Friday, November 16, 2012

உனக்கும் எனக்கும்... (சிறுகதை - வல்லமை தீபாவளி சிறப்பிதழில்)

 
 
வல்லமை தீபாவளி சிறப்பிதழில் வெளியான எனது சிறுகதை இது. நன்றி வல்லமை ஆசிரியர் குழுவிற்கு. வல்லமையில் இதை பார்க்க இங்கே சொடுக்கவும்
____________________________________
 
"ம் ...சொல்லு"
 
"என் பேர் கூட ஞாபகமில்லையா?"
 
"இதை கேக்கதான் இப்ப போன் பண்ணினயா?"
 
"போன் பண்ணினது தப்பு தான்... வெச்சுடறேன்" என்றவளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மனதை வருத்த
 
"சுமித்ரா..." என அவளை நிறுத்தினான்
 
தூக்கத்துல கூட சுமி மித்து மித்ரானு சொன்னதெல்லாம் மறந்தாச்சு, சுமித்ரானு நீட்டி மொழக்கணுமா என எரிச்சலில் குமைந்தாள்
 
"சொல்ல வந்தத சீக்கரம் சொல்லு. எனக்கு நெறைய வேலை இருக்கு"
 
"ஒரு நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியாத அளவுக்கு பிசியா?"
 
"இப்ப சண்டை போடத்தான் போன் பண்ணினயா? அதைதான் தினமும் வீட்ல செஞ்சுட்டு இருக்கமே" என்றான் எரிச்சலாய்
 
"என்கிட்டே பேசவே புடிக்கல, இல்லையா ராகவ்"
 
"நான் அப்படி சொல்லல"
 
"வார்த்தையா சொல்லணும்னு அவசியம் இல்ல"
 
"இப்ப எதுக்கு போன் பண்ணின...கெட் டு தி பாயிண்ட்" என்றான் பொறுமை இழந்தவனாய்
 
"எங்க ஆபீஸ்ல நாளைக்கி தீபாவளிக்கு ஏதோ பார்ட்டியாம்"
 
"ம்..."
 
"அதுல ஜோடி பொருத்தம் ப்ரோக்ராம் வெக்கராங்களாம்"
 
"அதை எதுக்கு என்கிட்டே சொல்ற" என்றான் எரிச்சலாய்
 
"நமக்கு கல்யாணம் ஆனதாச்சும் ஞாபகம் இருக்கா?" என்றாள் கோபமாய்
 
"நல்லாவே ஞாபகம் இருக்கு. அதோட, ரெண்டு மாசம் முன்னாடி டைவர்ஸ் அப்ளை பண்றது விசியமா லாயரை போய் பாத்தது கூட நல்லாவே ஞாபகம் இருக்கு"
 
"அது இன்னும் ஊருக்கு தெரியாதே"
 
"அதுக்காக...."
 
"நாமளும் அந்த ப்ரோக்ராம்ல..."
 
"உனக்கென்ன பைத்தியமா சுமித்ரா" என இடைமறித்தான்
 
"நீங்க தானே டைவர்ஸ் பைனல் ஆகற வரை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு..."
 
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்"
 
"எல்லா கபில்சும் கண்டிப்பா பார்டிசிபேட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க"
 
"இங்க பாரு..."
 
"எனக்கும் ஒண்ணும் நாம ஜோடியா கொஞ்சிட்டு நிக்கணும்னு ஆசையில்ல, வேற வழி இல்லாம தான், எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. ப்ளீஸ் ராகவ்...இந்த ஒரு வாட்டி எனக்காக ப்ளீஸ். "
 
ஒரு கணம் மௌனம் காத்தவன், அதற்கு மேல் மறுக்க மனமின்றி "ஒகே" என அழைப்பை துண்டித்தான்
________________________________
 
