Thursday, May 24, 2012

பை பை கனடா ஹாய் ஹாய் இந்தியா...:)தலைப்பை பாத்தே உங்களுக்கு என்ன மேட்டர்'னு புரிஞ்சுருக்கும்'னு நினைக்கிறேன். கொஞ்சம் மொக்கை போட்டு கொஞ்சம் பீட்டர் விட்டு அப்புறம் சொல்லலாம்னு தான் நெனச்சேன். சரி ஊருக்கு வர்ற நேரத்துல ஏன் உங்களை எல்லாம் வீணா பகைச்சுக்கணும்னு நேராவே விசயத்துக்கு வந்துட்டேன் (ஒரு பயம் தான்..:)

ஆமாங்க, நாங்க இந்தியா'வுக்கு மூவ் பண்றோம். இன்னும் ரெண்டு வாரத்துல "தாய் மண்ணே வணக்கம்" பாட நாங்க ரெடி...:)

கனடா வந்து இறங்கின நாளுல இருந்தே ஊருக்கு போலாம்னு ஆரம்பிச்சவ நான். பின்ன என்னங்க... துபாய்ல அம்பது டிகிரி வெயில் முடிஞ்சு நேரா நவம்பர் மாசம் கனடால மைனஸ் அஞ்சு டிகிரில வந்து எறங்கினா எப்படி இருக்கும். ஒரே டென்சன்ஸ் ஆப் கனடாவா இருந்த காலம் அது. நாங்கெல்லாம் நம்ம ஊர் மார்கழி குளிருக்கே எட்டு மணி வரைக்கும் கம்பளிய விட்டு வெளிய வராத கேஸ்'க. யோசிச்சு பாருங்க என் நெலமைய

அப்புறம் எப்படியோ, வந்ததுக்கு கொஞ்ச நாள் இருந்துட்டு போலாம்னு ரங்க்ஸ் அப்படி இப்படி சரி கட்டினார். கொஞ்ச நாளுன்னா எத்தனை நாள்னு அப்ப கேக்காம விட்டது தப்பா போச்சு. அவரோட டிக்சனரில அதுக்கு அர்த்தம் ஒம்பது வருஷம்னு இப்ப தான் புரிஞ்சது...;)

ஆரம்பத்துல தெரியாத ஊர், புரியாத மொழி (accent), அறியாத மக்கள், அலற வரைக்கும் குளிர்னு கொஞ்சம் டெரர்ரா தான் இருந்தது. ஆனா பழக பழக பழகி போச்சு. கொஞ்சம் பிடிச்சும் போச்சு

ஆனாலும் ஊர் நெனப்பு விடற மாதிரி காணோம். "ஒரு ஒரு வருசமும் விண்ட்டர் வந்தா மட்டும் ஊருக்கு போலாம்னு ஆரம்பிக்கற, சம்மர்ல அப்படி சொல்ற மாதிரி காணோமே. நிஜமாவே ஊருக்கு போகணுமா இல்ல குளிருக்கு தப்பிக்கணுமா"னு ரங்க்ஸ் கிண்டல் பண்ணுவார்

எப்பவும் போகணும்னு தான் இருக்கும், ஆனா விண்ட்டர்ல வீட்லயே அடைஞ்சு கெடக்கும் போது அது கொஞ்சம் ஓவரா இருக்கும். சம்மர்ல இங்க பிரெண்ட்ஸ் கூட ஊர் சுத்தற மூட்ல அது கொஞ்சம் வெளில வர்றதில்ல, அதான் மேட்டர். ப்ளாக் எழுத வந்ததே அப்படி ஒரு சமயத்துல தான். பதிவுகள் ரகளைகளில் கொஞ்சம் டைவர்ட் ஆகும்

ஆனா உண்மைய சொல்லணும்னா, போகணும்னு ஆசையும் வேகமும் இருந்த போதும், போறதுன்னு முடிவு பண்றது அவ்ளோ சுலபமா இருக்கல

