Monday, September 24, 2012

பெயர் சொல்லும் பிள்ளைகள்...(சிறுகதை - வல்லமை இதழில்...)

 
 
எனது இந்த சிறுகதையை வெளியிட்ட வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். வல்லமை இதழ் சுட்டி இங்கு
 
"ஸ்ருதி இது தப்பும்மா. இங்க பாரு, இப்படி எழுதணும்"
 
"நீ தான் தப்பு, எங்க ரஞ்சனி மிஸ் இப்படி தான் சொல்லி குடுத்தாங்க"
 
"உங்க மிஸ் தப்பா சொல்லி குடுத்தாலும் இதான் சரியாடி" என ராதிகா கோபமாய் கேட்க
 
"ஆமா, எங்க மிஸ் சொல்றது தான் கரெக்ட், நீ தப்பு" என நாலு வயது ஸ்ருதி தர்க்கம் செய்ய
 
"அடி வாங்க போற ஸ்ருதி இப்ப, சொன்னா கேக்கணும்" என அடிக்க கை ஓங்கினாள் ராதிகா
 
"ஏய் ராதி, என்னதிது?" என தடுத்தான் ராதிகாவின் கணவன் ஜெகன்
 
"பின்ன என்னங்க? மிஸ் தப்பா சொல்லி குடுத்து இருக்காங்கனு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறா"
 
"இது ஒரு ஸ்டேஜ் ராதிகா, தன்னோட டீச்சர் தான் ஹீரோனு நினைக்கற ஒரு அழகான ஸ்டேஜ், அதை ஸ்பாயில் பண்ணாத விடு" என்றான் சிரித்தபடி
 
"ஏன் நீங்களும் இப்படி தான் உங்க மிஸ் பைத்தியமா இருந்தீங்களா?" என ராதிகா கேட்க, ஜெகனுக்கு உடனே கலைவாணி டீச்சரின் முகம் கண் முன் வந்தது
 
"எனக்கு மட்டுமில்ல, எல்லாருக்கும் அப்படி ஒரு டீச்சர் இருப்பாங்க ராதி. எனக்கு என்னோட கலைவாணி டீச்சர் அப்படி தான், அவங்ககிட்ட படிக்கற எல்லாரையும் சொந்த பிள்ளைங்க மாதிரி தான் பாப்பாங்க. டீச்சர் வேலையை ஒரு தவம் மாதிரி செஞ்சவங்க அவங்க. என்னோட படிச்ச நெறைய பேர் இன்னைக்கி நல்ல நிலைல இருக்கறதுக்கு அவங்களோட ஒழுக்க போதனையும் வழிக்காட்டுதலும் ஒரு முக்கிய காரணம். எங்கப்பாகிட்ட வந்து நீங்க கலைவாணி டீச்சரை கல்யாணம் பண்ணிகோங்க, அப்ப தான் அவங்க நம்ம கூடயே இருப்பாங்கனு சொல்ற அளவுக்கு அவங்க மேல பைத்தியமா இருந்தேன். அம்மாகிட்ட தர்ம அடி வாங்கினது தனி கதை" என பழைய நினைவில் புன்னகைத்தான் ஜெகன்
 
"ஆரம்பிச்சுட்டீங்களா உங்க கலைவாணி டீச்சர் புராணத்த, கல்யாணமாகி இந்த அஞ்சு வருசத்துல அஞ்சாயிரம் வாட்டி கேட்டாச்சு, உங்க டீச்சரையும் ஊருக்கு போறப்பவெல்லாம் பாத்துட்டு தானே இருக்கோம். அது சரி, இப்ப ஸ்ருதிக்கு சப்போர்ட் பண்றதுக்கு வேற எதாச்சும் உள்காரணம் இருக்கோனு சந்தேகம் வருது எனக்கு" என ராதிகா பொய் கோபத்துடன் முறைக்க
 
