Tuesday, September 27, 2011

பொறந்த நாள் வாழ்த்துக்கள்... (To a Best Friend)


1
விசயம்ஏதும் தெரியலன்னா
விசுக்குனு உன்னகேப்பேன்
ஒருநிமிசமும் சுணங்காம
ஒடனேதான் சொல்லிடுவ

2
நெனச்சத பட்டுனஓடைக்க
நாலும்தான் பகிர்ந்துகொள்ள
உள்ளசொமைய எறக்கிவெக்க
உத்ததொணையா நீயிருக்க

3
வழிதெரியாம நான்முழிக்க
வாழ்க்கதொண கைவிரிச்சும்
வளவளனு திட்டாம
வழிதொணையா நீவந்த

4
ஊருக்கெல்லாம் சேதிசொல்ல
உன்உதவி கேட்டிருக்கேன்
ஒருநாளும் சலிக்காம
ஓடிஓடி செஞ்சிடுவ

உனக்கிப்போ ஒருவாழ்த்து
உன்பிறந்த நாள்வாழ்த்து
ஹாப்பி பர்த்டே டு யு
ஹாப்பி பர்த்டே டு யு !!!

யாருக்கு பொறந்த நாள் கண்டுபுடிச்சுட்டீங்களா?

ஒகே, மேல குடுத்து இருக்கற எண்கள் சம்பந்தமான க்ளு இதோ...
1 - Google search engine
2 - Blog
3 - Google Maps
4 - Google Buzz / Gmail

இப்ப மனசிலாயோ...

இன்னும் புரியாதவங்களுக்கு, Google is celebrating its 13th birthday today - September 27, 2011... Happy Birthday Google

நல்ல நாளும் அதுவுமா திட்டக்கூடாது, So திட்டனும்னு நினைக்கறவங்க இன்னொரு நல்ல நாள் பாத்து வாங்க..:))


:)))

Monday, September 26, 2011

Accountancyயும் அப்பாவியின் வாழ்க்கையும்... (இதை படிச்சா ரெண்டு ஜெலுசில் free ...:))))


முன் குறிப்பு:
ட்ரெயின்ல உக்காந்து பராக்கு பாத்தா கதை, மொக்கைனு தோணுது. அதான் உங்கள சிரமப்படுத்த வேண்டாம்னு ஒரு நல்ல எண்ணத்துல, அதோட ஒரு எக்ஸாம்க்கும் படிக்க வேண்டி இருந்ததால அதை படிப்போம்னு ட்ரெயின் ஏறினதும் Accounts புக் எடுத்து வெச்சேன் கைல...

ஆனா "காசிக்கு போனாலும் கர்மம் தீரலை"னு சொல்ற கதையா, காலக்கொடுமை அப்பவும் மொக்கை தான் தோணுது... I think, அந்த ட்ரெயின்க்கு தான் ஏதோ ஜாதக கோளாறுனு... Not my mistake you see.. :)) அப்படி Accounts படிச்சப்பவும் தோணின மொக்கை இதோ உங்கள் பார்வைக்கு... எப்பவும் போல் "எல்லா புகழும் ட்ரெய்னுக்கே"....:)))

இன்னொரு முன் குறிப்பு:
இந்த தலைப்புல அப்பாவினு சொல்லப்படுவது என்னை குறிப்பதல்ல... சும்மா commonman(woman) என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள படவேண்டுமென தெரிவித்து கொள்கிறேன்...

இன்னுமொரு முன் குறிப்பு (சத்தியமா இதான் கடைசி):
இதை பொலம்பல்னு நெனச்சா உங்களுக்கு ஜஸ்ட் பாஸ்...அதாங்க 40 Marks
சூப்பர் கற்பனைனு நெனச்சா 50 Marks
கவிதைனு நெனச்சா 60 Marks
தத்துவம்னு நெனச்சா 70 Marks
Self realisationனு நெனச்சா (ஹி ஹி ஹி) 80 Marks
Soul realisationனு நெனச்சா (ஹையோ...) 90 Marks
எல்லாத்துக்கும் அப்பார்பாட்டது(!!!)னு நெனச்சா cent % ... அதாங்க நூத்துக்கு நூறு... (100 / 100)

இதுல குடுத்துருக்கறத தவிர வேற என்ன நெனச்சாலும் imposition "Read and write this post for 100 times":-)

இதோ, ஒரு Accounts Student'ன் எண்ணத்தடங்கல்... ச்சே எண்ணத்தடங்கள்....

Debit the Receiver
Credit the Giver
பதினொன்றாம் வகுப்பில்படித்தது
பசுமரத்தாணியாய் பதிந்ததுமனதில்

Personal Real Nominalஎன
பலதும் படித்திருந்தாலும்
பரீட்சை முடிந்தபின்னே
பறக்கவிடுவதே பழக்கமென்றபோதும்
Personalஅக்கௌன்ட் ரூல்ஸ்மட்டும்
பெர்சனலாய் நின்றதுநெஞ்சில்

வாங்கிக்கரவனுக்கு Debitஆம்
வந்துகுடுக்கறவனுக்கு Creditஆம் - அதாவது
பணம்கேக்கறவன் பங்காளி
பாசமாகுடுக்கரவன் பரமயோகி - ஆஹா
வள்ளுவம் போல்ஈரடியில்
வாழ்க்கை தத்துவமேஇதில்

இப்படியும் சொல்லிபோட்டு
ஐயமிட்டுஉண் என்றும்
ஏற்பது இகழ்ச்சிஎன்றும்
ஏனப்பா குழப்புனாங்க?

