Friday, February 24, 2012

சுயம்... (சிறுகதை)


வீட்டுக்குள் நுழையும் போதே அங்கிருந்த அதீத அமைதி வாசுவுக்கு ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தியது

தங்கள் அறையில் புத்தக குவியல்களின் மத்தியில் சரிந்து அப்படியே தூங்கி இருந்த மனைவியை பார்த்தவனுக்கு மெல்லிய புன்னகை அரும்பியது

அம்மாவிடம் கோபித்து கொண்டு சுருண்டு படுத்திருக்கும் பிள்ளை போன்ற அவளின் தோற்றம் அப்படியே அள்ளி கொள்ள சொல்லியது. ஆனால் தூங்குபவளை எழுப்ப மனமின்றி மௌனமாய் வெளியேறினான்

சிறிது நேரத்திற்கு பின், "தூங்கினா எழுப்ப மாட்டீங்களா? தொல்லை விட்டதுனு நிம்மதியா இருந்துப்பீங்க இல்ல" என்ற அவளின் குற்றம் சாட்டும் குரல் கேட்டு கணினியில் இருந்து பார்வையை திருப்பியவன், அருகில் வா என செய்கை செய்தான்

"ஏன்? அத வாய தெறந்து சொன்னா முத்து உதுந்துடுமா?" என்றாள் எரிச்சலுடன்

"என்ன? இன்னிக்கி சண்டை போடற மூட்ல இருக்கியா?" என வாசு சிரித்து கொண்டே கேட்க

"ஆமா, என்னை பாத்தா எல்லாருக்கும் இளக்காரம் தான்" எனும் முன் கண்ணில் நீர் துளிர்க்க, ராதிகா மீண்டும் அறைக்குள் திரும்பி சென்றாள்

அதற்கு மேல் அமர்ந்திருக்க மனமின்றி எழுந்து உள்ளே சென்றவன், முழந்தாலிட்டு அமர்ந்து அதில் முகத்தை புதைத்து இருந்தவளை ஆதரவாய் அணைத்தபடி அருகில் அமர்ந்தான். அவன் ஸ்பரிசம்பட்டதும் கோபம் அதிகமாக அவனை விலக்கினாள்

"என்ன ராதிம்மா? என்ன கோபம் இப்போ?"

"...."

"ராதி... இங்க பாரு.. எதுவானாலும் மனசுவிட்டு சொல்லு, இப்படி நீயும் டென்சன் ஆகி என்னையும் டென்சன் பண்ணினா என்ன பண்றது?" என்றான் தன்னை வருத்தி கொள்கிறாளே என்ற கோபத்துடன்

"ஆமா, என்னால யாருக்கும் நிம்மதி இல்ல, பிரச்சன தான்" என விசும்பலுடன் கூற

"ஏய்... யாரு அப்படி சொன்னது. அதெல்லாம் இல்லடா. அவுட் வித் இட், என்னனு சொல்லு ராதிம்மா"

"நான் சொன்னா நீங்க கிண்டல் தான் பண்ணுவீங்க. லீவ் மீ அலோன்"

"என்னடா இது, நீ இப்படி டென்சனா இருக்கும் போது கிண்டல் பண்ணுவேனா, சொல்லு" மெல்ல அவள் கையை எடுத்து தன் கைக்குள் புதைத்தவாறே கேட்டான்

அந்த செய்கை அவளை நெகிழ செய்ய, மெல்ல அவன் தோளில் சாய்ந்தவள் "எனக்கு யார் கூடவும் பேச பிடிக்கல. யாரையும் நம்ப முடியல. எல்லாரும் வேஷம் போடறாங்களோனு தோணுது. ஏம்ப்பா இப்படி?"

"யாரை பத்தி பேசறேன்னு புரிஞ்சாதானே என்னோட ஒபினியன் சொல்ல முடியும் ராதி"

"எல்லாருமே... என் கூட பேசற பழகற எல்லாருமே. தேவைனா பேசறாங்க, தேவை தீந்தா யாரோ மாதிரி நடந்துக்கறாங்க. இப்பகூட அப்படிதான். என் கூட வேலை செய்யற அனிதா உங்களுக்கு தெரியும் தானே. ஆரம்பத்துல நான் எல்லார்கிட்ட மாதிரி தான் அவகிட்டயும் இருந்தேன். அவளே வந்து இழுத்து வெச்சு பேசினா, ரெம்ப க்ளோசா பழகினா. சரின்னு நானும் அதே போல பழக ஆரம்பிச்சேன். இப்ப திடீர்னு அவ எனக்கும் அவளுக்கும் சம்மந்தமில்லாத மாதிரி நடந்துக்கறா. ஏன் இப்படி?"

"இதுக்கு ஏன் நீ டென்சன் ஆகற? அவளுக்கு நீ தேவை இல்லைனா உனக்கும் அவ தேவை இல்லைனு போக வேண்டியது தானே"

"அதெப்படிங்க அப்படி சட்டு சட்டுன்னு மனச மாத்திக்க முடியும்"

"பின்ன, நீ என் பிரெண்டா தான் இருக்கணும்னு போராட்டம் நடத்த போறியா...லூசு..." என சிரித்து கொண்டே செல்லமாய் அவள் தலையில் கொட்ட

"இதான்... இதான் சொன்னேன், கிண்டல் பண்ணுவீங்கனு.. ச்சே... விடுங்க" என ராதிகா விலக

"ஏய்... இதான் நீ என்னை புரிஞ்சுக்கற லட்சணமா? நான் என்ன சொல்ல வரேன்னா, உன்னை வேண்டாம்னு ஒருத்தங்க விலக்கினா அது அவங்களுக்கு தான் லாஸ்னு அவங்களுக்கு புரியலைன்னு அர்த்தம்"

"இவ மட்டும் இல்ல, நெறைய பேர் இப்படி தான். நல்லா பேசினா உடனே நம்மள சீப்பா பாக்கறாங்க. நல்லா பேசி பழகரதுல என்னங்க தப்பு. அப்ப பந்தாவா மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு இருந்தா ரெம்ப புத்திசாலினு அர்த்தமா? நானும் அப்ப எல்லாரோடவும் அளவா வெச்சுக்கணுமா?"

"அப்படி இல்லடா, சிலரோட மென்டாலிட்டி அப்படி. மத்தவங்களுக்காக உன்னோட நேச்சரை நீ ஏன் மாத்திக்கணும்னு நினைக்கற?"

"வேற என்னங்க செய்யறது. சும்மா இருந்தாலும் இழுத்து வெச்சு பேசிட்டு அதுக்கு நான் சொல்ற பதிலை மத்தவங்ககிட்ட போய் விமர்சனம் பண்றாங்க. எரிச்சலா இருக்கு"

"ஜஸ்ட் இக்னோர் தம்"

"அப்படி இருக்க முடியலங்க. அவங்க சுயநலத்துக்காக என்னை கேலி பொருள் ஆக்கறாங்கனு தோணுது. ஒருவேள என்கிட்ட தான் ஏதோ தப்போனு தோணுதுப்பா" என்றாள் பாவமாய்

"என்ன ராதி நீ, எவ்ளோ கான்பிடென்டா இருப்பே, இப்ப இப்படி பேசறியே. உன்னோட திறமை / கெபாசிட்டி என்னனு உனக்கு தெரியாதா? ஆபீஸ்ல பெஸ்ட்னு பேர் வாங்கி இருக்க, அழகா பேசற, ரசனையா சமைக்கற, சமயத்துல டைம் மேனேஜ் பண்றதை நான் உன்ன பாத்து தான் கத்துக்கறேன். யாருக்கு என்ன பிரச்சனைனாலும் முதல் ஆளா போய் ஆறுதல் சொல்ற, எந்த விஷயம்னாலும் மணிக்கணக்குல விவாதிக்க தெரியும் உனக்கு. எல்லாத்துக்கும் மேல அட்டகாசமா வரையற. பெரிய ஆர்டிஸ்ட் ஆகணும்னு லட்சியம் எல்லாம் வெச்சிருக்க. இப்படி பேசினா எப்படி?" என்றான் கோபமாய், தன்னை தானே தாழ்த்தி கொள்கிறாளே என்ற வருத்தத்தில்

"ஆமா, Jack of all master of none" என்றாள் சலிப்பாய்

"அப்படி இல்ல ராதி, சில சமயத்துல எனக்கே உன்னை பாத்தா பொறாமையா இருக்கும்"

"சும்மா சமாதானம் பண்ணனும்னு சொல்றீங்க" என்றாள் நம்பாத குரலில்

"அப்ப என் மேல நம்பிக்கை இல்லையா?"

"அதில்லைங்க...."