அலுவலக சகாக்கள் எல்லாரும் தங்கள் கணவன் அல்லது மனைவியுடன் அமர்ந்து கேள்வி பதில் ரிகர்சலில் மூழ்கி இருக்க, சுமித்ராவும் ராகவ்'ம் மட்டும் மௌனமாய் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தனர்
 
"ஹெலோ மிஸ்டர் ராகவ், எப்படி இருக்கீங்க?" என கை குலுக்கினார் சுமித்ராவின் மேனேஜர் சத்யன்
 
"பைன் சார், நீங்க எப்படி இருக்கீங்க?" என சம்பிரதாயமாய் வினவினான் ராகவ்
 
"பைன் பைன்... என்ன சுமித்ரா ஆல் ப்ரிபேர்ட் போல இருக்கே. டென்ஷன் இல்லாம அமைதியா இருக்கீங்க ரெண்டு பேரும்" என கேலியாய் வினவ, ஒன்றும் பேசாமல் சிரித்து மழுப்பினாள் சுமித்ரா
 
"குட் ஈவினிங் எவ்ரிபடி. வெல்கம் டு அவர் திவாளி செலப்ரேசன்" என ரிசப்சனிஸ்ட் ராதிகா மேடையேறி வரவேற்பை துவங்க
 
"ஏன் ராதிகா உனக்கு தமிழ் தெரியாதா?" என கூட்டத்தில் சக ஊழியர் ஒருவர் கேலி செய்ய
 
"ஒகே கார்த்திக் டமில்லேயே கண்டினியு பண்றேன்"
 
"அம்மா தாயே இப்படி தமிழை கொல்றதுக்கு பதிலா நீ ஆங்கிலத்துலையே சொல்லு" என அதற்கும் கேலி தொடர்ந்தது
 
ஒருவழியாய் ஆரம்ப சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி தொடங்கியது. முதல் இரண்டு சுற்றில் ஜெய்த்து இரண்டு தம்பதிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் சுமித்ரா ராகவ் தம்பதியும் இருந்தனர்
 
சக ஊழியர்களின் கேலியும் ஆர்ப்பட்டமும் சுமித்ராவை நெளியச் செய்தது. இன்னும் சில மாதங்களில் விவாகரத்து செய்தியை சொல்லும் போது என்ன நினைப்பார்கள் என யோசித்தாள்
 
அவளே ஆச்சிர்யப்படும் விதமாய் இருவரும் ஒரே போன்ற பதிலை கூறி இருந்தனர். இத்தனை புரிதல் இருந்தும் ஏன் இன்று விவாகரத்து வரை சென்றது என வருந்தினாள். ஒருவேளை அதீத புரிதல் தான் தங்களுக்குள்ளான பிரச்சனைக்கு காரணமோ என தோன்றியது சுமித்ராவுக்கு
 
திருமணமான இந்த இரண்டு வருடத்தில் சந்தோசமாய் இருந்த நாட்களை விட இருவரும் சண்டை போட்ட நாட்கள் தானே அதிகம் என வேதனை தோன்றியது. தினம் தினம் இப்படி வேண்டாமல் சேர்ந்து வாழ்வதை விட பிரிவதே மேல் என முதல் கூறியது சுமித்ரா தான்
 
அவள் சொன்னதற்கு ராகவ் மறுப்பேதும் கூறவில்லை. அவள் சொல்லவே காத்திருந்தது போல் மறுநாளே வக்கீலை பார்க்க அழைத்து சென்றான். அதன் பின் ஒரே வீட்டில் இரு துருவங்களாய் இருந்தனர் இருவரும்
 
அவன் கேட்டு கொண்ட ஒரே விசியம், பெற்றோர் உட்பட யாருக்கும் எல்லாம் முடியும் வரை இதை பற்றி சொல்ல வேண்டாம் என்பது மட்டும் தான். இப்போதிருந்தே எல்லோருக்கும் விளக்கம் சொல்ல விருப்பமில்லை என அதற்கு காரணமும் சொன்னான்
 