அதெல்லாம்இருக்கட்டும் ஒருபக்கம்
Accountancy என்றாலே
அச்சுபிச்சுன்னு அங்கயும்இங்கயும்
அலைஅலையாய் பலநினைவுகள்

JournalEntry கற்றநாளில்
GeneralMajor ரேஞ்சுக்குஅலட்டலென்ன
TrialBalance புரிந்தபோதோ
Tieகட்டகூட T-Formatஎன அலம்பலென்ன

Balancesheet Tallyசெய்த முதல்முறை
பேலன்ஸ்இன்றி ஆடியநினைவுகள்
BankReconciliation கற்றுகொண்டநாளில்
அப்பாவின் Passbookகொண்டு செய்தஅலப்பறைகள்

CompanyAccounts புரிந்தநாளில்
பில்கேட்ஸ்ஆனதாய் கண்டகனவுகள்
GoodwillConcept மண்டையில்ஏற
ஒண்டிவில்ஆட்டத்திலும் AverageProfitMethod

Depreciationபற்றி அறிந்தநாளில்
DustBinக்கும் Wear&Tearபார்த்த ஆர்வக்கோளாறு
RatioAnalysis அறிந்தஅன்று
ரசம்சாப்பாடுகூட AbsoluteLiquidRatio

Jain&Narangசுமந்த கைகளுக்கு
Zandubalm தடவியநினைவுகள்
பஸ்சுல "Luggageகட்டு"னுகேட்ட
பழகியநடத்துனர் கேலிகள்
தலைக்குள் ஏறுச்சோஇல்லையோ
தலையணைக்கு substituteஆச்சு :-)

சின்னப் புள்ளதனமுன்னு
சிரிப்பா இப்பநெனச்சாலும்
நெனச்சு பாக்கஎப்பவும்
நினைவுகள் பசுமைதான்

ஏதோ சொல்லவந்து
ஏதேதோ சொல்லிப்போறேன்
என்னைக்கும் போலத்தான்
இன்னைக்கும் ஆகிபோச்சு

கட்டைஎடுத்துநீங்க அடிக்கும்முன்ன
கன்னாபின்னானு திட்டும்முன்ன
சோலியபாக்க நானும்போறேன்
Show-CauseNotice வர்றதுக்குமுன்ன ...:)))

பின் குறிப்பு (in response to some comments):-
Ledger மட்டுமில்ல, Balancesheetம் Tally ஆகணும், இல்லைனா அது im-balancesheet ஆய்டும்... :))))

Tuesday, September 20, 2011

இனியொரு தருணம்... (சிறுகதை)

(எனது இந்த படைப்பு அதீதம் இணைய இதழில் வெளியானதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி அதீதம்)

***********************

"ஹலோ..."

"...."

"ஆமாம்.. நீங்க?"

"...."

"ஒரு நிமிஷம் இருங்க" என பேசியை கையால் மறைத்தபடி "ஏங்க... உங்களுக்கு தான் போன். யாரோ உங்க பிரெண்ட் பிரபாகர்னு சொல்றார்"

"......" பின் வாசல் கதவில் சாய்ந்து ஒரு கையில் நாளிதழும் ஒரு கையில் காபி டம்ளருமாய் நின்றிருந்த வாசு, பிரபாகர் என்ற பெயரை கேட்டதும் அதிர்ச்சியில் காபி டம்ளரை தவறவிட்டு தடுமாறி நின்றான்

"என்னங்க ஆச்சு?" என போன் கீழே விழுவது கூட கவனிக்காமல் பதறியபடி அருகில் வந்தாள் வாசுவின் மனைவி சுஜாதா

'ஒன்றுமில்லை' என்பது போல் தலையை அசைத்தவன், பின் மெல்லிய குரலில் "நான் இல்லனு சொல்லிடு" என்றான்

சுஜாதா புரியாமல் கணவனை பார்த்தபடி நிற்க, "என்னாச்சுப்பா?" என பத்தும் பனிரெண்டும் வயதுடைய மகள்கள் இருவரும் ஓடி வந்து வாசுவின் கையை பற்றி கொண்டனர்

"ஒண்ணுமில்லடா கண்ணா... நீங்க போய் விளையாடுங்க" என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் முன்னறை ஹேங்கரில் தொங்கிய சட்டையை எடுத்து அணிந்தவன், வெளியே வந்து முன் வாசலில் கிடந்த செருப்பை மாட்டியபடி தெருவை நோக்கி நடந்தான்

******************

அருகில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்தவனின் மனம் இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றது

"அம்மா எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு... நான் கிளம்பறேன்" என்றபடி தன் அறையை விட்டு வெளியே வந்தவனை இடைமறித்த அவன் அன்னை

"என்ன வாசு இது? மணி எட்டு தான ஆச்சு, பத்து மணி காலேஜ்க்கு இப்பவே ஏன் பறக்கற? ரெண்டு இட்லியாச்சும் சாப்ட்டுட்டு போ" என தட்டை நீட்டினாள்