"நான் ஒண்ணு சொல்லட்டுமா, ஒரு ஒருத்தருக்காகவும் நீ உன்னை மாத்திகிட்டே இருந்தா உன்னோட சுயம் காணாம போய்டும் ராதி. ஒரு அளவுக்கு தான் ஊரோட ஒத்து வாழ முடியும். அதுவும் இப்படி பச்சோந்திதனமா இருக்கரவங்களுக்காக நீ உன்னை வருத்திக்க வேண்டிய அவசியமே இல்ல. இவங்கள பத்தி யோசிச்சு டென்சன் ஆகி நேரத்தை வீணடிக்கரத விட, அந்த நேரத்துல உனக்கு பிடிச்ச ஆர்ட்  வேலையை செய். 10000 hours of practice makes a geniusனு ஒரு saying இருக்கு தெரியுமா. அதாவது, நாம எதுல பெஸ்ட்னு நமக்கு நம்பிக்கை இருக்கோ, அதுல பத்தாயிரம் மணி நேரம் முழுசா செலவழிச்சா நிச்சியம் அதுக்குள்ள சாதிச்சு இருப்போம்னு அர்த்தம். இப்படி productive thinking இருக்கறவன் சாதிக்கறான், அதே மத்தவங்க விமர்சனங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கறவன் முன்னேறாமையே போயிடறான். இதான் வித்தியாசம். புரியுதா?" என சிறு பிள்ளைக்கு சொல்வது போல் பொறுமையாய் கூறினான் வாசு

"...." அவள் ஒன்றும் பேசாமல் மௌனமாய் யோசனையில் மூழ்கினாள். யோசிக்கட்டும் என நினைத்தவன் போல் அவ்விடத்தை விட்டு அகன்றான்

சிறிது நேரத்தில் அவனருகே வந்து அமர்ந்து சலுகையாய் தோளில் சாய்ந்து கொள்ள, அவனும் மௌனமாய் அணைத்து கொண்டான்

"நீங்க சொன்னது ரெம்ப கரெக்ட்" என்றவளின் குரலில் டிவியில் இருந்து பார்வையை விலக்கியவன்

"ஆஹா... இன்னைக்கி மழை வரும், அதிசயமா நான் சொன்னது கரெக்ட்னு சொல்லிட்ட" என அவன் கேலியாய் கூற

"ப்ச்..." என பொய்யாய் சலித்தவள் "இனிமே தேவை இல்லாம டென்ஷன் ஆகறத விட்டுட்டு productiveஆ யோசிக்க போறேன்னு சொல்ல வந்தேன்" என்றாள் தன்னம்பிக்கையுடன்

"தட்ஸ் குட்... ஐ நோ யு ஆர் ஸ்மார்ட்" என பெருமையுடன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்

"தேங்க்ஸ்" என சிரித்தாள்

"அப்புறம் ராதி, நான் இன்னொன்னு கூட சொன்னனே... அதுவும் கரெக்ட் தானே?" என அவன் கேட்க

"என்ன?" என்றாள் புரியாமல்

"உனக்கென்ன செலக்டிவ் அம்னீசியாவா? அதாம்மா, நீ லூசுனு சொன்னனே, அதுவும் கரெக்ட் தானே?" என குறும்பாய் சிரித்தபடி அவன் கேட்க

"உங்கள..." என பொய் கோபத்துடன் டிவி ரிமோட்டை அவனிடமிருந்து பறித்து வலிக்காமல் அடித்தாள்

"ஏய் ஏய்... கவுன்சலிங் பண்ணினதுக்கு இதான் பீஸா...ரெம்ப அநியாயம்"

"ஆஹா, இவர் பெரிய டாக்டர், கவுன்சலிங்காம்... நெனப்பு தான்" பெருமிதமான பார்வையை அவன் மீது செலுத்தியபடியே பழித்தாள்

அதை ரசித்தவன் "என்னமோப்பா, பெரிய ஆளானப்புறம் இதையெல்லாம் மறக்காம இருந்தா சரி தான்" என அவன் பாவமாய் கூற

எதையும் மறக்க மாட்டேன் என செய்கையால் கூறுவது போல் ஒன்றும் பேசாமல் அவன் அணைப்பில் தன்னை இணைத்து கொண்டாள் ராதிகா

வார்த்தைகளின் அவசியமற்ற அந்த புரிதலில் காதலுடன் அவளை அணைத்து கொண்டான் வாசு

(முற்றும்)

Tuesday, February 21, 2012

சின்ன தாயவள்...(சிறுகதை)
வல்லமை இதழில் இந்த கதை பிரசுரிக்கப்பட்டது, வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு எனது நன்றிகள். அதன் சுட்டி இங்கே


"ப்ரியா செல்லம், எந்திரிம்மா. டைமாச்சு" என்ற அவள் அம்மா கவிதாவின் கொஞ்சல் குரலில்

"ஹும்ஹும்..." என மழலையில் சிணுங்கினாள் ப்ரியா

"ப்ரியா..." என அதட்டலாய் உலுக்கி எழுப்பி, பிள்ளையின் கை கால் உதறலை பொருட்படுத்தாது தூக்கி சென்று குளிக்க செய்து மீண்டும் அறைக்குள் தூக்கி வந்தாள் அவள் அம்மா

"எனக்கு இந்த டிரஸ் வேணா" என ப்ரியா அவள் அம்மாவின் கையில் இருந்த உடையை தட்டி விட

அதே நேரம் "கவிதா... மணி ஆறே முக்காலாச்சு... ஏழரைக்கு கெளம்பினா தான் ப்ரியாவ டேகேர்ல விட்டுட்டு போக கரெக்டா இருக்கும்... Hurry up" என கீழறையில் இருந்து குரல் வர

"அங்க நின்னுட்டு கத்தற நேரம் இங்க வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல... உக்காந்துட்டே அதிகாரம் பண்ணுங்க" என்றாள் எரிச்சலாய்

"நான் உக்காந்துட்டு அதிகாரம் பண்றேன்... நீ நின்னுட்டு பணிவா பேசறியோ?" என கேலியாய் கேட்டபடி பிரவீன் படி ஏறி வர

"பிங்க் ட்ரெஸ்... பிங்க் டிரஸ்... பிங்க் டிரஸ்..." என ப்ரியா கத்தியபடி குதிக்க

"ரெண்டு வயசுக்கு இவ்ளோ பிடிவாதம் ஆகாதுடீ... அப்படியே அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கு" என முணுமுணுத்தாள்

"திட்டரதுன்னா நேரா திட்டு... ஏண்டி என் செல்லத்த சாக்கா வெச்சுட்டு திட்ற" என்றபடி அறைக்குள் நுழைந்தவன் பொய் கோபத்துடன் மனைவியை முறைத்துவிட்டு "நீ வாடி செல்லம்.. உனக்கு எந்த டிரஸ் வேணுமோ சொல்லு, டாடி போட்டு விடறேன்" என மகளை தூக்கி கொண்டான்

"ஐ லவ் யு டாடி" என மகள் அன்பாய் தந்தையின் கன்னத்தில் இதழ் பதிக்க

மனம் நெகிழ "ஐ லவ் யு டூ ஸ்வீட்ஹார்ட்" என பிள்ளையை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான் பிரவீன்

"கொஞ்சினது போதும்... சீக்கரம் டிரஸ் பண்ணி கூட்டிட்டு வாங்க..." என கவிதா கூற

"உன் மம்மிக்கு பொறாம, உன்னை மட்டும் கொஞ்சறேன்னு" என பிரவீன் கூற, வெளிய செல்ல திரும்பிய கவிதா திரும்பி அவனை முறைத்தாள், பிரவீன் மனைவியின் கோபத்தை ரசித்தபடி கண் சிமிட்டி முறுவலித்தான்

"மம்மிக்கு பொறாம" என தந்தை கூறியதையே ப்ரியாவும் மழலையில் கூற, கவிதா சிரித்துவிட்டாள்

சிறிது நேரத்தில் பிரவீன் மகளுடன் தயாராய் வர, "பிரவீன், ப்ரியாவ ஹை-ஷேர்ல உக்கார வெச்சுட்டு அவ ஷூ சாக்ஸ் எல்லாம் கொஞ்சம் எடுத்து வெயுங்க சீக்கரம்" என பரபரப்புடன் கையில் உணவு கிண்ணத்துடன் வந்தாள் கவிதா. சொன்னபடி மகளை அமர செய்து விட்டு முன்னறைக்கு சென்றான் பிரவீன்

"ம்... இந்தா..." என ஸ்பூனை அருகே கொண்டு செல்ல, தலையை இடமும் வலமும் அசைத்தபடி "ஐ வான்ட் நூடுல்ஸ்" என்றது குழந்தை

"ப்ரியா... ஒழுங்கா வாய தெற" என அதட்டியபடி வாயில் திணித்தாள் கவிதா. அடுத்த நொடி ப்ரியா முகம் சுளித்து துப்ப, தன்னை மீறிய கோபத்தில் பிள்ளையின் முதுகில் ஓங்கி அடித்தாள் கவிதா

ப்ரியா பெருங்குரலெடுத்து அழ தொடங்க, சத்தம் கேட்டு உள்ளே வந்த பிரவீன் "என்னடா கண்ணா? ஏன் அழற?" என மகளை அணைக்க

