Friday, November 16, 2012

உனக்கும் எனக்கும்... (சிறுகதை - வல்லமை தீபாவளி சிறப்பிதழில்)

 
 
வல்லமை தீபாவளி சிறப்பிதழில் வெளியான எனது சிறுகதை இது. நன்றி வல்லமை ஆசிரியர் குழுவிற்கு. வல்லமையில் இதை பார்க்க இங்கே சொடுக்கவும்
____________________________________
 
"ம் ...சொல்லு"
 
"என் பேர் கூட ஞாபகமில்லையா?"
 
"இதை கேக்கதான் இப்ப போன் பண்ணினயா?"
 
"போன் பண்ணினது தப்பு தான்... வெச்சுடறேன்" என்றவளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மனதை வருத்த
 
"சுமித்ரா..." என அவளை நிறுத்தினான்
 
தூக்கத்துல கூட சுமி மித்து மித்ரானு சொன்னதெல்லாம் மறந்தாச்சு, சுமித்ரானு நீட்டி மொழக்கணுமா என எரிச்சலில் குமைந்தாள்
 
"சொல்ல வந்தத சீக்கரம் சொல்லு. எனக்கு நெறைய வேலை இருக்கு"
 
"ஒரு நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியாத அளவுக்கு பிசியா?"
 
"இப்ப சண்டை போடத்தான் போன் பண்ணினயா? அதைதான் தினமும் வீட்ல செஞ்சுட்டு இருக்கமே" என்றான் எரிச்சலாய்
 
"என்கிட்டே பேசவே புடிக்கல, இல்லையா ராகவ்"
 
"நான் அப்படி சொல்லல"
 
"வார்த்தையா சொல்லணும்னு அவசியம் இல்ல"
 
"இப்ப எதுக்கு போன் பண்ணின...கெட் டு தி பாயிண்ட்" என்றான் பொறுமை இழந்தவனாய்
 
"எங்க ஆபீஸ்ல நாளைக்கி தீபாவளிக்கு ஏதோ பார்ட்டியாம்"
 
"ம்..."
 
"அதுல ஜோடி பொருத்தம் ப்ரோக்ராம் வெக்கராங்களாம்"
 
"அதை எதுக்கு என்கிட்டே சொல்ற" என்றான் எரிச்சலாய்
 
"நமக்கு கல்யாணம் ஆனதாச்சும் ஞாபகம் இருக்கா?" என்றாள் கோபமாய்
 
"நல்லாவே ஞாபகம் இருக்கு. அதோட, ரெண்டு மாசம் முன்னாடி டைவர்ஸ் அப்ளை பண்றது விசியமா லாயரை போய் பாத்தது கூட நல்லாவே ஞாபகம் இருக்கு"
 
"அது இன்னும் ஊருக்கு தெரியாதே"
 
"அதுக்காக...."
 
"நாமளும் அந்த ப்ரோக்ராம்ல..."
 
"உனக்கென்ன பைத்தியமா சுமித்ரா" என இடைமறித்தான்
 
"நீங்க தானே டைவர்ஸ் பைனல் ஆகற வரை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு..."
 
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்"
 
"எல்லா கபில்சும் கண்டிப்பா பார்டிசிபேட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க"
 
"இங்க பாரு..."
 
"எனக்கும் ஒண்ணும் நாம ஜோடியா கொஞ்சிட்டு நிக்கணும்னு ஆசையில்ல, வேற வழி இல்லாம தான், எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. ப்ளீஸ் ராகவ்...இந்த ஒரு வாட்டி எனக்காக ப்ளீஸ். "
 
ஒரு கணம் மௌனம் காத்தவன், அதற்கு மேல் மறுக்க மனமின்றி "ஒகே" என அழைப்பை துண்டித்தான்
________________________________
 
அலுவலக சகாக்கள் எல்லாரும் தங்கள் கணவன் அல்லது மனைவியுடன் அமர்ந்து கேள்வி பதில் ரிகர்சலில் மூழ்கி இருக்க, சுமித்ராவும் ராகவ்'ம் மட்டும் மௌனமாய் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தனர்
 
"ஹெலோ மிஸ்டர் ராகவ், எப்படி இருக்கீங்க?" என கை குலுக்கினார் சுமித்ராவின் மேனேஜர் சத்யன்
 
"பைன் சார், நீங்க எப்படி இருக்கீங்க?" என சம்பிரதாயமாய் வினவினான் ராகவ்
 
"பைன் பைன்... என்ன சுமித்ரா ஆல் ப்ரிபேர்ட் போல இருக்கே. டென்ஷன் இல்லாம அமைதியா இருக்கீங்க ரெண்டு பேரும்" என கேலியாய் வினவ, ஒன்றும் பேசாமல் சிரித்து மழுப்பினாள் சுமித்ரா
 
"குட் ஈவினிங் எவ்ரிபடி. வெல்கம் டு அவர் திவாளி செலப்ரேசன்" என ரிசப்சனிஸ்ட் ராதிகா மேடையேறி வரவேற்பை துவங்க
 
"ஏன் ராதிகா உனக்கு தமிழ் தெரியாதா?" என கூட்டத்தில் சக ஊழியர் ஒருவர் கேலி செய்ய
 
"ஒகே கார்த்திக் டமில்லேயே கண்டினியு பண்றேன்"
 
"அம்மா தாயே இப்படி தமிழை கொல்றதுக்கு பதிலா நீ ஆங்கிலத்துலையே சொல்லு" என அதற்கும் கேலி தொடர்ந்தது
 
ஒருவழியாய் ஆரம்ப சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி தொடங்கியது. முதல் இரண்டு சுற்றில் ஜெய்த்து இரண்டு தம்பதிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் சுமித்ரா ராகவ் தம்பதியும் இருந்தனர்
 
