Tuesday, November 29, 2011

தக்குடு கல்யாண வைபோகமே...:))"பாஸ்டன்ல இருந்து நாட்டாம வந்திருக்காக... சியாட்டில்ல இருந்து சிங்காரி(பொற்கொடி) வந்திருக்காக... அமெரிக்கா ரிடர்ன் கீதா பாட்டி, சாரி மாமி வந்திருக்காக...திருப்பூர்ல இருந்து திலகவதி(ப்ரியா) வந்திருக்காக... கனடால இருந்து அப்பாவி வந்திருக்காக... பெங்களுர்ல இருந்து பாலாஜி வந்திருக்காக... மற்றும் நம்ம வல்லிம்மா, திவாண்ணா, எல்.கே, அனன்யா எல்லாரும் வந்திருக்காக... வாப்பா தக்குடு" என TRC அங்கிள் அழைக்க, அப்பவும் தக்குடு தரிசனம் தந்த பாடாய் காணோம்

"ஜானவாசத்துக்கு நேரமாச்சே... புள்ளையாண்டான எங்க காணோம்" என ஒரு மாமி கேட்க

"மாப்பிள்ளை ரெடியானு கேட்டுண்டு வரசொன்னா" என பெண் வீட்டின் உறுப்பினர் ஒருவர் வந்து நிற்க

"ஏண்டிமா...ஆராத்திக்கு வேணுங்கறது எடுத்து வெச்சுண்டயா" என மற்றொரு மாமி நினைவூட்ட

"ஆர்த்தியா... எங்க? எங்க? காத்தால ஊஞ்சல் நேரத்துக்கு தான் வருவானு நெனச்சேன், இப்பவே பெங்களுர்ல இருந்து வந்துட்டாளா?" என்றபடி தக்குடு வெளிய வர, எல்லாரும் முறைக்கின்றனர்

"ஹி ஹி... ஆர்த்திகரன்னு என்னோட ஆத்ம சிநேகிதன்... அவன் தான் வந்துட்டானோனு நெனச்சேன்" என எப்பவும் போல் சமாளிக்கிறார் தக்குடு

"நம்பிட்டோம்" என மொத்த கூட்டமும் முணுமுணுக்கிறது

"அடடே... எப்ப வந்தேள் நீங்கள்லாம்?" என தக்குடு அப்போது தான் ப்ளாக் நண்பர்களை கவனிக்கிறார்

"அப்ப ஒரு மண்டலமா வந்திருக்காக வந்திருக்காகனு நான் கத்தினது உன் காதுல விழலயோ?" என TRC அங்கிள் டென்ஷன் ஆக

"இல்லையே மாமா... ஒருவேள நீங்க மறந்திருப்பேள்...சரி விடுங்கோ... உங்களுக்கும் கீதா பாட்டி மாதிரி ஞாபக மறதி போல" என சிரிக்கிறார் தக்குடு

"கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." என பின்னால் இருந்து சத்தம் கேட்க

"அடேடே கீதா மாமி வந்துட்டேளா... வாங்கோ வாங்கோ... மாமா சௌக்கியமா... பக்கத்துல டீ கடைல எல்லாரும் நன்னா இருக்காளா?" என தக்குடு வழக்கம் போல் கச்சேரியை ஆரம்பிக்கிறார்

"வேண்டாம் தக்குடு அப்புறம் அப்பாவியோட இட்லி பார்சல் தான் கிப்ட் குடுப்போம்" என கார்த்தி (எல்.கே) மிரட்டல் விடுக்க

"ப்ரூட்டஸ்" என அப்பாவி முறைக்க

"வேணாம் எல்.கே... நீங்க தெனம் நாலு போஸ்ட் வேணாலும் போடுங்கோ படிக்கிறேன்... நல்ல நாளும் அதுவுமா ஏன் இட்லிய ஞாபகப்படுத்தரேள்? அது சரி, இப்ப நீங்க ப்ளாகே எழுதறதில்ல போலருக்கே, ஏன்?" என தக்குடு சாமார்த்தியமாய் பேச்சை மாற்றுகிறார்

"இந்த அப்பாவி என்னைக்கி எழுத ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கே நெறைய பேர் எழுதறத நிறுத்திட்டாங்க" என பொற்கொடி பெருமூச்சு விட

"தேங்க்ஸ் கொடி, நான் அவ்ளோ நல்லா எழுதறேன்னு சொல்றியா?" என அப்பாவி இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள

"நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்" என பாலாஜி இதான் சாக்குனு பல்பு கொடுக்க

"ROFL LOL ...." என பொற்கொடிக்கு வாயெல்லாம் பல்லாகிறது

"என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட?" என்றபடி அனன்யா என்ட்ரி

"இந்த அனன்யா, அப்பாவி, கேடி மாதிரி ஆண்டீஸ் இருக்கற எடத்துல எப்பவும் சண்டை தான்... நம்மள மாதிரி யூத்க மட்டும் இருந்தா கலகலப்பா இருக்கும், இல்லையா தக்குடு?" என பாஸ்டன் நாட்டாமை சமயம் பார்த்து தன் ட்ரேட்மார்க் டயலாக் சொல்கிறார்

"யாரு யூத்து?" என பொற்கொடி டென்ஷன் ஆக

"நாங்க தான்... இப்பதான கலை துறைல என்ட்ரி ஆகி இருக்கேன்... எனக்கெல்லாம் இன்னும் ஓட்டு போடற வயசே ஆகல யு சி" என நாட்டாமை சொல்லி முடிக்கும் முன்

"டாடி" என அவரின் மகள் ஸ்ரீஹிதா அழைக்க

"போய் புள்ள குட்டிய படிக்க வெய்ங்க பாஸ்" என பொற்கொடி தன் டீபால்ட் கமெண்ட் ஒன்றை எடுத்து விடுகிறார்

அதே நேரம் "தள்ளுங்க தள்ளுங்க" என்றபடி யாரோ வரும் சத்தம் கேட்கிறது

"இந்தா தக்குடு... ஐவர் அணி சார்பா இந்த முப்பது வகை திரட்டுப்பால் செய்வதெப்படி புக் கிப்ட்" என ப்ரியாக்கா சொல்ல

"வாங்க ப்ரியாக்கா... என்ன ஐவரணில இன்னும் ரெண்டு பேரை காணோம்?"

