Thursday, June 23, 2011

என் உயிர் நின்னதன்றோ...(சிறுகதை) - வல்லமை இதழில் பிரசுரிக்கப்பட்டது


எனது இந்த படைப்பு வல்லமை இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி

**********************************************

"இந்த மனுசன எங்க இன்னுங்காணோம்... வெய்ய நேரத்துல செவனேன்னு ஊட்டுல இருக்கறத உட்டுபோட்டு களத்து மேட்டுக்கு போகலைனு யாரு அழுதாக" என புலம்பியபடி வாசலில் நின்றிருந்தார் ராஜம்மாள் பாட்டி

கண் பார்வை மங்கி விட்டபடியால் நெற்றியில் கை வைத்து வெய்யிலை மறைத்து தூரத்தில் பார்த்து கொண்டிருந்த ராஜம்மாள் பாட்டியை நெருங்கிய அவள் கணவர் ராமசாமி தாத்தா "என்னத்துக்கு இப்படி வெய்யில்ல காயறவ... முன்னியே தொட்டு பொட்டு வெச்சுக்கற நெறம்" என கேலியாய் சிரித்தார்

"ஆமா... இவிக சுண்ணாம்பு வெளுப்பு நாங்கதேன் கறுப்பாக்கும்... இந்த வெய்ய நேரத்துல எந்த மெயில புடிக்க போனிய"

"ஆம்பள ஆயிரம் எடம் போவான்... எல்லாத்தையும் பொம்பளகிட்ட ஒப்பிக்கோனுமாக்கும்"

"போவீக போவீக... போக்கத்தவ வாச்சுருந்தா போவீக" என்ற பாட்டியின் குரலில் ஸ்ருதி கூடி இருந்தது

"ஏங்கெழவி ஊர கூட்டுறவ...?"

"ஹும்க்கும்... நான் கெழவி... இவரு இன்னும் பதினாரு வயசு கொமரன்" என முகவாயை தோளில் இடித்தார் பாட்டி

"இல்லாம பொறவு... ஏதோ ஏமாந்து போய் உன்ரகிட்ட சிக்கிட்டனாக்கும்"

"பேசமாட்டீக....? என்ர அப்பங்கிட்ட ஒத்த காலுல நின்னு கட்டுனா உன்ர பொண்ணத்தான் கட்டுவேன்னு கட்டுனது மறந்து போச்சாக்கும் கெழவனுக்கு"

"என்ன செய்ய? வயசு கோளாறு... மேலத்தெரு மோகனசுந்தரி எம்புட்டு ஆசையா பேசுவா... என்ன யோசிச்சு என்ன இப்ப?" என்றார் பொய்யான சோகத்துடன்

"வாய்ல வந்துருமாமா... மோகனசுந்தரியாவது சொப்பனசுந்தரியாவது..." என்ற பாட்டியின் கோபத்தை பார்த்த தாத்தா, பொக்கை வாய் மலர சத்தமாய் சிரித்தார்

இந்த காட்சியை பார்த்த அவர்களின் பேரனின் புது மனைவி நித்யா "என்ன அத்த இது... தாத்தாவும் பாட்டியும் இப்படி சண்டை போட்டுக்கறாங்க" என்றாள் தன் மாமியார் சாவித்ரியிடம்

இந்த கேள்வியை எதிர்பார்த்தவர் போல் சிரித்த சாவித்திரி "நீ இப்பதானே புதுசு... அதான் இப்படி கேக்குற... ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு கொஞ்சிக்கரத... இந்த வீட்டுக்கு கலியாணமாகி வந்த இத்தன வருசத்துல நானும் பாத்துட்டேன்... இவிங்க இப்படித்தேன்" என்றார்

**********************************************

மதிய உணவுக்கு தாத்தாவை சாப்பிட அழைத்தாள் நித்யா

"கெழவி சாப்ட்டுச்சா?" என்றார் தாத்தா

"நீங்க வாங்க தாத்தா... அப்புறம் பாட்டிய கூப்பிடறேன்"

"இல்ல கண்ணு... நேரத்துக்கு சோறுங்கலைனா பசி தாங்க மாட்டா... போய் மொதல்ல அவளுக்கு போடு" என்றார்

பாட்டியை சாப்பிட அழைக்க, பாட்டியும் அதே போல் தாத்தாவை முதலில் சாப்பிட செய்யுமாறு கூற, நான் சொன்னேன் இல்லையா என்பது போல் அர்த்த புன்னகை பூத்தார் சாவித்திரி

