Thursday, April 12, 2012

தீர்ப்பு... (சிறுகதை)

"அப்பா ப்ளீஸ்... வேண்டாம்... நான் முடிவு பண்ணிட்டேன்... டைவர்ஸ் தான்"

"அஞ்சலி..."

"ப்ளீஸ்'ப்பா... வேற வழி இல்ல. தினம் தினம் அடி திட்டுனு எனக்கு வெறுத்து போச்சுப்பா"

"அதில்லம்மா..."

"என்னோட இஷ்டத்துக்கு எதுவுமே செய்ய முடியாம என்ன லைப்'பா இது. வேண்டாம்'ப்பா போதும்"

"அது..."

"அப்பா, ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல, பத்து வருசமா இந்த டார்ச்சர்... போதும்'ப்பா ப்ளீஸ்"

"என்ன இருந்தாலும்..."

"அத்தன பேர் முன்னாடி என்னை எப்படி இன்சல்ட் பண்ணி... ச்சே"

"ஆனா..."

"நீங்க என்ன சொல்ல போறீங்கனு எனக்கு தெரியும்'ப்பா. தனியா எப்படினு தானே... எனக்கு நீங்க போதும்பா, உங்க பொண்ணா இருந்துக்கறேன்'ப்பா"

"நீ நெனைக்கற மாதிரி..."

"என்னால முடியும்'ப்பா"

"நான் சொல்றத கொஞ்சம்..."

"இங்க பாருங்கப்பா. நீங்க இன்னும் என்னை கம்பெல் பண்ணினா நான் வீட்டை விட்டு போய்டுவேன்"

"என்னது?"

"ஆமாம்'ப்பா எனக்கு வேற வழியில்ல"

"எங்கம்மா போவ?"

"எங்கயோ போறேன்"

"நான் என்ன சொல்றேன்னா..."

"வேண்டாம்'ப்பா, எதுவும் சொல்ல வேண்டாம். உங்க பிரெண்ட் அதான் லாயர் நாராயணன், அந்த அங்கிளை நாளைக்கி காலைல போய் பாக்கலாம். இப்ப எனக்கு தூக்கம் வருது, நான் போய் தூங்கறேன் குட் நைட்'ப்பா" என எழுந்து தன் அறைக்குள் சென்றாள் அஞ்சலி

மகள் செல்வதையே பார்த்து கொண்டிருந்த சரவணன், மௌனமாய் தன் அறைக்குள் சென்றார்

அறைக்குள் வந்தவரை பார்த்த அவர் மனைவி தேவி, தான் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மடித்து வைத்து விட்டு நிமிர்ந்தாள்

"என்ன? அப்பா பொண்ணு பேச்சு வார்த்தை எல்லாம் முடிஞ்சதா?" என தேவி கேட்க, அதுவரை கட்டுப்படுத்தி இருந்த சிரிப்பை அதற்கு மேல் அடக்க மாட்டாமல் வாய் விட்டு சிரித்தார் சரவணன்

"எதுக்கு சிரிக்கறீங்க?" என தேவி விழிக்க

"அது..." என தொடங்கியவர், மீண்டும் சிரிக்க தொடங்க

"ஒண்ணு, சொல்லிட்டு சிரிங்க. இல்லைனா சாவுகாசமா சிரிச்சு முடிச்சுட்டு என்னை எழுப்புங்க. குட் நைட்" என தேவி கூறவும்

"இரு இரு... ஹா ஹா ஹா... கேட்டா நீயும் பயங்கரமா சிரிக்க போற" என மறுபடியும் சிரிக்க

"அப்படி என்ன தான் சொன்னா உங்க சீமந்த புத்திரி" என கோபமாய் கேட்க

"நான் உன்னை டைவர்ஸ் பண்ணனுமாம்" என்று கூறிவிட்டு சிரிக்க

"என்னது?" என அதிர்ச்சியாய் எழுந்து நின்றாள் தேவி

"ஏய்...எங்க போற?" என சரவணன் தடுக்க

"ம்... உங்க பொண்ண கொஞ்ச போறேன்... எவ்ளோ கொழுப்பு இருந்தா அப்படி சொல்லும் அந்த குட்டி சாத்தான்" என சரவணன் தடுக்க தடுக்க மகளின் அறைக்குள் சென்றாள் தேவி

அஞ்சலியின் அறை விளக்கை உயர்பித்தவள் "என்னடி சொன்ன உங்க அப்பாகிட்ட?" என தேவி கோபமாய் கேட்க, அஞ்சலி தன் தந்தையை முறைத்தாள்

"ஐயோ... நான் ஒண்ணும் சொல்லல..." என பொய் பயம் காட்டி சிரிப்பை அடக்கினார் சரவணன்

"என்னை டைவர்ஸ் பண்ணனும்னு சொன்னியாடி?" என தேவி மிரட்ட

"அப்பா... நான் தூங்கணும், உங்க wife'ஐ கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம இருக்க சொல்லுங்க"

"என்னடி சொன்ன?" என தேவி முறைக்க

"அப்பா, உங்க wifeக்கு பெரிய ஜோதிகானு நெனப்பு, மொறைச்சு மொறைச்சு ஷோ காட்ட வேண்டாம்னு சொல்லுங்க"

