Saturday, December 29, 2012

கண் பேசும் வார்த்தைகள்... (சிறுகதை)
இதை பிரசுரித்த வல்லமை இதழுக்கு நன்றிகள்
___________________________________
 
"என்னங்க, நெக்ஸ்ட் வீக் எங்க சித்தப்பாவும் சித்தியும் அவங்க பொண்ணுக்கு மாப்ள பாக்கற விஷயமா ஊர்ல இருந்து வராங்க. நாமளும் கூட போகணும், லீவ் சொல்லிடுங்க" என்றவள் கூற

"ஐயையோ... புதன்கிழமையா மட்டும் இருக்கக்கூடாது கடவுளே" என வேண்டியபடியே "எப்போ?" என்றான்

"புதன்கிழமை" என குண்டை வீசினாள்

"ஓ நோ... எனக்கு புதன்கிழமை ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. லீவ் போட முடியாது" என்றான்

"ஆமா... எங்க வீட்டு சொந்தம் வராங்கனு சொன்னாலே உங்களுக்கு மீட்டிங், டெட்லைன், கோ-லைவ் எல்லாம் வந்துடும்" என சண்டையை துவங்கினாள்

"ஏன் புரியாம பேசற? நீயும் வேலைக்கு போறவ தான, தெரியாதா?" என புரியவைக்க முயன்றான்

"போன மாசம் உங்க அக்கா வந்தப்ப மட்டும் மூணு நாள் லீவ் போட்டீங்க, என்னையும் போட வெச்சீங்க. எனக்கு கூட தான் வேலை இருந்தது, உங்களுக்காக செய்யலையா?"

"எங்கக்கா ரெண்டு மாசம் முன்னாடியே வர்றத பத்தி இன்பார்ம் பண்ணினா, சோ பிளான் பண்ண வசதியா இருந்தது" என நியாப்படுத்தினான்

"ஓஹோ... உங்க சொந்தமெல்லாம் ரெம்ப இங்கிதம் தெரிஞ்சவங்க, எங்களுக்கு அவ்ளோ பத்தாதுன்னு சொல்ல வரீங்க, அப்படி தானே" என அவள் கோபமாய் சீற

"ஸ்டாப் இட், டோண்ட் புட் வோர்ட்ஸ் இன் மை மௌத்... உன்கிட்ட பேச முடியாது ச்சே" என சலிப்பாய் நகர்ந்தான்

"ஆமா என்கிட்டயெல்லாம் பேச முடியாது. உங்க டீம்ல இருக்காளே அவ பேரென்ன... நின்னாவோ உக்காந்தாவோ, அவகிட்ட பேசறதுன்னா மட்டும் இனிக்கும்" என கழுத்தை நொடித்தாள்

"அது நின்னாவும் இல்ல உக்காந்தாவும் இல்ல நீனா" என பற்களை கடித்தான் எரிச்சலில்

"அது ரெம்ப முக்கியம் இப்ப... நீங்க லீவ் போட முடியுமா முடியாதா?" என அவள் பிடிவாத குரலில் கேட்கவும்

"அட்ஜஸ்ட் பண்ண பண்ண ஓவரா டாமினேட் பண்றா, திமிரு" என மனதிற்குள் எரிச்சல்பட்டவன் "முடியாது" என ஒரே வார்த்தையில் எழுந்து சென்றான்

அதன் பின் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரவு உணவின் போது கூட மௌனமே ஆட்சி செய்தது

பின் அவன் இருப்பையே உணராதவள் போல் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு அறைக்குள் செல்ல, "நானும் உனக்கு சளைத்தவனல்ல" என்பது போல் அவன் முன்னறையில் லேப்டாப் சகிதம் இல்லாத வேலையில் மூழ்கினான்

நடுஇரவில் அவன் வரும் அரவம் கேட்டு தூங்குவது போல் பாவனையில் கண் மூடினாள். மெல்லிய படலம் போல் அவன் அவளை பார்ப்பதை உணர்ந்தும் கண் திறக்காமல் இருந்தாள்

மெல்ல அவளருகே குனிந்தவன் "ராட்சசி... பேசறதெல்லாம் பேசிட்டு கொழந்த மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு தூங்கரத பாரு" என மெல்ல முணுமுணுத்தபடி, அவளை எழுப்பி விடாவண்ணம் மெல்ல நெற்றியில் இதழ் ஒற்றினான்

"உறங்குவது போல் நடித்தேன்
  உன்ரகசிய நாடகத்தை ரசிக்க"
என இன்ஸ்டன்ட் ஹைக்கூ உதித்தது அவள் மனதில்

திறக்க துடித்த இமைகளை அடக்கி நாடகத்தை தொடர்ந்தாள், அப்படியே உறங்கியும் போனாள்

காலையில் கண் விழித்தவளுக்கு அவனின் முகதரிசனம் முன்னிரவை நினைவூட்ட "வெவ்வவெவே" என பழித்தபடி, செல்லமாய் அலுங்காமல் அவன் கேசத்தை கலைத்தாள்

அடுத்த நாள் இரவும் இதே நாடகம் தொடர்ந்தது. ஆனால் பகலில் ஜென்ம விரோதிகள் போல் முகத்தை திருப்பி கொண்டனர்

மூன்றாம் நாள் கண் விழித்ததும் இரு நாளின் வழக்கம் போல் தனிச்சையாய் அவன் முன்னுச்சி கேசத்தை கலைத்துவிட்டு விலகியவளின் கரம் பற்றினான் அவன்

"அய்யோ நாடகம் அம்பலமாகி விட்டதே" என வெட்கமும், கூடவே சிறு கோபமும் சேர "கைய விடுங்க, நான் இன்னும் கோபமாத்தான் இருக்கேன்" என கையை உதறினாள்

"நான் கூட ரெம்ப கோவமாத்தான் இருக்கேன்" என்றான் அவனும்

"எதுக்கு?" என முறைத்தாள்

"ம்... தூங்கற மாதிரி நடிச்சு ஏமாத்தினதுக்கு" என்றான் கேலியாய் சிரித்தபடி

"அதுவும் தெரிஞ்சு போச்சா? ச்சே" என அவள் மனதிற்குள் புலம்ப

"ஆமா, அதுவும் தெரிஞ்சு போச்சு" என்றான் அவள் மனதை படித்தது போல்

"எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு" என அவன் பிடியில் இருந்து ஓட விழைந்தவளை அருகே இழுத்தவன்

"இன்னிக்கி நீ வொர்க் ப்ரம் ஹோம்னு எனக்கு தெரியும்... அதான் நானும் வொர்க் ப்ரம் ஹோம் சொல்லிட்டு வந்துட்டேன்" என கண் சிமிட்டினான்

"ஐயோ கடவுளே... நேத்து சாயங்காலம் அந்த நீனா என்னை பாத்து 'என்ஜாய் வொர்கிங் ப்ரம் ஹோம்'னு சிரிச்சது இதுக்கு தானா, ஏன் இப்படி மானத்த வாங்கறீங்க?" என பொய்யாய் சலித்தாள்

"ஒரே ஆபீஸ்ல வொர்க் பண்றதுல கூட சில அட்வான்டேஜ் இருக்கு இல்லடி"

"எனக்கு 'டி' போட்டா கோபம் வரும்"

"அப்ப காபி போடட்டுமா?" என சிரிக்க, அதற்கு மேல் நடிக்க இயலாமல் தானும் சேர்ந்து சிரித்தாள்

"ஏய்... ஒரு நியூ இயர் ரெசல்யூசன் எடுக்கலாமா?" என்றவன் கேட்க

"என்ன? இனிமே அடிக்கடி வொர்க் ப்ரம் ஹோம் பண்றதுனா?" என்றவள் சிரிக்க

"எனக்கொன்னும் அப்ஜக்சன் இல்ல" என சீண்டியவன் "இன்னொன்னும் கூட" என்றான்

"என்ன?" என அவள் புரியாமல் பார்க்க

"இந்த 2013 வருசத்துல நானும் நீயும் சண்டையே போடாம இருக்கணும். டீல்?" என அவன் கை நீட்ட

"நோ டீல்" என அவன் கையை தட்டி விட்டாள்

"அடிப்பாவி... ஏன்?" என விழிக்க

"சண்டையே இல்லைனா என்ன லைப் அது, செம போர். மாசத்துக்கு நாலு சண்டை போடணும், ரெண்டு நாள் மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு யார் மொதல்ல பேசுவாங்கனு தவிக்கனும், ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் ரசிக்கணும். சண்டைய சாக்கா வெச்சு உங்ககிட்ட நாலு கிப்ட் தேத்தணும், இதெல்லாம் இல்லைனா என்ன சுவாரஷ்யம் இருக்கு லைப்ல" என அவள் அபிநயத்துடன் கூற, அதை கண்ணெடுக்காமல் ரசித்தவன்

"பொண்ணுங்க எல்லாம் பிளான் பண்ணிதான் பண்றீங்க... இது புரியாம பசங்க நாங்க பீலிங்க்ல பீஸ் பீஸா போறோம்... ஹ்ம்ம்" என பாவமாய் அவன் கூற, அதை பார்த்தவளுக்கு சிரிப்பு பீறிட சத்தமாய் வாய் விட்டு சிரித்தாள்

சிரிப்பு ஓய்ந்ததும் "ஹாப்பி நியூ இயர்... ரெண்டு நாள் அட்வான்சா சொல்றேன், ஏன்னா என்னோட விஷ் தான் உங்களுக்கு முதல் விஷ்ஷா இருக்கணும்" என்றாள் தன் உரிமையை பறைசாற்றுவது போல்

அதையும் ரசித்தவன் "ஐ லவ் யு" என்றான், அவளை விட்டு பார்வையை விலக்காமல்

"ஹாப்பி நியூ இயர் சொன்னா திருப்பி ஹாப்பி நியூ இயர் தான் சொல்லுவாங்க, ஐ லவ் யு சொல்ல மாட்டாங்க... இது கூட தெரியாதா?" என்றாள் வேண்டுமென்றே

"ஐ லவ் யு சொன்னா திருப்பி ஐ லவ் யு டூ சொல்லுவாங்க, சண்டை போட மாட்டாங்க... இது கூட தெரியாதா?" என்றான் அவனும் வேண்டுமென்றே

"இப்ப யாரு சண்டை போட்டா?" என அவள் முறைக்க, மீண்டும் அங்கு ஒரு  சண்டை (!) ஆரம்பமாகியது

:)))

Friday, November 16, 2012

உனக்கும் எனக்கும்... (சிறுகதை - வல்லமை தீபாவளி சிறப்பிதழில்)

 
 
வல்லமை தீபாவளி சிறப்பிதழில் வெளியான எனது சிறுகதை இது. நன்றி வல்லமை ஆசிரியர் குழுவிற்கு. வல்லமையில் இதை பார்க்க இங்கே சொடுக்கவும்
____________________________________
 
"ம் ...சொல்லு"
 
"என் பேர் கூட ஞாபகமில்லையா?"
 
"இதை கேக்கதான் இப்ப போன் பண்ணினயா?"
 
"போன் பண்ணினது தப்பு தான்... வெச்சுடறேன்" என்றவளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மனதை வருத்த
 
"சுமித்ரா..." என அவளை நிறுத்தினான்
 
தூக்கத்துல கூட சுமி மித்து மித்ரானு சொன்னதெல்லாம் மறந்தாச்சு, சுமித்ரானு நீட்டி மொழக்கணுமா என எரிச்சலில் குமைந்தாள்
 
"சொல்ல வந்தத சீக்கரம் சொல்லு. எனக்கு நெறைய வேலை இருக்கு"
 
"ஒரு நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியாத அளவுக்கு பிசியா?"
 
"இப்ப சண்டை போடத்தான் போன் பண்ணினயா? அதைதான் தினமும் வீட்ல செஞ்சுட்டு இருக்கமே" என்றான் எரிச்சலாய்
 
"என்கிட்டே பேசவே புடிக்கல, இல்லையா ராகவ்"
 
"நான் அப்படி சொல்லல"
 
"வார்த்தையா சொல்லணும்னு அவசியம் இல்ல"
 
"இப்ப எதுக்கு போன் பண்ணின...கெட் டு தி பாயிண்ட்" என்றான் பொறுமை இழந்தவனாய்
 
"எங்க ஆபீஸ்ல நாளைக்கி தீபாவளிக்கு ஏதோ பார்ட்டியாம்"
 
"ம்..."
 
"அதுல ஜோடி பொருத்தம் ப்ரோக்ராம் வெக்கராங்களாம்"
 
"அதை எதுக்கு என்கிட்டே சொல்ற" என்றான் எரிச்சலாய்
 
"நமக்கு கல்யாணம் ஆனதாச்சும் ஞாபகம் இருக்கா?" என்றாள் கோபமாய்
 
"நல்லாவே ஞாபகம் இருக்கு. அதோட, ரெண்டு மாசம் முன்னாடி டைவர்ஸ் அப்ளை பண்றது விசியமா லாயரை போய் பாத்தது கூட நல்லாவே ஞாபகம் இருக்கு"
 
"அது இன்னும் ஊருக்கு தெரியாதே"
 
"அதுக்காக...."
 
"நாமளும் அந்த ப்ரோக்ராம்ல..."
 
"உனக்கென்ன பைத்தியமா சுமித்ரா" என இடைமறித்தான்
 
"நீங்க தானே டைவர்ஸ் பைனல் ஆகற வரை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு..."
 
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்"
 
"எல்லா கபில்சும் கண்டிப்பா பார்டிசிபேட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க"
 
"இங்க பாரு..."
 
"எனக்கும் ஒண்ணும் நாம ஜோடியா கொஞ்சிட்டு நிக்கணும்னு ஆசையில்ல, வேற வழி இல்லாம தான், எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. ப்ளீஸ் ராகவ்...இந்த ஒரு வாட்டி எனக்காக ப்ளீஸ். "
 
ஒரு கணம் மௌனம் காத்தவன், அதற்கு மேல் மறுக்க மனமின்றி "ஒகே" என அழைப்பை துண்டித்தான்
________________________________
 
அலுவலக சகாக்கள் எல்லாரும் தங்கள் கணவன் அல்லது மனைவியுடன் அமர்ந்து கேள்வி பதில் ரிகர்சலில் மூழ்கி இருக்க, சுமித்ராவும் ராகவ்'ம் மட்டும் மௌனமாய் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தனர்
 
"ஹெலோ மிஸ்டர் ராகவ், எப்படி இருக்கீங்க?" என கை குலுக்கினார் சுமித்ராவின் மேனேஜர் சத்யன்
 
"பைன் சார், நீங்க எப்படி இருக்கீங்க?" என சம்பிரதாயமாய் வினவினான் ராகவ்
 
"பைன் பைன்... என்ன சுமித்ரா ஆல் ப்ரிபேர்ட் போல இருக்கே. டென்ஷன் இல்லாம அமைதியா இருக்கீங்க ரெண்டு பேரும்" என கேலியாய் வினவ, ஒன்றும் பேசாமல் சிரித்து மழுப்பினாள் சுமித்ரா
 
"குட் ஈவினிங் எவ்ரிபடி. வெல்கம் டு அவர் திவாளி செலப்ரேசன்" என ரிசப்சனிஸ்ட் ராதிகா மேடையேறி வரவேற்பை துவங்க
 
"ஏன் ராதிகா உனக்கு தமிழ் தெரியாதா?" என கூட்டத்தில் சக ஊழியர் ஒருவர் கேலி செய்ய
 
"ஒகே கார்த்திக் டமில்லேயே கண்டினியு பண்றேன்"
 
"அம்மா தாயே இப்படி தமிழை கொல்றதுக்கு பதிலா நீ ஆங்கிலத்துலையே சொல்லு" என அதற்கும் கேலி தொடர்ந்தது
 
ஒருவழியாய் ஆரம்ப சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி தொடங்கியது. முதல் இரண்டு சுற்றில் ஜெய்த்து இரண்டு தம்பதிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் சுமித்ரா ராகவ் தம்பதியும் இருந்தனர்
 
சக ஊழியர்களின் கேலியும் ஆர்ப்பட்டமும் சுமித்ராவை நெளியச் செய்தது. இன்னும் சில மாதங்களில் விவாகரத்து செய்தியை சொல்லும் போது என்ன நினைப்பார்கள் என யோசித்தாள்
 
அவளே ஆச்சிர்யப்படும் விதமாய் இருவரும் ஒரே போன்ற பதிலை கூறி இருந்தனர். இத்தனை புரிதல் இருந்தும் ஏன் இன்று விவாகரத்து வரை சென்றது என வருந்தினாள். ஒருவேளை அதீத புரிதல் தான் தங்களுக்குள்ளான பிரச்சனைக்கு காரணமோ என தோன்றியது சுமித்ராவுக்கு
 
திருமணமான இந்த இரண்டு வருடத்தில் சந்தோசமாய் இருந்த நாட்களை விட இருவரும் சண்டை போட்ட நாட்கள் தானே அதிகம் என வேதனை தோன்றியது. தினம் தினம் இப்படி வேண்டாமல் சேர்ந்து வாழ்வதை விட பிரிவதே மேல் என முதல் கூறியது சுமித்ரா தான்
 
அவள் சொன்னதற்கு ராகவ் மறுப்பேதும் கூறவில்லை. அவள் சொல்லவே காத்திருந்தது போல் மறுநாளே வக்கீலை பார்க்க அழைத்து சென்றான். அதன் பின் ஒரே வீட்டில் இரு துருவங்களாய் இருந்தனர் இருவரும்
 
அவன் கேட்டு கொண்ட ஒரே விசியம், பெற்றோர் உட்பட யாருக்கும் எல்லாம் முடியும் வரை இதை பற்றி சொல்ல வேண்டாம் என்பது மட்டும் தான். இப்போதிருந்தே எல்லோருக்கும் விளக்கம் சொல்ல விருப்பமில்லை என அதற்கு காரணமும் சொன்னான்
 
"மிஸ்டர் அண்ட் மிசஸ் கார்த்திக் பைனல் ரௌன்ட்ல ரெண்டு கேள்வில ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பத்துக்கு அஞ்சு மார்க் வாங்கி இருக்காங்க. கன்க்ராட்ஸ் உங்களுக்கு" என்ற நிகழ்ச்சி நடத்தும் பெண்ணின் வாணியின் அறிவிப்பில் தன் நினைவில் இருந்து மீண்டாள் சுமித்ரா
 
"இனி, மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். ராகவ் சார், சுமித்ராகிட்ட ரெண்டு கேள்விக்கு பதில் வாங்கி வெச்சு இருக்கோம். ரெண்டு கேள்விக்கும் சுமித்ரா சொன்ன அதே பதில நீங்களும் சொன்னா கார்த்திக் ஜோடிய பீட் பண்ணிடலாம். அதோட.... இன்னைக்கு சூப்பர் ஜோடி பட்டமும் உங்களுக்கு தான். வாங்கிடுவீங்களா?" என கேள்வியாய் நிறுத்த, ராகவ் மௌனமாய் சுமித்ராவை பார்த்தான்
 
அவனின் குற்றம் சாட்டும் பார்வையை சந்தித்தவளுக்கு கண்ணில் நீர் கோர்த்தது. அதை மறைக்க குனிந்து கொண்டாள்
 
அதை வேறு விதமாய் புரிந்து கொண்ட வாணி "ஆஹா...இத்தன கூட்டத்துல பத்தடி தள்ளி உக்காந்துட்டு இருக்கும் போதே கண்ணுலேயே ரொமேன்ஸ் நடக்குதா...ஹே" என கேலி செய்ய, மற்றவர்களும் ஆரவாரம் செய்தனர்
 
உண்மை காரணம் புரிந்த ராகவ் மட்டும் மௌன புன்னகையில் வேதனையை மறைத்தான்
 
"ஒகே மிஸ்டர் ராகவ், உங்களுக்கான முதல் கேள்வி. சுமித்ராவுக்கு ரெம்ப பிடிச்ச அப்புறம் பிடிக்காத ஒருத்தர் பேர் சொல்லுங்க. உங்களுக்கு டென் செகண்ட்ஸ் டைம்"
 
ஒரு கணம் கூட யோசிக்காமல் "ரெண்டுமே நான் தான்" என்றான்
 
"ஆர் யு ஸூர் மிஸ்டர் ராகவ். அதெப்படி உங்க மனைவிக்கு பிடிக்காத லிஸ்ட்ல நீங்க இருக்க முடியும். சுமித்ரா இந்த பதில் தான் சொல்லி இருப்பாங்கனு நினைக்கறீங்களா?"
 