"வேண்டாம்... நான் கேண்டீன்ல சாப்ட்டுக்கறேன்" என வெளிய செல்ல முயன்றவனை "நில்லு" என்ற தந்தையின் குரல் தடுத்தது

"ஹிட்லர் இன்னும் போகலயா?" என முணுமுணுத்தான் வாசு, அருகில் இருந்த தன் தமக்கையிடம், அவள் சிரிப்பை அடக்கி நிற்க

"ஆமாண்டா... பெத்தவன் நான் ஹிட்லர், அந்த பொறுக்கி பய பிராபாகர் பிரெண்ட் உனக்கு... அவன பாக்கத்தான இந்த ஓட்டம் ஓடற.. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் அவன் கூட தான சகவாசம்... நீ உருப்பட்ட மாதிரி தான்" என்றார் கோபமாய்

"அவன திட்டலைனா உங்களுக்கு தூக்கம் வராதே... நீங்க நெனக்கற மாதிரி ஒண்ணுமில்ல... அவன் ரெம்ப நல்லவன்" என எரிச்சலாய் கூறியவன் "அம்மா நான் கிளம்பறேன்" என பதிலுக்கு கூட காத்திராமல் சைக்கிளை எடுத்து கொண்டு விரைந்தான்

"அங்கிள்... என்னோட பலூன் அந்த ட்ரீ'ல மாட்டிக்குச்சு... எடுத்து தரீங்களா?" என்ற ஒரு குழந்தையின் குரலில் பழைய நினைவில் இருந்து மீண்டான் வாசு

******************

இருள் சூழ தொடங்கிய நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தவனை கவலையுடன் எதிர்கொண்டாள் சுஜாதா

அவள் எதுவும் கேட்கும் முன் "கொழந்தைங்க எங்க?" என பேச்சை மாற்றினான் வாசு

"அண்ணா அண்ணி வந்திருந்தாங்க... கூடவே போகணும்னு அடம் பிடிச்சதுக, நாளைக்கு ஸ்கூல் லீவ் தானேனு அனுப்பி வெச்சேன்" என்றாள், கணவனின் முகத்தில் இருந்து பார்வையை எடுக்காமலே

ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றவன் சோபாவில் சோர்வாய் அமர்ந்தான்

"என்னங்க ஆச்சு? யாரு அந்த பிரபாகர்... அவர் போன் வந்ததுல இருந்து தான் இப்படி இருக்கீங்க" என்றாள் கவலையாய்

"தல வலிக்குது சுஜி, காபி குடு ப்ளீஸ்" என்றான் நெற்றி பொட்டை அழுத்தியபடி

"ஆபீஸ்ல இருந்து வந்ததும் காபி குடிச்சு ரெண்டு மணி நேரம் தான் ஆச்சு.. அடிக்கடி காபி குடிச்சா நல்லதில்ல" என்றாள்

"ஒரு நாளைக்கி கொஞ்சம் அதிகமா காபி குடிச்சா செத்து போய்ட மாட்டேன்... இப்ப காபி குடுக்க முடியுமா முடியாதா?" என்றான் கோபமாய்

கண்ணில் நீர் துளிர்க்க ஒன்றும் பேசாமல் ஒரு கணம் கணவனை பார்த்தவள், மௌனமாய் சமையல் அறை நோக்கி சென்றாள்

அவன் முகம் பார்க்காமல் காபி டம்ளரை டீபாயின் மேல் வைத்தவளை நிமிர்ந்து பார்த்தவன் "சாரிம்மா" என்றான் வருத்தமாய்

"உங்க சாரி ஒண்ணும் வேண்டாம்" என முணுமுணுத்தவளை அருகில் இழுத்து அமர்த்தியவன்

"சாரி சுஜி. ஏதோ டென்ஷன்ல... " என மனைவியை அணைத்து கொண்டான்

"யாரு அந்த பிரபாகர்? என்கிட்ட சொல்ல கூடாதா?"

சாய்ந்து அமர்ந்தவன் "பிரபாகர் ஒரு காலத்துல என்னோட உயிர் தோழன். அவனுக்காக என்ன வேணா செய்வேன், அப்படி ஒரு நெருக்கம்" என்றான் பெருமூச்சுடன்

"நமக்கு கல்யாணமான இந்த பதிமூணு வருசத்துல ஒரு வாட்டி கூட அவரபத்தி நீங்க சொன்னதில்லையே" என்றாள் ஆச்சிரியமாய்

"ஹ்ம்ம்... அவன் பிரெண்ட்னு சொல்லிக்கவே வெக்கபடர மாதிரி செஞ்சுட்டு போய்ட்டான். எங்க ரெண்டு பேரையும் ரெட்டை பிறவிங்கன்னே சொல்ற மாதிரி எப்பவும் ஒண்ணாவே இருப்போம். எங்க ஊரு கவுன்சிலர் பொண்ணை இழுத்துட்டு போய்ட்டான், அவன் அந்த பொண்ணை காதலிச்சது கூட எனக்கு தெரியாது"

"அப்பறம் என்னாச்சு?"

