Thursday, July 04, 2013

உன்னை பார்த்த பின்பு நான்...:)))

 
மொதல்ல ஒரு அதி முக்கியமான விசயத்த சொல்லிடறேன். நேத்தைக்கு ஹேப்பி பர்த்டே டு மீ... ஹேப்பி பர்த்டே டு மீ... ஹேப்பி பர்த்டே டு மீ...:) என்னதிது அல்பம் மாதிரி தன்னோட பர்த்டே'க்கு தானே பாடிக்குதுனு நெனைக்கறீங்களா. நான் அப்படி தாங்க
 
அப்ப மூணு வயசுலயும் சரி... இப்ப முப்பது வயசுலயும் சரி... ஒகே ஒகே டென்சன் ஆகாதீங்க. முப்பதை தாண்டி மூணு வருசமாச்சு. ஐயயோ இல்லைங்க நேற்றோட முப்பதை தாண்டி வருஷம் நாலாச்சு. என்னது இவ்ளோ சிம்பிளா வயச சொல்றேனு யாரும் நோ டென்ஷன் ஒகே. இதென்ன சிதம்பர ரகசியமா? சிலருக்கு பர்த்டே விஷ் சொன்னா "அதையேங்க ஞாபக படுத்தறீங்க. வயசு ஆகுதேனு வருத்தமா இருக்கு"னு பீல் பண்ணுவாங்க
 
எனக்கு அப்படியெல்லாம் இல்லப்பா. வயசு கூடினதால எதையும் இழந்துட்டதா நான் நினைக்கல. அந்த அந்த வயசுக்கு உள்ள சந்தோசங்களை அனுபவிக்கணும், அதுக்கு மேல நோ பீலிங்னு சமீப காலமா நான் முடிவுக்கு வந்துட்டேன். என்னத்த சாதிச்சுடேனு இவ்ளோ பீலா விடறேன்னு நீங்க கேக்கறது புரியுது. எல்லாரும் சாதிச்சா சாதனைக்கு மதிப்பில்லாம போய்டும் யு சி...:)
 
ஜோக்ஸ் அபார்ட்.... உத்ரகாண்ட்ல உயிர் பிழைச்சு வந்தவங்கள கேளுங்க.., உயிர் வாழ்றதே சாதனை தான்னு சொல்லுவாங்க. நிலவரம் அப்படி இருக்கு. இயற்கை பேரழிவுனு ஈஸியா பழிய இயற்கை மேல போட்டுட்டு தப்பிச்சுட்டோம். அதுல நம்ம தப்பு என்னனு யாரும் யோசிக்கற மாதிரி காணோம். முடிஞ்ச வரை இயற்கையோட கோபத்துக்கு ஆளாகாம இருக்க முயற்சி செய்வோம்... சரி தானா
 
என்ன சொல்லிட்டு இருந்தேன்னு இப்ப மறந்தே போச்சு... ஹ்ம்ம்... அதாவது என்னோட மூணு வயசுலயும் சரி இப்ப முப்பது சொச்சம் வயசுலயும் சரி, எனக்கு பர்த்டே எனக்கு பர்த்டேனு நானே சொல்லிக்கிட்டு இருப்பேன். சிலர் என்னை கிண்டல் கூட பண்ணுவாங்க. இதுல என்னங்க இருக்கு... ஏன் வயசு ஏற ஏற நாம இந்த பூமிக்கு வந்த தினத்தை கொண்டாடறது தப்பா? எனக்கெல்லாம் அப்படி இல்லப்பா. 80 ஆனாலும் (இருந்தா பாப்போம்) பிறந்த நாள் எனக்கு ஸ்பெஷல் தான்
 
நெறைய பேருக்கு மனசுல இப்படி தான் இருக்கும். ஆனா வெளிய காட்டிக்க மாட்டாங்க. நாம அப்படி இல்லைனு தெரிஞ்சுது தானே. சரி மேட்டர்க்கு வரேன். என்னை விட சின்னவங்க எல்லாம் "ஹேப்பி பர்த்டே டு யு" பாடிட்டு சண்டை போடாம ஆளுக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கோங்க, நன்றி தம்பி தங்கைகளே
 