"ம...மம்மி... பீட் மீ..." என தேம்பலுடன் கூறினாள்

"அத மட்டும் சொல்லு... ஏன் அடிச்சேன்னு சொல்லிடாத?" என்றாள் கவிதா கோபமாய்

"என்ன கவிதா இது? எத்தன வாட்டி சொல்றது உனக்கு, காலைல நேரத்துல அவள அழ வெக்காதனு" என்றான் சற்றே கோபமாய்

"எனக்கு அவள அழ வெக்கணும்னு ரெம்ப ஆசை பாருங்க" என்றாள் எரிச்சலாய்

"இப்ப என்ன பிரச்சன?" என்றான்

"நூடுல்ஸ் தான் வேணுமாம். இது சாப்பிட மாட்டாளாம்"

"அவளுக்கு பிடிச்சத குடுக்க வேண்டியது தான"

"அவ சொல்றபடியெல்லாம் ஆடிட்டே இருந்தா இன்னும் அதிகமா சொன்ன பேச்சு கேக்காம தான் அடம் பிடிப்பா"

"உன் புத்தி கொஞ்சமாச்சும் நம்ம பொண்ணுக்கும் இருக்குமல்ல" என கேலியாய் கூற

கவிதா இருந்த மனநிலையில் அவன் கேலி கோபத்தை தூண்ட "ஆமா... எல்லா தப்பும் என்னோடது தான்" என கோபமாய் கூறியவள் அவனை தவிர்த்து உள்ளே சென்றாள்

ப்ரியாவை சமாதானம் செய்ய அவள் கேட்டபடி ஒரு குக்கியை(பிஸ்கட்) அவள் கையில் கொடுத்துவிட்டு மனைவியை நோக்கி சென்றான் பிரவீன்

நூடுல்ஸ் செய்து கொண்டிருந்தவள் அவன் உள்ளே வந்ததை உணர்ந்தும் கண்டும் காணாதது போல் மௌனமாய் இருந்தாள்

"ஏய்... கோவமா?" என அவளை அணைத்தபடி கேட்க, அவள் பதில் சொல்லாமல் அவன் கையை தட்டி விட்டாள்

"என்ன கவி இது? இதுக்கு போய் டென்சன் ஆகற. ப்ரியா அழறத பாத்தா மூட் அவுட் ஆய்டுதுடா. அதான் அவ கேக்கறதையே குடுக்கலாமேனு சொன்னேன். இன்னும் கோபம்னா சாரி" என்றான்

"கோபமெல்லாம் இல்ல... நீங்க ரெம்ப செல்லம் குடுத்து அவள கெடுக்கறீங்க, அதான் பயமா இருக்கு" என்றாள் சமாதானமான குரலில்

"இன்னும் சின்ன கொழந்த தானே கவி. கொஞ்சம் பெருசான சரியாயிடும்" என்றான்

"முப்பது வயசாகியும் எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் சரியான மாதிரி தெரில" என்றாள் கேலியாய் அவனை பார்த்தபடி

"கொழுப்புடி உனக்கு" என்றவன் வலிக்காமல் அவள் கன்னத்தில் அடிக்க

"சரி சரி... நம்ம சண்டைய அப்புறம் வெச்சுக்கலாம். உங்க பொண்ணு இந்த நூடுல்ஸ் ஆச்சும் சாப்பிடராளானு பாப்போம்" என்றபடி நகர்ந்தாள்

அடுத்த பத்து நிமிடத்தில் மூவரும் காரில் ஏறி இருக்க, கார் டே-கேர் நடத்தும் பெண்மணியின் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது

"மம்மி" என ப்ரியா அழைக்க

"என்ன குட்டிமா?"

"டம்மி ஹர்ட்டிங்" என வயிற்றை பிடித்தபடி உதட்டை பிதுக்கி கொண்டே கூற

"உங்க பொண்ணுக்கு தினமும் இந்த நேரத்துக்கு வயிறு வலிக்கும் கண்ணு வலிக்கும் காலு வலிக்கும்...ஒண்ணு பாக்கியில்ல" என முன் சீட்டில் இருந்த கணவனிடம் முணுமுணுத்தவள்

மகளிடம் திரும்பி "டம்மி வலிக்குதா? அச்சச்சோ... ப்ரியா குட்டிக்கு இன்னிக்கி சாயங்காலம் பிரெஞ்சு பிரைஸ் வாங்கிட்டு வரலாம்னு நெனச்சனே... டம்மி ஹர்ட்டிங்னா அப்ப வேண்டாம்" என வேண்டுமென்றே பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கூற

"நோ மம்மி... டம்மி நோ ஹர்ட்டிங்... லிட்டில் ஒன்லி. பிரெஞ்சு ப்ரைஸ் வேணும்" என்றது குழந்தை

அதை கேட்டதும் பிரவீன் சத்தமாய் சிரிக்க "என்ன சிரிப்பு... எல்லாம் உங்க புத்தி தான் அப்படியே வாய்ச்சிருக்கு" என கணவனை பொய்யாய் முறைத்தவள், மகளிடம் திரும்பி "இப்ப வலிக்கலையா டம்மி" என கேட்டபடி வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட

"டிக்லிங்... நோ மம்மி... மம்மி நோ" என பெற்றவளின் கையை பற்றி தடுத்தபடி சிரிப்பில் நெளிந்தாள் ப்ரியா

மகளின் மழலை சிரிப்பில் மயங்கி அவளை கவிதா முத்தமிடவும் கார் டே-கேர் முன் நிற்கவும் சரியாய் இருந்தது

"ஒகே கொஞ்சல்ஸ் எல்லாம் இனி சாயங்காலம் வெச்சுக்கலாம்... டே கேர் வந்தாச்சு ப்ரியா குட்டி.. டாடிக்கு ஒரு ஹை-பை குடு" என பிரவீன் முன் சீட்டில் அமர்ந்தபடியே கை நீட்ட, ப்ரியா தந்தையின் கையை தட்டி சிரித்தாள்

கார் சத்தம் கேட்டு கதவை திறந்த பெண்மணியை பார்த்து "ஹாய் மார்கரெட்" என சிநேகமாய் சிரித்த கவிதா, ப்ரியாவை கீழே இறக்கி விட்டு "பை ஸ்வீட்டி" என மகளுக்கு முத்தமிட்டாள்

அதற்குள் "ப்ரியா" என உள்ளிருந்து ஒரு சிறு பிள்ளையின் குரல் கேட்க, ப்ரியா உள்ளே ஓடினாள்

*******************************************
மாலை ஆறு மணிக்கு டே கேர் வாசலில் தன் பெற்றோரின் காரை கண்டதும், ப்ரியா ஓடி வந்து தன் அம்மாவின் காலை கட்டி கொண்டாள். வீடு வந்து சேரும் வரை வாய் ஓயாமல் அன்று ஆடிய விளையாட்டுகள், போட்ட சண்டைகள், புகார்கள் என எல்லாமும் கூறி கொண்டே வந்தாள் ப்ரியா

"ரெண்டு வயசுக்கு பேச்சு கொஞ்சம் ஓவராதான் இருக்கு" என கவிதா சிரிப்புடன் கூற

"நீ ஒரு வயசுலேயே ஊரை வித்துருவேனு உங்கம்மா அன்னைக்கி சொல்லல" என பிரவீன் சமயம் பார்த்து கேலி செய்ய

"ஆமா என் செல்லம் என்னை மாதிரி தான் போங்க" என பெருமிதமாய் பிள்ளையை அணைத்து கொண்டாள்

வீட்டுக்கு வந்ததும் நேரம் இறக்கை கட்டி கொண்டு பறந்தது. உணவு முடித்து ப்ரியாவை குளிப்பாட்டி மற்ற வேலைகளை முடித்து ஆயாசமாய் உணர்ந்தாள் கவிதா

பிரவீன் ஹால் சோபாவில் அமர்ந்தபடி டிவியில் நியூஸ் பார்த்து கொண்டிருக்க, ப்ரியா தரை கார்பெட்டில் அமர்ந்து பொம்மைகளை கவிழ்த்து போட்டு விளையாடி கொண்டிருந்தாள்

கவிதா சோபாவில் அருகில் வந்த அமர, "வேற எதாச்சும் பாக்கறயா?" என டிவி ரிமோட்டை அவளிடம் நீட்டினான்

"இல்ல இதே இருக்கட்டும்" என்றாள்

"டாடி, எனக்கு பேபி எலிபென்ட் வாங்கி தர்றியா?" என்ற மகள் காலை கட்டி கொண்டு கேட்க, டிவியில் இருந்து கவனத்தை பிரித்து ப்ரியாவை தூக்கி மடியில் இருத்தி முத்தமிட்டவன் "அதென்ன பேபி எலிபென்ட். என் செல்லத்துக்கு பெரிய எலிபன்ட்டே வாங்கி தரேன் குட்டிமா" என்றான்