சக ஊழியர்களின் கேலியும் ஆர்ப்பட்டமும் சுமித்ராவை நெளியச் செய்தது. இன்னும் சில மாதங்களில் விவாகரத்து செய்தியை சொல்லும் போது என்ன நினைப்பார்கள் என யோசித்தாள்
 
அவளே ஆச்சிர்யப்படும் விதமாய் இருவரும் ஒரே போன்ற பதிலை கூறி இருந்தனர். இத்தனை புரிதல் இருந்தும் ஏன் இன்று விவாகரத்து வரை சென்றது என வருந்தினாள். ஒருவேளை அதீத புரிதல் தான் தங்களுக்குள்ளான பிரச்சனைக்கு காரணமோ என தோன்றியது சுமித்ராவுக்கு
 
திருமணமான இந்த இரண்டு வருடத்தில் சந்தோசமாய் இருந்த நாட்களை விட இருவரும் சண்டை போட்ட நாட்கள் தானே அதிகம் என வேதனை தோன்றியது. தினம் தினம் இப்படி வேண்டாமல் சேர்ந்து வாழ்வதை விட பிரிவதே மேல் என முதல் கூறியது சுமித்ரா தான்
 
அவள் சொன்னதற்கு ராகவ் மறுப்பேதும் கூறவில்லை. அவள் சொல்லவே காத்திருந்தது போல் மறுநாளே வக்கீலை பார்க்க அழைத்து சென்றான். அதன் பின் ஒரே வீட்டில் இரு துருவங்களாய் இருந்தனர் இருவரும்
 
அவன் கேட்டு கொண்ட ஒரே விசியம், பெற்றோர் உட்பட யாருக்கும் எல்லாம் முடியும் வரை இதை பற்றி சொல்ல வேண்டாம் என்பது மட்டும் தான். இப்போதிருந்தே எல்லோருக்கும் விளக்கம் சொல்ல விருப்பமில்லை என அதற்கு காரணமும் சொன்னான்
 
"மிஸ்டர் அண்ட் மிசஸ் கார்த்திக் பைனல் ரௌன்ட்ல ரெண்டு கேள்வில ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பத்துக்கு அஞ்சு மார்க் வாங்கி இருக்காங்க. கன்க்ராட்ஸ் உங்களுக்கு" என்ற நிகழ்ச்சி நடத்தும் பெண்ணின் வாணியின் அறிவிப்பில் தன் நினைவில் இருந்து மீண்டாள் சுமித்ரா
 
"இனி, மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். ராகவ் சார், சுமித்ராகிட்ட ரெண்டு கேள்விக்கு பதில் வாங்கி வெச்சு இருக்கோம். ரெண்டு கேள்விக்கும் சுமித்ரா சொன்ன அதே பதில நீங்களும் சொன்னா கார்த்திக் ஜோடிய பீட் பண்ணிடலாம். அதோட.... இன்னைக்கு சூப்பர் ஜோடி பட்டமும் உங்களுக்கு தான். வாங்கிடுவீங்களா?" என கேள்வியாய் நிறுத்த, ராகவ் மௌனமாய் சுமித்ராவை பார்த்தான்
 
அவனின் குற்றம் சாட்டும் பார்வையை சந்தித்தவளுக்கு கண்ணில் நீர் கோர்த்தது. அதை மறைக்க குனிந்து கொண்டாள்
 
அதை வேறு விதமாய் புரிந்து கொண்ட வாணி "ஆஹா...இத்தன கூட்டத்துல பத்தடி தள்ளி உக்காந்துட்டு இருக்கும் போதே கண்ணுலேயே ரொமேன்ஸ் நடக்குதா...ஹே" என கேலி செய்ய, மற்றவர்களும் ஆரவாரம் செய்தனர்
 
உண்மை காரணம் புரிந்த ராகவ் மட்டும் மௌன புன்னகையில் வேதனையை மறைத்தான்
 
"ஒகே மிஸ்டர் ராகவ், உங்களுக்கான முதல் கேள்வி. சுமித்ராவுக்கு ரெம்ப பிடிச்ச அப்புறம் பிடிக்காத ஒருத்தர் பேர் சொல்லுங்க. உங்களுக்கு டென் செகண்ட்ஸ் டைம்"
 
ஒரு கணம் கூட யோசிக்காமல் "ரெண்டுமே நான் தான்" என்றான்
 
"ஆர் யு ஸூர் மிஸ்டர் ராகவ். அதெப்படி உங்க மனைவிக்கு பிடிக்காத லிஸ்ட்ல நீங்க இருக்க முடியும். சுமித்ரா இந்த பதில் தான் சொல்லி இருப்பாங்கனு நினைக்கறீங்களா?"
 
"விருப்பு வெறுப்பு ரெண்டுமே நமக்கு புடிச்சவங்க மேல தானே காட்ட முடியும். சோ, ரெண்டுமே அவளுக்கு நான் தான். இதான் அவளோட பதிலா இருந்துருக்கும்" என்றான் சர்வநிச்சியமாய். அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இன்றி குனிந்தே இருந்தாள் சுமித்ரா
 
"ஆடியன்ஸ்... இந்த ஏன்சர் சரியா தப்பானு ஒரு பிரேக் முடிஞ்சு பாக்கலாமா?" என வேண்டுமென்றே வாணி சீண்ட
 
"ஏய்..." என மற்றவர்கள் மிரட்ட "கரெக்ட் ஏன்சர்" என அறிவித்தாள் வாணி. கூட்டத்தில் கை தட்டல் எழுந்தது
 
"ஒகே பைனல் கொஸ்டின். சூப்பர் ஜோடி நீங்களா இல்ல கார்த்திக் ஜோடியானு தீர்மானிக்க போற கேள்வி. கேக்கலாமா?" என வாணி நிறுத்த
 
"இந்த கொசு தொல்ல தாங்க முடியல சாமி. கேள்வியை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?" என சக ஊழியர் ஒருவர் பொங்கி எழ
 
