Thursday, December 22, 2011

மருதாணி நினைவுகள்... (கவிதை)அம்மாகை சிகப்புபார்த்து
அதுபோல் எனக்கும்வேணுமென
அடம்பிடித்து அழிச்சாட்டியம்செய்த
அழகியபசுமை நினைவுகள்!!!


வாய்லவெச்சுப்ப வேண்டாம்னு
வாகாய்அம்மா எடுத்துசொல்ல
வேணும்னா வேணும்னு
விடாமல்அழுத நினைவுகள்!!!


இலையை பறிப்பதில்தொடங்கி
இன்னும் பாக்கும்கூடசேர்த்து
அரைத்து எடுக்கும்வரை
அம்மாகாலை சுற்றியநினைவுகள்!!!


விரல்நுனியில் தொப்பிவைத்து
வட்டத்தை உள்ளங்கையில்இட்டு
அசைக்காம நில்லேண்டினு
அம்மாஅதட்டிய நினைவுகள்!!!


ஒருகைக்கு போதும்டி
ஒழுங்கா கேளுனுசொல்ல
புரண்டு கைகால்உதைத்து
பொய்க்கண்ணீர் உகுத்தநினைவுகள்!!!


படுத்தால் கலைந்திடும்னு
பல்லைகடித்து தூக்கம்விரட்ட
பின்னிரவில் அம்மாஸ்பரிசத்தில்
படுக்கையில் சுருண்டநினைவுகள்!!!


எனக்குத்தான் நல்லாசிவந்ததென
எந்தங்கையை சினுங்கச்செய்து
பாட்டியிடம் கொட்டுவாங்கி
அழுதுமுகமும் சிவந்தநினைவுகள்!!!


பெரியவளாய் ஆனநாளில்
பெருமிதமாய் கண்ணேறுகழித்து
சொந்தங்கள் மருதாணியிட்ட
சொர்க்கமான நினைவுகள்!!!


சிவக்குமளவு ஆசையாம்என
சிநேகதிகள் கேலிசெய்ய
சும்மாஎன தெரிந்தாலும்
சிவக்கனுமென செய்தமுயற்சிகள்
இந்தநொடி நினைத்தாலும்
இனிமையான நினைவுகளே!!!


கைத்தலம் பற்றியநாளில்
கள்ளபார்வையில் ரசித்துவிட்டு
பின்கிடைத்த தருணத்தில்
பாராட்டிய ரகசியங்கள்
சற்றேஇன்று நினைத்தாலும்
சிவக்கவைக்கும் நினைவுகள்தாம்!!!

!!!

Tuesday, December 06, 2011

என்ன சத்தம் இந்த நேரம்...(சிறுகதை)


"கிர்த்தி...காலிங் பெல் அடிக்குது பாரு" என டிவி முன் அமர்ந்து இருந்த கெளதம் குரல் கொடுக்க

"ஏன் நீங்க தெறந்தா கதவு தெறக்காதா?" என சலித்து கொண்டே உள்ளிருந்து வந்தாள் கிருத்திகா

"லீவ் நாள்... யாராச்சும் உன் பிரெண்ட்ஸ் தான் வெட்டி அரட்டைக்கு வருவாங்க... போய் பாரு" என வேண்டுமென்றே மனைவியை சீண்டினான்

"நீங்க மட்டும் இப்ப என்ன நாட்டுக்கு ரெம்ப முக்கியமான வேலை எதாச்சும் பாக்கறதா நெனப்பா" என டிவியை கை காட்டி கேட்க

"பின்ன... என்ன மாதிரி ஆளுங்க டிவி பாக்கலைனா மேட்ச் ஆடறவன் நிலைமை என்ன" என குறும்பாய் கண்சிமிட்டியவனை ஏதோ சொல்ல வாயெடுத்தவள் மீண்டும் அழைப்பு மணி சத்தம் கேட்க முறைத்து கொண்டே சென்றாள்

கதவை திறந்தவள் பரிச்சியமில்லாத ஒரு ஆண் நின்றிருக்க யார் என புரியாமல் விழித்தாள்

"Hello... I'm John" என வந்தவன் கூற

"And?" என கிருத்திகா கேள்வியாய் நோக்கினாள்

"You asked for a plumber to fix your pipe right?" என அவன் விளக்கமளிக்க அப்போது தான் நினைவு வந்தவளாய்

"Oh...yeah... sorry... didn't catch your name in phone... come on in" என விலகி நின்றாள்

