் நிற சேலையில் தேவதையாய் நின்றவளை இமைக்க மறந்து பார்த்தான்

அந்த பார்வையில் பழைய சூர்யாவை கண்டு கொண்ட சுமேதா புன்னகை முகத்துடன் "காபி" என அவன் முன் கோப்பையை நீட்ட அப்போது தான் கனவில் இருந்து விழித்தவன் போல் தன் உணர்வை மறைக்க முயன்று முகத்தில் அலட்சியத்தை கொண்டு வர முயன்றான்

சட்டென மாறிய அவனது முகபாவம் அவளுக்கு வேதனையை தர "காபி" என்றாள் மீண்டும் பார்வை தாழ்த்தியபடி

அவளுடன் கோப்பையை பெற்று கொள்ளாமல் விலகியவனை "கோபம் என்மேல தான. காபி உங்க அம்மா போட்டது தான்" என்றாள்

நேற்று போல் அவள் குரலில் நடுக்கமோ வேதனையோ இல்லாமல் ஏதோ தீர்மானித்தவளை போல் இருந்ததை கண்டுகொண்டான் சூர்யா

அவளின் தோற்றத்தில் ஒரு கணம் மயங்கி நின்ற தன் மீதே அவனுக்கு கோபம் பொங்கியது. அது அவள் மீதும் பாய்ந்தது

அவள் பக்கம் திரும்பியவன் "என்ன? அழுது சாதிக்க முடியாதத அலங்காரம் பண்ணி மயக்கி சாதிக்கலாம்னு முடிவு பண்ணிட்டயா" என கேலியும் கோபமும் கலந்த அவன் வார்த்தையில் அவள் கண்கள் நிறைந்தது

ஒரு கணம், ஒரே கணம் தான். பின் சுதாரித்து கொண்டாள்

"அவ்ளோ கேவலமா எங்க அம்மா என்னை வளர்க்கலை" என்றாள் பட்டென

அதை எதிர்பாராத சூர்யா தன் கோபத்தை காட்ட எதுவும் பேசத் தெரியாமல் அவள் கையில் இருந்த காபி கோப்பையை பறித்து தரையில் வீசினான்

"என்மேல இருக்கற கோபத்த அது மேல ஏன் காட்டுறீங்க?"

"ஏன்னா... நீ எனக்கு அதை விட அற்பமானவ" என அவளை வேதனை படுத்தவென்றே பேசினான்

அதை புரிந்து கொண்டவள் தன் உணர்வை வெளிக்காட்டாது சிதறிய கோப்பையை எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்
__________________________________

அன்று மாலை மகளை பார்க்கவென சுமேதாவின் பெற்றோர் மற்றும் அவள் அண்ணன் எல்லோரும் வந்திருக்க சுமேதா மிகவும் மகிழ்வாய் இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ள முயன்றாள்

அதிசயமாய் அன்று சூர்யாவும் நேரத்திலேயே அலுவலகம் விட்டு வந்து விட உண்மையிலேயே அவள் மனம் மிகவும் சந்தோசமானது

"என்ன சுமி? இங்க வந்து ரெண்டே நாளுல ரெண்டு கிலோ வெயிட் ஏறிட்ட போல இருக்கே. என்ன சூர்யா? போற போக்க பாத்தா வீட்டு கதவெல்லாம் பெரிசாக்கணும் போல இருக்கே" என அவள் அண்ணன் சுரேஷ் கேலி பேச

"போண்ணா நீ... பாரும்மா இந்த அண்ணன" என அவள் அன்னை தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டாள். எல்லோரும் அதை ரசித்து சிரித்தனர்

அப்போது அவளை கண்ட சூர்யா, பெற்றவள் அருகில் சிறு பிள்ளை போல் நிற்கும் இவளா தன் கோபத்திற்கு ஈடு கொடுத்து போராடுபவள் என நம்ப இயலாமல் பார்த்தான்

அவள் சிரித்த முகத்தில் ஒரு கணம் தன்னை மறந்து மனம் நெகிழ நோக்க அதே நேரம் சுமேதாவும் அவனை கண்ணோடு காண அவன் முகம் பாறையாய் இறுகியது

எதற்கு இநத கண்ணாமூச்சி ஆட்டமென புரியாமல் குழம்பினாள் சுமேதா

இப்படியே கோபமும் தாபமுமாய் ஒரு மாதம் கழிந்தது. தன் ஒவ்வொரு செய்கையிலும் அவளை தான் வெறுப்பதை பதிவு செய்ய முயன்றான் சூர்யா

அதை தன் அன்பான பார்வையால் / அணுகுமுறையால் தோற்கடித்தாள் சுமேதா. அது சூர்யாவின் கோபத்தை மேலும் அதிகமாக்கியது
_________________________________

அன்று பெரியவர்கள் இருவரும் ஏதோ நண்பர் வீட்டிற்கு சென்றிருக்க சூர்யாவும் அலுவலகம் சென்று விட ஏதோ புத்தகத்தை வைத்து கொண்டு நேரத்தை கொல்ல முயன்று கொண்டு இருந்தாள் சுமேதா

அதே நேரம் டெலிபோன் மணி அடித்தது

"ஹலோ"

"சுமி..." என பரிச்சயமான குரல் கேட்க

"சொல்லுமா... அப்பா அண்ணா எல்லாரும் ஆபீஸ் போயாச்சா?" என பெற்றவளின் குரல் கேட்ட மகிழ்ச்சி தெரிந்தது அவள் உற்சாகமான குரலில்
 
"ரெண்டு பெரும் கெளம்பியாச்சு சுமி. மாபிள்ள ஆபீஸ் போய்ட்டாரா?"