ஒருவழியாய் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர்

உண்ட மயக்கத்தில் ஆளுக்கொரு திண்ணையின் பாயில் சாய்ந்தனர். வேப்பமர காற்றும், தூரத்தில் கழனி வேலை செய்யும் ஆட்களின் குரலும், தாலாட்டு போல் இசைக்க, உறக்கம் கண்களை தழுவியது

**********************************************

ஒரு வாரம் ஒரு நிமிடமாய் ஓடியது

உச்சி வெய்யில் மண்டையை பிளக்க, திண்ணையில் அமர்ந்து தன் கண் கண்ணாடியுடன் போராடியபடி செய்தித்தாளில் ஆழ்ந்திருந்தார் தாத்தா

"கலெக்டர் பரிச்சயாக்கும்... அத்தன பாடுபட்டு அந்த பேப்பரை படிக்காட்டாத்தேன் என்ன?" என்றார் பாட்டி

"ஏன்? உன்ரமாறியே நாட்டுநடப்பு தெரியாம இருக்கோனுமாக்கும்"

"நாட்டு நடப்பு தெரிஞ்சு இப்ப எந்த பட்டணத்துக்கு ராஜாவாக போறீக"

"ராஜாவா போயிருக்க வேண்டியவந்தேன்... உன்ன கட்டிக்கிட்டு இப்படி காட்டுலயும் மேட்டுலயும் முடிஞ்சு போச்சு பொழப்பு"

"ஏன்? நான் கைய புடிச்சு தடுத்தனாக்கும்"

"அததுக்கு ஒரு குடுப்புன வேணும் புள்ள... எங்கப்பன் சொன்னாப்ல அந்த சித்தூர்காரிய கட்டி இருந்தா ராஜாவாகி இருப்பனோ என்னமோ" என வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தார் தாத்தா

"ஹும்க்கும்... அவள கட்டியிருந்தா பொறவு தெரிஞ்சுருக்கும் சங்கதி... கண்ண கெடுத்துகாதீகன்னு சொன்னா பேச்ச பாரு பேச்ச..." என முறைத்தார் பாட்டி

அதற்குள் யாரோ வரும் அரவம் கேட்க "ஆரது...?" என கண்ணை சுருக்கி பாட்டி பார்க்க

"அம்மோய்... பெத்த மவள ஆருன்னு கேக்கறியே" என்றபடி அருகில் வந்து அமர்ந்தார் பாட்டியின் மகள் சரோஜா

அருகில் வந்ததும் மகளை கண்டுகொண்டவர் "அடியாத்தி, வா கண்ணு...வா வா... கண்ணு சுத்தமா தெரியறதில்ல அம்மணி" என்றார் அங்கலாய்ப்பாய்

"அதான் அண்ணன் ஆபரேஷன் பண்ணிக்கோனு சொல்லுதில்ல" என சரோஜா கூற

"இம்புட்டு வயசுக்கு ஆஸ்பத்திரி பக்கம் போகாமையே இருந்தாச்சு... இனி காலம் போன கடைசீல என்னத்துக்கு அம்மணி மருந்து மாத்திரைனு"

"அது சரி..." என சிரித்தாள் மகள்

"ஏனம்மணி... கொஞ்ச நேரமே வந்துருக்கோணும்... இல்லாட்டி போனா கொஞ்ச வெய்ய தாழ வரோணும்... எதுக்கு கண்ணு இப்படி உச்சி வெயில வேத்து வடிய வர்றவ?" என தன் முந்தானையில் மகளின் நெற்றி வியர்வையை துடைத்தார் பாட்டி

"இப்படி நீ தொடைக்கற சொகத்துக்கு தாம்மா" என வாய் வரை வந்த வார்த்தைகளை சொல்லாமல் விழுங்கினார் சரோஜா

தான் பேரன் பேத்தி எடுத்துவிட்ட இந்த அறுபது வயதிலும் கூட தன்னை சிறு குழந்தை போல் நடத்த தன் அன்னையால் மட்டுமே முடியும் என தோன்றியது

எத்தனை வயது தான் ஆனால் என்ன? அன்னைக்கு பிள்ளை தான்

நம் பெற்றோர் உள்ள வரை மட்டும் தானே நமக்கு இந்த உணர்வு சாத்தியம் என தோன்றியது, அதன் பின்..... என அதற்கு மேல் நினைக்க இயலாமல் கண்ணில் நீர் நிறைந்தது