அதற்குள் "யாரு கிர்த்தி?" என வந்த கணவனிடம்

"ம்...அதான் சொன்னீங்களே... வெட்டி அரட்டைகினு" என கோபப்பார்வை பார்த்தாள்

அதற்குள் ஜான் தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டான் கௌதமிடம்

சமையலறை குழாயில் நீர் சரியே வராமல் இருக்க அதை பார்வையிட்டவன்  அங்கு எதுவும் தவறு புலப்படாமல் போக Basement செல்ல வழி கேட்டு கீழே சென்றான்

"நீங்களும் போங்க கூட" என கௌதமை விரட்டினாள் கிருத்திகா

"அவன் பாத்துப்பான் நீ சும்மா இரு" என அவன் பார்வை டிவியில் பதிய

"ஐயோ...அங்க சாமான் எல்லாம் இருக்கு கெளதம்... இப்ப போக போறீங்களா இல்லையா?"

"ஹா ஹா ஹா... ஆமா.. அந்த வேண்டாத தட்டு முட்டு சாமானை அவன் தூக்கிட்டு போனா தூக்கி போடற வேலையாச்சும் எனக்கு மிச்சம்" என அவன் சிரிக்க

"ச்சே... உங்ககிட்ட பேசி ஜெய்க்க முடியாது... என்னமோ பண்ணுங்க..." என்றவள்

அதற்குள் மேல் அறையில் பிள்ளைகளின் சண்டை சத்தம் கேட்க, "ஏய் வினு... என்னடி சத்தம் அங்க?"

"நான் இல்லம்மா... இந்த நித்தின் தான்"

"இனி சத்தம் வந்தா ரெண்டு பேருக்கும் டைம் அவுட் குடுப்பேன் இப்போ" என மிரட்ட அவள் எதிர்பார்த்தது போலவே அமைதி ஆனார்கள் பிள்ளைகள்

பேஸ்மென்ட் சென்ற ஜான் சற்று நேரத்தில் வந்து சமயலறையில் இருந்த குழாயை கழற்றி மாட்டினான்

என்ன செய்கிறான் என புரியாமல் கிருத்திகா பார்த்து கொண்டு இருக்கும் போதே "Its done... try it now" என்றான் ஜான்

குழாயை திருகி பார்க்க தடையின்றி நீர் வந்தது. அப்பாடா என நிம்மதியானாள் கிருத்திகா

அதற்குள் தான் செய்த பணிக்கான பில்லை நீட்டினான் ஜான்

"இந்த பில்லயாச்சும் கொஞ்சம் பே பண்றீங்களா...இல்ல அதுவும் நானே செய்யணுமா?" என கிருத்திகா குரல் கொடுக்க

"நான் மேட்ச் பாத்தா பொறுக்காதே உனக்கு...இப்ப தான லாண்டரி போட்டுட்டு வந்து உக்காந்தேன்... சரி.. எவ்ளோ பில்?"

"நூறு டாலர்"

"நூறா? என்னடி செஞ்சான் நூறுக்கு?" என்றவாறே பணத்தோடு வந்தான் கெளதம்

"அவனுக்கு தமிழ் தெரியாதுங்கர தைரியத்துல பேசாதீங்க... என்ன செஞ்சான்னு போய் பாக்க சொன்னப்ப நகராம இப்ப என்னை கேட்டா"

"நம்ம சண்டைய அப்புறம் போடலாம் என் அழகான ராட்சசி...  அவன அனுப்பறேன் இரு" என மற்றவன் அறியாமல் மனைவியாய் பார்த்து  கண் சிமிட்டியவன் "whats the problem?" என ஜானிடம் கேட்டான்

"Filters in main pipeline is blocked as well damaged...that's what I expected... it's replaced now... including the filter and labour it's 100 dollars" என இதற்கு தானே கேட்டாய் என புரிந்தவன் போல் விளக்கம் கூறி பணத்தை பெற்று சென்றான்

மதிய உணவை முடித்து பிள்ளைகள் வெளியே விளையாட செல்ல கணவனும் மனைவியும் டிவி முன் அமர்ந்து இருந்தனர். ஏதோ பழைய படம் ஓடி கொண்டு இருந்தது

மனைவியை சீண்டி பார்க்க எண்ணி ரிமோட் எடுத்து வேண்டுமென்றே ஸ்போர்ட்ஸ் சேனல் மாற்றினான் கெளதம்

சற்று நேரம் அவளிடமிருந்து ஆட்சேபனை வராமல் போக அவளை திரும்பி பார்த்தவன் பெரும் யோசனையுடன் இருந்தவளை தோள் பற்றி உலுக்கினான்