"நோ டாடி... பேபி தான் வேணும்" என்றாள் விடாமல்

"ஏண்டா?" என கவிதா புரியாமல் கேட்க

"மம்மி எலிபன்ட் டாடி எலிபன்ட் எல்லாம் ஆபீஸ் போய்ட்டா பாவம் பேபி எலிபன்ட் டே-கேர் போகனுமில்ல... அதை நாம வாங்கினா நான் வீட்ல இருந்து மம்மு குடுத்து ஜோ ஜோ பாடி அதை தூங்கு வெச்சு பாத்துப்பேன்ல மம்மி" என கை, கால், கண்கள் என மொத்தமும் பேச ப்ரியா அபிநயத்துடன் கூற, கவிதாவின் கண்ணில் சட்டென நீர் நிறைந்தது

"ஏய்...." என ஆதரவாய் மனைவியின் தோள் தொட்டான் பிரவீன். அதற்குள் டிவியில் ஏதோ கார்ட்டூன் வர ப்ரியாவின் கவனம் திரும்பியது

"தன்னை அந்த பேபி எலிபன்ட் நிலைல வெச்சு பாக்கராளோனு தோணுது பிரவீன், அவ மனசுல எவ்ளோ ஏக்கம் இருந்தா அந்த வார்த்தை வரும். ஆறு மாச கொழந்தையா இருந்தே டே-கேர் போறா பழகிட்டானு நாம நினைக்கிறோம். ஆனா அவ பேபி எலிபன்ட் பத்தி சொன்னத கேட்டப்ப கஷ்டமா இருக்கு பிரவீன்" என விசும்பியவளை தோளில் சாய்த்து கொண்டவன்

"கவி ப்ளீஸ், என்ன இது? வீட்ல ஒருத்தர் மட்டும் வேலைக்கு போறது ப்ராக்டிகலா நடக்குமா நீயே சொல்லு. எப்படியும் இன்னும் ஆறு மாசத்துல ஸ்கூல் போய்டுவா... அது வரைக்கும் தான. அழாத ப்ளீஸ்"

"உங்களுக்கு கஷ்டமா இல்லையா?" என தலையை உயர்த்தி கேட்ட மனைவியை அன்பாய் அணைத்தவன்

"கஷ்டமாதான் இருக்கும்மா" என்றான் வருத்தமாய்

"யோசிச்சு பாருங்க பிரவீன். நமக்கெல்லாம் மூணு வயசு வரைக்கும் தரைல விடாம அம்மாவோ பாட்டியோ பாத்துகிட்டதும், ஸ்கூல் போனப்புறம் கூட லஞ்ச் கொண்டு வந்ததும் அதெல்லாம் நம்ம பொண்ணுக்கு நாம குடுக்க முடியலையேனு கில்டியா இருக்கு பிரவீன்" என்றவளை

"கவி, ஐ.டி பீல்ட்ல நாம விலகினா அந்த இடத்தை பிடிக்க ஆயிரம் பேர் இருக்காங்க.. அது மட்டுமில்ல, பிரேக் எடுத்தா நீ இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு உருவாக்கின கரியர் போய்டும். லெட்ஸ் பி பிரக்டிகல் கண்ணம்மா, டோண்ட் கெட் எமோசனல்" என சமாதானம் செய்தான்

கவிதா மௌனமாய் தரையில் இருந்த மகளை தூக்கி எதிலிருந்தோ காப்பது போல் இறுக அணைத்து கொண்டாள்

"மம்மி மம்மி...டைனோசர் டைனோசர்..." என ஆர்வமாய் டிவி திரையை சுட்டிக்காட்டி ப்ரியா கூற

"குட்டி டைனோசர் வேணும்னு கேக்க போறா பாரு இப்போ" என பிரவீன் பேச்சை மாற்றும் பொருட்டு கேலியாய் கூற, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் கவிதா சிரித்தாள்

அதை பார்த்து ப்ரியாவும் கை கொட்டி சிரித்தாள்

(முற்றும்)

Monday, February 13, 2012

ஒரு சொல்லாவது சொல் கண்ணே... (காதலர் தின சிறப்பு சிறுகதை)"என்னங்க, இன்னைக்கி ஆபீஸ்ல என்ன நியூஸ்?"

"ஆபீஸ்ல என்ன... எப்பவும் போல தான், ஒண்ணுமில்ல'ம்மா"

"என்னைக்கு சொல்லி இருக்கீங்க இன்னிக்கி சொல்றதுக்கு... ஹ்ம்ம்..." என அவள் பெருமூச்சு விட

"அது..."

"சரி விடுங்க... எங்க ஆபீஸ்ல இன்னைக்கி புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணி இருக்கு. இப்ப தான் காலேஜ் முடிச்சுருக்கும் போல, செம ஸ்மார்ட்"

"அப்படியா?"

"ஆமா... பாக்கறதுக்கு அசப்புல எங்க அத்த பொண்ணு ரஞ்சனி மாதிரியே இருக்கு"

"அவ்ளோ கொடுமயாவா?" என அவன் சிரிக்க

"என்ன கிண்டலா? ரஞ்சனியும் நானும் சின்னதுலே இருந்தே எவ்ளோ க்ளோஸ் தெரியுமா? லீவுக்கு அத்தை வீட்டுக்கு போனா விடிய விடிய அரட்டை தான், வாயே மூட மாட்டோம்"

"இப்ப மட்டும் என்ன?" என மனதிற்குள் நினைத்து கொண்டான்

"ரஞ்சனியோட தம்பி ரமேஷ் இருக்கானே, அவன் செம வாலு சின்னதுல, ஒரு தடவ நானும் ரஞ்சனியும் மருதாணி அரைச்சு வெச்சுருந்தோம், இவன் எங்களுக்கு தெரியாம அதுல மொளகா பொடிய போட்டுட்டான் கொரங்கு. அது தெரியாம நாங்க ஆசை ஆசையா கைல காலுல எல்லாம் மருதாணி வெச்சோம். வெச்சு கொஞ்ச நேரத்துல எல்லாம் ஒரே எரிச்சல். அன்னைக்கி அத்தைகிட்ட செம அடி வாங்கினான் அவன்" என சொல்லி சிரித்தாள்

"ம்"

"நீங்க இப்படி எல்லாம் ஒண்ணும் ரகளை பண்ணினதில்லையா சின்னதுல?"

"பெருசா ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல"

"ம்... இன்னொருவாட்டி இப்படிதான் எங்க பேமிலி எல்லாம் சேந்து பழனிக்கு ட்ரிப் போய் இருந்தோம். அங்க மலை ஏறும் போது ஒரு செம காமடி" என தன் காமடியை நினைத்து தானே சிரித்து கொண்டாள் மாளவிகா

"ம்"

"எவ்ளோ இண்டரெஸ்ட்டா சொல்லிட்டு இருக்கேன், நீங்க சுவாரஷ்யமே இல்லாம ம் கொட்டறீங்க" என அவள் முறைக்க

"சொல்லு சொல்லு ரெம்ப ஆர்வமாத்தான் கேட்டுட்டு இருக்கேன்" என்றான் வழிய வரவழைத்து கொண்ட சிரிப்புடன்

உற்சாகமாகி "என் ரெண்டாவது அத்தையோட பொண்ணு ராதாவுக்கு கொரங்குன்னா ரெம்ப பயம்..."

"உன்னை பாத்த பின்னாடியுமா?" என மனதிற்குள் நினைத்து கொண்டான், சத்தமாய் சொல்லி சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ள விரும்பவில்லை

"என்ன மாயமோ தெரில, அங்க இருந்த கொரங்கு எல்லாமும் அவளையே வெரட்டுச்சு, இனம் இனத்தோட சேரும்னு சொல்லி அவளை செம ஓட்டு ஓட்டினோம். என் பக்கம் ஒண்ணு கூட வர்ல தெரியுமா?" என்றாள் பெருமையாய்

"அப்படியா? அது கூட உன்னை பாத்து பயந்திருக்கு பாரேன்" என அவன் உள் அர்த்தத்துடன் கூற

அவள் அதை புரிந்து கொள்ளாமல் "தேங்க்ஸ்" என்றாள் மகிழ்வாய், ஏதோ ஜனாதிபதி விருது வாங்கியது போல்

"போன மாசம் ரமேஷ் கல்யாணத்துல பாத்தப்ப கூட இதை சொல்லி ராதாவை ஓட்டினோம், ஹ்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். அப்புறம் ராதாவோட அண்ணா ரவி இருக்கானே, எனக்கும் அவனுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். எப்பவும் சண்டை போட்டுட்டே இருப்போம்" என்றாள் சிரிப்புடன்

"நீ யார் கூட தான் சண்டை போடாம இருந்தே" என மனதிற்குள் நினைத்து கொண்டான்

"ஐயையோ...மறந்தே போய்ட்டேங்க..." எனவும்

"என்ன? உன் மாமா பொண்ணு மஞ்சு கூட மெட்ராஸ் பீச்ல மணல் வீடு கட்டினது தானே...அதை நீ ஏற்கனவே மூணு வாட்டி சொல்லிட்டியே மாலு" என்றான் பாவமாய் முகத்தை வைத்தபடி

"ஐயோ அதில்லைங்க... எங்க சித்தி பொண்ணு சுதாவுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்காம். சித்தி இன்னிக்கி போன் பண்ணி இருந்தாங்க, மாப்ளகிட்டயும் சொல்லிடுனு சொன்னாங்க"

"மாப்ளைக்கே இனி தான் சொல்லணுமா? அப்புறம் எப்படி கல்யாணம்?" என பிரதாப் புரியாமல் விழிக்க

"ஐயோ... அவங்க மாப்ளனு சொன்னது உங்கள"

"ச்சே ச்சே... நீ இருக்கும் போது நான் எப்படி இன்னொரு கல்யாணம்...அதெல்லாம் தப்பு மாலு..."

