Friday, May 31, 2013

திருச்சி டு ஸ்ரீரங்கம் - வழி மலைக்கோட்டை...:)

 
 
வணக்கம் வணக்கம்... பலமுறை சொன்னேன்... ஏன் ஒருமுறை சொன்னா போதாதானு கேக்கறீங்களா? ரெம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வரோமேனு சேத்து வெச்சு சொல்றேன்னு வெச்சுக்கோங்களேன்
 
நானும் போஸ்ட் எழுதனும் எழுதனும்னு நெனச்சுட்டே தான் இருக்கேன்... ஆனா என்னமோ தெர்ல அப்படி ஒரு பிஸி... ஒரு வேலையும் இல்ல ஆனாலும் பிஸியோ பிஸி. என்னமோ போ அப்பாவி
 
அப்பப்போ கொஞ்சம் ஊர் சுத்தல் வேற கெளம்பிடறோம். முன்னாடி எல்லாம் எதாச்சும் ஊருக்கு போனா அங்க இருக்கற கோவில்கள் அப்புறம் சுற்றுலா தளங்கள் மட்டும் பாப்போம்
 
இப்ப அந்த அந்த ஊர்ல இருக்கற ப்ளாக் பிரெண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ற வாய்ப்பு கிடைக்கரதுல ஒரு கூடுதல் சந்தோஷம். எந்த ஊர் போனாலும் நமக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க அப்படிங்கறது ஒரு பெருமை தானே (ரங்கஸ்கிட்ட பீலா விட இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்ன?)
 
இப்படிதான் போன சனிக்கிழமை திருச்சி போலாம்னு முடிவு பண்ணினதும், தலைநகர்ல இருக்கற தலையாய பிளாக்கர் ஒருத்தர் லீவுக்கு சொந்த ஊர் திருச்சிக்கு வந்திருக்காருனு கேள்விப்பட்டு, "வரோம் அண்ணா"னு சொன்னதும் "வாங்க வாங்க"னு சொன்ன கையோட எங்க கால் திருச்சி மண்ணுல படறதுக்கு சரியா எட்டு மணி நேரம் முன்னாடி டெல்லிக்கு ட்ரைன் புக் பண்ணிட்டார்
 
நான் இட்லி எல்லாம் செஞ்சுட்டு வரலைனு எவ்ளவோ சொல்லியும் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார்னு எட்டு பேர் கொண்ட "அப்பாவி ஆதரவாளர் சங்க" உறுப்பினர்கள் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரணையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. விசாரணை கமிஷன் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்...:)
 
அப்புறம் நம்ம கீதா பாட்டி, சாரி சாரி அவங்க பாட்டி ஆகி பல வருஷம் ஆகி இருந்தாலும் பாட்டினு சொன்னா டென்சன் ஆகிடுவாங்க. சோ கீதா மாமி, இல்ல இல்ல கீதா அக்கானு சொல்லிடுவோம் எதுக்கும்
 
வேண்டாம் கொஞ்சம் ஓவரா இருக்கு, கீதா மாமினே சொல்லிக்கறேன் வழக்கம் போல. அவங்களுக்கு மெயில் தட்டிட்டு புறப்பட ஆயுத்தமானோம். "வாங்க வாங்க... ஆனா இட்லி எல்லாம் வேண்டாம்"னு அவங்க முன்னெச்சரிக்கையா சொல்லிட்டாங்க
 
திருச்சிக்கு எப்பவோ ஸ்கூல் நாட்கள்ல போனது. உடனே கி.மு ரேஞ்சுக்கு யோசிக்காதீங்க பாஸ். சில வருசங்கள் அவ்ளோ தான்..:) ஆனா அப்போ அகண்ட காவிரில முங்கி எழுந்து அப்படியே அம்மா மண்டபம் வழியா பொடி நடையா கோபுர வாசல் நோக்கி நடந்த மலரும் நினைவுகளை அசை போட்டபடி ரயில் பயணம் தொடங்கியது. கார்ல போனா டிரைவிங் டென்சன், ட்ரைன் தான் ஜாலினு டைலாக் அடிச்சது நான் தான், ஆனா திருச்சி வெயில் பாத்ததும் தப்பு பண்ணிட்டமோனு தோணுச்சு
 