"மிஸ்டர் அண்ட் மிசஸ் கார்த்திக் பைனல் ரௌன்ட்ல ரெண்டு கேள்வில ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பத்துக்கு அஞ்சு மார்க் வாங்கி இருக்காங்க. கன்க்ராட்ஸ் உங்களுக்கு" என்ற நிகழ்ச்சி நடத்தும் பெண்ணின் வாணியின் அறிவிப்பில் தன் நினைவில் இருந்து மீண்டாள் சுமித்ரா
 
"இனி, மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். ராகவ் சார், சுமித்ராகிட்ட ரெண்டு கேள்விக்கு பதில் வாங்கி வெச்சு இருக்கோம். ரெண்டு கேள்விக்கும் சுமித்ரா சொன்ன அதே பதில நீங்களும் சொன்னா கார்த்திக் ஜோடிய பீட் பண்ணிடலாம். அதோட.... இன்னைக்கு சூப்பர் ஜோடி பட்டமும் உங்களுக்கு தான். வாங்கிடுவீங்களா?" என கேள்வியாய் நிறுத்த, ராகவ் மௌனமாய் சுமித்ராவை பார்த்தான்
 
அவனின் குற்றம் சாட்டும் பார்வையை சந்தித்தவளுக்கு கண்ணில் நீர் கோர்த்தது. அதை மறைக்க குனிந்து கொண்டாள்
 
அதை வேறு விதமாய் புரிந்து கொண்ட வாணி "ஆஹா...இத்தன கூட்டத்துல பத்தடி தள்ளி உக்காந்துட்டு இருக்கும் போதே கண்ணுலேயே ரொமேன்ஸ் நடக்குதா...ஹே" என கேலி செய்ய, மற்றவர்களும் ஆரவாரம் செய்தனர்
 
உண்மை காரணம் புரிந்த ராகவ் மட்டும் மௌன புன்னகையில் வேதனையை மறைத்தான்
 
"ஒகே மிஸ்டர் ராகவ், உங்களுக்கான முதல் கேள்வி. சுமித்ராவுக்கு ரெம்ப பிடிச்ச அப்புறம் பிடிக்காத ஒருத்தர் பேர் சொல்லுங்க. உங்களுக்கு டென் செகண்ட்ஸ் டைம்"
 
ஒரு கணம் கூட யோசிக்காமல் "ரெண்டுமே நான் தான்" என்றான்
 
"ஆர் யு ஸூர் மிஸ்டர் ராகவ். அதெப்படி உங்க மனைவிக்கு பிடிக்காத லிஸ்ட்ல நீங்க இருக்க முடியும். சுமித்ரா இந்த பதில் தான் சொல்லி இருப்பாங்கனு நினைக்கறீங்களா?"
 
"விருப்பு வெறுப்பு ரெண்டுமே நமக்கு புடிச்சவங்க மேல தானே காட்ட முடியும். சோ, ரெண்டுமே அவளுக்கு நான் தான். இதான் அவளோட பதிலா இருந்துருக்கும்" என்றான் சர்வநிச்சியமாய். அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இன்றி குனிந்தே இருந்தாள் சுமித்ரா
 
"ஆடியன்ஸ்... இந்த ஏன்சர் சரியா தப்பானு ஒரு பிரேக் முடிஞ்சு பாக்கலாமா?" என வேண்டுமென்றே வாணி சீண்ட
 
"ஏய்..." என மற்றவர்கள் மிரட்ட "கரெக்ட் ஏன்சர்" என அறிவித்தாள் வாணி. கூட்டத்தில் கை தட்டல் எழுந்தது
 
"ஒகே பைனல் கொஸ்டின். சூப்பர் ஜோடி நீங்களா இல்ல கார்த்திக் ஜோடியானு தீர்மானிக்க போற கேள்வி. கேக்கலாமா?" என வாணி நிறுத்த
 
"இந்த கொசு தொல்ல தாங்க முடியல சாமி. கேள்வியை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?" என சக ஊழியர் ஒருவர் பொங்கி எழ
 
