Friday, October 21, 2011

திரிசங்கு சொர்க்கம்...(சிறுகதை)"என்னடி இந்த நேரத்துல போன் பண்ற...?" என பதட்டமாய் கேட்ட கணவனின் அக்கறையில் மனம் நெகிழ

"ம்...ஒண்ணில்ல....சும்மா தான்" என்றாள் வைஷ்ணவி

"நெஜமா சொல்லு, இஸ் எவரிதிங் ஆல்ரைட்?"என இன்னும் முழுதும் சமாதானமாகாத குரலில் கேட்டான் ஸ்ரீதர்

"ஒண்ணுமில்லப்பா...சும்மாதான் கூப்டேன்..." என்றாள் அழுத்தமாய்

"அப்ப சரி... அம்மு தூங்கிட்டாளா?"

"ம்..."

"நீ இன்னும் தூங்கலையா செல்லம்?"

"நடுராத்திரில போன்ல கொஞ்சுங்க...ஹும்" என அவள் சலித்துக் கொள்ள

"நடுராத்ரில நேர்ல கொஞ்சவும் நான் ரெடி... நீ தான் ஒம்பது மணிக்கே சாமி ஆடுவியே.." என ஸ்ரீதர் சிரிக்க

"ப்ச்..."என அசுவாரசியமாய் சலித்தவள் "எப்ப வரீங்க?" என்றாள் சன்ன குரலில்

"ஆஹா... மழை கொட்ட போகுது இன்னிக்கி" என்றான் கேலியாய்

"ஏன்?"

"ம்... பொண்டாட்டி புள்ளைய தனியா விட்டுட்டு வாரத்துல நாலு நாள் வெளியூர்ல ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட்னு போயிடறமே... எப்படா வியாழக்கிழமை சாயங்காலம் வரும்னு எப்பவும் நான் தான் காத்துட்டு இருப்பேன்... இன்னிக்கென்ன மேடம் விசாரணை" என கேலி செய்ய

"ஓ...அப்போ எனக்கு வருத்தமே இல்லைன்னு சொல்றீங்களா?" என்றாள் ஊடலாய்

"இல்லம்மா... அதான் திங்கக்கிழமை காலைல கெளம்பறப்ப கண்ண கசக்குவியே... எனக்கு தெரியாதா... ஆனா இப்படி நடுவுல எல்லாம் எப்ப வருவீங்கன்னு கேக்க மாட்டியே அதான் கேட்டேன்"

"சும்மா கேட்டேன்..." என்றாள்

"ஏய் நெஜமா சொல்லு...ஒடம்புக்கு எதுனா சரி இல்லையா?" என கரிசனையாய் ஸ்ரீதர் கேட்க தனிமையின் வெறுமையில் வைஷ்ணவியின் கண்கள் நிறைந்தது

அவளிடமிருந்து பதில் வராமல் போக "வைஷு...என்னடா?" என பதறினான் ஸ்ரீதர்

"அதெல்லாம் இல்லப்பா... என்னமோ... இன்னிக்கி..." என மௌனமானாள்

"ஏய்..என்னாச்சு? மூட் அவுட்டா? ஆபீஸ்ல எதுனா டென்சனா?"

"இல்லப்பா... கொஞ்சம் முன்னாடி ஊருக்கு பேசினேன்.. அக்கா அண்ணா எல்லாரும் அம்மா வீட்டுக்கு வந்து இருந்தாங்க... அங்க  இப்பவே தீபாவளி கொண்டாட்டம்  ஆரம்பிச்சாச்சு. அண்ணா பசங்க அக்கா பசங்க எல்லாம் பட்டாசு புது டிரஸ் ஸ்வீட்ஸ்னு ஏக ரகளையா இருந்தது போன்ல கேக்கவே.... ப்ச்... நான் மட்டும் இங்க தனியா" என வேதனையுடன் கூற

"என்னடா இது? கல்யாணம் ஆகி பத்து வருசமா அமெரிக்கால தானே இருக்கோம்... புதுசா பொலம்பினா எப்படி கண்ணம்மா?"

"என்னமோப்பா... சில நேரம் ரெம்ப எரிச்சலா இருக்கு... பேசாம ஊருக்கே போய்டலாம்னு தோணுது... என்ன தான் இருந்தாலும் எல்லாரோடவும் சேந்து இருக்கற லைப்ல இருக்கற சந்தோஷம் இந்த டாலர்லயும் US வாழ்க்கை பந்தாலையும் இருக்கா சொல்லுங்க"

"நீ சொல்றது சரி தான் வைஷும்மா... ஆனா என்ன செய்ய? நாம போன  வாட்டி ஊருக்கு லீவுக்கு போனப்ப, நம்ம அம்மு பாதி நாள் சளி காய்ச்சல்னு அவதிபட்டது பாத்து எப்படா இங்க வந்து சேருவோம்னு நீ தான சொன்ன"

"வாஸ்துவம் தான்... அங்க போனா இங்க வரலாம்னு இருக்கு, இங்க வந்தா அங்க போலாம்னு இருக்கு...என்னப்பா வாழ்க்கை இது?"

