Tuesday, February 07, 2017

இழப்பு...இந்த பதிவை எழுதணும்னு ஒரு மாசமா முயற்சி பண்றேன், முடியல. நேரமின்மை காரணமில்ல. இழப்பை இன்னும் மனசு ஏத்துக்க தயாரா இல்லை, அதான் நிஜம். ஒருவேளை மனசுவிட்டு எல்லாத்தையும் எழுதி கொட்டிட்டா சரியாய்டுமோனு தான் இந்த பதிவு 
2010ல் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினம், கனடாவுல எல்லாரும் சந்தோசமா ஹாலிடே மூட்ல இருக்கோம். அப்போ இந்தியால இருந்து போன், திடீர்னு என் கணவரோட அப்பாவுக்கு பிரஷர் அதிகமாகி ஸ்ட்ரோக் வந்துடுச்சுனு. நாங்க அதுக்கு ஒரு மாசம் முந்தி தான் இந்தியா வந்துட்டு போனோம், உடனே வரக்கூடிய சூழ்நிலையும் இல்ல. கொடுமையான தருணங்கள் அது. ஆனா கடவுள் புண்ணியத்துல, அடுத்த ஆறு மாசம் தொடர்ந்த பிசியோதெரபி டிரீட்மென்ட்ல ஓரளவுக்கு கொஞ்சம் சப்போர்ட்டோட நடக்கற நிலைமைக்கு வந்தாரு. அடுத்த ரெண்டு மாசத்துல என் கணவர் மட்டும் ஒரு முறை இந்தியா வந்துட்டு வந்தாரு

இனி எல்லாம் சரி ஆய்டும்னு நிம்மதியா இருந்த நேரத்துல என் கணவர் தங்கையின் கணவர் மரணம் மொத்த குடும்பத்தையும் புரட்டி போட்டது. அதுவும் ஒரு டிசம்பர் கடைசி வாரத்தில் தான். அந்த இழப்பு என் மாமனாரின் உடல் நிலையை பெரிதும் பாதித்தது. இனி கனடாவுல இருக்கறது சரி வராதுனு முடிவு பண்ணி 2012 ஜூன் மாசம் இந்தியால வந்து செட்டில் ஆனோம். அந்த முடிவு எடுக்கறது அவ்ளோ சுலபமா இருக்கால. ரெண்டு பேரும் நல்ல ஜாப்ல செட்டில் ஆகிட்டு விட்டுட்டு வர்றது கஷ்டமான முடிவாதான் இருந்தது. பிரெண்ட்ஸ் எல்லாம் கூட "அவசரபடாதீங்க, அப்புறம் தப்பு பண்ணிட்டமோனு பீல் பண்ற மாதிரி ஆகிடும். ஒம்பது வருஷம் இருந்தாச்சு, இன்னும் ஒரு வருஷம் இருந்தா பென்ஷன் எலிஜிபிலிட்டி வரும்"னு எல்லாம் அட்வைஸ் பண்ணினாங்க. வேற எதையும் யோசிக்காம, துணிவா முடிவு எடுத்து இந்தியா வந்தோம் 

நாங்க இருக்கோம் அப்படிங்கற தைரியமோ என்னமோ, அடுத்த ஒரு வருஷ தொடர் சிகிச்சைல என் மாமனாரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஆச்சு. சொந்தங்கள் எல்லாரும் "மகன் வந்ததும் அப்பாவுக்கு தனி பலம் வந்துடுச்சு"னு கேலியா சொன்னாங்க. அதுக்கு பின்ன பெரிய பின்னடைவு இல்ல 

2014ல என் மகள் சஹானாவின் வரவு எல்லாருக்கும் பெரிய சந்தோசத்த குடுத்தது. பேத்திய பாக்க ஆஸ்பத்திரிக்கே வந்துட்டாரு தாத்தா. அவ வளர வளர தாத்தாவோட உடல் நிலை நல்லாவே தேறுச்சு. அதுவும், சஹானாவோட முதல் பர்த்டேக்கு வந்த சொந்தங்கள் எல்லாம் "பாப்பா அவங்க தாத்தா மாதிரியே இருக்கா"னு சொல்லவும், என் மாமனாரை கைல புடிக்க முடியல 

முதல் முறை அவ தாத்தானு சொன்னப்ப "பாரு என்னை தான் மொதல்ல கூப்ட்டா உன்னை இல்ல"னு என் மாமியாரிடம் சின்ன பிள்ளை மாதிரி கேலி செய்து சிரித்த நிகழ்வு இன்னும் கண்ணுல இருக்கு 

எல்லாம் சரியா இருந்த நேரத்துல, 2015 டிசம்பர்ல (ஆமா, இதுவும் டிசம்பர் தான்) பிசியோதெரபி செய்யும்போது தவறி விழுந்ததுல கைல ஒரு சின்ன "ஹேர்லைன் கிராக்", அது தான் வினையின் ஆரம்பம்னு அப்ப தெரியல. சின்ன கிராக் அப்டிங்கறதால கட்டு எல்லாம் போட முடியாது, ரெஸ்ட் தான் முக்கியம்னு டாக்டர் சொன்னபடி கொஞ்ச நாள் பிசியோதெரபி எதுவும் செய்யாம இருந்தோம் 