அதை மறைக்க தோட்டத்தை ரசிப்பவள் போல் பார்வையை வேறுபுறம் செலுத்தினார் சரோஜா

பெற்றோரை தன்னுடன் அழைத்து சென்று சில நாட்களேனும் வைத்து கொள்ளும் ஆசையில் "ஏம்மா? நீயும் அப்பாவும் ஒரு பத்து நா எங்கோட வந்து இருங்களேன்... எப்ப கேட்டாலும் இதோ வரேன் அதோ வரேங்கற... அண்ணன் தான் உனக்கு புள்ளயா? நான் இல்லையா?" என சண்டை போடுபவள் போல் சரோஜா கேட்க

"உங்கம்மாள வேணும்னா கூட்டிட்டு போ அம்மணி... நானுங்கொஞ்சம் அவ தொண தொணப்பில்லாம நிம்மதியா இருப்பேன்" என தாத்தா கூற, பாட்டி அவரை முறைத்தார்

"அப்பனுக்கு தான் இந்த தோட்டம் காட்ட உட்டுட்டு வர மாட்டாக... அப்படிதான் நீ மட்டுமாச்சும் வாயேம்மா..." என மகள் கேட்க

"இல்லம்மணி... அது... வெய்ய காலம் முடியட்டுங்கண்ணு... பொறவு வாறன்"

"போம்மா நீ... இப்படி சொல்லி சொல்லியே பல காலம் ஓடி போச்சு" எனவும்

"அடடே... சரோவா? ஏன் வந்தவ வெளியவே உக்காந்துட்டவ... உள்ள வா, மோர் குடிப்பியாமா" என தன் நாத்தனாரை அழைத்தார் சாவித்திரி

"அப்படியே பேசிட்டே இருந்துட்டேன் அண்ணி... இதோ வரேன்" என உள்ளே சென்றார் சரோஜா

உள்ளே சென்றதும் "பாத்தீங்களா அண்ணி... அப்பன உட்டுபோட்டு ஒரு பத்து நா வந்திருக்க மாட்டேங்குது அம்மா" என்றார் சரோஜா

"நீ வேற சரோ... அத்தைய கொஞ்ச நேரம் காணோமுன்னா போதும், மாமாவும் உசுர வாங்கிருவாக... அன்னைக்கி உங்க சின்னமாமன் சம்சாரம் போயிருச்சுன்னு அத்த உங்க அண்ணங்கோட போயிட்டாக... வர்ற வரைக்கும் மெயின் ரோடுலையே நின்னுட்டு இருந்தாக மாமா... ஆனா தெனமும் நாலு சண்டைக்கு கொறயில்ல" என சிரித்தார்

"ரெண்டு பேருக்கும் எம்பதுக்கு மேல வயசாய்டுச்சு அண்ணி... ஒருத்தர் போய் ஒருத்தர் இருந்தா என்ன செய்வாகளோனு நெனச்சாலே பயமா இருக்கு" என்றார் சரோஜா நிஜமான கவலையுடன்

அதையே தானும் பல முறை நினைத்தது தான் என மௌனமானார் சாவித்திரி

**********************************************

ஐப்பசி முடிந்து கார்த்திகை தொடங்க, வெயில் குறைந்து குளிர தொடங்கியது

"முன்னயெல்லாம் தை மாசம் தலையெல்லாம் நடுங்குனு பழமொழி சொல்லுவாக. இப்ப கார்த்திகைலையே மண்டை குளிராவில்ல இருக்கு... உங்க தாத்தன் கயித்து கட்டில திண்ணைல இருந்து உள்ள எடுத்து போடு ரமேசு" என்றார் பாட்டி, பேரனிடம்

"எனக்கொண்ணும் குளிரல... நான் இங்கயே இருக்கேன்" என்றார் தாத்தா வெளியில் இருந்தபடியே

"மேலுக்கு வந்தா தெரியுமப்பறம்" என்றார் பாட்டி அக்கறையில் விளைந்த கோபத்துடன்

"எல்லாம் எங்களுக்கு தெரியும்...நீ சும்மா இரு" என அடக்கினார் தாத்தா

"மனுசனுக்கு சொன்னா வெளங்குதா? பட்டு எந்திரிச்சா புத்தி வரும்" என முணுமுணுத்தார் பாட்டி

