Sunday, August 28, 2011

கதை சொல்லும் நேரமிது.. :)) (சிறுகதை)

"ப்ரீத்தி...தூங்குடி... ஏன் இப்படி படுத்தற... மணி பத்தாச்சு...எனக்கு தூக்கம் வருது"


"மம்மி ஸ்டோரி சொல்லு...அப்போ தான் தூங்குவேன்..." என அடம் செய்தாள் ராதிகாவின் நாலு வயது மகள் ப்ரீத்தி


"என் கதையே பெரிய கதையா இருக்கு... இதுல உனக்கென்ன கதை சொல்றது..."


"அப்போ உன் கதையே சொல்லு மம்மி"


"ஆமா... சோழ நாட்டு இளவரசனை கட்டிகிட்ட கதை... அதை வேற சொல்லனுமாக்கும்...   ஹ்ம்ம்" என சலித்தாள் ராதிகா


"ஏய்... சந்தடி சாக்குல மறைமுகமா என்னை ஏண்டி தாக்கற" என்றான், அதே அறையின் ஒரு மூலையில் கணினியில் அமரந்திருந்த ராதிகாவின் கணவன் பிரகாஷ்


"நான் பொதுவா சொன்னேன்... உங்களுக்கேன் குத்துது" என சீண்டினாள் ராதிகா


"பாப்பாவ தூங்க வெச்சுட்டு வா... உன்னை அப்பறம் கவனிச்சுக்கறேன்" என மகள் அறியாமல் மனைவியை பார்த்து கண்சிமிட்டி சிரித்தான் பிரகாஷ்


"கவனிக்கரதுன்னா என்ன டாடி" என ப்ரீத்தியின் கவனம் இப்போ கதை கேட்பதில் இருந்து மாறியது


"அது வந்து குட்டிமா..." என்று ஆரம்பித்தவனை இடைமறித்தாள் ராதிகா "கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? கொழந்த முன்னாடி என்ன பேசறதுன்னு இல்ல" என பொய் கோபம் காட்டியவள்


"ப்ரீத்தி, இப்ப நீ தூங்க போறியா இல்லையா?" என்றாள் சற்று கண்டிப்பாய்


"அப்படினா நீ ஸ்டோரி சொல்லு மம்மி" என்றாள் மீண்டும்


"மறுபடி மொதல்ல இருந்தா..." என வடிவேலு ஸ்டைலில் கூறி சிரித்தான் பிரகாஷ்


"நீங்க லாப்டாப் எடுத்துட்டு கீழ ஹால்க்கு போங்க..." என்றாள் ராதிகா


"சரி சரி...நான் இனி பேசலை..." என அமைதியானான் பிரகாஷ்


"ஸ்டோரி சொல்லு மம்மி... " என ப்ரீத்தி மீண்டும் ரகளை ஆரம்பித்தாள்


"இருடி சொல்றேன்... இவ வேற... ம்... ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்களாம்"


"ஏன் மம்மி எப்பவும் பாட்டியே வடை சுடறாங்க... மம்மிக்கெல்லாம் வடை சுட தெரியாதா?" என ப்ரீத்தி கேள்வி கேட்கும் படலத்தை ஆரம்பிக்க


"ஹா ஹா ஹா... சூப்பர்டி செல்லம்... ஒரு கேள்வினாலும் நெத்தியடியா கேட்ட" என இதுதான் சாக்கென மனைவியை கேலியாய் பார்த்தபடி சிரித்தான் பிரகாஷ்


"உங்கப்பாவுக்கு சும்மாவே பேச சொல்லிதர வேண்டாம்... இவ வேற பாயிண்ட் எடுத்து குடுக்கறா" என இருவரையும் முறைத்தாள் ராதிகா


"ஸ்டோரி சொல்லு மம்மி" என ப்ரீத்தி மீண்டும் அனத்த தொடங்க


"சரி சொல்றேன்... சும்மா சும்மா கேள்வி கேட்டா ஒதை படுவ..."


"ம்...ஒகே" என்றாள் ப்ரீத்தி சமத்தாய்


"ம்... அந்த பாட்டி வடை சுட்டுட்டு இருந்தப்ப..."


"ஏன் மம்மி பாட்டி எப்பவும் வடையே சுடறாங்க... டோநட், பிரெஞ்சு ப்ரைஸ் எல்லாம் செய்ய மாட்டாங்களா?"


"ஆண்டவா..." என ராதிகா தலையை பற்றிக்கொள்ள, அதற்கு மேல் சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரித்தான் பிரகாஷ்


"இன்னொரு வாட்டி சிரிச்சீங்கன்னா நீங்க தான் கதை சொல்லணும்" என மிரட்டினாள் ராதிகா


"ஒகே ஒகே...மீ சைலண்ட்" என கணினியில் கவனம் பதித்தான் பிரகாஷ்


"சொல்லு மம்மி" என ப்ரீத்தி மீண்டும் ஆரம்பிக்க


"ம்... அந்த பாட்டிக்கு யாரும் சொல்லி தரல... நீ வேணா போய் க்ளாஸ் எடு" என்றாள் கடுப்புடன்


"ம்...அப்புறம் என்னாச்சு?" என்றாள் ப்ரீத்தி ஆர்வமாய்


"அப்பறம்... ஒரு காக்கா வந்து ஒரு வடைய தூக்கிட்டு போயிடுச்சாம்"


"காக்கா எப்படி இருக்கும் மம்மி" என அடுத்த கேள்வியை ஆரம்பித்தாள் ப்ரீத்தி


"கேள்வியின் நாயகி ஆரம்பிச்சுட்டா... கடவுளே... போன வாட்டி இந்தியா போனப்ப நீயும் தாத்தாவும் மொட்டை மாடில போய் காக்காவுக்கு சாப்பாடு எல்லாம் வெச்சீங்களே மறந்து போச்சா"


"ம்...மறந்து போச்சு மம்மி... எப்படி இருக்கும்னு சொல்லு"


"எப்படினா... எப்படி சொல்றது... கருப்பா இருக்கும்" கிட்டத்தட்ட அழும் நிலைக்கு போய் விட்டாள் ராதிகா


"பெங்குயன்ஆ?" ப்ரீத்தி தனக்கு தெரிந்த பெயர்களை சொல்ல தொடங்கினாள்


"இல்ல ப்ரீத்தி... இது குட்டியா இருக்கும்...ரெக்கை இருக்கும்..."