"கூல் மிஸ்டர் மூர்த்தி. இதோ நானே கேட்டுடறேன். மிஸ்டர் ராகவ், சும்மா ஜாலிக்கு தான், தப்பா எடுத்துக்க வேண்டாம். சுமித்ராகிட்ட தீவாளிக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேனு நீங்க சொல்றீங்கனு வெச்சுப்போம், அதுக்கு அவங்க மௌன ராகம் ரேவதி மாதிரி, எனக்கு விவாகரத்து வேணும்னு கேட்டா என்ன செய்வீங்க? டென் செகண்ட்ஸ் கவுன்ட் டௌன் ஸ்டார்ட்ஸ் நொவ்"
 
ஒரு கணம் மௌனமாய் சுமித்ராவை பார்த்தவன் "வாங்கி தருவேன். அவ கேட்ட விவாகரத்த வாங்கி தருவேன்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்
 
இந்த பதிலை எதிர்பாராத அதிர்ச்சி கூட்டத்தில் இருந்தவர்கள் முகத்தில் தெரிந்தது. சுமித்ரா "உன் புத்தி தெரிந்தது தானே" என்பது போல் கோபமாய் கணவனை பார்த்தாள். நிகழ்ச்சியை நடத்திய வாணி கூட ஒரு கணம் பேச மறந்து விழித்தாள்
 
"ராகவ் சார், சுமித்ரா என்ன பதில் சொல்லி இருக்காங்கனு எனக்கும் இன்னும் தெரியாது. இந்த கவர்ல தான் அந்த பதில் இருக்கு. ஆனா, என்னால இதை கேக்காம இருக்க முடியல. உங்க பதில் சினிமாத்தனமா இருக்குனு உங்களுக்கே தோணலையா?" என்றாள் வாணி
 
அவன் என்ன விளக்கம் சொல்ல போகிறான் என்பதை கேட்க அங்கு நிசப்தம் நிலவியது
 
"சினிமாத்தனமா இருக்கா இல்லையானு எனக்கு தெரியாதுங்க. என்னோட இருக்க புடிக்காம தான என் மனைவி விவாகரத்து கேக்கறா. நான் அவள அவ்ளோ கஷ்டபடுத்தி இருக்கேன்னு தானே அர்த்தம். நாம நேசிக்கறவங்க கஷ்டப்படரத பாக்கறது ரெம்ப வேதனை, நாமளே அதுக்கு காரணமா இருக்கறது இன்னும் கொடுமைங்க. அதான் விருப்பமில்லாத வாழ்க்கைல இருந்து அவள விடுவிக்க தயார்னு சொன்னேன், அது எனக்கு உயிர் போற வேதனைனே தெரிஞ்சும்" என ராகவ் கூறி முடித்ததும், கார்த்திக் ஜோடி உட்பட எல்லாரும் எழுந்து நின்று கை தட்டினர்
 
"வாவ்... உங்க சுமித்ராவும் நீங்க விவாகரத்து குடுக்க சம்மதிப்பீங்கனு தான் பதில சொல்லி இருக்காங்க. இன்னைக்கி சூப்பர் ஜோடி பட்டம் வாங்கி இருக்கறது மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். கிவ் தெம் எ பிக் ரவுண்டு ஆப் அப்ளாஸ்" என வாணி கூறவும் "ஹே..." என கூக்குரலுடன் மகிழ்ந்தனர் அனைவரும்
 
ஆனால் சம்மந்தப்பட்ட இருவர் மட்டும் மனதிற்குள் அழுதனர். ராகவ் சொன்ன பதிலில் உடைந்து போய் இருந்தாள் சுமித்ரா. அவன் விவாகரத்துக்கு சரி என்றதும் கோபம் கொண்டேனே, அவன் மனம் எப்படி வேதனைபட்டிருக்கும் என உணர்ந்ததும் அவன் கண்களை சந்திக்கும் தைரியம் இன்றி வாழ்த்து சொன்ன தோழிகளை எதிர்கொள்ளும் சாக்கில் அவனை தவிர்த்தாள் சுமித்ரா
 