"ம்...என்ன?" என விழித்தவளிடம்

"எந்த கோட்டைய பிடிக்க இவ்ளோ யோசனை இப்போ?" என கேலியாய் கேட்க

"ப்ச்... ஒண்ணுமில்ல" என அவள் சோர்வாய் தலை அசைக்க

"என்னடா டையர்டா?" என அவள் கை பற்றி விரல்களை சொடக்கு எடுக்க விழைந்தான்

"இல்லப்பா... அந்த ப்ளம்பர் வந்தான்ல... அவன பத்தா என்னமோ பயமா இருக்கு"

"அவன் என்னடி பண்ணான் உன்ன" என கெளதம் சிரிக்க

"இல்ல கெளதம்...அவன் அப்படியே 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்துல பாத்தோமே ஒரு வில்லன் கேரக்டர் அவன மாதிரியே இல்ல?" என ஆர்வமும் பயமுமாய் அவள் கூற

"ஹா ஹா ஹா...போடி நீயும் உன் கற்பனையும்... ரெம்ப சினிமா பாத்து கெட்டு போய்ட்ட நீ"

"நான் என்ன சொன்னாலும் இப்படி தான்...ச்சே... " என அவன் கை உதறி விலகி அமர்ந்தாள்

"சரி சரி... அந்த ப்ளம்பர போலீஸ்கிட்ட பிடிச்சு குடுத்துடலாம் சரியா செல்லம்" என சிறுபிள்ளைக்கு சமாதானம் சொல்வது போல் கிண்டலாய் கெளதம் கூற கோபத்துடன் எழுந்து சென்றாள் கிருத்திகா

***************

"கெளதம் கெளதம்" என கிருத்திகா கணவனை உலுக்க

"ம்..." என தூக்கத்தில் புரண்டான் கெளதம்

"ப்ளீஸ்...கொஞ்சம் எழுந்திரிங்க"

"என்ன கிர்த்தி இது? நல்ல தூக்கத்த ஏன் கெடுக்கற" என சலித்து கொண்டே கெளதம் எழுந்து அமர

"ம்...கொஞ்சறதுக்கு" என அவள் கோப முகம் காட்ட அந்த தூக்கத்திலும் கெளதம் முகம் மலர

"இப்பவாச்சும் என் மேல கருணை வந்ததே... குட் கேர்ள்" என அவன் சிரித்தான்

"போதும் போதும்... கீழ ஏதோ சத்தம் வர்ற மாதிரி இருக்கு...எனக்கு பயமா இருக்கு போய் பாக்கலாம் வாங்க"

"சத்தமா? எனக்கொண்ணும் கேக்கலியே"

"உங்களுக்கு எப்ப தான் கேட்டு இருக்கு... யாரோ ஷூ காலுல நடக்கற மாதிரி சத்தம் கேக்குது"

"உனக்கு மட்டும் ஸ்பெஷல் காதுடி... எங்கேருந்து தான் சத்தம் கேக்குமோ நடுராத்ரில...ஹும்.... பேசாம படு, காலைல பாக்கலாம்"

"என்னது காலைலயா? விளையாடறீங்களா? நடக்கற சத்தம்னு சொல்றேன்... கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா"

"ஏண்டி உயிர வாங்கற?"

"நம்ம உயிர எவனாச்சும் எடுத்துட கூடாதுன்னு தான்"

"கடவுளே...ஆரம்பிச்சுட்டயா?"

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...இப்படி தான் 'The skeleton key' னு ஒரு படம்... அதுல..." என்றவளை இடைமறித்தவன்

"போதும் தாயே... உன் புராணத்த ஆரம்பிக்காத"

"எல்லாம் உங்களால தான்"

"நான் என்னடி செஞ்சேன்...கண்ட கண்ட சினிமாவ பாத்துட்டு என் உயிர எடுக்கற நீ... மொதல்ல இந்த movie சேனல்ஸ் எல்லாம் கட் பண்ணினாலே வீட்டுல பாதி சண்டை வராது"

"அதில்ல... மத்தியானம் அந்த ப்ளம்பர் வந்தப்பவே கூட போங்கனு சொன்னேன்ல..."