"பீஜியனா?"


"அட ஈஸ்வரா....கொடுமைக்கு இவளுக்கு காக்காவை எப்படி எக்ஸ்ப்லைன் பண்றது" என விழித்தாள் ராதிகா


"போ மம்மி உனக்கு கதை சொல்லவே தெரியல...டாடி தான் சூப்பர் கதை எல்லாம் சொல்லுவாங்க" என மழலையில் பழித்தாள் ப்ரீத்தி


அதற்கு மேல் கணினியில் அமர்ந்திருக்க மனமின்றி மகள் அருகில் வந்த பிரகாஷ் "என் செல்லகுட்டி... டாடி செல்லம் தானே ப்ரீத்தி..." என மகளை கொஞ்சினான், மனைவி முறைப்பதை பொருட்ப்படுத்தாமல்


"எஸ், மீ டாடி செல்லம்" என தந்தையை முத்தமிட்டாள் ப்ரீத்தி


"நேரண்டி... உன்னோட நாள் பூரா படறது நான்... டாடி செல்லமா... போ உங்க டாடிகிட்டயே கேளு கதை....நான் தூங்கறேன்" என திரும்பி படுத்தாள் ராதிகா


"சொல்லு டாடி...காக்கா எப்படி இருக்கும்?"


"டாடி நாளைக்கு கம்ப்யூட்டர்ல தேடி தரேன்...சரியா..." என பிரகாஷ் சமாளிக்க


"கூகிள் பண்ணியா டாடி?" என மகள் கேட்க


"அட... உனக்கெப்படி கூகிள் எல்லாம் தெரியும்?" என பிரகாஷ் ஆச்சிர்யமாய் கேட்க


"ஹும்க்கும்... அவ பொறந்ததுல இருந்து நீங்க எப்பவும் அதை செய்யறத பாத்துட்டு தானே இருக்கா... பில்ட் அப் மட்டும் என்னமோ ஆபீஸ் வேலை பாக்கற மாதிரி தான்.." என இது தான் சமயமென கணவனை வம்பு செய்தாள் ராதிகா


"கொலஸ்ட்ரால் ஓவரா போச்சு உன் மம்மிக்கு..." என சிரித்தான் பிரகாஷ்


ஒருவழியாய் மாறி மாறி ஏதோ கதை சொல்லி சமாளித்து மகளை தூங்க செய்தனர் இருவரும்


"ஏய் ராதி.... ஊருக்கு போன் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தியே மறந்துட்டயா?" என பிரகாஷ் நினைவுபடுத்த


"அட...ஆமாம்ப்பா... அம்மா பாத்துட்டு இருப்பாங்க... கொஞ்சம் போன் எடுங்களேன் ப்ளீஸ்"


"வரவர எடுபிடி ரேஞ்சுக்கு ஆகி போச்சுடா பிரகாஷ் உன் நிலைமை" என பிரகாஷ் பொய்யாய் சலித்து கொண்டே மனைவியிடம் போனை எடுத்து தர


"ரெம்பத்தான்... " என கணவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு எண்களை ஒற்றினாள்


"ஹலோ"


"ஹலோ...அம்மா நான் ராதிகா பேசறேன்"


"சொல்லு ராதிம்மா... எப்படி இருக்க? மாப்ள நல்லா இருக்காரா? குட்டி என்ன பண்றா?"


"அது இத்தன நேரம் படுத்தி எடுத்துட்டு இப்பதான் தூங்குதும்மா"


"அவ முழிச்சுட்டு இருக்கறப்ப கூப்ட்டு இருக்கலாமேடி... ரெண்டு வார்த்த பேசி இருப்பாள்ல"


"நாளைக்கு மறுபடி பேச வெக்கறேன்மா..."


"ம்... அப்புறம் ராதிம்மா... நம்ம கோகிலா அத்தையோட மச்சினர் பொண்ணு ஏதோ ப்ராஜெக்ட் வேலையா அமெரிக்கா வராளாம்... ஒரு மாசம் தான் ப்ராஜெக்ட்'ங்கறதால நெறைய சாமான் ஒண்ணுமில்ல... நீங்க ராதிகாவுக்கு எதுனா குடுத்து அனுப்பரதுன்னா குடுங்கனு சொன்னா... என்ன அனுப்பட்டும்" என்றாள் அம்மா ஆர்வமாய்


"எல்லாம் இங்கயே கிடைக்குதும்மா" என்றாள் ராதிகா வழக்கம் போல்


"இருக்கட்டும் ராதிம்மா... கொஞ்சம் முறுக்கு, அதிரசம் அப்படி செஞ்சு அனுப்பறேன்... வேற எதுனா வேணும்னா சொல்லுடா"


ஒரு கணம் யோசித்த ராதிகா "அம்மா... காக்காவை ஒரு போட்டோ எடுத்து அனுப்பும்மா" எனவும்


"என்னது?" என தான் சரியாய் தான் கேட்டோமா என மீண்டும் கேட்டாள் அம்மா


ஸ்பீக்கர் போன் என்பதால் பேச்சை கேட்டு கொண்டிருந்த பிரகாஷ், ராதிகா காக்கை படம் கேட்டதும், கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாய் சிரித்தான்


*******************************************************


அப்பாவி அப்டேட்:

உண்மைய சொல்லணும்னா, நான் இந்த கதை எழுத முக்கிய காரணம், எங்கூரு  அம்மணி... கொங்கு நாட்டு சிங்கி (சிங்கத்தின் பெண் பால்)... சமையல் அரசி... (!) மகி தான்...

என்னோட இந்த போஸ்ட்ல மகி போட்ட கமெண்ட்:-
//மகி சொன்னது… புவனா, 'ல்'-ஐக் காணமே?காக்கா தூக்கிட்டுப் போயிருச்சா?! :) :)//

அதை பாத்ததும் "அட நாம காக்காவை வெச்சு ஒரு போஸ்ட் கூட போடலியே" னு ஒரே பீலிங்க்ஸ் ஆகி, அப்ப தோணினது தான் இது... அதனால திட்டனும்னா அவங்கள திட்டுங்க... மீ அப்பாவி யு நோ...:)

ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா... (வில்லி சிரிப்பு) பழிக்கு பழி... என்னை பாத்து என்னை பாத்து என்னை பாத்து, இந்த அப்பாவிய பாத்து, எப்படி அப்படி  நம்பிக்கை இல்லாம ஒரு கேள்வி கேக்கலாம்...