போட்டியில் ஜெய்த்து இருந்தாலும் வாழ்வில் தோற்றுவிட்டோமே என வேதனையில் இருந்தான் ராகவ்
 
"ஒகே ஒகே... சைலன்ஸ்" என எல்லாரையும் அமைதிபடுத்திய வாணி
 
"எல்லாருக்கும் ஹேப்பி தீபாவளி. ராகவ் அண்ட் சுமித்ராவுக்கு சூப்பர் தீபாவளி, ஏன்னா நீங்க இந்த போட்டில ஜெய்ச்சதுக்கு உங்களுக்கு கொடைக்கானல் ரிசார்ட்ல நாலு நாள் தங்கரதுக்கான கிப்ட் வவுச்சர். ரெண்டு பெரும் ஜோடியா வந்து நம்ம மேனேஜர் சார்கிட்ட உங்க பரிசை வாங்கிக்கோங்க"
 
இருவரும் பரிசை பெற்றுகொண்டு மேடையை விட்டு இறங்க செல்ல "வெயிட் வெயிட்...அதுக்குள்ள ஓடினா எப்படி?" என பிடித்து நிறுத்தினாள் வாணி
 
"ஒகே மிஸ்டர் ராகவ். இப்ப உங்க சுமித்ராகிட்ட என்ன என்னமோ சொல்லணும்னு உங்க மனசுல ஓடிட்டு இருக்கும். அது எல்லாத்தையும் சொல்லணும்னு நாங்க எதிர்பாக்க முடியாது. ஆனா ஒரு ரெண்டு டயலாக் ஆச்சும் சொன்னாதான் நீங்க இங்கிருந்து போக முடியும். நான் சொல்றது சரி தானே?" என மற்றவர்களை பார்த்து வாணி கேட்க "ஆமா ஆமா" என பதில் வந்தது
 
காதலுடன் மனைவியை கண்ணோடு கண் பார்த்தவன் "ஐ லவ் யு மித்து" என்றான் ராகவ், வேறு எந்த வார்த்தையும் இப்போதைய தன் மனநிலையை உணர்த்தி விடாது என்பதை உணர்ந்தவன் போல்
 
அதை கேட்டதும் இத்தனை பேர் மத்தியில் இருக்கிறோம் என்பதை கூட மறந்தவளாய் கண்ணீருக்கு அணை போட இயலாமல் திணறினாள். வேகமாய் அவள் அருகே சென்ற ராகவ் அவளை தன் அணைப்பில் சேர்த்து கொண்டான். "அயம் சாரி அயம் சாரி" என அரற்றினாள் சுமித்ரா
 
"தப்பு என் மேலயும் தான் மித்து. வேலை வேலைனு உன்கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்ணாம அதான் நமக்குள்ள பெரிய கேப்பை உருவாக்கிடுச்சு... சாரி'ம்மா" என்றவனின் அணைப்பு மேலும் இறுகியது
 
அவனின் இறுகிய அணைப்பில் அவள் அழுகை மேலும் கூடியது. "ஹ்ம்ம்... அழுதா இந்த மூஞ்சிய பாக்க சகிக்கலயே. அப்ப மறுபடி டைவர்ஸ் பத்தி யோசிக்க வேண்டியது தான்" என்றவன் சீண்ட, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அழுகையை நிறுத்தி அவனை முறைத்தாள் சுமித்ரா
 
"ம்... இந்த மூஞ்சி ஒகே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என மேலும் சீண்ட, மீண்டும் அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் சிரித்தாள்
 
நல்ல வேளையாய் மற்றவர்களின் கேலியான ரகளையில் யாருக்கும் இவர்களின் பேச்சு கேட்கவில்லை. கேலி பேச்சு தொடர அப்போது தான் சுற்றுபுறத்தை உணர்ந்தவர்களாய் வேகமாய் மேடையை விட்டு இறங்கினர் இருவரும்
 
"ஹேப்பி தீபாவளி" என்ற குரல் மட்டுமே எங்கும் ஒலித்தது
 
(முற்றும்) 
 

33 பேரு சொல்லி இருக்காக:

அமைதிச்சாரல் said...