"ஆமாம் தக்குடு... அனாமிகாவுக்கு டிக்கெட் கிடைக்கலையாம்... ப்ரொபசர்க்கு எக்ஸாம் டைம்"

"ஸ்டுடென்ட்ஸ்'க்கு தானே எக்ஸாம் வெப்பா... இப்பெல்லாம் ப்ரொபசர்க்கு கூட வெக்கராளா?" என வழக்கம் போல் தக்குடு டைமிங்கில் அடிக்க, அங்கு ஒரு சிரிப்பு வெடி அதிர்கிறது

ப்ரியக்கா ஏதோ சொல்ல வர, அதற்குள் "ஜானவாசத்துக்கு நேரமாச்சுனு மாப்பிள்ளைய வர சொல்றா" என ஒரு குரல் கேட்க

"அதானே... எல்லாரும் மசமசன்னு பேசிண்டு நேரத்த விரயம் பண்றேள்... தள்ளுங்கோ தள்ளுங்கோ" என தக்குடு எஸ்கேப் ஆகிறார்

"அது சரி.. இன்னைக்கி மெனுல என்ன ஸ்வீட்?" என TRC அங்கிள், மாமி அருகில் இல்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டு கேட்கிறார்

"இதென்ன கேள்வி... சிவகாசின்னா பட்டாசு, தின்னவேல்லின்னா அல்வா, அம்பினா கேசரினு லோகத்துக்கே தெரியுமே... அம்பியாத்து விஷேசத்துல கேசரி இல்லாம வேறென்ன?" என வல்லிம்மா கூற

"சரியா சொன்னேள் அக்கா" என்கிறார் திவாண்ணா

********************************************

"தக்குடு காசி யாத்திரைக்கு நேரமச்சாம்... கெளம்பு கெளம்பு" என TRC அங்கிள் கூறி கொண்டிருக்க

"அச்சச்சோ... கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போற நேரத்துல எதுக்கு காசிக்கு போகணும்?" என அப்பாவி புரியாமல் விழிக்க

"இந்த பிரம்மஹத்திய என்ன பண்ணலாம்?" என அனன்யா முறைக்க

"அட ராமச்சந்திரா... அப்பாவிக்கா, கொஞ்சம் இப்படி வாங்க. இத பத்தி தக்குடு ப்ளாக்ல ஒரு போஸ்ட் போட சொல்லி அப்புறம் படிச்சுக்கலாம்" என பொற்கொடி சமாளிக்க

"என் ப்ளாக்ல விரிவா இதை பத்தி எழுதினேனே படிக்கலையா ஏடிம்?" என கீதா மாமி கேட்க

"நீங்க 'கண்ணன் வருவான் கண்ணை குத்துவான்' மட்டும் தான் எழுதுவேள்னு தக்குடு சொன்னான் மாமி" என அப்பாவி சமாளிக்க

"காசி யாத்திரை முடிஞ்சு வரட்டும் கவனிச்சுக்கறேன்" என மாமி டென்ஷன் ஆகிறார்

பஞ்சகச்சம், குடை, விசிறி, கைதடி, அரிசிபருப்பு மூட்டை சகிதம் தக்குடு நடந்து செல்ல, பெண் வீட்டார் வந்து தடுத்து அழைத்து வருகின்றனர்

"இதானா காசிக்கு போறது... நான் கூட என்னமோனு நெனச்சேன்" என அப்பாவி சிரிக்க

"அம்மா தாயே புதுசா ஒரு விஷயம் தெரிஞ்சதும் இத வெச்சு ஒரு கதை எழுதிராத, உனக்கு புண்ணியமா போகும்" என பாலாஜி டென்ஷன் ஆக

"ஐ... நல்ல ஐடியா குடுத்திருக்கே பாலாஜி... என் கற்பனை குதிரைய தட்டி விடறேன் இரு" என அப்பாவி யோசிக்க தொடங்குகிறாள்

"சும்மா இருந்தா சங்கை ஊதி கெடுத்துட்டியே பாலாஜி" என எல்.கே ஒரே டென்ஷன்

********************************************

"ஆஹா பேஷ் பேஷ் சூப்பர்... என்ன ஸ்வீட் என்ன டேஸ்ட்" என அனன்யா சிலாகிக்க

"எது நரசூஸ் காபியா?" என அப்பாவி கேட்க

"இல்ல பாவக்காய் பிட்லை" என அனன்யா டென்ஷன் ஆக

"பிடிக்கலைனு விட்டுடேன் அனன்ஸ்... சரி சரி ஜஸ்ட் கிட்டிங்" என அப்பாவி சிரிக்க

"ஆமா சொல்றதெல்லாம் சொல்லிட்டு இந்த ஜஸ்ட் கிட்டிங் ஒண்ணு சிக்கி இருக்கு இந்த அப்பாவிகிட்ட" என கீதா மாமி முணுமுணுக்க

"சரியா சொன்னீங்க கீதாம்மா... இந்த அப்பாவிய என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க" என வழக்கம் போல ப்ரியக்கா கீதா மாமியின் கட்சியில் சேருகிறார்

