Thursday, May 26, 2011

நட்பு... (சிறுகதை) - திண்ணை இணைய இதழில்...முன் குறிப்பு:
எனது இந்த சிறுகதை திண்ணை இணைய இதழில் வெளியானது...அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி... திண்ணை சுட்டி இங்கே
நன்றி,
அப்பாவி 

--------------

"கண்டிப்பா வந்துடறேன்...எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே... வெச்சுடறேன்"

"என்ன திவ்யா... யார் போன்ல?" என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த்

"என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா... அவ பொண்ணுக்கு முதல் பர்த்டே அடுத்த வாரம் வருதாம்... அதுக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காளாம்... என்னையெல்லாம் இன்வைட் பண்ண வேண்டியதே இல்ல வந்துடறேன்னு சொல்லிட்டு இருந்தேன்" என உற்சாகமாய் பேசிய திவ்யாவை யோசனையாய் பார்த்தான் ஆனந்த்

அவன் பார்வையை புரிந்து கொண்டவள் போல் "என்ன யோசனை இப்போ அய்யாவுக்கு?" என்றாள் கேலியாய்

ஒரு கணம் தயக்கமாய் யோசித்தவன் "நான் கொஞ்ச நாளாவே இதை பத்தி உன்கிட்ட பேசணும்னு இருந்தேன்... நீ ரெம்ப சென்சிடிவ்... உன்னை ஹர்ட் பண்ணிட கூடாதுன்னு தான் சொல்லல... திவ்விம்மா, அந்த மஞ்சுகிட்ட கொஞ்சம் அளவா வெச்சுக்கோ" என்றான்

அவன் எதிர்பாத்தது போலவே திவ்யாவின் முகம் வாடியது. இதற்காகத்தான் இதை சொல்வதை தவிர்த்து வந்தான்

"ஏன் இப்படி சொல்றீங்க? அவ எனக்கு ஸ்கூல் டேஸ்ல இருந்தே பிரெண்ட் தெரியுமா? உங்களுக்கு அவளை நம்ம கல்யாணம் ஆன இந்த ஆறு மாசமாத்தான் தெரியும்... கொஞ்ச நாள் பழக்கத்துல நீங்க இப்படி சொல்றது சரியில்லைங்க? நான் இல்லாம ஒரு விஷயம் செய்ய மாட்டா அவ. இப்ப கூட பார்ட்டிக்கு எல்லாரும் சாயங்காலம் தான் வருவாங்க... ஆனா நீ காலைலேயே வந்துடனும்னு சொன்னா தெரியுமா" என்றாள் ஆதங்கத்துடன்

"நீ சொல்றது சரி தான் திவ்யா... உனக்கு ரெம்ப வருசமா அவளை தெரியும் ஒத்துக்கறேன்... ஆனா சில சமயம் அவ உன்னை யூஸ் பண்ணிக்கராளோனு தோணுதுடா... உன்கிட்ட தனியா பேசறப்ப நெருக்கமா பேசரவ மத்தவங்க முன்னாடி அந்த நெருக்கத்த காட்டிக்க விரும்பாத மாதிரி எனக்கு படுது..."

அதை கேட்டதும் கோபமுற்ற திவ்யா "இங்க பாருங்க... அவ ஒண்ணும் அப்படிபட்டவ இல்ல... நீங்களா எதையோ கற்பனை பண்ணிட்டு பேசாதீங்க..." என்றவள் அதற்கு மேல் பேச விருப்பமில்லாதவள் போல் அறைக்குள் சென்று விட்டாள்

இயல்பில் மென்மையான மனமும் அன்பாய் பேசும் குணமும் கொண்ட தன் மனைவி அப்படி கோபமாய் பேசியதை கேட்டதும், ஒருவேளை தன் பார்வையில் தான் தவறோ என்று கூட ஆனந்திற்கு ஒரு கணம் தோன்றியது
_______________________________________

அந்த பார்ட்டி நடக்கும் நாளும் வந்தது. அன்று சனிக்கிழமை. ஆனந்த் அலுவலகம் கிளம்பி சென்றதும் திவ்யா மஞ்சுவின் வீட்டிற்கு கிளம்பினாள். ஆனந்த் அலுவலகம் முடிந்து மாலை பார்ட்டி நேரத்திற்கு வருகிறேன் என கூறி இருந்தான்

உண்மையில் அவனுக்கு அங்கு செல்ல பெரிதாய் விருப்பம் இருக்கவில்லை. ஆனால் திவ்யாவுக்காக தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தாமல் இருந்தான்

திவ்யாவை கண்டதும் ஓடி வந்து அன்பாய் கட்டிகொண்டாள் மஞ்சு. அப்படியே உருகிப் போனாள் திவ்யா. "இவளையா அப்படி சொன்னார் ஆனந்த்" என கணவன் மீது கோபம் வந்தது ஒரு கணம்

இருவரும் சேர்ந்து வீட்டை ஒழுங்கு செய்வதிலும் பிள்ளையை தயார் செய்வதிலும் நேரம் போனது. உணவு வகைகள் எல்லாம் தெரிந்தவர் கடை ஒன்றில் ஆர்டர் செய்து இருந்தனர். எளிய சில பதார்த்தங்கள் மட்டும் வீட்டில் செய்தனர்

மாலை நெருங்க, விருந்தினர் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர். எல்லாருக்கும் காபி, டீ, ஜூஸ் எது வேண்டுமென கேட்டு, கொண்டு வந்து கொடுப்பதில் திவ்யா நிற்க நேரமில்லாமல் சுற்றி கொண்டிருந்தாள்

மஞ்சு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்பதில் மும்மரமாய் இருந்தாள். அதில் ஒருத்தி, "என்ன மஞ்சு? உன் பிரெண்ட் திவ்யா நேரத்துலையே வந்துட்டா போல இருக்கே" என கேட்க

"இல்ல, இப்பதான்... நீ வர்றதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்தா" என்றாள் மஞ்சு. அந்த பக்கம் எதோசையாய் வந்த திவ்யாவின் காதில் அந்த சம்பாஷனை கேட்டு விட, ஏன் இப்படி மஞ்சு அவசியமின்றி பொய் சொல்கிறாள் என புரியாமல் குழப்பமாய் பார்த்தாள். வேறு ஒரு விருந்தினரிடம் பேசிகொண்டிருந்த மஞ்சு அதை கவனிக்கவில்லை

காலை முதல் அருகே இருந்த பழக்கத்தில் மஞ்சுவின் பிள்ளை வேறு ஒருவரிடமிருந்து திவ்யாவிடம் தாவ, எங்கிருந்தோ வந்த மஞ்சு அவசரமாய் பிள்ளையை அவளிடமிருந்து பறிப்பது போல் வாங்கினாள்

அவளது செய்கையை வித்தியாசமாய் பார்த்த ஒரு விருந்தினரிடம் "அது... அதிகம் பழக்கம் இல்லாதவங்ககிட்ட இருந்தா அழ ஆரம்பிச்சுடுவா... கேக் கட் பண்ற நேரத்துல கஷ்டம் ஆய்டும் பாருங்க" என அதற்கு விளக்கம் வேறு கூறினாள் மஞ்சு

அதன் பின் ஒரு ஒரு செய்கையிலும், மற்றவர் முன் தன்னை ஏதோ வேண்டாத விருந்தாளியை போல் மஞ்சு நடத்தியதை திவ்யாவால் உணர முடிந்தது

இதற்கு முன்னும் கூட பல சமயங்களில் மஞ்சு இப்படி தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் நட்பு என்ற திரையின் பின் நின்று கொண்டு அதை கவனிக்க தவறி விட்டேன் என நினைத்தாள் திவ்யா

இப்போது தன் கணவன் அதை சுட்டி காட்டியதால் அந்த கோணத்தில் பார்த்த பின் தான் மஞ்சுவின் உண்மை சொரூபம் புரிகிறது என்பதை உணர்ந்தாள் திவ்யா

உற்ற தோழி என நினைத்தவளின் இந்த செய்கை தந்த வேதனையில் கண் நிறைய, வந்திருந்த கூட்டத்தில் கணவனை தேடியது அவள் கண்கள். அவனை காணாமல் மனம் வாடியது

இப்போது கிளம்பினால், "இன்னும் கேக் கூட வெட்டல ஏன் கிளம்பற?"என கேட்கும் மற்றவர்களின் கேள்விக்கு பதில் கூற வேண்டி இருக்கும் என நினைத்தவளாய், நேரத்தை கொல்ல வழி தேடி கொண்டிருந்தாள்

மெழுகுவர்த்தி அணைத்து கேக் வெட்டி ஹாப்பி பர்த்டே பாடி, பரிசுகள் எல்லாம் கொடுத்து முடிந்ததும் விருந்து தொடங்கியது. பப்பே முறையில் உணவு மேஜைகளை ஹோட்டல் சிப்பந்திகள் ஒழுங்குற அமைத்து இருந்தனர்

வயதான பெண்மணி ஒருவர் "கொஞ்சம் தண்ணி குடேம்மா" என திவ்யாவிடம் கேட்க, அது தான் சாக்கென அந்த இடத்தை விட்டு அகன்றாள் திவ்யா

நாலடி வைத்தவள், "வயதானவர் ஒரு வேளை மருந்து ஏதும் சாப்பிட வெந்நீர் கேட்டு இருப்பாரோ... எதுக்கும் கேட்டுடலாம்" என அந்த நேரத்திலும் தனக்கே உரிய மென்மை மனதுடன் நினைத்தவள் மீண்டும் அந்த இடத்திற்கு செல்ல

"உங்க பெரியம்மா தண்ணி கேட்டாங்களே... யாரு அந்த பொண்ணு... நல்லா ஓடி ஆடி வேலை செய்யுதேன்னு கேட்டேன்" என ஒருவர் மஞ்சுவிடம் கேட்க

அவர்கள் பேசும் போது இடையில் செல்வது நாகரீகம் அல்ல என நினைத்தவளாய் சற்று ஒதுங்கி நின்ற திவ்யா, மஞ்சு சொன்ன பதிலில் நிலை குலைந்து போனாள்

"அது... சும்மா தெரிஞ்ச பொண்ணு... பாவம் பெரிய வசதி இல்ல... இப்படி விசேஷ சமயத்துல வந்து ஏதோ கூட மாட செய்யும்...ஏதோ என்னால ஆனத குடுப்பேன் சித்தி" என மஞ்சு ஏதோ பெரிய பரோபகாரி போல் கூற, திவ்யாவிற்கு இனி ஒரு கணமும் அங்கு இருக்க கூடாதென தோன்றியது