"அட, எனக்கு இந்த ஐடியா தோணவே இல்லையே. வேணும்னா ரஞ்சனி மிஸ் என்ன நினைக்கறாங்கன்னு கேட்டு பாப்போமா ராதி?" என ஜெகன் விளையாட்டாய் வம்பு செய்ய, ராதிகா அவனை முறைத்தபடி எழுந்து சென்றாள்
 
 
போன முறை ஊருக்கு சென்ற போது கலைவாணி டீச்சரை சந்தித்த நினைவு ஜெகனின் கண் முன் விரிந்தது
 
வீட்டு திண்ணையில் கால் நீட்டி அமர்ந்து, ஒரு பக்கம் கழண்டுவிட்ட மூக்கு கண்ணாடியை வலது கையில் தாங்கியபடி, மறுகையில் நாளிதழை பிடித்து ஊன்றி படித்து கொண்டிருந்தார் கலைவாணி டீச்சர்
 
அந்த கோலத்தை கலைக்க மனமின்றி தன் மகளையும் அமைதியாய் இருக்க சொல்லி செய்கை காட்டி விட்டு ரசித்தபடி நின்றான் ஜெகன்
 
சற்று நேரத்தில் அருகில் சலனம் உணர்ந்து தலை உயர்த்திய டீச்சர், ஒரு கணம் யாரென புரியாமல் கண் இடுங்க பார்த்தவர், புரிந்ததும் புன்னகை விரிய பத்து வயது குறைந்தது போல் உற்சாகத்துடன் "டேய் ஜெகன், எப்ப வந்த டெல்லில இருந்து? வாம்மா ராதிகா. குட்டி பொண்ணே, வா வா வா. உனக்கு குடுக்க ஒண்ணுமில்லையே, ஒரு நிமிஷம் உக்காருங்க, இதோ கடைக்கு போயிட்டு வந்துடறேன்" என கிளம்பியவரை தடுத்தான் ஜெகன்
 
"ஒண்ணும் வேண்டாம் டீச்சர், நீங்க உக்காருங்க. உங்கள பாக்கணும்னு தான் வந்தோம். என்னாச்சு டீச்சர்? கண்ணு சரியா தெரியரதில்லையா?" என ஜெகன் கவலையாய் கேட்க
 
"வயசாச்சில்ல... இதோ, உனக்கே ஒண்ணு ரெண்டு நரை எட்டி பாக்குதே" என கேலி செய்து சிரித்தவரை பார்த்து ஸ்ருதியும் சிரிக்க, "குட்டி வாலு, ஸ்கூல் போறியா? உங்க அப்பா உன்ன மாதிரி இருக்கறப்ப இருந்தே எனக்கு தெரியும்" என வாஞ்சையாய் ஜெகனை பார்த்தவர்
 
"போன வருஷம் பாத்ததுக்கு இப்ப மெலிஞ்சுட்ட ஜெகன், வேலை அதிகமோ? என்னம்மா ராதிகா, உன் புருஷன் நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடறது இல்லையா?" என அக்கறையாய் விசாரித்தார்
 
"இல்ல டீச்சர்... வேலை வேலைனு நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதில்ல, நீங்க சொன்னாலாச்சும் கேக்கராறானு பாப்போம்" என கிடைத்த சாக்கில் குற்ற பத்திரிக்கை வாசித்தாள் ராதிகா
 
"சரி சரி, நின்னுட்டே இருக்கீங்களே, உக்காருங்க, இதோ வரேன்" என தடுத்தும் கேளாமல் சென்றவர், பிஸ்கட் பழம் என வாங்கி வந்து தட்டை பரப்பினார்
 
"எதுக்கு டீச்சர் இதெல்லாம்? இப்ப தான் சாப்டதும் வரோம்" என ஜெகன் சொல்ல
 
"ஏன் சாப்டுட்டு வரே? நான் சமைச்சு போட மாட்டேனா? நான் வெக்கற மோர் கொழம்பு ஜெகனுக்கு உசுரு தெரியுமா ராதிகா? உங்க மோர் கொழம்பு சாப்ட்டு தான் மாத்ஸ்ல சென்டம் வாங்கினேன்னு ஐஸ் வெப்பானாக்கும்" என ஏதோ தன் சொந்த பிள்ளையை பற்றி பேசுவது போல் சிலாகித்தார் கலைவாணி. ஜெகன் எதுவும் பேசாமல் ரசித்தபடி இருந்தான்
 