"கூல் மிஸ்டர் மூர்த்தி. இதோ நானே கேட்டுடறேன். மிஸ்டர் ராகவ், சும்மா ஜாலிக்கு தான், தப்பா எடுத்துக்க வேண்டாம். சுமித்ராகிட்ட தீவாளிக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேனு நீங்க சொல்றீங்கனு வெச்சுப்போம், அதுக்கு அவங்க மௌன ராகம் ரேவதி மாதிரி, எனக்கு விவாகரத்து வேணும்னு கேட்டா என்ன செய்வீங்க? டென் செகண்ட்ஸ் கவுன்ட் டௌன் ஸ்டார்ட்ஸ் நொவ்"
 
ஒரு கணம் மௌனமாய் சுமித்ராவை பார்த்தவன் "வாங்கி தருவேன். அவ கேட்ட விவாகரத்த வாங்கி தருவேன்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்
 
இந்த பதிலை எதிர்பாராத அதிர்ச்சி கூட்டத்தில் இருந்தவர்கள் முகத்தில் தெரிந்தது. சுமித்ரா "உன் புத்தி தெரிந்தது தானே" என்பது போல் கோபமாய் கணவனை பார்த்தாள். நிகழ்ச்சியை நடத்திய வாணி கூட ஒரு கணம் பேச மறந்து விழித்தாள்
 
"ராகவ் சார், சுமித்ரா என்ன பதில் சொல்லி இருக்காங்கனு எனக்கும் இன்னும் தெரியாது. இந்த கவர்ல தான் அந்த பதில் இருக்கு. ஆனா, என்னால இதை கேக்காம இருக்க முடியல. உங்க பதில் சினிமாத்தனமா இருக்குனு உங்களுக்கே தோணலையா?" என்றாள் வாணி
 
அவன் என்ன விளக்கம் சொல்ல போகிறான் என்பதை கேட்க அங்கு நிசப்தம் நிலவியது
 
"சினிமாத்தனமா இருக்கா இல்லையானு எனக்கு தெரியாதுங்க. என்னோட இருக்க புடிக்காம தான என் மனைவி விவாகரத்து கேக்கறா. நான் அவள அவ்ளோ கஷ்டபடுத்தி இருக்கேன்னு தானே அர்த்தம். நாம நேசிக்கறவங்க கஷ்டப்படரத பாக்கறது ரெம்ப வேதனை, நாமளே அதுக்கு காரணமா இருக்கறது இன்னும் கொடுமைங்க. அதான் விருப்பமில்லாத வாழ்க்கைல இருந்து அவள விடுவிக்க தயார்னு சொன்னேன், அது எனக்கு உயிர் போற வேதனைனே தெரிஞ்சும்" என ராகவ் கூறி முடித்ததும், கார்த்திக் ஜோடி உட்பட எல்லாரும் எழுந்து நின்று கை தட்டினர்
 
"வாவ்... உங்க சுமித்ராவும் நீங்க விவாகரத்து குடுக்க சம்மதிப்பீங்கனு தான் பதில சொல்லி இருக்காங்க. இன்னைக்கி சூப்பர் ஜோடி பட்டம் வாங்கி இருக்கறது மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். கிவ் தெம் எ பிக் ரவுண்டு ஆப் அப்ளாஸ்" என வாணி கூறவும் "ஹே..." என கூக்குரலுடன் மகிழ்ந்தனர் அனைவரும்
 
ஆனால் சம்மந்தப்பட்ட இருவர் மட்டும் மனதிற்குள் அழுதனர். ராகவ் சொன்ன பதிலில் உடைந்து போய் இருந்தாள் சுமித்ரா. அவன் விவாகரத்துக்கு சரி என்றதும் கோபம் கொண்டேனே, அவன் மனம் எப்படி வேதனைபட்டிருக்கும் என உணர்ந்ததும் அவன் கண்களை சந்திக்கும் தைரியம் இன்றி வாழ்த்து சொன்ன தோழிகளை எதிர்கொள்ளும் சாக்கில் அவனை தவிர்த்தாள் சுமித்ரா
 
போட்டியில் ஜெய்த்து இருந்தாலும் வாழ்வில் தோற்றுவிட்டோமே என வேதனையில் இருந்தான் ராகவ்
 
"ஒகே ஒகே... சைலன்ஸ்" என எல்லாரையும் அமைதிபடுத்திய வாணி
 
"எல்லாருக்கும் ஹேப்பி தீபாவளி. ராகவ் அண்ட் சுமித்ராவுக்கு சூப்பர் தீபாவளி, ஏன்னா நீங்க இந்த போட்டில ஜெய்ச்சதுக்கு உங்களுக்கு கொடைக்கானல் ரிசார்ட்ல நாலு நாள் தங்கரதுக்கான கிப்ட் வவுச்சர். ரெண்டு பெரும் ஜோடியா வந்து நம்ம மேனேஜர் சார்கிட்ட உங்க பரிசை வாங்கிக்கோங்க"
 
இருவரும் பரிசை பெற்றுகொண்டு மேடையை விட்டு இறங்க செல்ல "வெயிட் வெயிட்...அதுக்குள்ள ஓடினா எப்படி?" என பிடித்து நிறுத்தினாள் வாணி
 
"ஒகே மிஸ்டர் ராகவ். இப்ப உங்க சுமித்ராகிட்ட என்ன என்னமோ சொல்லணும்னு உங்க மனசுல ஓடிட்டு இருக்கும். அது எல்லாத்தையும் சொல்லணும்னு நாங்க எதிர்பாக்க முடியாது. ஆனா ஒரு ரெண்டு டயலாக் ஆச்சும் சொன்னாதான் நீங்க இங்கிருந்து போக முடியும். நான் சொல்றது சரி தானே?" என மற்றவர்களை பார்த்து வாணி கேட்க "ஆமா ஆமா" என பதில் வந்தது
 