"ஓஹோ...அப்படி வேற ஒரு நெனப்பு இருக்கா..." என அவள் முறைக்க

"ஐயோ... நீ தான சொன்ன"

"சொல்றத ஒழுங்கா காதுல வாங்கினா தானே, அந்த லாப்டாப்பை மொதல்ல தூக்கி வீசணும். எங்க சித்திக்கு நீங்களும் மாப்ள முறை தானே, அந்த அர்த்ததுல சொன்னாங்க. போதுமா?"

"ஹ்ம்ம், நான் கூட ஒரு நிமிஷம் என்ன என்னமோ..." என பெருமூச்சு விட

"நெனப்பீங்க நெனப்பீங்க... அப்புறம் என் பிரெண்ட் கீதா இருக்காளே...ப்ச்... நான் சொல்றத கவனிக்காம எப்ப பாரு இந்த லாப்டாப் ஒண்ணு" என முறைக்கிறாள்

"இல்லம்மா... கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லு... உன் பிரெண்ட் கீதாவுக்கு என்ன?" என்றான் பிரதாப் பொறுமையை இழுத்து பிடித்து

"கீதாவோட ஹஸ்பன்ட்'க்கு அவங்க கம்பெனில இருந்து சிங்கப்பூர் ட்ரிப் போயிட்டு வர்றதுக்கு டிக்கெட் தந்து இருக்காங்களாம்"

"ஓ... நல்ல விஷயம்"

"அப்புறம்..." என அவள் ஆரம்பிக்க

"மாலு, நான் ஒண்ணு கேப்பேன், நீ தப்பா நெனச்சுக்க மாட்டியே" என்றான் தயக்கமாய்

"என்ன?"

"இல்ல, நீ சொல்றதுக்கு 'ம்' போட்ட எனக்கே வாய் வலிக்குது, உனக்கு வாயே வலிக்காதா?" என்றான் பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்

ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அவனை பார்த்தவள், "என்ன பண்றது, எங்க வீட்ல என்னை சூது வாது தெரியாம வளத்துட்டாங்க மனசுல எதையும் வெச்சுக்க தெரியாம பேசிடறேன். உங்க குடும்பம் மாதிரி, மனசுக்குள்ள ஆயிரம் வெச்சுக்கிட்டு பேசறதுக்கே காசு கேக்கற பழக்கம் எங்களுக்கு இல்ல. ஒண்ணு தெரியுமா உங்களுக்கு, அளவா பேசறவங்க எல்லாம் அறிவாளியும் இல்ல, வாய் மூடாம பேசறவங்க எல்லாம் வெட்டி ஆபிசர்களும் இல்ல" என்றபடி எழுந்து உள்ளே சென்றாள்

"என்ன சொன்னாலும் ஒரு பதில ரெடியா வெச்சுருக்காளே, ச்சே..." என தனக்கு தானே புலம்பி கொண்டிருந்தான் பிரதாப்

*******************

"என்ன டாக்டர் சொல்றீங்க?" என்றாள் மாளவிகா அதிர்ச்சியின் உச்சத்தில்

"கொஞ்சம் அளவா பேசுன்னா கேட்டாதானே, சொன்னா அதுக்கும் சேத்து எனக்கு பல்ப் தரமட்டும் தெரியும், இப்ப எங்க வந்து முடிஞ்சுருக்கு பாரு" என்றான் பிரதாப் கோபமாய்

"நான் என்ன..." என மாளவிகா குரலை உயர்த்த

"ஷ்... மிசஸ் மாளவிகா, ஜஸ்ட் காம் டௌன். இப்ப ஒண்ணும் ஆய்டல. உங்க வோகல் கார்ட்ல (Vocal Cord) ஏதோ இன்பெக்சன் காரணமா ஒரு சின்ன கிரேக்(crack) மாதிரி இருக்கு. பயப்பட ஒண்ணுமில்ல, ஒரு மாசம் நான் குடுக்கற மெடிசன்ஸ் எடுத்து நான் சொல்ற அட்வைஸ் பாலோ பண்ணினா கிரேக் சரி ஆய்டும்..."

"மண்டைல தான் கிராக்னு நெனச்சேன், தொண்டைலயுமா?" என பிரதாப் முணுமுணுக்க, மாளவிகா முறைத்தாள்

டாக்டர் தொடர்ந்தார் "ஒரு மாசத்துக்கு நீங்க முடிஞ்ச வரை லிக்விட் டயட் இல்லைனா நல்லா குழைவா செஞ்ச சாதம் தான் சாப்பிடணும், இந்த நிமிசத்துல இருந்து ஒரு மாசத்துக்கு நீங்க பேசவே கூடாது"

"ஐயோ..." என மாளவிகா அலற

"ப்ச்... இப்ப தானே சொன்னேன் பேசாதீங்கன்னு" என டாக்டர் கண்டிப்புடன் கூற, வாய் மீது கை வைத்து சரி என்பது போல் தலை அசைத்தாள் மாளவிகா. அதை நம்ப இயலாமல் பார்த்தான் பிரதாப்

"ஆஹா... இப்படி ஒரு ஜாக்பாட் அடிக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலையே" என மனதிற்குள் சந்தோசமாய் சிரித்து கொண்டான்

*******************

அதன் பின் வந்த ஒரு ஒரு நாளும் ஒரு சவாலாகவே அமைந்தது. முதல் இரண்டு நாட்கள் தான் பேச நினைப்பதை ஒரு பேப்பரில் எழுதி காண்பித்தாள் மாளவிகா

பின் அது சலித்து போக, அடுத்த இரண்டு நாட்கள் சைன் லேங்க்வேஜ் (கை அசைவால்) மூலம் சொல்ல முயன்றாள்

பின் அதுவும் வெறுத்து போக, அமைதியாய் எதுவும் செய்யாமல் அறைக்குள் அடைந்து கொண்டாள்

அன்று வேலன்டைன்ஸ் டே(Valentines Day). காலையில் கண் விழித்தவள் படுக்கையின் அருகில் இருந்த மேஜையில் ஒரு வாழ்த்து அட்டையை பார்த்ததும் ஆர்வமாய் பிரித்தாள்

அதில் பிரதாப் எழுதி இருந்தது....

"டியர் மாலு,
 மொதல்ல உண்மைய சொல்லிடறேன், நீ ஒரு மாசம் பேசக் கூடாதுன்னு டாக்டர் சொன்னப்ப நான் கொஞ்சம் சந்தோசப்பட்டேன். இதை படிக்கறப்ப உனக்கு கோபம் வரும், இந்த கிரீடிங் கார்டை கிழிச்சு வீசலாம்னு நெனப்ப, என்னை கன்னா பின்னானு திட்டனும்னு கூட உனக்கு தோணும். அப்படி திட்டனாலும் பரவால்ல, உன் குரல் கேட்க மாட்டோமானு இருக்கு இப்போ எனக்கு

சிலருக்கு சினிமா பிடிக்கும், சிலருக்கு ஊர் சுத்த பிடிக்கும், சிலருக்கு படிக்க புடிக்கும், ஆனா உனக்கு பேச பிடிக்கும், இப்ப.... எனக்கு கேட்க பிடிக்கும்னு புரியுது, அதுக்கு காரணமும் நீ தான்...:)

மத்தவங்க சாதாரணமா சொல்ற ஒரு விசயத்த கூட நீ சொல்லி கேட்கும் போது அதுக்கு தனி அழகு வந்துடுதோனு தோணுது. சாக்லேட்டை பத்தி பேசினாலும் சாக்ரடீஸை பத்தி பேசினாலும் ஒரே மாதிரி அனுபவிச்சு ரசனயோட நீ பேசற அந்த அழகை நான் வேற யார்கிட்டயும் பாத்ததில்ல

மழலையின் பேச்சை போல மனைவியின் பேச்சிலும் ஒரு தனி அழகு இருக்குனு அதை இழந்த இந்த ஒரு வாரத்துல நான் உணர்ந்துட்டேன்

Yes, I confess now, I miss listening to your stories, I miss our sweet nothings my love. So, whether it is your childhood stories or complaints or just non-stop nonsense, I don't care, I just want to hear you. Get well soon and bring back the joy in my life. Happy Valentines Day

I love you...