"டாக்டர்கிட்ட போனீங்களா? உடம்புக்கு இப்ப பரவாயில்லையா டீச்சர்?" என ஜெகன் விசாரிக்க
 
"வயசானா எல்லாமும் தான் வரும், அதையெல்லாம் நினைக்காம இருக்க வேண்டியது தான். எவ்ளோ நாளாச்சுடா உன்னை பாத்து, ஒரு வருஷம் இருக்குமல்ல ஜெகன்" என வாஞ்சையாய் தோளில் கை பதித்தவரை அன்புடன் பார்த்தவன்
 
"ஆமாம் டீச்சர், வேலை ஜாஸ்தி. அதோட இப்ப அம்மா அப்பாவும் எங்களோடவே டெல்லில இருக்கறதால அடிக்கடி வர்ற வேலை இருக்கறதில்ல" என்றான்
 
"சரிப்பா, எங்க இருந்தாலும் நீங்கெல்லாம் நல்லா இருந்தா அதுவே போதும் எனக்கு" என ஆசிர்வாதம் போல் உரைத்தார்
 
 
செல்பேசி அழைப்பின் சத்தத்தில் பழைய நினைவில் இருந்து மீண்டான் ஜெகன். பால்ய சிநேகிதன் மணியின் எண் செல்பேசியில் ஒளிரவும், மகிழ்வுடன் "டேய் மணி... எப்பட்றா இருக்க?" என்றான் உற்சாகமாய்
 
"இருக்கேண்டா" என்றான் சுரத்தின்றி
 
"என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி பேசற?"
 
"ஜெகன், உனக்கு நம்ம கலைவாணி டீச்சர் ஞாபகம் இருக்கா?" எனவும்
 
ஆச்சிர்யத்துடன் "சொன்னா நம்ப மாட்ட மணி, இப்ப தான் அவங்கள பத்தி நெனச்சேன், போன வாட்டி ஊருக்கு வந்தப்ப பாத்தது, ரெம்ப நாளாச்சுடா" என்றான் நெகிழ்வுடன்
 
"டீச்சர் இறந்துட்டாங்கடா" என்றான் மணி சோகமாய்
 
"வாட்? டேய் என்னடா சொல்ற?" என ஜெகன் அதிர்ச்சியில் உறைந்தான்
 
அவன் அதிர்ச்சியான குரலில் பயந்து "என்னங்க... என்னாச்சு?" என பதறியபடி வந்தாள் ராதிகா
 
ஒன்றுமில்லை என்பது போல் ஜாடை காட்டியவன், ஏனோ பேச இயலாமல் தொண்டையை அடைப்பது போல் இருக்க "தண்ணீர் வேண்டும்?" என ராதிகாவிடம் கை அசைவில் கேட்டான்
 
ராதிகா அகன்றதும் "என்ன ஆச்சு மணி? எப்போ? நீ இப்ப நம்ம ஊர்லயா இருக்க?"
 
"ஆமா ஜெகன், அம்மாவுக்கு கண் ஆபரேஷன் பண்ணி இருக்குனு பாக்க ஊருக்கு வந்தேன். வந்ததும் தம்பி சொன்னான், ஹார்ட் அட்டாக்னு சொல்றாங்க. நம்ம க்ளாஸ்மேட்ஸ் சுந்தர், கணேசன் எல்லாரும் இங்க தான் இருக்காங்க. நீ டெல்லில இருந்து வர முடியாதுனு தெரியும், ஆனா உனக்கு கலைவாணி டீச்சர்'னா ரெம்ப பிடிக்குமேனு தான் சொல்லணும்னு கூப்ட்டேன். சாயங்காலம் ஆறு மணிக்கி தகனம் பண்றதா சொன்னாங்க"
 