இங்கயும் முழுசா ஓட்ட முடியல அங்கயும் முழுசா போக முடியல'னு ஒரு தொங்கு பாலத்துல இருக்கற மாதிரி ஆகி போச்சு நிலைமை. ஊர்ல எதாச்சும் கல்யாணம் காட்சி, பண்டிகை விசேஷம் இல்லேனா யாருக்காச்சும் ஒடம்புக்கு முடியலைனாலோ "எப்ப போலாம்?"னு டிஸ்கசன் ஆரம்பிக்கும்

முதல் கேள்வி, அங்க போய் என்ன பண்றது? இங்க மாதிரி வேலை அங்க கிடைக்குமா? இங்க உள்ள வசதிகள் அங்க இருக்குமா? இங்க இருக்கற சோசியல் லைப் அங்க இருக்குமா? இப்படி கேள்விகள் வந்துட்டே இருக்கும். அப்புறம் பிஸி வாழ்க்கைல அப்படியே அது மறந்து போகும். மறுபடி எதாச்சும் ஊர்ல கல்யாணம் காட்சினு வரும் போது மறுபடி ஆரம்பிக்கும்

நம்ம ஊர்ல பொதுவா சொல்லுவாங்க "நல்லதுக்கு போகலைனாலும் கெட்டதை விடக்கூடாது"னு. உண்மையாவே, நல்லதுகளில் கலந்து கொள்ள முடியாம போகும் போது கூட மனம் சமாதானம் ஆகும், ஆனா இழப்புகளில் பங்கெடுக்க முடியாம போற வருத்தம் ரெம்ப கொடுமைங்க. அப்படி ஒரு தருணம் தான் இந்த முடிவை எடுக்க தூண்டியது

யாரோட மரணத்தையும் நாம தடுத்து நிறுத்த முடியாது. அவங்களுக்குனு விதிக்கபட்ட நேரம் தாண்டி ஒரு கணம் கூட எந்த மருத்துவமும் அறிவியலும் உயிரை பிடித்து வைக்க முடியாது. ஆனா, கடைசி கொஞ்ச நாட்கள் அவங்களோட இருந்தோம் அப்படிங்கற நிம்மதி கிடைக்கும் இல்லையா. "World is a global village"னு புரிஞ்சாலும் அது எல்லாருக்கும் அப்படி ஏத்துக்க முடியறதில்ல இல்லைங்களா

சில பேரோட மனநிலை வேற மாதிரி இருக்கும். ஒருத்தரை பத்தின நல்ல நினைவுகள் மட்டும் நமக்கு இருந்தா போதும், அவரோட இறுதி நாட்களை / அவங்க பட்ற கஷ்டங்களை பாக்காமையே இருந்துட்டா நல்லதுனு தோணும். அது ஒரு வகை ஏற்று கொள்ளல். அப்படி இருக்க முடிஞ்சா அதுவும் சரி தான்

உணர்ச்சிவசப்படும் நிலையில் எடுக்கற முடிவுகள் சரியா இருக்காதோனு கொஞ்சம் தள்ளி போட்டோம். மூணு நாலு மாதம் கடந்த பின் யோசிச்சு பாத்தப்பவும் நமக்கு ஊருக்கு போறது தான் சரிப்படும்னு தோணுச்சு, சரினு முடிவு பண்ணியாச்சு

நெறைய பேருக்கு ஊருக்கு போகனுங்கற ஆசை எண்ணம் எல்லாமும் இருக்கும். ஆனா பிள்ளைகள் படிப்பு, கலாசார மாற்றம், குடும்பத்தின் தேவைகள், வசதிகள், சுய-மனநிலைனு நெறைய விஷயங்கள் குறுக்க வந்து தடுக்கும். அதை குறை சொல்ல முடியாது. ஒரு ஒருத்தரோட சூழ்நிலை வேற தானே

இனி, கனடாவை பத்தி கொஞ்சம்...