"விருப்பு வெறுப்பு ரெண்டுமே நமக்கு புடிச்சவங்க மேல தானே காட்ட முடியும். சோ, ரெண்டுமே அவளுக்கு நான் தான். இதான் அவளோட பதிலா இருந்துருக்கும்" என்றான் சர்வநிச்சியமாய். அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இன்றி குனிந்தே இருந்தாள் சுமித்ரா
 
"ஆடியன்ஸ்... இந்த ஏன்சர் சரியா தப்பானு ஒரு பிரேக் முடிஞ்சு பாக்கலாமா?" என வேண்டுமென்றே வாணி சீண்ட
 
"ஏய்..." என மற்றவர்கள் மிரட்ட "கரெக்ட் ஏன்சர்" என அறிவித்தாள் வாணி. கூட்டத்தில் கை தட்டல் எழுந்தது
 
"ஒகே பைனல் கொஸ்டின். சூப்பர் ஜோடி நீங்களா இல்ல கார்த்திக் ஜோடியானு தீர்மானிக்க போற கேள்வி. கேக்கலாமா?" என வாணி நிறுத்த
 
"இந்த கொசு தொல்ல தாங்க முடியல சாமி. கேள்வியை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?" என சக ஊழியர் ஒருவர் பொங்கி எழ
 
"கூல் மிஸ்டர் மூர்த்தி. இதோ நானே கேட்டுடறேன். மிஸ்டர் ராகவ், சும்மா ஜாலிக்கு தான், தப்பா எடுத்துக்க வேண்டாம். சுமித்ராகிட்ட தீவாளிக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேனு நீங்க சொல்றீங்கனு வெச்சுப்போம், அதுக்கு அவங்க மௌன ராகம் ரேவதி மாதிரி, எனக்கு விவாகரத்து வேணும்னு கேட்டா என்ன செய்வீங்க? டென் செகண்ட்ஸ் கவுன்ட் டௌன் ஸ்டார்ட்ஸ் நொவ்"
 
ஒரு கணம் மௌனமாய் சுமித்ராவை பார்த்தவன் "வாங்கி தருவேன். அவ கேட்ட விவாகரத்த வாங்கி தருவேன்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்
 
இந்த பதிலை எதிர்பாராத அதிர்ச்சி கூட்டத்தில் இருந்தவர்கள் முகத்தில் தெரிந்தது. சுமித்ரா "உன் புத்தி தெரிந்தது தானே" என்பது போல் கோபமாய் கணவனை பார்த்தாள். நிகழ்ச்சியை நடத்திய வாணி கூட ஒரு கணம் பேச மறந்து விழித்தாள்
 
"ராகவ் சார், சுமித்ரா என்ன பதில் சொல்லி இருக்காங்கனு எனக்கும் இன்னும் தெரியாது. இந்த கவர்ல தான் அந்த பதில் இருக்கு. ஆனா, என்னால இதை கேக்காம இருக்க முடியல. உங்க பதில் சினிமாத்தனமா இருக்குனு உங்களுக்கே தோணலையா?" என்றாள் வாணி
 
அவன் என்ன விளக்கம் சொல்ல போகிறான் என்பதை கேட்க அங்கு நிசப்தம் நிலவியது
 
"சினிமாத்தனமா இருக்கா இல்லையானு எனக்கு தெரியாதுங்க. என்னோட இருக்க புடிக்காம தான என் மனைவி விவாகரத்து கேக்கறா. நான் அவள அவ்ளோ கஷ்டபடுத்தி இருக்கேன்னு தானே அர்த்தம். நாம நேசிக்கறவங்க கஷ்டப்படரத பாக்கறது ரெம்ப வேதனை, நாமளே அதுக்கு காரணமா இருக்கறது இன்னும் கொடுமைங்க. அதான் விருப்பமில்லாத வாழ்க்கைல இருந்து அவள விடுவிக்க தயார்னு சொன்னேன், அது எனக்கு உயிர் போற வேதனைனே தெரிஞ்சும்" என ராகவ் கூறி முடித்ததும், கார்த்திக் ஜோடி உட்பட எல்லாரும் எழுந்து நின்று கை தட்டினர்
 
"வாவ்... உங்க சுமித்ராவும் நீங்க விவாகரத்து குடுக்க சம்மதிப்பீங்கனு தான் பதில சொல்லி இருக்காங்க. இன்னைக்கி சூப்பர் ஜோடி பட்டம் வாங்கி இருக்கறது மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். கிவ் தெம் எ பிக் ரவுண்டு ஆப் அப்ளாஸ்" என வாணி கூறவும் "ஹே..." என கூக்குரலுடன் மகிழ்ந்தனர் அனைவரும்
 
ஆனால் சம்மந்தப்பட்ட இருவர் மட்டும் மனதிற்குள் அழுதனர். ராகவ் சொன்ன பதிலில் உடைந்து போய் இருந்தாள் சுமித்ரா. அவன் விவாகரத்துக்கு சரி என்றதும் கோபம் கொண்டேனே, அவன் மனம் எப்படி வேதனைபட்டிருக்கும் என உணர்ந்ததும் அவன் கண்களை சந்திக்கும் தைரியம் இன்றி வாழ்த்து சொன்ன தோழிகளை எதிர்கொள்ளும் சாக்கில் அவனை தவிர்த்தாள் சுமித்ரா
 
போட்டியில் ஜெய்த்து இருந்தாலும் வாழ்வில் தோற்றுவிட்டோமே என வேதனையில் இருந்தான் ராகவ்
 
"ஒகே ஒகே... சைலன்ஸ்" என எல்லாரையும் அமைதிபடுத்திய வாணி
 
"எல்லாருக்கும் ஹேப்பி தீபாவளி. ராகவ் அண்ட் சுமித்ராவுக்கு சூப்பர் தீபாவளி, ஏன்னா நீங்க இந்த போட்டில ஜெய்ச்சதுக்கு உங்களுக்கு கொடைக்கானல் ரிசார்ட்ல நாலு நாள் தங்கரதுக்கான கிப்ட் வவுச்சர். ரெண்டு பெரும் ஜோடியா வந்து நம்ம மேனேஜர் சார்கிட்ட உங்க பரிசை வாங்கிக்கோங்க"
 
இருவரும் பரிசை பெற்றுகொண்டு மேடையை விட்டு இறங்க செல்ல "வெயிட் வெயிட்...அதுக்குள்ள ஓடினா எப்படி?" என பிடித்து நிறுத்தினாள் வாணி
 
"ஒகே மிஸ்டர் ராகவ். இப்ப உங்க சுமித்ராகிட்ட என்ன என்னமோ சொல்லணும்னு உங்க மனசுல ஓடிட்டு இருக்கும். அது எல்லாத்தையும் சொல்லணும்னு நாங்க எதிர்பாக்க முடியாது. ஆனா ஒரு ரெண்டு டயலாக் ஆச்சும் சொன்னாதான் நீங்க இங்கிருந்து போக முடியும். நான் சொல்றது சரி தானே?" என மற்றவர்களை பார்த்து வாணி கேட்க "ஆமா ஆமா" என பதில் வந்தது
 
காதலுடன் மனைவியை கண்ணோடு கண் பார்த்தவன் "ஐ லவ் யு மித்து" என்றான் ராகவ், வேறு எந்த வார்த்தையும் இப்போதைய தன் மனநிலையை உணர்த்தி விடாது என்பதை உணர்ந்தவன் போல்
 
அதை கேட்டதும் இத்தனை பேர் மத்தியில் இருக்கிறோம் என்பதை கூட மறந்தவளாய் கண்ணீருக்கு அணை போட இயலாமல் திணறினாள். வேகமாய் அவள் அருகே சென்ற ராகவ் அவளை தன் அணைப்பில் சேர்த்து கொண்டான். "அயம் சாரி அயம் சாரி" என அரற்றினாள் சுமித்ரா
 
"தப்பு என் மேலயும் தான் மித்து. வேலை வேலைனு உன்கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்ணாம அதான் நமக்குள்ள பெரிய கேப்பை உருவாக்கிடுச்சு... சாரி'ம்மா" என்றவனின் அணைப்பு மேலும் இறுகியது
 
அவனின் இறுகிய அணைப்பில் அவள் அழுகை மேலும் கூடியது. "ஹ்ம்ம்... அழுதா இந்த மூஞ்சிய பாக்க சகிக்கலயே. அப்ப மறுபடி டைவர்ஸ் பத்தி யோசிக்க வேண்டியது தான்" என்றவன் சீண்ட, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அழுகையை நிறுத்தி அவனை முறைத்தாள் சுமித்ரா
 
"ம்... இந்த மூஞ்சி ஒகே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என மேலும் சீண்ட, மீண்டும் அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் சிரித்தாள்
 
நல்ல வேளையாய் மற்றவர்களின் கேலியான ரகளையில் யாருக்கும் இவர்களின் பேச்சு கேட்கவில்லை. கேலி பேச்சு தொடர அப்போது தான் சுற்றுபுறத்தை உணர்ந்தவர்களாய் வேகமாய் மேடையை விட்டு இறங்கினர் இருவரும்
 
"ஹேப்பி தீபாவளி" என்ற குரல் மட்டுமே எங்கும் ஒலித்தது
 
(முற்றும்) 
 

Wednesday, November 07, 2012

டிட் யு மிஸ் மீ? (தங்கமணி ரங்கமணி சீரிஸ்..:))

தங்கமணி அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு அன்னைக்கி தான் வந்திருக்காங்க. கணவனும் மனைவியும் அரட்டை அடிச்சுட்டு இருக்காங்க
 
ரகளை இப்படி தான் ஆரம்பிக்குது....

தங்கமணி : டிட் யு மிஸ் மீ?

ரங்கமணி : நோ ஐ மிசஸ்ட் யு (என அதிபுத்திசாலி லுக் விட்டு சிரிக்கிறார்)

தங்கமணி : (முறைக்கிறாள்)

ரங்கமணி : ஹா ஹா... நான் சொன்னது உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன்... இதெல்லாம் அதையும் தாண்டி புனிதமானது உனக்கு புரியறது கொஞ்சம் கஷ்டம் தான் (என சிரிக்கிறார்)

தங்கமணி : பித்துக்குளிதனமா எதுனா ஒளர வேண்டியது... அதுக்கு இப்படி ஒரு மொக்க விளக்கம் வேற... கஷ்டம்டா சாமி... உங்கூரு ஜோசியர் குத்தாலத்துல ஏதோ பரிகாரம் பண்ணனும்னு சொன்னாருனு உங்கம்மா சொன்னது சரி தான் போல இருக்கு

ரங்கமணி : என்ன கிண்டலா?

தங்கமணி : இல்ல சுண்டல்

ரங்கமணி : ஹ்ம்ம்... புரியலைனா புரியலைனு ஒத்துக்கோ, சும்மா சமாளிக்காத

தங்கமணி : சரி சாமி... ஒத்துக்கறேன், உங்க மேலான விளக்கத்தை இந்த பீமேல்'க்கு புரியற மாதிரி கொஞ்சம் சொல்றீங்களா?

ரங்கமணி :ஹா ஹா... நீ கூட சமயத்துல நல்லா காமடி பண்றே தங்கம்... சரி விளக்கம் என்னனா... நீ "டிட் யு மிஸ் மீ"னு கேட்டயா, அதுக்கு நான் என்ன சொன்னேன்...

தங்கமணி : ஐயோ... மறுபடி மொதல்லேந்தா... (என தலையில் கை வைக்க)

ரங்கமணி : சரி நானே சொல்றேன்... நான் "நோ ஐ மிசஸ்ட் யு"னு சொன்னேன்... அதாவது உன்னை கல்யாணம் பண்ணிட்டு மிஸ்சா இருந்த உன்னை மிசஸ் ஆக்கினேன்னு சொன்னேன்... இப்ப புரியுதா... (என காலரை தூக்கிவிட்டு கொண்டு கேட்க)

தங்கமணி : நல்லா புரியுது...

ரங்கமணி : என்ன புரியுது?

தங்கமணி : குத்தாலம் பரிகாரத்தை நாள் கடத்தாம செய்யணும்னு புரியுது

ரங்கமணி : பொறாம பொறாம... ஹையோ ஹயோ... (என சிரிக்க)

தங்கமணி : அதெல்லாம் இருக்கட்டும் நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லல

ரங்கமணி : என்ன கேட்ட?

தங்கமணி : ம்... சொரக்காய்க்கு உப்பு பத்தலனு கேட்டேன் (என்றாள் கடுப்பாய்)

ரங்கமணி : ஜோக்கா? ஹி ஹி... சிரிச்சுட்டேன் போதுமா... (என பல்லை காட்ட)

தங்கமணி : இங்க பாருங்க எனக்கு கெட்ட கோவம் வந்துரும்

ரங்கமணி : கோவத்துல கூட நல்லதா வராதா உனக்கு... ஹா ஹா

தங்கமணி : (முறைக்கிறாள்)

ரங்கமணி : சரி சரி சொல்றேன்... உன்னை மிஸ் பண்ணாம இருப்பனா தங்கம்

தங்கமணி : நிஜமா? (என்றாள் சந்தேகமாய் பார்த்தபடி)

ரங்கமணி : செத்து போன எங்க அப்பத்தா மேல சத்தியமா

தங்கமணி : எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?

ரங்கமணி : எவ்ளோனா...அதெப்படி சொல்றது (என விழிக்கிறார்)

தங்கமணி : அதேன் சொல்ல முடியாது... அப்ப நீங்க என்னை மிஸ் பண்ணல

ரங்கமணி : அது.... அப்படி இல்ல தங்கம்... நெறைய மிஸ் பண்ணினேன்... அதை எப்படி சொல்றது?

தங்கமணி : (இடைமறித்து) இந்த மழுப்பற வேலை எல்லாம் வேண்டாம்... இன்னிக்கி சாயங்காலத்துக்குள்ள எவ்ளோ மிஸ் பண்ணீங்கனு சொல்லணும்

ரங்கமணி : என்ன தங்கம் இது? எங்க மேனேஜர் டெட்லைன் வெக்கற மாதிரி சொல்ற

தங்கமணி : அந்த டெட் லைன் மிஸ் பண்ணினா வேலை தான் போகும்... இந்த டெட்லைனா மிஸ் பண்ணினா லைப்லைனே போய்டும் சொல்லிட்டேன் (என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்)

ரங்கமணி : அடிப்பாவி... இப்படி சொல்லிட்டு போயிட்டாளே... என்ன பண்றது இப்போ? ப்ராஜெக்ட்ல சந்தேகம்னா டீம் மீட்டிங் போடலாம்... இந்த விசயத்துக்கு மீட்டிங் போட்டா என் மானம் டைடானிக்ல டிக்கெட் வாங்கிருமே... என்ன பண்ணலாம்... (என யோசிக்க...) ஐடியா... (என குதிக்கிறார்) கூகிள் இருக்க பயமேன்

ரங்கமணி : ( கூகிளில் "How" என டைப் செய்ததுமே "How to Tie a tie" என சஜசன் வர... ) இதொண்ணு என் வீட்டுக்காரி மாதிரியே குறுக்க குறுக்க பேசிகிட்டு...

தங்கமணி : (உள்ள இருந்து) என்னமோ சொன்ன மாதிரி கேட்டுச்சு?

ரங்கமணி : உன்னை ஒண்ணும் சொல்லல தங்கம்... இந்த சனியம் புடிச்ச கம்பியூட்டர் தான் (என சமாளிக்கிறார்)

தங்கமணி : (சைலண்ட்)

ரங்கமணி : ஹ்ம்ம்... (என பெருமூச்சு விட்டபடி... "How to measure how much..." என டைப் செய்து முடிக்கும் முன் "how to measure how much paint i need" என ஒரு நூறு லிங்குகள் வர) அடச்சே... ஆணியே புடுங்க வேண்டாம் போ... (என சலித்து கொண்டு கம்பியூட்டரை ஆப் செய்கிறார்)

சற்று நேரம் கழித்து...

தங்கமணி : ரெடியா? இப்ப சொல்லுங்க... என்னை எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?

ரங்கமணி : "ஐயையோ...அதுக்குள்ள டெட்லைன் வந்துடுச்சா" என தனக்குள் புலம்பியவர் "ம்... அது... சரி என்னை கேக்கறியே? நீ சொல்லு பாப்போம்... என்னை நீ எவ்ளோ மிஸ் பண்ணின?" என மடக்கினார். அல்லது மடக்கி விட்டதாக புளங்காகிதம் அடைந்தார்

ஆனால் அதெல்லாம் வெறும் காகிதமாக ஆக போவதை பாவம் அவர் அறியவில்லை

தங்கமணி : நானா? இங்கிருந்து கிளம்பின நிமிசத்துல இருந்து எப்படா திரும்பி வருவோம்னு நெனச்சேன்...அவ்ளோ மிஸ் பண்ணினேன்

ரங்கமணி : "ஐயையோ... எனக்கு இது தோணாம போச்சே...ச்சே...எவ்ளோ ஈஸியா சொல்லிட்டாளே... இந்த மாதிரி வேற எதுவும் தோண மாட்டேங்குதே" என புலம்பியவர் "பேசாம நானும் அப்படித்தான்னு சொல்லிடுவோம்" என தீர்மானித்து வாயை திறக்கும் முன்...

