Thursday, July 21, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (இறுதி பகுதி)

"ஒகே மீரா, நீ டயர்டா இருப்ப... வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு... நாளைக்கி பாக்கலாம்...பை" என்றான் சதீஷ்
"ம்...ஒகே பை" என்றாள் மீரா

"சரி மீரா... அப்புறம் பாக்கலாம்... இன்னும் ரெண்டு மாசம் இங்க தானே இருப்பே... உன்கிட்ட நெறைய பேசணும், கேக்கணும்" என குறும்பாய் சிரித்தாள் காயத்ரி

மீராவின் முகம் சட்டென வாடியது. அதை கவனித்த சதீஷ் "ஏய்... ஆன்ட்டி கோவில் போகணும்னு சொன்னாங்க இல்ல... கிளம்பலாம் காயத்ரி... அப்புறம் நிதானமா அரட்டை அடிப்பயாம்" என விளையாட்டாய் சொல்வது போலவே காயத்ரியிடம் "மேலும் எதுவும் பேசாதே" என்பது போல் கண்களால் செய்தி சொன்னான்

ஒரு கணம் மீராவை யோசனையாய் பார்த்த காயத்ரி "ஒகே மீரா பை.... வரோம் ஆன்ட்டி வரோம் அங்கிள்" என மீராவின் பெற்றோரிடமும் விடை பெற்று கிளம்பினர்

மீராவின் கண் பார்வையில் இருந்து மறைந்ததுமே "என்னாச்சு சதீஷ்?" என்றாள் காயத்ரி

"ஏதோ பிரச்சனயோனு தோணுது காயு... மீரா இயல்பா இல்ல. ஸ்டீவ் பத்தி தெரிஞ்ச மாதிரி நீ காட்டிக்காதே. நான் அவகிட்ட நாளைக்கு பேசிட்டு சொல்றேன்" என்ற சதீஷின் முகத்தில் கவலை தென்படவும்

"ஒண்ணும் இருக்காது சதீஷ், கவலைப்படாத. அப்படி இருந்தாலும் எதாச்சும் சின்ன சண்டையா தான் இருக்கும். நாம போடாத சண்டையா? ஒரே நாளுல மறுபடி கொஞ்சிப்போமே" என அவன் கவலையை திசை திருப்பும் பொருட்டு கேலியாய் பேச்சை மாற்றினாள்

அதை உணர்ந்தவன் போல் "அதுவும் சரி தான்" என சிரித்தான் சதீஷ்

********************************************************
மறுநாள் மீராவின் வீட்டிற்கு சென்றான் சதீஷ்

"வா சதீஷ்... காயத்ரி வரலையா?" என விசாரித்தார் மீராவின் அன்னை

"இல்ல ஆன்ட்டி, அவளுக்கு க்ளாஸ் இருக்குனு போய்ட்டா" என்றவன் "எங்க ஆன்ட்டி மீராவ காணோம்? மேடம் ரூம்குள்ள எல்லாம் அடங்கி இருக்க மாட்டாளே.. வெளிய போய் இருக்காளா?" என கேட்டவன், அந்த அன்னையின் முகம் மாறிய விதத்தில் ஏதோ சரியில்லை என உணர்ந்தவனாய் "என்னாச்சு ஆன்ட்டி?" என்றான்

"என்னனு தெரியல சதீஷ், ஆனா மீரா முன்னபோல இல்லனு தோணுது. எப்பவும் சிரிப்பும் கலகலப்புமா இருக்கற சுபாவமே மாறி போன மாதிரி இருக்கு. அங்க ஏதாவது பிரச்சனையா சதீஷ்? உங்கிட்ட எல்லாமும் சொல்லுவாளே" என கேட்டார்

என்னவென்று சொல்வது என ஒரு கணம் தயங்கியவன் "அப்படி ஒண்ணும் இல்ல ஆன்ட்டி, அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணின டயர்ட்னு நினைக்கிறேன். நீங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க" என பெற்றவளின் கலக்கத்தை போக்க முயன்றான்

"நான் கூட மொதல்ல அப்படித்தான் நினைச்சேன் சதீஷ். நேத்து நைட் நடுவுல முழிப்பு வந்ததுனு தண்ணி குடிக்கலாம்னு எழுந்தேன். மீரா ஹால்ல உக்காந்துட்டு இருந்தா. என்னை பாத்ததும் அவசரமா கண்ண தொடச்சுகிட்டா. கேட்டதுக்கு ஒண்ணுமில்லனு சாதிச்சா... ஆனா, எதையோ பறிகுடுத்தவ மாதிரி இருக்கா சதீஷ். எனக்கு மனசே சரி இல்ல" என்றவரின் கண்ணில் நீர் துளிர்த்தது

"ஐயோ... என்ன ஆன்ட்டி நீங்க? இதுக்கு போய் டென்ஷன் ஆகிட்டு. அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. உங்க சமாதானத்துக்காக வேணா நான் மீராகிட்ட பேசி பாக்கறேன் சரியா" என ஆறுதல்படுத்த முயன்றான்

"சரிப்பா... மீரா மேல ரூம்ல இருக்கா, நீங்க பேசிட்டு இருங்க. இன்னிக்கி நீ லஞ்ச் சாபிட்டுட்டு தான் போகணும். நான் மாலதிம்மாகிட்ட உனக்கு பிடிச்சத செய்ய சொல்லிடறேன்" என்றவாறே சமையல் அறை நோக்கி சென்றாள் மீராவின் அன்னை ராஜேஸ்வரி

சிறு வயது முதலே அந்த வீட்டின் சொந்த பிள்ளை போல் நடத்தப்படுபவன் சதீஷ். சமையல் செய்யும் மாலதி அம்மா முதல் தோட்டவேலை செய்யும் கணேஷ் வரை அனைத்து வேலையாட்களும் அவனை நன்கு அறிந்தவர்கள் தான்
மீராவின் அறைக்கதவை தட்டியவன் பதில் வராமல் போக "மீரா..." என அழைத்தவாறே கதவை திறந்தான். உள்ளே அவள் இல்லாததால், அவள் அறையை சேர்ந்தது போல் இருந்த பால்கனியை திறந்தான்

அங்கு ஒரு புறம் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் மீரா. சதீஷ் பின்புறம் வந்து நின்றதை கூட உணராதவள் போல், ஏதோ யோசனையில் இலக்கின்றி பார்த்து கொண்டு இருந்தவளை கண்டதும் சதீஷின் மனம் துணுக்குற்றது

"மீரா.." என அழைக்க அவளிடம் சலனம் இருக்கவில்லை. பதறியவனாய்

"மீரா..." என அவள் கையை அழுத்தினான்

"அஹ்..." என பதறி எழுந்தாள்

"என்னாச்சு மீரா?" என்றவன் கேட்க

"அ...அது..சதீஷ்... அப்படியே தூங்கிட்டேன் போல இருக்கு" என்றாள்

"கண்ணை திறந்துகிட்டே தூங்கறதுக்கு புதுசா எதுனா கோர்ஸ் எடுத்தியா?" என கேலி போல் பேசி அவளது மனநிலையை மாற்ற முயன்றான் சதீஷ்

"அ...இல்ல. தெரில" என தடுமாறினாள்

சதீஷ் எதுவும் பேசாமல் அவளை பார்த்தான். அந்த பார்வையே பல கேள்விகளை கேட்டதை உணர்ந்த மீரா, அதை தவிர்க்க முயல்பவள் போல்

"காயத்ரி வரலையா?" என பேச்சை மாற்றினாள்

அதற்கு பதில் கூறாமல் தன் கேள்வியான பார்வையை அவள் மீதிருந்து அகற்றாமல் நின்றான் சதீஷ்

"ம்...என்ன சதீஷ்? காயத்ரி வரலையானு கேட்டா பதிலே சொல்லாம நிக்கற?" என்றாள் மீரா, இயல்பாய் பேச முயன்றபடி

ஆனால் அவனோ "என்னாச்சு மீரா? " என்றான் மீண்டும்

"எ..என்ன? எத பத்தி கேக்கற?" என பார்வையை வேறு புறம் திருப்பினாள்

"நான் எத பத்தி கேக்கறேன்னு உனக்கு தெரியும் மீரா" என்றான் உறுதியான குரலில்

"இல்ல... எனக்கு தெரில" என்றாள் அவனை பாராமல்

"சரி... நேரடியாவே கேக்கறேன். ஸ்டீவ்கூட என்ன பிரச்சன?" என்ற கேள்விக்கு மீராவிடமிருந்து பதிலேதும் வரவில்லை

ஆனால் அதுவே என்ன நடந்திருக்கும் என யூகிக்க சதீஷ்'க்கு போதுமானதாய் இருந்தது. "அப்போதே சொன்னேனே" என தொண்டை வரை வந்த வார்த்தைகளை கட்டுப்படுத்தி நிறுத்தினான்

ஏற்கனவே அடிப்பட்ட தோற்றத்தில் இருப்பவளிடம் இதை கூறி குற்றஉணர்வில் ஆழ்த்த மனமில்லாதவனாய் "விடு மீரா... எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ" என்றான் ஆறுதலாய்

ஆனால் அந்த ஆறுதல் வார்த்தைகள் மீராவை இன்னும் வேதனையுற செய்தது. சதீஷ் தன்னை திட்டி இருந்தால் கூட பரவாயில்லை என எண்ணினாள் மீரா

தன் நலனில் அக்கறை கொண்டு அவன் பேசிய போதெல்லாம் அவனை உதாசீனம் செய்தேனே என குற்றஉணர்வில் துவண்டாள்

அவளின் அந்த தோற்றம் வேதனையை தர, உன் நண்பன் நான் இருக்கிறேன் என உணர்த்துவது போல் அவள் கையை தன் கைகளுக்குள் வைத்து அழுத்தினான் சதீஷ்

அந்த செய்கை மீராவை முற்றிலும் பலவீனமாக்கியது. அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அவன் கைகளில் முகம் புதைத்து அழுதாள்

அவள் அழுகையை காண சகியாத போதும், சற்று அழுது சமாதானமாகட்டும் என நினைத்தவன் போல் அவள் தலையை ஆறுதலாய் வருடி நின்றான் சதீஷ்

ஆனால் அழுகையை நிறுத்தும் எண்ணமே இல்லாதவள் போல் மீரா கண்ணீரை நிறுத்தும் வழி அறியாமல் இருக்க "என்ன மீரா இது? இங்க பாரு... ப்ளீஸ் மீரா... மொதல்ல அழறத நிறுத்து" என்றான்

மெல்ல தலை உயர்த்தியவள் "எல்லாம் முடிஞ்சு போச்சு... எல்லாமே..." என்றாள் விசும்பலினூடே

"ஷ்... இட்ஸ் ஒகே... முடிஞ்சதை நினைச்சு மனச போட்டு குழப்பிக்காதே. இங்க பாரு மீரா. தகுதி இல்லாத ஒருத்தனுக்காக உன்னையும் வருத்திகிட்டு சுத்தி இருக்கரவங்களையும் உன்னை பாத்து வருத்தப்பட வெக்கறது சரியில்ல. எழுந்திரு, பேஸ் வாஷ் பண்ணிட்டு வா. கீழ போலாம்" என்றான்

இவள் இப்படி வருந்தும் படி அந்த ஸ்டீவ் என்ன செய்து தொலைத்தான் என்ற கோபத்தில் நடந்ததை அறிந்து கொள்ள மனம் துடித்த போதும், அது இதற்கான தருணமல்ல என நினைத்தான் சதீஷ்

ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவளை, அவள் மறக்க வேண்டிய ஒரு விடயத்தை பற்றி பேச செய்து மேலும் கஷ்டப்படுத்த விருப்பமில்லாமல் மௌனமானான்

என்னதான் ஸ்டீவின் மீது கோபம் இருந்த போதும், சதீஷ் ஸ்டீவை "தகுதி இல்லாதவன்" என்ற போது மீராவிற்கு வருத்தமானது. சற்றும் யோசிக்காமல் ஸ்டீவ் தன்னை உயிர் நோக பேசினான், தனக்கோ அவனை பற்றி தவறாய் ஒரு சொல் கேட்க பொறுக்கவில்லையே என மீண்டும் அதே நினைவில் உழன்றாள்

மீண்டும் கண்ணில் நீர் துளிர்க்க நின்றவளை காண சகியாதவனாய் "மீரா... சொல்றத கேளு, ஒருத்தர நினைச்சு வருத்தப்படக்கூட அவங்க அதுக்கு தகுதியானவங்களா இருக்கணும்....நான்..."