உள்ளறையில் சென்று தன்னை சற்று நிதானப்படுத்தி கொண்டவள், வெளியேற முன் வாசலுக்கு செல்லவும், அங்கு வந்த மஞ்சு தன் பிள்ளையை திவ்யாவின் கையில் திணித்தவள், ஒரு புன்னகையுடன் "அப்பப்பா என்ன ரகளை பாரேன் இவ... கொஞ்ச நேரம் உன்கிட்ட இருக்கட்டும் திவ்யா..." என்றாள்

ஒரு கணம் எதுவும் பேசாமல் மஞ்சுவை வெறித்தவள் "இப்ப உன் பொண்ணுக்கு தான் பழக்கமானவளா ஆய்ட்டேனா?" என்றாள் திவ்யா பட்டென்று

இதை எதிர்பார்க்காத மஞ்சு "இல்ல திவ்யா... நான்"

"ஸ்டாப் இட்... இப்பவும் கத்தி பேசி உன் சொந்தங்க முன்னாடி என்னால உன் மானத்த வாங்க முடியும்... அப்புறம் உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லாம போய்டும்னு பாக்கறேன்... ச்சே... நீயெல்லாம் ஒரு... " என கேவலமான ஒரு பார்வையை அவள் மேல் வீசியவள் "இனி எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... குட் பை..." என வெளியேறினாள் திவ்யா
_______________________________________

வீட்டிற்கு வந்து வெகுநேரமாகியும் திவ்யாவின் மனம் சமாதானமாகவில்லை. அவளை எப்படி எல்லாம் நினைத்திருந்தேன், அவளுக்காக தன் மேல் உயிரையே வைத்திருக்கும் தன் கணவனிடம் கோபமாய் பேசினேனே என்றெல்லாம் வேதனையில் உழன்றாள்

சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க, போய் திறந்தவள், தன் கணவனை கண்டதும் தன் வேதனையை மறைக்க முகம் திருப்பினாள்

அதை அவளின் கோபம் என நினைத்து கொண்ட ஆனந்த் "சாரி திவ்விம்மா... கிளம்பற நேரத்துல ஒரு முக்கியமான வேலை... அதான் மஞ்சு வீட்டுக்கு வர முடியல... " என மன்னிப்பு கோரும் குரலில் அவன் கேட்க, அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியாமல் அழத்தொடங்கினாள்

அதை கண்டதும் பதறிய ஆனந்த் "ஏய் திவ்யா ப்ளீஸ் சாரிடா... நான்..." என்றவனை பார்த்தவள் "நான் தான் சாரி சொல்லணும்ப்பா... சாரி சாரி சாரி" என அழுகையினூடே கூறியவளை புரியாமல் பார்த்தவன், எதுவும் கேட்க தோன்றாமல் அவளை சேர்த்து அணைத்து சமாதானம் செய்ய முயன்றான்

சற்று நேரம் கழித்து, அழுததில் மனம் சற்று அமைதியுற, நடந்ததை தன் கணவனிடம் கூறினாள் திவ்யா. எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டவன் "விடுடா... இப்பவாச்சும் அவளோட இன்னொரு முகத்தை தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கிடைச்சதேனு சந்தோசப்படு" என்றான்

"நான் அப்பவே சொன்னனே" என குத்தி கட்டாமல் அவன் சமாதானமாய் பேசியது அவளின் குற்ற உணர்வை மேலும் தூண்டியது

"சாரிங்க... நீங்க எனக்காக சொல்றீங்கன்னு கூட புரிஞ்சுக்காம, உங்ககிட்ட கூட அன்னைக்கி கோபமா பேசிட்டேன்..." என்றவளின் குரலில் இருந்த வருத்தத்தை காண சகியாதவன் போல்

"என்கிட்ட கோபமா பேசினதுக்கு பனிஷ்மன்ட் குடுத்துடறேன்...அப்ப சரியா போய்டும் தானே" என கேலியான குரலில் வேண்டுமென்றே பேச்சை மாற்றினான்

அவன் எதிர்பார்த்தது போலவே, அவன் கேலி அவள் முகத்தில் புன்னகை பரவச்செய்ய "என்ன பனிஷ்மன்ட் குடுத்தாலும் ஒகே" என அவன் மார்பில் முகம் சாய்த்தாள்

"இதான் பனிஷ்மென்ட்... காலைல வரைக்கும் இப்படியே இருக்கணும்" என ஆனந்த் சிரிக்க, "காலைல வரைக்கும் மட்டும் தானா?" என திவ்யா பாவமாய் கேட்க, சத்தமாய் சிரித்தான் ஆனந்த்

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

(முற்றும்)

Monday, May 23, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 20)இந்த பகுதியின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்


சிறிது நேரம் அப்படியே இருந்தவள் சற்று மனம் சமாதானமானதும் ஸ்டீவை விட்டு விலகினாள் மீரா

"ஸ்டீவ்...இதெல்லாம் செட்டில் ஆகற வரைக்கும் நம்ம விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் ப்ளீஸ்" என கெஞ்சல் பார்வை பார்த்தாள்

அதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்றபோதும், அவள் இருக்கும் மனநிலையில், அவளை வருத்த மனமின்றி "Okay.... our little secret" என முறுவலித்தான்

"ஸ்டீவ்,எனக்கும் ரெண்டு மாசம் உன்னை பாக்காம இருக்கறது ஈஸி இல்ல... ஆனா, வேற வழி இல்ல இப்போ" எனவும், இயலாமையில் முகம் வாடியவளை தன் புறம் திருப்பியவன், அவள் கையோடு கை கோர்த்தான்

நிலைமையை புரிந்து கொண்டவனாய், மேலும் அவள் மனதை மாற்றும் முயற்சியில் அவளை அழ வைக்க மனமற்றவனாய் "ஊருக்கு போனாலும் டெய்லி மினிமம் டென் டைம்ஸ் என்கிட்டே பேசணும்... டீல்?" என கேட்க

"டீல்..." என சிரிக்க முயன்றாள்

அதன் பின் சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.சில நேரங்களில் பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனம் பல விசயங்களை பேசாமல் பேசும். இப்போது அப்படித்தான் தோன்றியது இருவருக்கும்

இருவரும் பிரிவை எண்ணி அவரவர் மனதில் தோன்றிய உணர்வுகளை சொல்லாமல் சொல்லிக்கொண்ட அந்த சில நிமிடங்கள் அவர்களின் காதல் பெட்டகத்தில் சேமிக்க வேண்டிய நிமிடங்களில் ஒன்றானது

அந்த இருஜோடி விழிகள் இதையும் பார்த்து கொண்டு தான் இருந்தது. காண்பது கனவாய் இருந்தால் நன்றாய் இருக்குமே என மன்றாடி கொண்டிருந்தது மனதுள்

"இந்த டென்ஷன்ல நேத்து சரியா தூங்கல ஸ்டீவ்... ரெம்ப டயர்டா இருக்கு... கிளம்பலாமா?" என மீரா கேட்க

"நைட்டே உனக்கு தெரியுமா? எனக்கு போன் பண்ணி இருக்கலாமே மீரா... தனியா டென்ஷன் பட்டுட்டு இருந்தியா?"

"ம்... நீயாச்சும் நிம்மதியா தூங்கட்டும்னு தான் சொல்லல"

"Okay, lets go" என்றவன் "Wait wait, did you eat anything?" என கேட்க

"எனக்கு பசியே இல்ல ஸ்டீவ்... I just want to go lie down" எனவும்

"சாப்பிடாம தூங்கறது ரெம்ப கெட்ட பழக்கம். எதாச்சும் சாப்டுட்டு போலாம் ஒகே" என்றவன் அருகில் இருந்த Sushi (Japanese) உணவகத்துக்கு அழைத்து சென்றான்

மீரா ஸ்டீவிர்க்காக ஏதோ உண்ண வேண்டுமே என உண்டாள். "சாப்பாட்டை ரசிச்சு சாப்பிட்டு பழகு மீரா... அப்போ தான் ஒழுங்கா சாப்பிட முடியும்... சும்மா சாப்பிடணும்னு சாப்ட்டா nutrients கூட ஒடம்புல சேராது" என ஸ்டீவ் கூற, மீரா சிரித்தாள்

சற்று முன் இருந்த மனநிலை மாறி அவள் சிரித்தது மனதிற்கு இதமாய் இருந்த போதும் வேண்டுமென்றே பொய் கோபமாய் "ஏய்... என்ன சிரிப்பு?" என அதட்டினான்

"இல்ல... எங்க ஊர்ல தாத்தா பாட்டி அட்வைஸ் பண்ற மாதிரி நீ பண்றனு தோணுச்சு... அதான் சிரிச்சேன்" என்றவளை செல்லமாய் கன்னத்தில் அடித்தவன், இன்னும் அதிகமாய் சிரித்தவளை எதிர்பாராத நொடியில் முத்தமிட்டான்

சட்டென விலகியவள் "ஏய்..." என ஒற்றை விரல் காட்டி அவனை மிரட்ட, அந்த காட்சியை / பாவனையை தன் மனதில் படம் பிடித்து வைத்து கொள்ள முனைபவன் போல் இமைக்காமல் பார்த்தான்

இவளை விட்டு இரண்டு நிமிடம் கண்ணை எடுக்கவும் மனம் வரவில்லையே, இரண்டு மாதம் என்ன செய்ய போகிறேன் என நினைத்தவன், தன்னையும் அறியாமல் அதை வாய் விட்டு கூறி விட்டான் "I'm going to miss you more than I thought baby" என்றான்

சட்டென மீரா முகம் வாட "Sorry... lets go" என்றவன், உணவகத்தை விட்டு வெளியே வந்தான்

அவனோடு பேச பேச இன்னும் பலவீனமாவது போல் அவளுக்கு தோன்ற "நீ Opposite Directionல போகனுமில்ல... நீ கிளம்பு ஸ்டீவ்... நான் போய்க்கறேன்" என்றவள் கூற

"I could use a walk Meera... I missed gym today" என்றான் சும்மாவேனும் அவளுடன் நடக்கும் ஆசையில்

"I don't think you miss gym at all" என அவள் சந்தேக பார்வை பார்க்க, "Okay... I lied... I just want to walk with you" என சிரித்தான்

"இந்த மாதிரி இன்னும் எவ்ளோ பொய் சொல்லி இருக்க ஸ்டீவ்?" என பாதி விளையாட்டும் பாதி உண்மையுமாய் கேட்டாள்