"தேங்க்ஸ் ப்ரியா... அது சரி, எதை பத்தி அவ்ளோ புகழ்ந்தே அனன்யா?" என கீதா மாமி கேட்க

"அதான் மாமி காத்தால டிபன்ல போட்டாளே காசி ஹல்வா" என கூறும் போதே அனன்யாவின் முகம் மலர்கிறது

"அதென்ன காசி ஹல்வா? காசில இருந்து வாங்கிட்டு வந்தாங்களா?" என அப்பாவி அப்பாவியாய் கேட்க

"இல்ல கம்போடியால இருந்து இம்போர்ட் பண்ணினாங்க" என பொற்கொடி முறைக்க

"பொற்கொடி... நீ தான் என்ன என்னமோ கொலை கொள்ளை கதை எல்லாம் எழுதறயே... இவள ஒழிக்கரதுக்கு எதுனா வழி இருந்தா பாரேன்... இல்லேனா மொதலே திவாண்ணாகிட்ட சொல்லி அவங்க ஹாஸ்பிடல்ல இருந்து மயக்க மருந்து ஏற்பாடு பண்ண சொல்லி இருக்கணும்" என்கிறாள் அனன்யா தாங்க முடியாமல்

"அச்சோ... பாவம் கொழந்தை" என வல்லிம்மா ஒருவர் மட்டும் வழக்கம் போல் அப்பாவிக்கு சப்போர்ட் செய்கிறார்

"சரி சரி... கன்யா தானம் முடிஞ்சுது... இனி கங்கன தாரணம் ஆச்சுனா அப்புறம் மாங்கல்ய தரணம் தான்... நாத்தனார்களை அழைச்சுண்டுருக்கா, அங்க பாருங்கோ" என கீதா மாமி கூற, அங்கு பூரண அமைதி நிலவுகிறது

********************************************

"என்னதிது மணவறைல ஒரே கலாட்டா?" என கல்யாணத்துக்கு வந்திருந்த ஒருவர் மற்றவரிடம் கேட்க

"அதையேன் கேக்கறேள். நாத்தனார் முடிச்சு நான் தான் போடுவேன்னு ஒரு இருபது முப்பது பேருக்குள்ள ஒரே போட்டியாம்"

"அதென்ன... மாபிள்ளைக்கு கூட பிறந்தவா ஒரே அண்ணானு தானே கேள்வி"

"வாஸ்தவம் தான்... ஆனா மாப்பிள்ளை ப்ளாக் எழுதரவராம்... அதுல இவருக்கு ஏகப்பட்ட ரசிகாளாம்... அதுல பாதி பேருக்கும் மேல தக்குடுவை உடன் பிறவா தம்பியா நெனப்பாளாம்.. அதான் இந்த கலாட்டா"

"ஓஹோ.."

********************************************

தக்குடுவின் திருமதியிடம் "எங்க கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறோம்... அதுல வெங்காயம் உரிக்கரப்ப தவிர வேற எப்பவும் தண்ணி வர கூடாது. எங்க தம்பிய நல்லா பத்திரமா பாத்துக்கோ" என அந்த 'பத்திரமா' என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுத்து சொல்கிறார்கள் அக்காக்கள் எல்லாரும்

"இத்தனை நாத்தனாரா?" என மணப்பெண் கொஞ்சம் ஜெர்க் ஆக

"நீ ஒண்ணும் டென்ஷன் ஆகாதம்மா. உனக்கு என்ன சந்தேகம்னாலும் என்னை கேளு" என அப்பாவி கூற

"சமையல் சந்தேகம் எல்லாம் உங்ககிட்ட கேக்க கூடாதுன்னு அவர் சொன்னாரே" என மிசஸ் தக்குடு முதல் நாளே பல்பு கொடுக்கிறார்

டென்ஷன் ஆனாலும் சமாளித்தபடி "ச்சே ச்சே... அதெல்லாம் சும்மா... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தக்குடுவை அக்காக்கள் எல்லாம் பத்திரமா பாத்துக்கோனு சொன்னதுல ஒரு முக்கியமான பாயிண்ட் இருக்கு... அது என்னனா..." என அப்பாவி ஆரம்பிக்க

"தக்குடு... அப்பாவி உன் ஆத்துகாரிட்ட பேசிண்டிருக்கா..." என எல்.கே அலெர்ட் செய்ய

"அப்பாவி அக்கா... எல்.கே என்னமோ கேக்கறார் பாருங்கோ?" என அப்பாவி புயலை திசை திருப்பி, தலைக்கி வந்ததை தலைப்பாகையோடு நிறுத்துகிறார் தக்குடு

"என்ன கார்த்தி?" என அப்பாவி கேட்க

"என்னை ஏன் மாட்டி விடற?" என எல்.கே முணுமுணுக்க

அதற்குள் பாலாஜி "அப்புறம் தக்குடு ஹனிமூன் எங்க போறதா பிளான்?" என பேச்சை மாற்றி எல்.கே'வை காப்பாற்றுகிறார்

"அது... வந்து... இன்னும் முடிவு பண்ணலை" என தக்குடு மழுப்ப

"பெங்களுர் போலாம்னு சொன்னேளே மறந்துட்டேளா?" என சமயம் பார்த்து திருமதி தக்குடு போட்டு கொடுக்க

"என்னது பெங்(ண்)களூரா?" என மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் கோரஸ் பாட, தக்குடு பொதுமக்களுக்கு வணக்கம் கூற....