கனடா - இந்த ஊரை பத்தி நெறைய பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கேன். பிளஸ் மைனஸ் எல்லா இடத்துலயும் இருக்கு. இங்கயும் அப்படிதான். இந்தியால இருபது சொச்சம் வருஷம் இருந்தேன். இங்க கிட்டத்தட்ட அதுல பாதி இருந்தாச்சு. So, this feels like a second home for sure...

இந்த ஊருக்கு வந்ததையோ இங்க இருந்த அனுபவத்தயோ நான் ஒரு நாளும் regret பண்ணவே மாட்டேன். இந்த ஊர் எனக்கு நெறைய கத்து குடுத்து இருக்கு. இங்க இருந்து கெளம்பறோம் அப்படிங்கரதுக்க்காக இதை இப்ப சொல்லல

முக்கியமா இங்க கிடைத்த நட்பு வட்டம், என் வாழ்நாள் முழுதும் மனதில் நிலைத்து இருப்பார்கள். அவங்கள ரெம்பவே நான் மிஸ் பண்ணுவேன். ஒரு குடும்பம் மாதிரி இருந்த அந்த அமைப்பு தான் எங்க பலமா இருந்தது. யாருக்கு ஒண்ணு'ன்னாலும் யோசிக்காம உதவிக்கரம் நீட்டும் அந்த மாதிரி நட்புகள் அமையறது கஷ்டம் இல்லைங்களா

அடுத்து, என்னோட ஆபிஸ். என்னதான் குறை சொன்னாலும் பொலம்பினாலும், நிச்சியம் மிஸ் பண்ணுவேன். அப்படியே ஒருத்தர ஏத்துக்கறது ரெம்ப கஷ்டமான விஷயம். எங்க ஆபிஸ்ல நெறைய பேர் அப்படி இருந்தாங்க. ஊருக்கு போறேன்னு சொன்னதும் உண்மையான வருத்தம் சில பேர்கிட்ட பாத்தேன். I made a difference அப்படினு தோணுச்சு

எங்க போனாலும் சமாளிக்க கூடிய தைரியத்தையும் தன்னம்பிக்கையும் எனக்கு குடுத்தது இந்த ஊர். ஒருத்தர் கோழையா இருக்கறதும் தைரியமா இருக்கறதும் ஒருத்தரோட மனோவலிமையை பொறுத்த விஷயம் மட்டுமில்ல, அமையும் சந்தர்ப்பங்களும் கூடத்தான் என்பது என்னோட கருத்து. எனக்கு அப்படி சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்தது இந்த ஊர்'னு சொல்லலாம்

உண்மையா சொல்லணும்னா, இப்ப I'm in kind of mixed emotions'னு தான் சொல்லணும். இங்க மிஸ் பண்ணுவேன்'னு வருத்தமாவும் தோணுது, ஊர்ல எல்லாரோடவும் இருக்க போறோம்னு சந்தோசமாவும் இருக்கு. இது இயல்பு தான்னு நினைக்கிறேன். ஆனா, கனடா ஒண்ணும் வேற கிரகத்துல இல்லை தானே, எப்ப வேணாலும் வரலாம்

நம்ம ஊருக்கு வந்து கொஞ்ச நாள் இது ஏன் இப்படி அது ஏன் அப்படினு கேள்வியின் நாயகியா பொலம்புவேனு நல்லாவே தெரியும். That is natural Human Tendency. ஆனா, நெனச்சா அம்மா அப்பா அத்தை மாமா சொந்தம் பந்தம் எல்லாரையும் பாக்கலாம். அவங்களுக்கு  முடியலைனாலும் எனக்கு முடியலைனாலும் பாத்துக்க முடியும். எல்லா நல்லது கெட்டதுலயும் கலந்துக்கலாம். இவ்ளோ பிளஸ் இருக்கும் போது I can't ask for more, right?