Yours,
Pratap"


படித்து முடித்து கண்ணில் நீர் வழிய நிமிர்ந்தவள், அறையின் வாயிலில் பிரதாப் நிற்பதை பார்த்ததும், விசும்பலுடன் ஓடி சென்று கட்டி கொண்டாள்

"ஐ லவ் யு மாலு" என நெகிழ்வுடன் அவளை அணைத்து கொண்டான் பிரதாப்
 
(முற்றும்)    
 
:)))
 
 

Monday, February 06, 2012

இவங்க கேரக்டரயே புரிஞ்சுக்க முடியலியே.... :)))


அப்பாவி : இல்ல தெரியாமதான் கேக்கறேன்...

மைண்ட்வாய்ஸ் : அதெப்படி தெரியாம கேப்ப?
 
 அப்பாவி : சரி தெரிஞ்சே கேக்கறேன்
 
மைண்ட்வாய்ஸ் : தெரிஞ்சுட்டே ஏன் கேக்கற?
 
அப்பாவி : நீ என்ன பார்த்திபன் சாருக்கு சொந்தமா?
 
மைண்ட்வாய்ஸ் : ஆமா, நானும் அவரும் துபாய்ல விவேகனந்தர் தெருல...
 
அப்பாவி : மைண்ட்வாய்ஸ், திஸ் இஸ் தி லிமிட் (என கர்ஜிக்க)
 
மைண்ட்வாய்ஸ் : ம்... கோபம் வருதா? கோபம் வருதா? வேணும் வேணும் நல்லா வேணும்... ஹா ஹா ஹா... ஒரு நாள் மொக்க போட்டதுக்கே உனக்கு இத்தன கோபம் வருதே... எங்களுக்கு எத்தன கோ....ஊ... ஊ...ஓ... எ... ஏ... ஆ.........

(சைலண்டா வாயில் பிளாஸ்டர் ஒட்டி மைண்ட்வாய்ஸை கடத்துகிறார்கள் அப்பாவியின் ஆதரவாளர்கள். அது யாருனெல்லாம் கேள்வி கேக்க கூடாது. அவர்களின் பாதுகாப்பு கருதி அந்த தகவல் தலையை சுற்றி வீசப்படுகிறது... :)

அப்பாவி : ஹி ஹி... அது மைண்ட்வாய்ஸ்க்கு தொண்டைல கிச் கிச்... அது விக்ஸ் மாத்திர சாப்பிட போயிருக்கு...வர்ற வரைக்கும் நாம நிம்மதியா பேசுவோம்...

மொதலே சொல்லிடறேன், "உண்டவீட்டுக்கு ரெண்டகம் பண்ற பச்ச துரோகி, Yellow எட்டப்பி, கருப்பு கோட்சே"னெல்லாம் யாரும் கொந்தளிச்சு ஒடம்ப கெடுத்துக்க வேண்டாம். சும்மா மனசுலபட்டதை என்னோட பாணில சொல்லி இருக்கேன்... அம்புட்டு தானுங்கோ...
 
எனவே, உக்காந்து பின்னாடி அப்பாலிக்கா அனுபவிங்கோ (அதானுங்க "sit back and enjoy"...:))

இந்த ஊருக்கு வந்த புதுசுல நெறைய விஷயங்கள் ரெம்ப புதுசா இருந்தது. எங்க பிரெண்ட் ஒருத்தங்க சொன்னாங்க "எல்லாமே ஆப்போசிட் அப்படிங்கறத மட்டும் மனசுல வெச்சுக்க சீக்கரம் பழகிடலாம்"னு

டிரைவிங்ல சைடு மாறுறதத்தான் அப்படி சொல்றாங்க போலனு நானும் வெள்ளந்தியா மண்டைய மண்டைய ஆட்டினேன். வந்து பதினஞ்சு நாள் ஒரு பிரெண்ட் வீட்டுல தங்கினோம்... அப்புறம் தான் எங்களுக்கு அபார்ட்மென்ட் கெடச்சது 
 
கைல சாவிய குடுத்ததும் என்னமோ வெள்ளை மாளிகையே என்ர பேருக்கு கிரையம்(பட்டா) பண்ணி வெச்ச ரேஞ்சுக்கு பீலாகி நான் தான் வீட்டை திறப்பேன் நான் தான் வீட்டை திறப்பேன்னு பீலா விட்டுட்டு இருந்தேன்

"சரிம்மா உன் இஷ்டம்"னு ரங்கமணி ஆதரவா பேசும் போதே யோசிச்சுருக்கணும், ம்... சூது வாது தெரியாம வளந்துட்டேன், என்ன செய்ய?

ஆர்வமா போய் கதவ தெறக்கறேன் தெறக்கறேன் தெறக்கறேன் தெறக்கறேன்...... ஆமாங்க திறந்துட்டே இருக்கேன்... ஒண்ணும் முடியல

ஒருவேள "அண்டாக்கா ரசம் டப்பக்கா சாம்பார் டிபன்கா இட்லி.... திறந்திடு பிசாசே"னு எதுனா சொல்லணுமோனு சந்தேகம் வந்துடுச்சு

"நீயெல்லாம் எப்படித்தான் குடித்தனம் செஞ்சு குப்ப கொட்ட போறியோ"னு எங்க அம்மா பொலம்பினது வேற கண்ணு முன்னாடி வந்தது...அப்பவெல்லாம் எங்கம்மாட்ட நக்கலா "ம்... குப்பதொட்டில கொட்டுவேன்"னு சொல்லுவேன்... அந்த லொள்ளுக்கெல்லாம் தான் இப்ப ஆப்புனு ஒரே பீலிங்காகி போச்சு

இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி அந்த Immigration Agency கடன்காரன், டோபல் (TOEFL) கீபல்னு என்ன என்னமோ கோர்ஸ் எல்லாம் சொன்னான், இத பத்தி ஒண்ணும் சொல்லலியே... வீட்டு கதவ திறக்க "திறந்திடு சீசே - Release 1.1"னு ஏதோ கோர்ஸ் இருக்கு போலிருக்கே, நாம படிக்காம வந்துட்டோம் போல இருக்குனு மனசே விட்டு போச்சு
  
அப்படினா இனிமே, தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு தானா, ஐயோ மைனஸ்ல குளிருமேனு, நான் வேற லக்கேஜ் கூடி போச்சுன்னு எங்க பாட்டி குடுத்த குரும்ப கம்பிளிய அங்கேயே வெச்சுட்டு வந்துட்டனேனு யோசிச்சுட்டு இருக்கைல, ஆபத்பாந்தவியா எங்க பிரெண்ட் வந்தாங்க. விவரம் சொன்னதும் "திருப்பு திருப்பு"னாங்க
 
"அது மைக்கேல் மதன காமராஜன்ல ஊர்வசி கேரக்டர் ஆச்சே"னு மனசுல தோணினதை சொன்னா அவங்க என்ன நெனச்சுப்பாங்களோனு அமைதியா "புரியலைங்க"னேன்... அவங்க ஒரு மாதிரியா பாத்தாங்க
 
 (சமீபத்துல அதே பிரெண்ட் கிட்ட மலரும் நினைவுகள் பேசிட்டு இருந்தப்ப "நான் முதல் முதலாக முழித்த போது என்ன நினைத்தாய்"னு கேட்டதுக்கு, "கதவ கூட கழட்ட தெரியாம இதெல்லாம் கனடாவுல என்னத்த கழட்ட போகுதோனு நெனச்சேன்"னு பல்பு குடுத்தாங்க. தேவையா எனக்கு? கேட்டு வாங்கிட்டேன்... ஹ்ம்ம்...இப்ப க்ளோஸ் பிரெண்ட் ஆயாச்சு, ஒண்ணும் சொல்றதுகில்லனு விட்டுட்டேன்)
 
சரி பழைய மேட்டர்க்கு போவோம்... வீட்டை திறக்க முடியாம நான் விழிக்க, அந்த பிரெண்ட் சொன்னது... "நான் தான் வந்த அன்னைக்கே சொன்னனே... இந்த ஊர்ல எல்லாம் தலைகீழ்னு... சாவியை திருப்பி போடு... திறக்கும்"னாங்க

அவங்க சொன்ன மாதிரி சாவியை அப்படியே 180 degrees திருப்பி போட்டு திருப்பினதும்...ச்சே... திருகினதும், ஒரு வழியா சொர்க்கவாசல் திறந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பபா.... எனக்கு அப்படியே சுவத்துல மண்ட மண்டையா அடிச்சுக்கணும் போல இருந்தது...
 