அவ்ளோ தாங்க, டாட்டா பை பை வணக்கம் போட்டாச்சு

இப்படியாக "தக்குடு கல்யாண வைபோகமே" நல்லபடியா முடிஞ்சுது அப்படினு ஒரு கற்பனை பதிவு தான் இது... நிஜத்துல கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அழைப்பு வந்தும் போக முடியாத தூரத்துல இருக்கறதால, இப்படி போஸ்ட் போட்டு மனசை தேத்திக்கறேன்..:)

அதுவும் இந்த ஒரு வாரமா சிலர் "நான் தக்குடு கல்யாணத்துக்கு போறேன், நான் தக்குடு கல்யாணத்துக்கு போறேன்"னு சொல்லி என்னை வெறுபேத்திட்டு இருக்காங்க, அவங்களை எல்லாம் முடிஞ்ச வரை இந்த போஸ்ட்ல கலாய்ச்சு இருக்கேன்

கல்யாண வைபவம்ங்கறதால ரெம்ப கலாய்க்க முடியல, சரி விடுங்க இன்னொரு சான்ஸ் கிடைக்காமையா போகும்..:)

எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்கு தக்குடு இந்த பக்கம் வரபோறதில்லைங்கற ஒரு தைரியத்துல  அடிச்சு  விட்டுருக்கேன்...  நாள பின்ன பிரச்சன வந்தா நீங்க எல்லாம் என் பக்கம் தான் பேசுவீங்கனு எனக்கு தெரியுமே...;)

ஒகே ஜோக்ஸ் அபார்ட்... திரு அண்ட் திருமதி தக்குடுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன்

அதோட தம்பதிகள் பெரிய மனசு பண்ணி இந்த பரிசையும் ஏத்துக்கணும்...:)அன்புடன்,
அப்பாவி

Friday, November 18, 2011

ரங்கமணிக்கு வந்த சோதனை... (தங்கமணி ரங்கமணி சீரிஸ்..:)))
"என்னங்க?"

"சொல்லு..." என்றார் ரங்கமணி டிவியில் இருந்து கண்ணை எடுக்காமலே

தான் பேசுவதை அவர் காதில் வாங்கவில்லை என்பதை உணர்ந்த நம்ம புத்திசாலி தங்கமணி ரிமோட் எடுத்து டிவிய ஆப் பண்ணினாங்க

"ஐயோ... ஏய் ஏய்... ரிமோட் குடு தங்கம்... " என பதறினார் ரங்கமணி

"வீட்டுல இருக்கிற கொஞ்ச நேரமும் இந்த டிவிய கட்டிட்டு அழறதே வேலையா போச்சு... நான் சொல்றத காது குடுத்து கேளுங்க அப்புறம் தர்றேன்..."

"காது மூக்கு எல்லாம் குடுக்கறேன்... மொதல்ல ரிமோட் குடு"

"நான் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும்... அப்புறம் நீங்க தாராளமா பாருங்க... எங்க..." என தங்கமணி ஏதோ சொல்ல வர அதற்குள் இடைமறித்த ரங்கமணி

"தங்கம் டென்ஷன் பண்ணாதம்மா... இந்த நடிகை பேட்டி முதல் வாட்டி போட்டப்பவே மிஸ் பண்ணிட்டேன்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்... கடவுளா பாத்து அந்த சேனல்காரனுக்கு தோண வெச்சு மறுபடி போட்டுருக்கான்... ரிமோட் குடு" என ரங்கமணி பதட்டப்பட தங்கமணி பூலான்தேவி மாதிரி முறைச்சாங்க

(பூலான்தேவி மொறைச்சு நீ எப்ப பாத்தேன்னு யாராச்சும் கேட்டீங்கன்னா உங்கள சாம்பல் பள்ளதாக்குக்கு அனுப்பிடுவேன்...:)))))

இதுக்கு மேல பேசினா வம்பாய்டும்னு ரங்கமணி "சரி சொல்லு... என்ன விசயம்?" னார்

"எங்க சித்தப்பா பொண்ணு சுசிலா இருக்கால்ல.."

"ம்... இருக்கா இருக்கா... அவளுக்கென்ன இப்போ..." என்றார் ரிமோட்டை ஒரு பார்வை பார்த்து கொண்டே

"அவ வீட்டுகாரருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்காராம்... எங்கம்மா போன் பண்ணினாங்க... போய் பாத்துட்டு வந்துடலாம்"

"இப்பவா...?" என பயந்து போய் கேட்டார், அவருக்கு அந்த நடிகை பேட்டி மிஸ் ஆய்டுமேனு கவலை

"இல்ல... இப்ப நேரமாய்டுச்சு... நாளைக்கி ஒரு ஒன் ஹவர் பர்மிசன் போட்டுட்டு வாங்க... போயிட்டு வந்துடலாம்"

"நாளைக்கி போறதுக்கு இப்பவே என்ன... மொதல்ல ரிமோட் குடு" என டென்ஷன் ஆனார் ரங்க்ஸ்

"நேரத்துல வரீங்க தானே, அதை சொல்லுங்க மொதல்ல"

"சரி வரேம்மா... ரிமோட் குடு" என்றார் பொறுமை இழந்தவராய்

"ச்சே... '16 வயதினிலே கமல் ஆத்தா வெயும் காசு குடு' டயலாக் மாதிரி ரிமோட் குடு ரிமோட் குடுனு.... சகிக்கல" என்றவாறே ரிமோட்டை குடுத்தார் தங்கமணி

தங்கமணி சொல்வது ரங்கமணி காதில் விழுந்தால் தானே சண்டை எல்லாம்... ரிமோட் கையில் கிடைத்ததும் டிவியில் மூழ்கினார்