அதான் மகி, இந்த பழிக்கு பழி வாங்கும் போஸ்ட்... உங்க ப்ளாக்ல வந்து விழும் முட்டை தக்காளி எல்லாம் பத்திரமா சேத்து வெச்சு ரோஸ்ட் அல்லது டோஸ்ட் செய்து மகிழும் படி கேட்டு கொள்கிறேன்... நன்றி வணக்கம்... :)))

இனிமே என்னை கேப்பீங்க கேள்வி..:))

Sunday, August 07, 2011

காயத்ரி மந்த்ரம்... (சிறுகதை)
"மூணு பேரும் அங்க தானே இருக்கேள், அந்த போன் கத்தறதோன்னோ... ஏண்ணா, நீங்களாச்சும் எடுங்கோளேன்...நான் தளிகை பண்ணின்டுருக்கேன்" மனைவி ருக்மணியின் குரலில், பத்திரிகையில் மூழ்கி இருந்தவர் கவனம் கலைய

"இந்த நேரத்துல கூப்பிடறது வெட்டியா இருக்கற உங்காத்து மனுசாளாத்தான் இருக்கும்... நான் எடுத்து எதுனா பேசினா பின்ன 'ஏன் இப்படி சொன்னேள், ஏன் இப்படி சொல்லலை'னு உன் வம்பு நேக்கு வேணாம் தாயே" என்றார் ரங்கராஜன் நமுட்டு சிரிப்போடு

"என் பொறந்தாத்து மனுசாளை சீண்டாம ஒரு நாள் விடியுமா என்ன உங்களுக்கு... ஹ்ம்ம்... " என கணவனிடம் சலித்தவள் "ஏன்டா சின்னவனே இப்ப நீ போன் எடுக்க போறியா இல்லையா... திரும்பவும் மணி அடிக்கறது பாரு" என்றாள் ருக்மணி சற்று கோபமாய், தன் இளைய மகனிடம்

"ஆமா... இப்படி ஏவறதுக்கு மட்டும் சின்னவன் நான் வேணும்... தலைல தூக்கி வெசுக்கரச்ச உன் சீமந்த புத்தரன் பெரியவன் வேணும்...ஹ்ம்ம்..." என சலித்து கொண்டே போய் தொலைபேசியை எடுத்தான் கேசவ்

"ஹலோ..."

"ஹலோ ராகவ் இருக்காரா?" என்றது எதிர்முனை பெண் குரல்

பெண் குரல் என்றதும் சுவாரஸ்யம் தூண்ட "நீங்க?" என கேசவ் கேள்வியாய் நிறுத்த, எதிர்முனையில் சிறிது நேரம் மௌனம் நிலவியது

"ஹலோ...யார்னு கேட்டேனே?" என்றான் கேசவ் மீண்டும், சற்று அதட்டலாய்

"ம்... பார்வதி நம்பியார்" என்றது எதிர்முனை சற்று கேலியாய்

ஒரு கணம் மௌனமாய் யோசித்த கேசவ், புரிந்தவனாய் சிரிப்பை அடக்கி கொண்டு "என்னது... பார்வதி நம்பியாரா? ராகவ்கிட்ட பேசணுமா?" என்றான் வேண்டுமென்றே சத்தமாய், ஓரகண்ணால் அண்ணன் ராகவ்'ஐ பார்த்தபடியே

அவன் எதிர்பார்த்தது போலவே அவசரமாய் எழுந்து வந்தான் ராகவ். போனை கேசவ் கையில் இருந்து பிடுங்கியவன் "போ..." என்பது போல் ஜாடை காட்டினான்

"டேய் அண்ணா... யாரது பார்வதி நம்பியார்? புதுசா இருக்கே உன் பிரெண்ட் பேரு... 1947 பேர் போல இருக்கே" என நகராமல் வம்பு செய்தான் கேசவ்

"ம்... என் பிரெண்ட் உடைய அம்மா.. போறுமா? இன்னும் விளக்கம் சொல்லணுமா?" என முறைத்தான் ராகவ்

ஒன்றும் பேசாமல் கேலியாய் சிரித்தவாறே நகர்ந்தான் கேசவ். அவன் சென்று விட்டான் என உறுதி செய்து கொண்டதும், தன் தந்தை முன்னறையில் அமர்ந்திருப்பதை ஊர்ஜிதப்படுத்தியவன் "அறிவிருக்காடி நோக்கு.." என தொலைபேசியில் அடிக்குரலில் சீறினான் ராகவ்

"அது இருந்தா உன்ன லவ் பண்ணி இருப்பேனா ராகவ்" என சிரித்தாள் காயத்ரி

"இந்த கொழுப்புக்கு கொறச்சல் இல்ல... போன் வெய்... நான் செல்லுல இருந்து கூப்பிடறேன்" என தன் அறைக்குள் சென்று செல்போன் எடுத்து அழுத்தினான்

அவள் ஹலோ எனும் முன் "எதுக்கு லேன்ட் லைன்ல கூப்ட்ட?" என்றான் கோபமாய்

"செல்போன் அடிச்சா எடுக்கல.... அதான் அதுல கூப்ட்டேன்..." என்றாள் வேண்டுமென்றே சிரிப்புடன்

"நேத்து ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ணின்டிருந்தேன் நீ வருவேனு... ஒரு போன் பண்ற கர்டசி கூட இல்ல... அதான் உன் கால் எடுக்கல... இப்பவும் உன்னிட்ட பேசற எண்ணமில்ல.. வெய் போனை" என்றான் கோபம் குறையாத குரலில்

"சாரி சாரி சாரி, நேத்தைக்கு எங்க மாமா ஆத்துல இருந்து எல்லாரும் வந்திருந்தா... சட்டுன்னு கிளம்ப முடியல... என் ரூம்ல ஒரு கும்பலே இருந்தது... அதான் போன் கூட பண்ண முடியல... சாரி ராகவ்" என்றாள் நிஜமான வருத்ததுடன்