"ப்ளீஸ் சதீஷ்... அப்படி சொல்லாத... ப்ளீஸ்" என அவனை இடைமறித்தாள் மீரா

அவளின் அந்த செய்கை சதீஷுக்கு கோபத்தை தூண்டியது. "அவன் உன்னை இத்தனை அழவெச்சும் இன்னுமா....? ச்சே, என்ன பைத்தியக்காரத்தனம் மீரா இது?" என கட்டுப்படுத்த முயன்றும் கேட்டுவிட்டான்

அவள் பதில் பேச இயலாமல் குறுகி நின்ற தோற்றம் சதீஷின் கோபத்தை காணாமல் போக செய்தது "சாரி மீரா... நான்..." அதற்கு மேல் என்ன சொல்வதென தோன்றாமல் சற்று நிறுத்தியவன், இன்னும் குரலை தாழ்த்தி

"இட்ஸ் ஒகே விடும்மா... பாஸ்ட் இஸ் பாஸ்ட்... கீழ போலாம் வா... ஆன்ட்டி காணோம்னு பாத்துட்டு இருப்பாங்க"

********************************************************
"வா சதீஷ். காயத்ரி வரலியா?" என மீராவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கேட்க

"ஆஹா...என்ன எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி ஒரே கேள்வி... இன்னும் கொஞ்ச நாள் போனா காயத்ரி இல்லாம இங்க உள்ள வர முடியாதுனு சட்டம் வரும் போல இருக்கே அங்கிள்... அப்படியா மீரா?" என மீராவை இயல்பாக்கும் நோக்கத்துடன் அவளையும் பேச்சில் இழுத்தான் சதீஷ்

"ஹா ஹா... அப்படி எல்லாம் இல்ல கண்ணா... கனடால இருந்து வந்ததுல இருந்து உன்னை தனியாவே பாக்க முடியலையேனு கேட்டேன்" என்றார் அவரும் கேலியாய்

"ஹ்ம்ம்... அது கரெக்ட் தான் அங்கிள்... அதான் இன்னைக்கி பிளான் பண்ணி அவகிட்ட இருந்து எஸ்கேப் ஆய்ட்டேன்" என சிரித்தான் சதீஷ்

"இரு இரு... மறுபடி காயத்ரிய பாக்கறப்ப சொல்றேன் இதை" என மிரட்டல் போல் மீராவின் அம்மா கூற

"ஐயையோ... வேண்டாம் ஆன்ட்டி... நான் முழுசா கனடா போய் சேரணும்" என சதீஷ் பயந்தவன் போல் பாவனை செய்ய, எல்லாரும் சிரித்தனர்

மீரா முன் போல் உளமார சிரிக்கவில்லை என்றபோதும் மெல்ல முறுவலித்தாள். அதை கண்ட மீராவின் அம்மா அருகில் நின்ற மகளை மகிழ்வுடன் தோளோடு அணைத்து கொண்டார்

"சரி சரி... சாப்பிடலாம் வாங்க. எல்லாம் ரெடியா இருக்கு" என மீராவின் அம்மா சொல்ல எல்லாரும் சாப்பிட சென்றனர்

"என்ன ஆன்ட்டி... முன்னயெல்லாம் அங்கிள்'க்கு சாப்பாடு ஆபீஸ்க்கு தானே போகும்... இப்ப லஞ்ச்க்கு வீட்டுக்கு வந்துடறார் போல இருக்கே"

"ஆமாம் சதீஷ்... மீரா கனடா போனதுல இருந்து எனக்கு ஒருத்தியே நாள் பூரா வீட்டுல இருக்கற மாதிரி கஷ்டமா இருந்தது... அதான் இப்படி மாத்தியாச்சு" என்றார் மீராவின் அன்னை

"தனியாவா? வீட்டுல நாலு வேலைக்காரங்க இருக்காங்களே ஆன்ட்டி... அங்கிள்'ஐ வீட்டுக்கு சாப்பிட வரவெக்க கிடைச்ச சான்சை யூஸ் பண்ணிட்டீங்கனு சொல்லுங்க" என சதீஷ் கேலி செய்ய

"ஹா ஹா... சரியா சொன்ன சதீஷ்... ஆனா பொண்டாட்டி பரிமாற சாப்பிடரதுலையும் ஒரு சுகம் இருக்கு தானே... சரினு நானும் வந்துடறேன்" என கிருஷ்ணமூர்த்தி சதீஷின் கேலிக்கு ஈடு கொடுப்பது போல் பேசினார்

"சும்மா இருங்க..." என கணவனை பொய்யாய் கோபித்து கொண்டாள் ராஜேஸ்வரி

பெற்றோர் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பும் அன்நோயோன்யமும் கண்ட மீராவிற்கு ஸ்டீவின் முகம் கண் முன் வந்தது. நாமும் அப்படி வாழ்வோமென நினைத்தேனே, இப்படி எல்லாம் கனவாய் போக செய்தாயே பாவி என நினைத்தவளுக்கு அதற்கு மேல் சாப்பிட இயலாமல் தொண்டை அடைத்தது

எழப்போனவளை தடுத்த அவள் அம்மா "என்ன மீரா இது? நாலு கவளம் கூட உள்ள போகல... இப்படி சாப்ட்டா என்ன தெம்பு இருக்கும். இரு, கொஞ்சம் ரசம் போட்டுக்கோ" என பரிமாற முயல

"இல்லம்மா... போதும்...பசி இல்ல" என தடுத்தாள் மீரா

"என்ன கண்ணம்மா பீட்சா பர்கர்னு அந்த ஊரு சாப்பாட்டுக்கு நாக்கு பழகிடுச்சு போல இருக்கே... டிரைவர்கிட்ட சொல்லி அத வேணா வாங்கிட்டு வர சொல்லவா?" என மீராவின் தந்தை கேட்க

"இல்லப்பா... இன்னும் ஜெட் லேக் இருக்கறதால சரியா தூங்காம சாப்பிடவே தோணல...ரெண்டு மூணு நாளுல சரி ஆய்டும்" என சமாளித்தாள்

"இட்ஸ் ஒகே மீரா... தயிர் சாதம் மட்டுமாச்சும் சாப்பிடு" என கட்டாயப்படுத்தி அவளை உண்ண செய்தான் சதீஷ்

சாப்பிட்டானதும் நால்வரும் முன் அறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்

"சதீஷ், உங்க சம்மர் ப்ராஜெக்ட் எப்போ ஆரம்பிக்குது?"

"நெக்ஸ்ட் வீக் அங்கிள்..." என்றவன் மீராவின் புறம் திரும்பி "மீரா, மண்டே மார்னிங் பத்து மணிக்கு நாம அந்த கம்பெனிக்கு போகணும். ரெடியா இரு சரியா" என சதீஷ் கூற, மீரா பதில் பேசாமல் மௌனமாய் இருந்தாள்

மற்ற மூவரின் பார்வையும் இப்போது மீராவின் மேல் நிலைத்தது. "மீரா..." என அவள் தந்தை அழைக்க

"நான்... அந்த ப்ராஜெக்ட் செய்யல" என்றாள் தயங்கிய, ஆனால் தீர்மானமான குரலில்

"ஏன் மீரா? நீ தானே அந்த டாபிக் சூஸ் பண்ணின... ஆனா, திடீர்னு இப்போ வேற கம்பெனில எப்படி....நம்ம கம்பெனில செய்யறது சரி வராதுன்னு நீ மொதலே சொல்லிட்ட" என சதீஷ் கேள்வியாய் நிறுத்த

"அது... நான் இனி கனடா போகல... கோர்ஸ் டிஸ்கண்டினியு பண்றேன்" என்றாள். சதீஷ் எதுவும் பேசாமல் அவளை பார்த்தான்

"என்ன மீராம்மா இது? ஏன் பாதில நிறுத்தற, நீ செய்வன திருந்த செய்னு சொல்றவளாச்சே" என தந்தை கேட்க

"இல்லப்பா... எனக்கு இங்க இருக்கத்தான் பிடிச்சுருக்கு" என்றாள் மெல்லிய குரலில்

அதுவரை பேசாமல் இருந்த மீராவின் அம்மா "அப்பாடா... இனி என் பொண்ணு இங்கயே இருப்பா... ரெம்ப சந்தோஷம்டா செல்லம்" என மகளை அணைத்து முத்தமிட்டாள்

ஆனால் அவள் தந்தைக்கு ஏதோ சரி இல்லையென தோன்றியது. இந்த இரண்டு நாளில் பழைய மீராவை காண இயலாதது வேறு உறுத்தியது. என்ன தான் ஏழு தலைமுறைக்கு சொத்து இருந்த போதும், அதற்கு ஒரே வாரிசு மீரா தான் என்றபோதும், மகளிடம் செல்லம் காட்டும் அளவுக்கு கண்டிப்பும் காட்டுவார் தந்தை

இருக்கும் சொத்தை கட்டி காப்பாற்ற கூட உரிய கல்வியும், திறமையும் வேணும் என நினைப்பவர். கற்ற கல்வியின் திறமையோடும் உற்ற நண்பனான சதீஷின் தந்தை ராமகிருஷ்ணனின் துணையோடும், அதோடு கடின உழைப்பால் உயர்ந்தவர் என்பதால் படிப்பு விசயத்தில் எப்போதும் கண்டிப்பு காட்டுவார்

இப்போதும் அதே எண்ணத்தில் "மீரா... அதென்ன அர்த்தமில்லாத முடிவு. இங்கயே படின்னு சொன்னதுக்கு வெளிய போய் தான் படிப்பேன், அப்ப தான் தனியா இருந்து நெறைய கத்துக்கமுடியும்னு சொல்லி பிடிவாதமா கனடா போன... இப்ப இப்படி சொல்ற. நிலையான மனசு இருக்கணும் மீராம்மா" என அதட்டல் போல் பெற்றவர் கூறவும்

"என்ன நீங்க? அவளே..." என பேச தொடங்கிய மனைவியை "நீ பேசாம இரு ராஜி..." என அடக்கியவர் "பதில் சொல்லு மீரா" என்றார் மகளிடம்

தன் மனதை புரிந்து கொள்ளாமல் தந்தை இப்படி பேசுகிறாரே என்ற ஆதங்கத்தில் வார்த்தைகளை கொட்டினாள் மீரா "நான் இங்க இருக்கறது உங்களுக்கு பிடிக்கலைனா எதாச்சும் லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கிக்கறேன்'ப்பா... என்னால யாருக்கும் கஷ்டம் வேண்டாம்" என்றவள் அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல், அவளை அணைத்திருந்த அன்னையின் தோளில் முகம் புதைத்து விசும்பினாள்

"ஏன் இப்படி கொழந்தைய அழ வெக்கறீங்க... அவ படிச்சு ஒண்ணும் சாதிக்க வேண்டாம்... உங்க அப்பாவுக்கு வேற வேலையில்ல... நீ அழாதடா செல்லம்... நீ எங்கயும் போக வேண்டாம் இங்கயே இரு கண்ணம்மா" என மகளை ஆறுதல்படுத்தினாள் அன்னை

மகளின் அழுகை அவள் தந்தையையும் அசைத்தது "மீராம்மா... என்னடா பேசற. நீ தானேடா எங்களுக்கு எல்லாமும். நீ இங்க இருந்தா சந்தோசப்படற மொதல் ஆள் நான் தான். ஆனா..." என்றவரை மகளின் வேதனை நிறைந்த முகம், அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தது

ஏதோ சரியில்லை என்பதை புரிந்து கொண்டார். அது என்னவென அறிந்து ஆவன செய்யும் வரை மகளின் முகத்தில் பழைய சிரிப்பை பார்க்க இயலாது என உணர்ந்தவர் போல் "சரிடா, நீ எங்கயும் போக வேண்டாம் விடு... அப்பா எதுவும் தப்பா சொல்லி இருந்தா சாரி" எனவும், மீராவிற்கு உடனே எல்லாமும் சொல்லி பெற்றவர் மடியில் சாய்ந்து சத்தமாய் அழ வேண்டும் போல் தோன்றியது

ஆனால் அதை பெற்றோர் இருவரும் தாங்கி கொள்ள மாட்டார்கள் என உணர்ந்தவளாய் "சாரிப்பா... நானும் ஏதோ தெரியாம பேசிட்டேன்" என்றதோடு நிறுத்தி கொண்டாள்

"பரவால்ல கண்ணம்மா... சரி ராஜி, நான் ஆபீஸ்க்கு கிளம்பறேன்" என்றவர் சதீஷின் பக்கம் திரும்பி "சதீஷ், உங்க அப்பாகிட்ட ஒரு பைல் தரணும். கார்ல இருக்கு, வர்றியா தரேன்" எனவும்

தன்னிடம் மீராவை பற்றி பேசவே அழைக்கிறார் என புரிந்தவனாய் "ஒகே அங்கிள் வரேன்... சரி ஆன்ட்டி, நானும் அப்படியே கிளம்பறேன். காயத்ரிய காலேஜ்ல பிக் அப் பண்றேன்னு சொல்லி இருந்தேன். பை மீரா. டேக் கேர்" என்றவன் மீராவின் தந்தையோடு சேர்ந்து வெளியே வந்தான்

அவர் எதுவும் கேட்கும் முன்பே "அங்கிள்... இங்க வேண்டாம்... நீங்க முன்னாடி போங்க, நான் நம்ம ஆபீஸ்க்கு வரேன். அங்க போய் பேசிக்கலாம்" என்றான் சதீஷ்

சரி என்பது போல் தலை அசைத்தவர், டிரைவரை கார் எடுக்க சொல்லி பணித்தார்

********************************************************
"சொல்லு சதீஷ்... என்ன பிரச்சன?" என நேரடியாய் பேச்சை தொடங்கினார் மீராவின் தந்தை

ஸ்டீவ் பற்றி, மீராவுக்கும் ஸ்டீவுக்குமான காதல் பற்றி தான் அறிந்ததை மறைக்காமல் தெரிவித்தான் சதீஷ். முதலில் மீரா அறியாமல் இப்படி சொல்வது சரி இல்லையோ என உறுத்தியது

ஆனால், அவள் படிப்பை தொடர போவதில்லை என்றதும், இந்த விஷயம் அவள் தந்தைக்கு மட்டுமேனும் தெரிவதே நல்லதென நினைத்தான்

அதுமட்டுமின்றி, மீரா அதிலிருந்து மீண்டிருந்தால் கூட சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். அதை எண்ணி எண்ணி அவள் தன்னை வருத்தி கொள்வதை கண்டதும், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமெனில் அவள் தந்தை அதை பற்றி அறிவதே நல்லதென்ற முடிவுக்கு வந்தான்

சதீஷ் சொல்லி முடிக்கும் வரை முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் பொறுமையாய் கேட்டவர் "சதீஷ்... நான் காதலுக்கு எதிரி இல்ல. என் பொண்ணோட எதிர்காலம் பத்தி எனக்கு நெறைய கனவுகள் இருந்தாலும், அவளோட சந்தோசத்தை விட எனக்கு எதுவும் பெருசில்ல. என் மீரா முகத்துல இத்தன வேதனைய நான் இதுவரை பாத்ததில்ல சதீஷ். அவ பிடிவாத குணம் சின்னதுல இருந்தே உனக்கும் தெரியும். அதான், இந்த வேதனை நிரந்தரமாய்டுமோனு பயமா இருக்கு" என்றார் வேதனையுடன்

அவரை எப்போதும் அப்படி பார்த்திராத சதீஷும் வருத்தமாய் உணர்ந்தான். "வருத்தப்படாதீங்க அங்கிள்... அந்த ஸ்டீவ் மட்டும் என் கைல கிடைச்சா வெட்டி போட்டுடலாம்னு இருக்கு...ச்சே" என்றான் கோபமாய்

"என் மகள இப்படி அழ வெக்கரானேனு எனக்கும் அப்படி தான் தோணுது சதீஷ். ஆனா, அவன பத்தி தப்பா பேசினதுக்கு இன்னிக்கி காலைல கூட அவ கண் கலங்கினானு நீ தானே சொன்ன. பொறுமையா யோசிக்கலாம், மீராவுக்கு பாதிப்பில்லாம இதை எப்படி சரி செய்யறதுன்னு கண்டுபிடிக்கணும்" என்றார் தந்தைக்கே உரிய கவலையுடன்