சிறுகதை ஜூப்பரு புவன்ஸ்..

Geetha Sambasivam said...

நல்ல கதை. அனுபவிச்சு எழுதறீங்க. :)))))

Geetha Sambasivam said...

அது சரி, ஓட்டுப்போட்டால் என்ன தருவீங்க?

வல்லிசிம்ஹன் said...

adhaane!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கதை... சுபமாக முடிந்ததே...

அமைதிச்சாரல் said...

//ஓட்டுப்போட்டால் என்ன தருவீங்க?//

கீதாம்மா,.. ஓட்டுப்போட்டா அப்பாவி, கொடைக்கானல் ரிசார்ட்ல நாலு நாள் தங்கரதுக்கான கிப்ட் வவுச்சர் தருவாங்க. இல்லையா புவன்ஸ் :-))

Vasudevan Tirumurti said...

புவனி, பிரமாதமான கதை! # நீ கூட இபப்டி எல்லாம் எழுதுவியா?

கோவை ஆவி said...

புவனா, கதை படிக்கத்தான் ஆரம்பிச்சேன், ஆனா என் வாழ்க்கையோட பிரதிபலிப்பா இருந்தது. நடுவரின் கேள்விக்கு ராகவ் சொன்ன பதில் என்னையும் அறியாமல் கண்களில் நீரை வரவழைத்தது. மௌனராகம் படத்திற்கும், உங்க கதைக்கும் முடிவு நன்றாக இருந்தன. ஆனால் நிஜ வாழ்வில் அவ்வாறாக நடப்பதில்லை..!

தினபதிவு said...

மிக அருமையான கதை
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

கோவை2தில்லி said...

அழகான கதை. எனக்கு பிடிச்சிருக்கு....

போட்டியில் வெல்ல வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

ஸ்ரீராம். said...

அருமை தவிர வேறு வார்த்தையில்லை.

//புவனி, பிரமாதமான கதை! # நீ கூட இபப்டி எல்லாம் எழுதுவியா? //

இப்படித்தான் எழுதறாங்க.... சும்மா சும்மா கண் கலங்க வைக்கறாங்க பாருங்க.. கொஞ்சம் சொல்லி வைங்க!

Jagannathan said...

A good story, Very well written. Young couples should get a lesson from this story. It is sad the divorces are on the raise nowadays and I strongly believe they are due to reconcilable differences only. The couple shall have time for themselves and the companies should realise that a happy man / woman employee will be a better asset to them.

As to the competition stories, I will read them and vote. My mind says you will win! - R. J.

அப்பாதுரை said...

இப்பத்தான் படிச்சேன். பிரமாதம். இது போல் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

தமிழ்மன்றம் ஓட்டு காலம் முடிஞ்சிருச்சு போலிருக்கே? சாரி.

(ஏழாவது கதை)

அன்னு said...

ஹெல்லோ புவனா....

எப்படி இருக்கீங்க... இந்தியாவுல ஃப்ரீயாத்தான் இருக்கிற மாதிரி தெரியுது.... பின்ன... போன அப்புறமும் போஸ்ட்டு போடறீங்களே...:))

எனிவே.... புவனா... நம்ம மண்ணின் பெருமைய காப்பாத்துங்க... உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன். மறக்காம, மறுக்காம கலந்துக்குங்க.... தேன்க்ஸ் :))

http://mydeartamilnadu.blogspot.com/2012/12/blog-post_10.html -- இங்கே விவரம். :))

கோமதி அரசு said...