"உனக்கு தெரியாம எப்படி நடந்திருக்கும்னு, ஊரே சேந்து என்னை போட்டு அடிச்சு தொவைச்சுட்டாங்க. எங்க குடும்பத்தையே கேவலமா பேசினாங்க. அக்காவுக்கு நிச்சியம் பண்ணி இருந்த கல்யாணம் நின்னு போச்சு. அந்த அதிர்ச்சில அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக், கடவுள் புண்ணியத்துல பொழச்சுட்டாரு. அப்புறம் அந்த ஊரை விட்டே வந்துட்டோம். அவன் காதலிச்து தப்புன்னு நான் சொல்லல. தைரியமா பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணி இருக்கணும். அதை விட்டுட்டு எல்லார் முன்னாடியும் என்னை குற்றவாளியா நிக்க வெச்சுட்டானேனு தான்"

"அதுக்கப்புறம் இத்தன வருசத்துல அவர நீங்க பாக்கவே இல்லையா?"

"பாக்கணும்னு நெறைய வாட்டி நெனச்சுருக்கேன் சுஜி. தப்பே செஞ்சிருந்தாலும் ஒரு காலத்துல நண்பனா மனசுல இருந்தானே... ஆனா ஊரே கேவலமா பேசினத என்னால மறக்க முடியல" என்றான் வருத்தமாய்

"இன்னைக்கி போன் பண்ணினப்ப பேசி இருக்கலாமே" என்றாள் ஆதரவாய் கணவனின் தோளில் கை பதித்தவாறே

அதே நேரம் ஹாலில் இருந்த போன் அலறியது. 'எடுப்பதா வேண்டாமா' என அவன் யோசிக்கவும் "எடுங்கப்பா... உங்க பிரெண்ட்'ஆ தான் இருக்கணும்" என்றாள் சுஜாதா சிரிப்புடன்

"ஹலோ" என்றான் வாசு

"..."

"அ...அது... ஆமா"

"..."

"எ...என்ன சொல்றீங்க? எப்போ?" என்றவனின் முகம் வெளிறியது

"..."

"நிச்சியமா தெரியுமா?"

"..."

"ஒகே... நா...நான் உடனே வ...வரேன்" என நடுங்கிய குரலில் உரைத்தவன், உள் அறைக்கு சென்று பைக் சாவியை எடுத்து, விரைந்து வெளி வாசல் நோக்கி சென்றான்

"என்னங்க? எங்க போறீங்க?" என பதட்டமாய் சுஜாதா கேட்க

"வந்து சொல்றேன் சுஜி" என்றவன், அவள் பதிலுக்கு கூட காத்திராமல் பைக்கை கிளப்பி சென்றான்

*********************

"சுஜி" என்ற கணவனின் ஸ்பரிசம் உணர்ந்து விழித்தவள், அவனது சிவந்த கண்களும் கவலை காட்டிய முகமும் உணர்ந்து பதறியவளாய்

"என்னங்க ஆச்சு? நேத்து சாயங்காலம் போனது, இன்னிக்கி நடு ராத்திரி வரீங்க. நேத்து நைட் பத்து மணிக்கு போன் பண்ணினப்ப நாளைக்கி தான் வருவேன்னு சொன்னீங்க. அதுக்கப்புறம் உங்க செல்போன்க்கு கூப்டப்ப எடுக்கவே இல்ல... எங்க தான் போனீங்க?" என்றாள் கவலையும் கோபமுமாய்

மௌனமாய் அவளருகில் அமர்ந்தவன், அவள் மடியில் முகம் புதைத்து விசும்பினான்

"என்னங்க ஆச்சு?" என பதறினாள்

"பிரபா...பிரபாகர் இப்ப உயிரோட இல்ல சுஜி" என்றான் கரகரத்த குரலில்

"ஐயோ... என்னாச்சுங்க?" என்றாள் ஒன்றும் புரியாமல்

"நேத்து நைட் வந்த போன் போலீஸ்கிட்ட இருந்து... ஏக்சிடன்ட் ஸ்பாட்ல கெடச்ச அவனோட செல்போன்ல இருந்து கடைசியா கூப்ட்ட நம்ம நெம்பருக்கு... " என அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அழுதான்

என்ன சொல்வது என அறியாமல் ஆதரவாய் அவனை அணைத்து கொண்டாள் சுஜாதா

"நேத்து அவன் போன் பண்ணினப்ப கூட...நான் என் கோபத்த இழுத்து பிடிச்சுட்டு... ஐயோ.. இனி நான் பேசணும்னு நெனச்சாலும் முடியாதே சுஜி... வேற ஒரு பிரெண்ட்கிட்ட இருந்து என் நம்பர் வாங்கி இருக்கேன். கடைசியா என்ன சொல்லணும்னு கூப்டானோ..." என அரற்றினான்

"ப்ளீஸ்பா... அழாதீங்க..."