"என்ன பிரச்சனைனு தெரிஞ்சாலாவது என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம் அங்கிள். இப்ப கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கே" என்றான் சதீஷ்

"ம்... நீ சொல்றதும் சரி தான். அந்த ஸ்டீவ்கிட்ட பேசி பாரேன் சதீஷ். எதாச்சும் விஷயம் கிரகிக்க முடியுதானு பாரு" என்றார்

"நேத்து மீராவ ஏர்போர்ட்ல பாத்தப்பவே ஏதோ பிரச்சனைனு மனசுல பட்டது அங்கிள். நேத்து நைட் ஸ்டீவ் நம்பருக்கு ட்ரை பண்ணினேன். லைனே போக மாட்டேங்குது. அங்க இன்னொரு பிரெண்ட் மது'னு ஒருத்தி இருக்கா. அவகிட்ட சொல்லி நேர்ல போய் பாக்க சொன்னேன். அவ இன்னிக்கி காலைல போன் பண்ணி இருந்தா. அபார்ட்மென்ட் பூட்டி இருக்கு. தட்டி பாத்தா யாரும் திறக்கலைனு சொன்னா. அவன் செல்போன் நம்பர் மட்டும் தான் எங்க எல்லார்கிட்டயும் இருக்கு அங்கிள். அவங்க பேரன்ட்ஸ் வீட்டு நம்பர் எல்லாம் இல்ல. அவனுக்கு ஈமெயில்'ம் அனுப்பி இருக்கேன் அங்கிள்" என்றான்

"ம்... என்ன பிரச்சனைனு உன்னால எதுவும் யூகிக்க முடியுதா சதீஷ்? கொஞ்சம் யோசிச்சு பாரேன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி ஏதேனும் வழி கிடைக்காதா என யோசித்தவராய்

"அவனுக்கு கொஞ்சம் முன் கோபம் அதிகம் அங்கிள். எதாச்சும் கோபமா பேசி இருப்பானோனு தோணுது"

"வெறும் கோபமான பேச்சு மீராவை இத்தன பாதிக்காது சதீஷ். அங்க போக மாட்டேன்னு சொல்றன்னா, அவன் முகத்துலேயே முழிக்க விருப்பமில்லாம போற அளவுக்கு ஏதோ நடந்து இருக்கு. அவன் போன் எடுக்கலை, அபார்ட்மென்ட்லயும் இல்லைன்னு வேற நீ சொல்ற. நாலு நாள் பொறுத்து மீராகிட்டயே மறுபடி பேசி பாக்கலாம் சதீஷ். அவ அம்மாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம் இப்போதைக்கு" என்றார் மனைவியின் மென்மையான மனம் புரிந்தவராய்

"ஒகே அங்கிள். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. எல்லாம் சரி ஆய்டும்" என சமாதானம் போல் சொல்லி கிளம்பினான் சதீஷ்

********************************************************
மீராவோ நாளுக்கு நாள் இன்னும் நத்தை ஓடாய் தன்னை சுருக்கி கொண்டாள். எந்நேரமும் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். எத்தனை கேட்டும் எதுவும் இல்லை என சாதித்தாள்

ஸ்டீவ் கோபத்தில் பேசிய வார்த்தைகளை கூட மீரா மன்னிக்க தயாராய் இருந்தாள். ஆனால் அவன் தன்னுடைய இடத்தில் வேறு ஒருத்தியை நினைத்ததை அவளால் தாங்க இயலவில்லை

சிறு வயது முதலே எப்போதும் எதிலும் முதலாய் இருக்கவேண்டுமென நினைப்பவள் மீரா. படிப்பிலாகட்டும், விளையாட்டிலாகட்டும், மற்ற திறமைகளை வளர்த்து கொள்வதிலாகட்டும் எதிலும் முதலில் இருப்பாள்

அவள் தந்தை கிருஷ்ணமூர்த்தி படிப்பு விசயத்தில் கொஞ்சம் கண்டிப்பு காட்டுவார் தான் என்ற போதும், முதலாய் வரவேண்டுமென அவளை எதிலும் திணித்ததில்லை. அவள் அன்னையோ மகளிடம் எப்போதும் செல்லம் கொஞ்ச மட்டுமே அறிந்தவள்

ஸ்டீவ் தன் மீது கொண்ட காதலை அறிந்த போதும், அளவில்லாத காதலை அவன் காட்டிய போது, தன் மீது கொண்ட அளவுகடந்த அன்பினால் சதீஷ் மீது கோபம் கொண்டான் என அறிந்த போதெல்லாம் தான் மிகவும் அதிஷ்டம் செய்தவள் என மகிழ்ந்தாள்

ஆனால், அதே நிலையில் ஸ்டீவின் மனதில் வேறு ஒருத்தி இருந்தாள், அவளை அவனும் நேசித்தான், திருமணம் வரை யோசித்தான் என்ற நினைவே உயிர் போவது போன்ற வேதனையை தந்தது மீராவுக்கு

தன் மனதில் அவன் முதல் இடத்தில் இருக்கும் போது, தான் அவன் மனதில் அப்படி இல்லை என்பதை அவள் மனம் ஏற்க மறுத்தது. இந்த காலத்தில் காதல் கை கூடாமல் போவதும், அதன் பின் இன்னொரு காதலை ஏற்பதும் பெரிய விஷயம் இல்லை என அவள் தனக்கு தானே வாதாட முயன்று தோற்றாள்

அவளின் மனம் அதை ஏற்க மறுத்தது. அதை சாதாரண விசயமாய் அவளால் ஏற்று கொள்ள இயலவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாய் அவன் ஏன் அதை தன்னிடம் மறைக்க வேண்டும்

அதற்கும் ஒரு காரணம் சொன்னனே "அந்த காரணத்தினால் நீ என் மேல் கொண்ட அன்பு குறைவதை ஏற்று கொள்ள முடியாதென". இது உண்மை தானா?

முன்னாள் காதலியிடமும் இதே போல் பேசி இருப்பானோ என மனம் மீண்டும் அங்கேயே வந்து நின்றது. இப்போது அவன் மனதில் அந்த பெண்ணின் பாதிப்பு துளியும் இல்லையென எப்படி நம்ப முடியும்

இப்போது தன்னால் இயலவில்லையே. எத்தனை முயன்றும் துளியும் அவன் நினைவை அகற்ற முடியவில்லையே. வேண்டாம் எனும் நினைவு தானே மீண்டும் மீண்டும் முன்னே வந்து வதைக்கிறது

இனி எத்தனை வருடம் தான் ஆனாலும் இந்த வலி எப்படி மறையும். அதே போல் தானே அவனுக்கும், அந்த தோற்ற காதலின் வடு மனதில் இருக்கத்தானே செய்யும்

ஒருவேளை வாழ்வில் அவனோடு இணைந்தால், என்றேனும் ஒரு தருணத்தில், ஒரு கோபமான மனநிலையில் "முன் விரும்பியவளை மணந்திருந்தால் வாழ்வு சிறப்பாய் இருந்திருக்கும்" என கூறிவிட்டாலோ, அல்லது அவன் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றினாலும் கூட அதன் பின் அந்த வாழ்வுக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே என நினைத்தாள்

தன்னால் அதன் பின் உயிர் வாழ இயலாது, அதற்கு பதில் பெற்றோருக்கு உற்ற மகளாய் இப்படியே வாழ்ந்து விடுவது சரியென்ற முடிவுக்கு வந்தாள்

அந்த முடிவிலும் தன்னால் நிலைத்து இருக்க முடியாது என்பதை மீரா அன்று உணர்ந்தாள். மூன்று வாரமாய் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாள் என வற்புறுத்தி அவளை வெளியே அழைத்து சென்றனர் சதீஷும் காயத்ரியும்

சினிமா அரங்கில் சென்று அமர்ந்தால் மீராவுக்கு மனதில் எதுவும் பதியவில்லை. காயத்ரியும் சதீஷும் எத்தனை முயன்றும் அவள் முகத்தில் சிரிப்பை வரவழைக்க இயலவில்லை

சினிமா முடிந்து சாப்பிடவென உணவகத்துக்கு சென்றனர். மீராவை கொஞ்சமேனும் சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றானது மற்ற இருவருக்கும். மூன்றே வாரத்தில் மூன்று மாதம் பட்டினி கிடந்தவள் போல் மெலிந்து, சிரிக்க மறந்த கண்களை பார்க்க பார்க்க சதீஷிக்கு தாளவில்லை

ஸ்டீவை நேரில் கண்டால் கொல்லவும் தயங்கமாட்டேன் என மனதிற்குள் நினைத்து கொண்டான் சதீஷ். இப்படி அவன் நினைத்து கொண்டிருந்த வேளையில் மீரா திடீரென வேகமாய் உணவகத்தினுள் இருந்து வெளியே ஓடினாள்

சதீஷ் என்னவென யோசித்து சுதாரிப்பதற்குள் மீரா கண் பார்வையில் இருந்து மறைந்தாள். சற்று முன் பேசவும் சக்தியற்றவள் போன்ற தோற்றத்தில் இருந்தவளால் எப்படி அத்தனை வேகமாய் ஓட இயலும் என நம்ப இயலாமல் பார்த்தான்

காயத்ரியை அங்கேயே இருக்கும்படி கூறி விட்டு மீரா போன திசையில் சதீஷ் விரைந்து சென்றான். அவன் சென்ற போது, சாலை ஓரத்தில் விழித்தபடி நின்றிருந்தாள்

"மீரா... " என சதீஷ் அழைக்க

"ம்... " என்றவள், இன்னும் எதையோ தேடுவது போல் அங்கும் இங்கும் விழி விரித்து பார்த்தாள்

"மீரா... என்னாச்சு மீரா?" என சதீஷ் அவளின் தோள் பற்றி உலுக்க

"அ.... அது... ஒண்ணுமில்ல... யாரோ...யாரோ தெரிஞ்சவங்க மாதிரி... ஒண்ணுமில்ல...போலாம்" என உணவகம் நோக்கி நடந்தாள்

யாரையோ பார்த்து ஸ்டீவ் என நினைத்து ஓடி வந்து பார்த்திருக்கிறாள் என்பதை சதீஷ் புரிந்து கொண்டான். அவளின் அந்த செய்கை சதீஷை கண் பனிக்க செய்தது

அக்கணமே ஸ்டீவ் இருக்கும் இடம் கண்டறிந்து கழுத்தை பிடித்து இழுத்து வந்து "பாவி, என்ன செய்து வைத்திருக்கிறாய் பார்" என காட்டி, அவனை அடித்து கொல்ல தோன்றியது

முதலில் சந்தேகப்பட்டபோதும், தானும் கூட இறுதியில் அவனை நம்பினேனே என தன் மீதே கோபம் கொண்டான் சதீஷ். ஒருவேளை எப்படியேனும் மீராவை தன்னோடே அழைத்து வந்திருந்தால் இந்த பிரச்சனையை தவிர்த்து இருக்கலாமோ என தோன்றியது

மீராவின் தந்தையிடம் அன்று பேசியதற்கு பின், பலமுறை சதீஷ் ஸ்டீவின் செல்பேசிக்கு அழைத்து பார்த்தான், பதிலே இருக்கவில்லை

மதுவும் இந்த மூன்று வாரத்தில் பல முறை ஸ்டீவின் அபார்ட்மென்ட் சென்று பார்த்து வந்து "யாரும் இல்லை" என தெரிவித்தாள் அவன் அனுப்பிய எந்த மின்னஞ்சலுக்கும் (ஈமெயில்) கூட ஸ்டீவிடமிருந்து பதில் வரவில்லை

மீராவிடம் பல முறை கேட்டும் எந்த பதிலும் பெற முடியவில்லை. மீராவின் நிலையை பார்த்து அவள் பெற்றோர் வேதனையில் தவித்தனர்

அன்று அதன் பின், உணவகத்தில் இருந்து கிளம்பி முதலில் காயத்ரியை அவள் வீட்டில் விட்டு விட்டு மீராவை விட சென்றான் சதீஷ்

ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியே பார்த்தபடி அமைதியாய் இருந்தவளை காண சகியவில்லை அவனுக்கு. எப்போதும் பேச்சும் சிரிப்புமாய் தன்னை கேலி செய்து சிரிக்கும் அந்த மீராவை இனி காண்பதும் இயலுமா என தோன்ற தொடங்கியது

அவன் அப்படி எண்ணிய நேரத்தில் திடீரென மீரா அழும் சத்தம் கேட்டு, திகைப்புடன் காரை ஓரமாய் நிறுத்தியவன், "மீரா..." என அவள் தோளில் தட்டி சமாதானம் செய்ய முயன்றான் சதீஷ்

"மீரா...ப்ளீஸ் மீரா... எதுக்கு இப்படி அழற? மீரா... இங்க பாரு.... என்னம்மா இது? ப்ளீஸ் மீரா... நீ இப்படி அழறத பாக்க முடியல மீரா... உன்னை பத்தி எந்த அக்கறையும் இல்லாத ஒருத்தனுக்காக உன் மேல் உயிரா இருக்கற எங்க எல்லாரையும் இப்படி கஷ்டப்படுத்தறயே மீரா..." என குற்றம் சாட்டுவது போல் அவன் கேட்கவும், அழுகையை கட்டுப்படுத்தி அவனை பார்த்தவள்

"நான் வேணும்னு செய்யல சதீஷ். நீ கூட என்ன புரிஞ்சுக்க மாட்டியா?" என விசும்பினாள்

"இல்ல மீரா... புரிஞ்சுக்காம இல்ல. உன்னை நீயே இப்படி வருத்திக்கறதால என்ன மாறும்னு நீயே சொல்லு. ஒடம்பும் மனசும் உருகி போனது தான் மிச்சம். அங்கிள் ஆன்ட்டி'க்காகவாச்சும் யோசி மீரா... என்ன பிரச்சனைனு சொல்லு. எதாச்சும் செய்ய முடியுமான்னு பாக்கலாம்" என அவளை பேச வைக்க முயன்றான்

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவள், ஏதோ தீர்மானித்தது போன்ற நிமிர்வுடன் "கரெக்ட் தான். நான் இப்படி அழறதால எந்த லாபமும் இல்ல.என்ன பிரச்சனைனு சொல்றதாலையும் எதுவும் இல்ல. இனிமே இப்படி இருக்க மாட்டேன் சதீஷ். அப்பா அம்மாவுக்காக சந்தோசமா இருக்கற மாதிரி நடிக்க பழகிக்கறேன்... ஒகே சதீஷ், வீட்டுக்கு போலாம்" என்றாள், உணர்ச்சி துடைத்த முகத்துடன்