அதன் பின் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் அடுத்த நான்கு மணி நேரத்தில் ஊரில் இருந்தான் ஜெகன். சாவு வீட்டின் சாயல் இன்றி ஏதோ யுத்தகளம் போல் ஆண் பெண் பாகுபாடின்றி சிலர் வாக்குவாதத்தில் இருந்ததை பார்த்து குழம்பி போய் நின்றான்
 
தன் ஆசிரியையின் முகத்தை கடைசியாய் ஒரு முறை பார்க்க விழைந்தவனுக்கு தன்னையும் அறியாமல் கண்ணில் நீர் கோர்த்தது
 
ஆதரவாய் ஒரு கரம் தோளில் விழ "டேய் மணி... உயிரோட இருந்தா இத்தனைக்கு எவ்ளோ ஆசையா அதை சாப்டு இதை சாப்டுனு..." என அதற்கு மேல் பேச இயலாமல் நிறுத்தினான் ஜெகன்
 
அதற்குள் கூட்டத்தில் வாய் சண்டையாய் இருந்தது கை கலப்புக்கு செல்ல "என்ன ஆச்சு மணி? ஏன் இப்படி இவங்க சண்டை போட்டுக்கறாங்க?" என்றான் ஜெகன் புரியாமல்
 
"வேற என்னடா, எல்லாம் சொத்து பிரச்சனை தான். டீச்சரோட பசங்க ரெண்டு பேரும் வீடு அவங்க பேருக்கு தான் வரணும்னு தகராறு, இல்லைனா கொள்ளி வெக்க மாட்டோம்னு பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க... என்ன மனுஷங்களோ" என்றான் மணி வருத்தமாய்
 
"பேரு சொல்ல புள்ளை இல்லைனு கோவில் கோவிலா ஏறி தவமா தவமிருந்து புள்ள பெத்த மகராசி இன்னைக்கி கொள்ளிக்கு வழியில்லாம கெடக்குதே... ஹ்ம்ம் என்ன சாபமோ இந்த மனுசிக்கி" என்றார் கூட்டத்தில் ஒருவர்
 
அதற்கு மேல் பொறுக்க இயலாமல் "நிறுத்துங்க" என்றான் ஜெகன் சத்தமாய்
 
"யார் இவன்?" என்பது போல் எல்லோர் கவனமும் ஜெகனின் மீது திரும்பியது
 
"எங்க வீட்ல வந்து எங்கள நிறுத்த சொல்றதுக்கு நீ யார்ரா?" என ஜெகன் மீது பாய்ந்தான் டீச்சரின் மூத்த மகன்
 
"நான் கலைவாணி டீச்சர்கிட்ட படிச்சவன். தயவு செஞ்சு உங்க சண்டைய ஒதுக்கி வெச்சுட்டு டீச்சருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செய்யுங்க, அவங்க ஆத்மாவ நிம்மதியா போக விடுங்க" என கெஞ்சுவது போல் கூறினான் ஜெகன்
 
"உன்னோட புத்திமதி இங்க யாருக்கும் தேவை இல்ல. வீடு என் பேருக்கு தான் வரணும், எனக்கு தான் கொள்ளி வெக்கற உரிமை இருக்கு. இல்லைனா கெழவி அனாத பொணமாத்தான் நாறணும் சொல்லிட்டேன்" என்றான் ஒருவன்
 
அதற்கு மேல் பொறுமையை இழுத்து பிடிக்க இயலாமல் அவனை ஓங்கி அறைந்தான் ஜெகன். எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க "மனுசனாடா நீ... ச்சே. பெத்த தாய அனாத பொணம்னு சொல்ற நீ உயிரோட இருந்தும் சவம் தாண்டா. நீ கொள்ளி வெச்சா எங்க டீச்சரோட ஆத்மா நிம்மதியா போகாது. நீங்க கொள்ளி வெக்கலைனா அவங்களுக்கு யாரும் இல்லையா? ஆயிரகணக்குல இருக்கோம், அவங்ககிட்ட படிச்ச புள்ளைங்க. பெத்த புள்ளை வெக்காட்டி என்ன, பெறாத புள்ள நான் வெக்கறேன் என் அம்மாவுக்கு கொள்ளி. போடா வெளிய" என கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான் ஜெகன்
 