காதலுடன் மனைவியை கண்ணோடு கண் பார்த்தவன் "ஐ லவ் யு மித்து" என்றான் ராகவ், வேறு எந்த வார்த்தையும் இப்போதைய தன் மனநிலையை உணர்த்தி விடாது என்பதை உணர்ந்தவன் போல்
 
அதை கேட்டதும் இத்தனை பேர் மத்தியில் இருக்கிறோம் என்பதை கூட மறந்தவளாய் கண்ணீருக்கு அணை போட இயலாமல் திணறினாள். வேகமாய் அவள் அருகே சென்ற ராகவ் அவளை தன் அணைப்பில் சேர்த்து கொண்டான். "அயம் சாரி அயம் சாரி" என அரற்றினாள் சுமித்ரா
 
"தப்பு என் மேலயும் தான் மித்து. வேலை வேலைனு உன்கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்ணாம அதான் நமக்குள்ள பெரிய கேப்பை உருவாக்கிடுச்சு... சாரி'ம்மா" என்றவனின் அணைப்பு மேலும் இறுகியது
 
அவனின் இறுகிய அணைப்பில் அவள் அழுகை மேலும் கூடியது. "ஹ்ம்ம்... அழுதா இந்த மூஞ்சிய பாக்க சகிக்கலயே. அப்ப மறுபடி டைவர்ஸ் பத்தி யோசிக்க வேண்டியது தான்" என்றவன் சீண்ட, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அழுகையை நிறுத்தி அவனை முறைத்தாள் சுமித்ரா
 
"ம்... இந்த மூஞ்சி ஒகே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என மேலும் சீண்ட, மீண்டும் அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் சிரித்தாள்
 
நல்ல வேளையாய் மற்றவர்களின் கேலியான ரகளையில் யாருக்கும் இவர்களின் பேச்சு கேட்கவில்லை. கேலி பேச்சு தொடர அப்போது தான் சுற்றுபுறத்தை உணர்ந்தவர்களாய் வேகமாய் மேடையை விட்டு இறங்கினர் இருவரும்
 
"ஹேப்பி தீபாவளி" என்ற குரல் மட்டுமே எங்கும் ஒலித்தது
 
(முற்றும்) 
 

Wednesday, November 07, 2012

டிட் யு மிஸ் மீ? (தங்கமணி ரங்கமணி சீரிஸ்..:))

தங்கமணி அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு அன்னைக்கி தான் வந்திருக்காங்க. கணவனும் மனைவியும் அரட்டை அடிச்சுட்டு இருக்காங்க
 
ரகளை இப்படி தான் ஆரம்பிக்குது....

தங்கமணி : டிட் யு மிஸ் மீ?

ரங்கமணி : நோ ஐ மிசஸ்ட் யு (என அதிபுத்திசாலி லுக் விட்டு சிரிக்கிறார்)

தங்கமணி : (முறைக்கிறாள்)

ரங்கமணி : ஹா ஹா... நான் சொன்னது உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன்... இதெல்லாம் அதையும் தாண்டி புனிதமானது உனக்கு புரியறது கொஞ்சம் கஷ்டம் தான் (என சிரிக்கிறார்)

தங்கமணி : பித்துக்குளிதனமா எதுனா ஒளர வேண்டியது... அதுக்கு இப்படி ஒரு மொக்க விளக்கம் வேற... கஷ்டம்டா சாமி... உங்கூரு ஜோசியர் குத்தாலத்துல ஏதோ பரிகாரம் பண்ணனும்னு சொன்னாருனு உங்கம்மா சொன்னது சரி தான் போல இருக்கு

ரங்கமணி : என்ன கிண்டலா?

தங்கமணி : இல்ல சுண்டல்

ரங்கமணி : ஹ்ம்ம்... புரியலைனா புரியலைனு ஒத்துக்கோ, சும்மா சமாளிக்காத

தங்கமணி : சரி சாமி... ஒத்துக்கறேன், உங்க மேலான விளக்கத்தை இந்த பீமேல்'க்கு புரியற மாதிரி கொஞ்சம் சொல்றீங்களா?

ரங்கமணி :ஹா ஹா... நீ கூட சமயத்துல நல்லா காமடி பண்றே தங்கம்... சரி விளக்கம் என்னனா... நீ "டிட் யு மிஸ் மீ"னு கேட்டயா, அதுக்கு நான் என்ன சொன்னேன்...

தங்கமணி : ஐயோ... மறுபடி மொதல்லேந்தா... (என தலையில் கை வைக்க)

ரங்கமணி : சரி நானே சொல்றேன்... நான் "நோ ஐ மிசஸ்ட் யு"னு சொன்னேன்... அதாவது உன்னை கல்யாணம் பண்ணிட்டு மிஸ்சா இருந்த உன்னை மிசஸ் ஆக்கினேன்னு சொன்னேன்... இப்ப புரியுதா... (என காலரை தூக்கிவிட்டு கொண்டு கேட்க)

தங்கமணி : நல்லா புரியுது...

ரங்கமணி : என்ன புரியுது?

தங்கமணி : குத்தாலம் பரிகாரத்தை நாள் கடத்தாம செய்யணும்னு புரியுது

ரங்கமணி : பொறாம பொறாம... ஹையோ ஹயோ... (என சிரிக்க)

தங்கமணி : அதெல்லாம் இருக்கட்டும் நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லல

ரங்கமணி : என்ன கேட்ட?