அதற்கு மேல் பேசி உள்ளதையும் கெடுத்து கொள்ள வேண்டாம் என நினைத்தவன் போல் மௌனமானான் சதீஷ். சந்தோசமாய் இருப்பது போல் நடிப்பது அவள் மனநிலையை மாற்றவும் வாய்ப்பிருக்கிறது என நினைத்து கொண்டான்
சொன்னது போல் அன்றிலிருந்து பழையபடி மிக கலகலப்பாய் இல்லை என்றாலும், ஏதோ ஒரு விதமாய் மகிழ்வாய் வளைய வந்தாள் மீரா. அதாவது, அது போல் நடித்தாள்

மகளின் மாற்றம் பெற்றோரைம் நிம்மதியுற செய்தது. மீராவின் தந்தை, சதீஷிடம் அது பற்றி விசாரித்தார். சதீஷ் நடந்ததை கூற, இதுவே நல்ல துவக்கம் தான் என அவள் தந்தை மகிழ்ந்தார்

மற்றவரின் முன் மகிழ்ச்சி முகம் காட்டும் மீரா, தன் அறைக்கு சென்று அடைந்ததும் அதற்கும் சேர்த்து அழுது தீர்த்தாள்

அன்று சதீஷ் காயத்ரியுடன் வெளியே சென்ற போது யாரையோ கண்டு ஸ்டீவ் என நினைத்து ஓடி சென்று பார்த்த பின் அது தன் பிரமையே அன்றி வேறில்லை என புரிந்ததும், சுய இரக்கத்தில் துவண்டு போனாள்

அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழிந்த பின்னும் கூட இன்னும் அந்த சுய இரக்கம் குறைவதாய் இல்லை. தன் தவிப்பில் / காதலில் ஒரு பங்கேனும் அவனுக்கு இருந்திருந்தால் இந்த ஒரு மாத காலத்தில் ஒரு நொடி கூடவா தன் நினைவு வராமல் இருந்திருக்கும் என நினைத்ததும் அவளால் தாங்க முடியவில்லை

தனக்கு அவன் பழைய காதல் பற்றிய உண்மை தெரிந்ததும், இனி இவளை ஏமாற்ற வழியில்லயென விட்டுவிட்டானோ. அல்லது ஏமாற இன்னொருத்தி கிடைத்து விட்டாளோ என தோன்றியது. அவனை அப்படி கேவலமாய் நினைக்க கூட அவளுக்கு தாங்கவில்லை

எல்லாம் முடிந்தது என உள் மனம் ஏற்க மறுத்தது. தன் அறையில் அமர்ந்திருந்தவளுக்கு, இப்போது கூட ஸ்டீவின் குரல் எங்கோ கேட்பது போல் தோன்றியது

இரு கைகளாலும் காதை இறுக மூடி அமர்ந்தாள். சிறிது நேரத்தில் கண் முன்னே அவன் நிற்பது போல் தோன்ற

"ஏன் இப்படி என் கண் முன்னால வந்து வந்து மறைஞ்சு சித்ரவத பண்ற... ஐயோ...அம்மா... என்னால தாங்க முடியல" என பார்வையை அந்த திசையில் இருந்து விலக்கி தலையணையில் முகம் புதைத்தாள்

"இல்ல மீரா... இனி மறைஞ்சு போக மாட்டேன்" என்ற குரலில் விதிர்த்து எழுந்தாள். கண்ணால் காண்பதை நம்ப இயலாதவளாய் பேசவும் திராணியற்று விழித்தாள்

அவளின் அந்த தோற்றம் அங்கு நின்றிருந்தவனை உயிரோடே கொன்றது. விரைந்து அருகில் வந்தவன், அதற்கு மேல் விலகி இருக்க இயலாதவனாய் எதுவும் பேசாமல் அவளை இறுக அணைத்துக் கொண்டான்

மீராவிடம் எந்த அசைவும் இல்லாததை உணர்ந்தவனாய் அவளை விலக்கி முகம் பார்த்தவன், இன்னும் நடப்பதை நம்பாத பார்வையுடன் கண்ணில் நீர் வழிய இருந்தவளை காண குற்ற உணர்வில் குறுகினான்

"மீரா... ஏன் மீரா இப்படி பாக்கற? மீரா.... இன்னும் நம்பலையா? நான் தான் மீரா... உன் ஸ்டீவ் மீரா. மீரா...மீரா..." என்றவன் குழந்தையை அணைக்கும் அன்னை போல் மார்போடு அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்

"உன் ஸ்டீவ்" என்ற சொல்லில் தூக்கத்தில் இருந்து விழித்தவள் போல், அவனிடமிருந்து தன்னை விடுவித்து கொண்டு எழுந்து நின்றாள்

"மீரா..." என மீண்டும் அவன் அருகில் வர, விலகினாள். அதை தாங்க இயலாதவனாய் "ப்ளீஸ் மீரா..." என அவள் எதிர்ப்பையும் மீறி அணைத்தவன்

"கொஞ்சம் நேரம் கிட்ட இரு மீரா... ப்ளீஸ்... ஐ லவ் யு பேபி... ஐ லவ் யு" என அவன் கூற கேட்டதும், மொத்த மன உறுதியும் வடிய மனதின் பாரம் மொத்தத்தையும் அழுதே தீர்ப்பவள் போல் அழுதாள் மீரா

சற்று பொறுத்தவன் "மீரா, ப்ளீஸ்... ப்ளீஸ் மீரா... அழாத பேபி. ப்ளீஸ்... ப்ளீஸ் ப்ளீஸ்" என்றவனின் குரல் அவள் செவிக்கு எட்டியதாய் கூட தெரியவில்லை

"ஒரு மாசத்துல ஒரு நிமிஷம் கூட என் ஞாபகம் வரலையா? நான் அவ்ளோ அவசியமில்லாம போயிட்டேனா? ஏன் இப்படி என்னை அழ வெக்கற ஸ்டீவ்? என்னால தாங்க முடியல" என அழுகையினூடே பிதற்றினாள்

"ஐயோ இல்ல மீரா... இந்த ஒரு மாசத்துல ஒரு நிமிஷம் கூட உன்ன நினைக்காம இருக்கல... அதுக்கு முன்னாடி விட அதிகமா நீ என்னை ஆக்ரமிச்சுட்ட. நீ இல்லாத லைப்ல எனக்கு ஒண்ணுமே இல்ல மீரா. இன்னும் என்னை நம்ப மாட்டியா?" என கண்ணில் நீர் பனிக்க கேட்டவனை கண் எடுக்காமல் பார்த்தாள்

இன்னும் நம்பாத பார்வை பார்த்தவளை மெல்ல நடத்தி அங்கிருந்த சோபாவில் அமர்த்தியவன், அவளை விட்டு விலக மனமின்றி தன் கை அணைப்பிலேயே பற்றி அருகில் அமர்ந்தான்

அமர்ந்ததும் அவனை விட்டு விலகினாள் மீரா. "மீரா..." என அருகில் வந்தவனை தடுத்தாள். அவன் அருகாமையே அவளை பலவீனபடுத்தியதெனில் அவன் தொடுகை அவளை செயலற்றவளாக்கியது

இன்னொரு முறை எந்த ஏமாற்றத்தையும் தாங்கும் சக்தி தனக்கு இல்லை, எனவே எதை கூறும் முன்னும் எல்லாம் தெளிவுபடுத்தி கொள்ளவேண்டுமென நினைத்தாள்

சற்று யோசிக்க வேண்டுமெனில் அவனது கை அணைப்பிலிருந்து விடுபட வேண்டுமென விலகினாள்

ஆனால் அதை அவளின் கோபம் என எடுத்து கொண்ட ஸ்டீவ் "என்னை வெறுத்துட்டியா மீரா? ப்ளீஸ் மீரா...." அதற்கு மேல் பேச இயலாமல் கெஞ்சிய அவனின் பார்வை அவளை கொன்றது

"வெறுப்பதா? ஹும்... அது மட்டும் முடிந்தால் சுலபமாய் இருக்குமே" என மனதினுள் நினைத்து கொண்டாள்

"ஸ்டீவ்... எனக்கு சில விளக்கங்கள் வேணும்... ப்ளீஸ்..." என இன்னும் சற்று விலகி நின்றவளின் குரலில் இருந்த அந்நியதன்மை அவனை உறைய செய்தது

"சொல்லு மீரா... என்ன தெரியணும்?" என்றான் அவனும் கட்டுப்படுத்திய குரலில்

"அந்த... அந்த... பொண்ணு பத்தி... உங்க கா...காதல்..." வாக்கியத்தை முடிக்க இயலாமல் தொண்டை அடைத்தது அவளுக்கு

அதை புரிந்தவன் போல், அதற்கு மேல் அவளை வருத்தப்படுத்த விருப்பமின்றி "காதல்னு எதுவும் இல்ல மீரா. என்ன நடந்ததுனு நான் எல்லாமும் சொல்றேன். அதுக்கப்புறம் என்னை ஏத்துக்கறதும்...." ஏத்துக்காததும் என்ற சொல்லை கூட சொல்ல விருப்பமின்றி அதோடு நிறுத்தினான்

மீரா எதுவும் பேசவில்லை "சொல்ல வந்ததை சொல்" என்பது போன்ற பாவனையுடன் மௌனமாய் நின்றாள்

"நான் இந்தியால இருந்து 11th grade ஆரம்பிச்சப்ப கனடா வந்தேன்னு உன்கிட்ட மொதலே சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன். கனடா வந்த புதுசுல அந்த சூழ்நிலைல என்னால சட்டுன்னு பொருந்தி போக முடியல. பிரெண்ட்ஸ் யாரும் சரியா அமையல. கொஞ்சம் லோன்லியா இருந்தேன். மது கொஞ்சம் லேட்டா தான் வந்து ஜாயின் பண்ணினா.இண்டியன் கல்ச்சர், இட்டாலியன் கல்ச்சர், அமெரிக்கன் கல்ச்சர் எல்லாம் சேந்து ஒரு குழப்பமான மனநிலை. எது சரி, எது தப்புனு புரியல. என்னோட செய்கை பலரும் கேலி செய்யற விதமா இருந்தது. ஸ்கூல் போக மாட்டேன்னு பிரச்சனை பண்ற அளவுக்கு வெறுத்து போச்சு. அப்போ அவளாவே என்கிட்ட வந்து பிரெண்ட்லியா பேசினா ஏஞ்சலினா..." என்றவனை இடைமறித்தவள்

"ஏஞ்சல்னு செல்லமா கூப்பிடுவியா?" என்றவளின் கண்ணில் தெரிந்த வலி அவனை மேலே பேச விடாமல் செய்தது

அவள் அருகில் வந்து முகத்தை கையில் ஏந்தியவன் "Don't hurt yourself Meera...please..." என்றவனின் பார்வையை சந்திக்க முடியாமல் அவன் கை விலக்கி ஜன்னல் கம்பியை ஆதாரமாய் பற்றி வெளியே பார்க்கும் பாவனையில் நின்றாள்

அவளை நோக்கி நீண்ட கைகளை கட்டுப்படுத்தியவன், நடந்ததை மறைக்காமல் கூறுவது ஒன்றே இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் என மீண்டும் ஏஞ்சலினா பற்றி தொடர்ந்து கூறினான்

"ஏஞ்சலினாவுக்கு எங்க க்ளாஸ்ல fan club ஏ இருந்தது. அப்படி ஒருத்தி தானே வலிய வந்து பேசினத பாத்து மத்தவங்களும் என்கிட்ட நல்லா பழக ஆரம்பிச்சாங்க. அதனால அவ மேல எனக்கு ஒரு மதிப்பு வந்தது. மத்தவங்க முன்னாடி என்கிட்ட அதிகம் நெருக்கம் காட்டுவா. இந்த ஊர் கல்ச்சர்ல இது ஒரு பெரிய விஷயம் இல்ல போலனு நான் அதை பெருசா எடுத்துகிட்டதில்ல. நாங்க 12th grade வந்த சமயம், திடீர்னு ஒரு நாள் அவ என்னை விரும்பறதா சொன்னா..." அந்த வார்த்தையில் மீராவின் முகம் இறுகியதை கண்டவன் மேலே சொல்ல பயந்தவன் போல் நிறுத்தினான்

அதை "அந்த நாள் நினைவில் உழன்று கொண்டிருக்கிறான் போலும்" என தவறாய் புரிந்து கொண்ட மீரா "அப்புறம் நீயும் அவ காதலை ஏத்துகிட்டு சந்தோசமான ஜோடியா இருந்தீங்க இல்லையா?" என்றவள் எத்தனை கட்டுப்படுத்த முயன்றும் இறுதியில் விசும்பல் வெளியேறியது

அதை காண சகியாமல் "மீரா ப்ளீஸ்..." என அவள் கை பற்றினான். கையை உதறியவள், அவன் பழைய காதல் கதையை கேட்கும் சக்தி கூட தனக்கு இல்லை என உணர்ந்தவளாய்

"வேண்டாம் எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். நான்... எனக்கு யாரும் வேண்டாம். போய்டு இங்கிருந்து போய்டு ஸ்டீவ் ப்ளீஸ்" என்றாள்

அவளின் பேச்சு வேதனை தந்த போதும், அதை காட்டிக்கொள்ளாமல் "நான் போய்டறேன் மீரா... ஆனா நீயும் என்கூட வரணும். என்னால நீ இல்லாம இருக்க முடியாது மீரா" என்றான் தீர்மானம் போல்

"இதையே தானே அவகிட்டயும் சொல்லி இருப்ப... இப்படித்தானே அவ மேலயும்... " என அதற்கு மேல் பேச இயலாமல் ஜன்னல் கம்பியே பிடிமானமாய் சாய்ந்து அழுதாள்

தன்னால் தானே இவளுக்கு இந்த வேதனை, அவள் சொல்வது போல் விலகி சென்று விட்டால் இவளின் வேதனையை காண்பதிலிருந்தேனும் விடுதலை கிடைக்குமே என ஒரு கணம் நினைத்தான் ஸ்டீவ்

ஆனால், இந்த ஒரு மாத பிரிவு அது இயலாத காரியம் என்பதை அவனுக்கு உணர்த்தி இருந்தது. அவளும் தன்னை கண்டவுடன் "ஒரு மாதமாய் என் நினைவே வரவில்லையா?" என்று தானே அழுதாள்

பல நாள் பட்டினி கிடந்தவள் போன்ற அவளின் உடல் மெலிவும் சிரிக்க மறந்த கண்களும், அவளுக்கும் இந்த பிரிவு உயிர் வதை தான் என்பதை அவனுக்கு உணர்த்தியது

ஒருவர் மீது ஒருவர் கொண்ட அளவு கடந்த காதலே இப்போது இருவரையும் பிரித்து நிறுத்தி இருக்கிறது என நினைத்தான். நடந்ததை எல்லாம் அறிந்ததும் மீராவின் கோபம் நிச்சயம் மாறும், அதன் பின் எல்லாம் சரியாகி விடும் என நினைத்தவன் போல் மேலே சொல்ல தொடங்கினான்

"பதினெட்டு வயசுல ஒரு பொண்ணு என்னை விரும்பறதா சொன்னப்ப அது ஒரு பெரிய அங்கீகாரமா தோணுச்சே தவிர வேற எந்த உணர்வும் எனக்கு இருக்கல மீரா ஆனாலும் எனக்கு குழப்பமா இருக்குனு அவகிட்ட சொன்னேன். அதுக்கு அவ இது காதலின் ஆரம்ப நிலை அப்படி தான் இருக்கும்னும் மத்தபடி இந்த ஏஞ்சலினாவை விரும்பாம கூட ஒருத்தர் இருக்க முடியுமான்னு கேட்டா. எனக்கு பதில் சொல்ல தெரியல. அதுக்கப்புறம் மத்தவங்க முன்னாடி நாங்க காதலர்கள்னு சொல்லிக்க ஆரம்பிச்சா. மத்தவங்க என்னை ஹீரோ மாதிரி பாத்ததும், நீ ரெம்ப லக்கினு சொன்னதும் டீனேஜ்ல ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி இருந்தது. சத்தியமா காதல்னா என்னனு புரிஞ்சுக்கற மன பக்குவம் கூட எனக்கு இருக்கல மீரா..."