"டேய்..." என மறுபடி சீறியவனை எச்சரிப்பது போல் பார்த்த ஜெகன் "பாதகம் செய்வோரைக் கண்டால் பயங்கொளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பானு சொல்லி குடுத்தவங்கடா எங்க டீச்சர். அதை அவங்க சொந்த பந்தங்ககிட்டயே காட்ட வெச்சுடாத. அந்த தெய்வத்தோட வயத்துல பொறந்த ஒரே காரணத்துக்காக உன்னை உயிரோட விடறேன். இல்லைனா நீ தாண்டா இப்ப அனாத பொணமா போவ. என்னோட ஐபிஎஸ் பவர் என்னனு காட்ட வெச்சுடாத" எனவும், போலீஸ் என்ற வார்த்தையில் பயந்து பின் வாங்கினான்
 
அதன் பின் அமைதியாய் காரியங்கள் நடந்தன. சொன்னது போல் மகனாய் இருந்து ஜெகன் தன் ஆசிரியைக்கு இறுதி மரியாதையை செய்தான். ஊரே மெச்சும் படி இறுதி ஊர்வலம் நடந்தது. அதோடு தன் செல்வாக்கை பயன்படுத்தி டீச்சர் இருந்த வீட்டை யாரும் ஆக்ரமிக்க முடியாதபடி செய்தான்
 
காலம் வேகமாய் சென்றது. கலைவாணி டீச்சர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் ஒரு நாள் திடீரென அந்த வீடு சுத்தம் செய்யப்பட்டு வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு விழாக்கோலம் பூண்டது
 
ஆர்வமாய் வீட்டின் முன் ஊர்மக்கள் கூடி இருக்க, ஜெகன் ஒலிபெருக்கியில் பேச தொடங்கினான் "எல்லாருக்கும் வணக்கம். என் பேரு ஜெகன். கலைவாணி டீச்சரோட பிள்ளைகளில் ஒருத்தன். எங்க அம்மா இந்த உலகத்தவிட்டு போய் ஒரு வருஷம் ஆச்சு. இந்த நாளுல அவங்க இருந்த இந்த வீடு இனிமே இலவச நூலகமா செயல்படும்னு எல்லார் சார்பாவும் தெரிவிக்கறேன். அதோட அவங்ககிட்ட படிச்சவங்க எல்லாரும் சேந்து ஒரு கல்வி அறக்கட்டளை ஆரம்பிச்சு இருக்கோம். பிள்ளைககிட்ட இருக்கற திறமைய வெளிய கொண்டு வந்து அவங்கள வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமா இல்லாம நல்ல மனுசங்களாவும் உருவாக்கினவங்க எங்க கலைவாணி டீச்சர். என்னை போல எத்தனையோ ஐபிஎஸ் ஐஏஎஸ்'களை உருவாக்கின ஆத்மாவோட நினைவா இந்த அறக்கட்டளைய உருவாக்குவதின் நோக்கம் திறமை இருந்தும் வசதி இல்லாத பிள்ளைங்களை படிக்க வெக்கறது தான். கலைவாணி கல்வி அறக்கட்டளைய திறந்து வெக்கறதுக்கு நம்ம ஸ்கூல் ஹெட்மாஸ்டர் குமாரசாமி சாரை அன்போடு அழைக்கிறேன்" என உரையை முடித்தான் ஜெகன்
 
"கலைவாணி கல்வி அறக்கட்டளை மற்றும் இலவச நூலகம் - இப்படிக்கு, கலைவாணித்தாயின் பெயர் சொல்லும் பிள்ளைகள்" என எழுதி திரையிடபட்டிருந்த பலகையை திறந்து வைத்தார் ஹெட்மாஸ்டர்
 
"குரு ப்ரம்ஹா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரா குரு சாக்ஷாத் பர ப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ:" என்ற பாடல் பின்னணியில் ஒலித்தது
(முற்றும்)
 
இந்த பதிவு எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் - நன்றி, புவனா
 

39 பேரு சொல்லி இருக்காக:

ஸ்ரீராம். said...