தங்கமணி : ம்... சொரக்காய்க்கு உப்பு பத்தலனு கேட்டேன் (என்றாள் கடுப்பாய்)

ரங்கமணி : ஜோக்கா? ஹி ஹி... சிரிச்சுட்டேன் போதுமா... (என பல்லை காட்ட)

தங்கமணி : இங்க பாருங்க எனக்கு கெட்ட கோவம் வந்துரும்

ரங்கமணி : கோவத்துல கூட நல்லதா வராதா உனக்கு... ஹா ஹா

தங்கமணி : (முறைக்கிறாள்)

ரங்கமணி : சரி சரி சொல்றேன்... உன்னை மிஸ் பண்ணாம இருப்பனா தங்கம்

தங்கமணி : நிஜமா? (என்றாள் சந்தேகமாய் பார்த்தபடி)

ரங்கமணி : செத்து போன எங்க அப்பத்தா மேல சத்தியமா

தங்கமணி : எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?

ரங்கமணி : எவ்ளோனா...அதெப்படி சொல்றது (என விழிக்கிறார்)

தங்கமணி : அதேன் சொல்ல முடியாது... அப்ப நீங்க என்னை மிஸ் பண்ணல

ரங்கமணி : அது.... அப்படி இல்ல தங்கம்... நெறைய மிஸ் பண்ணினேன்... அதை எப்படி சொல்றது?

தங்கமணி : (இடைமறித்து) இந்த மழுப்பற வேலை எல்லாம் வேண்டாம்... இன்னிக்கி சாயங்காலத்துக்குள்ள எவ்ளோ மிஸ் பண்ணீங்கனு சொல்லணும்

ரங்கமணி : என்ன தங்கம் இது? எங்க மேனேஜர் டெட்லைன் வெக்கற மாதிரி சொல்ற

தங்கமணி : அந்த டெட் லைன் மிஸ் பண்ணினா வேலை தான் போகும்... இந்த டெட்லைனா மிஸ் பண்ணினா லைப்லைனே போய்டும் சொல்லிட்டேன் (என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்)

ரங்கமணி : அடிப்பாவி... இப்படி சொல்லிட்டு போயிட்டாளே... என்ன பண்றது இப்போ? ப்ராஜெக்ட்ல சந்தேகம்னா டீம் மீட்டிங் போடலாம்... இந்த விசயத்துக்கு மீட்டிங் போட்டா என் மானம் டைடானிக்ல டிக்கெட் வாங்கிருமே... என்ன பண்ணலாம்... (என யோசிக்க...) ஐடியா... (என குதிக்கிறார்) கூகிள் இருக்க பயமேன்

ரங்கமணி : ( கூகிளில் "How" என டைப் செய்ததுமே "How to Tie a tie" என சஜசன் வர... ) இதொண்ணு என் வீட்டுக்காரி மாதிரியே குறுக்க குறுக்க பேசிகிட்டு...

தங்கமணி : (உள்ள இருந்து) என்னமோ சொன்ன மாதிரி கேட்டுச்சு?

ரங்கமணி : உன்னை ஒண்ணும் சொல்லல தங்கம்... இந்த சனியம் புடிச்ச கம்பியூட்டர் தான் (என சமாளிக்கிறார்)

தங்கமணி : (சைலண்ட்)

ரங்கமணி : ஹ்ம்ம்... (என பெருமூச்சு விட்டபடி... "How to measure how much..." என டைப் செய்து முடிக்கும் முன் "how to measure how much paint i need" என ஒரு நூறு லிங்குகள் வர) அடச்சே... ஆணியே புடுங்க வேண்டாம் போ... (என சலித்து கொண்டு கம்பியூட்டரை ஆப் செய்கிறார்)

சற்று நேரம் கழித்து...

தங்கமணி : ரெடியா? இப்ப சொல்லுங்க... என்னை எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?

ரங்கமணி : "ஐயையோ...அதுக்குள்ள டெட்லைன் வந்துடுச்சா" என தனக்குள் புலம்பியவர் "ம்... அது... சரி என்னை கேக்கறியே? நீ சொல்லு பாப்போம்... என்னை நீ எவ்ளோ மிஸ் பண்ணின?" என மடக்கினார். அல்லது மடக்கி விட்டதாக புளங்காகிதம் அடைந்தார்

ஆனால் அதெல்லாம் வெறும் காகிதமாக ஆக போவதை பாவம் அவர் அறியவில்லை

தங்கமணி : நானா? இங்கிருந்து கிளம்பின நிமிசத்துல இருந்து எப்படா திரும்பி வருவோம்னு நெனச்சேன்...அவ்ளோ மிஸ் பண்ணினேன்

ரங்கமணி : "ஐயையோ... எனக்கு இது தோணாம போச்சே...ச்சே...எவ்ளோ ஈஸியா சொல்லிட்டாளே... இந்த மாதிரி வேற எதுவும் தோண மாட்டேங்குதே" என புலம்பியவர் "பேசாம நானும் அப்படித்தான்னு சொல்லிடுவோம்" என தீர்மானித்து வாயை திறக்கும் முன்...

தங்கமணி : நானும் அப்படித்தான்னு சொல்றத தவிர வேற எது வேணா சொல்லுங்க... உங்களுக்கு இன்னும் இருபத்திநாலு மணி நேரம் டைம் (என எழுந்து செல்கிறாள்)

ரங்கமணி : ........................................

என்ன செஞ்சாரா? மேல உள்ள படத்த பாருங்க...அப்படி தான் முழிச்சுட்டு இருக்காராம். ஹையோ ஹையோ... :))

தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை ரசிக்க இங்கே கிளிக்கவும்

:)))

Thursday, November 01, 2012

மௌன ராகம்... (சிறுகதை - வல்லமை இதழில்)

 

வல்லமை இதழில் எனது இந்த சிறுகதை பிரசுரிக்கபட்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு

1962 

“மைதிலி, பூ இப்படி தழைய தழைய வெச்சா உங்க அண்ணாவுக்கு பிடிக்காதும்மா, மடிச்சு வெய்யி”
 
“சும்மா அண்ணா அண்ணானு பூச்சாண்டி காட்டாதே மன்னி… நேக்கு தெரியும் எப்படி வெக்கணும்னு. நான் அழகா இருக்கேனு நோக்கு பொறாமை..ஹம்ம்” என கழுத்தை ஒடித்து சென்றாள் மைதிலி
 