"காதல்னு எதுவும் இல்லாமையே கல்யாணம் நிச்சியம் பண்ணிக்கற அளவுக்கு போனதை நான் நம்பனுமா?" என்றாள் நிராசை நிறைந்த கண்களுடன்

சிறிதும் தன்னை நம்பாமல் மீரா கேட்ட அந்த கேள்வி ஸ்டீவின் கோபத்தை தூண்டியது. தன் வழக்கமான முன் கோபத்தில் எதுவும் பேசி அவளை மேலும் வருத்தப்படுத்தி விடக்கூடாதென சற்று நேரம் மௌனமாய் இருந்தான். தன் பேச்சு அவனை வருத்தப்படுத்தியதை உணர்ந்தவளாய் மீராவும் மௌனமானாள்

"அப்படி எதுவும் இல்ல மீரா. எப்பவும் நாங்க வெளிய போறப்ப டிரஸ் காஸ்மெடிக்ஸ் நெறைய வாங்குவா. உரிமையா கேக்கறப்ப எனக்கும் மறுக்க தோணாம வாங்கி தந்திருக்கேன். அதை போட்டுட்டு வந்து எல்லார்கிட்டயும் நான் வாங்கி தந்ததுனு பெருமையா சொல்லுவா. கெளரவம் பாத்துட்டு மறைக்காம உண்மையா இருக்கானு தான் அப்போ நான் அதை எடுத்துக்கிட்டேன். ஆனா அதுக்கு காரணம் வேறனு பின்னாடி புரிஞ்சது. அதே போல அவளோட பர்த்டேக்கு ரிங் வாங்கிதரணும்னு கேட்டா. அம்மாவோட செல்லமா இருந்ததால என் கைல பணத்துக்கு குறைவு இருந்ததில்ல, அண்ணா அக்கா எல்லாரும் கூட வொர்க் பண்ண ஆரம்பிச்சதால அவங்ககிட்ட இருந்தும் கிடைக்கும். சும்மா ஒரு கிப்ட்னு தான் அந்த ரிங் அவளுக்கு வாங்கி தந்தேன். ஆனா அதை engagement ring னு அவ எல்லார்கிட்டயும் சொன்னப்ப கொஞ்சம் அதிர்ச்சியானேன்" என அந்த அதிர்ச்சி இப்போதும் பாதித்தது போல் சற்று நிறுத்தினான்

மீராவின் முகத்தில் இன்னும் தெளிவு வந்திடாத போதும், எதுவும் குறிக்கிடாமல் மௌனமாய் இருந்தாள். ஸ்டீவ் தொடர்ந்து கூறினான்

"ஏன் அப்படி சொன்னேனு கேட்டப்ப, அப்போ உனக்கு என் மேல அன்பில்லையானு அழுது ரகளை பண்ணினா. அவளோட அழுகையோ வருத்தமோ என்னை பாதிக்கல. ஆனா முழுசா விலகவும் முடியல. அந்த வருஷம் கிறிஸ்துமஸ்க்கு எங்க வீட்டுக்கு வரணும்னு அடம் பிடிச்சா. கிறிஸ்துமஸ் டின்னருக்கு குடும்பத்துல இருக்கறவங்க மட்டும் தான், நண்பர்கள் கூடாதுங்கறது எப்பவும் எங்க அப்பாவோட ஆர்டர். அதை சொன்னப்ப அவ ஏத்துக்கலை. வேற வழி இல்லாம கூட்டிட்டு போனேன். அன்னைக்கி வீட்டுல எல்லார் முன்னாடியும் நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்லி நான் குடுத்த மோதிரத்த காட்டினா. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. அதுக்குள்ள அப்பா ரெம்ப கோபமா சத்தம் போட்டார். உடனே அவள கூட்டிட்டு நான் கிளம்பிட்டேன்..." என்றவன் சற்று ஆசுவாசபடுத்தி கொள்பவன் போல் மீராவின் முகத்தை இமைக்காமல் பார்த்தான்

அவனது துளைக்கும் பார்வை காந்தம் போல் தன்னை இழுப்பதை உணர்ந்தவள், அவனது கவனத்தை கலைக்கும் பொருட்டு "அப்புறம் என்ன நடந்தது?" என்றாள்

"அப்புறம் ரெண்டு மாசத்துல திடீர்னு அவளாவே என்கிட்ட இருந்து விலகினா. என்னை அது பாதிக்கலைனாலும் சுத்தி இருந்தவங்களோட கேலி பார்வை கஷ்டமா இருந்தது. அவகிட்ட போய் என்னாச்சுனு கேட்டப்ப, நீ ரெம்ப பணக்காரன்னு தெரிஞ்சு தான் உன்கிட்ட க்ளோஸா பழகினேன், இப்ப உன்னை விட பெரிய பணக்காரன் தானாவே வந்து என் வலைல விழுந்துட்டான், இனி நீ தேவையில்லைனு சொன்னா. ஆரம்பத்துல இருந்தே உனக்கு என்கிட்ட பெரிய ஈடுபாடு இல்லைனு எனக்கு தெரியும், சாட்சிகளோட உன்னை என் பக்கம் இழுக்கணும்னு தான் மத்தவங்க முன்னாடி உன்கிட்ட நெருக்கமா இருந்தேன் , நீ கிப்டா குடுத்ததை engagement ring னு சொல்லி நம்ம உறவுக்கு சாட்சி உருவாக்கினேனு சொன்னா. இப்படி ஏமாந்து இருக்கனேனு தான் வருத்தப்பட்டேன். மத்தபடி என் மனசுல எந்த பாதிப்பும் அப்பவே இருக்கல மீரா. இப்பவாச்சும் என்னை நம்புவியா பேபி" என்றவனை மௌனமாய் பார்த்தாள்

அருகில் சென்று அவள் கை பற்றி தன் மார்போடு இழைத்தவன், அவள் கண்ணோடு கண் பார்த்து "மீரா... உன்னை பாத்த அன்னைக்கே  எனக்குள்ள என்னமோ ஒரு change. Love at first sightல எல்லாம் எனக்கு நம்பிக்கை இருந்ததில்ல. ஆனா, வேற எந்த பொண்ணும் என்னை இப்படி பாதிச்சதில்லைனு மனசுல தோணுச்சு. உன் இடத்துல வேற யாரையும் என்னால நினைக்க கூட முடியாது மீரா... உன்கிட்ட ஏஞ்சலினா விசயத்த சொல்லணும்னு நான் நெறைய வாட்டி நினைச்சுருக்கேன். ஆனா, நீ ரெம்ப சென்சிடிவ்னு எனக்கு தெரியும். அதான் சொல்ல பயமா இருந்தது, பிரியற அளவுக்கு இல்லைனாலும் என் மேல பழைய அளவுக்கு லவ் இல்லாம போயிடுமோனு எனக்குள்ள ஒரு insecurity. அதான் மீரா சொல்லாம மறைச்சேன். ப்ளீஸ் நம்புடா... ஐ லவ் யு பேபி... I just... I just can't live without you honey..." என்றான்

கண்கள் முழுக்க காதலையும் எதிர்பார்ப்பையும் தேக்கி நின்றவனை கண்டதும், எதுவும் பேசாமல் சிறு விசும்பலுடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள் மீரா

அவனும் மௌனமாய் அவளை அணைத்து நின்றான். பல நாட்களுக்கு பின் நிம்மதியாய் மூச்சு விட முடிவது போல் அவனுக்கு தோன்றியது. எங்கோ தொலைந்து விட்ட உணர்வு மாறி சேர வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்த ஒரு உணர்வில் இருவரும் பேசக்கூட அவசியமின்றி அணைத்து நின்றனர்

மெல்ல அவள் விலக, விடாமல் இன்னும் அருகே இழுத்தவன் "This is first and last ever... இனி எப்பவும் நாம ஒரு நாள் கூட இப்படி பிரிஞ்சு இருக்க கூடாது மீரா" என்றான்

அப்போது தான் நினைவு வந்தவள் போல் கோபமாய் அவனை பார்த்தவள் "பேசாத நீ... எல்லாம் பொய்... இப்ப இப்படி எல்லாம் டயலாக் விடு... ஒரு மாசம் திரும்பி கூட பாக்காம என்னை அழ வெச்சப்ப இது தோணலையா?" என்றாள்

அவளின் உரிமையான கோபத்தில் தன் மீதான அளப்பரிய காதலை ரசித்தவன் "வர்ற மாதிரி situation இருந்திருந்தா நீ இந்தியாவுக்கு பிளைட் ஏறவே விட்டிருக்க மாட்டேனே பேபி" என்றான்

அவன் குரலில் இருந்தே ஏதோ மோசமாய் நடந்திருக்கிறது என்பதை யூகித்தவளாய் "என்னாச்சு ஸ்டீவ்?" என பதட்டமானாள்

"அன்னைக்கி இனி எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு நீ சொல்லிட்டு கிளம்பினதும் ரெம்ப கஷ்டமா இருந்தது, அது மொத்தமும் அப்படியே எங்கப்பா மேல கோபமா திரும்புச்சு. போய் பயங்கரமா சண்டை போட்டேன். வீட்டுல யாருமே அப்பாகிட்டே அப்படி பேசினதில்ல, யாரோ ஒரு பொண்ணுக்காக எப்படி நான் இப்படி பேசலாம்னு அப்பாவுக்கும் என் மேல பயங்கர கோபம். எங்கள சமாதானப்படுத்த ட்ரை பண்ணி முடியாம அம்மா ரெம்ப டென்ஷன் ஆய்ட்டாங்க. அம்மாவுக்கு பிரஷர் சூட் அப் ஆகி திடீர்னு she just fell unconscious. எவ்ளோ ட்ரை பண்ணியும் கண்ணே திறக்கல. உடனே 911 கூப்ட்டு ஆம்புலன்ஸ் வந்ததும் ஹாஸ்பிடல் போனோம். அம்மாவுக்கு இதுக்கு முன்னாடியே ரெண்டு தடவை மைல்ட் அட்டாக்ஸ் வந்திருக்கு, ஆனா சுகர் பேஷன்ட்'ங்கறதால அந்த painஐ கூட அவங்க recognize பண்ணல. Heartல Total Block, உடனே மேஜர் சர்ஜரி பண்ணனும்னு சொல்லிட்டாங்க..."

"ஐயோ... ஸ்டீவ் ப்ளீஸ் மொதல்ல இப்ப ஆன்ட்டிக்கு எப்படி இருக்குனு சொல்லு ப்ளீஸ்" என பதறியவளை கண்டதும், தன்னை சேர்ந்தவர்களிடம் கூட அவள் கொண்ட அன்பை மகிழ்வுடன் ரசித்தவன்

"டோண்ட் வொர்ரி மீரா. இப்ப எல்லாம் சரி ஆய்டுச்சு. ஆனா ரெம்ப பெரிய சர்ஜரி தான், அம்மாவை பாக்கறத விட அப்பாவை சமாளிக்கறது தான் ரெம்ப கஷ்டமா போய்டுச்சு. எப்பவும் ரெம்ப Strict Daddyயா மட்டுமே பாத்து பழகின அவர் அப்படி மொத்தமா collapse ஆகி அழுததை பாக்கவே முடியல மீரா. அம்மா கண் முழிச்சு பாக்கற வரைக்கும் அவர் அந்த இடத்த விட்டு நகரவே இல்ல"

"ச்சே பாவமில்ல..."என்றாள்

"ஆமா...அந்த நிலைமைல அப்பாவ விட்டுட்டு வர மனசில்ல. ஆனா அப்பவும் நீ இந்தியா கிளம்பற அன்னைக்கி உனக்கு பேச ட்ரை பண்ணினேன். நீ போன் எடுக்கவே இல்ல"

"கோபத்துல போனை தூக்கி போட்டு ஓடைச்சுட்டேன்" என்றாள் பாவமாய்

"ஹா ஹா... நீ போனை ஒடைச்சுட்ட நான் என் போனை எங்கயோ மிஸ் பண்ணிட்டேன். இன்னும் கிடைக்கல. ஹாஸ்பிடல்ல போன முதல் நாளே அந்த டென்ஷன்ல எங்கயோ போட்டுட்டேன் போல இருக்கு" என்றான்

"அப்புறம் என்னாச்சு?" என அவள் கவலையாய் கேட்க

அவள் மனதை இலகுவாக்கும் எண்ணத்துடன் "நான் என்ன கதையா சொல்றேன்... இவ்ளோ இண்டரெஸ்ட்ஆ கேக்கற?" என கேலி செய்தான்