தங்கமணி : நானும் அப்படித்தான்னு சொல்றத தவிர வேற எது வேணா சொல்லுங்க... உங்களுக்கு இன்னும் இருபத்திநாலு மணி நேரம் டைம் (என எழுந்து செல்கிறாள்)

ரங்கமணி : ........................................

என்ன செஞ்சாரா? மேல உள்ள படத்த பாருங்க...அப்படி தான் முழிச்சுட்டு இருக்காராம். ஹையோ ஹையோ... :))

தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை ரசிக்க இங்கே கிளிக்கவும்

:)))

Thursday, November 01, 2012

மௌன ராகம்... (சிறுகதை - வல்லமை இதழில்)

 

வல்லமை இதழில் எனது இந்த சிறுகதை பிரசுரிக்கபட்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு

1962 

“மைதிலி, பூ இப்படி தழைய தழைய வெச்சா உங்க அண்ணாவுக்கு பிடிக்காதும்மா, மடிச்சு வெய்யி”
 
“சும்மா அண்ணா அண்ணானு பூச்சாண்டி காட்டாதே மன்னி… நேக்கு தெரியும் எப்படி வெக்கணும்னு. நான் அழகா இருக்கேனு நோக்கு பொறாமை..ஹம்ம்” என கழுத்தை ஒடித்து சென்றாள் மைதிலி
 
அதே நேரம் அறையில் இருந்து வெளியே வந்த அவளின் அண்ணன் கிருஷ்ணன் “என்ன மைதிலி ரெடியா? உன்ன காலேஜ்ல விட்டுட்டு நான் ஆபீஸ் போணும்”
 
“இதோ ரெடிண்ணா” என்றபடி கைபையை எடுத்து கொண்டு வந்தாள்
 
ஒரு கணம் அவளை உற்று நோக்கியவன் “ஏய் மைதிலி நில்லு, என்னடி இது வேஷம் கட்றவ மாதிரி ஜடை தாண்டி பூ தொங்கறது. என்ன பழக்கம் இது?” என கோபமாய் கேட்க
 
அண்ணனின் கோபத்தை அறிந்த மைதிலி “இல்லைணா…நான் அப்பவே சொன்னேன்…மன்னி தான்…” எனவும், மன்னி என்றழைக்கபட்ட ராதா செய்வதறியாது திகைத்தாள்
 
ராதா உண்மையை கூற முயல, கை உயர்த்தி பேசவேண்டாம் என்பது போல் முறைத்த கிருஷ்ணன் “கூத்தாடி குடும்பம் தான உன் மன்னியோடது, வேற எப்படி இருக்கும் புத்தி. நீ சரியா போட்டுண்டு வா” என தங்கையை ஒட்டி பேசினான், புது மனைவி என்ற கரிசனம் கூட இல்லாமல்
 
தன் பாட்டனார் மேடை நாடக நடிகராய் இருந்தவர் என்பதை குத்தி காட்டி தன் கணவன் பேசியதும், நடிகர் என்றால் கேவலமா என கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்தினாள் ராதா
 
சீர் செனத்தி எதுவும் இன்றி உறவு என்பதால் மட்டும் இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்த இந்த சில மாதங்களில் எல்லோரின் உதாசீனமும் ராதாவுக்கு பழகித்தான் போனது
 
ஆனாலும் இது போன்ற உண்மை சிறிதுமற்ற குற்றசாட்டுகளின் போது மனம் மிகவும் வேதனையுற்றது
 
கிருஷ்ணனின் வசதியான மாமன் மகள் ரஞ்சனி இந்த வீட்டுக்கு மருமகளாய் வர இருந்ததை தடுத்த அவன் தந்தை, தூரத்து உறவான ராதாவை குடும்பத்துக்கு ஏற்ற மருமகள் என கொண்டு வந்தது எல்லோர் மனத்திலும் ராதாவின் மேல் நிரந்தர கோபத்தை ஏற்படுத்தி இருந்தது
 
அதிலும் ரஞ்சனியிடம் சிறு வயது முதல் உற்ற தோழி போல் இருந்த மைதிலி சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் அண்ணி ராதாவை பழி வாங்குவாள்
 
“கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கத்தலாம்” அதுவே இல்லை எனும் போது வேறு என்ன என ராதாவும் அப்படியே வாழப் பழகி விட்டாள்
 
மற்றொரு நாள்…
“சொன்னா கேளு மைதிலி, இவ்ளோ எண்ணை விடாதே… உங்கண்ணாக்கு பிடிக்காது. இல்லேனா உன் சிநேகிதி சொல்லி குடுத்ததை உனக்கு அளவா செய்துக்கோ. உங்க அண்ணாக்கு நான் தனியா சமைச்சுடறேன்” என ராதா கூற
 
“இங்க பாருங்க மன்னி… இதொண்ணும் உங்காத்துல இருந்து கொண்டு வந்ததில்ல, எங்க அண்ணா சம்பாதிக்கற காசுல வாங்கினது. என் இஷ்டத்துக்கு செய்வேன். இன்னைக்கி நான் செய்யறது தான் அண்ணா சாப்பிடணும், எனக்கு தெரியாம நீங்க சமைச்சா அண்ணாகிட்ட இல்லாதையும் பொல்லாததையும் சொல்லி சிக்க வெப்பேன்” என்றாள் மிரட்டலாய்
 
செய்வதறியாமல் மௌனமானாள் ராதா. தாயில்லா பெண் என தன் மாமனாரும் கணவனும் சேர்ந்து மைதிலிக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறார்களே, போகிற இடத்தில என்ன சொல்வார்களோ என வருந்தினாள்
 
அன்று மதியம்…
“என்னடி கருமம் இது… வாய்ல வெக்க வெளங்கல… ஒரே காரம் புளிப்பு த்தூ. இப்படி எண்ணைய கொட்டினா சீக்கரம் பரலோகம் போக வேண்டியது தான். எல்லாத்தையும் நீயே கொட்டிக்கோ” என எழுந்த கணவனை
 
"இல்லங்க… அது … ” என ராதா விளக்கம் சொல்ல வர
 
அதற்குள் மைதிலி “நான் அப்பவே சொன்னேண்ணா… அதுக்கு மன்னி என் ஆத்துகாரர் சம்பாதிக்கறார் நான் கொட்றேன் எண்ணைய நீ யார் கேக்கனு சொல்றா” என வழக்கம் போல் பழியை ராதாவின் போல் போட்டாள்
 
“காசு பணத்த சம்பாதிச்சா தானே அதோட அருமை தெரியும், மூக்கு பிடிக்க மூணு வேளையும் சாப்டுட்டு தூங்கற ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது” என தன் மனைவி மீதே குற்றம் சாட்டினான் கிருஷ்ணன்
 
தான் என்ன சொன்னாலும் தன் கணவன் நம்பபோவதில்லை என உணர்ந்ததினால் எப்போதும் போல் மௌனமானாள் ராதா
__________________________________

1972 

“மைதிலி இந்த பைல பழம், பூ, பலகாரம் எல்லாம் வெச்சுருக்கேன், துணிக கூட சேக்காம தனியா வெச்சுக்கோ”
 
“எதுக்கு மன்னி இப்படி அடுக்கறேள்? எங்க மாமி சும்மாவே ‘பொன்ன வெக்கற எடத்துல பூ’ங்கறது உங்காத்து மந்திரமானு கேலி பேசறா” என நொடித்தவள், பழங்கள், பூ, இனிப்பு இருந்த பையை எடுத்து வெளியே வைத்தாள்
 
“மைதிலி கிளம்பிட்டயா” என கிருஷ்ணன் வர “போலாம்’ண்ணா” என்றாள்
 
“என்னமா இது வெறும் துணிப்பை தான் இருக்கு போல, தோட்டத்துல இருந்து பழம் எல்லாம் கொண்டு வர சொன்னனே, என்ன ஆச்சு ராதா?” என வழக்கம் போல் மனைவியை முறைக்க
 
ராதா ஏதோ சொல்ல முற்படுமுன் “நான் கேட்டே’ண்ணா, மன்னி அவா அம்மா ஆத்துக்கு எடுத்து வெச்சுட்டாளாம்” என கூசாமல் பழி சுமத்தினாள் மைதிலி. எரித்து விடுவதை போல் மனைவியை பார்த்தான் கிருஷ்ணன்
 
சில மாதங்களுக்கு பின்…
“மைதிலி, நீ ஏம்மா இதெல்லாம் செய்யற. கல்யாணம் ஆகி ரெம்ப நாள் கழிச்சு இப்ப தான் உண்டாகி இருக்க, ஓய்வா இரு. உனக்கு மாங்காதானே வேணும், நான் நறுக்கி தரேன் தள்ளு” என ராதா உண்மையான அக்கறையுடன் கூற
 
“ரெம்ப அக்கறை இருக்கறா மாதிரி வேஷம் போடாதேள் மன்னி. நீங்க பத்தாம் மாசமே பெத்துகிட்டதை மறைமுகமா குத்தி காட்றேளா? வருசத்துக்கு ஒண்ணா நாலு பெத்துகிட்டத தவிர என்ன சாதிச்சு இருக்கீங்க… ஹ்ம்ம்” என விஷமாய் வார்த்தைகளை கக்கினாள்
 
“ஏன் மைதிலி இப்படி பேசற. உன் நல்லதுக்கு தானே…”
 
“ஆஹா… சினிமால நடிக்கரவா தோத்து போய்டணும் உங்கள்ட்ட…. என் ஆத்துக்காரர் என் மேல உசுரா இருக்கார்னு உங்க பொறாமயால தான் நேக்கு கரு தங்காம இருக்கு. இன்னும் உங்கள வேலை வேற வாங்கினா சபிச்சுடமாட்டீங்க… ஹ்ம்ம்” என சலித்து கொண்டவளை, ஒரு கணம் மௌனமாய் பார்த்த ராதா, அந்த இடத்தை விட்டு அகன்றாள்
 
சற்று நேரத்தில் “ராதா… ஏய் ராதா… என்ன பண்ணிட்ருக்க” என்ற கணவனின் கத்ததில் நடந்ததை யூகித்தவளாய் பெருமூச்சுடன் முன்னறைக்கு வந்தாள் ராதா
 
மௌனமாய் வந்து நின்றவளை முறைத்த கிருஷ்ணன் “ஏண்டி, உன்னால இந்த மாங்காய நறுக்கி தர முடியாதா? பாரு மைதிலி விரல வெட்டிண்டு இருக்கா” என கோபத்தில் கத்தினான்
 
மைதிலி வழக்கம் போல் “நான் கேட்டேண்ணா… மன்னி நேக்கு நெறைய வேலை இருக்குனுட்டா” என வருந்துவது போல் பாவனை செய்தாள்
 
“என்னடி முழிச்சுண்டு நிக்கற, வாய்ல என்ன கொலுகட்டயா பதில் சொல்லு” என கிருஷ்ணன் கேட்க, தான் பதில் சொல்வதால் எதுவும் மாறபோவதில்லை என புரிந்தவளாய் உணர்ச்சியற்ற முகத்துடன் நின்றாள் ராதா
 
“அப்பா, அத்தை பொய் சொல்றாப்பா. அம்மா நறுக்கி தரேன்னு தான் சொன்னா” என ராதாவின் கடைக்குட்டி வைஷ்ணவி சொல்ல
 
“கேட்டியாண்ணா, உன் பொண்ணு கூட அவ அம்மாவுக்கு சாதகமாத்தான் பொய் பேசறா… இதுவே நம்ப அம்மா உயிரோட இருந்துருந்தா… ” என இல்லாத கண்ணீரை மறைக்க கண்ணை கசக்கினாள் மைதிலி
 
கிருஷ்ணனின் கோபத்தை தூண்ட அது போதுமாய் இருந்தது “வாய மூடு கழுத… மொளச்சு மூணு இல விடல அதுக்குள்ள பொய் சொல்றியா” என மகளை அடித்து துவைத்தான். அதை தடுக்க சென்ற ராதாவின் மேலும் சில அடிகள் விழுந்தன
_________________________________

2012

காலில் முக்காலி இடித்து கொண்டதில் நகம் பெயர்ந்து சுரீல் என வலி கிளம்ப “ஸ்ஸ்…” என முனகியவர் “யார் இந்த முக்காலிய இங்க போட்டு தொலைச்சது” என்றார் கிருஷ்ணன் எரிச்சலுடன்
 
அதே சமயம் வந்த மைதிலி “நான் அப்பவே சொன்னேன்’ண்ணா, மன்னி தான்….” என தொடங்கியவள், தன் அண்ணனின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்து, தான் செய்த தவறு புலப்பட, என்ன செய்வதென தெரியாமல் நிறுத்தினாள்
 
ரேழியில் இருந்து வந்த கைதட்டல் ஒலி கேட்டு மைதிலியும் கிருஷ்ணனும் திரும்பி பார்த்தனர். அங்கு ராதாவின் இளைய மகள் வைஷ்ணவி நின்றிருந்தாள்
 
“சபாஷ் அத்தை… நீ இப்படி வாயடைச்சு போய் நிக்கறது பாக்க கண் கொள்ளா காட்சியா இருக்கு” என்றவள் தன் தந்தை புறம் திரும்பி “ஏம்ப்பா நீங்க கூட வாயடைச்சு போய் நிக்கறேள். உங்க அருமை தங்கையோட பேச்சை கேட்டுண்டு, தொண்ட கிழிய அம்மாவையும் எங்களையும் வெரட்டுவேளே, இப்ப என்ன ஆச்சு… பேசுங்கப்பா பேசுங்கப்பா” என கோபமாய் தன் தந்தையை பற்றி உலுக்கினாள் வைஷ்ணவி
 
தங்கை மேல் உள்ள பாசத்தில் தன்னை நம்பி வந்த ஜீவனை வதைத்ததை முதல் முறையாய் உணர்ந்தான் கிருஷ்ணன். ஐம்பது வருட இல்வாழ்க்கையின் தருணங்கள் மனதில் படமாய் ஓட, ராதாவின் அன்பும் சகிப்புதன்மையும், காதலும் தியாகமும், உழைப்பும் பொறுப்பும் கண் முன் விரிந்தது
 
அந்த புரிதலோடு சேர்ந்து கண்ணில் நீரும் பெருகியது. பத்து நாட்களுக்கு முன் மனைவியின் உடலுக்கு சிதை மூட்டிய போது கூட இரும்பாய் நின்றவர், இன்று உணர்ந்த இழப்பில் கட்டுப்படுத்த இயலாமல் ராதாவின் மாலையிட்ட படத்தின் முன் மண்டியிட்டு கதறினார்
 
ஆம்… ஐம்பது வருடங்கள் கிருஷ்ணனின் மனைவியாய், அந்த வீட்டின் மருமகளாய், நான்கு பிள்ளைகளுக்கு தாயாய் தன் கடமையை செவ்வனே செய்த நிறைவில் எழுபது வயதில் இயற்கை மரணம் எய்தினாள் ராதா
 
தந்தையின் கதறலில் பிள்ளைகள் நால்வரும் சிலையாய் நின்றனர். அதுவரை பெற்றவரை சிம்ம சொப்பனமாய் மட்டுமே பார்த்து பழகியவர்களுக்கு அவரின் இந்த நிலை காண சகியாமல் கண்ணில் நீர் கோர்த்தது
 
முதலில் சுதாரித்தவன் மூத்தவன் ரவீந்திரன் தான். “நீ சும்மாவே இருக்க மாட்டியா வைஷு” என தங்கையை கடிந்து கொண்டான்
 
“அப்பா என்னப்பா இது. அவ தான் புரியாம ஏதோ பேசறானா அதை போய் நீங்க பெருசா எடுத்துகிட்டு… ப்ளீஸ்ப்பா, அழாதீங்கோ” என சமாதானம் செய்தான்
 
“அப்பா சாரி’ப்பா, நான் உங்கள அழ வெக்கணும்னு அப்படி பேசலப்பா. அம்மா இல்லாம போனப்புறம் கூட அத்தை எப்பவும் போல பேசவும் என்னால தாங்கமுடியாமத்தான் அப்படி சொல்லிட்டேன்’ப்பா. என்னை மன்னிச்சுடுங்கப்பா… ப்ளீஸ்’ப்பா” என கெஞ்சலில் தொடங்கி அழுகையில் முடித்தாள் வைஷ்ணவி
 
ஒன்றும் பேசாமல் மகளை அணைத்து கொண்டார் கிருஷ்ணன். கதறல் நின்றிருந்த போதும் கண்ணில் நீர் வற்ற மறுத்தது அவருக்கு
 
அந்த நிலையில் தன் தமயனை பார்த்ததும் “இதற்கெல்லாம் தான்தானே காரணம். பெற்றவளை இழந்த பின் எல்லாமுமாய் இருந்த அண்ணன், மனைவியின் பேச்சை கேட்டு தன்னை வெறுத்து விடுவானோ என்ற எண்ணத்தில் தவறு செய்து விட்டோமே” என உறுத்த, கிருஷ்ணனின் காலில் மன்னிப்பு வேண்டி விழுந்தாள் மைதிலி
 
பத்து நாட்களுக்கு முன் ராதாவின் உயிர் பிரிந்த தருணத்தில் தன்னில் ஒரு பகுதியை இழந்ததை கூட கிருஷ்ணனால் உணரமுடியவில்லை
 
சிறுவயதிலேயே அன்னையை இழந்து, இழப்புக்கு மனம் பழகியதும் ஒரு காரணமோ என இப்போது தோன்றியது
 
எது எப்படி இருப்பினும் வாழ்ந்த காலத்தில் அவளை அழ வைத்ததிற்கு இனி, தான் வாழும் காலம் முழுமையும் அவளை நினைத்து அழும் தண்டனையை கொடுத்து சென்றுவிட்டாள் என நினைத்தார் கிருஷ்ணன்
 
தன்னையும் அறியாமல் அவரின் விரல்கள் புகைப்படத்தில் இருந்த அவளின் கண்களை வருடியது. இந்த கணம் அவருக்கு தேவை தனிமை என உணர்ந்தவர்கள் போல் பிள்ளைகள் நால்வரும் விலகி சென்றனர்
 
தன் மனைவியின் படத்தின் அருகே வைத்திருந்த அவள் விரும்பி வாசிக்கும் வீணையின் தந்தியை ஸ்பரிசித்தவருக்கு, அதிலிருந்து கசிந்த மௌனராகம் அவளின் சிரிப்பின் நாதமாய் ஒலித்தது
 
(முற்றும்)

Saturday, October 13, 2012

வரும்..... ஆனா வராது......:)

 
சித்ரகுப்தன் : மானிடா, நீ செய்த பாவபுண்ணியங்களை டேலி செய்து, அதன் பின் தான் உனக்கு சீட் அலாட் செய்யப்படும்
 
மானிடன் : ஒ ஐ சீ ... என்ன சாப்ட்வேர் யூஸ் பண்றீங்க மிஸ்டர்.குப்தா?
 