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்"

"அவன் எதுனா நோட்டம் பாத்துட்டு உள்ள வந்திருந்தா"

"அட ராமா" என தலையில் அடித்து கொண்டான் கெளதம்

"ப்ளீஸ் கெளதம்... சத்தம் என்னனு பாக்கலாம் வாங்க... கொழந்தைங்க முழிச்சுட்டா பயந்துடுவாங்க" என கெஞ்சல் பார்வை பார்க்க அதற்கு மேல் மறுக்க இயலாதவனாய் எழுந்தான்

"நீ இரு நான் போய் பாக்கறேன்" என்றவனிடம்

"ஹுஹும்...நானும் வரேன்... ஆயுதம் எதுனா வெச்சுருந்தா" என்றவளை முறைத்தவன்

"வெச்சிருந்தா? நீ என்ன செய்ய போற, "Wanted" படத்துல ஏஞ்சலினா ஜோலி சண்டை போட்ட மாதிரி போட போறியா"

"நீங்க மட்டும் சினிமா example சொல்லலாமோ"

"உனக்கு புரியணும்னா அப்படி தான சொல்லணும்"

"ஐயோ...டைம் வேஸ்ட் பண்ணாத கெளதம்... ப்ளீஸ்"  அதீத பயம், அதீத கோபம், அதீத காதல் மூன்றின் போது மட்டுமே ஒருமையில் தன்னை அழைப்பாள் என்பதை அனுபவத்தில் உணர்ந்த கெளதம், அவள் ஒருமையில் பேசியதும் மௌனமாய் படி இறங்கினான்

"ஒரு நிமிஷம் போன் எடுத்துட்டு வரேன்" என்றாள்

"அது எதுக்கு இப்ப"

"ஒருவேள 911 கூப்பிடணும்னா?" என்றவளை, அடித்து விடுவேன் என்பது போல் கை உயர்த்தினான்

ஒரு வழியாய் எல்லா அறைகளிலும் பார்த்து விட்டு பேஸ்மென்ட் செல்ல "பாத்து பாத்து கெளதம்" என்றவளை "நீ வாய தெறந்தா அடி படுவ இப்ப" என பாய்ந்தான்

எங்கும் எந்த சலனமும் இல்லாமல் போக "இப்ப திருப்தியா... ஒண்ணும் காணோம்... ஏண்டி இப்படி மனுசன கொல்ற" என முறைத்தான்

"ஆனா சத்தம் வந்ததே கெளதம்"

"ம்...அது உன் கனவுல எதாச்சும் சினிமா ட்ரெய்லர் ஓடி இருக்கும்" என்றான் ஏளனமாய்

"ஐயோ இல்ல..."என சட்டென பேச்சை நிறுத்தியவள் "இப்ப மறுபடியும் கேட்டுச்சு... பாரு பாரு" என்றாள்

திரும்பி பார்த்தவன் என்னவென புரிந்தவனாய் "அங்க பாரு..." என கை காட்டி அவளை எரித்து விடுபவனை போல் முறைத்தான்

அங்கு பேஸ்மென்ட் பைப்பில் தண்ணீர் சரியாய் மூடப்படாமல் சிறிது நேரத்திற்கொரு முறை சொட்டி கொண்டு இருந்த சத்தமே அது

இந்த ஊரின் குளிருக்காக கட்டப்பட்ட மர வீடுகளில் வீட்டின் எந்த மூலையில் சிறு சத்தம் ஏற்பட்டாலும் வீடு முழுக்க எதிரொலிக்கும், அதுவே இரவின் அமைதியில் காலடி சத்தம் போல் தன்னை பயமுறுத்தியது  என்பதை உணர்ந்த கிருத்திகா "சாரி.." என அசடு வழிய நின்றாள்

கெளதம் ஒன்றும் பேசாமல் முறைத்து விட்டு அறைக்கு வந்து படுத்தான்

சற்று நேரத்தில் "கெளதம்..." என மீண்டும் கிருத்திகா அழைக்க

அவன் கண் திறக்காமலே "பேசினா கொன்னுடுவேன்... தூங்கு" என்றான்

"ப்ளீஸ்...ஒன்னே ஒண்ணு கேட்டுக்கறேன் கெளதம்"

"கேட்டு தொல"

"அதென்ன ஏஞ்சலினா ஜோலி... உனக்கு சொல்றதுக்கு ஆம்பள ஏக்டர் பேரு ஒண்ணும் தோணலியா கெளதம்?" என ஏதோ அதிமுக்கிய விடயம் போல் கிருத்திகா கேட்க

கோபத்துடன் கண்ணை திறந்த கெளதம் "நடுராத்ரில கேக்கற கேள்வியாடி இது...?" என முறைத்தவன், அவளின் குறும்பு சிரிப்பில்  தூக்கம்  தொலைத்தான்

அந்த இரவின் அமைதியில் எங்கிருந்தோ கசிந்த ஓர் இனிய இசை மட்டுமே அவர்கள் காதலுக்கு சாட்சியாய் நின்றது

(முற்றும்)

...