அவன் கேலியை புரிந்தவளாய் முறைத்தவளை "இந்த கண்ண ரசிச்சு எவ்ளோ நாளாச்சு மீரா?" என குறும்பாய் சிரித்தான்

தான் கவலையாய் கேட்பதை பொருட்படுத்தாமல் விளையாட்டாய் பேசுகிறானே என்ற கோபத்தில் அடிக்க ஓங்கிய அவள் கைகளை பற்றி முத்தமிட்டவன்

"சரி சரி சொல்றேன். ஒரு வழியா அம்மா ரெகவர் ஆகி ரெண்டு வாரத்துல Ottawa வீட்டுக்கு போனோம். ஆனா அம்மாவுக்கு மொதல்ல இருந்த தைரியம் சுத்தமா போய்டுச்சு மீரா, கொஞ்ச நாள், தூக்கத்துல கூட திடீர்னு எழுந்து அப்பாவையும் என்னையும் கூப்ட்டுட்டே இருந்தாங்க. அம்மாவுக்கு இனி எதுவும் ஆகாதுனு தெரிஞ்சாலும் அப்படி இருக்கற நிலைமைல விட்டுட்டு வர மனசு வர்ல"

"ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல ஸ்டீவ். இது தெரியாம நான் உன்னை எப்படி எல்லாம் தப்பா நினைச்சுட்டேன் சாரி" என்றாள் நிஜமான வருத்ததுடன்

"ஆஹா... என்ன தப்பா நினைச்சேன்னு அப்புறம் மெதுவா கேட்டுட்டு அதுக்கு ஏத்த பனிஷ்மென்ட் கண்டிப்பா தருவேன்..." என கண்சிமிட்டி சிரித்தவன் "எங்க அப்பாவும் போனாச்சும் பண்ணி பேசிடுனு தான் சொன்னாரு" என்றவனை

"அப்பாவா?" என ஆச்சிர்யமாய் பார்த்தாள்

"எஸ்... அப்பா தான். உன்னை அப்படி பேசினதுக்கு ரெம்ப பீல் பண்ணினார், உன்கிட்ட சாரி கேக்கணும்னு சொல்லிட்டு இருக்கார். பதினெட்டு வயசுல ஒரு பொண்ணுகிட்ட நான் ஏமாந்ததுல அப்பாவுக்கு மறுபடி அப்படி எதாச்சும் ஆய்டுமோனு பயம். போதாதுக்கு நான் 'நீங்க சம்மதிச்சாலும் இல்லைனாலும் இவ தன் என் வைப்'னு சொன்னதும் அவர் என்னை protect பண்றதா நினைச்சு என்னனென்னமோ பேசி நீ டென்ஷன் ஆகி... ஹ்ம்ம்..." என எல்லாம் சரியான நிம்மதியில் பெருமூச்சு விட்டான்

அவனே தொடர்ந்து "ஆனா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப கூடவே இருந்ததால, நான் உன்னை நினைச்சு டென்ஷன் ஆகறத புரிஞ்சுட்டு சாரி சொன்னார். உன்னை பத்தி நானும் அவர்கிட்ட மனசுவிட்டு பேசினேன். அப்பத்தான் போன் பண்ணியாச்சும் பேசிடுனு சொன்னார்" என்றான்

"ஏன் நீ போன் கூட பண்ணல ஸ்டீவ்... என்னை நீ மறந்துட்டயோனு நான் எவ்ளோ பீல் பண்ணினேன் தெரியுமா?" என்றாள் வருத்தமாய்

"தெரியும் பேபி... நீயும் இங்க ஹப்பியா இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். ஆனா என்மேல ரெம்ப கோபமா வேற இருந்தயே, கனடால இருந்து கிளம்பற அன்னைக்கி போனும் எடுக்கலைனதும் மறுபடி போன் பண்ண பயமா இருந்தது. மொத்தமா கட் பண்ணிடுவயோனு டென்ஷன். நேர்ல போய் பேசினா நிச்சியமா உன்னை கன்வின்ஸ் பண்ணிடலாம்னு போன் பண்ணாம கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன்" என்றவன் முறுவலித்து

"போதாததுக்கு சதீஷ் பயங்கரமா திட்டி ஈமெயில், பேஸ்புக் மெசேஜ், ஆர்குட் மெசேஜ்னு பயப்படுத்திட்டான். என்ன நடந்ததுனு கேட்டு மொதல் ஈமெயில் வந்தது, என்னனு சொன்னா நேர்லயே வந்து கொன்னுடுவான்னு தெரியும். நான் ரிப்ளை பண்ணவே இல்ல. அப்புறம் அவன்கிட்ட இருந்து வந்த அடுத்த ஈமெயில் தான் போன் பண்ணாம இருக்கறது பெட்டர்னு முடிவு பண்ண வெச்சது. 'இனி மீராவை பத்தி நினைக்க கூட எனக்கு தகுதி இல்லைனு ஒரே திட்டு, அவ வாழ்க்கைல உனக்கு இடமில்லை, இனி அவ கனடாவுக்கு வர்றதில்லனு முடிவு பண்ணிட்டா'னு பயங்கர டென்ஷன் பண்ணி விட்டுட்டான்" என்றான்

"ஹ்ம்ம்... நீ தான சொல்லுவ என் பாடிகார்ட்னு.. அப்படி தான் இருப்பான்" என சிரித்தாள் மீரா . பல நாட்களுக்கு பின் அவள் சிரிப்பை கண்ட மகிழ்வில் தன்னை மறந்து ரசித்தான்

"அது சரி... இப்ப மட்டும் எப்படி வரணும்னு தோணுச்சாம்" என்றாள் அவன் கவனத்தை திசை திருப்பும் எண்ணத்துடன், அவளுக்கும் அறிந்து கொள்ள வேண்டி இருந்தது

"அதுக்கும் சதீஷ் தான் காரணம்" என்றான்

"வாட்?" என மீரா விழிக்க

"உடனே அவன் என்னை வர சொன்னான்னு நீ ட்ரீம் அடிக்காத. அதுக்கு சான்சே இல்லயே" என சிரித்தவன்

"Actual ஆ அம்மாவுக்கு நெக்ஸ்ட் வீக் டாக்டர்கிட்ட review appointment இருக்கு. அது முடிஞ்சதும் வரணும்னு முடிவு பண்ணி டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டேன். லாஸ்ட் வீக் சதீஷ்கிட்ட இருந்து ஒரு ஈமெயில். நீ யாரையோ பாத்து நான்னு நினைச்சு ஏமாந்து அழுதேனு, அவள இப்படி பண்ணிட்டயேனு என்னை கண்டபடி திட்டி எழுதி இருந்தான். அதை கேட்டதும் எனக்கு அப்பவே உன்னை பாக்கணும்னு தோணிடுச்சு. அப்பா அக்கா எல்லாரும் நான் டென்சனா இருந்ததை பாத்துட்டு நாங்க அம்மாவ பாத்துக்கறோம் நீ கிளம்புனு சொன்னாங்க. அன்னைக்கே வரணும்னு ட்ரை பண்ணினேன், டிக்கெட் கிடைக்கல. இங்க வந்ததும் எனக்கு வீட்டு அட்ரஸ் எல்லாம் தெரியாதே, ஆனா நீ கம்பெனி பேர் சொன்ன ஞாபகம் இருந்தது. நேரா உங்க அப்பாவையே பாக்கலாம்னு போனேன். அங்க சதீஷும் இருந்தான், உங்கப்பா மட்டும் அவன கண்ட்ரோல் பண்ணாம இருந்திருந்தா என்னை அனேகமா நீ எமெர்ஜென்சி வார்ட்ல தான் வந்து பாத்திருக்கணும்" என சிரித்தான்

"ச்சே...என்ன பேச்சு இது?" என கோபப்பட்டவள், அப்போது தான் நினைவு வந்தவள் போல் "ஐயோ... அப்பாவுக்கு எப்படி? நீ இப்போ என் ரூம்ல... ஓ மை காட்...அப்படினா அம்மாவுக்கு கூட..." என விழித்தாள்

அதையும் ரசித்தவன் "ஹா ஹா...இவ்ளோ நேரம் இதெல்லாம் ஞாபகம் வரலியா... சரி விடு பேபி, இருக்கறதே கொஞ்சம் பிரைன் தான், அது எவ்ளோ தான் யோசிக்கும்" என கேலியாய் சிரித்தவன், அவள் முறைத்ததும் "டென்ஷன் ஆகாத மீரா, எல்லா விசயமும் சதீஷ் உங்கப்பாகிட்ட சொல்லிட்டன். Infact , நான் அவனுக்கு இப்ப தேங்க்ஸ் தான் சொல்லணும்" என சொன்னா அதே நேரத்தில்

"தேங்க்ஸ் சொல்றதுக்கு முன்னாடி நான் உன்ன கொல்லனும்" என்றபடியே சதீஷ் அறையினுள் வர, அவன் பின்னோடு மீராவின் அம்மா அப்பாவும் வந்தனர். மீரா சட்டென ஸ்டீவிடமிருந்து விலகி பெற்றோரின் அருகில் சென்றாள்

கவலை மறைந்து மகிழ்வாய் இருந்த மகளை கண்டு நெகிழ்ந்த அன்னை, அவளை அணைத்துக் கொண்டாள்

"என்ன மீராம்மா, படிச்சு முடிச்சப்புறம் கல்யாணம் வெச்சுக்கலாமா, இல்ல இப்பவேவா?" என அவள் தந்தை கேலியாய் கேட்க, மீரா பதில் சொல்லாமல் சிரித்தாள்

"அங்கிள்... எனக்கு உங்க மாப்பிள்ளகிட்ட நெறைய கணக்கு தீக்க வேண்டி இருக்கு. அதனால கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சு வெய்யுங்க" என்றான் சதீஷ், கோபமும் கேலியும் கலந்த குரலில்

"ஹா ஹா... நம்ம கணக்கெல்லாம் கனடால போய் வெச்சுக்கலாம் சதீஷ், கரெக்ட் தானே மீரா?" என அவளை பார்த்து கண் சிமிட்டியவனை முறைத்தான் சதீஷ்

"ஆரம்பிச்சுட்டீங்களா ரெண்டு பேரும்..." என மீரா பொய் கோபமாய் பார்க்க

"மீராவுக்காக பாக்கறேன்... இல்லைனா நீ காலிடா" என சதீஷ் கூற

"சதீஷ் ரெம்ப பேசினா அப்புறம் காயத்ரிகிட்ட கனடால நீ சைட் அடிச்ச மேட்டர் எல்லாம் போட்டு தருவேன்" என ஸ்டீவ் விளையாட்டாய் மிரட்ட

"அடப்பாவி... உங்கள ஜோடி சேத்தி வெச்ச பாவத்துக்கு என் ஜோடிய பிரிக்க பாக்கறியே. நான் மொதல்ல இடத்த காலி பண்றேன்"

"உன்னை தொரத்தறது இவ்ளோ ஈஸினு தெரியாமே போச்சே..." என சிரித்தான் ஸ்டீவ்

தன் சிரிப்பை மீரா ரசிப்பதை உணர்ந்து அவளை பார்க்க, அவள் வேண்டுமென்றே பார்வையை விலக்கினாள்

"சரி சரி... எல்லாரும் சாப்பிடலாம் வாங்க..." என மீராவின் அன்னை இங்கிதமாய் விலக, அதை புரிந்தது போல் அவள் தந்தையும் சதீஷும் தொடர்ந்து சென்றனர்

தனித்து விடப்பட்ட நொடியில்,மீராவை தன் கை அணைப்பில் ஸ்டீவ் இழுக்க "ஐயோ...விடு ஸ்டீவ்... அம்மா அப்பா..." என விலகியவளை

"ஏய் நான் பாக்காதப்ப என்னை சைட் அடிச்ச இல்ல.. இப்ப எதுக்கு டிராமா பண்றே?" என சீண்டினான்

"நான் ஒண்ணும் உன்னை பாக்கல... நீ தான் என்னை பாத்த" என தன் முக சிவப்பை மறைக்க முகம் திருப்பினாள்

"அப்படியா... அழகா இருக்கறதை ரசிக்கறது தப்பா? Its not a sin in my religion" என்று அவன் கூற

முன்னொரு சமயம் ஸ்டீவின் அபார்ட்மென்ட்டில் இவர்கள் இருவர் மட்டும் தனித்திருந்த ஒரு நாளில் இதே போல் பேசிய நினைவு இருவருக்கும் வர ஒன்றாய் மனம் விட்டு சிரித்தனர்

அவள் சிரிக்கும் அழகில் தன்னை மறந்தவன் "அன்னைக்கே இந்த கன்னத்து குழில நான் விழுந்துட்டேன் மீரா... இந்த ஜென்மத்துல தப்பிக்கற சான்ஸ் இல்லைனு நினைக்கிறேன் பேபி..." என சோகமாய் நடித்தவன், அவள் செல்லமாய் முறைக்கவும்

"இதுவும் அழகா இருக்கே... ஹும்ஹும்... எஸ்கேப் ஆக சான்சே இல்ல... " என்றவன்

திடீரென விலகி நின்று அவள் முன் மண்டியிட்டு, தயாராய் வைத்திருந்த மோதிரத்தை எடுத்து நீட்டி "Will you marry me sweety" எனவும் மீரா சரி என்பது போல் தலை அசைத்தாள்

அவள் அழகு விரலில் மோதிரம் அணிவித்து உரிமையாய் அணைத்து கொண்டான்

உன்விரல்பற்றி நடந்தபொழுதில்
உலகம்என் கையில்என்றுணர்ந்தேன்
என்உலகமே நீதான்
என்பதையும் அன்றுணர்ந்தேன் !!!