சித்ரகுப்தன் : சாப்ட்வேர் இல்லை, எல்லாம் ஹார்ட்வேர் தான், இதோ ஓலைசுவடிகள்
 
மானிடன் : இது ரெம்ப ஓல்ட் டெக்னாலஜியா இருக்கே? எனக்கு தெரிஞ்ச ஒரு...
 
சித்ரகுப்தன் : நிறுத்து நிறுத்து... உன் மார்கெடிங் புத்தியை இங்கும் காட்டுகிறாயா?
 
எமன் : சித்ரகுப்தா, பேச்சை குறை வேலையை கவனி. இல்லையென்றால் இந்த தீபாவளிக்கு உனக்கு போனஸ் கட் செய்து விடுவேன் மைன்ட் இட்
 
சித்ரகுப்தன் : ஐயோ அது மட்டும் வேண்டாம் பாஸ். இதோ கணக்கு பாத்தாச்சு. இவனுக்கு நரகத்தில் 1369வது ரூம் அலாட் செய்யப்பட்டிருக்கிறது ராஜா
 
எமன் : மானிடா, நரகமென்று வருத்தபடாதே, அவரவர் விதியை அவரவர் அனுபவித்து தான் ஆக வேண்டும்
 
மானிடன் : ஹ ஹ ஹா ஹ ஹ ஹா
 
எமன் : உனக்கென்ன பிராந்தா? நரகத்தில் இடமென்றால் சிரிக்கிறாயே?
 
மானிடன் : அடப்போப்பா நாங்க பாக்காத நரகமா ?
 
எமன் :என்னது ? நீ நரகத்தை பார்த்து இருக்கிறாயா?
 
மானிடன் : ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல நாப்பது வருஷம் அங்கதான் குப்ப கொட்டினேன்
 
சித்ரகுப்தன் : அது நீ பூலோகத்தில் வாழ்ந்த வருடங்கள் ஆயிற்றே?
 
மானிடன் : அதத்தான் சொன்னேன்
 
எமன் : மானிடப்பதரே உளறாதே, அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என அவ்வை பாட்டி பாடியது மறந்து போனதா உனக்கு
 
மானிடன் : ஐ சீ ... மனுசனா பொறக்கறது அரிதுன்னா அப்ப ஏன் மோட்சம் வேணும்னு கேக்குது அந்த பாட்டி? அஸ்கு புஸ்கு என்கிட்டயேவா. ஒரு நாள் போய் எங்கூர்ல இருந்து பாரு, அப்ப தெரியும் சங்கதி
 
எமன் : ஏன்? உன் ஊரில் மும்மாரி பெய்வதில்லையா?
 
மானிடன் : யோவ் ...வயித்தெரிச்சல கெளப்பாத, எமன்னு கூட பாக்க மாட்டேன்... கொண்டேபுடுவேன்
 
எமன் : என்னது?
 
மானிடன் : மும்மாரியும் எல்லாம் இல்ல கேப்மாரி வேணா கொள்ள கொள்ளா இருக்கானுவ. வருசத்துக்கு மூணுவாட்டி மழைய கண்ணுல பாக்கறதே பெரிய வேலையா இருக்கு, இது மும்மாரி முன்னூறுமாரினுட்டு...ஹ்ம்ம்
 
எமன் : அது...
 
மானிடன் : Let me finish Mr.எமன், இங்க ஜில்லுனு ஏ.சி போட்டா மாதிரி இருக்கு, இங்க உக்காந்துட்டு நீங்க பேசறீங்க பேச்சு. அங்க என்னடான்னா 'வரும்..... ஆனா வராது....' கணக்கா ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் கரண்ட் கட் பண்றான். இதுல கொசுத்தொல்லை வேற?ஆமா , நீங்க ஏன் மிஸ்டர். பிரம்மாகிட்ட சொல்லி இந்த கொசு ப்ரொடக்சன் டிபார்ட்மென்ட்டை கொஞ்ச நாள் க்ளோஸ் பண்ண கூடாது
 
சித்ரகுப்தன் : அது எங்க செக்சன் இல்ல, நீ அதுக்கு தனியா தான் petition அனுப்பனும் அது சரி, கரண்ட் பிரச்சனைக்கு தான் ஏதோ கூடங்குளம் வருதுனு சொன்னாங்களே
 
மானிடன் : அது கூடங்குளம் இல்ல பாஸ், கூடாங்குளம். இந்த ஜென்மத்துல அது கூடாது
 
சித்ரகுப்தன் : மனித வாழ்வில் இதெல்லாம் சகஜம் தானே மானிடா
 
மானிடன் : வேண்டாம் மிஸ்டர் குப்தா , வாய்ல நல்லா வந்துருமாமா. நாங்க என்ன 24 மணிநேரம் கரண்ட் வேணும்னா கேட்டோம். எங்க UPS சார்ஜ் ஆகற அளவுக்கு விடுங்கனு தானே சொல்றோம்
 
எமன் : பேசி முடித்துவிட்டாயா மானிடா?
 
மானிடன் : ஏன், நீங்க பேசபோறீங்களா? யு கேன் ப்ரோசீட் யுவர் எமன்
 
எமன் : மின்சாரம் இல்லை என புலம்புகிறாயே, அதற்கு என்ன காரணமென யோசித்தாயா?
 
மானிடன் : அதான் ஊருக்கே தெரியுமே... பக்கத்து ஊர்க்காரன் தண்ணி குடுக்க மாட்டேங்கறான்
 
எமன் : ஏன், உன் ஊரில் நீர் வளம் இல்லையா?
 
மானிடன் : எங்க ஊர்ல டாஸ்மாக் வளம் வேணா நல்லா இருக்கு, நீங்க சொல்ற நீர் வளம் இல்ல
 
எமன் : புரிகிறது. ஏன் இல்லை என யோசித்தாயா?
 
மானிடன் : ஏன்னா ...மழை இல்ல
 
எமன் : ஏன் மழை இல்லை?
 
மானிடன் : நீங்க பார்த்திபனுக்கு ஒண்ணுவிட்ட அண்ணனா? ஏன் இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேக்கறீங்க?
 
எமன் : கேட்ட கேள்விக்கு பதில் சொல்
 
மானிடன் : ஏன் மழை இல்லைனா, இல்ல அவ்ளோ தான்.உங்க பங்காளி மிஸ்டர்.வருணன் ஆப்-டியூட்டி போயிட்டாரு போல இருக்கு
 
எமன் : அடிப்படை அறிவியல் கூட தெரியாத அற்பமானிடனே , நீ எப்படி இன்ஜினியரிங் பட்டம் பெற்றாய்
 
மானிடன் : அது...எப்படியோ மக் அடிச்சு பிட் அடிச்சு... அதுக்கென்ன இப்போ?
 
எமன் : மரம் இல்லையேல் மழை இல்லை என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரிந்த பேசிக் சைன்ஸ். மரத்தை வெட்டி சாய்த்து, நச்சுபுகைகளை வெளியேற்றி இயற்கையை சூறையாடிவிட்டு வருணபகவான் மேல பழி போடுகிறாய்
 
மானிடன் : அது வந்து....
 
எமன் : அடுத்த பிறவியிலேனும் அடுத்தவரை குறை சொல்வதை விடுத்து இயற்கையை காப்பாற்றி வாழ கற்றுக்கொள்
 
மானிடன் : ஆனா...
 
எமன் : சித்திரகுப்தா, இவனை நரகத்தில் எண்ணெய் செக்கில் வேலைக்கு போடு, அப்போது தான் புத்தி வரும்
 
மானிடன் : எனக்கு கொலஸ்ட்ரால் இருக்கு, அதனால ரீபைண்ட் ஆயில் செக்சன்ல போடுங்க ப்ளீஸ்
 
எமன் : உனக்கு கொலஸ்ட்ரால் அதிகம் என்று தான் உலகத்திற்கே தெரியுமே. இவனை எண்ணெய் கொப்பரையில் வேலைக்கு வேண்டாம்....
 
மானிடன் : தேங்க்ஸ் மிஸ்டர் எமன்... ஐ லைக் யு
 
எமன் : எண்ணெய் கொப்பரையில் டீப் பிரை செய்ய சொல் சித்திரகுப்தா
 
மானிடன் : ஐயோ... மிஸ்டர் எமன்
 
எமன் : ரெண்டும் ஒண்ணு தான்
 
மானிடன் : ப்ளீஸ் மிஸ்டர் எமன்... நான் சொல்றதகொஞ்சம் ...
 
எமன் : கோர்ட் இஸ் டிஸ்மிஸ்ட்
 
மானிடன் : அவ்வ்வ்வ்... என் பொண்டாட்டி அடிக்கடி சொல்லுவா, உங்க வாய் தான் உங்களுக்கு எமன்னு, இன்னைக்கி எமன்கிட்டயே வாய குடுத்து வாங்கிகட்டிகிட்டனே ....:((
 

Monday, September 24, 2012

பெயர் சொல்லும் பிள்ளைகள்...(சிறுகதை - வல்லமை இதழில்...)

 
 
எனது இந்த சிறுகதையை வெளியிட்ட வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். வல்லமை இதழ் சுட்டி இங்கு
 
"ஸ்ருதி இது தப்பும்மா. இங்க பாரு, இப்படி எழுதணும்"
 
"நீ தான் தப்பு, எங்க ரஞ்சனி மிஸ் இப்படி தான் சொல்லி குடுத்தாங்க"
 
"உங்க மிஸ் தப்பா சொல்லி குடுத்தாலும் இதான் சரியாடி" என ராதிகா கோபமாய் கேட்க
 
"ஆமா, எங்க மிஸ் சொல்றது தான் கரெக்ட், நீ தப்பு" என நாலு வயது ஸ்ருதி தர்க்கம் செய்ய
 
"அடி வாங்க போற ஸ்ருதி இப்ப, சொன்னா கேக்கணும்" என அடிக்க கை ஓங்கினாள் ராதிகா
 
"ஏய் ராதி, என்னதிது?" என தடுத்தான் ராதிகாவின் கணவன் ஜெகன்
 
"பின்ன என்னங்க? மிஸ் தப்பா சொல்லி குடுத்து இருக்காங்கனு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறா"
 
"இது ஒரு ஸ்டேஜ் ராதிகா, தன்னோட டீச்சர் தான் ஹீரோனு நினைக்கற ஒரு அழகான ஸ்டேஜ், அதை ஸ்பாயில் பண்ணாத விடு" என்றான் சிரித்தபடி
 
"ஏன் நீங்களும் இப்படி தான் உங்க மிஸ் பைத்தியமா இருந்தீங்களா?" என ராதிகா கேட்க, ஜெகனுக்கு உடனே கலைவாணி டீச்சரின் முகம் கண் முன் வந்தது
 
"எனக்கு மட்டுமில்ல, எல்லாருக்கும் அப்படி ஒரு டீச்சர் இருப்பாங்க ராதி. எனக்கு என்னோட கலைவாணி டீச்சர் அப்படி தான், அவங்ககிட்ட படிக்கற எல்லாரையும் சொந்த பிள்ளைங்க மாதிரி தான் பாப்பாங்க. டீச்சர் வேலையை ஒரு தவம் மாதிரி செஞ்சவங்க அவங்க. என்னோட படிச்ச நெறைய பேர் இன்னைக்கி நல்ல நிலைல இருக்கறதுக்கு அவங்களோட ஒழுக்க போதனையும் வழிக்காட்டுதலும் ஒரு முக்கிய காரணம். எங்கப்பாகிட்ட வந்து நீங்க கலைவாணி டீச்சரை கல்யாணம் பண்ணிகோங்க, அப்ப தான் அவங்க நம்ம கூடயே இருப்பாங்கனு சொல்ற அளவுக்கு அவங்க மேல பைத்தியமா இருந்தேன். அம்மாகிட்ட தர்ம அடி வாங்கினது தனி கதை" என பழைய நினைவில் புன்னகைத்தான் ஜெகன்
 
"ஆரம்பிச்சுட்டீங்களா உங்க கலைவாணி டீச்சர் புராணத்த, கல்யாணமாகி இந்த அஞ்சு வருசத்துல அஞ்சாயிரம் வாட்டி கேட்டாச்சு, உங்க டீச்சரையும் ஊருக்கு போறப்பவெல்லாம் பாத்துட்டு தானே இருக்கோம். அது சரி, இப்ப ஸ்ருதிக்கு சப்போர்ட் பண்றதுக்கு வேற எதாச்சும் உள்காரணம் இருக்கோனு சந்தேகம் வருது எனக்கு" என ராதிகா பொய் கோபத்துடன் முறைக்க
 
"அட, எனக்கு இந்த ஐடியா தோணவே இல்லையே. வேணும்னா ரஞ்சனி மிஸ் என்ன நினைக்கறாங்கன்னு கேட்டு பாப்போமா ராதி?" என ஜெகன் விளையாட்டாய் வம்பு செய்ய, ராதிகா அவனை முறைத்தபடி எழுந்து சென்றாள்
 
 
போன முறை ஊருக்கு சென்ற போது கலைவாணி டீச்சரை சந்தித்த நினைவு ஜெகனின் கண் முன் விரிந்தது
 
வீட்டு திண்ணையில் கால் நீட்டி அமர்ந்து, ஒரு பக்கம் கழண்டுவிட்ட மூக்கு கண்ணாடியை வலது கையில் தாங்கியபடி, மறுகையில் நாளிதழை பிடித்து ஊன்றி படித்து கொண்டிருந்தார் கலைவாணி டீச்சர்
 
அந்த கோலத்தை கலைக்க மனமின்றி தன் மகளையும் அமைதியாய் இருக்க சொல்லி செய்கை காட்டி விட்டு ரசித்தபடி நின்றான் ஜெகன்
 
சற்று நேரத்தில் அருகில் சலனம் உணர்ந்து தலை உயர்த்திய டீச்சர், ஒரு கணம் யாரென புரியாமல் கண் இடுங்க பார்த்தவர், புரிந்ததும் புன்னகை விரிய பத்து வயது குறைந்தது போல் உற்சாகத்துடன் "டேய் ஜெகன், எப்ப வந்த டெல்லில இருந்து? வாம்மா ராதிகா. குட்டி பொண்ணே, வா வா வா. உனக்கு குடுக்க ஒண்ணுமில்லையே, ஒரு நிமிஷம் உக்காருங்க, இதோ கடைக்கு போயிட்டு வந்துடறேன்" என கிளம்பியவரை தடுத்தான் ஜெகன்
 
"ஒண்ணும் வேண்டாம் டீச்சர், நீங்க உக்காருங்க. உங்கள பாக்கணும்னு தான் வந்தோம். என்னாச்சு டீச்சர்? கண்ணு சரியா தெரியரதில்லையா?" என ஜெகன் கவலையாய் கேட்க
 
"வயசாச்சில்ல... இதோ, உனக்கே ஒண்ணு ரெண்டு நரை எட்டி பாக்குதே" என கேலி செய்து சிரித்தவரை பார்த்து ஸ்ருதியும் சிரிக்க, "குட்டி வாலு, ஸ்கூல் போறியா? உங்க அப்பா உன்ன மாதிரி இருக்கறப்ப இருந்தே எனக்கு தெரியும்" என வாஞ்சையாய் ஜெகனை பார்த்தவர்
 
"போன வருஷம் பாத்ததுக்கு இப்ப மெலிஞ்சுட்ட ஜெகன், வேலை அதிகமோ? என்னம்மா ராதிகா, உன் புருஷன் நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடறது இல்லையா?" என அக்கறையாய் விசாரித்தார்
 
"இல்ல டீச்சர்... வேலை வேலைனு நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதில்ல, நீங்க சொன்னாலாச்சும் கேக்கராறானு பாப்போம்" என கிடைத்த சாக்கில் குற்ற பத்திரிக்கை வாசித்தாள் ராதிகா
 
"சரி சரி, நின்னுட்டே இருக்கீங்களே, உக்காருங்க, இதோ வரேன்" என தடுத்தும் கேளாமல் சென்றவர், பிஸ்கட் பழம் என வாங்கி வந்து தட்டை பரப்பினார்
 
"எதுக்கு டீச்சர் இதெல்லாம்? இப்ப தான் சாப்டதும் வரோம்" என ஜெகன் சொல்ல
 
"ஏன் சாப்டுட்டு வரே? நான் சமைச்சு போட மாட்டேனா? நான் வெக்கற மோர் கொழம்பு ஜெகனுக்கு உசுரு தெரியுமா ராதிகா? உங்க மோர் கொழம்பு சாப்ட்டு தான் மாத்ஸ்ல சென்டம் வாங்கினேன்னு ஐஸ் வெப்பானாக்கும்" என ஏதோ தன் சொந்த பிள்ளையை பற்றி பேசுவது போல் சிலாகித்தார் கலைவாணி. ஜெகன் எதுவும் பேசாமல் ரசித்தபடி இருந்தான்
 
"டாக்டர்கிட்ட போனீங்களா? உடம்புக்கு இப்ப பரவாயில்லையா டீச்சர்?" என ஜெகன் விசாரிக்க
 
"வயசானா எல்லாமும் தான் வரும், அதையெல்லாம் நினைக்காம இருக்க வேண்டியது தான். எவ்ளோ நாளாச்சுடா உன்னை பாத்து, ஒரு வருஷம் இருக்குமல்ல ஜெகன்" என வாஞ்சையாய் தோளில் கை பதித்தவரை அன்புடன் பார்த்தவன்
 
"ஆமாம் டீச்சர், வேலை ஜாஸ்தி. அதோட இப்ப அம்மா அப்பாவும் எங்களோடவே டெல்லில இருக்கறதால அடிக்கடி வர்ற வேலை இருக்கறதில்ல" என்றான்
 
"சரிப்பா, எங்க இருந்தாலும் நீங்கெல்லாம் நல்லா இருந்தா அதுவே போதும் எனக்கு" என ஆசிர்வாதம் போல் உரைத்தார்
 
 
செல்பேசி அழைப்பின் சத்தத்தில் பழைய நினைவில் இருந்து மீண்டான் ஜெகன். பால்ய சிநேகிதன் மணியின் எண் செல்பேசியில் ஒளிரவும், மகிழ்வுடன் "டேய் மணி... எப்பட்றா இருக்க?" என்றான் உற்சாகமாய்
 
"இருக்கேண்டா" என்றான் சுரத்தின்றி
 
"என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி பேசற?"
 