ட்ரைன்ல ஏறி உக்காந்ததும் ரங்கஸ் தூங்க ஆரம்பிச்சுட்டார். இதை வீட்லயே செய்யலாமேனு நான் டென்சன் ஆக, நீ படிக்கற இந்த ரமணிச்சந்திரன் புக்கை கூடத்தான் வீட்லயே படிக்கலாம்னு ஒரு பல்பு ப்ரெசென்ட் பண்ணினார், சந்தோசமா வாங்கி மூட்டை கட்டிட்டு படிச்சுட்டே வந்தேன், நடு நடுல ஜன்னல் வழியா எதுனா சீனரி நல்லா இருந்தாலோ இல்ல புதுசா எதாச்சும் கண்ணுல பட்டாலோ, அதை சாக்கா வெச்சு ரங்கஸ்'ஐ துயில் எழுப்பி அதுல ஒரு அல்ப சந்தோசத்தை அடைஞ்சேன்...:)
 
ஒருவழியா பகல் பதினொரு மணி வாக்குல ட்ரைன் திருச்சி போய் சேந்தது. ரூம்ல போய் ப்ரெஷ் ஆகிட்டு ரங்கனை தரிசிக்க போனோம். கோவில் உள்ள தரைல நொண்டி அடிச்சுட்டே போனோம், பின்ன ரெண்டு காலையும் ஒண்ணா அக்னி குண்டத்துல வெக்க முடியணுமே. ஆமாங்க, தரை அப்படியே தீ மாதிரி இருந்தது. இனிமே சம்மருக்கு கோவை விட்டு எங்கயும் போறதில்லைனு முடிவு பண்ணிட்டோம்
 
ஒருவழியா கோவில் உள்ள போனா, அப்ப ரங்கநாதருக்கு நேப் டைம்னு நடை சாத்திட்டாங்க. சரி இனி எல்லா கோவிலும் இப்படிதான் இருக்கும்னு, இருக்கற டைம்ல கீதா மாத்தாவையும், எஸ்கேப் ஆன தலைநகர் தலைவர் வெங்கட் அண்ணா குடும்பத்தையும் மீட் பண்ணிடுவோம்னு கெளம்பினோம்
 
ஆட்டோ பிடிச்சு வழி கேட்டுட்டே வெங்கட் அண்ணா வீட்டுக்கு போனோம். வெங்கட் அண்ணா குடும்பத்துல எல்லாரும் ரெம்ப பிரெண்ட்லியா பேசினது ரெம்ப சந்தோசமா இருந்தது. அதுலயும் வெங்கட் அண்ணாவோட அப்பா முதல் முறை பாக்கற மாதிரி இல்லாம, "ஏன் ஹோட்டல் எல்லாம், இங்கயே தங்கி இருக்கலாமே"னு சொன்னப்ப மனசு நெறஞ்சு போச்சு
 
ரிஷபன் சார் கூட அந்த ஏரியா தான்னு கேள்விப்பட்டு போன்ல கூப்ட்டா அவரும் எஸ்கேப் (மோரல் ஆப் தி ஸ்டோரி - இனிமே அந்த ஊர்ல இருக்கற ப்ளாக்கர்ஸ்கிட்ட அவங்க ஊருக்கு வர்ற விசயத்த சொல்லாம தான் போகணும். இல்லேனா எல்லாரும் எஸ்கேப் தான்..:) ஜஸ்ட் கிட்டிங்...:)) வை.கோபாலக்ருஷ்ணன் சாருக்கு மொதலே ஈமெயில் பண்ண விட்டுபோச்சு...:(
 