ஸ்டீவ் / மீரா காதல் ஜில்லுனு தொடரும்... ஆனா இந்த கதை இதோட முற்றும்...;)

 

Thursday, July 07, 2011

எண்பது அகவை... என்பதும் நம்பிலேன்..."சீக்கரம் பேத்திய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்"னு பாட்டி சொல்லி என் அப்பா 45 நாள் சிசுவாய் என்னை என் அம்மாவோடு அவங்க அம்மா வீட்டுல இருந்து கூட்டிட்டு வந்தாங்களாம்

பொதுவா ஆறு மாசம் முடியாம அப்ப புகுந்து வீட்டுக்கு பிள்ளைய எடுத்துட்டு போற வழக்கமில்ல. ஆனா என் அப்பாவோட அன்னைக்கு அது வரை பொறுமை இல்லயாம். நானும் இங்க வந்தப்புறம் தான், இரவில் ஒழுங்கா ரெம்ப படுத்தாம தூங்கினேனாம்

"இப்பவே நம்ம வீடு அவங்க வீடு வித்தியாசம் தெரியுதா இவளுக்கு?"னு எங்க மாமா (அம்மாவோட அண்ணா) கிண்டல் பண்ணினாராம்...:)

அப்படி, 45 நாள் பிராயத்தில் இருந்தே என்னை முழுதாய் ஆஸ்கரித்து கொண்டவர் என் பாட்டி. என் அம்மாவின் அருகில் தூங்கிய நினைவு எனக்கு இல்லை 

அம்மாவுக்கு சமையல் வேலை, மற்ற வீட்டு வேலைகள், அப்பாவின் தொழில் சம்மந்தமான கணக்கு வழக்கு உதவிகள், வெளி விசேசங்களுக்கு செல்வது என எப்பவும் ரெம்ப பிஸியா இருப்பாங்க. காலைல பள்ளிக்கு கிளப்பரதுல தொடங்கி, ஸ்கூல்'க்கு மதிய உணவு எடுத்துட்டு வர்றது, ஸ்கூல் விட்டு வந்ததும் கவனிக்கறது எல்லாமும் பாட்டி தான்

"என் பேத்தி ஸ்கூல் போறதுக்கு முந்தியே திருப்பாவை முப்பதும் சொல்லுவா"

"எங்க புவனா கையெழுத்து மணி மணியா இருக்கும்"

"சின்னது கொஞ்சம் அடாவடி தான்... ஆனா எங்க புவனா ரெம்ப பொறுமை"

"எங்க புவனாகிட்ட பாடம் படிக்கறதுக்கு அவ கூட படிக்கற சிநேகிதிங்க எல்லாம் வருவாங்க... எப்பவும் மொதல் மார்க் தான்"

இப்படி பேச்சுக்கு பேச்சு பாட்டிக்கு பேத்தி பெருமை தான் எப்பவும். "இப்பவும் கூட"னு எங்க அப்பா கிண்டல் பண்ணுவார் சில சமயம் :)

ஆனா அதுக்காக ரெம்ப செல்லம்னு எல்லாம் கிடையாது. ரெம்ப கண்டிப்பா இருப்பாங்க. உண்மைய சொல்லணும்னா, அம்மா அப்பாகிட்டே ஒரு அடி கூட வாங்கினதில்ல. பாட்டிகிட்ட நெறைய வாங்கி இருக்கோம் நானும் என் தங்கையும்

அதிலும், நிமிட்டாம்பழம் கணக்கில்லாம வாங்கி இருக்கோம். இப்ப நினைச்சாலும் உதறும். ஆனா அந்த கண்டிப்பு தான் எங்களை சரியான முறைல வழி நடத்தி இருக்குனு இப்ப தோணுது

ஆனா, அந்த அடி உதை எல்லாம் டீனேஜ் தொடங்கும் வரை தான். அதன் பின், வெறும் கண்டிப்போட சரி. பாட்டி என்னை என்ன வேணா சொல்லுவாங்க, ஆனா அம்மா அப்பா ஒரு வார்த்தை திட்டினாலும் கோபம் வந்துடும்

"எதுக்கு கொழந்தைய ஆளாளுக்கு விரட்டறீங்க. நீ வா தங்கம் இப்படி"னு ஒரே சப்போர்ட் மழை தான்..

அது மட்டுமில்ல, பள்ளி நாட்கள்ல எங்கயாச்சும் போட்டிகளுக்கு போகணுமா? பாட்டிய கூட்டிட்டு போ...

பிரெண்ட்ஸ் வீட்டு விசேஷமா? பாட்டிய கூட்டிட்டு போ...

காலேஜ் மொதல் நாளா? பாட்டிய கூட்டிட்டு போ...(நிஜமாதான்..:)

பேங்க் எக்ஸாம்'ஆ? பாட்டிய கூட்டிட்டு போ...

இப்படி எங்க போனாலும் பாட்டியே துணை. அப்பா எங்கயும் எங்கள தனியா போக விட மாட்டார். "2000'வது வருஷம் கூட வந்தாச்சு, ஏன் இப்படி இருக்கீங்க"னு நானும் தங்கையும் எரிச்சல்படுவோம்

எல்லா அப்பாவும் இப்படி தான் போல. Too much Protective on daughters...:) அவராலயோ அம்மாவாலயோ நேரம் ஒதுக்க முடியாது. உடனே "பாட்டிய கூட்டிட்டு போ"னு சொல்லிடுவார்

எங்க பாட்டிக்கு தள்ளாத வயசும் இல்ல. அதனால, ரெம்ப உற்சாகமா என் கூட எங்க வேணாலும் வருவாங்க. காலேஜ் முதல் நாள் பாட்டிய கூட்டிட்டு போனது தான் ஹைலைட். எனக்கு எங்க ஸ்கூல் ஏரியா தாண்டி தனியா போய் பரிச்சயம் இல்ல

காலேஜ்'க்கு ரெண்டு பஸ் மாறி ரெம்ப தூரம் போகணும். வேற வழி? பாட்டியே துணை. என்னோட சீனியர்ஸ் அதை சொல்லியே ராக்கிங் பண்ணினது தனி கதை..:)

வெள்ளிக்கிழமை வந்தாலே "இந்த பாட்டி இனி எண்ணை கொப்பரைய தலைல கொட்டுமே"னு மூக்கால அழுவேன். அது மட்டுமா, அத்தனை அடர்த்தி கூந்தலை அரப்பு போட்டு அலசி, சாம்பராணி போட்டு காய வெச்சு, அப்பப்பா எப்படா முடியும்னு அழுவேன்

இப்ப ஒரு நாள் அப்படி இருக்காதானு ஆசையா இருக்கு. இப்ப ஆறடி கூந்தலும் இல்ல, அலசி சீராட்ட பாட்டியும் பக்கத்தில் இல்ல...:(

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் கண்ணு பூரா எங்க மேல தான் இருக்கும் பாட்டிக்கு

கால கீழ போட்டு உக்காரு...

ஏன் ஒண்ணும் பேசாம சும்மா இருக்க...

தலைக்கு கொஞ்சம் எண்ணை வெய்யேன்...

இந்த பழம் ஒண்ணு சாப்பிடு...

ஏன் வெறுங்கய்யா இருக்கே, வளையல் போடு...

மால நேரம் வாசல் முன்னாடி உக்கராதே...

இப்படி சொல்லிட்டே இருப்பாங்க

அப்ப செம எரிச்சலா இருக்கும் "உனக்கு வேற வேலையே இல்லையா பாட்டி... என்னையே ஏன் பாத்துட்டு இருக்க"னு கத்துவேன்

இப்ப "அந்த நாளும் வந்திடாதோ..."னு இருக்கு...:(

காலேஜ் வந்தப்புறமும் கூட லீவ் நாட்கள்ல மொதலே சாப்பிட்டு இருந்தாலும், பாட்டி சாப்பிடும் போது, நானும் தங்கையும் "ஆ..." னு வாய காட்டுவோம். அவ்ளோ ஏன், போன வருஷம் 2010ல ஊருக்கு போனப்ப கூட இது நடந்தது

எங்க அப்பா அதை பாத்துட்டு "கொழந்தைக்கு பால் புட்டி எடுத்து தரணுமா?"னு கேலி பண்ணினார்

என் பாட்டிகிட்ட நான் ரெம்பவும் வியந்த விஷயம், என் பெற்றோரை விடவும் முற்போக்கான சிந்தனை அவரிடம் இருந்தது தான். எங்க அம்மாகூட சொல்லுவாங்க "உங்க பாட்டி இன்னும் அம்பது வருஷம் கழிச்சு பொறந்து இருக்கணும்"னு

நான் MBA முடிச்சதும் கேம்பஸ் இண்டர்வியுலையே ஒரு நல்ல வேலை பெங்களூர்ல கிடைச்சது. "அவ்ளோ தூரம் நீ தனியா போய் சம்பாதிக்கணும்னு ஒண்ணும் அவசியம் இல்லை"னு எங்க அப்பா சொல்லிட்டார்

நான் உண்ணாவிரதம், மௌனவிரதம், அழுகை எல்லாம் செஞ்சு பாத்தேன். அப்பாவை அசைக்க முடியல

உடனே எங்க பாட்டி "நான் வேணும்னா அவ கூட போய் ஒரு வீடு எடுத்து தங்கி இருக்கேன் அனுப்பு"னு சொன்னாங்க. சூப்பர் பாட்டி தான் எங்க பாட்டி. ஆனா அதுக்கும் அப்பா ஒத்துக்கலைங்கறது தனி கதை

மன உறுதி, இந்த வயதிலும் புதிய விசயங்களை அறிந்து கற்று கொள்ளும் ஆர்வம், அதன் விளைவாய் நெறைய விஷய ஞானம், மக்களோடு பழகும் விதம், எதிராளியை தன் போக்குக்கு ஒத்துக்கொள்ள வைக்கும் பேச்சு திறன், அன்பே ஆயுத்தமாய் எல்லோரையும் கட்டிப்போடும் உண்மையான நேசம், கண்டிப்பும் அன்பும் எல்லை மீறாமல் காட்டும் குணம் இப்படி நெறைய விஷயங்கள் என்னை பிரமிக்க வைக்கும்

இன்னொரு விஷயம், அயராத உழைப்பு. இந்த வயசுலயும் ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டாங்க. அம்மா எழுந்து வர்றதுக்குள்ள வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, காபிக்கு ரெடி பண்ணிடுவாங்க

இப்ப இப்ப அம்மா அப்பா கண்டிப்புல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறாங்க. உடலும் முன் போல் ஒத்துழைப்பதில்லை'ங்கறதும் ஒரு காரணம்

நான் லெக்சரர் வேலைக்கு போக தொடங்கினதும் "இன்னும் சின்ன பொண்ணு மாதிரி இருந்தா படிக்கற பசங்க மதிக்க மாட்டாங்க. நல்ல காட்டன் பொடவையா கட்டணும். இப்படி பின்னல் போடு. இப்படி இரு அப்படி இரு" னு எனக்கு பேஷன் குருவும் என் பாட்டி தான்

சில சமயம் நானும் என் தங்கையுமே பிரமிச்சு போய்டுவோம் பாட்டியோட டிப்ஸ் கேட்டு...:)

எனக்கு திருமணம் முடிவானதும், ஒரு பக்கம் மனம் நிறைந்த சந்தோஷம், அதே நேரம் விட்டு பிரிய போறோமேனு கலக்கம். ஆனா ரெண்டையும் பெருசா காட்டிக்கல

ஒரு ஒரு முறை ஊருக்கு போறப்பவும் "சாம்பார் பொடி, பருப்பு பொடி, ரசம் பொடி"னு பாத்து பாத்து எடுத்து வெக்கறதுலயாக்கட்டும், அம்மாவை விரட்டி விரட்டி "இது பிடிக்கும் அது பிடிக்கும்"னு செய்ய வெக்கறதுலயாகட்டும், ஒரு பதினாறு வயசு பெண் தான் நம் கண்ணுக்கு தெரிவார்

போன்ல நெறைய பேச மாட்டாங்க. நாலு வார்த்தை தான் "நல்லா இருக்கியா? நல்லா சாப்பிடறயா? கோவில் போனயா? ஒடம்ப பாத்துக்கோ. இரு உன் அம்மாகிட்ட தர்றேன், பேசு" இவ்ளோ தான்

ஆனா அதையே அடுத்த முறை போன் பேசும் வரை எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருப்பாங்களாம், அம்மா சொல்வாங்க

ரெண்டு நாள் முன்ன ஊருக்கு பேசினப்ப வழக்கமான நாலு வார்த்தை தவிர கொஞ்சம் பேசினாங்க. பாட்டி சொன்னது இது தான்

"வர்ற வெள்ளிக்கிழமயோட எனக்கு எண்பது முடியுது. தாத்தாவுக்கு 87 ஆச்சு. நீ ஊருக்கு வந்தப்ப ஒரு பட்டு பொடவை எடுத்து குடுத்தயல்ல. அது இன்னும் கட்டாம தான் வெச்சுட்டு இருக்கேன். தாத்தாவுக்கும் வேட்டி சட்டை புதுசு இருக்கு. வெள்ளிக்கிழமை நம்ம பெருமாள் கோவில் போய்ட்டு எல்லார் பேருக்கும் அர்ச்சனை பண்ணிட்டு வரோம்"னு சொன்னாங்க

நான் சும்மாவே பீலிங்க்ஸ் ஆப் இந்தியா கேஸ். இப்ப சொல்லணுமா.... சட்டுன்னு கண் கலங்கிடுச்சு...

நான் இப்படி பேச முடியாம கண் கலங்கி இருக்க, எங்க தாத்தா அவசரமா போன் வாங்கி "உங்க பாட்டிக்கு தான் எண்பது... எனக்கு இன்னும் 79ஏ முடியல... 87னு சொல்றதை நம்பாதே"னு சொல்லி கண்ணில் நீர் வர சிரிக்க வெச்சுட்டார்

பாட்டி பேரு ருக்மணி - தாத்தா பேரு ஸ்ரீநிவாசன். அழகான பெயர் பொருத்தம்னு எல்லாரும் சொல்ல கேட்டு இருக்கேன். பேருல மட்டுமில்ல, வாழ்விலும் மிக பொருத்தமான ஜோடியாய் பார்த்து இருக்கேன்

என் அருமை பாட்டியோட இந்த எண்பதாவது பிறந்த நாளில் பாட்டிய பத்திய என்னோட மலரும் நினைவுகளை உங்க கூட பகிர்ந்துகிட்டதுல ரெம்பவும் நெகிழ்வா இருக்கு. பொறுமையா படிச்ச உங்களுக்கும் மிக்க நன்றி

"எண்பது வயசு ஆய்டுச்சா பாட்டிக்கு"னு எங்க அம்மாகிட்ட நான் ஆச்சிர்யமா கேட்க, எங்க அம்மா சிரிச்சுகிட்டே "எனக்கே 51 ஆச்சு புவனி"னாங்க. ஹ்ம்ம்... நாட்கள் ரெம்ப வேகமா ஓடுதுனு நினைச்சுட்டேன்

ஹாப்பி பர்த்டே பாட்டி...

பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இன்னும் நீண்ட ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்யமும் அருள வேணும்னு ஆண்டவனை பிராத்தித்து கொள்கிறேன்

" நம்ஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி
காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்சயாய
 ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நமஹ"
- ஸ்ரீ ருத்ரம்
(நீண்ட ஆயுள் பெற)

...

Tuesday, July 05, 2011

போனோமே ஊர்கோலம்...:))


Bonjour, (madame/monsieur) Comment allez-vous?

"என்னாச்சு இந்த அப்பாவிக்கு? கனடால வெய்யில் காலம் ஆச்சே? அதான் போல..."னு பாசமா குழி பறிக்கும் அன்பு உள்ளங்களே... அப்படி எல்லாம் நல்லது ஒண்ணும் இன்னும் நடக்கலைங்க... ஹி ஹி ஹி...

அது என்ன விசயம்னா, "சேந்தாப்ல மூணு நாள் லீவ் வருதே, ஊர் சுத்தலாம்"னு போன வாரம் கிளம்பினோம். போயிட்டு வந்த ஊரோட சகவாசம் தான் இந்த மாதிரி Bonjour கீஞ்சூர் எல்லாம் வாய்ல வருது

நாங்க போன ஊர் பேரு Montreal, Ontarioவை அடுத்து இருக்கற மாகாணம் (Province) Quebec. அந்த மாகாணத்தின் ஒரு நகரம் தான் Montreal. அங்கு பெரும்பாலான மக்கள் பேசும் மொழி பிரெஞ்சு...

இப்படி ஆறாம் வகுப்பு text bookல இருக்கற மாதிரி இஸ்திரி ஜாங்கிரி... சாரி சாரி... ஹிஸ்டரி ஜியோக்ரபி எல்லாம் சொல்றதுக்கு நான் எதுக்கு... கூகிள்ல போய் Montrealனு தட்டினா வடு மாங்கால ஆரம்பிச்சு வசிஷ்டர் வீடு வரைக்கும் அதே சொல்லிடுமே... அப்படி நான் எழுதினாலும் நீங்க படிக்க போறதில்லைனு எனக்கு தான் நல்லா தெரியுமே..:)

ஒரு விஷயம் சொல்லணும், இதை படிக்கற என்னை போல அப்பாவி தங்கமணிகளுக்கும் இது ஒரு உபயோகமான டிப்ஸ்ஆ இருக்கலாம்ங்கற நல்ல எண்ணத்துல தான் சொல்றேன்... இப்பவாச்சும் என் நல்ல மனதை புரிந்து கொண்டு உங்கள் பொன்னான வாக்குகளை....ச்சே... இன்னும் போகலியே இந்த எலக்சன் பீவர்... :)

விஷயம் என்ன'னா... இந்த மாதிரி வெளியூர் பயணம் போறப்ப இந்த Packing வேலை எல்லாம் நான் செய்யறதில்ல'ங்க. "என்ன வேணுமோ கேளுங்க எடுத்து தரேன்... பெட்டிக்குள்ள வெச்சு கார்ல ஏத்தறது உங்க பொறுப்பு"னு கல்யாணம் ஆனா புதுசலையே கட் அண்ட் ரைட்ஆ அவர்கிட்ட சொல்லிட்டேன்

"இதுல என்ன பெரிய விசயம்"னு நீங்க கேக்கலாம்... இல்லாமையா பின்ன? அவங்களே எடுத்து வெச்சுக்கிட்டா, அங்க போனப்புறம் "அதை வெக்க சொன்னனே வெக்கலையா... இதை எடுக்க சொன்னனே எடுக்கலையா"னு நம்மள குறை சொல்ல முடியாது பாருங்க... ஹி ஹி ஹி

"எப்படி அப்பாவி இப்படி எல்லாம் யோசிக்கற? எங்க கண்ணே பட்டுடும் போ"னு நீங்க புகழறது புரியுது... சரி சரி விடுங்க...நமக்குள்ள என்ன...:)

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். Montrealல ரோடு signsல ஆரம்பிச்சு ரோஸ் பவுடர் கடை வரைக்கும் எங்கும் பிரெஞ்சு மயம்... இந்த "ஜில்லுனு ஒரு கா.." கதைக்காக நாலு இட்டாலியன் வார்த்தை கத்துக்கிட்ட நேரத்துல நாலு பிரெஞ்சு வார்த்தை கத்துக்கிட்டு இருந்தாலும் புண்ணியமா போய் இருக்கும்... பிரெஞ்சு கெட்ட பின் கூகிள் நமஸ்காரம் தான் போங்க...

இந்த மொழி பிரச்சனையால ஒரே ரகளை தான். இப்படி தான் நாங்க போய் சேந்த உடனே அங்க இருந்த tourist information centerக்கு போனா, அங்க இருந்த அம்மணி "Bonjour"னு சொல்ல

"Bonjour இல்ல அம்மணி எனக்கு கோயம்புத்தூர்"னு வாய் வரைக்கும் வந்துருச்சுங்க... அப்பறம் தான் ஏதோ ஜேம்ஸ் பாண்ட் படத்துல இந்த மாதிரி கேட்ட கவனம் வந்து, அம்மணி "ஹலோ" தான் சொல்லுதுனு சுதாரிச்சுட்டேன்

ஜேம்ஸ் பாண்ட் படம் எதுக்கெல்லாம் உபயோகமாகுது பாருங்க... இந்த மேட்டர் 007க்கு தெரிஞ்சா நாக் அவுட் ஆய்டுவாரோ என்னமோ... ஹையோ ஹையோ..:)

பெரிய கொடுமை என்னனா ரோடுல இருக்கற ஸ்ட்ரீட் பெயர்கள் தான். எங்க GPSல Peel Road அப்படின்னு காட்டும்... நாங்களும் எங்கடா Peelனு கண்ணை peel பண்ணி வெளக்கெண்ணை விட்டுட்டு தேடினா அங்க "Rue Peel"னு இருக்கும்... ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா...

நாம பாத்து சுதாரிச்சு திருப்பறதுக்குள்ள கார் ரோடு'ஐ தாண்டி போய்டும். இதென்ன நம்ம மேட்டுப்பாளையம் மெயின் ரோடா, நினைச்சா reverse எடுத்து வர்றதுக்கு?

இந்த அகராதி புடிச்ச GPS வேற "Drive 200 meters and take a left..."னு ஆர்டர் போடும், நாம கண்டுக்காம போனா "Take a U turn Take a U turn"னு, நம்ம கமல் சார் "ஆத்தா வெயும் காசு குடு" டயலாக் மாதிரி நாம U Turn எடுக்கற வரைக்கும் உசுர வாங்கும்...

விசு ஒரு படத்துல சொல்லுவாரே "இந்த பொண்டாடிக இருந்தாலும் கஷ்டம் இல்லைனாலும் கஷ்டம்"னு, அதே கருத்து GPSக்கும் பொருந்தும்... இருந்தாலும் கொடுமை இல்லைனாலும் கொடுமை...

எங்க உட்டேன்... ஆங்... ரோடு பேரு மாறி இருந்ததுனு சொன்னேன் இல்லையா... ஏன் இப்படி மாறி இருக்குனு பாத்தா.... 'Rue'னா 'ரோடு'னு அர்த்தமாம் பிரெஞ்சுல... அப்புறம் நம்மள மாதிரி ரோடு பேரு சொல்லி ரோடுனு சொல்ல மாட்டாங்களாம்... Rue அப்புறம் தான் Peel ஆம்... என்ன பீலோ போங்க... நாங்க பீல் பண்ணினது தான் மிச்சம்..

எல்லாமே இப்படி தலைகீழா தான் இருந்தது "Tourist Information"னு நாம இங்கிலீஷ்ல சொல்றது "Info Touriste'"னு இருக்கு பிரெஞ்சுல... ஹாப்பி பர்த்டேவை பர்த்டே ஹாப்பினு சொல்லுவாங்களோனு எனக்கு பெரிய பெரிய சந்தேகம் எல்லாம் வந்தது... ரங்க்ஸ் பதிலே சொல்லல... Too bad... :))

இப்படி தான் போய்கிட்டு இருக்கும் போது, எங்க GPSல பேசற அம்மணி "Turn Left on Rue Berri"னுச்சு... எனக்கு உடனே "அதென்ன ரூபெர்ரி, strawberryயோட தங்கச்சியா இருக்குமோ"னு மொக்க ஜோக் தான் வாய்ல வந்தது...

அதுக்கு ரங்க்ஸ் "நீ Blog எழுத ஆரம்பிச்சப்புறம் சாதாரணமா பேசறதே இப்படி தான் ஆகி போச்சு"னு டெண்சனோ டென்சன்... ஹி ஹி ஹி...

ஒரு வழியா இத்தனை தடைகளையும் தாண்டி ஊர் சுத்தினோம்... அது ஒரு பெரிய கதை எல்லாம் இல்ல... சின்ன கதை தான் சீக்கரம் முடிச்சுடறேன்...

போய் சேரும் போதே மதியம் 12 ஆய்டுச்சு... மொழி தெரியாத ஊர், எதுக்கு வம்புனு guided city tour புக் பண்ணினோம்... "அட ராமச்சந்திரா, அந்த கொடுமைக்கு நான் பிரெஞ்சு கத்துக்கிட்டே ஊர் சுத்தி இருக்கலாம்"னு அப்புறம் தோணுச்சு

அந்த கைடை குறை சொல்ல முடியாது... அங்க நடைமுறை அப்படி தான் போல... கைட்'னு சொல்லவும், நான் நம்ம ஊர் கைடு மாதிரி "இந்த கல்லணை இந்த ஆண்டில் இந்த சோழனால் கட்டப்பட்டது" ரேஞ்சுக்கு சொல்லுவார்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்

இங்க பாத்தா அந்த டூர் பஸ் டிரைவர் தான் கைட்... அவர் வண்டி ஓட்டிக்கிட்டே, ஒரு மைக் செட் வேற காதுல சொருகிகிட்டு... அதாங்க headphone மாதிரி ஏதோ ஒண்ணு... அதுல "அந்தா தெரியுது பாருங்க ஒரு வெள்ள காக்கா..." ரேஞ்சுக்கு விளக்கம் சொன்னார்

நெறைய எடத்துல நிறுத்தவே இல்ல... பார் பார் பட்டணம் பார் டூர் தான்... ஒழுங்கா விசாரிக்காம போனது எங்க தப்பு தான். இதுல உபயோகம் என்னனா, எந்த எந்த இடம் முக்கியமா பாக்க வேண்டியதுனு கத்துக்கிட்டது தான்

அப்புறம் அன்னைக்கி நைட் ஊருக்கு அப்பால இருந்த ஒரு ஹோட்டல்ல தங்கிட்டு, காலைல எந்திரிச்சு அங்க ரெம்ப பிரசித்தி வாய்ந்த முருகன் கோவில் போனோம்...இதோ படம்...

ஊர் விட்டு ஊர் போயும் கோவிலானு கேப்பீங்க.. எல்லாம் காரணமாத்தான்... நான் இந்த பூவுலகில் அவதரித்த நாள்... ஹி ஹி ஹி... வாழ்த்து அனுப்பி இருந்த ப்ளாக் நட்புகளுக்கு மிக்க நன்றி... கல்லூரி நாட்களுக்கு பின் இத்தனை வாழ்த்துக்கள் வந்தது இந்த வருடம் தான்... Many thanks everyone....:)

இந்த படம் கூகிள்ல இருந்து சுட்டதுங்க... எங்க வீட்டு பி.சி.ஸ்ரீராம் அவரோட SLR கேமரால வளைச்சு வளைச்சு எடுத்தது எல்லாம் 4GB சைஸ்ல இருக்கு... அதை எல்லாம் நான் சைஸ் மாத்தி பதிவு போடறதுக்குள்ள எனக்கு இதெல்லாம் மறந்தே போய்டும்... அதான் கூகிள் போட்டோவே போட்டுட்டேன்..:)

அதுக்கு அப்பறம், அங்க ரெம்ப பிரபலமான, மிக பெரிய சர்ச் "St. Joseph Oratory"னு ஒண்ணு... ஒரே சமயத்துல இருபதாயிரம் பேர் பிரார்த்தனை செய்யும் வசதி உடைய பெரிய சர்ச்... இதோ அதோட படம்...இதுவும் கூகிள் படம் தான்...


அந்த சர்ச்ல பதினொரு மணி Mass பாத்துட்டு ஒலிம்பிக் டவர் போனோம். இந்த டவர் 1978 ம் வருஷம் அங்க ஒலிம்பிக்ஸ் நடந்த போது கட்டினதாம்... இதுவும் கூகிள் படம் தான்...

அப்புறம், Botanical Gardens , Underground City போல இன்னும் சில இடங்கள் பாத்துட்டு ஊரை பாத்து கிளம்பியாச்சு...

வீட்டுக்குள்ள வந்ததும் "சொர்க்கமே என்றாலும் அது நம்ம வீடு போல வருமா"னு பாட தோணினது நிஜம்... என்ன தான் ஊர் சுத்தல் ஜாலி'னாலும், என்னை போல "வீடே சொர்க்கம் வாசலே வைகுந்தம்" கேஸ்'களுக்கு வீட்டுக்கு வந்ததும் தான் நிம்மதி...

ஒரு நாள் ரெண்டு நாள் சரி, அதுக்கு மேல வீட்டை விட்டு வெளில தங்கறது எனக்கு தண்டனை மாதிரி தான்... என் கூட தங்கறவங்களுக்கு இன்னும் பெரிய தண்டனை... :)))

இப்படி இந்த பயணம் இனிதே நிறைவுக்கு வந்தது.....

Last but not least, Montrealல என்னை கவர்ந்த ஒரு விசயம் சொல்லியே ஆகணும்... அந்த ஊர் மக்கள்... பிரெஞ்சு மக்கள் ரெம்ப அன்பானவங்கனு சொல்லி கேட்டு இருக்கேன்... அதை நேரில் பார்க்க இது ஒரு வாய்ப்பு... Merci (தேங்க்ஸ்) Montreans... :))

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால்... இப்டீக்கா ஊர் சுத்தின காரணத்துனால அப்டீக்கா "ஜில்லுனு ஒரு கா..." இந்த காரம்...ச்சே இந்த வாரம் வராதுங்க... அதுக்கு பரிகாரமா அடுத்த வாரத்தோட அந்த கதை முடிக்கப்படுகிறது....எங்க? எல்லாரும் ஜோரா ஒருக்கா கை தட்டுங்க பாக்கலாம்...:)))

...