"நேத்தைக்கு சமஞ்சு இன்னைக்கி வந்தவளாட்டம், என்ன அங்க முணுமுணுக்கரவ? சத்தமா சொல்லு புள்ள" என தாத்தா கேட்க, பேரன் ரமேசும் அவன் மனைவி நித்யாவும் சிரித்தனர்

பாட்டிக்கு ஒரே வெட்கமாய் போய் விட "கெழவனுக்கு எப்ப என்ன பேசுறதுன்னே இல்ல... வெக்கம் கேட்ட மனுஷன்" என்றார்

அன்றிரவு பாட்டிக்கு ஏனோ நல்ல குளிர் காய்ச்சல் வந்து விட அனத்தி கொண்டே இருந்தார். காலை நேரம் சற்று காய்ச்சல் மட்டுப்பட்ட போதும் முகத்தில் இருந்த சோர்வு விலகவில்லை

டாக்டரிடம் செல்லலாம் என மகன் அழைக்க "அட போடா... அதெல்லாம் கஷாயம் குடிச்சா ஓடி போயிரும்" என மருமகளிடம் பக்குவம் சொல்லி கஷாயம் வாங்கி குடித்தார்

அன்று முழுதும் தாத்தா வீட்டை விட்டு கொஞ்சமும் நகரவில்லை

அடிக்கடி மனைவியை வந்து பார்ப்பதும், ஏதேனும் கேலி செய்து சிரிக்க செய்வதுமாய் நேரத்தை கடத்தினார்

மற்றவர் எல்லாம் உறங்க சென்று விட, தாத்தா பாட்டியின் அருகில் அமர்ந்திருந்தார் "எனக்கு எதுனா ஆகிபோச்சுனா என்ன செய்வீக?" என பாட்டி தயக்கமாய் கேட்க, ஒரு கணம் மௌனமாய் இருந்தவர்

"வேறென்ன புள்ள... மோகனசுந்தரி இன்னும் கலியாணம் கட்டாம தான் இருக்காளாமா... போய் பாக்கறது தான்" என்றார் சிரிப்போடு

வேண்டுமென்றே பேச்சை மாற்றுகிறார் என்பதை உணர்ந்த பாட்டியால் அவரோடு சேர்ந்து வழக்கம் போல் நகைக்க இயலவில்லை. மாறாக எதுவும் பேசாமல் கணவனை பார்த்தார்

சற்று நேரத்தில் உறங்கியும் போனார். தாத்தா அங்கேயே அமர்ந்து வெகு நேரம் மனைவியை கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தார்

**********************************************

மறுநாள் காலை....

"பாட்டி... எழுந்திரிங்க... காபித்தண்ணி கொண்டு வந்திருக்கேன்" என பாட்டியை எழுப்பினாள் நித்யா

பாட்டி கண் திறக்காமல் போக, சற்று பயந்தவளாய் விரைந்து சென்று தன் கணவனை அழைத்து வந்தாள். வந்து பார்த்த ரமேஷ், சில்லிட்டிருந்த பாட்டியின் உடலை தொட்டு அதிர்ந்தவனாய் "பாட்டி.... " என சத்தமாய் அழுதான்

சற்று நேரத்தில் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கம் கூடி விட, தாத்தாவிடம் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதே இப்போது எல்லோரின் பெரிய கவலை ஆனது

மனதை தேற்றி கொண்ட பாட்டியின் மகன், தந்தையின் கட்டில் அருகில் சென்று நின்றார்

புன்னகை தேங்கிய முகத்துடன் உறங்கி கொண்டிருந்த தந்தையை கண்டதும் அழுகை பீறிட "அப்பா..." என்றார் அழுகயோடே

எப்போதும் ஆழ்ந்து உறங்கும் பழக்கம் உள்ளவர் தன் தந்தை என்பதால் "அப்பா..." என்றார் மீண்டும் சற்று குரலை உயர்த்தி

அதற்கும் பதில் இல்லாமல் போக தந்தையின் கையை தொட்டவர் அதிர்ச்சியுடன் கையை இழுத்து கொண்டார். தான் நினைத்தது தவறு என நினைத்தவர் போல் மீண்டும் தந்தையின் மூக்கின் அருகில் கை வைத்து பார்த்தவர், முகம் வெளிற நின்றார்