ஆனா மண்டைல இருக்கற கொஞ்ச நஞ்ச சரக்கும் டேமேஜ் ஆகி போய்ட்டா அப்புறம் ரங்க்ஸ்'ஐ கண் கலங்காம வெச்சு காப்பாத்த முடியாம போயிடுமோனு என்னை கட்டுப்படுத்திகிட்டேன்
 
அதோட முடிஞ்சதா, உள்ள போய் லைட் போட போறேன், ஏற்கனவே போட்டு இருந்தது, ஆனா போடல... உங்களுக்கு புரியல இல்லையா? எனக்கும் புரியல. அதாவது லைட் சுவிட்ச் ONல இருந்தது ஆனா லைட் எரியல
 
எரியும்ம்ம்ம்ம்.... ஆனா எரியாது................... போல இருக்குனு நெனச்சுட்டு ஒரு நிமிஷம் முழிச்சேன்... அப்ப தான் பல்பு எரிஞ்சது. அந்த பல்பு இல்லிங்க... என் மண்டைல பல்பு... அதாவது "இந்த ஊர்ல எல்லாமே தலைகீழ்" அப்படிங்கற தாரக மந்திரம் ஒலிச்சது
 
சுவிட்சை ஆப் பண்ணினேன் லைட் ஆன் ஆய்டுச்சு. அப்ப தான் புரிஞ்சது... நம்ம ஊரு ஆன் இங்க ஆப்... ஆண் இல்லிங்க... I mean "ON"

(மைண்ட்வாய்ஸ்(மனசுக்குள்) : நம்ம ஊரு ஆணும் இங்க வந்தா ஆப் தான் ஆகணும்.... அது வேணா கரெக்ட்...ஹ்ம்ம்)

அன்னைக்கி என்னோட மனசுங்கற டைரில Notes of the day தலைப்பின் கீழ் "Each and every action should be opposite in Canada to expect a correct reaction" னு எழுதி வெச்சுகிட்டேன். ஒரு வழியா இந்த சூட்சமத்த வெச்சு குப்ப கொட்ட ஆரம்பிச்சேன்... ச்சே... காலத்த ஓட்ட ஆரம்பிச்சேன்

அப்புறம் வேலை தேட தொடங்கினேன்.. ஆரம்ப அனுபவத்தின் பாதிப்புல "Interviewல பதில் கூட தலைகீழா தான் சொல்லணுமோ"னு ரங்க்ஸ்கிட்ட சந்தேகம் கேக்க, அவர் "நீ இப்படியே இருந்தேனா தலைகீழா நின்னா கூட வேலை கிடைக்காது"னு பல்பு எண்ணிக்கைல இன்னொன்னு சேந்தது

"எத்தனையோ பாத்துட்டோம் இத பாக்கமாட்டமா"னு நானும் ஒரு வழியா தட்டு தடுமாறி வேலை புடிச்சேன். ஏதோ புள்ள புடிக்கற மாதிரியே சொல்றியே அப்பாவினு பீல் பண்ணாதீங்க. என் கஷ்டம் எனக்கில்ல தெரியும்... ஹ்ம்ம்

இங்க வர்றதுக்கு முன்னாடி "நானெல்லாம் இங்கிலீஷ்ல 120 அவுட் ஆப் 100 யு நோ"னு பந்தா விட்டுட்டு வந்துட்டு, இவனுக பேசுற தத்தக்கா புத்தக்கா இங்கிலிஷை புரிஞ்சுக்கரதுக்குள்ள, "இதுக்கு நம்மூர்ல 420 கேஸ்ல உள்ள போய் நிம்மதியா உக்காந்திருக்கலாம்"னு தோண ஆரம்பிச்சது
 
ஹ்ம்ம்... அப்புறம் என்ன?.... "ஐ கேன் டாக் இங்கிலீஷ் ஐ கேன் வாக் இங்கிலீஷ்" கதை ஆகி போச்சு நம்ம பொழப்பு
 
ஆனா பாருங்க, நான் கூட ஆரம்பத்துல நமக்கு தான் இங்கிலீஷ் வரலைனு தப்பா புரிஞ்சுட்டேன்... அப்புறம் கொஞ்சம் விவரம் புரிஞ்சப்புறம்... அதெப்ப புரிஞ்சதுனு கேட்டா, நேரம் காலம் இடம் எல்லாம் சொல்றதுக்கு நான் என்ன போதிமரத்துக்கு கீழ உக்காந்து ஞானமா வாங்கினேன்... ஏதோ போற போக்குல புரிஞ்சது தான்
 
இந்த ஊர்லையே இருந்துட்டு இவங்களையே திட்றையானு நீங்க என்னை திட்டறதுக்கு முன்னாடி, என் பக்க வாதத்தையும்...

மைண்ட்வாய்ஸ் : ஐயையோ பக்க வாதமா?

அப்பாவி : ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா...

மைண்ட்வாய்ஸ் : சரி சரி... மறுபடி கடத்திடாதே... மீ சைலண்ட்... (என தனக்கு தானே பிளாஸ்டர் போட்டு கொள்கிறது)
 
அப்பாவி : ம்...அந்த பயம் இருக்கட்டும்

அதாவது, என் தரப்பு நியாத்தையும் கேளுங்கள்னு சொல்ல வந்தேன்

நீங்களே சொல்லுங்க, இவங்க grammer எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விட்டுட்டு accent'ங்கற பேர்ல இங்கிலிஷை கொல பண்ணிக்கிட்டு, "you got an accent"னு நம்மள சொன்னா "வொய் திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டா"னு சொல்ல தோணுமா இல்லையா?

அதையும் மீறி என்னை மாதிரி புத்திசாலிதனமா (ஹி ஹி) ஒரு பொண்ணு கொஞ்சம் விளக்கமா கேட்டா "You know what? Ours is American english... yours is British I guess"னு என்னமோ "அல்ஜீப்ரா சொல்லி தந்த அன்னைக்கி நான் ஏப்சன்ட்"னு சொல்ற மாதிரி சொல்லி நம்ம வாய அடைச்சுடறாங்க

சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்னு "அமெரிக்கன் பாதி பிரிட்டிஷ் பாதி கலந்து செய்த கொலை நான்"னு இப்ப என்ர இங்கிலிஷும் பாவம் டைபாய்ட் வந்த டைகர் மாதிரி ஆகி போச்சு

சரி இங்கிலிஷை விட்டு தொலைங்க... இந்த ஊர்ல வந்து திக்கு திசை தெரியாம நான் பட்ட பாடு இருக்கே... என் வீட்டு சோகமா உங்க வீட்டு சோகமா... அதை வெச்சு நாலு மெகா சீரியலே எடுக்கலாம் (நடு குறிப்பு : மெகா சீரியல் எடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி அப்பாவி@அப்பாவிதங்கமணி.காம்)

எனக்கு நம்மூர்லையே கெழக்க மேக்க தெரியாது... எங்க வீட்டுக்கு முன்னாடி நின்னு பாத்தா சூரிய உதயம் தெரியும்... சன் ரைஸ் இன் தி ஈஸ்ட் இல்லயா? So, அது கிழக்கு, அதே நீங்க புதுசா யாராச்சும் வீட்டுக்கு கூட்டிட்டு போய் திசை கேட்டா, சூரியன் தெரிஞ்சா சொல்லுவேன் இல்லாட்டி அயம் சாரி யுவர் ஹானர் தான், அவ்ளோ தான் என்னோட ஜாக்ரபி ஜிலேபி எல்லாம்... (By the way, இது சூர்யா ஜோதிகா sunrise இல்லிங்க, சூரிய பகவான் sunrise...:)

நம்ம இஸ்திரிய (History) பொரட்டி பாத்தீங்கன்னா....காலேஜ் போன மொதல் நாள் காந்திபுரம் சிக்னல்ல எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் காணோம்னு தேடின பிரகஸ்பதி நான், அதை பத்தி விவரமா இன்னொரு பதிவுல சொல்றேன் (சரி சரி அழுவாதீங்க)

இந்த அழகுல இங்க வந்த புதுசுல யாராச்சும்கிட்ட வழி கேட்டா "Drive 2km west then take south and drive 6km and...." இப்படி சொல்லிட்டே போவாங்க... அப்படியே போனா நேரா நயாகரா பால்ஸ் போய் குதிக்கலாம்னு எனக்கு தோணும்

பின்ன என்னங்க, இதே நம்மூரா இருந்தா "அப்டீக்கா நேரா போய் அப்புறம் லெப்ட் எடுத்து அப்பாலிக்கா ஒரு யு டர்ன் எடுத்து ரைட்ல ஓடிச்சினா அங்க ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். அதே சந்துல கொஞ்ச தூரம் போனா செவப்பு கலர் கேட் போட்ட மஞ்ச கலர் பெயிண்ட் அடிச்ச வீடு" அப்படின்னு எவ்ளோ அழகா சொல்லுவாங்க

இப்படி ரங்க்ஸ்கிட்ட பொலம்பினதுக்கு "இங்க பாரு... இங்கெல்லாம் ஈஸ்ட் வெஸ்ட் நார்த் சவுத் தான்... லெப்ட் ரைட் இல்ல... ஒழுங்கா பழகிக்கோ"னாரு... இதுக்கு நான் நயாகரா பால்ஸ்கிட்ட பொலம்பி இருந்தா அதே எனக்காக கண்ணீர் விட்டுருக்கும்
 