"கரெக்ட் தான் வைஷுமா... இங்கயும் முழுசா மனசு ஓட்டரதில்ல... அங்கயும் சௌகரியம் சரிப்படரதில்ல. இங்க வாழற நம்ம மக்கள் பலபேருக்கு உள்ள நிலை தான் இது... திரிசங்கு சொர்க்கம்..."

"இது ஊர்ல இருக்கறவங்களுக்கு புரியரதில்லையேங்க... உனக்கென்னமா ஜாலிங்கறாங்க எங்க அண்ணி போன் பேசினப்ப"

"இக்கரைக்கு அக்கரை பச்சை" என்றான் ஸ்ரீதர்

"என்ன அய்யா இன்னிக்கி ஒரே பழமொழியா கொட்டறீங்க?" என வைஷ்ணவி கேலியாய் கேட்க, மனைவியின் மனம் சற்று தெளிவானதை உணர்ந்து தானும் பேச்சை மாற்றும் எண்ணத்துடன்

"ம்... எல்லாம் என் வீட்டுக்காரி ட்ரைனிங் தான்" என்றான் ஸ்ரீதர் கேலியாய்

"ஓஹோ... அப்படியா சார்... உங்க வீட்டுக்காரி பாவம் வழி மேல விழி வெச்சு காத்துட்டு இருக்காளாம்... நீங்க ஜாலியா லாஸ் வேகஸ்ல காஸினோ லைப் என்ஜாய் பண்றதா கேள்வி" என்றாள் அவளும் விடாமல்

"அடிப்பாவி, இப்படி வேற ஒரு நெனப்பா உனக்கு... லாஸ் வேகஸ் என்ன, சொர்க்கமாவே இருந்தாலும் நீ இல்லாத இடம் எனக்கு நரகம் தான் வைஷும்மா" என கணவன் உணர்ச்சி வயப்பட, மனமுருகியது வைஷ்ணவிக்கு

இந்த அன்பு தானே பத்து வருடமாய் பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் விட்டு பிரிந்திருக்க பலம் தரும் சஞ்சீவி என தோன்றியது

மற்றபடி வீட்டின் செல்ல கடைகுட்டியாய் இளவரசியாய் வலம் வந்தவள் இப்படி நாடு விட்டு நாடு வந்து ஒற்றையாய் சமாளித்தது ஸ்ரீதரின் அன்பால் மட்டுமே சாத்தியமானது என்பதில் சந்தேகமில்லை

ஊரில் மற்ற சொந்தங்களுடன் இருந்தால் கூட இந்த நெருக்கம் சாத்தியம் ஆகி இருக்காதோ என பலமுறை தோன்றியதுண்டு அவளுக்கு

இங்கு எனக்கு நீ உனக்கு நான் என வாழும் வாழ்வில் தான் இந்த சரணாகதி ஆனதோ மனம் என தனக்கு தானே நினைப்பாள் வைஷ்ணவி

என்ன பைத்தியகாரத்தனமான எண்ண ஓட்டம் இது என எண்ணி கொள்வாள்

"என்ன பேச்சே காணோம்?" என ஸ்ரீதரின் குரலில் கலைந்தவள்

"ம்... என்ன செய்ய? ராமனனுள்ள இடமே சீதைக்கு அயோத்தி போல உங்களுக்கு கிளையன்ட் உள்ள இடமே ஆபீஸ்..."

"ஹா ஹா... நீ ஆரம்பிச்சுட்டியா இப்ப பழமொழி"

"ம்... " என மீண்டும் அமைதியானாள்

மனைவியின் அமைதியில் அவள் மனம் புரிந்தவனாய் "என்னடா? மறுபடியும் டல் ஆய்ட்ட" எனவும்

"ம்... நீங்க வீட்டுல இருந்தாலும் பரவால்ல... வாரத்துல நாலு நாள் எஸ்கேப் ஆய்டறீங்க... அதான்பா இன்னும் ஹோம் சிக் ஆய்டுது... போதாகுறைக்கு அம்மு வேற அடிக்கடி டாடி வேணும்னு ரகளை ஆரம்பிச்சுடுறா"

"எனக்கு மட்டும் ஆசையா சொல்லு... இந்த ஐ.டி பொழப்புல இதான்... comes with the package baby"

"ம்..."