"ஜெகன், உனக்கு நம்ம கலைவாணி டீச்சர் ஞாபகம் இருக்கா?" எனவும்
 
ஆச்சிர்யத்துடன் "சொன்னா நம்ப மாட்ட மணி, இப்ப தான் அவங்கள பத்தி நெனச்சேன், போன வாட்டி ஊருக்கு வந்தப்ப பாத்தது, ரெம்ப நாளாச்சுடா" என்றான் நெகிழ்வுடன்
 
"டீச்சர் இறந்துட்டாங்கடா" என்றான் மணி சோகமாய்
 
"வாட்? டேய் என்னடா சொல்ற?" என ஜெகன் அதிர்ச்சியில் உறைந்தான்
 
அவன் அதிர்ச்சியான குரலில் பயந்து "என்னங்க... என்னாச்சு?" என பதறியபடி வந்தாள் ராதிகா
 
ஒன்றுமில்லை என்பது போல் ஜாடை காட்டியவன், ஏனோ பேச இயலாமல் தொண்டையை அடைப்பது போல் இருக்க "தண்ணீர் வேண்டும்?" என ராதிகாவிடம் கை அசைவில் கேட்டான்
 
ராதிகா அகன்றதும் "என்ன ஆச்சு மணி? எப்போ? நீ இப்ப நம்ம ஊர்லயா இருக்க?"
 
"ஆமா ஜெகன், அம்மாவுக்கு கண் ஆபரேஷன் பண்ணி இருக்குனு பாக்க ஊருக்கு வந்தேன். வந்ததும் தம்பி சொன்னான், ஹார்ட் அட்டாக்னு சொல்றாங்க. நம்ம க்ளாஸ்மேட்ஸ் சுந்தர், கணேசன் எல்லாரும் இங்க தான் இருக்காங்க. நீ டெல்லில இருந்து வர முடியாதுனு தெரியும், ஆனா உனக்கு கலைவாணி டீச்சர்'னா ரெம்ப பிடிக்குமேனு தான் சொல்லணும்னு கூப்ட்டேன். சாயங்காலம் ஆறு மணிக்கி தகனம் பண்றதா சொன்னாங்க"
 
அதன் பின் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் அடுத்த நான்கு மணி நேரத்தில் ஊரில் இருந்தான் ஜெகன். சாவு வீட்டின் சாயல் இன்றி ஏதோ யுத்தகளம் போல் ஆண் பெண் பாகுபாடின்றி சிலர் வாக்குவாதத்தில் இருந்ததை பார்த்து குழம்பி போய் நின்றான்
 
தன் ஆசிரியையின் முகத்தை கடைசியாய் ஒரு முறை பார்க்க விழைந்தவனுக்கு தன்னையும் அறியாமல் கண்ணில் நீர் கோர்த்தது
 
ஆதரவாய் ஒரு கரம் தோளில் விழ "டேய் மணி... உயிரோட இருந்தா இத்தனைக்கு எவ்ளோ ஆசையா அதை சாப்டு இதை சாப்டுனு..." என அதற்கு மேல் பேச இயலாமல் நிறுத்தினான் ஜெகன்
 
அதற்குள் கூட்டத்தில் வாய் சண்டையாய் இருந்தது கை கலப்புக்கு செல்ல "என்ன ஆச்சு மணி? ஏன் இப்படி இவங்க சண்டை போட்டுக்கறாங்க?" என்றான் ஜெகன் புரியாமல்
 
"வேற என்னடா, எல்லாம் சொத்து பிரச்சனை தான். டீச்சரோட பசங்க ரெண்டு பேரும் வீடு அவங்க பேருக்கு தான் வரணும்னு தகராறு, இல்லைனா கொள்ளி வெக்க மாட்டோம்னு பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க... என்ன மனுஷங்களோ" என்றான் மணி வருத்தமாய்
 
"பேரு சொல்ல புள்ளை இல்லைனு கோவில் கோவிலா ஏறி தவமா தவமிருந்து புள்ள பெத்த மகராசி இன்னைக்கி கொள்ளிக்கு வழியில்லாம கெடக்குதே... ஹ்ம்ம் என்ன சாபமோ இந்த மனுசிக்கி" என்றார் கூட்டத்தில் ஒருவர்
 
அதற்கு மேல் பொறுக்க இயலாமல் "நிறுத்துங்க" என்றான் ஜெகன் சத்தமாய்
 
"யார் இவன்?" என்பது போல் எல்லோர் கவனமும் ஜெகனின் மீது திரும்பியது
 
"எங்க வீட்ல வந்து எங்கள நிறுத்த சொல்றதுக்கு நீ யார்ரா?" என ஜெகன் மீது பாய்ந்தான் டீச்சரின் மூத்த மகன்
 
"நான் கலைவாணி டீச்சர்கிட்ட படிச்சவன். தயவு செஞ்சு உங்க சண்டைய ஒதுக்கி வெச்சுட்டு டீச்சருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செய்யுங்க, அவங்க ஆத்மாவ நிம்மதியா போக விடுங்க" என கெஞ்சுவது போல் கூறினான் ஜெகன்
 
"உன்னோட புத்திமதி இங்க யாருக்கும் தேவை இல்ல. வீடு என் பேருக்கு தான் வரணும், எனக்கு தான் கொள்ளி வெக்கற உரிமை இருக்கு. இல்லைனா கெழவி அனாத பொணமாத்தான் நாறணும் சொல்லிட்டேன்" என்றான் ஒருவன்
 
அதற்கு மேல் பொறுமையை இழுத்து பிடிக்க இயலாமல் அவனை ஓங்கி அறைந்தான் ஜெகன். எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க "மனுசனாடா நீ... ச்சே. பெத்த தாய அனாத பொணம்னு சொல்ற நீ உயிரோட இருந்தும் சவம் தாண்டா. நீ கொள்ளி வெச்சா எங்க டீச்சரோட ஆத்மா நிம்மதியா போகாது. நீங்க கொள்ளி வெக்கலைனா அவங்களுக்கு யாரும் இல்லையா? ஆயிரகணக்குல இருக்கோம், அவங்ககிட்ட படிச்ச புள்ளைங்க. பெத்த புள்ளை வெக்காட்டி என்ன, பெறாத புள்ள நான் வெக்கறேன் என் அம்மாவுக்கு கொள்ளி. போடா வெளிய" என கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான் ஜெகன்
 
"டேய்..." என மறுபடி சீறியவனை எச்சரிப்பது போல் பார்த்த ஜெகன் "பாதகம் செய்வோரைக் கண்டால் பயங்கொளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பானு சொல்லி குடுத்தவங்கடா எங்க டீச்சர். அதை அவங்க சொந்த பந்தங்ககிட்டயே காட்ட வெச்சுடாத. அந்த தெய்வத்தோட வயத்துல பொறந்த ஒரே காரணத்துக்காக உன்னை உயிரோட விடறேன். இல்லைனா நீ தாண்டா இப்ப அனாத பொணமா போவ. என்னோட ஐபிஎஸ் பவர் என்னனு காட்ட வெச்சுடாத" எனவும், போலீஸ் என்ற வார்த்தையில் பயந்து பின் வாங்கினான்
 
அதன் பின் அமைதியாய் காரியங்கள் நடந்தன. சொன்னது போல் மகனாய் இருந்து ஜெகன் தன் ஆசிரியைக்கு இறுதி மரியாதையை செய்தான். ஊரே மெச்சும் படி இறுதி ஊர்வலம் நடந்தது. அதோடு தன் செல்வாக்கை பயன்படுத்தி டீச்சர் இருந்த வீட்டை யாரும் ஆக்ரமிக்க முடியாதபடி செய்தான்
 
காலம் வேகமாய் சென்றது. கலைவாணி டீச்சர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் ஒரு நாள் திடீரென அந்த வீடு சுத்தம் செய்யப்பட்டு வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு விழாக்கோலம் பூண்டது
 
ஆர்வமாய் வீட்டின் முன் ஊர்மக்கள் கூடி இருக்க, ஜெகன் ஒலிபெருக்கியில் பேச தொடங்கினான் "எல்லாருக்கும் வணக்கம். என் பேரு ஜெகன். கலைவாணி டீச்சரோட பிள்ளைகளில் ஒருத்தன். எங்க அம்மா இந்த உலகத்தவிட்டு போய் ஒரு வருஷம் ஆச்சு. இந்த நாளுல அவங்க இருந்த இந்த வீடு இனிமே இலவச நூலகமா செயல்படும்னு எல்லார் சார்பாவும் தெரிவிக்கறேன். அதோட அவங்ககிட்ட படிச்சவங்க எல்லாரும் சேந்து ஒரு கல்வி அறக்கட்டளை ஆரம்பிச்சு இருக்கோம். பிள்ளைககிட்ட இருக்கற திறமைய வெளிய கொண்டு வந்து அவங்கள வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமா இல்லாம நல்ல மனுசங்களாவும் உருவாக்கினவங்க எங்க கலைவாணி டீச்சர். என்னை போல எத்தனையோ ஐபிஎஸ் ஐஏஎஸ்'களை உருவாக்கின ஆத்மாவோட நினைவா இந்த அறக்கட்டளைய உருவாக்குவதின் நோக்கம் திறமை இருந்தும் வசதி இல்லாத பிள்ளைங்களை படிக்க வெக்கறது தான். கலைவாணி கல்வி அறக்கட்டளைய திறந்து வெக்கறதுக்கு நம்ம ஸ்கூல் ஹெட்மாஸ்டர் குமாரசாமி சாரை அன்போடு அழைக்கிறேன்" என உரையை முடித்தான் ஜெகன்
 
"கலைவாணி கல்வி அறக்கட்டளை மற்றும் இலவச நூலகம் - இப்படிக்கு, கலைவாணித்தாயின் பெயர் சொல்லும் பிள்ளைகள்" என எழுதி திரையிடபட்டிருந்த பலகையை திறந்து வைத்தார் ஹெட்மாஸ்டர்
 
"குரு ப்ரம்ஹா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரா குரு சாக்ஷாத் பர ப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ:" என்ற பாடல் பின்னணியில் ஒலித்தது
(முற்றும்)
 
இந்த பதிவு எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் - நன்றி, புவனா
 

Saturday, July 21, 2012

அப்பாவி டிவியில் இது எது அது - பதிவர் ஸ்பெஷல்... :))

வணக்கம் அண்ட் வெல்கம் டு உங்கள் அழுக்கான சாரி... உங்கள் அபிமான "இது எது அது" நிகழ்ச்சி. என்னை பத்தி நானே சொல்லிக்க கூடாதுங்க, ஆனா பாருங்க இதுக்காக இன்னொரு ஆளை கூட்டிட்டு வந்தா பட்ஜட்ல ஜெய்பூர் ஜமுக்காளமே விழுந்துருங்கறதால நானே சொல்லிர்றேனுங்க
 
என்ர பேரு கோயமுத்தூர் கோமளவல்லிங்க. நான் "கொலைவெறியும் கோன் ஐசும்" அப்படிங்கற பேர்ல ஒரு வலைப்பதிவு வெச்சுருக்கறனுங்க. இன்னைக்கி "இது எது அது" பதிவர் ஸ்பெஷல் ப்ரோக்ராமை தொகுத்து வழங்கறதுக்கு வந்திருக்கரனுங்க
 
முதல்ல நான் ஒரு தத்துவம் சொல்ல போறானுங். அது என்னனு கேட்டீங்கன்னா "ப்ளாக் வெச்சுருக்கறவன் எல்லாம் வெட்டி ஆபிசரும் இல்ல வெட்டியா இருக்கறவங்க எல்லாம் ப்ளாக் வெச்சுரக்கறதும் இல்லிங்க". என்னங் புரியலையாங்? டோண்ட் வொர்ரிங், இதை பத்தி ஒரு பத்து பக்க பதிவு அடுத்த வாரம் போட்றனுங்க
 
நாம ப்ரோக்ராம்க்கு போலாமுங்க... இன்னிக்கி ப்ரோக்ராம் பாத்தீங்கன்னாக்க அப்ரகாம் லிங்கன் ப்ரோக்ராம்னு சொல்லலாமுங்க
 
என்னது? ஆப்பக்கடை பிரியாணியா? (என ஆடியன்ஸ் பக்கமிருந்து குரல் வர)
 
அது அப்பற மேட்டுக்கு ப்ரோக்ராம் முடிஞ்சப்புறம் தருவோம். இப்போ, இதை ஏன் ஆபிரகாம் லிங்கன் ப்ரோக்ராம்னு சொன்னேன்னு கேட்டீங்கன்னா இன்னிக்கி ப்ரோக்ராம் for the bloggers of the bloggers by the bloggers, அதாவது பதிவர்களால் பதிவர்களை கொண்டு பதிவர்களுக்காக நடக்க போற ஒரு ஜனநாயக ஸ்பெஷல் ப்ரோக்ராமுங்க
 
(ஆடியன்ஸில் சிலர் எழுந்து ஓட முயற்சி செய்ய)
 
அம்பது ரூபாயும் ஆப்பக்கடை பிரியாணியும் மறந்து போகுமா? (என சூப்பர் ஸ்டார் பட பாடலை கோமளவல்லி ரீமிக்ஸ் செய்ய, ஆடியன்ஸில் அமர்ந்தால் தரப்படும் என சொல்லப்பட்ட 'சன்மானம்' நினைவுவுக்கு வந்து, ஓடிய ஆடியன்ஸ் மனதை கல்லாக்கி கொண்டு அமர்கின்றனர்)
 
 
இன்னைக்கி நம்ம ப்ரோக்ராமுக்கு வரப்போற மூணு கெஸ்ட் யாருன்னு கேட்டீங்கன்னா பிரபலமான மூணு பதிவர்கள். ரெம்ப நல்லவங்க... என்னை மாதிரியே (என கோமளவல்லி சிரிக்க, ஆடியன்ஸில் இருந்த ஒரு பொண்ணு மிரண்டு போய் மயக்கம் போடுது)
 
இதோ நம்ம கெஸ்ட்ஸ் சிகாகோ சின்ராசு, இலுப்பநாயக்கன்பட்டி இலியானா, அம்பாசமுத்திரம் அலமேலு மூவரையும் வருக வருக என வரவேற்கிறோம் (மூணு பேரும் MLA எலக்சன் கேண்டிடேட்ஸ் மாதிரி வணக்கம் சொல்லிட்டே செட்டுக்குள்ள வராங்க. அடிச்சு பிடிச்சு எடம் புடிச்சு சீட்ல உக்கார்றாங்க)
 
 
(இனி பின் வரும் பதிவில் இவர்கள் பின் வருமாறு சுருக்க பெயரில் விளிக்கபடுவார்கள். கோயமுத்தூர் கோமளவல்லி as "கோம்ஸ்", சிகாகோ சின்ராசு as "சின்ராஸ்", இலுப்பநாயக்கன்பட்டி இலியானா as "இலியான்ஸ்", அம்பாசமுத்திரம் அலமேலு as "அலம்ஸ்" & ஆடியன்ஸ் as "ஆடியன்ஸ்" தான், பின்ன ஆடாத டான்ஸ்'னா சொல்ல முடியும்...:)
 
 
இனி... தொடர்கிறது...
 
கோம்ஸ் : வெல்கம் வெல்கம். மொதல்ல மிஸ்டர் சிகாகோ சின்ராசு, உங்கள பத்தி கொஞ்சம் வெவரமா சொல்லுங்க
 
சின்ராஸ் : ஹாய் ஹாய் ஹாய்... மீ தி சின்ராசு ஆப் தி சிகாகோ
 
கோம்ஸ் : அதான் பேர்லயே இருக்கே, மேல சொல்லுங்
 
 
சின்ராஸ் : (மேலே பார்த்தபடி) லைட் ஆல் நைஸ், கலர் லைட் ஆல்சோ நைஸ்...
 
 
கோம்ஸ் : அட கெரகமே... அதில்லைங்க. உங்கள பத்தி இன்னும் சொல்லுங்கனேன்
 
 
சின்ராஸ் : யு மீன் மீ?
 
 
கோம்ஸ் : நான் மீன் எல்லாம் சாப்பிடறத்தில்லைங்க
 
 
சின்ராஸ் : ஹா ஹா... யு ஆர் ஹிலாரியஸ் (என சிரிக்க)
 
 
கோம்ஸ் : (டென்ஷன் ஆகி) இந்தா பாரு சின்ராசு. இப்ப நீ தமிழ்ல பேசுலீனா நான் இங்கிலீஷ்ல பேசி போடுவனாமா சொல்லிட்டேன் (என மிரட்ட)
 
 
சின்ராஸ் : அகர முதல எழுத்தெல்லாம் அரிய வைத்தாய் தேவி (என உணர்ச்சிவசப்பட)
 
கோம்ஸ் : சரி சரி... உங்க வலைப்பதிவு பத்தி உங்கள பத்தி சொல்லுங்க சின்ராசு
 
 
சின்ராஸ் : என்னோட வலைப்பதிவு பேரு "ஜிங்குச்சா-மங்குச்சா". நான் அமெரிக்கா தொடங்கி அமிஞ்சிகரை வரைக்கும் எல்லாத்தை பத்தியும் நெறைய பதிவு எழுதி இருக்கேன். அதோட பேச்சிலர்களுக்கு ஏத்த எளிய சமையல் பத்தியும் எழுதறேன். நான் சிகாகோல ஒரு சின்ன வீட்ல இருக்கேன்
 
 
கோம்ஸ் : என்னது சின்ன வீடா? (என அதிர்ச்சியாய் பார்க்க)
 
சின்ராஸ் : ஐயையோ... அதில்லைங்க. சும்மா ஒரு ரைமிங்'க்கு அப்படி சொன்னேன். ப்ளாக்ல எழுதி எழுதி அப்படியே வருது
 
கோம்ஸ் : ரைமிங்காமா ரைமிங்கு... ரணகளமா போயிற போவுது. ம்... வெல்கம் டு தி ஷோ. அதென்ன "ஜிங்குச்சா-மங்குச்சா", உங்க குலதெய்வத்தோட பேரா?
 
 
சின்ராஸ் : நோ நோ... சும்மா கேட்சியா இருக்கட்டும்னு அப்படி வெச்சேன். அப்பதான நாலு பேரு வந்து படிப்பாங்க
 
 
கோம்ஸ் : எது? "ஜிங்குச்சாமங்குச்சா"ங்கறத பாத்துட்டு நாலு பேரு வந்து படிப்பாங்களா? ஹ்ம்ம்... யாரு பெத்த புள்ளைங்களோ? சரி விடுங்க, அடுத்தது நம்ம இலுப்பநாயக்கன்பட்டி இலியானா. உங்கள பத்தி சொல்லுங்க இலியானா, பேரே ரெம்ப அட்டகாசமா இருக்குதுங்களே
 
 
இலியான்ஸ் : ஹி ஹி...தேங்க்ஸ் கோம்ஸ். எங்க கொள்ளு பாட்டி தாத்தாவோட பேரை சுருக்கித்தான் எனக்கு வெச்சாங்க (என பெருமையாய் கூற)
 
 
சின்ராஸ் : என்னது? உங்க கொள்ளு பாட்டி பேரு இலியானாவா? அப்ப "நண்பன்"ல நடிச்ச இலியானா உங்க சொந்தமா?
 