அதே நேரம் அறையில் இருந்து வெளியே வந்த அவளின் அண்ணன் கிருஷ்ணன் “என்ன மைதிலி ரெடியா? உன்ன காலேஜ்ல விட்டுட்டு நான் ஆபீஸ் போணும்”
 
“இதோ ரெடிண்ணா” என்றபடி கைபையை எடுத்து கொண்டு வந்தாள்
 
ஒரு கணம் அவளை உற்று நோக்கியவன் “ஏய் மைதிலி நில்லு, என்னடி இது வேஷம் கட்றவ மாதிரி ஜடை தாண்டி பூ தொங்கறது. என்ன பழக்கம் இது?” என கோபமாய் கேட்க
 
அண்ணனின் கோபத்தை அறிந்த மைதிலி “இல்லைணா…நான் அப்பவே சொன்னேன்…மன்னி தான்…” எனவும், மன்னி என்றழைக்கபட்ட ராதா செய்வதறியாது திகைத்தாள்
 
ராதா உண்மையை கூற முயல, கை உயர்த்தி பேசவேண்டாம் என்பது போல் முறைத்த கிருஷ்ணன் “கூத்தாடி குடும்பம் தான உன் மன்னியோடது, வேற எப்படி இருக்கும் புத்தி. நீ சரியா போட்டுண்டு வா” என தங்கையை ஒட்டி பேசினான், புது மனைவி என்ற கரிசனம் கூட இல்லாமல்
 
தன் பாட்டனார் மேடை நாடக நடிகராய் இருந்தவர் என்பதை குத்தி காட்டி தன் கணவன் பேசியதும், நடிகர் என்றால் கேவலமா என கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்தினாள் ராதா
 
சீர் செனத்தி எதுவும் இன்றி உறவு என்பதால் மட்டும் இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்த இந்த சில மாதங்களில் எல்லோரின் உதாசீனமும் ராதாவுக்கு பழகித்தான் போனது
 
ஆனாலும் இது போன்ற உண்மை சிறிதுமற்ற குற்றசாட்டுகளின் போது மனம் மிகவும் வேதனையுற்றது
 
கிருஷ்ணனின் வசதியான மாமன் மகள் ரஞ்சனி இந்த வீட்டுக்கு மருமகளாய் வர இருந்ததை தடுத்த அவன் தந்தை, தூரத்து உறவான ராதாவை குடும்பத்துக்கு ஏற்ற மருமகள் என கொண்டு வந்தது எல்லோர் மனத்திலும் ராதாவின் மேல் நிரந்தர கோபத்தை ஏற்படுத்தி இருந்தது
 
அதிலும் ரஞ்சனியிடம் சிறு வயது முதல் உற்ற தோழி போல் இருந்த மைதிலி சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் அண்ணி ராதாவை பழி வாங்குவாள்
 
“கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கத்தலாம்” அதுவே இல்லை எனும் போது வேறு என்ன என ராதாவும் அப்படியே வாழப் பழகி விட்டாள்
 
மற்றொரு நாள்…
“சொன்னா கேளு மைதிலி, இவ்ளோ எண்ணை விடாதே… உங்கண்ணாக்கு பிடிக்காது. இல்லேனா உன் சிநேகிதி சொல்லி குடுத்ததை உனக்கு அளவா செய்துக்கோ. உங்க அண்ணாக்கு நான் தனியா சமைச்சுடறேன்” என ராதா கூற
 
“இங்க பாருங்க மன்னி… இதொண்ணும் உங்காத்துல இருந்து கொண்டு வந்ததில்ல, எங்க அண்ணா சம்பாதிக்கற காசுல வாங்கினது. என் இஷ்டத்துக்கு செய்வேன். இன்னைக்கி நான் செய்யறது தான் அண்ணா சாப்பிடணும், எனக்கு தெரியாம நீங்க சமைச்சா அண்ணாகிட்ட இல்லாதையும் பொல்லாததையும் சொல்லி சிக்க வெப்பேன்” என்றாள் மிரட்டலாய்
 
செய்வதறியாமல் மௌனமானாள் ராதா. தாயில்லா பெண் என தன் மாமனாரும் கணவனும் சேர்ந்து மைதிலிக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறார்களே, போகிற இடத்தில என்ன சொல்வார்களோ என வருந்தினாள்
 
அன்று மதியம்…
“என்னடி கருமம் இது… வாய்ல வெக்க வெளங்கல… ஒரே காரம் புளிப்பு த்தூ. இப்படி எண்ணைய கொட்டினா சீக்கரம் பரலோகம் போக வேண்டியது தான். எல்லாத்தையும் நீயே கொட்டிக்கோ” என எழுந்த கணவனை
 
"இல்லங்க… அது … ” என ராதா விளக்கம் சொல்ல வர
 
அதற்குள் மைதிலி “நான் அப்பவே சொன்னேண்ணா… அதுக்கு மன்னி என் ஆத்துகாரர் சம்பாதிக்கறார் நான் கொட்றேன் எண்ணைய நீ யார் கேக்கனு சொல்றா” என வழக்கம் போல் பழியை ராதாவின் போல் போட்டாள்
 
“காசு பணத்த சம்பாதிச்சா தானே அதோட அருமை தெரியும், மூக்கு பிடிக்க மூணு வேளையும் சாப்டுட்டு தூங்கற ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது” என தன் மனைவி மீதே குற்றம் சாட்டினான் கிருஷ்ணன்
 
தான் என்ன சொன்னாலும் தன் கணவன் நம்பபோவதில்லை என உணர்ந்ததினால் எப்போதும் போல் மௌனமானாள் ராதா
__________________________________

1972 

“மைதிலி இந்த பைல பழம், பூ, பலகாரம் எல்லாம் வெச்சுருக்கேன், துணிக கூட சேக்காம தனியா வெச்சுக்கோ”
 