அவள் கேட்ட விதம் ஏதோ பழைய நினைவை தூண்ட,ஒரு கணம் அதிர்ந்தவன், பின் சுதாரித்து "hmm... actually 5 no 10 no no may be 20... you know what? I didn't count Meera" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

இப்படியே சிரிப்பும் முறைப்புமாய் நேரம் கழிய, மீராவுடன் அவள் இடம் வரை நடந்தவன், மனமின்றி தன் வீடு நோக்கி நடந்தான் ஸ்டீவ்

தனியே நடந்த போதில் "இந்த மாதிரி இன்னும் எவ்ளோ பொய் சொல்லி இருக்க ஸ்டீவ்" என மீரா கேட்டதே மனதில் நிழலாடி கொண்டிருந்தது... தன் வாழ்வில் சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை அவள் இப்படி கேட்ட போது கூறி இருக்கலாமோ என தோன்றியது

ஆனால், அது சிறுபிள்ளைதனமான ஒரு செயல், தானே மறந்து விட்ட ஒரு பைத்தியக்காரத்தனம், அதை சொல்ல வேண்டிய அவசியமென்ன என தோன்றியது

அவளிடம் எதையும் மறைக்கவேண்டுமென அவன் நினைக்கவில்லை. ஆனால் அவள் மனதில் சிறு சலனம் வந்தாலும் அதன் காரணமாய் தன் மீது அவள் கொண்ட அன்பின் அளவு ஒரு வீதம் குறைந்தாலும் தன்னால் அதை ஏற்று கொள்ள இயலாதென நினைத்தான்

அதோடு, அவர்கள் இருவரின் வாழ்வில் அந்த சம்பவத்தின் எந்த பாதிப்பும் இனி எப்போதும் வருவதற்கு வாய்ப்பில்லை எனும் போதும், அவசியமின்றி அதை கூறி அவள் மனதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதே நல்லதென்ற முடிவுக்கு வந்தான் ஸ்டீவ்

ஆனால், பின்னொரு நாளில் அது ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்க போவதை பாவம் அவன் அறிந்திருக்கவில்லை

********************************************************

அடுத்த நாள் சதீஷ் வகுப்பிற்கு வராமல் போக, அழைத்து கேட்கலாம் என முதலில் நினைத்த மீரா, ப்ராஜெக்ட் பற்றி ஊரில் முதலில் சொன்ன கோபம் மேலெழும்ப, அவனோடு பேசும் எண்ணத்தை கை விட்டாள்

"எங்கேனும் ஊர் சுத்த போய் இருப்பான், நாளை வந்து ஏதேனும் கதை அளப்பான்" என நினைத்தவள் அதோடு அந்த விசயத்தை மறந்தும் போனாள்

மறுநாளும் சதீஷ் வராமல் போக, உடல் நிலை ஏதும் சரி இல்லையோ என தோன்றியதுமே, அவன் மேல் இருந்த கோபம் காணாமல் போனது. உடனே அவன் எண்ணுக்கு அழைத்தாள்

மணி அடித்து கொண்டே இருந்ததே ஒழிய எடுக்கப்படவில்லை. மறுமுறை அழைத்தபோது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. மீண்டும் சில முறை முயன்றவள் என்ன செய்வதென புரியாமல் யோசித்து கொண்டிருக்க, அவனே அழைத்தான்

"சதீஷ்...நான் மீரா பேசறேன்" எனவும்

"எதுக்கு கூப்ட்ட?" என்றவனின் குரலில் இருந்து உடல் நிலை சரியில்லையா என அறிந்துகொள்ள முடியாதவளாய்

"என்னாச்சு? உடம்புக்கு சரி இல்லையா? ஏன் வர்ல?"

"கொஞ்சம் வேலை இருந்தது... இதை கேக்கதான் கூப்ட்டேன்னா நான் வெக்கறேன்... எனக்கு வேலை இருக்கு பை" என்றான்

"அப்படி என்ன வேலை க்ளாஸ் கட் பண்ணிட்டு?" என அவள் குரல் கோபமாய் ஒலிக்க

"எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல" என்றான் விட்டேற்றியாய்

அந்நியமாய் அவன் பேசிய விதம் மனதை வருத்த "ஏன் இப்படி யாரோகிட்ட பேசற மாதிரி பேசற சதீஷ்" விட்டால் அழுது விடுவாள் போல இருந்தது அவள் குரல்

அது அவனையும் வருத்தியது போல ஒரு கணம் மௌனமாய் இருந்தவன் "கொஞ்சம் பிஸியா இருக்கேன்... பை" என அழைப்பை துண்டித்தான்

என்ன காரணமென புரியாமல் குழப்பமாய் நெற்றியை கையில் தாங்கி அமர்ந்திருந்தவளை சற்று தூரத்தில் வரும் போதே பார்த்த ஸ்டீவ், விரைந்து அருகில் வந்து "என்னாச்சு மீரா?" என்றான்

சதீசுக்கும் ஸ்டீவுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை மேலும் பெரிது படுத்தவேண்டாமென நினைத்தவள் "அது... ஒண்ணுல்ல ஸ்டீவ்... கொஞ்சம் தலைவலியா இருக்கு" என்றாள்

எதையோ மறைக்கிறாள் என்பதை அவள் முக மாற்றத்தில் இருந்தே அறிந்து கொண்டவன், அவசியமின்றி மீரா அப்படி செய்யமாட்டாள் என அவளை புரிந்தவனாய் "Advil (Pain Killer) ஒண்ணு போடறயா?" என பேச்சை மாற்றினான்

"இல்ல ஸ்டீவ்... its not that bad" என்றாள், அதற்குள் வகுப்புகள் துவங்க நேரம் ஓடியது

********************************************************

மதிய இடைவேளையின் மது, ஸ்டீவ், மீரா மூவரும் Food Courtல் இருந்தனர்

"இந்த Weekend எங்க வீட்டுல என் பர்த்டேக்கு ஒரு சின்ன கெட்-டுகெதர்... நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும்" என்றாள் மது

"ஹேய்... பார்ட்டி டைம்" என மதுவிடம் கை குலுக்கியவன், "நாங்க வராமயா... ரைட் பேபி?" என மீராவின் தோள் சுற்றி தன் கையால் கோர்த்து அணைத்தான்

ஒரு கணம் மது ஒன்றும் புரியாமல் விழிக்க, மீரா ஸ்டீவை எரிப்பது போல் பார்த்தாள். அவள் கோபத்திற்கான காரணம் புரியாமல் "வாட்?" என்றான் ஸ்டீவ்

"ஹ்ம்கும்..." என தொண்டையை சரி செய்யும் பாவனையில் ஆரம்பித்த மது "Looks like I didn't a memo" எனவும் தான், மதுவின் முன் தான் மீராவிடம் நெருக்கம் காட்டியதை உணர்ந்தான் ஸ்டீவ்

"Oh my god...oh...my god... What did I do? I didn't plan it honey... believe me... just spontaneously... I'm sorry... I..." என மீராவை பாவமாய் பார்த்தவன், அவன் செய்கையில் மது சிரித்ததும்

"No offense Madhu... ஜஸ்ட், கொஞ்ச நாளைக்கு எங்களுக்குள்ள இருக்கட்டும்னு நெனச்சோம்... but.... " என்றவன் மீராவை கெஞ்சும் பார்வை பார்த்தான்

அவன் செய்தது கோபத்தை கிளப்பிய போதும், மதுவின் முன் காட்ட மனமில்லாமல் "Keep your hands off me"  என்ற மீராவின் குரல் கோபமும் கேலியும் கலந்து ஒலித்தது

இன்னும் அவளை விட்டு நகராமல் "சாரி... ரியல்லி சாரி" என்றான் ஸ்டீவ்

சூழ்நிலையை சரியாக்கும் எண்ணத்துடன் "ஒகே... எப்படியும் எனக்கு இப்ப தெரிஞ்சு போச்சு தானே... எப்ப நடந்தது இந்த மாற்றம் எல்லாம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என மது கேட்க, அதையும் நீயே சொல்லேன் என்பது போல் ஸ்டீவை பார்த்தாள் மீரா

"ஹும்ஹும்... இனி என்ன கேக்கனும்னாலும் நீங்க மீராகிட்டயே கேட்டுகோங்க மேடம்... நான் வர்ல இந்த வம்புக்கு" என்றான் ஸ்டீவ்

"ஓ மை காட்... ஆனாலும் இப்படி பயப்படகூடாது ஸ்டீவ்... ஹா ஹா ஹா" என கேலி செய்தாள் மது

"ச்சே ச்சே.. பயம்லாம் இல்லப்பா... அவ்ளோ லவ்... ரைட் பேபி?" என மீண்டும் அவளை நெருங்க "ஹேய்..." என ஒற்றை விரல் சுட்டி முறைத்தாள் மீரா

"Ha ha ha.. Oh yes, I can see its all love..." என சிரித்தவள் "Honestly, I'm so happy for you both... you look so made for each other" என்றாள் மது

அவளின் மனம் நிறைந்த பாராட்டு மற்ற இருவரையும் நெகிழ செய்தது. அதே நெகிழ்வுடன், மதுவின் கையை பற்றிய மீரா "தேங்க்ஸ் மது" என்றாள்

"தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும்... சனிக்கிழமை மறக்காம பார்ட்டிக்கு வந்துடனும்" என்றாள் மது

"கண்டிப்பா மது..."என்றவள், யோசனையுடன் "பார்ட்டி பத்தி சதீஷ்கிட்ட சொல்லிட்டயா மது?" என கேட்டாள், அவனின் ஒதுக்கத்துக்கான காரணத்தை யார் மூலமேனும் அறிந்து கொள்ள முடியுமா என்பதற்கான முயற்சி போல்

"இல்ல மீரா... இனிதான் சொல்லணும்... ரெண்டு நாளா அவன் க்ளாஸ்'க்கே வரலியே... என்னாச்சு?" என மீராவிடமே கேட்டாள்

"தெர்ல மது...என்னமோ வேலைனு சொன்னான்" என மீரா கூற, அவளை யோசனையாய் பார்த்தான் ஸ்டீவ். ஏதோ பிரச்சனை என்பது அவனுக்கு புரிந்தது

சிறிது நேரத்தில் மது நூலகம் செல்லக்கிளம்ப, கிடைத்த தனிமையில் "Meera, I can see that something is bothering you... let me know if I can be of help" என்றான், விருப்பமென்றால் சொல் என்ற பாவனையில்

அவனிடம் மறைப்பதில் அவளுக்கும் உவகை இருக்கவில்லை என்றாலும், இப்போதைக்கு வேண்டாம் என நினைத்தவள் "இல்ல ஸ்டீவ்... எதுவும் இல்ல" என்றாள். அதற்கு மேல் அவன் அவளை வற்புறுத்தவில்லை

********************************************************

மறுநாள் வகுப்பிற்கு வந்த போதும் மீராவிடம் பேசுவதை தவித்தான் சதீஷ். மாலை அவள் பேச முயன்ற போதும், "வேலை இருக்கு வெளிய போகணும்" என விலகினான்

சனிக்கிழமை மதுவின் பிறந்தநாள் ஒன்றுகூடலுக்கும் சதீஷ் வரவில்லை. மதுவிடம் கேட்டதற்கு "வேலை இருக்கிறது. முடிந்தால் வருகிறேன்" என சதீஷ் கூறியதாய் கூறினாள்

மதுவின் வீட்டில் இருந்து அன்றிரவு வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மீராவின் அலைபேசி ஒலித்தது. ஏதோ பழக்கமற்ற எண் திரையில் தோன்ற எடுக்கவேண்டாமென முதலில் நினைத்தவள், ஏனோ உள்ளுணர்வு தூண்ட "ஹலோ" என்றாள்

"........"