 
இலியான்ஸ் : (எரிச்சலாய்) ஆமா... என் ஒண்ணுவிட்ட ஓரகக்தியோட மூணுவிட்ட முறை பையனோட நாலு விட்ட நாத்தனாரோட அஞ்சு விட்ட அத்தை பொண்ணு தான் அந்த இலியானா
 
 
சின்ராஸ் : ஓ...வெரி க்ளோஸ் ரிலேசன் போல இருக்கே... எனக்கு இலியானாவோட நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்...அப்புறம், எனக்கு ரெம்ப நாளாவே ஒரு டவுட், இந்த ஒண்ணுவிட்டனா என்ன அர்த்தம்?
 
இலியான்ஸ் : (ஓங்கி சின்ராசின் கன்னத்தில் ஒரு அறை விட்டு) இதான் ஒண்ணு விட்ட, புரிஞ்சதா?
 
 
சின்ராஸ் : ம்... நல்லாவே புரிஞ்சது, நல்லவேள அஞ்சு விட்டனா என்னனு கேக்கல (என கன்னத்தை தடவி கொள்கிறார்)
 
கோம்ஸ் : தேவையா இது தேவையா (என கோமளவல்லி ரீமிக்ஸ் ஆரம்பிக்க)
 
இலியான்ஸ் : (சுதாரித்து) என்ன சொல்லிட்டு இருந்தேன். ம்... எங்க கொள்ளு பாட்டி பேரு "இளவஞ்சி" தாத்தா பேரு "லிங்குசாமி". ரெண்டு பேரோட முதல் எழுத்தை எடுத்து "இலி"னு வெச்சாங்க. இலி'யா நீ இலி'யா நீ' னு எல்லாரும் கேட்டு கேட்டு அது அப்படியே மருவி 'இலியானா'னு ஆகி போச்சு
 
சின்ராஸ் : இலினு வெச்சதுக்கு பதிலா வலினு வெச்சுருக்கலாம் (என இன்னும் வலித்த கன்னத்தை தடவியபடி முணுமுணுக்கிறார்)
 
இலியான்ஸ் : அப்புறம் கோம்ஸ்... என் ப்ளாக் பேரு "இலக்கியமும்-இஞ்சிமரப்பாவும்". தினம் ஒரு கவிதைனு வருசத்துக்கு 365 கவிதை எழுதறேன். அதோட சமையல் குறிப்பு கூட எழுதறேன்
 
 
சின்ராஸ் : (மனதிற்குள்) வாட் அ பிட்டி
 
இலியான்ஸ் : நான் இலுப்பநாயக்கன்பட்டி மெட்ரோபாலிட்டன்ல பண்ணை மேக்கரா இருக்கேன்?
 
சின்ராஸ் : என்னது பன்னி மேய்க்கரீங்களா? (இலியானா முறைக்க, ஒண்ணுவிட்ட நினைவு வந்து சின்ராசு சைலண்ட் ஆகிறார்)
 
கோம்ஸ் : அவர விடுங்க... அதென்ன பண்ணை மேக்கர்? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க இலி
 
 
இலியான்ஸ் : வீட்டுல இருக்கறவங்க ஹோம் மேக்கர்'னு சொல்றாங்க. நாங்க பண்ணைல இருக்கோம், அதான் பண்ணை மேக்கர்னு சொன்னேன் (என பெருமையாய் இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள)
 
கோம்ஸ் : ரெம்ப நாளா ப்ளாக் எழுதறீங்களோ?
 
 
இலியான்ஸ் : எப்படி கண்டுபுடிச்சீங்க? (என ஆச்சிர்யமாய் கேட்க)
 
 
கோம்ஸ் : ஹி ஹி... நீங்க பேசற விதத்தை வெச்சு தானுங் அம்மணி. ஒகே வெல்கம் இலியானா. அடுத்தது அம்பாசமுத்திரம் அலமேலு. உங்கள பத்தி சொல்லுங் அலம்ஸ்
 
 
அலம்ஸ் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி எந்தன் ப்ளாக் புகழை. சொல்லமுடிவில்லையம்மா கமெண்ட் விழும் எண்ணிக்கையை (என பாட்டாய் பாட)
 
கோம்ஸ் : ஆஹா ஆஹா, நடுல நடுல பொன்மானே தேனே மட்டும் போட்டுட்டா போதுங்க, கமல் சார் அடுத்த படத்துல கண்டிப்பா சான்ஸ் குடுத்துடுவாருங்க
 
அலம்ஸ் : ஓ ஓ... நன்றி கோம்ஸ். உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரில பாருங்கோ. வேணும்னா இனி ஒரு மாசத்துக்கு என் ப்ளாக்ல உங்களை பத்தி தெனம் ஒரு போஸ்ட் போட்டு தள்ளிடறேன், என்ன சொல்றேள் கோம்ஸ்?
 
கோம்ஸ் : ஐயையோ... அந்த பாவம் எனக்கு வேண்டாமுங்க அலம்ஸ். உங்கள பத்தி சொல்லுங்க ரெண்டு வரில
 
 
அலம்ஸ் : ரெண்டு வரின்னா கஷ்டம் தான். சரி ட்ரை பண்றேன். நான் அம்பாசமுத்தரத்துல இருக்கேன்...
 
கோம்ஸ் : ஐயோ பாவம். சமுத்தரதுலையா இருக்கீங்க? அப்ப சுனாமி வந்தா என்ன பண்ணுவீங்க?
 
அலம்ஸ் : அட ராமச்சந்திரா... உங்களுக்கு ஜாங்கிரி சுத்தமா தெரியலயே
 
கோம்ஸ் : ஜாங்கிரி எனக்கு நல்லா தெரியுமேங்க, ஆரஞ்சு கலர்ல வட்டமா சுத்தியும் வளையமா இனிப்பா... (என ஜாங்கிரி நினைவில் கோம்ஸ் லயித்து நிற்க)
 
 
அலம்ஸ் : ஐயோ அதில்ல கோம்ஸ். இந்த எடம் பத்தி எல்லாம் படிக்கறதுக்கு என்னமோ சொல்லுவாளே... ஜாங்கிரியோ ஜாமன்டிரியோ என்னமோ
 
 
சின்ராஸ் : யு மீன் ஜாக்ரபி?
 
அலம்ஸ் : பிரம்மஹத்தி... மீன் மாமிசம் எல்லாம் ஏன்டா என்னிட்ட சொல்ற (என முறைக்க)
 
 
சின்ராஸ் : (சோகமாய்) யு லேடிஸ் ஆர் ஆல் சோ மீன் டு மீ (எனவும்)
 
 
அலம்ஸ் : மறுபடி மீனா? (என பாய)
 
 
சின்ராஸ் : நான் ஆணியே புடுங்கல போங்க (என எழுந்து போக முயற்சிக்க)
 
கோம்ஸ் : விடுங்க சின்ராசண்ணே... பெரிய மனசுகாரங்க நீங்க பொறுத்து போலாமுங்களே. நீங்க சொல்லுங்க அலமேலு
 
 
அலம்ஸ் : அம்பாசமுத்திரம்'ங்கறது எங்க ஊர் பேரு. தண்ணில எல்லாம் இல்ல, நெலத்துல தான் இருக்கு
 
கோம்ஸ் : ஓஹோ... உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?
 
அலம்ஸ் : எங்காத்துல...
 
கோம்ஸ் : இப்பதான தண்ணில இல்லைனு சொன்னீங்... மறுக்கா ஆத்துலனு சொல்ரீங்... (என புரியாமல் விழிக்க)
 
 
அலம்ஸ் : இது ஆறு இல்ல ஆம் புரிஞ்சதோ
 
 
கோம்ஸ் : என்னமோ சொல்றீங்... சொல்லுங்க
 
 
அலம்ஸ் : எங்காத்துல நான், எங்காத்துகாரர், என் பொண்ணு வைஷு, என் புள்ளயாண்டான் கேசவ் எல்லாரும் இருக்கோம்
 
கோம்ஸ் : சரிங்... உங்க ப்ளாக் பத்தி சொல்லுங் அலம்ஸ்
 
 
அலம்ஸ் : என் ப்ளாக் பேரு "மெக்சிகோமுதல்மோர்கொழம்புவரை"
 
கோம்ஸ் : அதாவது மெக்சிகோ வானிலை பத்தியும் எழுதுவீங்க, மோர்கொழம்பு வாணலி சட்டில எப்படி செய்யறதுன்னும் சொல்லி தருவீங்க, சரிங்களா?
 
அலம்ஸ் : கோம்ஸ் ரெம்ப புத்திசாலினு வெளில பேசிண்டா, இப்ப நன்னா புரியறது போ
 
 
கோம்ஸ் : ஹி ஹி ஹி...
 
 
சின்ராஸ் : அது சரி... ஏதோ கேம்ஷோனு சொன்னாங்களே... அது எப்போ? இலியானா பாட்டி ஆனப்புறமா?
 
 
இலியான்ஸ் : இல்ல நீ கொள்ளு பேரன் எடுத்தப்புறம்
 
கோம்ஸ் : சைலன்ஸ் சைலன்ஸ்... கேம் ரூல்ஸ் பத்தி சொல்றதுக்கு முன்னாடி இந்த ஷோவை மூணு பேர்ல யார் பாத்திருக்கீங்க. உண்மைய சொல்லுங்க பாப்போம்
 
 
(மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி விழிக்க)
 
 
கோம்ஸ் : ஹும்க்கும், வெளங்கிரும்... சரி விடுங்க. நானே சொல்லிடறேன். மொதல் ரவுண்டு "குரூப்ல ஒரிஜினல்", அதாவது மூணு பேரு இந்த படிக்கட்டு வழியா வருவாங்க. அவங்க மூணு பேருல ஒருத்தர் நிஜமான பிளாக்கர் ரெண்டு பேரு டூப். அந்த ஒரிஜினல் யாருனு நீங்க கண்டுபிடிக்கணும்
 
 
சின்ராஸ் : இது ரெம்ப ஈஸியாச்சே
 
கோம்ஸ் : எப்படி?
 
 
சின்ராஸ் : பாம்பின் கால் பாம்பறியும் யு சி?
 
 
இலியான்ஸ் : இந்த ஆளு புரியற மாதிரியே பேச மாட்டாரா?
 
 
சின்ராஸ் : ஐயையோ... புரியற மாதிரி பேசினா அப்புறம் பிளாக்கர்ஸ் அசோசியேசன்ல இருந்து தூக்கிருவாங்க
 
 
கோம்ஸ் : நான் ரூல்ஸ் சொல்லணுமா வேண்டாமா?
 
 
அலம்ஸ் : நீ சொல்லு கோம்ஸ். இவாளுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல
 
 
கோம்ஸ் : ம்... buzzer பிரஸ் பண்ற ஆர்டர்ல நீங்க ஒரிஜினலை லாக் பண்ணனும். மொதல் வாட்டியே ஒரிஜினலை கரெக்டா கண்டுபுடிச்சா உங்களுக்கு நூறு பாய்ன்ட். அப்புறம் பிளாக்கர்ஸ் எதாச்சும் பேசுவாங்க. அதுக்கப்புறம் ரெண்டாவது சான்ஸ்ல மறுபடி லாக் பண்ணலாம். அப்ப நீங்க மாத்தினா மைனஸ் நூறு. மாத்தி தாப்பா போனா மைனஸ் இருநூறு
 
 
இலியான்ஸ் : எனக்கு ஒரு சந்தேகம்?
 
 
சின்ராஸ் : 2012 டிசம்பர்ல உலகம் அழிஞ்சுருமாம். அதுக்குள்ள கேம் முடியுமா?
 
 
கோம்ஸ் : ஸ்ஸ்ஸ்பப்பப்பப்பா... உங்க சந்தேகம் என்ன இலி
 
 
இலியான்ஸ் : லாக் பண்ணலாம் லாக் பண்ணலாம்னு சொன்னீங்களே. அதுக்கு பூட்டி எல்லாம் திண்டுக்கல்ல இருந்து வாங்கினீங்களா?
 
 
கோம்ஸ் : (கடுப்பாகி) இல்ல திஹார் ஜெயில்ல வாங்கினோம்
 
 
இலியான்ஸ் : ஓ... அப்ப சாவி ஈஸியா நம்ம ஊர்லையே கிடைக்கும்... தேங்க்ஸ்
 
 
அலம்ஸ் : நேக்கு கூட ஒரு சந்தேகம்
 
 
கோம்ஸ் : நான் ரூல்ஸ் சொல்லி முடிக்கறேன், அப்புறம் கொஸ்டின் டைம்னு ஒண்ணு வெச்சு உங்க எல்லா சந்தேகங்களையும் தீக்கலாம். இப்ப செகண்ட் ரவுண்டு பத்தி சொல்லிடறேன். அது பேரு "அழுதா போச்சு". பிளாக்கர் ஒருத்தர் வந்து நெறைய ஜோக் எல்லாம் சொல்லுவாரு. நீங்க அழுவாம இருக்கணும். மொதல்ல அழுவறவங்களுக்கு நூறு பாயிண்ட் தான் தருவோம், ரெண்டாவது அழு மூஞ்சிக்கி இருநூறு, கடைசி வரைக்கும் அழுவாம இருந்தா முன்னூறு பாயிண்ட் கிடைக்கும்
 
சின்ராஸ் : ஐயோ... இது சான்சே இல்ல
 
கோம்ஸ் : அப்புறம் மூணாவது ரவுண்டு "மாத்தாம யோசி". நான் கேக்கற கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லணும், மாத்தி மாத்தி சம்மந்தம் இல்லாம பதில் சொன்னா அவுட். எவ்ளோ நேரம் கரெக்டா பதில் சொல்றீங்களோ அதுக்கு தகுந்த மாதிரி பாய்ன்ட். புரிஞ்சதா?


சின்ராஸ் : புரிஞ்சது... ஆனா புரியல...
 
 
(தொடரும்)
இதன் தொடர்ச்சி எப்ப வரும் எப்படி வரும்னு எனக்கே தெரியாது... ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்... கொஞ்சம் ஓவரா இருக்கோ... சரி விடுங்க...:)
 
ஒண்ணு புரியலைன்னு முழிக்கரீங்கன்னா நீங்க விஜய் டிவில சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு வர்ற "அது இது இது" மொக்கைய பாக்கறதில்லைனு அர்த்தம்...அது பாத்தா இது புரியுமான்னு கேக்கறீங்களா... அதுக்கு நான் கேரண்டீ இல்ல... அது "சிவகார்த்திகேயனுக்கே" வெளிச்சம்...:)

Thursday, May 24, 2012

பை பை கனடா ஹாய் ஹாய் இந்தியா...:)தலைப்பை பாத்தே உங்களுக்கு என்ன மேட்டர்'னு புரிஞ்சுருக்கும்'னு நினைக்கிறேன். கொஞ்சம் மொக்கை போட்டு கொஞ்சம் பீட்டர் விட்டு அப்புறம் சொல்லலாம்னு தான் நெனச்சேன். சரி ஊருக்கு வர்ற நேரத்துல ஏன் உங்களை எல்லாம் வீணா பகைச்சுக்கணும்னு நேராவே விசயத்துக்கு வந்துட்டேன் (ஒரு பயம் தான்..:)

ஆமாங்க, நாங்க இந்தியா'வுக்கு மூவ் பண்றோம். இன்னும் ரெண்டு வாரத்துல "தாய் மண்ணே வணக்கம்" பாட நாங்க ரெடி...:)

கனடா வந்து இறங்கின நாளுல இருந்தே ஊருக்கு போலாம்னு ஆரம்பிச்சவ நான். பின்ன என்னங்க... துபாய்ல அம்பது டிகிரி வெயில் முடிஞ்சு நேரா நவம்பர் மாசம் கனடால மைனஸ் அஞ்சு டிகிரில வந்து எறங்கினா எப்படி இருக்கும். ஒரே டென்சன்ஸ் ஆப் கனடாவா இருந்த காலம் அது. நாங்கெல்லாம் நம்ம ஊர் மார்கழி குளிருக்கே எட்டு மணி வரைக்கும் கம்பளிய விட்டு வெளிய வராத கேஸ்'க. யோசிச்சு பாருங்க என் நெலமைய

அப்புறம் எப்படியோ, வந்ததுக்கு கொஞ்ச நாள் இருந்துட்டு போலாம்னு ரங்க்ஸ் அப்படி இப்படி சரி கட்டினார். கொஞ்ச நாளுன்னா எத்தனை நாள்னு அப்ப கேக்காம விட்டது தப்பா போச்சு. அவரோட டிக்சனரில அதுக்கு அர்த்தம் ஒம்பது வருஷம்னு இப்ப தான் புரிஞ்சது...;)

ஆரம்பத்துல தெரியாத ஊர், புரியாத மொழி (accent), அறியாத மக்கள், அலற வரைக்கும் குளிர்னு கொஞ்சம் டெரர்ரா தான் இருந்தது. ஆனா பழக பழக பழகி போச்சு. கொஞ்சம் பிடிச்சும் போச்சு

ஆனாலும் ஊர் நெனப்பு விடற மாதிரி காணோம். "ஒரு ஒரு வருசமும் விண்ட்டர் வந்தா மட்டும் ஊருக்கு போலாம்னு ஆரம்பிக்கற, சம்மர்ல அப்படி சொல்ற மாதிரி காணோமே. நிஜமாவே ஊருக்கு போகணுமா இல்ல குளிருக்கு தப்பிக்கணுமா"னு ரங்க்ஸ் கிண்டல் பண்ணுவார்

எப்பவும் போகணும்னு தான் இருக்கும், ஆனா விண்ட்டர்ல வீட்லயே அடைஞ்சு கெடக்கும் போது அது கொஞ்சம் ஓவரா இருக்கும். சம்மர்ல இங்க பிரெண்ட்ஸ் கூட ஊர் சுத்தற மூட்ல அது கொஞ்சம் வெளில வர்றதில்ல, அதான் மேட்டர். ப்ளாக் எழுத வந்ததே அப்படி ஒரு சமயத்துல தான். பதிவுகள் ரகளைகளில் கொஞ்சம் டைவர்ட் ஆகும்

ஆனா உண்மைய சொல்லணும்னா, போகணும்னு ஆசையும் வேகமும் இருந்த போதும், போறதுன்னு முடிவு பண்றது அவ்ளோ சுலபமா இருக்கல

இங்கயும் முழுசா ஓட்ட முடியல அங்கயும் முழுசா போக முடியல'னு ஒரு தொங்கு பாலத்துல இருக்கற மாதிரி ஆகி போச்சு நிலைமை. ஊர்ல எதாச்சும் கல்யாணம் காட்சி, பண்டிகை விசேஷம் இல்லேனா யாருக்காச்சும் ஒடம்புக்கு முடியலைனாலோ "எப்ப போலாம்?"னு டிஸ்கசன் ஆரம்பிக்கும்