அருமையான கதை.

"விருப்பு வெறுப்பு ரெண்டுமே நமக்கு புடிச்சவங்க மேல தானே காட்ட முடியும். //

உண்மை.

இராஜராஜேஸ்வரி said...

"ம்... இந்த மூஞ்சி ஒகே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என மேலும் சீண்ட, மீண்டும் அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் சிரித்தாள்..

எதிர்பார்ப்பை வீணாக்காமல் இருவரையும் இணைத்தற்குப் பாராட்டுக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவனின் இறுகிய அணைப்பில் அவள் அழுகை மேலும் கூடியது.

"ஹ்ம்ம்... அழுதா இந்த மூஞ்சிய பாக்க சகிக்கலயே. அப்ப மறுபடி டைவர்ஸ் பத்தி யோசிக்க வேண்டியது தான்" என்றவன் சீண்ட, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அழுகையை நிறுத்தி அவனை முறைத்தாள் சுமித்ரா

"ம்... இந்த மூஞ்சி ஒகே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என மேலும் சீண்ட, மீண்டும் அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் சிரித்தாள்//

;)))))

கதை சுவாரஸ்யமாக இருந்தது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

ஆஹா...................!

RVS said...

அபாரம். ஒரு விளையாட்டு வாழ்க்கையில் புயல் வீசியதை மாற்றிய கதை. நல்லா இருக்கு. :-)

தக்குடு said...

'கண்ணோடு கண் பார்த்தாள்! மனதுக்குள் துடித்தாள்! இறுக்கி அணைத்தாள்/ன்!' இந்த ஏரியால எல்லாம் நீங்க பெரிய பேட்டை ரவுடினு தமிழ் கூறும் நல்லுலகத்துக்கே தெரியும். எப்போதும் போல ரசிக்க வைத்தது! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

கதையை நகர்த்தும் விதமும் சொல்லாடலும் ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்க எங்கேயோ போயிடீங்க !

ஹுஸைனம்மா said...

ஹலோ, இந்தக் கதையத்தான் ‘அங்கேயே’ படிச்சு, ஓட்டும் போட்டுட்டோமே!! அப்புறம் ஏன் மெயில்ல வெத்தலை-பாக்கு வச்சு இங்கயும் ஓட்டுப் போட அழைக்கிறீங்க!!

இது சரிவராது. நானும் இனி தமிழக வாக்காளர்கள் மாதிரி ஓட்டுக்கு இவ்வளவுன்னு கேட்டாத்தான் சரிவரும்.

(ஹி..ஹி.. அமைதிக்காவுக்கு மட்டும் ரிஸார்ட்க்கு வவுச்சர்லாம் கொடுத்திருக்கீங்க, அதான் நானும்...)

என்னாது, கதயப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே... இதெல்லாம் சொல்லணுமா, காதல்-மோதல்-கூடல் கதைகளில் நீங்க எக்ஸ்பர்ட்டாச்சேம் கேக்கணுமா?? :-))

sandhya said...

hm hmm :))

sriram said...

சூப்பர் அப்பாவி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

குந்தவை said...

nice story nicely written Bhuvana

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ் அக்கோய்...:)

@ Geetha Sambasivam - வொய் மாமி வொய்... எல்லாரும் கீதா மாமி ஆக முடியுமா?..:) ஓட்டு போட்டா ஒரு டஜன் இட்லி பார்சல்...:)))

@ வல்லிசிம்ஹன் - வல்லிம்மா... நீங்களுமா? நீங்க எனக்கு தானே சப்போர்ட் எப்பவும்..:)

@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க

@ அமைதிச்சாரல் - வவுச்சர் தானே...அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு. ஆனா அங்க போய் நீங்க காசு மட்டும் கட்டினா போதும்...:)

@ Vasudevan Tirumurti - அவ்வ்வ்வ்வ்... திவாண்ணா, இதுக்கு நீங்க நேராவே திட்டி இருக்கலாம்... :)