"இனியொரு தருணம் எனக்கு அவன் கூட கிடைக்காதே... இந்த பாழா போனா கோபத்தால என்னைக்கோ நடந்தத மனசுல வெச்சுட்டு கடைசியா கூப்ட்டப்ப கூட பேசாம விட்டுட்டனேனு தான் கஷ்டமா இருக்கு சுஜி... ஒருவேள நான் பேசி இருந்தா இந்த விபத்தே நடந்து இருக்காதோ. நான் பேசலைனு வருத்ததுல தான் கவனமில்லாமா வண்டி ஓட்டி இருப்பானோ" என குற்ற உணர்வில் மருகினான் வாசு

"என்னங்க இது? அப்படி எல்லாம் எதுவும் இல்ல. அவர் விதி முடிஞ்சு போச்சு. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?" என்றாள் சமாதானமாய்

"இனி என்ன அழுது என்ன பிரயோஜனம்" என்றான் தனக்கு தானே சமாதானம் செய்து கொள்பவன் போல்

(முற்றும்)

Wednesday, September 07, 2011

கோவை சரளா இன் காபி வித் அப்பாவி...:) - (150வது பதிவு)
அப்பாவி : (ஒரு மஞ்ச கலர் சோபால உக்காந்துட்டு) வணக்கம் அண்ட் வெல்கம் டு...

டைரக்டர் : கட் கட் கட்... (என டென்சனாய் கூறுகிறார்)

அப்பாவி : என்ன சார் ஆச்சு? (என்கிறார் எரிச்சலாய்)

டைரக்டர் : இருங்க மேடம்.. இன்னும் கேமராவே ஆன் பண்ணல

அப்பாவி : ம்க்கும்... பண்ணிட்டாலும்... (என சலிப்பாய் முணுமுணுக்க)

டைரக்டர் : நான் ஏக்சன் சொன்னப்புறம் நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க மேடம்

அப்பாவி : நீங்க ஏக்சன் சொல்றதுக்குள்ள நான் ஏக்சன் 500 போடணும் போல இருக்கு

டைரக்டர் : ஊர் குசும்பு ஓவரா போச்சு (என முணுமுணுக்கிறார்)

அப்பாவி : என்ன சொன்னீங்க? (என முறைக்க)

டைரக்டர் : உங்க ஊர்காரங்க எல்லாம் ரெம்ப நல்லவங்கனு சொன்னேன் மேடம் (என சமாளிக்கறார்)

அப்பாவி : சரி சரி, பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க... எனக்கு அடுத்தது BBCல ஒரு பேட்டி இருக்கு (என அலுத்து கொள்கிறாள்)

டைரக்டர் : ABC தெரியாத கேஸ் எல்லாம் BBC பத்தி பேசுது... ஹ்ம்ம் (என அசிஸ்டென்ட்'இடம் முணுமுணுக்கிறார்)

அப்பாவி : இன்னுமா முடியல... சீக்கரம் ஏக்சன் சொல்லுங்க

டைரக்டர் : ஒகே மேடம்...ஸ்டார்ட்..கேமரா... ஏக்சன்

அப்பாவி : வணக்கம் அண்ட் ம்...க்கும்... கட் கட் கட்

டைரக்டர் : கட் கட் எல்லாம் நான் சொல்லணும் மேடம் (என புலம்புகிறார்)

அப்பாவி : பாருங்க, உங்க வேலைய கூட நானே செய்ய வேண்டியிருக்கு. அதான் தொண்டை ட்ரை ஆய்டுச்சு பேச முடியல (என இருமுகிறாள்)

டைரக்டர் : இந்த லொள்ளுக்கு தொண்டை இல்ல மண்டையே ட்ரை ஆகும் (என முணுமுணுத்தபடி) மேடம்க்கு தண்ணி குடுங்க (என ப்ரொடக்சன் யூனிட்டை பார்த்து கத்துகிறார்)

அப்பாவி : (தண்ணி குடித்ததும்) டச் அப் ஆள் வரசொல்லுங்க

டைரக்டர் : என்ன பண்ணினாலும் இருக்கற மூஞ்சி தான இருக்கும்

அப்பாவி : என்னது? (என முறைக்க)

டைரக்டர் : உங்களுக்கு மேக்அப் தேவையே இல்லைன்னு சொன்னேன்

அப்பாவி : ஒகே ஒகே...ஸ்டார்ட்... கேமரா... ஏக்சன்

டைரக்டர் : (கடுப்பாய் பார்த்தபடி) அதான் அவங்களே சொல்லிட்டாங்களே... ஆரம்பிங்க... (என கத்துகிறார்)

அப்பாவி : வணக்கம் அண்ட் வெல்கம் டூ காபி வித் அப்பாவி. இன்னிக்கி நம்ம ஷோவுக்கு ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வர போறாங்க. அவங்கள பத்தி சொல்லணும்னா சொல்லிட்டே இருக்கலாம். கொங்கு நாட்டு சிங்கி, கோவை மண்ணின் மைந்தி.......

அசிஸ்டென்ட் டைரக்டர் : (மிரண்ட லுக்குடன்) என்ன சார் இது? ஏதோ ஜூ'வுக்குள்ள போன எபக்ட் வருது...