முதல் கேள்வி, அங்க போய் என்ன பண்றது? இங்க மாதிரி வேலை அங்க கிடைக்குமா? இங்க உள்ள வசதிகள் அங்க இருக்குமா? இங்க இருக்கற சோசியல் லைப் அங்க இருக்குமா? இப்படி கேள்விகள் வந்துட்டே இருக்கும். அப்புறம் பிஸி வாழ்க்கைல அப்படியே அது மறந்து போகும். மறுபடி எதாச்சும் ஊர்ல கல்யாணம் காட்சினு வரும் போது மறுபடி ஆரம்பிக்கும்

நம்ம ஊர்ல பொதுவா சொல்லுவாங்க "நல்லதுக்கு போகலைனாலும் கெட்டதை விடக்கூடாது"னு. உண்மையாவே, நல்லதுகளில் கலந்து கொள்ள முடியாம போகும் போது கூட மனம் சமாதானம் ஆகும், ஆனா இழப்புகளில் பங்கெடுக்க முடியாம போற வருத்தம் ரெம்ப கொடுமைங்க. அப்படி ஒரு தருணம் தான் இந்த முடிவை எடுக்க தூண்டியது

யாரோட மரணத்தையும் நாம தடுத்து நிறுத்த முடியாது. அவங்களுக்குனு விதிக்கபட்ட நேரம் தாண்டி ஒரு கணம் கூட எந்த மருத்துவமும் அறிவியலும் உயிரை பிடித்து வைக்க முடியாது. ஆனா, கடைசி கொஞ்ச நாட்கள் அவங்களோட இருந்தோம் அப்படிங்கற நிம்மதி கிடைக்கும் இல்லையா. "World is a global village"னு புரிஞ்சாலும் அது எல்லாருக்கும் அப்படி ஏத்துக்க முடியறதில்ல இல்லைங்களா

சில பேரோட மனநிலை வேற மாதிரி இருக்கும். ஒருத்தரை பத்தின நல்ல நினைவுகள் மட்டும் நமக்கு இருந்தா போதும், அவரோட இறுதி நாட்களை / அவங்க பட்ற கஷ்டங்களை பாக்காமையே இருந்துட்டா நல்லதுனு தோணும். அது ஒரு வகை ஏற்று கொள்ளல். அப்படி இருக்க முடிஞ்சா அதுவும் சரி தான்

உணர்ச்சிவசப்படும் நிலையில் எடுக்கற முடிவுகள் சரியா இருக்காதோனு கொஞ்சம் தள்ளி போட்டோம். மூணு நாலு மாதம் கடந்த பின் யோசிச்சு பாத்தப்பவும் நமக்கு ஊருக்கு போறது தான் சரிப்படும்னு தோணுச்சு, சரினு முடிவு பண்ணியாச்சு

நெறைய பேருக்கு ஊருக்கு போகனுங்கற ஆசை எண்ணம் எல்லாமும் இருக்கும். ஆனா பிள்ளைகள் படிப்பு, கலாசார மாற்றம், குடும்பத்தின் தேவைகள், வசதிகள், சுய-மனநிலைனு நெறைய விஷயங்கள் குறுக்க வந்து தடுக்கும். அதை குறை சொல்ல முடியாது. ஒரு ஒருத்தரோட சூழ்நிலை வேற தானே

இனி, கனடாவை பத்தி கொஞ்சம்...

கனடா - இந்த ஊரை பத்தி நெறைய பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கேன். பிளஸ் மைனஸ் எல்லா இடத்துலயும் இருக்கு. இங்கயும் அப்படிதான். இந்தியால இருபது சொச்சம் வருஷம் இருந்தேன். இங்க கிட்டத்தட்ட அதுல பாதி இருந்தாச்சு. So, this feels like a second home for sure...

இந்த ஊருக்கு வந்ததையோ இங்க இருந்த அனுபவத்தயோ நான் ஒரு நாளும் regret பண்ணவே மாட்டேன். இந்த ஊர் எனக்கு நெறைய கத்து குடுத்து இருக்கு. இங்க இருந்து கெளம்பறோம் அப்படிங்கரதுக்க்காக இதை இப்ப சொல்லல

முக்கியமா இங்க கிடைத்த நட்பு வட்டம், என் வாழ்நாள் முழுதும் மனதில் நிலைத்து இருப்பார்கள். அவங்கள ரெம்பவே நான் மிஸ் பண்ணுவேன். ஒரு குடும்பம் மாதிரி இருந்த அந்த அமைப்பு தான் எங்க பலமா இருந்தது. யாருக்கு ஒண்ணு'ன்னாலும் யோசிக்காம உதவிக்கரம் நீட்டும் அந்த மாதிரி நட்புகள் அமையறது கஷ்டம் இல்லைங்களா

அடுத்து, என்னோட ஆபிஸ். என்னதான் குறை சொன்னாலும் பொலம்பினாலும், நிச்சியம் மிஸ் பண்ணுவேன். அப்படியே ஒருத்தர ஏத்துக்கறது ரெம்ப கஷ்டமான விஷயம். எங்க ஆபிஸ்ல நெறைய பேர் அப்படி இருந்தாங்க. ஊருக்கு போறேன்னு சொன்னதும் உண்மையான வருத்தம் சில பேர்கிட்ட பாத்தேன். I made a difference அப்படினு தோணுச்சு

எங்க போனாலும் சமாளிக்க கூடிய தைரியத்தையும் தன்னம்பிக்கையும் எனக்கு குடுத்தது இந்த ஊர். ஒருத்தர் கோழையா இருக்கறதும் தைரியமா இருக்கறதும் ஒருத்தரோட மனோவலிமையை பொறுத்த விஷயம் மட்டுமில்ல, அமையும் சந்தர்ப்பங்களும் கூடத்தான் என்பது என்னோட கருத்து. எனக்கு அப்படி சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்தது இந்த ஊர்'னு சொல்லலாம்

உண்மையா சொல்லணும்னா, இப்ப I'm in kind of mixed emotions'னு தான் சொல்லணும். இங்க மிஸ் பண்ணுவேன்'னு வருத்தமாவும் தோணுது, ஊர்ல எல்லாரோடவும் இருக்க போறோம்னு சந்தோசமாவும் இருக்கு. இது இயல்பு தான்னு நினைக்கிறேன். ஆனா, கனடா ஒண்ணும் வேற கிரகத்துல இல்லை தானே, எப்ப வேணாலும் வரலாம்

நம்ம ஊருக்கு வந்து கொஞ்ச நாள் இது ஏன் இப்படி அது ஏன் அப்படினு கேள்வியின் நாயகியா பொலம்புவேனு நல்லாவே தெரியும். That is natural Human Tendency. ஆனா, நெனச்சா அம்மா அப்பா அத்தை மாமா சொந்தம் பந்தம் எல்லாரையும் பாக்கலாம். அவங்களுக்கு  முடியலைனாலும் எனக்கு முடியலைனாலும் பாத்துக்க முடியும். எல்லா நல்லது கெட்டதுலயும் கலந்துக்கலாம். இவ்ளோ பிளஸ் இருக்கும் போது I can't ask for more, right?

சரி, இதுக்கு மேல ரெம்ப சீரியசா போக வேண்டாம்னு நினைக்கிறேன். அப்புறம் "யார் நீ?"னு நீங்க கேள்வி கேக்கற மாதிரி ஆய்டும்...:)

"இந்தியா போய்ட்டா அப்பாவி பிஸி ஆய்டுவா, இனி நெறைய போஸ்ட் வராது, அப்பாடா நிம்மதி" அப்படினு நீங்க சந்தோசப்படுவீங்கனு எனக்கு தெரியும். பட், அயம் சாரி யுவர் ஆனர். அப்படி எல்லாம் யாரும் தப்பிக்க முடியாது

இந்தியா போனப்புறம் கொஞ்ச நாள் நான் வெட்டியா இருக்கலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். வெட்டியா இருக்கறதுக்கு என்னத்த பிளான் வேண்டி கெடக்குனு கேக்கறீங்களா? வேலைக்கு போறவங்களுக்கு அது மட்டும் தான் பிளான், ஆனா வெட்டியா இருக்கறவங்க என்ன செய்யறதுன்னு எவ்ளோ பிளான் பண்ணனும் தெரியுமா? அது மட்டுமில்லாம, எல்லாம் பிளான் பண்ணி தான் பண்ணனும்னு வடிவேல் சித்தர் சொல்லி இருக்கார் யு நோ...:)

சும்மா இருக்கறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா அது எப்படி தான் இருக்கும்னு தெரிஞ்சுக்கணும், அட்லீஸ்ட் ஒரு ஆறு மாசமாச்சும். அப்புறம் பழையபடி ஊர்ல இருந்தப்ப செஞ்சுட்டு இருந்த வாத்தியாரம்மா வேலைக்கு முயற்சி பண்ணலாம்னு ஒரு எண்ணம். பாப்போம் என்ன நடக்குதுனு

இப்ப ஒரு அதிர்ச்சியான நியூஸ் சொல்ல போறேன். வயசானவங்க / குழந்தைகள் / ஹார்ட் வீக்கா இருக்கறவங்க எல்லாம் கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கோங்க

அது என்ன மேட்டர்'னா, என்னோட draft folder'ல கிட்டதட்ட 30 சிறுகதைகள், 40 மொக்கை போஸ்ட்ஸ், 30க்கும் மேல நாவல்கள் தூங்கிட்டு இருக்கு. இங்க அதை எழுத நேரம் இருக்கல. இனி அதான் புல் டைம் ஜாப்... சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. வாரத்துக்கு ஏழு  போஸ்ட்க்கு மேல போட மாட்டேன் ஒகே...:)

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... எனக்கு பெரிய சந்தோஷம் என்னனா இனிமே "கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போய்டுவேன்"னு ரங்க்ஸ்கிட்ட மெரட்டலாம்... Just kidding... :)))

ஒகே... பை பை பிரெண்ட்ஸ்... இனி இந்தியா போய் செட்டில் ஆனப்புறம் தான் அடுத்த பதிவு... அது வரை என்ஜாய். டேக் கேர்
அன்புடன்,
அப்பாவி
 

Tuesday, May 08, 2012

தனித்திருந்த பொழுதினில்... (கவிதை)

தனித்திருந்த பொழுதினில்
தனிச்சையாய்என் பெயர்சொன்னவழக்கம்
பெற்றோர் முன்சொல்லிவிட்டு
பதறிநாக்கு கடித்தாயே
கடித்ததென்னவோ உன்நாவைத்தான்
கடிவாளம்கழன்றது என்இதயத்திற்கு !!!

நீஇல்லாத பொழுதினில்
நித்தமும் கேலிசெய்தது
நீவளர்க்கும் முல்லைகொடி
நான்வளர்த்த தாடியைபார்த்து !!!

நம்வாக்குவாத முடிவினில்
நாள்தோறும் வெல்பவள்நீயே - ஆனால்
வெற்றிஎன்னவோ எனக்குத்தானடி
வாகைசூடிய மகிழ்வோடு
பழிப்புக்காட்டி நீசிரிப்பாயே
பிறகென்ன வேணுமெனக்கு !!!

...

Thursday, April 12, 2012

தீர்ப்பு... (சிறுகதை)

"அப்பா ப்ளீஸ்... வேண்டாம்... நான் முடிவு பண்ணிட்டேன்... டைவர்ஸ் தான்"

"அஞ்சலி..."

"ப்ளீஸ்'ப்பா... வேற வழி இல்ல. தினம் தினம் அடி திட்டுனு எனக்கு வெறுத்து போச்சுப்பா"

"அதில்லம்மா..."

"என்னோட இஷ்டத்துக்கு எதுவுமே செய்ய முடியாம என்ன லைப்'பா இது. வேண்டாம்'ப்பா போதும்"

"அது..."

"அப்பா, ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல, பத்து வருசமா இந்த டார்ச்சர்... போதும்'ப்பா ப்ளீஸ்"

"என்ன இருந்தாலும்..."

"அத்தன பேர் முன்னாடி என்னை எப்படி இன்சல்ட் பண்ணி... ச்சே"

"ஆனா..."

"நீங்க என்ன சொல்ல போறீங்கனு எனக்கு தெரியும்'ப்பா. தனியா எப்படினு தானே... எனக்கு நீங்க போதும்பா, உங்க பொண்ணா இருந்துக்கறேன்'ப்பா"

"நீ நெனைக்கற மாதிரி..."

"என்னால முடியும்'ப்பா"

"நான் சொல்றத கொஞ்சம்..."

"இங்க பாருங்கப்பா. நீங்க இன்னும் என்னை கம்பெல் பண்ணினா நான் வீட்டை விட்டு போய்டுவேன்"

"என்னது?"

"ஆமாம்'ப்பா எனக்கு வேற வழியில்ல"

"எங்கம்மா போவ?"

"எங்கயோ போறேன்"

"நான் என்ன சொல்றேன்னா..."

"வேண்டாம்'ப்பா, எதுவும் சொல்ல வேண்டாம். உங்க பிரெண்ட் அதான் லாயர் நாராயணன், அந்த அங்கிளை நாளைக்கி காலைல போய் பாக்கலாம். இப்ப எனக்கு தூக்கம் வருது, நான் போய் தூங்கறேன் குட் நைட்'ப்பா" என எழுந்து தன் அறைக்குள் சென்றாள் அஞ்சலி

மகள் செல்வதையே பார்த்து கொண்டிருந்த சரவணன், மௌனமாய் தன் அறைக்குள் சென்றார்

அறைக்குள் வந்தவரை பார்த்த அவர் மனைவி தேவி, தான் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மடித்து வைத்து விட்டு நிமிர்ந்தாள்

"என்ன? அப்பா பொண்ணு பேச்சு வார்த்தை எல்லாம் முடிஞ்சதா?" என தேவி கேட்க, அதுவரை கட்டுப்படுத்தி இருந்த சிரிப்பை அதற்கு மேல் அடக்க மாட்டாமல் வாய் விட்டு சிரித்தார் சரவணன்

"எதுக்கு சிரிக்கறீங்க?" என தேவி விழிக்க

"அது..." என தொடங்கியவர், மீண்டும் சிரிக்க தொடங்க

"ஒண்ணு, சொல்லிட்டு சிரிங்க. இல்லைனா சாவுகாசமா சிரிச்சு முடிச்சுட்டு என்னை எழுப்புங்க. குட் நைட்" என தேவி கூறவும்

"இரு இரு... ஹா ஹா ஹா... கேட்டா நீயும் பயங்கரமா சிரிக்க போற" என மறுபடியும் சிரிக்க

"அப்படி என்ன தான் சொன்னா உங்க சீமந்த புத்திரி" என கோபமாய் கேட்க

"நான் உன்னை டைவர்ஸ் பண்ணனுமாம்" என்று கூறிவிட்டு சிரிக்க

"என்னது?" என அதிர்ச்சியாய் எழுந்து நின்றாள் தேவி

"ஏய்...எங்க போற?" என சரவணன் தடுக்க

"ம்... உங்க பொண்ண கொஞ்ச போறேன்... எவ்ளோ கொழுப்பு இருந்தா அப்படி சொல்லும் அந்த குட்டி சாத்தான்" என சரவணன் தடுக்க தடுக்க மகளின் அறைக்குள் சென்றாள் தேவி

அஞ்சலியின் அறை விளக்கை உயர்பித்தவள் "என்னடி சொன்ன உங்க அப்பாகிட்ட?" என தேவி கோபமாய் கேட்க, அஞ்சலி தன் தந்தையை முறைத்தாள்

"ஐயோ... நான் ஒண்ணும் சொல்லல..." என பொய் பயம் காட்டி சிரிப்பை அடக்கினார் சரவணன்

"என்னை டைவர்ஸ் பண்ணனும்னு சொன்னியாடி?" என தேவி மிரட்ட

"அப்பா... நான் தூங்கணும், உங்க wife'ஐ கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம இருக்க சொல்லுங்க"

"என்னடி சொன்ன?" என தேவி முறைக்க

"அப்பா, உங்க wifeக்கு பெரிய ஜோதிகானு நெனப்பு, மொறைச்சு மொறைச்சு ஷோ காட்ட வேண்டாம்னு சொல்லுங்க"

அதை கேட்டதும் சரவணன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட, தேவி முறைத்தாள்

"மீ சைலண்ட்" என மௌனமானார் சரவணன்

"மொளச்சி மூணு இல விடல பேச்ச பாரு" என தேவி அடிக்க கை ஒங்க

"ஏய் தேவி.. கொழந்தய போய்..." என சரவணன் தடுக்க

"கொழந்தனா கொழந்த மாதிரி இருக்கணும்... இது கொழந்த பேசற பேச்சா? பத்து வயசுக்கு இந்த பேச்சு பேசினா பல்லை தான் ஒடைக்கணும்"

"கூல் டௌன் தேவி ப்ளீஸ்" என சரவணன் சமாதானம் செய்ய

"அப்ப உங்க பொண்ண எங்கிட்ட சாரி கேக்க சொல்லுங்க"

"நான் எதுக்கு சாரி கேக்கணும். இன்னிக்கி சாயங்காலம் என் பிரெண்ட்ஸ் முன்னாடி என்னை திட்டினதுக்கு உங்க wife தான் என்கிட்ட சாரி கேக்கணும்'ப்பா"

"போட்டேனா ஒண்ணு வாய் மேல. பெரிய பிரெண்ட்ஸ் இவளுக்கு, ஹோம் வொர்க் பண்ணாம மத்த பிளாட் பசங்க கூட வெளையாடிட்டு இருந்தா திட்டாம கொஞ்சுவாங்களா... என்னடி மொறைக்கற?"

"எப்ப பாத்தாலும் இத செய்யாத அத செய்யாதனு டார்ச்சர் ச்சே... எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு"

"நீ பேசலடி... நீ பாக்கற டிவியும் சினிமாவும் கத்து குடுக்கறது தான் எல்லாமும். அத ஒளிச்சு கட்டினா தான் இது உருப்படும்"

"அப்பா... டைவர்ஸ்'க்கு அப்புறம் நீங்க என்கூட இருக்க போறீங்களா இல்ல உங்க wife கூட இருக்க போறீங்களானு இப்பவே முடிவு பண்ணிக்கோங்க"

"கழுத உன்ன..." என தேவி அடிக்க ஸ்கேல் எடுக்க, பாய்ந்து தந்தையின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டு கையில் சிக்காமல் ஓடினாள் அஞ்சலி

"ஒகே ஒகே... ரெண்டு பேரும் பேசாம இருங்க கொஞ்ச நேரம்" என மனைவியையும் மகளையும் ஆளுக்கு ஒரு புறம் அமர்த்திய சரவணன்

"தேவி, என்ன இருந்தாலும் நீ அஞ்சலிய அவ பிரெண்ட்ஸ் முன்னாடி திட்டினது தப்பு தான்... என்ன சொல்லணும்னாலும் தனியா கூப்ட்டு சொல்லு"

"ஆனா..."