ஆசிரியர்களுக்கு இனிய அஞ்சலி. அவரவர்களுக்கு அவரவர் ஆசிரியர்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. ஜெகன் போல மாணவர்கள்/பிள்ளைகள் இந்த ஜெகத்தினில் நிறைந்திட வேண்டும்.

Robert said...

ரொம்ப உருக்கமாக இருந்தது.அவரவது பள்ளிக்கால நினைவுகளுக்கு அழைத்து செல்லும் அருமையான இக்கதை.

kriishvp said...

நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை நெகிழச் செய்த பதிவு. என்னுடைய பள்ளிக்கால நினைவுகளை திரும்ப கொணர்ந்த பதிவு, நன்றி!

வல்லிசிம்ஹன் said...

அன்பு புவன்,உருக வைத்துவிட்டீர்கள். எல்லா ஆசிரியர்களுக்கும் இது போல மணவர்கள் கிடைத்துவிட்டால் அருமைதான்.எழுத்து நடை மிகவும் அழகு.

Thenammai Lakshmanan said...

கதை அருமை புவனா. டீச்சர் பசங்களும் மனம் திருந்தி வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

பத்மநாபன் said...

அருமை ...ஆசிரியருக்கு பெருமை .... எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த எல்லா டீச்சர்களும் நினைவுக்கு வந்தார்கள் ...ஜகன் மாதிரி நாமும் இல்லையே எனும் ஏக்கம் வருகிறது ...

cheena (சீனா) said...

அன்பின் புவனா கோவிந்த் - கதை அருமை - ஜெகன் போன்ற - ஆசிரியரை மறக்காத மாணவர்கள் இன்றும் உண்டு. நடை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

எல் கே said...

அற்புதமான கதை புவனி.... துளி கண்ணீரை எட்டி பார்க்க வைத்தது

அப்பாதுரை said...

படித்த/பிடித்த ஆசிரியர்கள் நினைவை லேசாய்க் கீறிப் பார்த்த கதை. எனக்கு சில கலைவாணிகளைத் தெரியும்.
வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

கதை மிகவும் அருமை ...ஆமாம் கதையின் ஆரம்பத்தில் எழுதியது நீங்கள் எங்கள் வீட்டில் நடப்பதை ஒட்டு கேட்டுதானே எழுதியிருக்கிறீர்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

http://gopu1949.blogspot.in/2012/03/1.html

என்னுடைய “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” தொடர்பதிவினை, நேரம் இருந்தால் படித்து விட்டுக் கருத்துக்கூறுங்கள், மேடம்.

அன்புடன் VGK

சுஜா கவிதைகள் said...

மிக அருமை புவனா......

Sri Seethalakshmi said...

ரொம்ப அழகான உருக்கமான பதிவு... மெய் சிலிர்த்துபோனேன்...

kasiviswanath ramanathan said...

அருமையான கதை. மிக்க நன்றி பதிந்தமைக்கு. வாழ்த்துக்கள்.

Mahi said...

Superb story bhuvana!:)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கதை... நன்றிங்க...

Priyaram said...

அருமையான கதை புவனா... எங்க அப்பா கூட ஆசிரியராக இருந்தவர் தான்... இப்பவும் அவரோட ஸ்டுடென்ட்ஸ் ஒரு சிலர் பார்த்தால்," எப்படி சார் இருக்கீங்க... நாங்க உங்க கிட்ட இந்த வருஷம் படிச்சவங்க சார்...." இப்படி சொல்லும் போது.... அப்பா ரொம்ப சந்தோஷமாக பீல் பண்ணுவார்.... இந்த வேலையில் , இந்த மகிழ்ச்சி தான் மேலான மகிழ்ச்சி புவனா... என்னோட பள்ளி, கல்லூரி நாள் ஆசிரியர்களையும் நினைவில் கொண்டு வர வைத்து விட்டீர்கள்....