"ம்... கெளம்பிட்டாருமா"

"அத்த, மாமா?"

"யாரோ மாமாவோட பிரெண்ட்க்கு ஒடம்பு சரி இல்லைன்னு பாக்க போனாங்க அம்மா"

"சுமி... இப்படி இவங்க ரெண்டு பெரும் கிளம்பினப்புறம் தனியா இருக்கறப்ப தான் தோணும், இன்னும் கொஞ்ச நாள் உன்னை நம்ம வீட்டுலையே கல்யாணம் பண்ணாம கூட வெச்சுட்டு இருந்துருக்கணும்னு. படிச்சு முடிச்சதும் அனுப்பியாச்சு" என பெற்றவள் ஆதங்கமாய் கூற

"அப்படி செஞ்சிருந்தா என் வாழ்க்கை கூட நல்லா இருந்துருக்கும்மா" என வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கி கொண்டாள்

மகள் பதில் எதுவும் பேசாமல் போக அவள் மனம் வேதனையுற பேசி விட்டோமோ என பதறிய அவள் அன்னை  "சுமிம்மா... சும்மா மனசுக்கு பட்டத சொன்னேன்டா... வேற ஒண்ணுமில்ல...ஆனா அப்படி நெனச்சுருந்தா இப்படி ஒரு தங்கமான மாப்பிள்ளைய தவற விட்டுருப்போமே" என மகளின் மனதிற்கு இதமாய் பேச முயன்றாள்

கண்களில் துளிர்த்த நீரை சுண்டியவள் "ஆமாம்மா" என குரலில் மகிழ்ச்சியை காட்ட முயன்றாள்

சற்று நேரம் ஏதேதோ பேசினார்கள் அன்னையும் மகளும்

திடீரென நினைவு வந்தது போல் "சுமி... சொல்ல மறந்துட்டனே. உன் பிரெண்ட் திவ்யா போன் பண்ணி இருந்தா. அவளுக்கு கல்யாணமாம் இன்னும் ரெண்டு மாசத்துல. உன்கிட்ட பேசணும்னு நம்பர் கூட வாங்கினா. பேசினாளா?" என கேட்க

"இல்லையேம்மா... ச்சே... எனக்கு இப்பவே அவகிட்ட பேசணும் போல இருக்கு" என்றாள் உற்ற தோழியின் நினைவில்

"பேசேன் சுமி" எனவும்

"என்கிட்ட அவ நம்பர் இல்லமா இப்போ" என்றாள் வருத்ததுடன்

"இரு இரு... அவ ஏதோ செல்போன் நம்பர் குடுத்தா. இங்க தானே வெச்சேன். இதோ கிடைச்சுடுச்சு, எழுதிக்கரயா" எனவும்

"ஒரு நிமிஷம் இரும்மா... பேப்பர் பேனா ஒண்ணும் பக்கத்துல இல்ல. எடுத்துட்டு வரேன்" என தொலைபேசியை  கீழே வைத்து விட்டு சென்றாள்

வரவேற்பறையில் எங்கும் பேனா சிக்காமல் போக மேலே தங்கள் அறைக்கு சென்றாள்

சூர்யாவின் கப்போர்டில் இருக்குமோ என எண்ணியவள்  "என் பொருட்களை ஏன் கலைக்கிறாய்" என கோபம் கொள்வானோ என ஒரு கணம் தயங்கியவள், இல்லை என்றால் மட்டுமென்ன கொஞ்சவா செய்கிறான் என அவன் கப்போர்டை திறக்க முயல அது பூட்டி இருந்ததை கண்டு ஆச்சிர்யமானாள்

பூட்டி வைக்கும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறதென பார்க்கும் ஆர்வம் தலை தூக்க, ஒரு வழியாய் டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த சாவி கொத்தில் இதற்கான சாவியை கண்டுபிடித்து திறந்தாள்

அதில் சிறிய டிராயர் போன்ற அமைப்பு  இருந்ததை பார்த்து அதில் பேனா போன்ற பொருட்கள் இருக்குமென யூகித்து அதை திறந்தவள், அதிர்ச்சியில் மயங்கி விடாமல் இருக்க அதன் கதவை பற்றிக்கொண்டாள்...

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)

....