"சரி நீ போய் தூங்கு... காலைல நீ ஆபீஸ் போகணுமே" என பேச்சை மாற்றினான்

"நீங்க தூங்கலையா இன்னும்? டைம் ஆச்சே"

"இங்க இப்பதான் மணி எட்டு லாஸ் வேகஸ்ல... உனக்கு தான் டெட்ராய்ட்ல பதினொன்னு... என்ன டைமிங் difference மறந்து போச்சா?"

"ஓ...ஆமால்ல மறந்துட்டேன் சட்டுன்னு"

"ஆமா...வயசானா இப்படி தான் மறந்து போகும்" என ஸ்ரீதர் கேலி செய்ய

"அப்படியா...அங்க மட்டும் என்ன பதினாறா இன்னும்?" என சிரித்தாள்

"பின்ன? இன்னிக்கி கூட கிளையன்ட் சைட்ல ஒரு வெள்ளைக்கார அம்மணி you're so handsomeனுச்சு you know?"

"அப்படியா? அப்ப அவகிட்டயே போய் பேசுங்க...பை" என வைஷ்ணவி பொய் கோபம் காட்ட

"ஏய் ஏய்.. என்னடி? நீ சொன்னதுக்கு தானே பதில் சொன்னேன்.. என்ன இருந்தாலும் உன் அழகு வருமா சொல்லு"

"ஐஸ் வெச்சது போதும்"

"ச்சே ச்சே...உண்மைய சொன்னா ஐஸா?"

"ஒகே...நான் போய் தூங்கறேன்ப்பா"

"ஒகே குட்நைட்...ஸ்வீட் ட்ரீம்ஸ் ஆப் மீ" என ஸ்ரீதர் கூற 

"ஒகே ஒகே பை..."

"பை"

அதற்குள் "ஒரு நிமிஷம்" என வைஷ்ணவி நிறுத்த

"என்னடா?"

"அவ எப்படி இருப்பா?" என்ற வைஷ்ணவியின் குரலில் பெண்மைக்கே உரிய உரிமையான கோபம் கலந்திருக்க

"எவ?" என்றான் ஸ்ரீதர் புரிந்தும் புரியாதவனாய்

"அதான் அந்த வெள்ளக்காரி"

"ஹா ஹா ஹா..." என அவன் நிறுத்தாமல் சிரிக்க, அவன் கேலியாய் சிரிப்பதை புரிந்தும் வேண்டுமென்றே

"அமாவாசை வருதில்ல, கெளம்பிடுச்சா? சரி நான் வெக்கறேன் பை" என்றாள்

"ஐ லவ் யு வைஷு" என்றான் ஸ்ரீதர் தனிச்சையாய், இந்த உரிமையான  கோபத்தையும் நான் காதலிக்கிறேன் என பறைசாற்றுவது போல்

"லவ் யு...பை" என தொலைபேசியை அதனிடத்தில் வைத்தாள் வைஷ்ணவி

கணவனிடம் பேசி சிரித்ததில் மனம் சற்று தெளிவுற்ற போதும், இந்த திரிசங்கு சொர்க்க நிலை இன்னும் எத்தனை நாளைக்கோ என யோசனையுடன் கண்ணயர்ந்தாள் வைஷ்ணவி

(முற்றும்)

Tuesday, October 11, 2011

உன்னாலே உன்னாலே... (சிறுகதை)"என்ன இது?"

"எது?"

"இதான்"

"தண்ணி"

"அதான் ஏன் கீழ சிந்தியிருக்கு?"

"கை கழுவினேனா அ...."

"கை கழுவினா டவல் யூஸ் பண்ணுங்க இப்படி கைய ஓதராதீங்கனு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன்"

"எத்தன வாட்டி சொல்லி இருக்க? சாரிம்மா கவுன்ட் பண்ணல"

"என்னை பாத்தா எப்படி இருக்கு உங்களுக்கு?"

"வேண்டாம்... சொன்னா திட்டுவ" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

"என்னங்க... இன்னிக்கி கோயிலுக்கு போலாமா?"

"ஏன்? திடீர்னு?"

"ஆண்டவா... எதுக்கு எடுத்தாலும் ஏன் ஏன் ஏன்... பதில் சொல்லி எனக்கு சலிச்சு போச்சு... ஒரு நாளாச்சும் கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க... திருப்பி கேள்வி கேக்காதீங்க ப்ளீஸ்"

"ஏன் எதற்கு எப்படினு கேள்வி கேட்டா தான் பிரைன் நல்லா ஷார்ப் ஆகும்னு யாரோ ஒரு பெரிய மனுஷன் சொல்லி இருக்கார் தெரியுமா?"