"ஓ... இப்ப புரியறதுடி நேக்கு... உன் அம்மாஞ்சிய(மாமன் மகன்) பாத்ததும் என்னை பாக்க வரேன்னது மறந்து போய்டுத்து இல்ல" என்றவனின் குரலில் இருந்த உரிமை கலந்த கோபத்தை புரிந்து கொண்டவளாய் சிரித்தாள்

"என்ன சிரிப்பு இப்போ... நான் வெக்கறேன்" என்றான் கோபமாய்

"ஏய் ஏய்... சாரி ராகவ்... அப்படி இல்லப்பா... நெஜமாவே சூழ்நில போன் பண்றாப்ல இல்ல...சாரி சொல்லிட்டேனே... ப்ளீஸ்" என காயத்ரி கெஞ்சலாய் கேட்க, அந்த கெஞ்சலில் இவன் கோபம் கரைந்தது

"தொலஞ்சு போ..." என்றவன் "கொஞ்சம் ஏமாந்தா ஆத்துல மாட்டி விட்டுருப்ப...ச்சே" என்றவனின் குரலில் நிஜமான பயம் தெறித்தது

"அதுக்கு தான் காவலன் படத்துல வர்ற code word சொன்னேன்...வடிவேலு சொல்ற மாதிரி பார்வதி நம்பியார்... அதாவது பிரைவேட் நம்பர்.... உன் காயத்ரி சமத்து தானே ராகவ்" என அவள் உரிமையாய் கொஞ்ச, அதை அவன் உள்ளூற ரசித்த போதும்

"உன் தலை... காவலன் படத்த நோக்கும் நேக்கும் மட்டும் தான் விஜய் exclusive ஷோ போட்டாரா? ஊரே தான் பாத்திருக்கும்... என் தம்பி வேற ஒரு மாதிரி சிரிச்சுண்டு போறான்... அவனை வேற சரி கட்டணும் இனி..... ஐயோ... இப்படி மாட்டி விடறியேடி" என புலம்பினான்

"சரி சரி நோ டென்ஷன் ராகவ்... இன்னிக்கி மீட் பண்ணலாமா அதை கேக்கதான் கூப்ட்டேன்"

"ஏன் உன் அம்மாஞ்சி ஆத்துல இல்லையா?" என வம்பு செய்தான்

"சரி... அவனோடயே போய்க்கறேன் வெய்" என்றாள் அவளும் சளைக்காமல்

"ஏய்... கொன்னுடுவேன்... விட்டா போதும்னு ஒடுவ போல...நேரத்தோட வந்து சேரு" என்றவன், அதன் பின்னும் சில மணி நேரம் (!) செல் போன் பேட்டரி "கொஞ்சம் சார்ஜ் போடேன்" என கெஞ்சும் வரை பேசி கொண்டே இருந்தான்

************************************************

அன்று இரவு உணவு உண்ணும் வேளையில் வழக்கம் போல் பெரியவனின் திருமண பேச்சை எடுத்தாள் ருக்மணி

"ஏன்னா... நேத்திக்கி எங்க மன்னி வந்திருந்தா..." என இழுக்க, பேச்சு போகும் திசையை உணர்ந்தவர் வேண்டுமென்றே

"அந்த சாற்றமுது கொஞ்சம் இப்படி எடு ராகவ்" என உண்ணும் விசையில் இருப்பது போல் பிடிகொடுக்காமல் பேசினார் ரங்கராஜன்

"நான் என்ன சொல்றேன்.. நீங்க என்ன கேக்கறேள்... எங்காத்து மனுசா பத்தி பேசினா எப்பவும் இப்படி தான்... " என ருக்மணி கண்ணை கசக்க

"டீ ருக்கு... சாப்பிடரச்சே சாற்றமுது பத்தி கேக்காம உன் அண்ணன் ஆராவமுதன் பத்தி கேக்க முடியுமா சொல்லு" என கேலியாய் சிரித்தார்

"இங்க பாருங்கோ... நீங்க என்ன பண்ணுவேளோ தெரியாது... வர்ற வைகாசில நம்ம ராகவ்க்கும் என் அண்ணா பொண்ணு வைதேகிக்கும் முஹுர்த்தம் பாக்கறோம்.... அதுக்கு நீங்க தான் பொறுப்பு" என்றாள் தீர்மானம் போல்

இதை கேட்ட அதிர்ச்சியில் ராகவ்க்கு புரை ஏறியது. எப்போதும் தன் அன்னை ருக்மணி இந்த பேச்சை எடுப்பது தான் என்றாலும் இந்த முறை முடிவு செய்தது போல் பேசியதில் அதிர்ச்சியானான்

ஒரு ஒரு முறையும் ஏதேனும் சாக்கு சொல்லி தப்பித்து வந்தவன் இன்று என்ன செய்யப்போகிறோம் என புரியாமல் விழித்தான். ஆனால் இன்று தன் தந்தையும் இதில் பிடி கொடுக்காமல் பேசியதில் ராகவ் சற்று குழம்பித்தான் போனான்

காயத்ரி போன் வந்ததில் இருந்து கிண்டல் பார்வை பார்க்கும் தம்பி கேசவ் ஏதேனும் உளறி விடுவானோ என்ற பயத்தில் அவன் பக்கம் பார்க்க, அவன் கேலியாய் சிரித்தான். அது வேறு வயிற்றில் புளியை கரைத்தது

"ருக்கு... இன்னும் கொஞ்ச நாள் போட்டும்டி... ஜாலியா இருக்கற வயசு... அவனையும் ஏன் சம்சார சாகரத்துல சிக்க வெக்கணும்னு துடிக்கறே" என ரங்கராஜன் தன் ஆட்சேபனையை தெரிவித்தார். அதன் பின் ராகவ் சற்று நிம்மதியானான்

"என்னண்ணா பேசறேள்... என் தங்கை பிள்ளை கிருஷ்ணா இவன விட ஆறு மாசம் சின்னவன். அவனுக்கு முஹுர்த்தம் குறிச்சாச்சு"