 
 
அப்புறம், பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணுங்க ப்ளீஸ், உங்களுக்கு பாயசம் கப்ல இருக்கு, நன்றி. பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணாம ஹேப்பி டு யு பாடினா, இனிமே உங்க வீட்டு இட்லி கல்லு கல்லா வரும்னு சாபம் போட்டுடுவேன், ஆமா சொல்லிட்டேன் ...:))
 
 
என்னோட பிறந்த நாளுக்கு தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், கூகிள் பிளஸ் மற்றும் பேஸ்புக் மூலமாக வாழ்த்திய ப்ளாக் நட்புகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எல்லாரும் பிஸி தான். அதுக்கு இடைலயும் பிறந்த நாளை நினைவு வெச்சு (அல்லது பேஸ்புக் ரிமைன்டர் உபயத்துல..;) வாழ்த்தறது இன்னைக்கி அவசர உலகில் பெரிய விஷயம். நன்றி மீண்டும்
 
எல்லாம் சரி... நீ இதுவரைக்கும் சொன்னதுக்கும் இந்த போஸ்ட் தலைப்புக்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா. சொல்றேன் சொல்றேன்... அடுத்த மேட்டர் அதான்
 
ஜூன் மாதத்தின் இறுதி நாளில்... ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடிகள் ஆரம்பிக்கும் முந்திய நாளில்... கோவையின் பிரபலமான குறுக்கு சந்து தெருவில் (கிராஸ் கட் ரோடு) அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் வளாகத்தில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்தது
 
..... இப்படி எல்லாம் பில்ட் அப் பண்ணி Facebookல ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டு "என்னாச்சு?"னு பத்து பேர் கேக்க, அதை பாத்து இன்னும் பத்து பேர் "இவங்கதான அவங்கதான"னு கெஸ் பண்ண, அதை பாத்து இன்னும் பத்து பேர் லைக் போட, அதை பாத்து இன்னுமொரு பத்து பேர் "நான் அப்பவே சொன்னேன்ல"னு கமெண்ட் போட, ஹ்ம்ம்ம்ம்.... அப்படி இப்படி ஒரு அம்பது ஹிட் தேத்தலாம்னு நான் கனவுல மிதந்துட்டு இருந்த வேளையில்...
 
சென்னை மண்ல ஒரு கால் பதிச்ச கையோட... before we proceed further எனக்கு ஒரு டவுட், அதேங்க கால் பதிச்சாலும் கால் பதிச்ச கையோடனு சொல்றாங்க, கால் பதித்த காலோடனு சொல்றது தானே சரி... யோசிங்க நல்லா யோசிங்க... நோ நோ நோ அதுக்காக "சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கிறாள் அப்பாவி. கோவை களவாணி ச்சே கலைவாணி" அப்படினெல்லாம் பட்டம் குடுக்க கூடாது இப்பவே சொல்லிட்டேன்
 
ம்... எங்க உட்டேன்... ஆங் கால்ல உட்டேன்... சென்னை மண்ல கால் பதிச்ச காலோட கோயம்பேடு பஸ் ஸ்டேன்ட்ல ஒத்தை கால் தவமா இந்த விசயத்த ஸ்டேட்டஸ் மெசேஜ்'ஆ போட்டு கமெண்ட் அள்ளிட்டா அந்த அபூர்வ சாந்தாமணி... ஹ்ம்ம்... அவ இருக்காளே அவ...யாருனு கேக்கறீங்களா? ஒ... சாரி சாரி... என்ன இருந்தாலும் வயசுல மூத்தவங்கள அவ இவனு பேசறது தப்பு...:) அவங்க... இப்ப தான் சரி
 