மறுமுனையில் கேட்ட குரலில் "ஹேய் காயத்ரி... What a surprise?" என மகிழ்ச்சியாய் ஒலித்தது மீராவின் குரல்

அந்த மகிழ்ச்சி மொத்தமும் காணாமல் போகப்போவதை மீரா அப்போது அறிந்திருக்கவில்லை


நட்பின் பெருமிதத்தில்
நான்திளைத்த நாட்களுண்டு
நீகற்றகலைகள் எதுவும்
நானறியா ரகசியமில்லை - ஆனால்
உன்உலகில் எனைதவிர்த்து
உயிர்வதைக்க எங்குகற்றாய்!!!


அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

Thursday, May 19, 2011

பனி விழும் மலர்வனம்... (For someone special...)This is for someone special for a very special day coming up...:)

"நினைவெல்லாம் நித்யா" படத்துல வர்ற "பனி விழும் மலர் வனம்..." பாட்டு எனக்கு ரெம்ப ரெம்ப பிடிச்ச ஒரு மெலடி...எனக்கு மட்டுமில்ல இன்னொருத்தருக்கும் பிடித்த பாட்டு...:)

அதனால, அந்த பாட்டோட மெட்டுக்கு ஏத்த மாதிரி என்னோட வரிகள் எழுதணும்னு செஞ்ச ஒரு முயற்சி இது... நான் சரியா பேசவே ஆரம்பிக்காத காலத்துல வந்த படம்னாலும், ஓல்ட் இஸ் கோல்ட் யு நோ...:)

எவ்ளோ சரியா வந்துருக்குனு தெரியல... அந்த மெட்டுல பாடி பாத்துட்டு நீங்களே சொல்லுங்க... நன்றி...

நினைவுகள் நிகழ்வுகள் என்றென்றும் உன்னுடன்
நினைத்திட நினைத்திட நிறம்மாற்றும் நிஜங்களே - ம்...ஹும்...
நினைத்திட நினைத்திட நிறம்மாற்றும் நிஜங்களே
(நினைவுகள் நிகழ்வுகள்...)

மழலை முதலே அறிந்தாலும் மனதை புரிந்தோம் இந்நாளில்
மழலை முதலே அறிந்தாலும் மனதை புரிந்தோம் இந்நாளில்
உறவுகள் சூழ்ந்திட இணைந்திட்டோம் வாழ்வினில் - ஹே ஹே
உணர்வதின் பூக்களே மனமெங்கும் மலர்ந்ததே
உலகம் சுற்றியும் நிற்கையில் உறவுகள் சூழ்கையில்
உறவும் உணர்வும் மறந்து உன்னை தேடும்
(நினைவுகள் நிகழ்வுகள்...)

மனதை அறிந்த அந்நாளில் மறந்தோம் உலகை பலகனவில்
மனதை அறிந்த அந்நாளில் மறந்தோம் உலகை பலகனவில்
முப்பது அறுபது கடந்தும்தான் கசக்கல - ஹே ஹே
முன்னொரு பிறவியில் இருந்தோமோ இன்றுபோல்
காலம் கண்முன்னே கரைகையில் கனவுகள் மலர்கையில்
கரையும் நெஞ்சம் விரிந்து கவிதை பாடும்
(நினைவுகள் நிகழ்வுகள்...)

...

Monday, May 16, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 19)
அறைக்குள் வந்து சற்று நேரமாகியும் மீராவிற்கு இயல்பாய் இருக்க முடியவில்லை

"இப்போது தானே பார்த்தோம், மீண்டும் அவனை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறதே ச்சே..." என நினைத்த நேரத்தில் செல் போன் அடிக்க அவனாய் தான் இருக்கும் என நினைத்து அவசரமாய் எடுத்து எண்ணை கூட பார்க்காமல் "ஹலோ.."என்றாள் 

இந்த தொலைபேசி அழைப்பு சற்று முன் இருந்த சந்தோச மனநிலையை முற்றிலும் மாற்ற போவதை பாவம் அவள் அறிந்திருக்கவில்லை

எதிர்முனையில் அவள் அன்னையின் குரல் கேட்க "அம்மா... நீயா... என்ன இந்த நேரத்துல... அப்பா நல்லா இருக்காரா?" என  யாருக்கேனும் உடல் நலமில்லையோ என பதட்டமாய் கேட்டாள் மீரா

"எல்லாரும் நல்லா இருக்கோம் செல்லம்... சதீஷ் விசயத்த சொன்னதும், நேத்தே உன்கிட்ட இருந்து போன் வரும்னு எதிர்ப்பாத்தோம்... காணோமேனு தான் நானே கூப்பிட்டேன்டா"

"என்ன விசயம்மா? சதீஷ் எதுவும் சொல்லலியே" என குரலில் தோன்றிய பதட்டத்தை மறைக்க முயன்றவாறே கேட்டாள் மீரா

அடுத்து அவள் அன்னை சொன்ன செய்தியில் முகம் மாறியவள் "போன்ல பாட்டரி லோவா இருக்கும்மா... நான் அப்புறம் பேசறேன்" என அழைப்பை துண்டித்தாள்

சதீஷ் தன்னிடம் இதை பற்றி கூறவில்லை என்ற கோபம் ஒரு புறம், செய்தி மனதில் ஏற்படுத்திய நிம்மதியின்மை ஒரு புறம் என அன்றிரவு வெகு நேரம் தூக்கம் தொலைத்தாள் மீரா

********************************************************

மறுநாள் காலை சதீஷின் அலைபேசி அழைப்பில் விழித்தவள், அழைப்பை எடுக்க வேண்டாமென தவிர்த்தாள்.மீண்டும் அழைப்பு வர எரிச்சலோடு "ஹலோ..." என்றாள்

"என்ன மேடம் காலங்காத்தால கோபமா இருக்கற மாதிரி இருக்கே... என்ன பிரச்சன?"

"பிரச்சனைன்னு தனியா வேணுமா... நீ போதாதா?"

"ஏய் மீரா... என்னாச்சு?"

"ஒண்ணுமில்ல... க்ளாஸ்ல பாக்கலாம் பை" என்றவள் அழைப்பை துண்டிக்க போக

"ஏய் ஏய் மீரா ப்ளீஸ்... ஒன் செகண்ட்... நான் அங்க வரேன்... சேந்தே போலாம்... இன்னும் 30 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்...பை" என அவளுக்கு பதில் சொல்ல அவகாசம் தராமல் துண்டித்தான்

சொன்னது போல் அரைமணி நேரத்தில் வந்தவனை "ஏன் வந்தாய்?" என்பது போல் பார்த்தாள் மீரா

"என்னாச்சு மீரா?" என ஒன்றும் தெரியாதவன் போல் சதீஷ் கேட்க

"ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காத... ஏன் என்கிட்ட சொல்லல?"

"என்ன?" என்றவன் "ஓ... ஆண்ட்டிகிட்ட பேசினயா?" என சிரிக்க

"சிரிக்காத சதீஷ் ச்சே..."

"என்ன மீரா? ஏன் இவ்ளோ டென்ஷன் இப்போ... நேத்தே சொல்லலாம்னு தான் வந்தேன்... நீ பொறுமை அது இதுனு லெக்சர் குடுத்தியா... அதான் சும்மா வம்புக்கு..."

"அப்ப ஊர்ல எதுக்கு சொன்ன?" என அவனை பேசவிடாமல் கேட்டாள்

"அவங்க சந்தோசபடட்டும்னு சொன்னேன்... அது சரி... நம்ம ஊர்லையே சம்மர் ப்ராஜெக்ட் பண்றதுக்கு சான்ஸ் கிடைச்சது பத்தி சந்தோசபட்றதை விட்டுட்டு ஏன் இப்படி டென்ஷன் ஆகற?" என அவன் யோசனையாய் பார்க்க

"அது..." என அவள் தடுமாற

"அப்ளை பண்ணினப்ப ரெண்டு மாசம் ஊர்ல போய் இருக்கலாம்னு எவ்ளோ எக்ஸ்சைட்'ஆ இருந்த... இப்ப என்ன ஆச்சு?" என்றவனுக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் அவள் விழிக்க

"ஓ... உன்கிட்ட சொல்லாம மொதல்ல ஊர்ல சொல்லிட்டேன்னு கோபமா... ஊருக்கு வரோம்னு சொன்னா எங்க அம்மா அப்பா ஹாப்பி ஆவாங்கனு சொன்னேன்... அப்படியே அங்கிள் ஆண்ட்டிகிட்டயும் சொல்லிட்டேன்... அதுக்கு வேணா சாரி சொல்லிடறேன் ஒகேவா மேடம்?" என அவன் கேலி போல் பேச, அதை ரசிக்கும் மனநிலையில் மீரா இருக்கவில்லை

சம்மர் ப்ராஜெக்ட் இந்தியாவில் செய்ய முடிந்தால் இரண்டு மாதம் பெற்றோருடன் சென்று இருக்கலாம் என சந்தோசமாய் விண்ணப்பித்தவள் தான், ஆனால் அப்போது தன் மனம் ஸ்டீவிடம் காதல் கொண்டிருக்கவில்லையே என நினைத்தாள்