"இங்க பாருடி ருக்கு... காதலிக்கறது பஸ்ல போற மாதிரி, பிடிக்கலேன்னா அடுத்த ஸ்டாப்ல எறங்கினுடலாம்... ஆனா கல்யாணங்கறது விமான பயணம்... பிடிக்கலேன்னு எறங்கினா பரலோகம் தான்" என மகன்கள் இருவரையும் பார்த்து அர்த்த புன்னகை பூத்தார்

"இதென்ன புது விளக்கம்மான்னா இருக்கு... யார் சொன்னதாம் இது" என்றாள் ருக்மணி ஆர்வமாய்

"அது... வடிவேல் சித்தர்னு ஒத்தர், மதுரை பக்கம் இருந்து 'புயல்' மாதிரி வருவாராம்... சமீபத்துல 'காவலன்'னு ஒரு காலட்சேபம் கூட நடந்ததாமே... நோக்கு தெரியாதா ருக்கு?" என சினிமா அதிகம் விரும்பாத மனைவியிடம் வினவியவர்

"ஏண்டா ராகவா, நான் சொல்றது சரி தானே..." என மகனை கேள்வியாய் நோக்க

"அப்பா அது வந்து... " என ராகவ் இழுத்தான்

"டேய் கேசவா, பார்வதி நம்பியார் கருத்து கூட அந்த சித்தர் சொன்னது தானே" என இளைய மகனை பார்த்து கண் சிமிட்ட, அதற்கு மேல் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாய் சிரித்தான் கேசவ்

அப்போது தான் ஏதோ விஷயம் என உணர்ந்தாள் ருக்மணி "என்ன நடக்கறது இங்க... என்னமோ அப்பாவும் புள்ளைகளும் பூடகமா பேசிக்கறேள்... நேக்கு ஒண்ணும் புரியல" என்றாள் புரியாத எரிச்சலுடன்

"ருக்கு... உன் பசங்களுக்கு சினிமா அவா மட்டும் தான் பாக்கறதா நெனப்பு... அதான் நூறு சேனல்ல தெனமும் போடறானே எல்லா காமடி சீனும்..." என சிரித்தார்

"அப்பா... நான்...அது... நானே உங்கள்ட்ட..." தந்தை கண்டுபிடித்து விட்டார் என்பது புரிய, ராகவ்  தயக்கத்துடன் தலை குனிந்தான்

"டேய் ராகவ்... இப்ப என்ன தப்பு செஞ்சுட்டேனு தல குனியற... காதலிக்கறது எந்த தப்புமில்ல... சரியான இணையாங்கறது தான் என் கவலை" என்றார் பெற்றவருக்கே உரிய ஆதங்கமாய்

ராகவ் பதில் சொல்லும் முன் "என்ன சொல்றேள்... யாருக்கு காதல்... ராகவ் என்னடா இதெல்லாம்... என் தலைல கல்ல தூக்கி போடறியே" என ருக்மணி அழத்துவங்க

"ருக்மணி... நீ சும்மா இரு.. சொல்லு ராகவ்... யாரு அந்த பொண்ணு... இன்னிக்கி காத்தால பேசினவ தானே" எனவும்

அன்னையை யோசனையாய் பார்த்தபடியே "ஆமாம்ப்பா... அது... காயத்ரினு... எங்க பேங்க் மேனேஜர் வெங்கட்ராமன் சார் பொண்ணு" என தயக்கத்தோடு கூறினான்

ஒரு கணம் யோசனையாய் பார்த்தவர் "அவர் பத்தி கேள்விபட்டிருக்கேன்... நல்ல மனுஷன்... நல்ல குடும்பம்... பொண்ணு என்ன பண்றா? அவாத்துல தெரியுமா?" என கேள்விகனைகளை அடுக்க

"அவ CA Final எழுத போறாப்பா... அவ அப்பாவுக்கு தெரியும்... ஆனா நாங்களா பேசட்டும்னு நினைக்கறார் போல... எதுவும் கேக்கல அவர் இது வரை... காயத்ரி CA முடிச்சப்புறம் உங்கள்ட்ட பேசலாம்னு நான்  காத்துன்டுருந்தேன்... அதுக்குள்ள நீங்களே... சாரிப்பா.." என்றான்

ஏற்ற வரன் தான் என புரிந்தததும் மகிழ்வுடன் "பேஷ் பேஷ்...  ஆடிட்டர்  நாட்டுப்பொண்ணா... டீ ருக்கு.... நோக்கு இனி விடுதலை தான்...  ஆத்து கணக்கு  வழக்கெல்லாம்  அவள்ட்ட  ஒப்படைச்சுட்டு உங்காத்து மனுசாளோட ஜமாய்" என சிரித்தார்

"ஏண்ணா... என்ன பேசறேள்... விட்டா சம்மந்தம் பேசுவேள் போல இருக்கே" என படபடத்தாள் ருக்மணி

"ஆமா ருக்கு... சம்மந்தம் தான்... பிள்ளைங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்"

"அப்போ...எங்க அண்ணாவுக்கு நான் என்ன சொல்லட்டும்" என ருக்மணி முகம் வாட, தந்தையின் சம்மதம் புரிந்து கொண்ட கேசவ், சூழ்நிலையை இளக செய்யும் நோக்குடன் "நீ வருத்தப்படாதேம்மா.. வைதேகிக்கு நானாச்சு" என்றான் சோகமாய் முகத்தை வைத்து கொண்டே

"அறிவு கெட்டவனே... அவ உன்ன விட ரெண்டு வயசு மூத்தவடா" என்றாள் அன்னை கோபம் குறையாமல்

"அதுகென்னம்மா... நம்ம சச்சின் ஆத்துக்காரி கூட அவன விட மூத்தவ தானாம்... இவ்ளோ ஏன்? மகாத்மா காந்தியோட ஆத்துக்காரிகூட மூத்தவ தான்" என அவன் சிரிக்கவும், அவன் கேலி செய்வது புரிந்து தந்தையும் தமையனும் சிரிக்க

"எல்லாருக்கும் நான் இளப்பமா போயிட்டேன்... ஒண்ணு சேந்து என்னை ஒதுக்கிட்டேள் இல்ல... இருங்கோ அப்படியே இருங்கோ" என ருக்மணி வராத கண்ணீரை துடைத்து கொண்டே எழுந்து செல்ல முயல