அருகில் வந்த அவரின் மனைவி "என்னங்க ஆச்சு?" என கேட்க, "சாவித்திரி... அப்பா...அப்பா... அப்பாவும்...." என அதற்கு மேல் கூற இயலாமல் "அப்பா...." என தன் தந்தையின் உடலை கட்டி கொண்டு கதறினார்

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் தாக்க நம்ப இயலாமல் ஸ்தம்பித்தது உறவுகள்

சாவித்ரிக்கு தன் மாமியார் ராஜம்மாள், போன மாதம் வீட்டுக்கு வந்திருந்த உறவு பெண்மணி ஒருவரிடம் சொன்னது நினைவுக்கு வந்தது

"சுமங்கலியா போகோனுமின்னு நீ சொல்லுறவ... எனக்கு அந்த ஆசையில்ல ஆத்தா... நானில்லாம இந்த மனுஷன் என்ன பாடு படுவாரோனு ஆன்ம சாந்தி இல்லாம சுத்துறத விட தனியா இருக்கற வேதனைய நான் அனுபவிச்சுகறேன்... எப்படியும் அதுக்கு பொறவு நான் வெகு நாள் இருக்க மாட்டேன்" என்றார் பாட்டி அன்று

அவரின் உண்மையான அன்புக்கு பரிசாய் கடவுள் இருவரையும் ஒன்றாய் அழைத்து கொண்டார் போலும் என நினைத்தார் சாவித்திரி

"பாட்டிகாச்சும் அப்பப்ப மேலுக்கு முடியாம போகும்... தாத்தா ஒரு நோக்காடும் இல்லாம தெம்பா இருந்த மனுஷனாச்சே... எம்புட்டு இணக்கம் இருந்தா ஒரே ராவுல தூக்கத்துலயே உசுரு போகும் ரெண்டு பேருக்கும்... எத்தன பேருக்கு கெடைக்கும் இந்த பாக்கியம்..." என ஊரே பேசி பேசி மாய்ந்தது

அன்றில் பறவைகளாய் ஒரு கணமும் பிரிய மனமற்ற அந்த அன்பு உள்ளங்கள் ஒன்றாய் மேலுலகில் இணைந்தது

(முற்றும்)

43 பேரு சொல்லி இருக்காக:

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல படைப்பு ... இப்படி ஒரு அன்பு வாய்க்க கொடுத்து வைக்க வேண்டும்

r.v.saravanan said...

நல்லாருக்கு வாழ்த்துக்கள் தோழி

A.R.ராஜகோபாலன் said...

///"இப்படி நீ தொடைக்கற சொகத்துக்கு தாம்மா" என வாய் வரை வந்த வார்த்தைகளை சொல்லாமல் விழுங்கினார் சரோஜா

தான் பேரன் பேத்தி எடுத்துவிட்ட இந்த அறுபது வயதிலும் கூட தன்னை சிறு குழந்தை போல் நடத்த தன் அன்னையால் மட்டுமே முடியும் என தோன்றியது

எத்தனை வயது தான் ஆனால் என்ன? அன்னைக்கு பிள்ளை தான்

நம் பெற்றோர் உள்ள வரை மட்டும் தானே நமக்கு இந்த உணர்வு சாத்தியம் என தோன்றியது, அதன் பின்..... என அதற்கு மேல் நினைக்க இயலாமல் கண்ணில் நீர் நிறைந்தது ///

எனக்கும் கூட படிக்க முடியாமல் கண்களை மறைத்தன கண்ணீர்
அருமையான வார்த்தைகளில் அன்பை பிரயோகித்தவிதம் அற்புதம்

பத்மநாபன் said...

நாளும் பொழுதும் இணக்கமான தம்பதி சேர்ந்தே பிரிந்தார்கள் .. இணக்கத்தை ஓட்டியே சிறு சிறு பிணக்குகள் // தனியா இருக்கற வேதனைய நான் அனுபவிச்சுகறேன்.//பாட்டியிடம் தாய்மைக்கே உரிய தியாக உணர்வு...தாத்தா அந்த குறையையும் வைக்கவில்லை....அருமையான படைப்பு..வாழ்த்துகள்

vanathy said...

சூப்பர் கதை. வாழ்த்துக்கள், அம்மிணி.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான கதை. வல்லமை வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் புவனா.

எல் கே said...