“எதுக்கு மன்னி இப்படி அடுக்கறேள்? எங்க மாமி சும்மாவே ‘பொன்ன வெக்கற எடத்துல பூ’ங்கறது உங்காத்து மந்திரமானு கேலி பேசறா” என நொடித்தவள், பழங்கள், பூ, இனிப்பு இருந்த பையை எடுத்து வெளியே வைத்தாள்
 
“மைதிலி கிளம்பிட்டயா” என கிருஷ்ணன் வர “போலாம்’ண்ணா” என்றாள்
 
“என்னமா இது வெறும் துணிப்பை தான் இருக்கு போல, தோட்டத்துல இருந்து பழம் எல்லாம் கொண்டு வர சொன்னனே, என்ன ஆச்சு ராதா?” என வழக்கம் போல் மனைவியை முறைக்க
 
ராதா ஏதோ சொல்ல முற்படுமுன் “நான் கேட்டே’ண்ணா, மன்னி அவா அம்மா ஆத்துக்கு எடுத்து வெச்சுட்டாளாம்” என கூசாமல் பழி சுமத்தினாள் மைதிலி. எரித்து விடுவதை போல் மனைவியை பார்த்தான் கிருஷ்ணன்
 
சில மாதங்களுக்கு பின்…
“மைதிலி, நீ ஏம்மா இதெல்லாம் செய்யற. கல்யாணம் ஆகி ரெம்ப நாள் கழிச்சு இப்ப தான் உண்டாகி இருக்க, ஓய்வா இரு. உனக்கு மாங்காதானே வேணும், நான் நறுக்கி தரேன் தள்ளு” என ராதா உண்மையான அக்கறையுடன் கூற
 
“ரெம்ப அக்கறை இருக்கறா மாதிரி வேஷம் போடாதேள் மன்னி. நீங்க பத்தாம் மாசமே பெத்துகிட்டதை மறைமுகமா குத்தி காட்றேளா? வருசத்துக்கு ஒண்ணா நாலு பெத்துகிட்டத தவிர என்ன சாதிச்சு இருக்கீங்க… ஹ்ம்ம்” என விஷமாய் வார்த்தைகளை கக்கினாள்
 
“ஏன் மைதிலி இப்படி பேசற. உன் நல்லதுக்கு தானே…”
 
“ஆஹா… சினிமால நடிக்கரவா தோத்து போய்டணும் உங்கள்ட்ட…. என் ஆத்துக்காரர் என் மேல உசுரா இருக்கார்னு உங்க பொறாமயால தான் நேக்கு கரு தங்காம இருக்கு. இன்னும் உங்கள வேலை வேற வாங்கினா சபிச்சுடமாட்டீங்க… ஹ்ம்ம்” என சலித்து கொண்டவளை, ஒரு கணம் மௌனமாய் பார்த்த ராதா, அந்த இடத்தை விட்டு அகன்றாள்
 
சற்று நேரத்தில் “ராதா… ஏய் ராதா… என்ன பண்ணிட்ருக்க” என்ற கணவனின் கத்ததில் நடந்ததை யூகித்தவளாய் பெருமூச்சுடன் முன்னறைக்கு வந்தாள் ராதா
 
மௌனமாய் வந்து நின்றவளை முறைத்த கிருஷ்ணன் “ஏண்டி, உன்னால இந்த மாங்காய நறுக்கி தர முடியாதா? பாரு மைதிலி விரல வெட்டிண்டு இருக்கா” என கோபத்தில் கத்தினான்
 
மைதிலி வழக்கம் போல் “நான் கேட்டேண்ணா… மன்னி நேக்கு நெறைய வேலை இருக்குனுட்டா” என வருந்துவது போல் பாவனை செய்தாள்
 
“என்னடி முழிச்சுண்டு நிக்கற, வாய்ல என்ன கொலுகட்டயா பதில் சொல்லு” என கிருஷ்ணன் கேட்க, தான் பதில் சொல்வதால் எதுவும் மாறபோவதில்லை என புரிந்தவளாய் உணர்ச்சியற்ற முகத்துடன் நின்றாள் ராதா
 
“அப்பா, அத்தை பொய் சொல்றாப்பா. அம்மா நறுக்கி தரேன்னு தான் சொன்னா” என ராதாவின் கடைக்குட்டி வைஷ்ணவி சொல்ல
 
“கேட்டியாண்ணா, உன் பொண்ணு கூட அவ அம்மாவுக்கு சாதகமாத்தான் பொய் பேசறா… இதுவே நம்ப அம்மா உயிரோட இருந்துருந்தா… ” என இல்லாத கண்ணீரை மறைக்க கண்ணை கசக்கினாள் மைதிலி
 
கிருஷ்ணனின் கோபத்தை தூண்ட அது போதுமாய் இருந்தது “வாய மூடு கழுத… மொளச்சு மூணு இல விடல அதுக்குள்ள பொய் சொல்றியா” என மகளை அடித்து துவைத்தான். அதை தடுக்க சென்ற ராதாவின் மேலும் சில அடிகள் விழுந்தன
_________________________________

2012

காலில் முக்காலி இடித்து கொண்டதில் நகம் பெயர்ந்து சுரீல் என வலி கிளம்ப “ஸ்ஸ்…” என முனகியவர் “யார் இந்த முக்காலிய இங்க போட்டு தொலைச்சது” என்றார் கிருஷ்ணன் எரிச்சலுடன்
 
அதே சமயம் வந்த மைதிலி “நான் அப்பவே சொன்னேன்’ண்ணா, மன்னி தான்….” என தொடங்கியவள், தன் அண்ணனின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்து, தான் செய்த தவறு புலப்பட, என்ன செய்வதென தெரியாமல் நிறுத்தினாள்
 