@ கோவை ஆவி - Sad to hear that Anand. But things will not be the same. மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா?... டேக் கேர்

@ தினபதிவு - நன்றிங்க. நிச்சியம் இணைகிறேன்

@ கோவை2தில்லி - தேங்க்ஸ் ஆதி

@ திண்டுக்கல் தனபாலன் - தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். ரெம்ப நன்றிங்க தனபாலன்

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம். - ரெம்ப நன்றிங்க

@ Jagannathan - ரெம்ப நன்றிங்க ஜகன்னாதன் சார். நீங்க சொன்ன விசயமும் ரெம்ப சரி

@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க அப்பாதுரை சார்

@ அன்னு - ஹை அன்னு, நன்றிங்க. கண்டிப்பா தொடர்பதிவு போட்டுடறேன் சீக்கரம். நன்றி

@ கோமதி அரசு - ரெம்ப நன்றிங்க

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்கம்மா

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்

@ துளசி கோபால் - ஓஹோ ...:)

@ RVS - நன்றிங்க RVS

@ தக்குடு - அடப்பாவி... இப்படியா டேமேஜ் பண்ணுவ...அவ்வ்வ்வ்...:)

அப்பாவி தங்கமணி said...

@ தி. ரா. ச.(T.R.C.) - தேங்க்ஸ் அங்கிள்... எங்கயும் போகல அங்கிள் கோவைலயே தான் இருக்கேன் ...:)

@ ஹுஸைனம்மா - இதுலேயே தெரிஞ்சு போச்சு நீங்க அந்த கதைய படிக்கவே இல்லைன்னு... போட்டிக்கு எழுதின கதை வேற இது வேற... இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க... நல்ல மாட்டுனீங்களா இன்னைக்கி. இதுல ஓட்டுக்கு இவ்ளோனு கேப்பாங்களாம்... வவுச்சர் வேணுமா வவுச்சர்... அனுப்பறேன் இருங்க இட்லி பார்சல்...:)

@ sandhya - சொல்ல வந்ததை சொல்லிடுங்க சந்த்யா...:)

@ sriram - நன்றிங்க ஸ்ரீராம்...:)

@ குந்தவை - தேங்க்ஸ் குந்தவை

ஹுஸைனம்மா said...

//இதுலேயே தெரிஞ்சு போச்சு நீங்க அந்த கதைய படிக்கவே இல்லைன்னு...//

ஹல்லோவ்... இந்தக் கதைய நான் ஏற்கனவே படிச்சுட்டேன், படிச்சுட்டேன், படிச்சுட்டேன், படிச்சுட்டேன்.... 1000% கன்ஃபர்மா படிச்சுட்டேன்!! போட்டியில இல்லன்னா, வல்லமை/அதீதத்திலாக இருக்கும்.. ஆனா, படிச்சுட்டேன்.

(எனிவே, போட்டிக்கு அனுப்புன கதையையும் படிச்சுட்டதினால, அடுத்த பதிவு அதுவாத்தான் இருக்கும். ஆக, அடுத்த பதிவையும் படிக்காமலயே பின்னூட்டிடலாம், ஹப்பாடா!!) :-)))))

cheena (சீனா) said...

அன்பின் அப்பாவி தங்கமணி - வல்லமை இதழில் தீபாவளி வெளியீடாக வெளி வந்தமைக்குப் பாராட்டுகள் - கதை செல்லும் விதம் நன்று - இயல்பான நடையில் - நல்ல சிந்தனையில் உருவான கதை- இருவரும் சேர்ந்துதான் அக வேண்டுமென நினைத்தேன் - அப்படியே கதையும் முடிந்த்து - நன்று நன்று - நல்வாழ்த்துகல் _ நட்புடன் சீனா

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - நம்பிட்டேன் நம்பிட்டேன்....:))


@ cheena (சீனா) - ரெம்ப நன்றிங்க

Post a Comment