டைரக்டர் : அத உடுய்யா... இப்ப என் கவலை எல்லாம், ஒரு கோயம்புத்தூர் அம்மணியவே நம்மளால சமாளிக்க முடியலியே, இப்ப இன்னொன்னு வேற வருதே... என்ன நடக்க போகுதோ...ஹ்ம்ம் (என சோகமாய் மானிட்டரை பார்க்கிறார்)

அப்பாவி : (தொடர்ந்து பேசி கொண்டே).... இப்படி அவங்கள பத்தி நெறைய சொல்லலாம். அவங்க யாருன்னு நீங்க இப்ப கண்டு பிடிச்சு இருப்பீங்கனு நினைக்கிறேன். நம்ம கோவை சரளா மேடம் தான்

கோவை சரளா : (ஸ்டைலாய் சிரித்து வணங்கியபடி வருகிறார்)

அப்பாவி : ஆயியே ஜி ஆயியே ஜி (என என பூங்கொத்தை நீட்ட)

கோவை சரளா : என்ன கெரகம் இது? (என மிரளுகிறார்)

அப்பாவி : (பவ்யமாய்) வாங்கனு சொன்னனுங்... இந்தில...(என பம்ம)

கோவை சரளா : இப்படி அழகா சொல்றத உட்டு போட்டு என்னத்துக்கு அம்மணி அசிங்க அசிங்கமா பேசற

அப்பாவி : ஹி ஹி... அப்ப தானுங்... நமக்கும் நாலு மொழி தெரியும்னு புரிஞ்சு மத்த மொழி டிவில இருந்து சான்ஸ் கிடைக்குமுங்...

கோவை சரளா : (கழுத்தை ஒடித்து சலித்தபடி) ம்க்கும்... கேக்கறவன் கேணயனா இருந்தா எருமைங்கோட ஏரோப்ளேன் ஒட்டுமாம்

டைரக்டர் : (மெல்லிய குரலில்) சூப்பர்... நல்லா வேணும் இந்த அப்பாவிக்கு... நம்மள என்ன பாடு படுத்துது (என சிரிக்கிறார்)

அப்பாவி : ஹி ஹி... (என சமாளித்தபடி) மோர் எளனி எதுனா குடிக்கரீங்ளாங் ...

கோவை சரளா : என்னம்மணி என்னமோ கெழக்கால தோட்டத்துக்கு களை எடுக்க வந்தாப்ல கேக்கற... அதான் காபி வித் அப்பாவினு போர்டு போட்டுருக்கில்ல... காபி கீபி ஒரு கிளாஸ் குடுக்க சொல்லு

அப்பாவி : காபி இருக்குதுங்... கீபி இல்லீங்... ஹா ஹா ஹா (என தன் ஜோக்குக்கு தானே சிரிக்க)

கோவை சரளா : சோக்காக்கும்... இனிமே முன்னாடியே சொல்லி போடம்மணி... சிரிக்க சுளுவா இருக்கும்... (என பல்பு கொடுக்க)

அப்பாவி : (கடுப்பை மறைத்து சிரித்தபடி) இன்னுமா மேடம்'க்கு காபி கொண்டு வர்ல... (என ப்ரொடக்சன் பக்கம் சவுண்ட் விடுகிறாள்)

கோவை சரளா : (காபியை கையில் வாங்கியபடி) ம்... அப்பறம்... நமக்கு கோயமுத்தூர்ல எந்த பக்கம் அம்மணி

அப்பாவி : தெக்காலைங்க...

கோவை சரளா : தெக்கால தொள்ளாயிரம் ஊர் கெடக்கு...அதுல எங்க?

அப்பாவி : வெள்ளிகிழம சந்தைக்கும் திங்ககிழம சந்தைக்கும் நடுப்பட்ட ஊருங்... (என சிரிக்கிறார்)

கோவை சரளா : விடுகதயாக்கும்... ம்க்கும்... சரி, இன்னொரு கூழ் குடு..

அப்பாவி : அதுங்... கூழ் எல்லாம் ஆடி மாசம் நம்மூரு அம்மங்கோயில்லயே தீந்து போச்சுங்... காபி இல்ல சூஸ் வேணா குடுக்க சொல்லட்டுமுங்களா?

கோவை சரளா : அட அதில்லம்மணி... நீ போட்ட விடுகதைக்கு இன்னொரு கூழ்... அதான் கண்டுபுடிக்கரதுக்கு சௌகிரியமா என்னமோ சொல்லுவாங்கல்ல... (என தடுமாற)

அப்பாவி : ஓ... க்ளூ'வா? (என பல்லை படித்து சிரித்தபடி) ஸ்ஸ்ஸ்ப்ப்பப்பா...(என பெருமூச்சு விடுகிறாள்)

டைரக்டர் : ஹா ஹா ஹா... இதான் எலிபென்ட்க்கு ஒரு காலம் வந்தா cat'க்கு ஒரு காலம் வரும்ங்கறது... அனுபவி அப்பாவி அனுபவி (என தனக்குள் சிரிக்கிறார்)

அப்பாவி : க்ளூ'னு பாத்தீங்கன்னா...எங்க ஊர் வழியா 102A பஸ் போகுமுங்...

கோவை சரளா : 102A பஸ்... என்ன நக்கலா? 102A பஸ் சாய்பாபா காலனில ஆரம்பிச்சு காரமடை வரைக்கும் போகும்... அதுக்கு நடுவால ஆயிரம் ஊர் இருக்கே (என முறைக்கிறார்)

அப்பாவி : கன்பியூஸ் ஆகிட்டீங்களா... ஹா ஹா ஹா... எனக்கு மத்தவங்கள கன்பியூஸ் பண்றது ரெம்ப பிடிக்குமுங்க (என சத்தமாய் சிரிக்கிறாள்)

கோவை சரளா : (முறைத்தபடி) எனக்கு மத்தவங்கள கன்பியூஸ் பண்றவங்கள கொல பண்றதுக்கு ரெம்ப பிடிக்கும் (என டெரர் லுக் விட)

அப்பாவி : (ஜெர்க்கானதை மறைத்து சிரித்தபடி) இன்னொரு க்ளூ தர்ரனுங்... எங்க ஊர் சின்ன ஊருக்கு எதுக்கால ஊருங்...