அவங்க வேற யாரும் இல்லைங்க... மணந்தால் மகாதேவன் இல்லையேல் மரணதேவன் அப்படினு சபதம் எடுத்து அந்த மகாதேவரையே மணாளனாய் பெற்ற அனன்யா தான். கொஞ்சம் ஓவரா இருக்கோ... சாரி லேட்லி கொஞ்சம் சரித்திர நாவல்களா படிச்சதோட எபக்ட். அதை பத்தி தனி போஸ்ட் வரும், ச்சே ச்சே இதுக்கெல்லாம் அழக்கூடாது. இதுவும் கடந்து போகும்னு கூலா இருக்கணும் ஒகே
 
இந்த அம்மணி "உங்க ஊருக்கு வரேன் உங்க ஊருக்கு வரேன்"னு கிட்டத்தட்ட ரெண்டு மாசமாவே மெரட்டிட்டு இருந்தா. உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் சமாளிச்சுட்டு "வாராய் என் தோழி வாராயோ... கோவை மண்ணில் கால் பதிக்க வாராயோ"னு பாடினேன்
 
அவளுக்கே நம்பிக்கை இல்ல போல இருக்கு "நெஜமாவா கூப்பிடரே"னு கேட்டா. "நிச்சியமா... எங்க வீட்லயே நீ தங்கிக்கலாம்"னேன். உடனே இந்த ஆபிசர் அம்மா "நோ நோ... எனக்கெல்லாம் CAG Prideல PH ப்ளோர்ல சூட் புக் பண்ணி இருக்காங்க என்னோட கிளையன்ட்"னு நான் எதிர்பாத்த மாதிரியே பீலா விட்டா. அதோட விட்டாளா "AUDI கார்ல தான் பிக் அப் பண்ண வருவாங்க"னு வேற பில்ட் அப்பு
 
ம்கும்... AUDI காராம் AUDI கார், ரெம்ப ஆடாதடி, ஆடி தள்ளுபடில உன்னை தள்ளி விட போறாங்கனு வாய் வரைக்கும் வந்தது. சரி நேர்ல பாக்கும் போது டெபொசிட் காலி பண்ணலாம்னு பொறுத்துகிட்டேன்.
 
இதோ வரேன் அதோ வரேன்னு அந்த நாளும் வந்தது (போன ஞாயிற்றுகிழமை). நான் வந்திருக்கேன், காந்திபுரம் வரியானு மெசேஜ் வந்தது. நாங்களும் அன்னைக்கி காந்திபுரம் போற பிளான் இருந்தது. பின்ன பர்த்டேக்கு டிரஸ் எடுக்க வேண்டாமோ. அதெல்லாம் நான் கரெக்டா கேட்டு வாங்கிடுவேன். அதுல எல்லாம் கூச்சமே படறதில்ல...:)
 
வேற ஒரு வேலையா காலைலையே வீட்டைவிட்டு கிளம்பினதுனால அன்னபூர்ணால லஞ்ச் முடிச்சுட்டு ஷாப்பிங் கெளம்பினோம். "மகாவீர்ஸ்ல நல்லா இருக்கும்"னு ரங்கஸ்கிட்ட சொல்ல "இதுக்கு முன்னாடி எப்ப போன"னு நான் எதிர்பாத்த மாதிரியே கிராஸ் கொஸ்டின் கேட்டார் நம்ம ஊட்டு வக்கீல் கோவிந்த்...:)
 
"அது...அது காலேஜ் படிக்கறப்ப போய் இருக்கேன்"னேன். ரெம்ப ரீசன்ட் தான் போல இருக்கு'னு நக்கல் விட்டுட்டு வந்தார். ஆனா என்னமோ அங்க எனக்கு எதுவும் பிடிக்கல. ரங்கஸ் என்ன பல்ப் தர போறாரோனு பயந்தேன்... நல்லவேள பெரிய மனசு பண்ணி ஒண்ணும் சொல்லாம விட்டுட்டார். அதே நேரம் அனன்யாவிடமிருந்து போன் வந்தது
 