ஹுஸைனம்மா said...

”வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு”ன்னு சொல்வாங்க. அதமாதிரி, ரோல்மாடலாக நம்மை வழிநடத்துபவர்களாக நாம் எடுத்துக் கொள்பவர்களின் குடும்பத்தினர்களுக்கு, ஏனோ அவர்கள் அப்படியிருப்பதில்லை.

தக்குடு said...

படிக்க படிக்க எனக்கு என்னோட LKG'பப்ளிமாஸ்' உஷா மிஸ் ஞாபகத்துக்கு வந்தாங்க! வாழ்த்துக்கள் இட்லி மாமி!

JAYANTHI RAMANI said...

பேர் தான் அப்பாவி தங்கமணி. ஆனா எழுதின கதை என்னவோ அடப்பாவி தங்கமணி. ரொம்ப நாளைக்கு நீங்க ஆண் என்று நினைத்திருந்தேன். உங்கள் ப்ளாக்கிற்கு இன்றுதான் வருகை தந்திருக்கிறேன்.
என் கணிப்பு சரி என்றால் முகப் புத்தகத்தில் நாம் பேசி இருக்கிறோம். அங்கேயும் இதே பேர் தானே. சரிதானா.
அருமையான கதைக்கு வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

அருமையான கதை. ஒவ்வொரு ஆசிரியரின் நினைவும் கண்ணுக்கு முன்னே வந்து போனது...

RVS said...

நல்ல கதை. ஜெகன் புகழ் ஜெகமெங்கும் பரவட்டும்.

Anonymous said...

உங்கள் குழந்தைகள் இன்னும் ஸ்கூல் போக தொடங்கவில்லை போல் இருக்கின்றது. ஸ்கூலிற்கு அனுப்புகின்ற பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள். கதை கதையாக சொல்வார்கள். முன்னொரு காலத்தில் கலைவாணி டீச்சர் போன்றவர்கள் இருந்திருக்கலாம். இப்போது உள்ள ஆசிரியர்கள் அனேகர் மாணவர்கள் மேல் அக்கரை இல்லாதவர்கள். பாதிக்கு மேல் முறையான பயிற்சியோ அல்லது அறிவோ இல்லாதவர்கள். உங்கள் குழந்தைகள் கல்வி கற்க ஆரம்பித்த பின்னர் இக்கதை எழுதியது தப்பு என்று அறிந்து கொள்வீர்கள்.

அருணா செல்வம் said...

ஜெகன் ஆசிரியரை இனி என்னாலும் மறக்க முடியாது.
நல்ல கதை. வாழ்த்துக்கள்.

அன்னு said...

Bhuvana....
Long time.................. welcome back :)))))
ஆனா அங்க போன பின்னரும் இப்படி பதிவெழுத மீண்டும் வந்து எங்க வயித்துல பாவக்கா ஜூஸை ஊத்துவீங்கன்னு நினைக்கவே இல்லை புவனா... :))

ஆனாலும் கதை, வழக்கம் போலவே அருமையான கரு, அருமையான நடை. வாழ்த்துக்கள். நம்ம ஊரு ஃபோட்டோ பதிவு ஒன்னும் எழுதுங்களேன் :))

ராமலக்ஷ்மி said...

அருமை புவனா. ஒவ்வொருவரிடமும் தமை உருவாக்கிய ஆசிரியர்கள் குறித்தும் அவர்கள் மீதான நன்றி குறித்தும் கதைகள் உள்ளன. சிறப்பான கதை, அழகான நடையில்.

மனோ சாமிநாதன் said...

அருமையான, உணர்வுப்பூர்வமான கதை!

thirumathi bs sridhar said...

மனதில் பதிந்துவிட்ட கதை.எனது ஆசிரியர்களின் நினைவுகளையும் தூண்டிவிட்டது,

Vasudevan Tirumurti said...