கோவை சரளா : சின்ன ஊருக்கு எதுக்கால.... (என தீவிரமாய் யோசித்தபடி) ஓ... புரிஞ்சு போச்சு, புரிஞ்சு போச்சு... என்ற ஒண்ணு உட்ட அக்கா மகள அந்த ஊருக்கு தான் கட்டி குடுத்து இருக்குதம்மணி (என சிரிக்கிறார்)

டைரக்டர் : (அசிஸ்டென்ட் பக்கம் திரும்பி) என்னடா இது... என்னமோ கொள்ளகாரங்க code word வெச்சு பேசிக்கற மாதிரி இருக்கு (என புலம்ப)

அசிஸ்டென்ட் : மாதிரி இல்ல சார்...அதே தான் (என விசும்புகிறார்)

அப்பாவி : ஓ... அப்படிங்களா... அப்ப நெம்ப நெருங்கிட்டோம் (என சிரித்தபடி கோவை சரளாவின் அருகில் சென்று அமர)

கோவை சரளா : இருக்கட்டும் இருக்கட்டும் (என ஜாக்கிரதையாய் தள்ளி அமர்கிறார்)

டைரக்டர் : சூப்பர் பல்பு.. (என சிரிக்கிறார்)

கோவை சரளா : அது கெடக்கட்டும்... நீ என்னமோ கேள்வி எல்லாம் கேப்பேன்னு சொன்னாக...

அப்பாவி : ஆமாங்... நெறைய மனப்பாடம் செஞ்சு வெச்சுருந்தனுங்... உங்கள பாத்த சந்தோசத்துல அல்லாம் மறந்துருச்சுங்... (என சமாளிக்க)

கோவை சரளா : சக்திவேல் கௌண்டராட்டவே நல்லா பொய் சொல்றம்மணி நீயி... (என முறைத்தார்)

அப்பாவி : ஐயோ... இல்லீங்... நெசமா தானுங்... அது சரிங்... இன்னும் அந்த பிரியா மேட்டர்ல நீங்க கௌண்டர் மேல கோபமாத்தான் இருக்கறீங்களாங்...? (என பேச்சை மாற்றினாள்)

கோவை சரளா : பொறவு...அந்த போக்கத மனுஷன் பண்ணின காரியத்துக்கு...

சக்திவேல் கௌண்டர் : (அவசரமாய் உள்ளே நுழைந்து கோவை சரளாவை பேச விடாமல் தடுக்கிறார்) பழனி பழனி பழனிக்கண்ணு... அப்படி அல்லாம் பேச கூடாதம்மணி.. அல்லாரும் பாக்கராங்கள்ல

கோவை சரளா : பாத்தா என்ன? பொறவு உங்க தண்டவாளம் வண்டவாளம் எரோனுமல்ல

அப்பாவி : அது தண்டவாளம் வண்டவாளம் ஏறறது இல்லீங்... வண்டவாளம் தண்டவாளம் ஏற்றதுங்... (என பணிவாய் திருத்தம் சொல்ல)

சக்திவேல் கௌண்டர் : இப்ப கேட்டமாக்கும்... (என முறைக்க)

கோவை சரளா : இந்தா... அந்த பிரியா புள்ளைய எப்படி புடிச்சுட்டு நின்னேன்னு என்ற ரெண்டு கண்ணால பாத்தனல்ல

அப்பாவி : அது மட்டுமா? அதுக்கு முன்னாடி 'அபிராமி அபிராமி' ஒண்ணு, அப்பறம் 'கண்மணி அன்போடு காதலன்' பாடினதெல்லாம் இருக்குதுங்களே (என உசுப்பி விட)

சக்திவேல் கௌண்டர் : இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்... (என ஏதோ சொல்ல வந்தவரை இடைமறித்து)

அப்பாவி : பரவால்லிங்... தெரிஞ்சுட்டே கேளுங்...

சக்திவேல் கௌண்டர் : ஏனம்மணி... நீங்க காபி வித் அப்பாவி ஷோ நடத்தரீங்களா இல்ல புருஷன் பொஞ்சாதிய பிரிச்சு வெக்கற ஷோ நடத்தறீங்களா? (என முறைக்க)

அப்பாவி : (பயத்தில் நாக்கு குழற) அதுங்... வந்துங்...

கோவை சரளா : இந்தா... என்னத்துக்கு இப்ப அந்த புள்ளைய மிரட்டுரீக... அதே பாவம் பேருக்கேத்தாப்ல அப்பாவியா இருக்கு (என ஆதரவாய் அப்பாவியின் கையை பற்ற)

அப்பாவி : ஆமாங்... நான் அப்பாவினு சொன்னா ஆரும் நம்பறதில்லீங்... நீங்களாச்சும் என்னை புரிஞ்சுகிட்டீங்களே... (என வராத ஆனந்த கண்ணீரை துடைத்து அப்பாவி லுக் கொடுக்கிறாள்)

சக்திவேல் கௌண்டர் : ஆத்தா... அப்பாவி... உலக நாயகி பட்டத்த வேணா உனக்கே குடுக்க சொல்றேன்... கல கல கலனு இருக்கற என்ற குடும்பத்த லக லக லகனு ஆக்கி போடாத (என பாவமாய் கேட்கிறார்)

அப்பாவி : (சரளாவை சமாதானம் செய்வது போல) சரி சரி உடுங்க... ஏதோ கௌண்டர் புத்தி கெட்டு போய் தப்பு பண்ணிட்டாரு...