*************************

ஒருவழியா நடிகை பேட்டி முடிஞ்சு ரங்கமணி சுயநினைவுக்கு வந்தார்

அதுக்கே காத்திருந்த மாதிரி தங்கமணி அவர் பக்கத்துல போய் உக்காந்தாங்க

"ஏங்க....?" என தங்கமணி அன்பாய் ஒரு பார்வை பார்க்க

"என்ன தங்கம்?" என ரங்கமணி திகிலாய் விழித்தார்

"அது... உங்களுக்கு ஒரு சவால் தர போறேன்..." என தங்கமணி சிரித்து கொண்டே கூற

"அதான் உங்கப்பா நாலு வருஷம் முன்னாடியே குடுத்துட்டாரே... கன்னிகாதானமா" என ரங்கமணி முணுமுணுக்க, தங்கமணி முறைப்பதை பார்த்ததும்

ரங்கமணி சமாளிப்பாக "அது.... உன்னை போல ஒரு புத்திசாலிய சமாளிக்க வேண்டிய பொறுப்பை குடுத்துட்டாறேனு சொல்ல வந்தேன்... " என்றார்

"சரி... என்னை நல்லா பாருங்க..." என தங்கமணி அன்போடு கூற

"ஐயயோ... என்னாச்சு தங்கம்..." என ரங்கமணி பதற

"என் முகத்துல ஒரு மாற்றம் இருக்கு, என்னனு கண்டுபிடிங்க பாக்கலாம்..." என சவால் பார்வை பார்த்தார் தங்கமணி

"அடக்கடவுளே... தங்கம்... வேண்டாம் இந்த சோதனை... இதுக்கு பதிலா நீ டிவில பாத்து புதுசா எதாச்சும் சமைப்பியே...அது வேணும்னாலும் செஞ்சு குடு... சத்தமில்லாம சாப்பிடறேன்..." என ரங்கமணி டெர்ரர் ஆனார்

"இங்க பாருங்க... நீங்க சொல்லித்தான் ஆகணும்... அது பெரிய மாற்றம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்..." என்றார் தங்கமணி தீர்மானம் போல்

"ஐயோ... யார் மூஞ்சில முழிச்சேன் இன்னிக்கி..."என ரங்க்ஸ் விழிக்க "அடடா... இவ மூஞ்சில தான் முழிச்சேனா.... ஹும்... " என முணுமுணுத்தவர் "சரி சரி...சொல்றேன்" என வசீகரன் சிட்டி ரோபோ தயாரிக்க செஞ்ச ஆராய்ச்சி ரேஞ்சுக்கு ரெம்ப யோசிச்சார் ரங்கமணி

"என்ன இவ்ளோ யோசனை...சட்டுன்னு சொல்லுங்க... என்ன மாற்றம்..." என தங்கமணி அவசரப்பட

"இரும்மா... தப்பா சொன்னா பின் விளைவுகள் எனக்கில்ல தெரியும்" என டென்ஷன் ஆனார்

"சரி சரி...சீக்கரம்..." என்றார் தங்க்ஸ்

"ம்... ஆ... கண்டுபிடிச்சுட்டேன்... " என்றார் ரங்க்ஸ். பல்பு கண்டுபிடிச்சப்ப தாமஸ் ஆல்வா எடிசன் கூட இவ்ளோ சந்தோசப்பட்டு இருக்க மாட்டார்னா பாத்துக்கோங்களேன்

"சொல்லுங்க சொல்லுங்க... " என எக்ஸ்சைட் ஆனார் தங்கமணியும்

"அது... நீ கம்மல் போட்டு இருக்க" என ரங்கமணி பெருமையாய் கூறவும்

"பின்ன இதுக்கு முன்ன கமண்டலமா போட்டிருதேன்" என தங்கமணி முறைக்க

"இல்லம்மா... வேற மாதிரி தானே போட்டு இருப்ப" என ரங்க்ஸ் தப்பிக்க பார்த்தார்

"அதெல்லாம் இல்ல... நான் சொன்ன மாற்றம் வேற...கண்டுபிடிங்க" என்றார் தங்கமணி விடுவென என

"அதில்லையா... ஹும்... வேற என்ன...?" என மீண்டும் வசீகரன் ஆனார் ரங்க்ஸ்

கொஞ்சம் நேரம் யோசித்தவர் "அடப்பாவமே...உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கு கூட இவ்ளோ டீப்பா பாக்கலையே தங்கம்...எதாச்சும் க்ளூ குடேன் ப்ளீஸ்..." என ரங்கமணி பாவமாய் பார்க்க

ஒரு நிமிஷம் மௌனமாய் யோசித்த தங்கமணி "சரி விடுங்க... உங்களுக்கு இதெல்லாம் வராது" என எழுந்து போய் விட்டார்

"அப்பாடா தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுனு சொல்றதை இன்னிக்கி தான் உணர்றேன்" னு ரெம்ப ஹாப்பி ஆனார் ரங்கமணி, பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் (ஹா ஹா ஹா...!!!)