ஒரு நாள் இங்க ஒரு பிரெண்ட் வீட்டுக்கு போய் இருந்தப்ப, நான் பாட்டுல வழக்கம் போல ஷோ பண்ணிட்டு இருந்தத பாத்து பொறாமை பட்டு என்னோட இமேஜை டேமேஜ் பண்ணனும்னே ரங்க்ஸ் "புவனாவை யோசிக்காம  உடனே East எதுனு சொல்ல சொல்லுங்க பாப்போம்"னு மாட்டி விட்டுட்டாரு

பொறுத்தது போதும் பொங்கி எழு புவனானு நானும் "எங்க அம்மா சன் ரைஸ் இன் தி ஈஸ்ட் தான் சொல்லி குடுத்தாங்க... இந்த ஊர்ல சன் ரைஸ் இன் சவுத் ஈஸ்ட்... சோ தப்பு என் மேல இல்ல இந்த ஊர் மேல தான்... சரியான கோண ஊரு... சன்னை மொதல்ல ஈஸ்ட்ல உதிக்க சொல்லுங்க, அப்புறம் நான் ஈஸ்ட் வெஸ்ட் சொல்றேன்"னு பொங்கிட்டேன்
 
அங்க இருந்த லேடிஸ் எல்லாரும் என் பக்கம் சேந்துட்டு "ரெம்ப கரெக்ட் புவனா... எனக்கும் ஈஸ்ட் வெஸ்ட் கன்பியூசன் இருக்கு... நீங்க சொன்னப்புறம் தான் தப்பு என் மேல இல்லைன்னு புரியுது... என்னங்க, இப்பவாவாச்சும் புரிஞ்சுக்கோங்க?"னு அவங்க அவங்க ரங்க்ஸ்'ஐ பாத்து ஒரு வெற்றி சிரிப்பு சிரிச்சாங்க
 
உங்கள்ல சிலருக்கும் இது உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்... ஏதோ என்னால ஆன ஒரு சின்ன சமூக சேவை... இதுக்காக எனக்கு நீங்க CN டவர் பக்கத்துலயோ இல்ல வைட் ஹவுஸ் வாசலையோ சிலை எல்லாம் வெக்க கூடாது சொல்லிட்டேன்... ஏன்னா, எனக்கு விளமபரம் புடிக்காது யு சி...:))

அப்புறம் இன்னொரு மேட்டர், இப்ப உங்ககிட்ட யாராச்சும் வந்து, உங்க வீடு எங்க இருக்குனு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க "இப்படி இப்படி ஊர்ல இந்த இந்த தெருவுல அப்படி அப்படி நம்பர்ல இருக்கு"னு சொல்லுவீங்க...கரெக்டா?

அதே இந்த ஊர்ல கேட்டா "வாஷிங்டன் ஸ்ட்ரீட் அண்ட் வெல்லிங்டன் சர்கிள் இண்டர்செக்சன்"னு சொல்லுவாங்க... போன புதுசுல "அம்மாடியோ... எவ்ளோளோளோளோளோ பெரிய அட்ரெஸ்"னு சொல்லி பல்பு வாங்கி இருக்கேன்

பின்ன என்னங்க, கோயம்புத்தூர்ல 'ஸ்ரீதேவி சில்க்ஸ்' எங்க இருக்குனு கேட்டா "கிராஸ் கட் ரோடு அண்ட் டாக்டர் நஞ்சப்பா ரோடு இண்டர்செக்சன்"னு சொன்னா எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது எனக்கும்

அப்புறம் போக போக பழகி போச்சு. அப்புறம் கூகிள் மேப்ஸ் பத்தி தெரிஞ்சுது, மக்கள்கிட்ட போஸ்டல் கோட் மட்டும் வாங்கி கூகிள் இருக்க பயமேன்னு காலம் போச்சு கொஞ்ச நாள். இப்ப ஜி.பி.எஸ் வந்தப்புறம் "நின்னையே கதியென்று..."னு ஆகி போச்சு நிலைமை (ஜி.பி.எஸ் ரகளை எல்லாம் இன்னொரு போஸ்ட்ல சொல்றேன்... நோ பீலிங்க்ஸ் ஒகே) 

மத்ததெல்லாம் கூட பரவால்லைங்க... லாஜிக் லாஜிக்னு ஒண்ணு இருக்கே... இங்க மக்கள் அது கிலோ என்ன விலை கேப்பாங்க சில சமயம்...

வந்த புதுசுல Soccer Game Soccer Gameனு ஒரு கூட்டமே பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்தத பாத்து, ஏதோ பெரிய விளையாட்டு போல இருக்குனு விசாரிச்சா...

"In general play, the goalkeepers are the only players allowed to touch the ball with their hands or arms, while the field players typically use their feet to kick the ball into position, occasionally using their torso or head to intercept a ball in midair. The team that scores the most goals by the end of the match wins"னு ஒரு விளக்கம் சொன்னாங்க

"எங்கயோ கேட்ட குரல்" மாதிரி இருக்கேனு கொஞ்சம் உக்காந்து இல்லாத கிட்னிய சட்னியாக்கி யோசிச்சு பாத்தா... அட Footballனு என் மண்டைல பல்பு எரிஞ்சது

அப்புறம் ஏன் இவங்க இதை Soccerனு சொல்றாங்க... நம்மூர்ல சாக்கு போட்டி மாதிரி கடைசீல எதுனா வெப்பாங்களோனு என் சிற்றறிவு சிச்சுவேசன்'தனமா யோசிச்சது...அப்படியானு அவங்கள கேட்டதுக்கு, அதுக்கும் ஒரு விளக்கம் சொன்னாங்க...
 
ஒரு விஷயம் சொல்லியே ஆகணுங்க, இந்த ஊர்ல விளக்கம் சொல்றதுக்கு மட்டும் குறைச்சலே இல்ல... நான் நீ'னு போட்டி போட்டுட்டு விளக்கம் சொல்லுவாங்க...

ஆனா ஒண்ணு, எப்படி சொன்னா கேக்கறவனுக்கு கொஞ்சம் நஞ்சம் புரிஞ்சதும் மறந்து போகுமோ அப்படி ஒரு விளக்கம் சொல்லுவாங்க. என்னோட ஆத்துக்காரருக்கு இந்த ஊர் ஒத்து போறதுக்கு அதுவும் ஒரு காரணம்னு நான் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்ச உண்மை, இனம் இனத்தோட சேரும் யு சி...:)

ம்...சரி Soccerனு ஏன் பேரு வந்ததுனு கேட்டதுக்கு இந்த ஊர் அக்காச்சி சொன்ன விளக்கம் இதோ...

"Soccer was originally called 'association football' (the name soccer is derived from the word assoc, from the word association)"

இது விளக்கமா வில்லங்கமானு நீங்களே சொல்லுங்க. என்ன கொடும சார் இது? அப்ப அதை assoc னு வெச்சுருக்க வேண்டியது தானே, ஏன் அதை தலைகீழ நிக்க வெச்சு ஒரு தொப்பிய மாட்டி உலக நாயகன் தசாவதாரம் கெட் அப் போடற ரேஞ்சுக்கு கொழப்பனுங்கறேன்
 
நொந்து போய், எங்க ஊர்ல இது புட்பால்னு சொன்னதுக்கு, "yeah, I know football, that is different"னு சொன்னாங்க

அப்படி என்ன சாமி வித்தியாசம்... நான் வலது காலுல ஒதைக்கரத நீ இடது காலுல ஒதைப்பியோனு கடுப்போட கேட்டா...

"No no...American football is a sport played between two teams of eleven with the objective of scoring points by advancing the ball into the opposing team's end zone. The ball can be advanced by running with it or throwing it to a teammate. Points can be scored by carrying the ball over the opponent's goal line, catching a pass thrown over that goal line, kicking the ball through the opponent's goal posts or tackling an opposing ball carrier in his own end zone" னு விளக்கம்

அதாவது கைல வெச்சு விளையாடினா புட்பால், காலில தட்டி விளையாடினா சாக்கர்... புரிஞ்சு போச்சு... பேக் டு ஸ்கொயர் ஒன்...அதாங்க, இந்த ஊர்ல எல்லாமே தலைகீழ்... கைனா கால், கால்னா கை....அவ்வவ்வவ்வவ்வவ்....

ஏங்க... நான் தெரியாமத்தான் கேக்கறேன்... கால்பந்தாட்டம்னு ஏன் பேரு வந்ததுனு நம்மூர்ல கேட்டா "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சொல்ற சின்ன கொழந்த கூட"....கால்ல ஒதைச்சு ஆடுற ஆட்டம், எனவே அது கால்பந்தாட்டம்னு சொல்லிடும் இல்லையா? இந்த லாஜிக்கை அடிச்சுக்க முடியுமா என்ன?
 
ஏன் இந்த ஊர்ல மட்டும் எல்லாம் தலைகீழா இருக்கு... இவங்க கேரக்டரயே புரிஞ்சுக்க முடியலியே.... :)
:))