சரி, இதுக்கு மேல ரெம்ப சீரியசா போக வேண்டாம்னு நினைக்கிறேன். அப்புறம் "யார் நீ?"னு நீங்க கேள்வி கேக்கற மாதிரி ஆய்டும்...:)

"இந்தியா போய்ட்டா அப்பாவி பிஸி ஆய்டுவா, இனி நெறைய போஸ்ட் வராது, அப்பாடா நிம்மதி" அப்படினு நீங்க சந்தோசப்படுவீங்கனு எனக்கு தெரியும். பட், அயம் சாரி யுவர் ஆனர். அப்படி எல்லாம் யாரும் தப்பிக்க முடியாது

இந்தியா போனப்புறம் கொஞ்ச நாள் நான் வெட்டியா இருக்கலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். வெட்டியா இருக்கறதுக்கு என்னத்த பிளான் வேண்டி கெடக்குனு கேக்கறீங்களா? வேலைக்கு போறவங்களுக்கு அது மட்டும் தான் பிளான், ஆனா வெட்டியா இருக்கறவங்க என்ன செய்யறதுன்னு எவ்ளோ பிளான் பண்ணனும் தெரியுமா? அது மட்டுமில்லாம, எல்லாம் பிளான் பண்ணி தான் பண்ணனும்னு வடிவேல் சித்தர் சொல்லி இருக்கார் யு நோ...:)

சும்மா இருக்கறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா அது எப்படி தான் இருக்கும்னு தெரிஞ்சுக்கணும், அட்லீஸ்ட் ஒரு ஆறு மாசமாச்சும். அப்புறம் பழையபடி ஊர்ல இருந்தப்ப செஞ்சுட்டு இருந்த வாத்தியாரம்மா வேலைக்கு முயற்சி பண்ணலாம்னு ஒரு எண்ணம். பாப்போம் என்ன நடக்குதுனு

இப்ப ஒரு அதிர்ச்சியான நியூஸ் சொல்ல போறேன். வயசானவங்க / குழந்தைகள் / ஹார்ட் வீக்கா இருக்கறவங்க எல்லாம் கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கோங்க

அது என்ன மேட்டர்'னா, என்னோட draft folder'ல கிட்டதட்ட 30 சிறுகதைகள், 40 மொக்கை போஸ்ட்ஸ், 30க்கும் மேல நாவல்கள் தூங்கிட்டு இருக்கு. இங்க அதை எழுத நேரம் இருக்கல. இனி அதான் புல் டைம் ஜாப்... சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. வாரத்துக்கு ஏழு  போஸ்ட்க்கு மேல போட மாட்டேன் ஒகே...:)

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... எனக்கு பெரிய சந்தோஷம் என்னனா இனிமே "கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போய்டுவேன்"னு ரங்க்ஸ்கிட்ட மெரட்டலாம்... Just kidding... :)))

ஒகே... பை பை பிரெண்ட்ஸ்... இனி இந்தியா போய் செட்டில் ஆனப்புறம் தான் அடுத்த பதிவு... அது வரை என்ஜாய். டேக் கேர்
அன்புடன்,
அப்பாவி
 

Tuesday, May 08, 2012

தனித்திருந்த பொழுதினில்... (கவிதை)

தனித்திருந்த பொழுதினில்
தனிச்சையாய்என் பெயர்சொன்னவழக்கம்
பெற்றோர் முன்சொல்லிவிட்டு
பதறிநாக்கு கடித்தாயே
கடித்ததென்னவோ உன்நாவைத்தான்
கடிவாளம்கழன்றது என்இதயத்திற்கு !!!

நீஇல்லாத பொழுதினில்
நித்தமும் கேலிசெய்தது
நீவளர்க்கும் முல்லைகொடி
நான்வளர்த்த தாடியைபார்த்து !!!

நம்வாக்குவாத முடிவினில்
நாள்தோறும் வெல்பவள்நீயே - ஆனால்
வெற்றிஎன்னவோ எனக்குத்தானடி
வாகைசூடிய மகிழ்வோடு
பழிப்புக்காட்டி நீசிரிப்பாயே
பிறகென்ன வேணுமெனக்கு !!!

...