கொஞ்ச நேரம் கழிச்சு உள் அறையில் இருந்து வந்த தங்கமணி "ஏங்க... கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு ப்ரோக்ராம் பாத்தீங்களே..."என கேள்வியை முடிக்கும் முன்

"ஆமா...நடிகை ஜில்பா ரொட்டி ப்ரோக்ராம் தானே...  என்ன அழகு இல்லையா தங்கம்" என முகம் எல்லாம் பூரிக்க கேட்டார் ரங்கமணி

பல்லை கடித்து கோபத்தை அடக்கி கொண்ட நம்ம தங்கமணி "ஆமா ஆமா... அவங்க போட்டு இருந்த கம்மல் நல்லா இருந்தது இல்லிங்க" என வலை விரித்தார்

"ஆமாம் தங்கம்... அந்த ஸ்டார்க்கு ஏத்த ஸ்டார் டிசைன்ல சூப்பர் கம்மல்" என தங்கமணி எதிர்பார்த்தது போல் வலையில் விழுந்தார் ரங்கமணி

"அப்புறம் அவங்க டிரஸ் என்ன கலர் அது?" என தங்கமணி குழியை ஆழமாய் தோண்ட

தன் அபிமான நடிகை பற்றி மனைவி ஆர்வமாய் பேசியதும் உற்சாகமான ரங்கமணி "என்ன தங்கம் நீ? இது கூட கவனிக்கலையா... நல்ல டார்க் மெரூன் கலர் டாப்ஸ்... ப்ளாக் பேன்ட் ... நல்ல காம்பினேசன் இல்ல தங்கம்"

"ஆமா ஆமா...சூப்பர்... அது சரி... அவங்க பொட்டு வெச்சு இருந்தாங்களா என்ன?"

"என்ன தங்கம் நீ? உனக்கு சுத்தமா கவனிக்கற புத்தியே போய்டுச்சு போ... கம்மல்க்கு மேட்ச்ஆ ஸ்டார் டிசைன்ல டிரஸ்க்கு மேட்ச்ஆ மெரூன் கலர்ல எவ்ளோ அழகா ஒரு பொட்டு...நடுல கூட ஒரு ஸ்டோன் கூட இருந்ததே, நீ பாக்கலையா" என சிலாகித்தார் ரங்கமணி

அடுத்த கணம் தங்கமணி "நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்" என கண்ணை கசக்க, அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தார் ரங்கமணி

"ஐயயோ...என்னாச்சு தங்கம்" என ரங்கமணி பதற

"யாரோ ஒரு நடிகை... அதுவும் கன்றாவியா நடிக்கற ஒரு ஜென்மம்... அந்த சிறுக்கி... அவ கம்மல், டிரஸ் கலர், பொட்டு டிசைன் நடுல ஸ்டோன் எல்லாம் ஞாபகம் இருக்கு ப்ரோக்ராம் பாத்து ஒரு மணி நேரம் கழிச்சு கூட... உங்கள நம்பி கழுத்தை நீட்டினவ நான்... எப்பவும் வட்ட பொட்டு வெக்கறவ இன்னிக்கி உங்களுக்கு பிடிக்கும்னு நீட்ட பொட்டு வெச்சுட்டு வந்து என்ன வித்தியாசம்னு ஆசையா கேட்டா... ஒரு மணிநேரம் ஆராய்ச்சி செஞ்சும் தெரில இல்ல...நான் போறேன்... எங்க அம்மா வீட்டுக்கே போறேன்" என தங்கமணி கண்ணை கசக்கி கொண்டே உள்அறைக்குள் சென்றார்

ரங்கமணி என்ன செஞ்சார்னு நான் சொல்லி தான் தெரியணுமா... வழக்கம் போல "சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டனே"னு பீலிங்ல இருக்கார்... ஹையோ ஹையோ...:)))

நிரந்தர பின் குறிப்பு:

என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த நிரந்தர குறிப்பு இந்த பதிவுகளில் இடம் பெறுகிறது... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-)))

தங்கமணி ரங்கமணியின் எல்லா கலாட்டாக்களையும் படிக்க... இங்கே கிளிக்கவும்

Thursday, November 10, 2011

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...
அவள நான் மொதல் மொதலா பாத்தது ஒரு இலையுதிர் காலத்துல... 2009ம் வருஷம்னு நினைக்கிறேன்... எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு... அது ஒரு திங்கக்கிழமை

 
பாத்த மொதல் நாளே என்னமோ ஒரு ஈர்ப்பு... அவ அப்படி ஒண்ணும் அழகில்லனு தோணினாலும் என்னமோ அடிக்கடி பாத்தேன்.. அவள பாக்காம போனா என்னமோ ஏதோ விட்டுப்போன ஒரு உணர்வு வர்ற அளவுக்கு ஒட்டுதல் உருவாச்சு

என்னை சுத்தி இருந்தவங்க அப்பவே எச்சரிச்சாங்க... "வேண்டாம், இது நல்லதுக்கில்ல, அவ சரியில்ல, ஒத்துவராது"னு எவ்வளவோ சொன்னாங்க

ஆனா, யார் பேச்சையும் கேக்கற மனநிலைல நான் அப்ப இருக்கல. "பட்டாதான் உனக்கு புத்தி வரும்"னு நட்புகளும் உறவுகளும் தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க

உண்மைய சொல்லணும்னா இவள விட அழகான எத்தனையோ பேரை பாத்த போது கூட தோன்றாத ஒரு உணர்வு இவகிட்ட தோணினதுக்கு என்ன காரணம்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியல

ஆரம்பத்துல ரெம்ப நல்லவளா இருந்தவ, கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சா. சிரிப்பு விளையாட்டுனு இருந்தது மாறி வேளைக்கு ஒரு சண்டையும் பொழுதுக்கு ஒரு போராட்டமும்னு நிலைமை மாறுச்சு

அப்பவாச்சும் நான் சுதாரிச்சு விலகி இருக்கணும். விதி வேற மாதிரி இருக்கறப்ப எப்படி விடும் சொல்லுங்க?