அப்புறம் பாட்டி வீட்டுக்கு சாரி கீதா மாமி வீட்டுக்கு போனோம். கீதா மாத்தா பேர் சொன்னதும் ஆட்டோகாரர் அவங்க அபார்ட்மண்ட் வாசல் இல்ல, லிப்ட்கிட்டையே கொண்டு போய் எறக்கி விட்டார். ஹ்ம்ம், பாவம் என்ன பயமோ அவனுக்கு
 
நாங்க போனப்ப மாமி மும்மரமா பூ கட்டிட்டு இருந்தாங்க, மாமா அமைதியா இருந்தார், பின்ன கூட இருக்கற ஆள் அப்படியாச்சே. எனக்கு மல்லிகை / முல்லை ரெண்டுமே உயிர், கெளம்பும் போது அவங்களா தரலைனா கேட்டு வாங்கிடனும்னு முடிவோட தான் இருந்தேன். பத்து வருசம் பாரின்ல இருந்தப்ப மிஸ் பண்ணினதுக்கு சேத்து வெச்சு இப்ப பூ வெச்சு என்ஜாய் பண்றேன், அவ்ளோ பிடிக்கும்
 
ப்ளாக்ல மாதிரி நேர்லயும் நல்ல ரகளை பண்ணனும் மாமிகிட்ட அப்படினு நெறைய கதை வசனம் எல்லாம் ரெடி பண்ணிட்டு போனேன், ஆனா என்ன மாயமோ என்ன மந்திரமோ அவங்கள பாத்ததும் சைலண்ட் ஆகிட்டேன். வர்மக்கலை மாதிரி எதுனா மர்மகலை கத்து வெச்சு இருக்காங்களானு விசாரிக்கணும்
 
"எனக்கு கும்பகோணம் அவங்களுக்கு மதுரை"னு மாமா சொன்னப்ப "அவங்க மதுரைனு சொல்லாமையே தெரியுதே"னு தொண்டை வரை வந்த கமெண்ட், மாடரேசன்ல கட் ஆய்டுச்சு. என்னமோ போ அப்பாவி
 
அப்புறம், பாட்டி வடை சுட்ட கதை உங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம், ஆனா பக்கோடா சுட்ட கதை தெரியுமோ. இனிமே என் இட்லிய மாமி கமெண்ட் அடிச்சா இதான் ஒரே ஆயுதம்...:) என் ரங்கஸ்கிட்ட "இந்தாங்க பனிஷ்மண்ட்"னு பக்கோடா தட்டை நீட்டினாங்க மாமி. அவர் பாத்த பார்வைலயே "நான் பாக்காத பனிஷ்மெண்ட்டா"னு ஒரு மெசேஜ் தெரிய, நானே அதை சொல்லிட்டேன். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...:)
 
அவங்க அபார்ட்மெண்ட் மாடிக்கு அழைச்சுட்டு போனார் மாமா, வாவ்... ஒரு பக்கம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், ஒரு பக்கம் திருவானைக்கா கோவில் கோபுரம், இன்னொருபக்கம் மலைக்கோட்டை, அடுத்த பக்கம் காவிரிக்கரை. ஆனா நான் கற்பனை பண்ணின அகண்ட காவிரி இல்ல, இது வறண்ட காவிரி..:(. ஆனாலும் மாடியைவிட்டு எறங்கி வரவே மனசில்ல.
 
அப்புறம் டீ குடிச்சுட்டு, தாம்பூலம் (பூ அவங்களே குடுத்துட்டாங்க) மற்றும் ஆசீர்வாதம் எல்லாம் வாங்கிட்டு, போட்டோ செசன் எல்லாம் முடிச்சுட்டு டாடா பை பை சொல்லிட்டு கெளம்பினோம். லிப்ட்குள்ள போனதும் ரங்கஸ் கேட்ட முதல் கேள்வி "என்ன அதிசியமா இன்னைக்கி கம்மியா பேசின மாதிரி இருந்தது?". நேரம் தான்னு தொடர்ந்து அமைதியை கடைபிடித்தேன்
 