நேற்று அவனை பார்த்து வந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் அவனை காண தோன்றியது நினைவு வர, இரண்டு மாதம் எப்படி அவனை பார்க்காமல் இருக்க போகிறேன் என்ற எண்ணமே இப்போது அவளின் நிம்மதியின்மைக்கு காரணமானது

இருபது வருடம் உயிராய் வளர்த்த பெற்றோரை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியை விட ஸ்டீவை பிரிந்து இருக்க வேண்டுமென்ற வருத்தமே மேலோங்கியது

வாழ்க்கை துணை இவன் தான் என மனதில் பதிந்ததும் மற்ற எல்லா உறவுகளும் அடுத்த நிலைக்கு செல்வது எப்படி என்ற கேள்வி மனதில் எழ, அதற்கு பதில் காண இயலாமல் தடுமாறினாள்

பெற்றோரின் மேலிருக்கும் அன்பு எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை என்றபோதும், அப்போதிருந்த மனநிலையில் ஸ்டீவை பிரிந்து இரண்டு மாதங்கள் தன்னால் இருக்க முடியுமென அவளுக்கு தோன்றவில்லை

"என்ன மீரா? என்ன இவ்ளோ யோசனை?" என சதீஷ் கேட்க

"ஒண்ணுமில்ல... நான் ரெடி ஆகறேன் டைம் ஆச்சு..." என கிளம்பும் சாக்கிட்டு அவன் முன் நிற்பதை தவிர்த்து விலகினாள்

அவளின் ஒதுக்கமும் இந்தியா போவதை பற்றி மகிழ்ச்சி காட்டாத செய்கையும் சதீஷை குழப்பத்தில் ஆழ்த்தியது

********************************************************

எப்போது அவளை காண்போம் என காத்திருந்தவன்  போல்  கல்லூரிக்குள்  நுழைந்ததுமே மீராவை தேடி வந்தான் ஸ்டீவ்.  அவனின் அன்னியோன்ய பார்வையில் ஒருகணம் மகிழ்ச்சியில் மனம் துள்ளிய போதும், அதன் பின் மீராவின் முகவாட்டம் இன்னும் கூடியது
  
 சற்று தனித்திருந்த சமயத்தில் அவன் அதற்கான கேட்க, மாலையில் பேசலாம் என்றாள். அதற்கு மேல் அந்த நேரத்தில் வற்புறுத்தி கேட்க மனமற்றவனாய் விட்டுவிட்டான் ஸ்டீவ் 

மீராவிடம் கூறியது போல், ஸ்டீவ் அன்று மாலை, நேதன் பிலிப்ஸ் ஸ்கொயர்'ல் (Nathan Philips Square) மீராவுக்காக காத்திருந்தான். அவனுக்கு அந்த இடம் எப்போதும் விருப்பமான ஒன்று

அவன் இருப்பிடத்திலிருந்து பக்கம் என்பது மட்டும் காரணமல்ல, சுற்றிலும் வரலாற்று சிறப்பு மிக்க City Hall, Osgoode Hall, Clock Tower, Sheraton Hotel என கட்டிடங்கள் சூழ்ந்திருக்க, நடுவில் ஒரு செயற்கை நீரூற்றின் இருபக்கமும் இருக்கைகள் இருந்த அந்த அமைப்பு அவனுக்கு தான் வளர்ந்த ஒட்டாவா  நகரத்தின் சில இடங்களை நினைவுறுத்தியதும் ஒரு காரணம்

டொரோண்டோ வந்தது முதல்,நிறைய மாலை நேரங்களை அங்கு அவன் செலவழித்து இருக்கிறான்

வெயில் காலங்களில் சில நாட்கள் ஏதேனும் இசைக்குழுக்கள் அங்கு இலவச நிகழ்ச்சிகளை வழங்குவதுண்டு. அதே போல் குளிர் மாதங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களும், ஐஸ் ரின்க் எனப்படும் பனி ஸ்கேடிங் தளங்கள் அமைக்கப்படும். எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்

செயற்கை நீரூற்றை ஒட்டி போடபட்டிருந்த ஒரு பெஞ்ச்'ல் அமர்ந்தவன் மீரா வரும் திசையை ஆவலோடு பார்த்திருந்தான். தூரத்தில் அவள் வரும் போதே கண்டுகொண்டவன், புன்னகையுடன் அவளை விட்டு பார்வையை எடுக்க இயலாமல் பார்த்தான்  

எந்த அதிகபட்ச முயற்சியும் இன்றி, தன் வருகையால் மட்டுமே அவளால் தன் உலகத்தை அழகுற செய்யமுடிவது எப்படி? என்ற கேள்விக்கு தன்னால் இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் விடை காண முடியாதென நினைத்தான் ஸ்டீவ்

அவனை பார்த்ததும் முகம் மலர்ந்த போதும், அவள் முகத்தில் நேற்று இருந்த சந்தோசமும் பெருமிதமும் குறைந்து, கவலையும் குழப்பமும் அந்த இடத்தை ஆட்கொண்டிருந்ததை அவனால் உணர முடிந்தது

என்ன பிரச்சனையோ என பதட்டம் தோன்றிய போதும், முயன்று அதை  மறைத்தான். முதலில் அவள் முகத்தில்  சிரிப்பை  வரவழைத்து  பார்க்க வேணும் என நினைத்தான்

தன்னருகே அமைதியாய் வந்து அமர்ந்தவளின் தோளை தன் கரத்தால் சுற்றி வளைத்தவன் "ஹாய் ஸ்வீட்டி..."  என அருகில் இழுக்க

"ஸ்டீவ்...." என்ற சிணுங்கலுடன் சுற்றிலும் பார்வையை வீசி சற்று விலகி அமர்ந்தாள்

"We're madly in love with each other right?" என அவன் உரிமையாய் மீண்டும் அவள் தோள் மீது கை போட, அந்த உரிமையான செய்கை அவளை பலவீனமாக்கியபோதும்

"Yes, we're madly in love, but that doesn't mean we should show it off to public's eyes this way" என்றாள் மீரா அமைதியாய்

"You're in North America baby, get used to it..." என அவன் சிரிக்க, அவளிருந்த மனநிலையில் அதை ரசிக்க இயலாதவள் போல் எங்கோ பார்த்தாள்

அதை புரிந்தவனாய் "காலைல இருந்தே டல்லாதான் இருக்க... என்னாச்சு மீரா?" எனவும்

"அது... ஒரு பிரச்சன" என்றாள், எப்படி ஆரம்பிப்பது என புரியாமல்

"ஹ்ம்ம்...நேத்து தான் லவ் சொல்லிக்கிட்டோம்... இன்னைக்கே பிரச்சனையா?" என சூழ்நிலையை இலகுவாக்க முயல்பவன் போல் கேலியாய் பேசினான்

"ஸ்டீவ், சம்மர் ப்ராஜெக்ட் நான் இந்தியால அப்ளை பண்ணி இருந்தேனில்லையா... அது கிடைச்சுடுச்சு...2 months இந்தியா போகணும்"

"வாட்?" என அதிர்ந்தவன், உடனே சமாளித்து,  "அது... நீ இப்போ மாத்திக்கலாம் தானே... இங்கயே we can get something" என்றான்

"It is not about getting something here" என்றவள், சதீஷ் தன் பெற்றோரிடம் இதை பற்றி கூறிவிட்டதை தெரிவித்தாள்

"அதனால என்ன மீரா... இங்கயே ப்ராஜெக்ட் பண்றேன்னு சொல்லு"

"ஏன் இந்தியால பண்ணலைனு கேட்டா என்ன சொல்றது ஸ்டீவ்?"

"நம்மள பத்தி சொல்லு" என அவன் ஏதோ சுலமான விடயம் போல் கூற

"ஸ்டீவ், நீ நினைக்கற மாதிரி அது அவ்ளோ ஈஸி இல்ல... நான் சதீஷ்கிட்ட எப்படி சொல்றதுன்னே புரியாம முழிச்சுட்டு இருக்கேன்"

அவள் அப்படி கூறியது அவனை கோபமூட்டியது "என்ன மீரா இது? நாம என்ன Illegal வேலையா செய்யறோம் பயப்படறதுக்கு... சதீஷ்கிட்ட சொல்றதுக்கு உனக்கு கஷ்டமா இருந்தா I will handle that part" என்றான்

"வேற வினையே வேண்டாம்" என்றவள், அவன் முகம் போன போக்கில் இன்னும் சோர்ந்தாள்

"ஸ்டீவ் ப்ளீஸ்... Sathish is not just any friend, I know him all my life. He is important to me. ஸ்கூல் டேஸ்ல இருந்தே அவன் என்கிட்ட இப்படி Protective'ஆ தான் இருப்பான்... நீன்னு இல்ல, என்கிட்ட யார் நெருங்க முயற்சி பண்ணினாலும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவான்... எனக்கு முக்கியமான ரெண்டு பேர் என் காரணமா எதிரிக மாதிரி நிக்கறதை என்னால பாக்க முடியாது... அதான் உங்க ரெண்டு பேருக்குள்ள கொஞ்சம் எல்லாமும் ஸ்மூத் ஆனப்புறம் சொல்லலாம்னு தோணுது. அதோட, summer is in just another month. So, இந்தியால இருக்க போற அந்த ரெண்டு மாசத்துல சதீஷ்கிட்டயும் எங்க அம்மா அப்பாகிட்டயும் நம்ம விசயத்த சொல்ல முடியும்னு நினைக்கிறேன்"

"அப்போ ரெண்டு மாசம் இந்தியா போகத்தான் போற இல்லையா?" என்றான் ஸ்டீவ், மற்ற எதுவும் தனக்கு முக்கியமில்லை என்பது போல்

அவன் கேட்ட விதத்தில் அப்போதே அவனை விட்டு வெகு தூரம் சென்று விட்ட உணர்வில் மீராவின் கண்ணில் நீர் நிறைந்தது

அதை கண்டதும் ஸ்டீவிற்கு மற்றதெல்லாம் மறந்து போனது, தன் கைகளில் அவள் கன்னத்தை தாங்கியவன் "ஏய் மீரா... என்ன இது? Sorry... I didn't mean to make you cry... please don't" எனவும்

சற்று முன் பொது இடம் என தான் கூறியதை தானே மறந்தவளாய், அப்போதைய வேதனையில் இருந்து தப்பித்து கொள்ள அவன் மார்பில் தன்னை புதைந்து விட முயன்றாள்

தாங்கள் கண்ணை மூடி கொண்டால் உலகமே இருண்டு விடும் என நினைப்பவர்கள் தானே காதலர்கள். அதற்கு மீரா ஸ்டீவ் ஜோடியும் விதிவிலக்கல்ல

ஆனால், ஒரு ஜோடி கண்கள் அந்த காட்சியை கண்டு உறைந்ததை  அவர்கள் அறிந்திருக்கவில்லை. உறைந்தது மட்டுமல்ல, அந்த நிமிடமே மீராவை வலுக்கட்டாயமாய் அங்கிருந்து இழுத்து சென்றிட துடித்தது அந்த உருவம் 

உன்மனதில் நானெனஅறியும்வரை
உலகில்யாரோ ஒருவனாய்நீ
என்மனதிலும் நீயெனபுரிந்ததும்
என்உலகம் மொத்தமும்ஆனாய்நீ!!!

அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

Tuesday, May 10, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 18)

"ஐ லவ் யு ஸ்டீவ்" என எதிர்பாராத தருணத்தில் மீரா கூற, அவசரமாய் அவளை தன்னிடமிருந்து விலக்கி, அவள் தன்னிடம் காதல் சொல்லும் கணத்தில் அவள் முகம் பார்க்க விழைந்தான் ஸ்டீவ்
 
 
சிரிக்கும் அவள் கண்களில் இன்னும் நீர் படலம் இருக்க, அன்பு நிறைந்த அந்த பார்வையில் தன்னை இழந்தான் ஸ்டீவ்
 
 
"Meera... you don't know how happy I'm right this minute... எனக்கு என்ன சொல்றதுனே தெரியல" என்றவன், அவளை மீண்டும் அணைத்து நின்றான்
 
 
சற்று முன் தான் காதலை பகிர்ந்து கொண்டது போல் இருக்கவில்லை இருவருக்கும், பலகாலமாய் சேர்ந்தே இருந்தவர்கள் போன்ற உணர்வில் அந்த கணத்தை ரசித்து நின்றனர்
 
 
சற்று நேரம் கழித்து அவளை விட்டு விலகி நின்றவன் "என்னோட குக்கிங் டேஸ்ட் பண்றதுக்கு ரெடியா மீரா?" என கேட்க

"ஹ்ம்ம்... அதான் கொஞ்சம் பயமா இருக்கு... இன்சூரன்ஸ் கூட இல்ல ஸ்டீவ்..." என அவள் சிரிப்பை அடக்கி கொண்டு கூற

"எல்லாம் நேரம் தான்... சாப்டுட்டு அப்புறம் என்ன சொல்றேன்னு பாக்கலாம்" என்றான்

"ஹ்ம்ம்....பாக்கலாம் பாக்கலாம்..." என்றவள் சமையல் மேடையில் வைத்திருந்த ஒரு அலுமினியம் பாயில் உறையை எடுத்தவள் "வாவ்... கார்லிக் பிரட்... எனக்கு ரெம்ப பிடிக்கும்... ம்...இதென்ன... ஓ.... Eggplant Lasagna... good good... mm... pizza... ஏய் ஸ்டீவ்... இதுவும் நீயே செஞ்சேன்னு பொய் சொல்ல போறியா..."

"ஏய்...கிண்டலா... base மட்டும் கடைல வாங்கினேன்... topping spices baking எல்லாம் என்னோட ரெசிபி தான்"

"ஹ்ம்ம்..." என்றவள், அடுத்து இருந்ததை பார்த்ததும் "wow smells good...என்ன ஸ்டீவ் இது?" எனவும்

"இது ஒரு பாபுலர் இட்டாலியன் டெசர்ட்... Tiramisu...combination of selected italian biscuits dipped in coffee with layers of cocoa, egg yolks etc etc....னு வெச்சுக்கோயேன்..." என்றவன் கூற, எதுவும் பேசாமல் அவனையே பார்த்தாள் மீரா

"ஏன் அப்படி பாக்கற...நான் செஞ்சேன்னு நம்பிக்கை இல்லையா மீரா" என சலுகையாய் அவளை அருகில் இழுத்து கொண்டே ஸ்டீவ் கேட்க

அதை தானும் ரசித்தவள் போல் அவனோடு சேர்ந்து நின்றபடி "யார்கிட்ட கத்துகிட்ட இதெல்லாம்" என்றாள்

"ம்... என் மம்மி கூட எனக்கு டைம் ஸ்பென்ட் பண்ண பிடிக்கும்... மம்மிக்கு சமைக்க பிடிக்கும்... சோ, அப்படியே அரட்டை அடிக்கறப்ப கொஞ்சம் கொஞ்சம் கத்துகிட்டது தான்... moreover, எனக்கு டேக் அவுட்ஸ் அவ்ளோ பிடிக்காது... அதனாலயும் நானே சமைச்சு பழகிட்டேன்"
 
 
"அப்பாடா அப்போ எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் சாப்பாடு பிரச்சனை இல்ல...ஜாலி" என அவள் சிரிக்க

"அடிப்பாவி... புல் டைம் குக் ஆக்கிடுவ போல இருக்கே... என்னை பாத்தா பாவமா இல்ல"

"ஹுஹும்... இல்லவே இல்ல"

"இப்ப கூட பாவமா இல்ல" என வேண்டுமென்றே முகத்தை பாவமாய் வைத்து கொண்டு அவள் முகத்தை நோக்கி குனிய

"எனக்கு பசிக்குது... நான் சாப்பிடறேன்..." என வேண்டுமென்றே அவனிடமிருந்து விலகினாள்

தன்னை வெறுப்பேற்றவென்றே சமயம் பார்த்து விலகியதை புரிந்தவன் "ராட்சசி..." எனவும்
 
 
"எனக்கு நிஜமா பசிக்குது" என்றாள் மீரா பாவமாய்

"சும்மா சொல்றது எல்லாம் இருக்கட்டும்... சாப்பிடு பாக்கலாம்... I know how poor eater you are" என்றான் ஸ்டீவ்

"பாக்கலாமா... உனக்கு கூட மிச்சமில்லாம சாப்பிட போறேன் எல்லாமும்..." என அவள் சவால் பார்வை பார்க்க

"சான்சே இல்ல..." என சிரித்தான் அவளை அறிந்தவனாய்

இருவரும் வேண்டியதை எடுத்து கொண்டு உணவு மேஜையில் அமர, மீரா சாப்பிட்டு கொண்டிருந்தவள் ஸ்டீவ் தன்னையே பார்ப்பதை உணர்ந்து

"என்னை பாத்தது போதும்... look at the food..."

"Food is not very appealing Meera.." என அவன் சிரிக்க

"ஸ்டீவ்..." என செல்லமாய் முறைத்தாள்

"ஒகே ஒகே...கூல்... ஹேய் வெயிட்... I will get you some sauce to go with that garlic bread" என எழுந்து சென்றான்

ஒரு சிறிய கண்ணாடி குவளையில் சாஸ் கொண்டு வந்து வைத்தவன் "நீ சாப்டு... நான் விண்டோ ஓபன் பண்ணிட்டு வரேன்... வெதர் நல்லா இருக்கே"

அவன் திரும்பி வந்த போது மீரா டேபிள் அருகில் இல்லாமல் போக சமையல் மேடை அருகில் பார்த்தவன், பதறி போனான்

மீரா கண்ணெல்லாம் நீர் வழிய கையில் தண்ணீருடன் நின்றிருந்தாள் "ஏய் என்னாச்சு மீரா?" எனவும்

"What the hell was that sauce?... ஓ மை காட்... ஐயோ...ஆ...அம்மா" என அவள் கத்த, நிலைமையும் மீறி ஸ்டீவுக்கு சிரிப்பு பீறிட்டது

"ஸ்டுபிட்... எதுக்கு சிரிக்கற இப்போ" என அவனை அடிப்பவள் போல் கை எடுக்க, அவள் கையை பற்றியவன் சிரிப்பை கட்டுப்படுத்த இயலாமல் மேலும் சிரித்தான்
 
 
"ஸ்டீவ்... டென்ஷன் பண்ணாதே" என அவள் கோபமாய் முறைத்தாள்

அவள் நின்ற தோற்றமோ அல்லது செல்ல கோபமோ ஏதோ ஒன்று அவளை விட்டு பார்வையை எடுக்க விடாமல் செய்தது ஸ்டீவை

"என்ன லுக் விடற? Give me something sweet... this is killing me" என மீரா கூற

"Sure, something sweet..."என அவன் அவளை நெருங்க, அவள் முறைத்த விதத்தில் பின் வாங்கினான்

"சரி சரி டென்ஷன் ஆகாதே மீரா... இந்தா இந்த டெசர்ட் ட்ரை பண்ணு..." என்றதும்

"ஒரு ஸ்பூன் எல்லாம் சரி வராது... தள்ளு..." நான்கைந்து ஸ்பூன் இனிப்பு உள்ளே சென்றதும் நாவின் காரம் மட்டுப்பட "I'm full" என்றாள்

"ஏய்... இதான் நீ எனக்கு கூட இல்லாம காலி பண்றேன்னு சொன்னதா... such a poor eater Meera.."

"எல்லாம் உன்னால தான்... நீ தான அந்த ஹாட் சாஸ் குடுத்து சதி பண்ணின"

"இல்லைனா மட்டும்...நல்ல excuse உனக்கு... என்ன மீரா இது? பாத்தா தெரியாதா... அது ஹேலபினோ சில்லி சாஸ்... வெரி ஹாட் ஒன்... எவ்ளோ யூஸ் பண்ணனும்னு தெரியாதா..."