எல்லாம் சரியா போச்சு, இனி சுபம்னு நினைக்கற நேரத்துல புதுசா ஒரு பிரச்சனை வரும். மறுபடி மறுபடி இதே நிலைமை. இதுக்கு என்ன தான் முடிவுனு மனசு வெறுத்து போச்சு. ஆனாலும் விட முடியல

ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல, ரெண்டு வருஷம் இப்படியே போச்சு. கோபம் வராத எனக்கே கோவம் வந்தது, பொறுமையான எனக்கே பொறுமை போனது. பொறுத்தது போதும் பொங்கி எழுனு தோணின மனதை கட்டுப்படுத்தினேன்

ஒரு வழியா முடிவுக்கு வந்தது. அந்த நாள்... போன வெள்ளிக்கிழமை, நவம்பர் நாலாம் தேதி, பறவைகள் எல்லாம் கூட்டில் அடங்கிய நேரம். சூரியன் விடைபெற்று வேறு ஊருக்கு விடியல் தர புறப்பட்ட நேரம்...

மைண்ட்வாய்ஸ் : பில்ட் அப் போதும் விசயத்த சொல்லு

அப்பாவி : அப்பவே பிரகாஷ் படிச்சு படிச்சு சொன்னான் இந்த பொண்ணு கேக்கலியே

மைண்ட்வாய்ஸ் : என்ன சொன்னான்? யாரு பிரகாஷ்? என்ன படிச்சான்? பி.எ'வா இல்ல பி.காம்'ஆ?

அப்பாவி : யாருக்காக இல்லைனாலும் உயிரா இருந்த பிரெண்ட் அவளுக்காக யோசிச்சுருக்கணும்

மைண்ட்வாய்ஸ் : என்ன யோசிக்கணும்?

அப்பாவி : தப்பு மேல தப்பு, சதி மேல சதி, இப்ப எங்க போய் நிக்குது பாருங்க

மைண்ட்வாய்ஸ் : எங்க நிக்குது? தெருமுனைலையா?

அப்பாவி : என்ன தான் சொன்னாலும் அவ பிரகாஷ்'க்காக தானே எல்லாமும் செஞ்சா... அதை நெனச்சா பாவமா தான் இருக்கு

மைண்ட்வாய்ஸ் : என்ன செஞ்சா? சொல்லு நாங்களும் பாவப்படணுமா கோவப்படணுமானு சொல்றோம்

அப்பாவி : மகா மேலயும் தப்பிருக்கு

மைண்ட்வாய்ஸ் : என்ன தப்பு?

அப்பாவி : அந்த தோப்பியாஸ் எவ்ளோ மோசமானவனா இருந்தாலும் ராணிக்காக இவ்ளோ செஞ்சான்...ச்சே... இப்படி கொன்னுட்டாளே ராணி

மைண்ட்வாய்ஸ் : ஏய் அப்பாவி... இங்க என்ன சிவகார்த்திகேயனோட "மாத்தி யோசி" கேம் நடக்குதா? கேக்கற கேள்விக்கு சம்மந்தமில்லாம லூசு மாதிரி ஒளரிட்டு இருக்க

அப்பாவி : என்னை பாத்தா லூசு மாதிரி இருக்கா? (என அப்பாவி முறைக்க)

மைண்ட்வாய்ஸ் : பாத்தா அப்படி தெரில...ஆனா...

அப்பாவி : வேண்டாம் மைண்ட்வாய்ஸ்... நானே டென்ஷன்ல இருக்கேன்

மைண்ட்வைஸ் : ஆரம்பத்துல என்னமோ "அவள நான் மொதல் மொதலா பாத்தது ஒரு இலையுதிர் காலத்துல"னு கவித்துவமா ஆரம்பிச்சத பாத்து ஏதோ கதையோனு வந்தேன்... ஆனா...

அப்பாவி : என்ன புரியலையா?

மைண்ட்வாய்ஸ் : என்னிக்கி நீ புரியற மாதிரி பேசி இருக்க

அப்பாவி : சரி விடு, நேரா விசயத்துக்கு வரேன். வேற ஒண்ணுமில்லை. தெரியாத்தனமா ஒரு சீரியல் பாக்க ஆரம்பிச்சு இப்படி ஆய்ட்டேன்

பொதுவா நான் இந்த சீரியல் எல்லாம் பாக்கவே மாட்டேன், 2009ல எங்க மாமனார் மாமியார் கனடா வந்திருந்தப்ப அவங்களுக்காக விஜய் டிவி கனக்ட் பண்ணி இருந்தோம், அப்ப ஒரு நாள் தெரியாத்தனமா இதை பாத்து சிக்கிட்டேன்

அதுக்கப்புறம் ஏதோ திருட்டுத்தனம் பண்ற மாதிரி ஒளிஞ்சு ஒளிஞ்சு பாத்தேன், காரணம் என்னனா, என்னமோ தெரியல நான் இதை பாத்தாலே எங்க வீட்ல ஒருத்தருக்கு ப்ளட் பிரசர் ஏறிடும். "மக்குராணி ஆரம்பிச்சுருச்சா?"னு மொறைப்பார்

இந்த சீரியல் பேரு "மகராணி", அதை தான் அவர் செல்லமா(!) மக்குராணினு சொல்லுவார்...:)

எனக்கு இதுல வர்ற ஹீரோயன் சுஜிதாவை குழந்தை நட்சத்திரமா "பூவிழி வாசலிலே"ல இருந்தே பிடிக்கும். அதான் ஆர்வமா பாத்தேன். கதை பெருசா ஒண்ணுமில்ல...

அனாதை ஆசிரமத்துல வளர்ற ரெண்டு பொண்ணுங்க, ஒருத்தி மகா ஒருத்தி ராணி. மகா ரெம்ப நல்லவ, பொறுமையில் பூமாதேவி, கலியுக கர்ணி (கர்ணனின் பெண் பால்), எவ்ளோ அடிச்சாலும் தாங்குவா, மொத்தத்துல ரெம்ம்ம்ம்பப நல்லவ, ஒரே வார்த்தைல சொல்லணும்னா என்னை மாதிரி அப்பாவி...