அதை கேட்டதும் சரவணன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட, தேவி முறைத்தாள்

"மீ சைலண்ட்" என மௌனமானார் சரவணன்

"மொளச்சி மூணு இல விடல பேச்ச பாரு" என தேவி அடிக்க கை ஒங்க

"ஏய் தேவி.. கொழந்தய போய்..." என சரவணன் தடுக்க

"கொழந்தனா கொழந்த மாதிரி இருக்கணும்... இது கொழந்த பேசற பேச்சா? பத்து வயசுக்கு இந்த பேச்சு பேசினா பல்லை தான் ஒடைக்கணும்"

"கூல் டௌன் தேவி ப்ளீஸ்" என சரவணன் சமாதானம் செய்ய

"அப்ப உங்க பொண்ண எங்கிட்ட சாரி கேக்க சொல்லுங்க"

"நான் எதுக்கு சாரி கேக்கணும். இன்னிக்கி சாயங்காலம் என் பிரெண்ட்ஸ் முன்னாடி என்னை திட்டினதுக்கு உங்க wife தான் என்கிட்ட சாரி கேக்கணும்'ப்பா"

"போட்டேனா ஒண்ணு வாய் மேல. பெரிய பிரெண்ட்ஸ் இவளுக்கு, ஹோம் வொர்க் பண்ணாம மத்த பிளாட் பசங்க கூட வெளையாடிட்டு இருந்தா திட்டாம கொஞ்சுவாங்களா... என்னடி மொறைக்கற?"

"எப்ப பாத்தாலும் இத செய்யாத அத செய்யாதனு டார்ச்சர் ச்சே... எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு"

"நீ பேசலடி... நீ பாக்கற டிவியும் சினிமாவும் கத்து குடுக்கறது தான் எல்லாமும். அத ஒளிச்சு கட்டினா தான் இது உருப்படும்"

"அப்பா... டைவர்ஸ்'க்கு அப்புறம் நீங்க என்கூட இருக்க போறீங்களா இல்ல உங்க wife கூட இருக்க போறீங்களானு இப்பவே முடிவு பண்ணிக்கோங்க"

"கழுத உன்ன..." என தேவி அடிக்க ஸ்கேல் எடுக்க, பாய்ந்து தந்தையின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டு கையில் சிக்காமல் ஓடினாள் அஞ்சலி

"ஒகே ஒகே... ரெண்டு பேரும் பேசாம இருங்க கொஞ்ச நேரம்" என மனைவியையும் மகளையும் ஆளுக்கு ஒரு புறம் அமர்த்திய சரவணன்

"தேவி, என்ன இருந்தாலும் நீ அஞ்சலிய அவ பிரெண்ட்ஸ் முன்னாடி திட்டினது தப்பு தான்... என்ன சொல்லணும்னாலும் தனியா கூப்ட்டு சொல்லு"

"ஆனா..."

"உஷ்... நாட்டமை தீர்ப்பு சொல்லும் போது நடுல பேசக் கூடாது" என மனைவியை அமைதிப்படுத்தியவர் "அஞ்சலி குட்டி, நீயும் ஹோம்வொர்க் பண்ணாம விளையாடினது தப்பு தான்"

"அப்பா..."

"உஷ்... நான் இன்னும் முடிக்கல" என்றவர், தொடர்ந்து "ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. So, மாத்தி மாத்தி சாரி சொல்லிட்டு பிரெண்ட்ஸ் ஆகணும் இப்போ, இல்லைனா ரெண்டு மாசத்துக்கு நோ Outing நோ ஐஸ்கிரீம் நோ ஜாலிடே... இதான் என்னோட தீர்ப்பு" என நாட்டாமை சொல்லி முடிக்க

சிறிது நேர யோசனைக்கு பின் "நாங்க எப்பவும் பிரெண்ட்ஸ் தான்... இல்லம்மா" என அஞ்சலி முதல் பந்தை வீச

"ஆமாண்டி செல்லம்" என அதை கேட்ச் பிடித்தாள் தேவி

"இந்த அப்பா தான் சும்மா எதாச்சும் சொல்லி நம்மள சண்டை போட வெக்கறது... இல்லம்மா"

"ஆமாடி செல்லம்"

"அப்படினா இந்த அப்பா தான அம்மா நம்மகிட்ட சாரி கேக்கணும்" என அஞ்சலி குறும்பாய் சிரிக்க

"கரெக்ட்டுடி செல்லம்" என தேவியும் சிரிப்பை அடக்கி கொண்டு கூற

"அடப்பாவிங்களா... உங்களுக்கு நாட்டாமை வேலை பாக்க வந்தா என்னை காமெடி பீஸ் ஆக்கரீங்களா அம்மாவும் மகளும் சேந்துட்டு... நாட்டாமையை அவமதிச்ச குற்றத்துக்கு ரெண்டு மாசத்துக்கு நோ Outing நோ ஐஸ்கிரீம் நோ ஜாலிடே, இதான் என்னோட புது தீர்ப்பு..." எனவும்

"நாட்டமை, தீர்ப்ப மாத்தி சொல்லு" என அம்மாவும் மகளும் ஒரே குரலில் கூற, அதன் பின் அங்கு எழுந்த சிரிப்பு அலையில் மூவரின் குரலும் சங்கமித்து ஒலித்தது

:))