"வேலை முடிஞ்சுது"னா. வேலை இருந்தா தானே முடிய ஹையோ ஹையோனு மனசுக்குள்ள நெனச்சுட்டேன். சரி ஷாப்பிங் முடிச்சுட்டு ஹோட்டல் ரூமுக்கு வாங்கனு இன்வைட் பண்ணினா. சரின்னுட்டு சென்னை சில்க்ஸ் போய் மும்மரமா தேடிட்டு இருந்த நேரத்துல மறுபடி போன். "எங்க இருக்கே?" வேற யார் அனன்யாமணி தான்
 
"சென்னை சில்க்ஸ்"னேன். கொஞ்சம் அப்படியே முன்னாடி பாருனு என்னமோ பாரதிராஜி ரேஞ்சுக்கு காமெரா ஏங்கில் எல்லாம் சொன்னா. திரும்பி பாத்தா.... "உன்னை பார்த்த பின்பு நான்... நானாக இல்லையே"னு மண்டைக்குள்ள ரிங்க்டோன். இல்லையா பின்ன, இப்படி ஒரு டெரர் பார்ட்டிய பாத்தா நாம நாமளா இருக்க முடியுமா என்ன... கொஞ்சமாச்சும் பாதிப்பு இருக்குமில்லையா... ஒருவழியா அதிர்ச்சி விலகி சுதாரிச்சு "வெல்கம் வெல்கம்"னேன் (அப்பாடி ஒருவழியா தலைப்புக்கு லிங்க் பண்ணியாச்சு...:)
 
ஆனா சும்மா சொல்ல கூடாது. டிரஸ் செலக்சனுக்கு நல்லா ஹெல்ப் பண்ணினா. நடுல நடுல ரங்கஸ் கூட கூட்டணி சேந்துட்டு எனக்கு பல்புகளும் வழங்கினா. இட்ஸ் ஆல் இன் தி கேம்னு நான் காரியத்துல கண்ணா டிரஸ் வாங்கறதுல இருந்தேன். ஏன்னா, ஆடாத அருங்கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இருக்கணும்னு எங்க பாட்டி சொல்லி இருக்காங்க யு நோ...:)
 
அப்புறம் எனக்கு பூ வாங்கி குடுத்தா அனன்யா. வீட்டுக்கு வந்ததும் மொதல் வேலையா அதை ப்ரிஜ்ல வெச்சுட்டு, கொஞ்சம் கொஞ்சமா தினமும் வெச்சுட்டேன்... பர்த்டே அன்னைக்கும் தான். தேங்க்ஸ் அனன்யா
 
 
ஒருவழியா ஷாப்பிங் முடிச்சுட்டு மறுபடி அன்னபூர்ணா போனோம்... காபி சாப்பிட. எனக்கு ரெகுலரா காபி சாப்பிடற பழக்கமில்ல. சரி ஊரு விட்டு ஊரு வந்த அம்மணிக்கு கம்பனி தருவோம்னு சரின்னேன்... சாப்ட டீடைல்ஸ் வேணும்னா அம்மணி எழுதின போஸ்ட்ல இங்க பாருங்க. அதைமட்டும் பாருங்க, மத்தபடி என்னை டேமேஜ் பண்ணின மேட்டர் எல்லாம் படிக்க கூடாது ஒகேவா...;)
 
அப்புறம் என்ன... பிரியா வடை தான்.. ச்சே விடை தான்... அனன்யா ஒரே அழுவாச்சி... சரி சரி மறுபடி மீட்டலாம்னு தைரியம் சொல்லி தேத்தி அனுப்பினோம். இப்படியாக அப்பாவி ராமாயணத்தில் அனன்யா சந்திப்பு புராணம் முடிவுக்கு வந்தது...:)
 
ஜோக்ஸ் அபார்ட்... சோ நைஸ் டு மீட் யு அனன்யா... ப்ளாக்ல G+ல பேஸ்புக்ல எல்லாம் மொக்கை போட்டு மொதல் வாட்டி மீட் பண்ற மாதிரியே இல்ல...:) வெல்கம் பேக் டு கோவை
 
(தொடரும்...) என்னது தொடருமானு டென்சன் ஆகறீங்களா... பின்ன? அனன்யா மறுபடி வரேனு சொல்லி இருக்காளே...:)))