"அந்த கவலை பிரைன் இருக்கறவங்களுக்கு தானே வரணும்"

"கரெக்ட்... அது இருந்துருந்தா உன்கிட்ட சிக்கி இருப்பனா" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

"பதினஞ்சு நாள்... தனியா சமாளிச்சுக்குவியா?"

"ம்"

"நேரத்தோட வீட்டுக்கு வா? இப்ப சாயங்காலமானா மழை வேற வந்துருது"

"ம்"

"தூங்கறப்ப பக்கத்துல போன் வெச்சுக்கோ"

"ம்"

"ஒழுங்கா சாப்பிடு... கேக்கறது ஆள் இல்லைனு ஏமாத்தாத"

"ம்"

"ஏய்... ஏன் உம்முன்னு இருக்க?"

"ஒண்ணுமில்ல"

அவள் முகத்தை உயர்த்தி பார்த்தவன், "இதுக்கு தான் சொன்னேன்... உனக்கும் லீவ் கிடைக்கறப்ப ஊருக்கு போலாம்னு"

"அந்த கடன்காரன் தான் லீவ் குடுக்கமாட்டேங்கரானே" என்றாள் எரிச்சலாய்

"கடன்காரன் கடன் தான் குடுப்பான், லீவ் கூடவா குடுப்பான்" என கேலியாய் அவள் மனதை திசை திருப்ப முயன்றான்

"ஜோக்கா, ஈ... சிரிச்சுட்டேன் போதுமா?" என்றாள் சற்றே கோபமாய்

"சிரிச்சியா... மொதலே சொல்லிடு... பயமா இருக்கில்ல" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு அங்கிருந்த அமைதி தாங்க முடியாதது போல் தோன்ற, வேகமாய் சென்று ரேடியோவை உயிர்பித்தாள்

உடை மாற்றி சமையல் அறைக்குள் வர, ஒரு தூசு கூட இல்லாத தரை அவளுக்கு ஏனோ உறுத்தியது

அந்த நிசப்த நொடியில் கேட்ட டெலிபோன் மணி சத்தத்தில் தூக்கி வாரி போட நிமிர்ந்தாள்

"ஹலோ"

"நான் தான்... என்ன பண்ணிட்டு இருக்க?"

"......." அவன் குரல் கேட்டதும் கண்ணில் நீர் துளிர்க்க அமைதியாய் நின்றாள்

"ஹலோ... ஹலோ"

"ம்"

"என்னாச்சு?"

"ஒண்ணுமில்ல" என்றவளின் குரல் காட்டி கொடுத்தது

"தனியா போர் அடிக்குதா?"

"ம்"

"ஒரு வாரம் ஓடி போச்சு... இன்னும் ஒரே வாரம்... வந்தர்றேன், சரியா?"

"ம்"

சற்று நேரம் பேசியபின் "சரிடா... நான் வெக்கறேன்"

"ஏன்?"

"எப்பவும் நான் தான் ஏன் ஏன்னு கேள்வி கேப்பேன்... இன்னைக்கி நீ கேக்கற" என அவன் சிரிக்க, அவள் மௌனமானாள்

போனை வைத்ததும் அவள் தனக்கு தானே செய்து கொண்ட முதல் சங்கல்பம் "இனிமே அவர்கூட சண்டையே போடக்கூடாது" என்பது தான்

அன்றிரவு உணவருந்தி கை கழுவிய பின், பேப்பர் டவல் நோக்கி நீண்ட கையை பின்னுக்கு இழுத்தாள்

வேண்டுமென்றே தரையில் நீர் படும் படி கையை உதறியவள், தனக்குள் மெல்ல சிரித்து கொண்டாள்


***********************************

"என்னங்க இது? ஈர துண்டை அப்படியே மத்த துணிக கூட போட்டு வெச்சுருக்கீங்க?"

"...... " மௌனமாய் அவளை பார்த்தான்

"என்ன பார்வ?"

"...... " பதில் கூறாமல் முறுவலித்தான்

"ஊர்ல இருந்து வந்து ரெண்டு நாளாச்சு... இன்னும் சூட்கேஸ் எடுத்து உள்ள வெச்ச பாடா காணோம்"

"...... " சிரிப்புடன் அருகில் வந்தான்

"என்ன சிரிப்பு இப்போ? நான் என்ன ஜோக்கா அடிச்சேன்?"

"Now I know...Why I missed you so much?" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள். பின் அவளும் சிரித்தாள்


(தொடரும்... சிரிப்பும் முறைப்பும்... பின் சிரிப்பும்...:)