"இப்ப சொல்லு எல்லாத்தையும்... அப்பவே சொல்றதுக்கு என்னவாம்"

"உனக்கு கிட்சன்ல இவ்ளோ புவர் நாலேஜ் இருக்கும்னு எனக்கு தெரியாதே" என அவன் கேலி செய்ய

"அப்படியா... அப்போ நல்ல நாலேஜ் இருக்கற பொண்ணா பாத்து லவ் பண்ணு போ" என கோபித்து கொண்டவள் போல் சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள, அவள் அருகில் வந்து அவன் அமர தள்ளி அமர்ந்தாள்

"You want to play? okay... I'm all for it Meera..." என சிரித்து கொண்டே மீண்டும் அருகில் வந்து அமர்ந்தான்

"நான் ரெம்ப கோபமா இருக்கேன்... டென்ஷன் பண்ணாதே ஸ்டீவ்"

"ஒகே... ஒகே... மீரா, கூல் பண்றதுக்கு ஒரு ரெசிபி சொல்லட்டுமா?"என்றவன் கேட்க
 
 
அவள் என்ன என்பது போல் பார்க்க "Just a bit of garlic bread dipped in a dish of jalapeno sauce added with a pinch of...." என சமையல் குறிப்பு போல் அவன் மும்மரமாய் கூறி கொண்டே போக, அவன் சொன்ன பாவனையில் அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாய் சிரித்தாள் மீரா

"See... it worked"என அவன் வெற்றி புன்னகை செய்ய, அவள் எதுவும் பேசாமல்  அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்

அதை எதிர்பாராத ஸ்டீவ் "Wow...I didn't realize this recipe does something else too" என அவளை அணைத்து சிரித்தான்

அப்படியே பேச்சும் சிரிப்புமாய் நேரம் கரைந்தது

"ஒகே ஸ்டீவ்... டைம் ஆச்சு... நான் கிளம்பனும்" என மீரா எழுந்து கொள்ள

"ஏய் ஏய் ஏய்... whats the rush? நான் வேணா இன்னொரு ரெசிபி சொல்றேன்" என அவன், அவள் கை பற்ற

"ஒண்ணும் வேண்டாம்... டைம் இப்பவே டென் ஆச்சு... நாளைக்கி க்ளாஸ் இருக்கு யு நோ"

"எஸ் ஐ நோ... இன்னும் கொஞ்ச நேரம்... ப்ளீஸ் மீரா" என கெஞ்சல் பார்வை பார்க்க

"ப்ளீஸ் ஸ்டீவ்... may be I will stay a bit late in the weekend...not today... lets go" என அவள் கதவை நோக்கி நடக்க, அவனும் பின் தொடர்ந்தான்

கார் அருகே வந்ததும் "Meera... wait wait I will get the door for you...thats how it works in dates you know" என கார் கதவை திறந்து அவளை ஏறுமாறு அவன் செய்கை செய்ய

"Steve, thats too dramatical... but I like it" என சிரித்து கொண்டே அமர்ந்தாள்

மறுபக்கம் வந்து டிரைவிங் இருக்கையில் அமர்ந்தவன் "மத்ததையும் அதே மாதிரி லைக் பண்றயானு பாப்போம்" என அவன் சிரிக்க

"என்ன?" என அவள் கேள்வியாய் பார்த்தாள்

"நத்திங்..." என சிரித்தவன், அதன் பின் சற்று நேரம் எதுவும் பேசாமல் மௌனமானான்

அதை கவனித்த மீரா "என்ன ஸ்டீவ்... சைலண்ட் ஆய்ட்ட..." எனவும், அதற்குள் அவள் இடம் வந்துவிட்டிருக்க காரை ஓரமாய் நிறுத்தினான்

தான் கேட்டதற்கு அவன் இன்னும் பதில் சொல்லவில்லையே என மீரா யோசனையாய் அவனை பார்க்க, மெல்ல அவள் கை பற்றியவன்

"I may sound cheesy or dramatical...but... இத்தனை நாள் நான் தனியா இருந்த வீடு தான்... ஆனா, இப்ப திரும்பி அங்க தனியா போறப்ப... I would feel different for sure...It is full of you Meera... இன்னைக்கி தான் நாம லவ் சொல்லிட்ட மாதிரி எனக்கு தோணல... It feels like forever... இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாமே மீரா" என அவன் கேட்ட விதத்தில் அவளுக்கே இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமோ என தோன்ற தொடங்கியது

என்ன சொல்வதென தெரியாமல் "வீக் எண்டு வரேன் ஸ்டீவ்..." என சமாதானம் போல் கூறியவள் "ஒகே குட் நைட்" என காரை விட்டு இறங்க போக

"வெயிட் மீரா... டேட் முடிஞ்சு பை சொல்றப்ப இன்னொரு பார்மாலிட்டி இருக்கு" என அவன் குறும்பாய் சிரிக்க, என்ன என்பது போல் அவள் கேள்வியாய் பார்க்க

"ஏய்... எவ்ளோ மூவில பாத்துருக்க... don't act smart" என அவன் அருகே வர

"Steve... we're in the street" என அவசரமாய் விலகி இறங்கினாள்

அவள் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பவன் போல் அமைதியாய் சிரித்தவன் "ஒகே ஸ்வீட்டி... குட் நைட்" எனவும், அவள் "பை" என்றுவிட்டு உள்ளே நோக்கி நடந்தாள்

அறைக்குள் வந்து சற்று நேரமாகியும் அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை

"இப்போது தானே பார்த்தோம், மீண்டும் அவனை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறதே ச்சே..." என நினைத்த நேரத்தில் செல் போன் அடிக்க அவனாய் தான் இருக்கும் என நினைத்து அவசரமாய் எடுத்து எண்ணை கூட  பார்க்காமல் "ஹலோ.."என்றாள்

இந்த தொலைபேசி அழைப்பு சற்று முன் இருந்த சந்தோச மனநிலையை முற்றிலும் மாற்ற போவதை பாவம் அவள் அறிந்திருக்கவில்லை

அருகில்நீ இல்லாதபோதில்
அசையாத கடிகாரமுட்கள்
என்னருகில் நீஇருந்தால்
என்மனதின் வேகம்நகர்கிறதே!!!
 
பார்த்துபழகிய என்வீடுதான்
புதியதாய்தோன்றியது உன்வரவில்
மாற்றத்தை விரும்பாதநான்
மாற்றிகொள்ள விரும்பினேன்என்னையே!!!


அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

Saturday, May 07, 2011

வா வா என் தேவதையே... (சிறுகதை + கவிதை)


முதல் நாள் :-

"கெளதம்...." 

"என்ன நந்தினி?"

"நம்ம பாப்பா எவ்ளோ குட்டியா இருக்கில்ல"

"ம்... நீயும் நானும் கூட இதே போல குட்டியா தான் இருந்துருப்போம்" என அவனும் ரசனையாய் கூறினான்

"கெளதம்... பாப்பா உங்கள மாதிரியா என்னை மாதிரியா?"

"ம்...உன்னை மாதிரி அடாவடி தான்... சந்தேகமே இல்ல" என சிரித்தான்

"கிண்டலா...சொன்னாலும் சொல்லாட்டியும் என் செல்லகுட்டி என்னை போலதான்...ஆனா மூக்கு மட்டும் உங்கள மாதிரி... என் சப்ப மூக்கு இல்ல" என அவளும் சிரித்தாள்

"ஹா ஹா... " என மனைவியின் சந்தோசத்தை ரசித்தான் கெளதம்


மூன்றாவது நாள்:-

"கெளதம்... ஜனனிங்கற பேரு எப்படி இருக்கு நம்ம குட்டிக்கு"

"ம்."

"என்ன வெறும் 'ம்' தானா? ச்சே.... reactionஏ இல்ல...ஏன் இந்த பேரு நல்லா இல்லையா?" என முகம் வாடினாள்

"என் நந்தினி அளவுக்கு அழகா இல்ல" என செல்லமாய் மனைவியின் கன்னத்தை வருடினான்

"போதும் போதும் ஐஸ் வெச்சது... என் குட்டி செல்லம் பேரும் அழகு தான்"

"ம்... நீ செலக்ட் பண்ணினதாச்சே... உன் பேருக்கும் ரைமிங்ஆ இருக்கு... சூப்பர்" என்றான்


ஐந்தாவது நாள்:-

"கெளதம்... பாப்பாவ எந்த ஸ்கூல்ல சேத்தலாம்?"

"நந்தும்மா... திஸ் இஸ் டூ மச்... இப்பவே ஸ்கூல் பத்தி யோசனையா?" என அவன் சிரிக்க

"ஏன் பேசக்கூடாதா? கண்ணு மூடி திறக்கறதுக்குள்ள நாள் ஓடி போய்டும் தெரியுமா? நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கிண்டல் தான்" என நந்தினி முகம் வாட, அது பொறுக்காத கெளதம்

"ஒகே ஒகே...சும்மா உன்கிட்ட வம்பு பண்ணினேன் நந்து... என் பிரெண்ட் பாலாஜியோட பையன் போறானே.... அந்த ஸ்கூல் ரெம்ப நல்லா இருக்குனு சொன்னான்"

"ஆமாம் கெளதம்... நானும் கேள்விபட்டேன்...அது நல்ல சாய்ஸ் நம்ம பாப்பாவுக்கு" என நிறைவாய் புன்னகைத்தாள்


ஏழாவது நாள்:-

"இந்தா நந்தினி...உனக்கு பிடிக்கும்னு பலாப்பழம் வாங்கினேன்"

"வேண்டாம் கெளதம்...பாப்பாவுக்கு சூடு சேரலைனா கஷ்டம்"

"ஏய்...உனக்கு ரெம்ப பிடிக்குமேடா"

"ம்...ஆனா என் செல்ல குட்டிய அதை விட பிடிக்குமே" என உரிமையாய் கணவனின் தோளில் சாய்ந்து கொள்ள, மனைவியை அன்பாய் அணைத்து கொண்டான் கெளதம்


பத்தாவது நாள்:-
"செல்லகுட்டி... அப்பா ஆபீஸ் போயாச்சு... நீயும் நானும் தான் வீட்டுல... என் செல்லகுட்டி சமத்தா அம்மாகிட்ட இருப்பியாம்... அம்மா வேலை எல்லாம் முடிச்சுட்டு பார்க் போலாமாம்....சரியா" என பிள்ளையிடம் பேசிக்கொண்டே வீட்டு வேலைகளை செய்தாள் நந்தினி


14வது நாள்:-
வழக்கம் போல் நந்தினி பிள்ளையிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள் "ஜனனி செல்லம்... பாப்பாவுக்கு என்ன வேணும்? பால் குடிக்கலாமா? அம்மாவுக்கு கொஞ்சம்... பாப்பாவுக்கு கொஞ்சம்... சரியா? இன்னிக்கி அம்மாவும் பாப்பாவும் டாக்டர் Aunty பாக்க போகணுமாம்... டாக்டர் Aunty பாப்பாவ செக் பண்ணனுமாம்... செல்லகுட்டி சமத்தா இருக்கானு பாக்கணுமாம்... போலாமா?"


15வது நாள் மதியம்:-

தொலைபேசி அழைக்க அதற்கே காத்திருந்த நந்தினி உடனே எடுத்து "ஹலோ" என்றாள்

"ஹலோ நந்தினி இருக்காங்களா?"