ரேழியில் இருந்து வந்த கைதட்டல் ஒலி கேட்டு மைதிலியும் கிருஷ்ணனும் திரும்பி பார்த்தனர். அங்கு ராதாவின் இளைய மகள் வைஷ்ணவி நின்றிருந்தாள்
 
“சபாஷ் அத்தை… நீ இப்படி வாயடைச்சு போய் நிக்கறது பாக்க கண் கொள்ளா காட்சியா இருக்கு” என்றவள் தன் தந்தை புறம் திரும்பி “ஏம்ப்பா நீங்க கூட வாயடைச்சு போய் நிக்கறேள். உங்க அருமை தங்கையோட பேச்சை கேட்டுண்டு, தொண்ட கிழிய அம்மாவையும் எங்களையும் வெரட்டுவேளே, இப்ப என்ன ஆச்சு… பேசுங்கப்பா பேசுங்கப்பா” என கோபமாய் தன் தந்தையை பற்றி உலுக்கினாள் வைஷ்ணவி
 
தங்கை மேல் உள்ள பாசத்தில் தன்னை நம்பி வந்த ஜீவனை வதைத்ததை முதல் முறையாய் உணர்ந்தான் கிருஷ்ணன். ஐம்பது வருட இல்வாழ்க்கையின் தருணங்கள் மனதில் படமாய் ஓட, ராதாவின் அன்பும் சகிப்புதன்மையும், காதலும் தியாகமும், உழைப்பும் பொறுப்பும் கண் முன் விரிந்தது
 
அந்த புரிதலோடு சேர்ந்து கண்ணில் நீரும் பெருகியது. பத்து நாட்களுக்கு முன் மனைவியின் உடலுக்கு சிதை மூட்டிய போது கூட இரும்பாய் நின்றவர், இன்று உணர்ந்த இழப்பில் கட்டுப்படுத்த இயலாமல் ராதாவின் மாலையிட்ட படத்தின் முன் மண்டியிட்டு கதறினார்
 
ஆம்… ஐம்பது வருடங்கள் கிருஷ்ணனின் மனைவியாய், அந்த வீட்டின் மருமகளாய், நான்கு பிள்ளைகளுக்கு தாயாய் தன் கடமையை செவ்வனே செய்த நிறைவில் எழுபது வயதில் இயற்கை மரணம் எய்தினாள் ராதா
 
தந்தையின் கதறலில் பிள்ளைகள் நால்வரும் சிலையாய் நின்றனர். அதுவரை பெற்றவரை சிம்ம சொப்பனமாய் மட்டுமே பார்த்து பழகியவர்களுக்கு அவரின் இந்த நிலை காண சகியாமல் கண்ணில் நீர் கோர்த்தது
 
முதலில் சுதாரித்தவன் மூத்தவன் ரவீந்திரன் தான். “நீ சும்மாவே இருக்க மாட்டியா வைஷு” என தங்கையை கடிந்து கொண்டான்
 
“அப்பா என்னப்பா இது. அவ தான் புரியாம ஏதோ பேசறானா அதை போய் நீங்க பெருசா எடுத்துகிட்டு… ப்ளீஸ்ப்பா, அழாதீங்கோ” என சமாதானம் செய்தான்
 
“அப்பா சாரி’ப்பா, நான் உங்கள அழ வெக்கணும்னு அப்படி பேசலப்பா. அம்மா இல்லாம போனப்புறம் கூட அத்தை எப்பவும் போல பேசவும் என்னால தாங்கமுடியாமத்தான் அப்படி சொல்லிட்டேன்’ப்பா. என்னை மன்னிச்சுடுங்கப்பா… ப்ளீஸ்’ப்பா” என கெஞ்சலில் தொடங்கி அழுகையில் முடித்தாள் வைஷ்ணவி
 
ஒன்றும் பேசாமல் மகளை அணைத்து கொண்டார் கிருஷ்ணன். கதறல் நின்றிருந்த போதும் கண்ணில் நீர் வற்ற மறுத்தது அவருக்கு
 
அந்த நிலையில் தன் தமயனை பார்த்ததும் “இதற்கெல்லாம் தான்தானே காரணம். பெற்றவளை இழந்த பின் எல்லாமுமாய் இருந்த அண்ணன், மனைவியின் பேச்சை கேட்டு தன்னை வெறுத்து விடுவானோ என்ற எண்ணத்தில் தவறு செய்து விட்டோமே” என உறுத்த, கிருஷ்ணனின் காலில் மன்னிப்பு வேண்டி விழுந்தாள் மைதிலி
 
பத்து நாட்களுக்கு முன் ராதாவின் உயிர் பிரிந்த தருணத்தில் தன்னில் ஒரு பகுதியை இழந்ததை கூட கிருஷ்ணனால் உணரமுடியவில்லை
 
சிறுவயதிலேயே அன்னையை இழந்து, இழப்புக்கு மனம் பழகியதும் ஒரு காரணமோ என இப்போது தோன்றியது
 
எது எப்படி இருப்பினும் வாழ்ந்த காலத்தில் அவளை அழ வைத்ததிற்கு இனி, தான் வாழும் காலம் முழுமையும் அவளை நினைத்து அழும் தண்டனையை கொடுத்து சென்றுவிட்டாள் என நினைத்தார் கிருஷ்ணன்
 
தன்னையும் அறியாமல் அவரின் விரல்கள் புகைப்படத்தில் இருந்த அவளின் கண்களை வருடியது. இந்த கணம் அவருக்கு தேவை தனிமை என உணர்ந்தவர்கள் போல் பிள்ளைகள் நால்வரும் விலகி சென்றனர்
 
தன் மனைவியின் படத்தின் அருகே வைத்திருந்த அவள் விரும்பி வாசிக்கும் வீணையின் தந்தியை ஸ்பரிசித்தவருக்கு, அதிலிருந்து கசிந்த மௌனராகம் அவளின் சிரிப்பின் நாதமாய் ஒலித்தது
 
(முற்றும்)