"ருக்கு... நீ தானே நம்மாத்து அச்சாரம்... நீ இல்லாம நாங்க வெறும் சக்கரம் ஒண்ணும் செய்யரதுகில்லடி..." என மனைவியை தாஜா செய்தார் ரங்கராஜன்.  சமாதானம் செய்ய கூறியது என்றாலும், மனைவியின் மீது   கொண்ட அன்பு, அவர் குரலில் தெறித்தது

அது புரிந்த போதும், அப்போது இருந்த மனநிலையில் "இந்த பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல... " என ருக்மணி முகம் திருப்ப

"இங்க பாரு ருக்கு... அத்தங்கா(அத்தை மகள்) அம்மாஞ்சி(மாமன் மகன்)னு பொறப்புல இருந்தே நெனப்புல வாழ்ந்ததெல்லாம் அந்த காலம்... அது நல்லதில்லனு டாக்டர்ஸ் எல்லாம் கூட சொல்றாளே இப்போ... வைதேகி இந்த காலத்து பொண்ணு... அவளுக்கும் இதுல விருப்பம் இருக்கறாப்ல நேக்கு தோணல... ராகவ் இஷ்டபட்ற பொண்ணும் நல்ல குடும்பத்து பொண்ணு தான்... அவன் விருப்படியே நடப்போமே...என்ன சொல்ற ருக்கு?" என மனைவியை கேள்வியாய் பார்த்தார் ரங்கராஜன்

தன்னிடம் கருத்து கேட்பது போன்ற தெனி தெரிந்தாலும், அவர் மனதின் தீர்மானம் அவர் குரலில் ஒலித்ததை இத்தனை வருட தாம்பத்யத்தில் புரிந்து கொண்டாள் ருக்மணி

மனைவியின் கருத்துக்கு எப்போதும் மதிப்பு கொடுப்பவர் தான் ரங்கராஜன், ஆனால் தனக்கு சரியென தோன்றுவதை எடுத்து சொல்லி புரிய வைத்து ஒப்புகொள்ள செய்வதிலும் வல்லவர் என்பதை ருக்மணி அறிந்தே இருந்தார்

அதோடு, அவர் எடுக்கும் முடிவுகள் என்றும் தவறாய் போனதில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்தும் இருந்தாள். இருந்தாலும் தன் அண்ணன் மகளை மருமகளாய் கொண்டு வரும் கனவு சிதைந்ததில் சற்று வருத்தம் இருந்தது மனதில்

அதே வருத்ததுடன் "ம்...எல்லாம் அவன் இஷ்டப்படியே நடக்கட்டும்" என்றாள் பெரிய மகனை பார்த்தபடியே

"அம்மா... உன் இஷ்டமும் சேத்துனு சொல்லுமா... ப்ளீஸ்" என ராகவ் கெஞ்சலாய் பார்க்க, இந்த காலத்து சில பிள்ளைகள் போல் என் விருப்பம் தான் முக்கியம் என நினைக்காமல், பெற்றவளின் சம்மதமும் வேண்டுமென நிற்கிறானே தன் பிள்ளை என நெகிழ்ந்தாள் ருக்மணி

அந்த கணத்தில் மனதில் இருந்த சிறு வருத்தம் கூட தொலைந்து போக, மனம் நிறைந்த சந்தோசத்துடன்  "அப்படியே ஆகாட்டுண்டா கண்ணா" என மகனின் தலை தொட்டு ஆசீர்வாதம் போல் வருடினாள் ருக்மணி

"அப்போ இனிமே நம்மாத்துல தெனமும் 'ஓம் புர் புவஹா ஸ்வஹா' தான் இல்லையா" என கேசவ் சிரிக்க, ஒரு கணம் புரியாமல் விழித்த மற்றவர்களும் பின் சேர்ந்து சிரிக்க

"ஆனாலும் கொழுப்புடா கேசவ் நோக்கு" என்றான் ராகவ் சிரிப்பினூடே

"ஆஹா...மன்னி பேரை நெத்தில அடிச்சாப்பல சொல்ல வேண்டாம்னு காயத்ரி மந்திரம் சொல்றது தப்பா... ஹும்" என பொய்யாய் சலித்து கொண்டான் கேசவ்

"அம்மா, ஆனா ஒரு விஷயம் 'என் புள்ள சமத்து... வார கடேசீல கூட மேனேஜர் ஆத்துல ஏதோ கணக்கு வேலைனு போறான்.. நீயும் இருக்கியே ஊர் சுத்தி' னு என்னை திட்டுவியே அடிக்கடி... இப்போ பாரு உன் புள்ளாண்டான் என்ன கணக்கு பண்ணி இருக்கான்னு... எங்க மேனேஜர்க்கு இப்படி ஒரு பொண்ணு இருந்தா நானும் தான் ஞாயத்துக்கிழமை கூட ஜோலி பாக்க போவேன்" என இது தான் சாக்கென கேசவ் தன் அண்ணனை வம்பு செய்ய, அவன் காது பற்றி திருகினான் ராகவ்

"டேய் அண்ணா...விட்றா... ஆ.... வலிக்கறது... கொஞ்ச நாள்ல மன்னி நோக்கு செய்ய போறத நேக்கு Demonstrate பண்ணி காட்றியா?" என கேசவ் மேலும் வம்பு செய்ய, எல்லாரும் சிரிக்க, அப்போதே கல்யாண களை கட்டியது வீடு

காயத்ரி கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராகவ் கல்யாண வைபோகமே
காயத்ரி கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராகவ் கல்யாண வைபோகமே!!!