நெறைய வழக்கமான கிளிஷேக்கள் இருக்கின்றன. முடிவு எதிர்பார்த்தவாறே இருக்கிறது . இன்னும் வித்யாசமாய் யோசிக்கவும்

priya.r said...

கதையில் உள்ள கதாபாத்திரங்கள் பேசும் கோவை வட்டார பேச்சு தமிழ் அழகு ;ஏன் ஆரம்பத்திலே சோக முடிவு தான் வரபோகுது என்று யோசிக்க வைக்கிறே :((


கதையின் முடிவு ஒரு சோக கவிதை :((((

அப்பாவி வர வர ஆல் ரௌண்டர் ஆகிட்டு வரேப்பா ! நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

மிக ஒன்றிப் போய்ப் படித்தேன். அழகான பழகுதமிழ் பேச்சும், கதையும் ரசித்தேன். வாழ்த்துக்கள்

RAMVI said...

//. எம்புட்டு இணக்கம் இருந்தா ஒரே ராவுல தூக்கத்துலயே உசுரு போகும் ரெண்டு பேருக்கும்... எத்தன பேருக்கு கெடைக்கும் இந்த பாக்கியம்..// இது எத்தனை பேருக்கு கிடைக்கும்.கருத்திடுவதற்க்கு வார்தைகளே கிடைக்கவில்லை..

viswam said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் இதுபோன்ற நிலைதான். நான் போனால் அவள் என்ன செய்வாளோ? அவள் போனால் நான் எப்படி இருப்பேனோ? பார்க்கலாம்.

Vasagan said...

Caption picture is heart touching.

\சுமங்கலியா போகோனுமின்னு நீ சொல்லுறவ... எனக்கு அந்த ஆசையில்ல ஆத்தா... நானில்லாம இந்த மனுஷன் என்ன பாடு படுவாரோனு ஆன்ம சாந்தி இல்லாம சுத்துறத விட தனியா இருக்கற வேதனைய நான் அனுபவிச்சுகறேன்... எப்படியும் அதுக்கு பொறவு நான் வெகு நாள் இருக்க மாட்டேன்\

எங்க அம்மா சொன்ன வரிகள்.

\"இப்படி நீ தொடைக்கற சொகத்துக்கு தாம்மா" \

அம்மாவின் நினைவில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை.

\அப்பாவி வர வர ஆல் ரௌண்டர் ஆகிட்டு வரேப்பா ! நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் \

வழிமொழிகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

// எம்புட்டு இணக்கம் இருந்தா ஒரே ராவுல தூக்கத்துலயே உசுரு போகும் ரெண்டு பேருக்கும்... எத்தன பேருக்கு கெடைக்கும் இந்த பாக்கியம்..." //

மிகவும் அழகான கதை.
எளிய யதார்த்தமான நடை.
முடிவு எதிர்பார்த்தது தான் என்றாலும், மிகவும் சுவையாக கொண்டுவந்து முடித்துள்ளீர்கள்.

இந்தக்காதல் கதை தான் அதிகம் ஜில்லுனு இருக்கு.

மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk

அன்னு said...

புவனா...

ரொம்ப நாள் கழிச்சி நம்மூரு மக்களோட வீட்டு திண்ணைல உக்கார்ந்திருக்கற மாதிரி ஒரு ஃபீலிங். எந்த ஊரு போனாலும் நம்மூரு பாஷை மாதிரி வருமா... அதுலயும் அன்பா பேசற தொனியும், உள்ளார்ந்த அக்கறையும் நம்மூரு பேச்சில மட்டுமே தென்படும்னு எனக்கொரு நினைப்பிருக்கு. அதை மறுபடியும் இந்த கதை வலுப்படுத்தியிருக்கு. Comments Aside, your talent in writing is really amazing. Hats Off..!!

பிரதீபா said...

தம்பதிகள் கடைசி வரைக்கும் இப்படி மனமொத்து இருந்தால் நம் காலத்தில் அதுவே அதிசயம்; ஒன்றாக உயிரும் பிரிந்தால், அது கொடுப்பினை.

திவா said...

படிக்க நல்லா இருந்தது. ப்ரெடிக்ட் பண்ண முடிஞ்சாத்தான் என்ன? அருமையான நடை.

ஹேமா said...

அன்பான கதையொன்று !

S.Menaga said...

கதை ரொம்ப நல்லா நெகிழ்வா இருக்கு...வாழ்த்துக்கள் அப்பாவி!!