"நான் நந்தினி தான் பேசறேன்"

"நான் இங்க டாக்டர் வந்தனாவோட கிளினிக்ல இருந்து நர்ஸ் ஸ்ரீஜா பேசறேங்க"

ஒருகணம் இதய துடிப்பு அதிகரிக்க நந்தினியின் கைகள் தனிச்சையாய் வயிற்றில் பதிந்தது, எதையோ காக்க முயற்சிப்பது போல்

"ஹலோ...நந்தினி"

"சொ...சொல்லுங்க சிஸ்டர்..." என்றவளின் குரலில் இருந்த நடுக்கம் நர்ஸ் ஸ்ரீஜாவுக்கு அவள் மேல் கரிசனையை ஏற்படுத்தியது. ஆனாலும் சொல்லவேண்டியதை சொல்லித்தானே ஆகணும் என நினைத்தவளாய்

"நேத்து ப்ளட் டெஸ்ட்க்கு குடுத்துட்டு போனீங்க இல்லையா... " என சற்று தயங்கியவள் "I am sorry நந்தினி... இந்த வாட்டியும் Pregnancy test ரிசல்ட் நெகடிவ் தான் வந்துருக்கு" என்றவுடன் நந்தினியின் கைகள் வயிற்றில் இருந்து அவளறியாமல் நகர்ந்தது


15வது நாள் இரவு:-

மாலை அலுவலகம் விட்டு வந்ததுமே நந்தினியின் முகம் கண்டு விசயத்தை புரிந்து கொண்ட கெளதம், அவளை அழச்செய்து பார்க்க மனமில்லாதவனாய் எதுவும் கேட்காமல் மௌனம் காத்தான்

இரவு படுக்கையில் சென்று சரிந்ததும் அதற்கு மேலும் பொறுமை இல்லாதவளாய் "என்னாச்சுனு கூட கேக்க மாட்டீங்களா? அவ்ளோ நிச்சியமா இருக்காதுன்னு முடிவே பண்ணிட்டீங்க இல்லையா கெளதம்?" என நந்தினி விசும்ப

"ஏய் நந்து....ஏன்டா இப்படி பேசற? உன் முகத்த பாத்தே புரிஞ்சுக்கிட்டேன்... மறுபடி கேட்டு உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான்..." என்றவன் கூற, கட்டுப்படுத்திய அழுகை மொத்தமும் வெடித்து கிளம்பியது நந்தினிக்கு

தன் மார்பில் முகம் புதைத்து இருந்தவளை ஆதரவாய் அணைத்தவன் "நந்து ப்ளீஸ்...இங்க பாரு...நந்தும்மா... நீ அழறதால என்ன மாறப்போகுது சொல்லு... ஏய்..." என சமாதானப்படுத்த முயன்றான் கெளதம்

"ஏன் கெளதம் எனக்கு மட்டும் இப்படி? டெஸ்ட் டயுப் பேபி முறைல கருவை எனக்குள்ள செலுத்தின முதல் நாளுல இருந்து ultrasound picture ஐ பாத்து... எனக்குள்ள என் பிள்ளை வளர்றதா கற்பனைல, பெண் பிள்ளைன்னு நானே நெனச்சு, பேரு வெச்சு, ஸ்கூல் யோசிச்சு, பிள்ளைக்குன்னு பாத்து பாத்து சாப்பிட்டு, அதோட பேசி சிரிச்சு.... என்னால இந்த ஏமாற்றத்த தாங்கமுடியல கெளதம்" என அவள் மீண்டும் அழ, அதை காண சகியாமல் தவித்தான் கெளதம்

"நந்தும்மா... ப்ளீஸ் அழாத"

"நான் என்ன பாவம் பண்ணினேன் கெளதம்... ஒரு ஒரு மாசமும்..." என அதற்கு மேல் பேச இயலாமல் விசும்பினாள்

"உன்கிட்ட வர அந்த கொழந்த புண்ணியம் செய்யல நந்தும்மா... அதான் நிஜம்" என அவளின் கண்ணீர் துடைத்தான் கெளதம்

என்றேனும் அந்த கண்ணீர் நிற்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது... விடியலுக்கு காத்திருந்தனர் அவர்கள் இருவரும்

*********************
"ஈரைந்து மாதங்கள் கருவோடு தாங்கி" பெற்றெடுப்பவளின் பெயர் அம்மா என்றால், இப்படி மாதத்தின் 14 நாட்கள் மட்டும் கற்பனையில் அம்மாவாய் நம்மிடையே வாழும் "நந்தினி"களின் பெயர் என்ன?

உலகம் சொல்கிறது "மலடி" என...

"காலம் மாறி போச்சு... இன்னுமா இந்த பேச்சு" னு கேட்கிறது சமூகம். வயறு திறக்காதவள் தன் பிள்ளை மேல் கண் போட்டு விட்டதாய் "கண்ணேறு(திருஷ்டி) கழிப்பதும்" அதே சமூகம் தான்...

என்னை பொறுத்தமட்டில் "நித்யகல்யாணி", "நித்யசுமங்கலி" போல், நந்தினிகள் "நித்யஅம்மாக்கள்"...

இந்த அன்னையர் தின சிறப்பு பதிவில், நம்மிடயே வாழும் "நித்யஅம்மாக்களுக்கு" எனது "சிறப்பான அன்னையர் தின வாழ்த்துக்களை" தெரிவித்து கொள்கிறேன்

குறிப்பு: நான் அறிந்த ஒரு நந்தினிக்காக எழுதிய பதிவு இது... நன்றி


மழலைஉன் சிரிப்பினில்
மயங்கிநான் நிற்பதுபோல்
கண்மணிஉன் கரம்பற்றி
கரைந்துநான் உறைவதுபோல்

அம்மானு சொல்லக்கேட்டு
ஆனந்தத்தில் திளைப்பதுபோல்
தடுமாறி நடக்கையிலே
தாவிஉனை அணைப்பதுபோல்

சொல்கேட்காத தருணத்தில்
செல்லமாய் அதட்டுவதுபோல்
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பரிதவித்து அலைவதுபோல்

பெரியவளாய் நீநிற்க
பெருமிதத்தில் திளைப்பதுபோல்
ஊரேஉனை பாராட்ட
உற்சாகத்தில் மிதப்பதுபோல்

அப்படியும் இப்படியும்
ஆயிரம்கனவு என்கண்ணில்
பலவருடம் முன்னோக்கி
பலகனவு என்நெஞ்சில்

ஏச்சுக்களும் பேச்சுக்களும்
எள்ளலும் நகையொலியும்
எனைமுழுதாய் கொல்லும்முன்னே
என்னில்வந்து உதித்துவிடு !!!

உதிக்காத பிள்ளைக்காய்
உருகும் அம்மாவிடம்
வாவா என்தேவதையே
வரமாய்கையில் தாங்கிடுவேன் !!!
....

Sunday, May 01, 2011

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி... :)))

 
தலைப்பை பாத்ததும் உங்க மனசுல எல்லாம் என்ன கற்பனை வரும்னு எனக்கு நல்லாவே தெரியும்... சாம்பிள்க்கு சில இதோ...:)
 
"என்னாச்சு அப்பாவி... நீ ப்ளாக் எழுதறதை நிறுத்த போறியா?"னு கேட்கும் அன்பு உள்ளங்களே...
 
"உங்க ஆபீஸ்ல இன்டர்நெட் தடை பண்ணிட்டாங்களா... ஐ ஜாலி" என குதூகலிக்கும் சகோதர சகோதரிகளே...
 
"உன் ப்ளாக் திருட்டு போய்டுச்சோ... என் வேண்டுதல் வீண் போகல ஆண்டவா" என மனமுருகும் மைண்ட்வாய்ஸ்களே...
 
நீங்க நினைக்கற மாதிரி எந்த நல்லதும் நடக்கல... இப்ப, ஒரு குட் நியூஸ் ஒரு பேட் நியூஸ் ரெண்டு இருக்கு... எதை மொதல்ல சொல்றது... ஹ்ம்ம்...
 
சரி... குட் நியூஸ் சொல்லிடறேன்... இந்த வாரம் "ஜில்லுனு ஒரு காதல்" போஸ்ட் வராது...
 
ஹலோ ஹலோ வெயிட் வெயிட்... பேசிக்கிட்டு இருக்கறப்ப என்னதிது சின்னப்புள்ளத்தனமா பட்டாசு வெடிக்கறது... கர்ர்ர்ர்ர்ர்ர்....
 
சரி... இனி இன்னொரு நியூஸ் என்ன தெரியுமா... அதுக்கு பதிலா நான் வலைச்சரத்துல இந்த வாரம் ஏழு போஸ்ட் போட போறேன்... ஹொவ் இஸ் இட்? சூப்பர்'ல...:)))
 
ஆமாங்க... என்னை நம்பி வலைச்சர ஆசிரியர் பொறுப்பை இந்த வாரம் குடுத்து இருக்காங்க... எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதலாம்னு இருக்கேன்... பின்ன தெரியாத மாதிரியா எழுத முடியும்னு குண்டக்க மண்டக்க கேள்விலாம் கேக்க கூடாது சொல்லிட்டேன்...
 
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துக்கலாம்... பப்ளிக்ல நாம எல்லாம் பிரெண்ட்ஸ்... சரிங்களா?
 
வலைச்சரத்துல வந்து அப்படியே மெயின்டீன் பன்னோணும்... உள்நாட்டு பகைக்கு எல்லாம் அங்க வந்து பழி வாங்க கூடாது ஜென்டில்மேன்(வுமன்)....டீல்???
 
அப்படி மெயின்டைன் பண்ணினா, இனிமே கம்மியா பதிவு போட்டு உங்களை கம்மியா டார்ச்சர் பண்ணுவேன் என உறுதிமொழி அளிக்கிறேன்... இப்போ டீலா???...:)))
 
சரிங்க... வலைச்சரத்துல முதல் பதிவு போட்டுட்டேன்... முதல் பதிவு சுய புராணம் தான்... சும்மாவே நாம (நான்) கொஞ்சம் சுய புராணம் அதிகம் தான்... இதுல முதல் பதிவுல உங்கள பத்தி சொல்லிக்கோங்கனு பெர்மிசன் குடுத்தா விடுவமா? ஹி ஹி ஹி...
 
இதோ... முதல் பதிவு... வந்தாள் அப்பாவியே...:)))
 
ஸ்டார்ட் மீசிக்... நான் வலைச்சரத்தில் எழுதவதை பற்றிய தங்களின் மேலான (Female ஆன) கருத்துக்களை தெரிவிக்கணும்...:))
 
நன்றி... வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......................:))))
 
பின் குறிப்பு:
அனேகமா நான் எழுதினதுலையே, இதான் சின்ன போஸ்ட்னு நினைக்கிறேன்... என்ஜாய் மக்கள்ஸ்....:)))