அங்கேருந்து திருவானைக்கா கோவில் போனோம். கோவில் வாசல்லையே "அகிலா" மேடம் (யானை) வரவேற்ப்புக்கு நின்னுட்டு இருந்தாங்க. ஒரு சலாம் போட்டுட்டு உள்ள போனோம். பொறுமையா கோவில் சிற்பங்கள் வேலைப்பாடுகள் எல்லாம் ரசிச்சு பாத்தா அந்த ஒரு கோவிலுக்கே ஒரு நாள் போதாதுன்னு தோனுச்சு. ஆனா நம்ம செடியூல் வேறயா இருக்க, அம்பாளை தரிசிச்சுட்டு மலைக்கோட்டை போக ஆட்டோ தேடினோம்
 
ஆட்டோக்காரர் 120 ரூபாய் கேட்க, நான் ரெம்ப தெரிஞ்சவ மாதிரி "என்னங்க அநியாயம் இது, நாங்க எப்பவும் 80 தானே தருவோம்"னு என்னமோ வாரா வாரம் அதே ரூட்ல போற மாதிரி பில்ட் அப் பண்ணவும், ரங்கஸ் "என்ன கொடுமம்மா இது"ங்கற மாதிரி ஒரு பார்வை பாத்தார். ஆட்டோக்காரர் 120ல இருந்து 100 ரூபாய்க்கு எறங்கி வந்தார். நானும் லாட்டரில மில்லியன் டாலர் ஜெயச்ச மாதிரி இல்லாத காலரை தூக்கி விட்டுகிட்டேன்
 
மலைக்கோட்டை போறோம்னு சொன்னதுமே "420 படி ஏறணும், ஏறிடுவீங்களா?"னு கீதா மாமி வீட்ல மாமா என்னை சந்தேகமா பாத்தபடி கேட்டார். உள்ளுக்குள்ள ஒதரினாலும், அதெல்லாம் ஏறிடுவேன்னு பந்தா பண்ணிட்டு வந்தேன். 420 படி 420 படினு மலைப்பா நெனச்சுட்டே இருந்ததாலயோ என்னமோ சீக்கரம் ஏறிட்ட மாதிரி இருந்தது
 
"Expectation Kills Joy"னு சொல்லுவாங்க, ஆனா சிரமமான விசயங்கள்ல அது எப்பவும் உல்டா. "இன்னும் கஷ்டமா இருக்கும்"னு மனசுக்குள்ள ஒரு உருவகம் பண்ணிட்டா சீக்கரம் அதை கடந்து போய்டலாம்னு நெறைய விசயங்கள்ல அனுபவப்பூர்வமா உணர்ந்து இருக்கேன். ரெம்ப சீரியஸா போகுதோ போஸ்ட், வேண்டாம் நிறுத்திக்கறேன், இல்லேனா அப்பாவி ஆள் வெச்சு போஸ்ட் எழுதுறானு சொன்னாலும் சொல்லிடுவீங்க...:)
 
மைண்ட்வாய்ஸ் : உன் சமையல் சாப்பிடறப்ப கூட ரங்கஸ் இப்படி தான் உருவகம் பண்ணிகுவார் போல...ஹ்ம்ம்
 
அப்பாவி : வேண்டாம் மைண்ட்வாய்ஸ், மறுபடி கோமாவுக்கு அனுப்பிடுவேன்
 
மைண்ட்வாய்ஸ் : மீ எஸ்கேப்
 
எங்க விட்டேன்... ஹ்ம்ம், மலைல விட்டேன். அட்டகாசமா இருந்தது மலைகோட்டை வெதர், தரிசனமும் தான். ஆனா திருச்சில தண்ணி தான் தலையாய பிரச்சனையா இருந்தது. கோவைல சிறுவாணி தண்ணி குடிச்சுட்டு திருச்சி தண்ணி தாகம் தணிக்கல. வேண்டாம் வாபஸ் வாங்கிக்கறேன்... திருச்சிகாரங்க சண்டைக்கு வந்துட போறாங்க...:)
 