"உஷ்... நாட்டமை தீர்ப்பு சொல்லும் போது நடுல பேசக் கூடாது" என மனைவியை அமைதிப்படுத்தியவர் "அஞ்சலி குட்டி, நீயும் ஹோம்வொர்க் பண்ணாம விளையாடினது தப்பு தான்"

"அப்பா..."

"உஷ்... நான் இன்னும் முடிக்கல" என்றவர், தொடர்ந்து "ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. So, மாத்தி மாத்தி சாரி சொல்லிட்டு பிரெண்ட்ஸ் ஆகணும் இப்போ, இல்லைனா ரெண்டு மாசத்துக்கு நோ Outing நோ ஐஸ்கிரீம் நோ ஜாலிடே... இதான் என்னோட தீர்ப்பு" என நாட்டாமை சொல்லி முடிக்க

சிறிது நேர யோசனைக்கு பின் "நாங்க எப்பவும் பிரெண்ட்ஸ் தான்... இல்லம்மா" என அஞ்சலி முதல் பந்தை வீச

"ஆமாண்டி செல்லம்" என அதை கேட்ச் பிடித்தாள் தேவி

"இந்த அப்பா தான் சும்மா எதாச்சும் சொல்லி நம்மள சண்டை போட வெக்கறது... இல்லம்மா"

"ஆமாடி செல்லம்"

"அப்படினா இந்த அப்பா தான அம்மா நம்மகிட்ட சாரி கேக்கணும்" என அஞ்சலி குறும்பாய் சிரிக்க

"கரெக்ட்டுடி செல்லம்" என தேவியும் சிரிப்பை அடக்கி கொண்டு கூற

"அடப்பாவிங்களா... உங்களுக்கு நாட்டாமை வேலை பாக்க வந்தா என்னை காமெடி பீஸ் ஆக்கரீங்களா அம்மாவும் மகளும் சேந்துட்டு... நாட்டாமையை அவமதிச்ச குற்றத்துக்கு ரெண்டு மாசத்துக்கு நோ Outing நோ ஐஸ்கிரீம் நோ ஜாலிடே, இதான் என்னோட புது தீர்ப்பு..." எனவும்

"நாட்டமை, தீர்ப்ப மாத்தி சொல்லு" என அம்மாவும் மகளும் ஒரே குரலில் கூற, அதன் பின் அங்கு எழுந்த சிரிப்பு அலையில் மூவரின் குரலும் சங்கமித்து ஒலித்தது

:))

Monday, March 26, 2012

'ஸ்வீட் எடு கொண்டாடு' நேரமிது...:)


'ஸ்வீட் எடு கொண்டாடு' சொல்லும் நேரமிதுனு நினைக்கிறேன். எதுக்குனு கேக்கறீங்களா? சொல்றேன் சொல்றேன்

வழக்கம் போல கொஞ்சம் மொக்கை போட்டு, கொஞ்சம் சஸ்பென்ஸ் வெச்சு அப்புறம் சொல்லலாம்னு உள்மனசு சொன்னாலும், சரி வேண்டாம் நீங்க பாவம்னு தோணுது. அதனால இப்பவே சொல்லிடறேன்

நேசம் + உடான்ஸ் அமைப்பினர் இணைந்து நடத்தின 'கேன்சர் விழிப்புணர்வு' சிறுகதை போட்டில கலந்துகிட்டு, "ஆசீர்வாதம்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை என் ப்ளாக்ல எழுதினேன். அதை நீங்க படிச்சு இருப்பீங்கனு நினைக்கிறேன்

அந்த கதைக்கு 'முதல் பரிசு' கிடைச்சுருக்கு. வாய்ப்பளித்த நேசம் அமைப்பினருக்கு மனமார்ந்த நன்றிகள். மற்ற பரிசு பெற்ற எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்

பரிசு பற்றிய அறிவுப்புக்கான லிங்க் இதோ - கதை போட்டி முடிவுகள்

கதைக்கான லிங்க் இதோ - ஆசீர்வாதம்... (சிறுகதை)

நேசம் அமைப்பினரின் பணிகள் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

டியர் ப்ளாக் உலக சகோஸ், உங்க எல்லாரோட சப்போர்ட் தான் எனக்கு எழுதறதுக்கான டானிக்னு சும்மா பார்மாலிட்டிக்கு சொல்லலை, உண்மை அது தான்

நான் போடற போஸ்ட்க்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லைனா எழுதற இண்டரெஸ்ட் கம்மி ஆய்டும், I guess thats how any blogger would feel

இன்னும் தெளிவா சொல்லணும்னா (கொழப்பனும்னா) "There is a direct relationship between..." சரி சரி, வேண்டாம் விடுங்க. இன்னைக்கி ஒரு நாள் நீங்களும் ஹாப்பியா இருக்கணும்னு நினைக்கறதால இதோட நிறுத்திக்கறேன்...;) 
 
Jokes apart, special thanks to all of you... 

'என்னமோ, ஆஸ்கர் மேடைல பேசற மாதிரி ஒரு பில்ட்-அப் காட்றியே அப்பாவி'னு நீங்க சொல்றது எனக்கு புரியுது...:)

இருந்தாலும், 'முதல் நட்பு', 'முதல் வீடு', 'முதல் வேலை' இந்த மாதிரி 'முதல்'கள் எப்பவும் நினைவில் நிற்கும். இந்த வரிசையில், ப்ளாக் எழுத வந்தப்புறம் முதன் முறையாய் கிடைத்த இந்த பரிசு கொஞ்சம் ஸ்பெஷல் தானே

கல்லூரி நாட்களுக்கு பின் போட்டி / பரிசு அதெல்லாம் மறந்தே போச்சுனு தான் சொல்லணும். ரெம்ப நாளைக்கு அப்புறம் கிடைச்ச இந்த பரிசு, ரெம்ப சந்தோசத்தை தந்திருக்கு

Happiness doubled when shared இல்லையா? So, உங்ககிட்ட ஷேர் பண்ணிகிட்டதுல இந்த மகிழ்ச்சி ரெட்டிப்பு ஆய்டுச்சு

Lately, எழுதறதுல இருந்த சுணக்கம் இனி கொஞ்சம் சரியாகும்னு தோணுது. நன்றி எல்லாருக்கும்

(மைண்ட்வாய்ஸ் : சுணக்கம் சரியாகும்னா, அப்ப இனி நெறைய போஸ்ட் வருமோ... ஹ்ம்ம், நம்ம கவலை நமக்கு. இருந்தாலும், ரெம்ப சந்தோஷம் அப்பாவி. உன் ஸ்டைல்'லையே சொல்லணும்னா, ஜோக்ஸ் அபார்ட் & ஹார்ட்டி கங்க்ராட்ஸ்...:)

என்றும் அன்புடன்,
புவனா (எ) அப்பாவி...:)

Friday, March 16, 2012

ரங்கமணிகள் - ஒரு ஆய்வு - க.மு Vs க.பி (பார்ட்-2 )....;)))))))))
க.மு Vs க.பி போட்டு ரெம்ப நாளாச்சுங்... அதான் போடலாம்னுங்...;)

மைண்ட்வாய்ஸ் - அதென்ன புது பிராண்ட் காப்பிதூளா? யாரு பிராண்ட் அம்பாசிடர்? சூர்யா ஜோதிகாவா?

அப்பாவி - அம்பாசிடரும் இல்ல பென்ஸும் இல்ல... என்ன நீ, க.மு Vs க.பி மறந்துட்டியா... இங்க போய் ரிப்ரெஷ் பண்ணிட்டு வா... இல்லேனா நாலு இட்லி கெட்டி சட்னி சாப்பிடணும்...

மைண்ட்வாய்ஸ் - ஐயோ வேண்டாம் வேண்டாம்... நீ குடுத்த அதிர்ச்சில எனக்கு ஞாபகம் வந்துடுச்சு

அப்பாவி - அதிர்ச்சில ஞாபகம் போகத்தானே செய்யும்... எப்படி வரும்?

மைண்ட்வாய்ஸ் - அது மத்த அதிர்ச்சிக்கு... இந்த அதிர்ச்சிக்கு இதான்... க.மு'னா கல்யாணத்துக்கு முன், க.பி'னா கல்யாணத்துக்கு பின்... கரெக்ட்?

அப்பாவி - ஆர் யு ஸூர்? லாக் பண்ணிடலாமா?

மைண்ட்வாய்ஸ் - பெரிய சூர்யானு நெனப்பு

அப்பாவி - பின்ன? நாங்கல்லாம் ஒரே ஊர் தான? (என அப்பாவி இல்லாத காலரை தூக்கிவிட்டு கொள்ள)

மைண்ட்வாய்ஸ் - ஒரு ஊர்ல நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்...அதுக்கென்ன பண்றது (என முணுமுணுக்க)

அப்பாவி - என்னது?

மைண்ட்வாய்ஸ் - ஒண்ணுமில்ல நீ மேட்டரை சொல்லு

அப்பாவி - ம்... விசியத்துக்கு போவோம்.... க.மு Vs க.பி'னா கல்யாணத்துக்கு முன் Vs கல்யாணத்துக்கு பின். அதாவது ரங்கமணிகள் ஒரே situation ஐ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி ஹீரோ மாதிரி டீல் பண்ணுறாங்க, அதே கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி (!!!!?????) மாறி போய்டராங்கங்கறதை இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னை போன்ற அப்பாவி தங்கமணிகள் சார்பாக எடுத்து இயம்பவே இந்த பதிவு (இது போன பதிவுல இருந்து காபி அடிச்ச செண்டன்ஸ்...:)

ஒரு கற்பனைக்கு நாம பேச போற ஜோடி பேரு கெளதம்-ப்ரியா'னு வெச்சுப்போம், சும்மா ஒரு எபக்ட்'க்கு தான். இப்ப ஒரே கேள்விய மிஸ்டர். கெளதம்'கிட்ட கல்யாணத்துக்கு முன் கேட்டா என்ன பதில் வரும், கல்யாணத்துக்கு ஒரு வருசத்துக்கு பின் கேட்டா என்ன பதில் வரும்னு ஒரு சின்ன கற்பனை... ஸ்டார்ட் மீசிக்....;))

***************************************

கேள்வி 1 : ப்ரியாகிட்ட உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன கெளதம்?

கல்யாணத்துக்கு முன் : ம்... (கொஞ்சம் யோசித்து) அப்படி எதுவும் பெருசா இல்ல... ஒண்ணு வேணா சொல்லலாம், என்னை பத்தி ரெம்ப யோசிச்சு டென்சன் ஆய்டுவா, அவ்ளோ அக்கறை என் மேல

கல்யாணத்துக்கு பின் : அடிசனல் சீட் குடுப்பீங்களா இந்த ஏன்சர்க்கு... அட போங்க பாஸ், அது இருக்கு ஒரு மொழத்துக்கு. முக்கியமா சொல்லணும்னா, எப்ப பாத்தாலும் நான் என்ன பண்றேங்கறதே யோசனை, அதை வெச்சே டார்ச்சர். மனுஷனுக்கு ப்ரைவசியே போச்சு... ச்சே

***************************************

கேள்வி 2 : கெளதம், ப்ரியாகிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம்?

கல்யாணத்துக்கு முன் : எதையும் மனசுல வெச்சுக்க மாட்டா, அப்படியே பேசிடுவா... எனக்கு அந்த வெளிப்படையான குணம் ரெம்ப பிடிக்கும்... சோ ஸ்வீட் யு நோ...

கல்யாணத்துக்கு பின் : சரியான பஜாரிங்க அது... கொஞ்சம் கூட முகதாட்சண்யமே பாக்காம பிசாசு மாதிரி திட்டும். அடுத்தவன் மனசு எவ்ளோ பீல் பண்ணும்னு யோசிக்கவே மாட்டா ராட்சசி

***************************************

கேள்வி 3 : ஒருவேள ப்ரியா உங்களுக்கு கிடைக்காம இருந்துருந்தா?

கல்யாணத்துக்கு முன் : ப்ளீஸ், விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. என்னாலே நெனச்சே பாக்க முடியல. My life will not be complete without her

கல்யாணத்துக்கு பின் : ஹும்....(பெருமூச்சு) என்னத்த யோசிச்சு என்னத்த... போங்க பாஸ், நமக்கேது அந்த அதிஷ்டம் எல்லாம். My life is 'completed' with her

***************************************

கேள்வி 4 : ரெண்டு பேரும் ஒரு நாளைக்கி எவ்ளோ நேரம் போன்ல பேசுவீங்க Mr. கெளதம்?

கல்யாணத்துக்கு முன் : அது கணக்கே இல்லங்க... எவ்ளோ நேரம் பேசாம இருப்போம்னு கேட்டா ஈஸியா சொல்லிடலாம்... என்னமோ தெர்ல, எவ்ளோ பேசினாலும் கட் பண்ணவே மனசு வராது. போன் பாட்டரி தீந்து நின்னாதான் உண்டு

கல்யாணத்துக்கு பின் : அது வேறயா... எப்படியும் சாயங்காலம் வீட்டுக்கு வந்து அந்த கொடுமைய அனுபவிச்சு தானே ஆகணும். உண்மைய சொல்லணும்னா இப்பவெல்லாம் நான் போனை வீட்லயே வெச்சுட்டு போய்டறேன்

***************************************

கேள்வி 5 : உங்களுக்குள்ள சண்டை வருமா?

கல்யாணத்துக்கு முன் : சும்மா செல்ல சண்டைகள் அப்ப அப்ப வர்றது தான், அதானே லைப்ல சுவாஷ்யத்த கூட்டும், மத்தபடி சீரியஸ் சண்டைகள் எப்பவும் வந்ததில்ல. அவளுக்கு கோபம் வரும் ரெம்ப கியூட்டா இருப்பா, அதை பாக்கவே செல்ல சண்டை போடலாம்னு தோணும்

கல்யாணத்துக்கு பின் : வருமாவா? நல்லா கேட்டீங்க போங்க, அது வராம இருந்தாத்தான் அதிசயம். சரியான பிடிவாதம். அவளுக்கு கோபம் வந்தா மனுஷன் பாப்பானா, அதுக்கே கண்ணு முன்னாடி நிக்காம வெளிய போய்டுவேன்

***************************************

கேள்வி 6 : ப்ரியா சமையல்ல உங்களுக்கு பிடிச்சது?

கல்யாணத்துக்கு முன் : என்னங்க கேள்வி இது? ஏன் ப்ரியாதான் சமைக்கணுமா? இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க? அவள உள்ளங்கைல வெச்சு தாங்கனும்னு நான் நெனச்சுட்டு இருக்கேன். ஆனா இந்த விஷயம் சொல்லியே ஆகணும், நான் ஒரு வாட்டி அவங்க வீட்டுக்கு போய் இருந்தப்ப ஆனியன் பஜ்ஜி செஞ்சுருந்தா, செம டேஸ்டி... சந்தோசத்துல எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு போங்க (ஒரே Feeling)

கல்யாணத்துக்கு பின் : அட ஏங்க நீங்க வேற அந்த வயிதேரிச்ச்சலை கொட்டிக்கறீங்க? அநியாயத்துக்கு சமத்துவம் பேசுவா... ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா ஒரு வெங்காய பஜ்ஜி செய்யணும்னா கூட நான் வெங்காயம் வெட்டி தரணும் அவ பஜ்ஜி போடுவா... வெங்காயம் வெட்டி வெட்டியே கண்ணுல தண்ணி நிக்கலங்க (இங்க Peeling & Feeling)

***************************************

கேள்வி 7 : ப்ரியாகிட்ட நீங்க அடிக்கடி சொல்றது?

கல்யாணத்துக்கு முன் : ஐ லவ் யு

கல்யாணத்துக்கு பின் : ஐ ஹேட் யு

***************************************

கேள்வி 8 : ப்ரியா உங்ககிட்ட அடிக்கடி கேக்கற கேள்வி?

கல்யாணத்துக்கு முன் : டூ யு லவ் மீ? இதான் தினமும் கேப்பா. ஒரு ஒரு வாட்டி அவ இதை கேக்கும் போதும் இன்னும் லவ் அதிகமாய்டும் எனக்கு

கல்யாணத்துக்கு பின் : டூ யு லவ் மீ? இதான் தினமும் கேப்பா. சரியான சந்தேக பிராணிங்க அது, தினமும் கேட்டு கேட்டு கன்பார்ம் பண்ணிக்கணும் அவளுக்கு... ஹும்

***************************************

கேள்வி 9 : கெளதம், நீங்க ப்ரியாவை செல்லமா கூப்பிடறது?

கல்யாணத்துக்கு முன் : ம்... ஒண்ணு ரெண்டு இருந்தா சொல்லலாம்... அது பெரிய லிஸ்ட் இருக்கே. சாம்பிள்'க்கு 'ஸ்வீட்டி', 'ஏஞ்சல்', 'பேபி' இப்படி சில

கல்யாணத்துக்கு பின் : ஹ்ம்ம்... அது ஒண்ணு தான் கொறச்சல். பேசினாலே சண்டை தான் வரும், இதுல எங்கத்த செல்லமா கூப்பிடறது?

***************************************

கேள்வி 10 : லாஸ்ட் கொஸ்டின்... Mr. Gowtham, Define Wife?

கல்யாணத்துக்கு முன் : No life without wife

கல்யாணத்துக்கு பின் : Wife is a knife to cut your life

***************************************

இந்த பத்து போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா...:)

Disclaimer Statement: (copied from Part 1) இந்த பதிவை படிச்சதும்.... அதன் விளைவாக உங்கள் வீட்டில் நடக்கும் அடிதடி, சட்டி பானை பாத்திர சண்டை, இன்னும் மற்ற பிற (!!!???) விளைவுகளுக்கு அப்பாவியின் ப்ளாக் பொறுப்பில்ல... இந்த Disclaimer Statement மூலமாக சொல்லி கொள்வது என்னவென்றால் கேஸ் கோர்ட் எல்லாம் செல்லாது செல்லாது செல்லாது... (ஹி ஹி ஹி)

இப்படிக்கு,
முன்ஜாக்கிரதை மற்றும் முன் ஜாமீன் புகழ் - அப்பாவி தாங்க்ஸ்

(தொற்றும்)
(தொடருமா முற்றுமானு தெரிலங்க... So, ரெண்டும் சேத்து "தொற்றும்"னு முடிச்சுட்டேன்...:)

ரங்கமணிகள் - ஒரு ஆய்வு - க.மு Vs க.பி (பார்ட்-1 ) படிக்க இங்கே கிளிக்கவும்