சரி சரி.. நோ டென்சன்... பேச்சு பேச்சாதான் இருக்கணும்...:))

ஆனா இந்த ராணி இருக்காளே சரியான சுயநலவாதி, தனக்கு ஒண்ணு வேணும்னா யாரை வேணாலும் என்ன வேணாலும் செய்வா. அப்படி ஒரு கேரக்டர், இந்த மைண்ட்வாய்ஸ் மாதிரினு வெச்சுக்கோங்களேன்...:) 


மைண்ட்வாய்ஸ் : உண்மையை உலகறியும்

அப்பாவி :  இப்படி இருக்கறப்ப மகாவோட பெத்தவங்க பெரிய பணக்காரங்கனு தெரிஞ்சு, தான் தான் அவங்க பொண்ணுன்னு பொய் சொல்லி அவங்க கூட போய்டுவா ராணி. மிச்ச கதை என்னனு உங்களுக்கே புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்

ஆமா, இவங்க ரெண்டு பேருக்கு நடுல நடக்கற உரிமை போராட்டம் தான் ரெண்டு வருஷம் ஓடுச்சு. இதுல பெரிய கொடுமை என்னனா மூணு மாசத்துக்கு ஒருக்கா முடியற மாதிரி வரும், டபால்னு ஒரு வில்லன் வருவான், இன்னும் மூணு மாசம் இழுப்பாங்க

அப்புறம் அந்த வில்லன் செத்து போவான், அவன யார் கொன்னாங்கன்னு ஒரு மூணு மாசம் விசாரணை, அப்புறம் ஒரு வழியா யாருன்னு கண்டுபுடிச்சதும் அந்த குற்றவாளி தலைமறைவு. அப்புறம் அவங்கள கண்டுபிடிக்க இன்னொரு மூணு மாசம். நிஜத்துல கூட கண்டுபிடிக்க இவ்ளோ நாள் ஆகுமான்னு தெரில

அப்புறம் இன்னொரு ஆளை யாரோ கொலை செய்ய, அப்புறம் விசாரணை, அதுக்கு பழிவாங்கல்னு சிந்துபாத் ரேஞ்சுக்கு இழுத்துட்டு போச்சு. இப்படியே ஒரு ஒருத்தரா கொன்னு, கடைசீல பாத்தா சீரியல் ஆரம்பிச்சப்ப இருந்த பாதி கேரக்டர்ஸ் கடைசீல உசுரோட இல்ல

ஆனா ஒரு விஷயம் சொல்லியே ஆகணும், இதுல "ராணி"னு அந்த வில்லி கேரக்டர் பண்ணின பொண்ணுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. நிஜமா ரெம்ப நல்லா நடிச்சது. பொதுவா நெகடிவ் கேரக்டர்ஸ் மனசுல பதியாது. பட் ஷி இஸ் குட்

இதுல அடிக்கடி வந்து எனக்கே மனப்பாடம் ஆன டயலாக் "இந்த விஷயம் மகாவுக்கு இப்ப தெரியக் கூடாது... ஏன்னா..." அப்படின்னு பயங்கர பில்ட் அப் குடுத்துட்டு "தொடரும்.." போட்டுடுவான்

ஒரு நாள் பக்கத்துல உக்காந்து பேப்பர் படிச்சுட்டு இருந்த ரங்க்ஸ் கடுப்பாகி "மிச்ச டைலாக் நான் சொல்றேன். இந்த விஷயம் மகாவுக்கு இப்ப தெரியக்கூடாது.... ஏன்னா, தெரிஞ்சா இன்னைக்கே சீரியல் முடிஞ்சு போயிரும்... அப்புறம் இன்னும் ரெண்டு வருஷம் எப்படி உயிர வாங்கறது. இதுக்கு உன் ஜில்லு கதையே பெட்டர்"னு பல்பு கொடுத்துட்டு போய்ட்டார்

என்னமோ போங்க... ஊர்ல பத்து பதினஞ்சு சீரியல் பாக்கரவன்லாம் சந்தோசமா இருக்கான், இந்த ஒரு சீரியல் பாத்துட்டு நான் பட்ட பாடு இருக்கே... அய்யயயயயயயோ...:))))

மோரல் ஆப் தி ஸ்டோரி:
தயவு செஞ்சு யாரும் சீரியல் பாக்காதீங்க. அப்படி பாக்கறதா இருந்தாலும் வீட்ல யாரும் இல்லாத நேரம் பாருங்க, அட்லீஸ்ட் பலப் வாங்காமயாச்சும் தப்பிக்கலாம்...

மேல இருக்கற அந்த படத்துக்கும் நீ எழுதினதுக்கும் என்ன சம்மந்தம் அம்மணினு நீங்க கேக்கலாம். சொல்றேன், ஒரு சம்மந்தமும் இல்ல, சும்மானாச்சிக்கு பில்ட் அப் பண்ணி உங்கள கன்பியூஸ் பண்றதுக்கு போட்டது... :)))

மைண்ட்வாய்ஸ் : மத்ததெல்லாம் கூட நான் ஜெலுசில் போட்டு ஜீரணிச்சுகுவேன், ஆனா கடைசீல சொன்னியே ஒண்ணு.... கன்பியூஸ் பண்றதுக்கு படம் போட்டேன்னு.....என்னா ஒரு வில்லத்தனம்... அவ்வ்வ்வவ்... அந்த சீரியல் டைரக்டர் இதை படிச்சாரு, அடுத்த சீரியல்ல உனக்கு வில்லி கேரக்டர் நிச்சியம்