...:)

Monday, August 01, 2011

ராங் காலும் ரங்கமணியும்...:)(டெலிபோன் மணி அடிக்கிறது)

தங்கமணி : காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன்... ச்சே...  ஒரு வேலை செய்ய விடறாங்களா (என முணுமுணுத்தபடி வந்து போன் எடுத்து)

ஹெலோ (என்றாள் ஸ்டைலாய்)

எதிர்முனையில் ஒரு பெண் : சத்ஸ்ரீஅகால்ஜி

தங்கமணி : என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க

(ச்சே... இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு என முணுமுணுக்கிறாள்)

எதிர்முனை : நை நை

தங்கமணி : (ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி) என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல... பிச்சுபுடுவேன் பிச்சு

எதிர்முனை : நை நை ஜி... (என அந்த பெண் ஏதோ சொல்ல வருவதற்குள்)

தங்கமணி : என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? மறுபடி நை நை'ங்கற

எதிர்முனை : Is this XXXXXXX? (என ஒரு போன் நம்பர் சொல்லி கேட்க)

தங்கமணி : நோ நோ ராங் நம்பர் (என போனை கட் செய்தவள் "ஹ்ம்ம்.. வேற வேலை இல்ல இதுகளுக்கு... ராங் கால் பண்ணினதும் இல்லாம என்னை வேற திட்டுது... கொழுப்பு" என முணுமுணுத்தபடி வேலையை தொடர்ந்தாள்)


சிறிது நேரத்தில் ரங்கமணி என்ட்ரி....

"ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா.... என்னா வெயிலு என்னா வெயிலு... சாயங்காலம் வரைக்கும் கொளுத்துது போ" என்றபடி மின் விசிறியை சுழல விட்டார்

"ஹ்ம்ம்... ஊட்டில ஒரு வேல பாருங்க... குளுகுளுனு இருக்கலாம் வருஷம் பூரா" என்றாள் கேலியாய்

"ஏன் அண்டார்டிக்கால பாத்தா வேண்டாம்பியோ?" என்றார் அவரும் கேலியாய் பதிலுக்கு

"ஹும்க்கும் இங்க இருக்கற ஆக்ராக்கு போய் தாஜ் மகாலை பாக்க வழியைக்காணோம்... இதுல அன்டார்டிக்காவாம் ஆப்ரிகாவாம்" என கழுத்தை நொடிக்கிறாள்

"பாத்து பாத்து... ரெம்ப திருப்பாத, கழுத்து சுளுக்கிக்க போகுது..."

"இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல"

"ஏன் தங்கம்? என்னமோ 5ம் நம்பர் பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்ல எறங்கற மாதிரி இங்க இருக்கற ஆக்ராங்கற... அது போகணும் ரெண்டு நாளு ட்ரெயின்ல"

"மனசிருந்தா அமெரிக்காவும் அரை மையில் தான்... மனசில்லைனா அடுத்த தெருவும் அரை நாள் தொலைவு தான்"

"ஆரம்பிச்சுட்டயா உன் பழமொழி ரீமிக்ஸ் வேலைய? அது சரி... என்ன டிபன் இன்னிக்கி?" என பேச்சை மாற்றுகிறார்

"சேமியா கிச்சடி"

"எப்ப பாத்தாலும் இதே தானா? வேற எதாச்சும் வெரைட்டியா செய்யேன்"

"என்னது? எப்ப பாத்தாலும் இதேவா? இன்னைக்கி காலைல பொங்கல் செஞ்சேன், நேத்து சாயங்காலம் தோசை காலைல ஆப்பம், முந்தின நாள் சாயங்கலாம் அடை காலைல உப்மா, அதுக்கு முந்தின நாள் சாயங்காலம் இட்லி காலைல எலுமிச்சபழ சேவை... இதுக்கு மேல என்ன வெரைட்டி செய்ய சொல்றீங்க?" என முறைக்கிறார்

"அதில்லம்மா... இந்த சப்பாத்தி சன்னா, பூரி மசால், நான் குருமா, புலாவ் பச்சிடி இப்படி எதுனா செய்யலாமே?"

"அதுக்கு எவளாச்சும் ஹிந்திகாரியா பாத்து கட்டி இருக்கணும்..." என்கிறாள் கடுப்பாய்

"ஹ்ம்ம்... இப்ப யோசிச்சு என்ன புண்ணியம்?" என வேண்டுமென்றே சலித்து கொள்கிறார்

"ஓஹோ... அப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?" என தங்கமணி டெரர் லுக் கொடுக்க

"இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல தங்கம்... நீ மட்டும் 'உம்'னு ஒரு வார்த்த சொல்லு...."

அதற்குள் இடைமறித்து "என்ன சொன்னீங்க?" என தங்கமணி முறைக்க

"ஹி ஹி... அதில்ல தங்கம்... உனக்கும் கூட மாட உதவியா... " என்றவர், தங்கமணி ருத்ரதாண்டவம் ஆட தயாராவதை உணர்ந்து

"ஹா ஹா... டென்ஷன் ஆகாத... சும்மா கிண்டலுக்கு சொன்னேன்... நான் டிரஸ் மாத்திட்டு வரேன்... கிச்சடி எடுத்து வெய்யி சாப்பிடலாம்" என்றபடி அறைக்குள் செல்கிறார்

அவர் சென்ற பின், ஏனோ தங்கமணிக்கு சற்று முன் வந்த ராங் கால் நினைவுக்கு வந்தது

"ஒருவேளை அந்த பொண்ணு பேசினது ஹிந்தியா இருக்குமோ" என ஒரு நொடி நினைத்தவர், "என்னமோ இருக்கட்டும் ராங் கால் பத்தி நமக்கென" என மேல் வீட்டுக்கு விளையாட சென்ற மகளை அழைத்து வர செல்கிறாள்

"வா தங்கம்... டிபன் வேலை எல்லாம் ஆச்சா?" என வரவேற்கிறாள் மேல் வீட்டு ஐஸ்வர்யா

"செஞ்சாச்சு ஐஸு...  இனி தான் சாப்பிடணும்... அதான் பாப்பாவ கூட்டிட்டு போலாம்னு வந்தேன்" என்றாள்

"உனக்கு விஷயம் தெரியுமா தங்கம். நம்ம வசந்தி, அவ வீட்டுக்காரரை டைவர்ஸ் பண்ண போறாளாம்"

"ஐயையோ என்னாச்சு?" என்கிறாள் தங்கமணி அதிர்ச்சியாய்

"அதையேன் கேக்கற... என்னமோ சொல்லுவங்களோ, கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்....னு...அப்படி தான் ஆச்சு கதை... இந்த காலத்துல யாரையும் நம்பறதுக்கில்ல"

"ஹ்ம்ம்... " என்றாள் யோசனையாய் "சரி, அவர் டிபன் சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்கார், நான் அப்புறம் வரேன்... பாப்பா வா போலாம்" என மகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகிறாள்


அன்றிரவு...."கிச்சடி நல்லா இருந்தது தங்கம்" என்றார் ரங்கமணி

"ம்... அது சரி... உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?"