சக்திவேல் கௌண்டர் : தப்பா.. என்ன தப்பு? ஐயோ... (என பயமாய் சரளாவை பார்க்க)

அப்பாவி : அதான் சரளாக்கா மன்னிச்சுட்டாங்கள்ல உடுங்க...

சக்திவேல் கௌண்டர் : ஹும்... மணாளனே மங்கையின் பாக்கியம்னு இருந்த என்ற பழநிய எப்படி பண்ணிட்டியே அப்பாவி (என கௌண்டர் பீல் செய்ய, சரளா அப்பாவியை சந்தேகமாய் பார்க்க)

அப்பாவி : (சுதாரித்து) அதாருங்க பாக்கியம்? (என அப்பாவியாய் கேட்கிறாள்)

சக்திவேல் கௌண்டர் : ஆரு? (என கௌண்டர் புரியாமல் விழிக்க)

அப்பாவி : நீங்க தானுங்... இப்ப சொன்னீங்... மணாளனே மங்கையின் பாக்கியம்னு... (என்றவள், சரளாவின் பக்கம் திரும்பி) உடாதீங்... ஏதோ விசியமிருக்குதுங், விசாரிங்... (என ஓதுகிறாள்)

கோவை சரளா : (கோபமாய் எழுந்தபடி) நான் போறேன்... எங்க ஆத்தா ஊட்டுக்கே போறேன்... (என அழத்துவங்க)

சக்திவேல் கௌண்டர் : ஐயோ... பழனிக்கண்ணு... இந்த அப்பாவி சொல்றத நம்பாத... நான் சீதாராமன்

கோவை சரளா : மொதல்ல அந்த பிரியா... அப்பறம் பாக்கியம்... இப்ப சீதாவா... ஐயயோ... நான் இப்படி மோசம் போயிட்டனே.. (என ஒப்பாரி வைக்க)

சக்திவேல் கௌண்டர் : ஐய... பழனி... இல்ல

கோவை சரளா : ஆமா... பழனி இல்லாமத்தான் போயிட்டேன் உங்க மனசுல...

(என மூக்கை துடைத்து அப்பாவியின் அருகில் கையை கொண்டு வர, அப்பாவி விவரமாய் விலகுகிறாள். வழக்கம் போல் சக்திவேல் கௌண்டரின் சட்டை சிக்குகிறது)

அப்பாவி : (சாமதானமாய் சரளாவை அமர்த்தியபடி) நடந்தது நடந்து போச்சு...

சக்திவேல் கௌண்டர் : என்ன நடந்ததுனு எனக்கொண்ணும் வெளங்கல (என தலையில் கை வைத்து அமர்கிறார்)

அப்பாவி : சரளாக்கா... சதிலீலாவதில டேமேஜ் ஆன உங்க இமேஜை சரி கட்டணும்னா நீங்களும் கௌண்டரும் சேந்து ஒரு பெரிய பேனர் படத்துல நடிக்கோணும்

டைரக்டர் : சோழியும் குடுமியும் சும்மா ஆடாதே... ம்ம்... என்ன பிளான் பண்றா இந்த அப்பாவி? (என யோசனையாய் பார்க்கிறார்)

கோவை சரளா : பெரிய படமா? எங்கள வெச்சு யாரு பண்ணுவா?

அப்பாவி : (நெருங்கி அமர்ந்தபடி) அதை பத்தி நீங்க கவலை பட வேண்டாம்... அதுக்கு நானாச்சு (என சிரிக்கிறாள்)

கோவை சரளா : நீயா? (என விழிக்க)

அப்பாவி : ஆமாங்... அட்டகாசமா ஒரு கதை என்கிட்ட இருக்கு... உங்களுக்கோசரம் கௌண்டர் பைனான்ஸ் பண்ண மாட்டாரா என்ன? (என அப்பாவி ஒரு அப்பாவி லுக்குடன் சொல்ல சக்திவேல் கௌண்டர் மயக்கம் போட்டு விழுகிறார்)

டைரக்டர் : பத்த வெச்சுட்டியே பரட்ட (என முணுமுணுக்கிறார்)


சக்திவேல் கௌண்டர் விழித்து எழுந்தாரா?

அப்பாவி இருவரையும் வைத்து படம் எடுத்தாளா?

அதை பார்த்த மக்களின் நிலை என்ன?


அறிந்து கொள்ள காத்திருங்கள்...

பின்னூசி குறிப்பு:-
நான் 150 பதிவு எழுதி இருக்கேன்னு என்னால நம்பவே முடியல, எங்களாலையும் தான்னு நீங்க பொலம்பறது கேக்குது... ஹி ஹி ஹி... தொடர்ந்து எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்களுக்கு மிக்க நன்றி...:)

(இதன் தொடர்ச்சி இன்னொரு மொக்கையாய் விரைவில் வெளிவரும்...:))