அமைதிச்சாரல் said...

உண்மையாவே ஜில்லுன்னு இருக்கறது இந்தக்காதல்தான்..

சிவகுமாரன் said...

மனதைத் தொட்ட கதை. சிரிக்க வைத்த தாத்தா கடைசியில் கலங்கவும் வைத்து விட்டார்.

raji said...

சூப்பர்ப் ஸ்டோரி.வல்லமையில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதைங்க அம்மணி… உங்கூர் பாஷையில கதாபாத்திரங்கள் பேசியது நல்லா இருக்குதுங்க… வல்லமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

Thanai thalaivi said...

அற்புதமான கதை தங்கமணி ! என்ன சொல்லுவதேன்றே தெரியவில்லை.

எனக்கு காதல் கதைகள் அவ்வளவாக விருப்பமில்லை என்று சொன்னேனல்லவா ? மன்னியுங்கள் இந்த காதல் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ANaND said...

எளிமையான நடை ...
வலிமையான கதை...

படிச்சி முடிச்சதும் ஒண்ணுமே தோனல ...மனசு முழுசும் அப்படி ஒரு வெறுமை ....தொண்டை அடசிகிச்சி..

ஸ்ரீராம். said...

அன்பின் கதை. வல்லமையில் வந்ததற்கு வாழ்த்துகள்.

கோவை2தில்லி said...

நல்ல படைப்பு. பாராட்டுக்கள்.
நம்மூரில் பக்கத்து வீட்டில் பேசியது போன்றிருந்தது.

Never give up said...

ellarukkum Indha kudupinai kidaikanumnu naan kadavula vendikaren

தக்குடு said...

aatharsha thambathikal...... gud flow of writing with your native slang!

Mahi said...

ரா'ஜ'ம்மாவை ரா'ச'ம்மாவாதான் படிக்க வருது எனக்கு.:) சூப்பர் புவனா! நல்லகதை..வல்லமையில் பிரசுரமானதுக்கு வாழ்த்துக்கள்!

Porkodi said...

vazhakam pola ketudaren - enga javvunu oru kadhal next part??? :-(

(indha kadhai pathi comment solra alavu naan periya aal agalaiye ennum varuthathudan vanangi vidai perugiren..)

தெய்வசுகந்தி said...

Nice!!

மோகன்ஜி said...

தங்கமணி மேடம்! அண்மையில் நீங்கள் எழுதிய படைப்புகளில் இது சிறந்தது என்று நினைக்கிறேன்.. சரளமாய் செல்லும் நடையில் கதையின் போக்குடன் ஒன்றிவிட்டேன்.. படித்தபின் கண்கள் பனித்தன. அருமையான கதை. வாழ்த்துக்கள்.

வானவில்லில் உங்களைக் கொஞ்சம் கலாய்த்திருக்கிறேன்.. கடந்த இரண்டு பதிவுகளையும்,பின்னூட்டங்களையும் பாருங்கள்.. ரசிப்பீர்கள்..

கீதா said...

பிரமாதம். இதேபோன்ற மனமொத்த தம்பதியரின் மரணம் ஒரே நாளில் சம்பவித்த நிகழ்வொன்றை முன்பே அறிந்திருந்ததால் கதை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. என்னதான் சண்டையும் வம்புமாய் இருந்தாலும் ஆழ்மனத்துள் ஒத்த அலைவரிசையில் சங்கமிக்கும் அவர்களது அன்பை அழகான உரையாடல்கள் மூலமும், நிகழ்வுகளின் மூலமும் வெளிப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இராஜராஜேஸ்வரி said...

அன்றில் பறவைகளாய் ஒரு கணமும் பிரிய மனமற்ற அந்த அன்பு உள்ளங்கள் ஒன்றாய் மேலுலகில் இணைந்தது //

அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்.

Sri Seethalakshmi said...

அருமையான பதிவு.

கண் முன்னே ஒரு வயதான ஆதர்ச தம்பதி வாழ்வதாக உணருகிறேன்.

தாத்தா ஹீரோ ஆகி இருக்கிறார் :-)

கத்தி இன்றி ரத்தமின்றி ஒரு உயிர் இறப்பு...

எத்தனை மக்களளுக்கு இது கொடுத்து வைத்திருக்கு...