அப்புறம் கீதா மாமி சொன்னபடி தாயுமானவர் சன்னதில வாழைத்தார் பூஜை பண்ணி விநியோகம் செஞ்சோம். அப்பவே மழை கொட்ட ஆரம்பிச்சது. மதியம் வெங்கட் அண்ணா வீட்ல பேசிட்டு இருந்தப்ப தான் "ஸ்ரீரங்கத்துல மழையே வராது"னு சொன்னாங்க,"நாங்க வந்த நேரம் பாத்தீங்களா"னு சொல்ல நல்ல சான்ஸ்னு நெனச்சுட்டேன்...;)
 
ஒருவழியா மழை நின்னதும் தண்ணில நீந்தாத கொறையா மெயின் ரோடுக்கு வந்து வசந்த பவன்ல சாப்பிட்டுட்டு ரூமுக்கு போய் சேந்தோம். மறுநாள் நேரமே கிளம்பி ரங்கநாதரை தரிசிக்க போனோம். நல்ல கூட்டம், நம்மால முடியாது சாமினு, ஸ்பெஷல் தரிசன் டிக்கெட் வாங்கி ஒரு மணி நேரத்துல தரிசனம் கிடைச்சது. இங்கயும் ஜரகண்டி ஜரகண்டி தான்
 
அப்புறம் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சமயபுரம் பஸ் ஏறினோம். அங்கயும் செம கூட்டம், மறுபடி ஸ்பெஷல் டிக்கெட் தான். எப்பா சாமி, அநியாயத்துக்கு வெயில் போங்க. ஆனா தரிசனம் திருப்தியா இருந்தது. வர்ற வழில பாலைவனம் மாதிரி ஒரு எடம் பாத்து ரங்கஸ் பக்கத்துல இருந்தவர்கிட்ட "என்ன இடம் இது"னு கேக்க "கொள்ளிடம் ஆறு"னு பதில் வந்தது. "கொல்லிடம்"னு சொன்னா பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு, கொடுமை தான் போங்க
 
எங்கம்மா ஊர்ல கெளம்பும் போதே "உறையூர் வெக்காளியம்மன் கோவில் கண்டிப்பா போயிட்டு வாங்க"னு சொல்லி இருந்தாங்க. ஊர் பேர் கேட்டதுமே எங்கயோ படிச்சா மாதிரி இருக்கேனு நெனச்சுட்டே போனேன். ஊர் வாயில்ல "சோழ மண்டலத்தின் தலைநகர் உறையூர்"னு போட்டு இருந்ததை பாத்ததும் "ஓ ஸ்கூல் புக்ல படிச்சு இருக்கோம்"னு ஞாபகம் வந்தது. அங்க கூட்டம் குறைவா இருந்தது, நல்ல தரிசனம்
 
முடிச்சுட்டு ஜங்சன் போய்ட்டோம். திரும்பி வர்றப்ப ரயில் பயணம் சூப்பர். அதுக்கு காரணம் எங்க எதிர் சீட்ல இருந்த ஒரு வாண்டு. நாலு மணி நேரம் போனதே தெரியாம ரகளை பண்ணிட்டு வந்தது. இவ்வாறாக பயணம் இனிதே நிறைவேறியது
 
என்ன கேட்டீங்க? அடுத்தது எந்த ஊருக்கு வரோமா? சொல்லமாட்டனே... சொன்னா நீங்க எஸ்கேப் ஆய்டுவீங்களே... சர்ப்ரைஸ் விசிட் தான் இனிமே...:)
 
பின் குறிப்பு :
ரங்கஸ் இன்னும் சென்னை / மதுரை ரெண்டும் சுத்தினதில்லைனு சொல்றார் . நான் பெங்களூரு இன்னும் பாத்ததில்ல. பாப்போம் அடுத்த முறை சென்னையா, மதுரையா, பெங்களூரானு ...:)