பட்சாச்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நெகிழ்ச்சியா இருந்தது.. புவனா. பகிர்வுக்கு நன்றி. :)

சே. குமார் said...

நல்ல கதை...
அருமை புவனாக்கா....

மெலட்டூர் இரா நடராஜன் said...

நல்ல நடையில், ஒரு அருமையான சிறுகதை. முடிவில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், ரசிக்க முடிகிறது. பாராட்டுக்கள்.

Mohan P said...

அருமை

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம்.- ரெம்ப நன்றிங்க

@ Robert - ரெம்ப நன்றிங்க ராபர்ட்

@ kriishvp - எல்லாருக்கும் பள்ளி கால நினைவுகள் வர செய்ததில் மகிழ்ச்சி... நன்றிங்க

@ வல்லிசிம்ஹன் - ரெம்ப தேங்க்ஸ் வல்லிம்மா

@ Thenammai Lakshmanan - நீங்க சொல்றதும் சரி தான்... அதுக்கு இன்னொரு கதை எழுதிட்டா போச்சு...:) நன்றிங்க

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா

@cheena (சீனா) - நன்றிங்க சார்

@ எல் கே - தேங்க்ஸ் கார்த்தி

@ அப்பாதுரை - எல்லோர் வாழ்விலும் கலைவானில் உண்டு என புரிகிறது. நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Avargal Unmaigal - ஒ..அப்படியா? அப்ப பேடண்ட் ரைட்ஸ் கேப்பீங்களோ...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் -படிச்சேங்க ... அருமையான தொகுப்பு... நன்றிங்க

@ சுஜா கவிதைகள் - நன்றிங்க சுஜா

@ Sri Seethalakshmi - தேங்க்ஸ் சீதா

@ kasiviswanath ramanathan -நன்றிங்க

@ Mahi - தேங்க்ஸ் மகி

@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க

@ Priyaram - உங்க அப்பாவை பதியும் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க ப்ரியா

@ ஹுஸைனம்மா - ரெம்ப சரி அக்கா

@ தக்குடு - கூடவே பூரிக்கட்டை எல்லாம் ஞாபகம் வரணுமே... இல்லையா...:))

அப்பாவி தங்கமணி said...

@ JAYANTHI RAMANI - ரெம்ப நன்றிங்க. ஆமாம் அங்க பேசி,இருக்கோம் facebook லயும் அப்பாவி தங்கமணி தாங்க...:)

@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி

@ RVS - நன்றிங்க

@ Anonymous - நீங்க சொல்றது போல சிலர் இருக்காங்க இல்லைன்னு சொல்லலங்க . "நல்லதை நாலு பேருக்கு சொல்லு, கெட்டதை காதோட வெச்சுக்கோ" இது என்னோட பாலிசி, அதான் நல்ல ஆசிரியர்களை பத்தி மட்டும். எழுதினேன் நன்றி . By the way, பள்ளிக்கு அனுப்ப பிள்ளைகளை நான் இன்னும் பெறவில்லை, will update that part later then. Thanks

@ அருணா செல்வம் - நன்றிங்க அருணா

@ அன்னு - தேங்க்ஸ் அன்னு ... பாவக்காயவே போட்டோ எடுத்து போஸ்ட் போடறேன் இருங்க....:)

@ ராமலக்ஷ்மி - நன்றிங்க அக்கா

@ மனோ சாமிநாதன் - நன்றிங்க அக்கா

@ thirumathi bs sridhar - நன்றிங்க

@ Vasudevan Tirumurti - நன்னிஹை ...:)


@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ்ங்க ஆனந்தி

@ சே. குமார் - ரெம்ப நன்றிங்க குமார்

@ மெலட்டூர் இரா நடராஜன் - ரெம்ப நன்றிங்க

@ Mohan P - நன்றிங்க

Asiya Omar said...

வாழ்த்துக்கள் புவனா.கதை அருமை.

அப்பாவி தங்கமணி said...

@ வாழ்த்துக்கள் - Thanks Asiya Akka

Post a Comment