நான் கிராமத்து மொழி கேட்டு அறியாதவள், இருந்தாலும் எளிமையான உரைநடையால் புரிய வைத்து உள்ளீர்கள்.

நன்றி

Sathish A said...

அருமையான பதிவு.

அப்பாவி தங்கமணி said...

@ காற்றில் எந்தன் கீதம் - ஆமாங்க... நன்றிங்க

@ r.v.saravanan - நன்றிங்க சரவணன்

@ A.R.ராஜகோபாலன் - ரெம்ப நன்றிங்க சார்

@ பத்மநாபன் - தேங்க்ஸ்'ங்க அண்ணா

@ vanathy - தேங்க்ஸ் வாணி

@ ராமலக்ஷ்மி - தேங்க்ஸ்'ங்க அக்கா

@ எல் கே - வணக்கம் நக்கீரரே... தேங்க்ஸ்...:)

@ priya.r - தேங்க்ஸ் அக்கா..

@ middleclassmadhavi - ரெம்ப நன்றிங்க மாதவி

@ RAMVI - சரியா சொன்னீங்க... நன்றிங்க

@ viswam - நன்றி சார்...

@ Vasagan - தேங்க்ஸ் ப்ரொபசர் சார்...:))

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க vgk சார்

@ அன்னு - எனக்கும் நம்ம ஊரு பாஷை மேல ஒரு அலாதி ஒட்டுதல் உண்டுங்க... ரெம்ப தேங்க்ஸ் அன்னு... மொழி நடை ரசிச்சு சொன்னதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்'ப்பா...:)

@ பிரதீபா - ஆமா தீபா...தேங்க்ஸ்

@ திவா - தேங்க்ஸ் திவாண்ணா...:)

@ ஹேமா - நன்றிங்க ஹேமா

@ S.Menaga - ரெம்ப நன்றிங்க மேனகா..

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அக்கா..

@ சிவகுமாரன் - மிக்க நன்றிங்க

@ raji - தேங்க்ஸ் ராஜி'க்கா..

@ வெங்கட் நாகராஜ் - உங்க புகுந்த வீடு பாஷைனு சொல்லுங்க... ஹா ஹா... நன்றிங்க..:)

@ Thanai thalaivi - ரெம்ப நன்றிங்க தானை தலைவி...

@ ANaND - ரெம்ப நன்றிங்க ஆனந்த்

@ ஸ்ரீராம். - மிக்க நன்றிங்க

@ கோவை2தில்லி - தேங்க்ஸ்'ங்க ஆதி...

@ Never give up - நன்றிங்க

@ தக்குடு - தேங்க்ஸ் தக்குடு

@ Mahi - ஆஹா... அந்த பாயிண்ட் விட்டுட்டேன் பாருங்க... தேங்க்ஸ் மகி...நம்ம ஊரு பாஷை அழகு தான் இல்லையா மகி... :))

@ Porkodi - ஹா ஹா ஹா... தேங்க்ஸ் கொடி... அப்படினா இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு வந்து படிங்க... ஜஸ்ட் கிட்டிங்... ஜில்லு இதோ இப்போ போட்டுடறேன்...:)

@ தெய்வசுகந்தி - நன்றிங்க சுகந்தி

@ மோகன்ஜி - ரெம்ப நன்றிங்க மோகன்ஜி... கலாய்த்தல் கலக்கலா இருக்கு'ங்க... ஆனா எல்லாரும் சேந்து கமெண்ட்ல உங்களை கலாய்ச்சுட்டு இருக்காங்க போல இருக்கே...ஹா ஹா..:))

@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா... பகிர்ந்து கொண்டதற்கும்

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க'ம்மா

@ Sri Seethalakshmi - ரெம்ப நன்றிங்க சீதா

@ Sathish எ - ரெம்ப நன்றிங்க சதீஷ்

சாகம்பரி said...

என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (6/11/11 -ஞாயிறுக்கிழமை) காலை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com

அப்பாவி தங்கமணி said...

@ சாகம்பரி - ரெம்ப நன்றிங்க சாகம்பரி...;)

Asiya Omar said...

http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.

சமுத்ரா said...

நெகிழ்வான கதை

arul said...

great story

அப்பாவி தங்கமணி said...

@ Asiya Omar - நன்றிங்க ஆசியா

@ சமுத்ரா - மிக்க நன்றி சமுத்திரா

@ arul - தேங்க்ஸ்'ங்க

Post a Comment