"என்ன இப்படி கேட்டுட்ட? கல்யாணம் ஆன புதுசுலையே சொன்னனே"

"ஆமா, வெவரங்கெட்டவ ஒருத்தி சிக்கினானு சும்மா என்ன என்னமோ புருடா விட்டீங்க... அதெல்லாம் யாரு நம்பினா"

"அடிப்பாவி, எல்லாம் நேரம். அப்படினா நான் அப்ப சொன்ன எதையுமே நீ காதுலையே வாங்கிக்கலையா?" என்றார் பாவமாய்

"இப்படி பாவமா மூஞ்சிய வெச்சுட்டு கேட்டாலும் அதே பதில் தான்.."

"ஹும்... நான் கூட என் புது பொண்டாட்டி எவ்ளோ அக்கறையா நாம பேசறத ரசிச்சு கேக்கறான்னு நினைச்சு எவ்ளோ சொன்னேன்... எல்லாம் வீணா போச்சே" என பீலிங் காட்டுகிறார்

"சரி சரி... அத விடுங்க... உங்களுக்கு ஹிந்தி நல்லா பேச தெரியுமா?" என மேட்டர்க்கு வருகிறார்

"ஹிந்தி மட்டுமில்ல, பஞ்சாபி கூட கொஞ்சம் பேசுவேன்" என்றார் பெருமையாய், பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல்

"எப்படி கத்துகிட்டீங்க?" என ஆர்வம் போல் காட்டி விசயத்தை கறக்க முயல்கிறாள் தங்கமணி

"அது... எங்க ஆபீஸ்ல ஒரு பஞ்சாபி பொண்ணு இருந்தா... சும்மா சொல்லக்கூடாது... நல்ல பொண்ணு... லஞ்ச் எல்லாம் எனக்கும் சேத்து கொண்டு வருவா... அதுவும் அந்த புலாவ் & நவரத்னகுருமா டேஸ்ட் இன்னும் நாக்குலையே இருக்கு போ" என சிலாகிக்கிறார், தற்போது தன் நாக்கில் சனி பகவான் 'தாம் தரிகிட தீம் தரிகிட' என ஜதி பாட ரெடியா இருக்கறது தெரியாம

தங்கமணி கோபத்தை கட்டுப்படுத்தியபடி "ஓஹோ.. அதான் சப்பாத்தி, நான், புலாவ் எல்லாம் வேணும்னு கேட்டீங்களோ?"

"ஹி ஹி... ஆமாம்... அந்த பொண்ணு தான் கொஞ்சம் ஹிந்தி பஞ்சாபி எல்லாம் சொல்லி குடுத்தது"

"அவள மனசுல வெச்சுட்டு தான் கொஞ்ச நேரம் முன்னாடி 'நீ மட்டும் உம்'னு சொல்லு' னு சொன்னீங்களோ"

"என்ன தங்கம் நீ..."

"அதுவும் எனக்கு கூட மாட உதவியா?"

"ஐயோ... என்னை கொஞ்சம் பேச விடேன்..."

"ஐயையோ... இப்படி மோசம் போயிட்டனே... அம்மா அப்பா, என்னை இப்படி ஒரு மனுஷன்கிட்ட சிக்க வெச்சுட்டீங்களே" என தங்கமணி அழத்துவங்க

"என்னாச்சு தங்கம்? நீ கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னேன்" என ஒன்றும் புரியாமல் ஜெர்க் ஆகிறார்

"எனக்கு தெரியும்...எல்லாம் தெரியும்... அவ பேரு கூட சசிரேகா தானே... " என அழுகிறாள் தங்கம்

"இல்லையே... அவ பேரு ஜெய்பரீத் ஆச்சே.." என அந்த நேரத்துலயும் திருத்தம் செய்கிறார்

"ஓஹோ... அவ பேரு ஊரு போன் நம்பர் எல்லாம் மனப்பாடமா இருக்கா?"

"இல்ல தங்கம்..." என்றவரை பேச விடாமல்

"நீங்க பொய் சொல்றீங்க... அவ பேரு சசிரேகாதான்... இன்னிக்கி போன் பண்ணி இருந்தா.. எடுத்த உடனே சஸ்ரிகாஜினு என்னமோ சொன்னா... என்னை கூட நை நை'னு என்னமோ திட்டினா... நான் சுதாரிச்சதும் வேணும்னே ராங் நம்பர் மாதிரி நடிச்சுட்டு கட் பண்ணிட்டா"

"ஐயோ...இல்ல தங்கம்....அது வந்து..." என ரங்கமணி சொல்ல வருவதை காதில் வாங்காமல்

"நான் எங்க ஊருக்கே போறேன்... நாளைக்கே போறேன்" என தங்கமணி புலம்பல் தொடர்கிறது

அதுக்கப்புறம் ரங்கமணி தனியா உக்காந்து பொலம்பினது இதான்

"அட ஆண்டவா... அது சசிரேகாவும்  இல்ல லலிதாகுமாரியும் இல்ல, சத்ஸ்ரீஅகால்ஜி... பஞ்சாபி மொழில சத்ஸ்ரீஅகால்ஜினு சொன்னா நாம வணக்கம் சொல்ற மாதிரினு இவளுக்கு எப்படி சொல்லி புரிய வெக்கறது... ஹும், சப்பாத்தி கேட்டது ஒரு குத்தமா... என் கெட்டநேரம், இன்னைகினு பாத்து ஏதோ ஒரு பஞ்சாபி லூசு ராங் கால் பண்ணி இருக்கு, நான் வசமா சிக்கிட்டேன்... இவ ஒருத்திய சமாளிக்கவே நான் திணறிட்டு இருக்கேன். இதுல இன்னொன்னு வேற வேணுமா? ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பபா..."

நிரந்தர பின் குறிப்பு:
என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த நிரந்தர குறிப்பு இந்த பதிவுகளில் இடம் பெறுகிறது... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-)))


:-))