80 தாண்டின வயசுக்கு வலி தாங்கற சக்தி இருக்கல, டாக்டர்கிட்ட சொன்னப்ப "ரெம்ப முடியலைனா ஒரு பெயின் கில்லர் குடுங்க, பட் ரெம்ப வேண்டாம், அது கிட்னிய பாதிச்சுடும்"னு சொன்னாரு டாக்டர். பிரச்சனை அங்க தான் ஆரம்பிச்சது. மாத்திரை போட்டா வலி இருக்காதுனு புரிஞ்சதும் தினமும் மாத்திரை வேணும்னு ரகளை பண்ண ஆரம்பிச்சாரு. ஒரு வயசுக்கு பின்ன பெரியவர்களும் குழந்தை மாதிரி ஆய்டறாங்க அப்டிங்கறதை அப்போ தான் பாத்தேன். மாத்திரை குடுக்க மாட்டோம்னு சொன்னா உண்ணா விரதம், மௌன  விரதம் எல்லாமும் செஞ்சு சாதிச்சாரு 

வலி மாத்திரையின் பின் விளைவு அதோட பிசியோதெரபி செய்யாதது எல்லாம் சேந்து சுத்தமா உடல் நிலையை பாதிக்க ஆரம்பிச்சது.CREATINE லெவல் அதிகமாகி கிட்னி பாதிக்க ஆரம்பிச்சது. "இந்த வயசுக்கு அவரோட ஒடம்பு இருக்கற கண்டிஷன்ல ட்ரான்ஸ்பிளான்ட் சாத்தியமில்லை, சும்மா மெடிக்கல் மேனேஜ்மென்ட் வேணா செய்யலாம்"னு டாக்டர் சொன்னாங்க 

2016 டிசம்பர் 22 வழக்கமா ரெண்டு மாசத்துக்கு ஓரு முறை செக் அப் போற மாதிரி தான் போனோம், அன்னைக்கி காலைல இருந்தே கொஞ்சம் மூச்சுவிட சிரமப்பட்டாரு. டாக்டர் பாத்துட்டு LUNGSல நீர் கோத்துருக்கு, ஐ சி யு ல வெச்சு தான் ட்ரீட் பண்ணனும்னு சொன்னாங்க. ரெம்ப பயந்து தான் சரினு சொன்னோம். அடுத்த நாள் சரியாக ரூமுக்கு குடுத்தாங்க,ஒரு நாள் அப்சர்வேஷன்ல இருந்துட்டு நாளை மறுநாள் வீட்டுக்கு போய்டலாம்னு சொன்னாங்க. இதுக்கா பயந்தோம்னு ஆளாளுக்கு கேலி பேசிகிட்டோம்

ரூமுக்கு வந்த மறுநாள் சாயங்காலம் திடீர்னு மறுபடி மூச்சு திணறல், பிரஷர் கீழ போய்டுச்சு, உடனே க்ரிட்டிக்கல் கேர் ஐ சி யு வுக்கு மாத்தினாங்க. "ரெம்ப சிரமப்படறாரு லைப் சப்போர்ட் குடுத்து இருக்கோம், கிட்னி பங்க்சனிங் சரியில்ல, கொஞ்சம் சிரமம் தான்"னு டாக்டர் சொன்னார். அன்னைக்கி நைட் ஒரு ஒரு நிமிஷமும் ஐ சி யு முன்னாடி உக்காந்துட்டு ரெம்ப கொடுமையா இருந்தது. காலைல ஏழு மணிக்கு உள்ள போய் பாக்க சொன்னாங்க 

"அப்பா"னு கூப்பிடவும் கண்ணை திறந்து பாத்தார், ஆனா பரிச்சியமில்லாத ஒரு பார்வை, நினைவு தப்பிடுச்சுனு புரிஞ்சது. அவ்ளோ டியூப் எல்லாம் மாட்டி பாக்கவே கஷ்டமா இருந்தது, இதுவரை நான் யாரையும் அப்படி பாத்ததில்ல  "டயாலிசிஸ் செய்யலாம், ஆஞ்சியோ செய்யலாம்" அது இதுனு டாக்டர் சஜஷன் சொல்லி நாங்க முடிவு எடுக்கறதுக்குள்ள இன்னும் நிலைமை மோசமாச்சு 

எட்டு மணிக்கு பிரஷர் பல்ஸ் எல்லாமும் ரெம்ப கொறஞ்சு போச்சு. நாங்க எல்லாரும் போய் பேசி பார்த்தோம், சுத்தமா ரெஸ்பான்ஸ் இல்ல. அப்புறம் கொஞ்ச நேரத்துல எல்லாமே முடிஞ்சு போச்சு. அழுகை கூட வரல, அப்படியே நின்னுட்டோம் 

ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்தப்ப தாத்தா எப்பவும் உக்கார்ற பிரம்பு நாற்காலி காலியா இருந்ததை பாத்துட்டு "தாத்தா எங்க"னு சஹானா கேட்டப்ப, அதுக்கு மேல என்னால அழுகையை கட்டுப்படுத்த முடியல 

எல்லாரும் சொன்ன ஒரே  ஆறுதல் "பேத்தி தாத்தா எங்கனு கேக்கற அளவுக்கு இருந்து பாத்துட்டு போய்ட்டாருனு மனச தேத்திக்கோ" என்பது தான் 

எந்த டிசம்பர் 25ல முதல் முதலா ஸ்ட்ரோக் வந்ததோ அதே டிசம்பர் 25 உசுரையும் வாங்கிட்டு போய்டுச்சு. எங்களுக்கும் டிசம்பர்'க்கும் என்ன ராசியோ? உணர்வுகளை ஒதுக்கி வெச்சு யோசிச்சு பாத்தா, டிசம்பர் 25 2010க்கு பின்ன கிடைச்ச ஒரு ஒரு  நாளும் போனஸ்னு புரியுது. அதுவும் சஹானாவை பாக்காம போய் இருந்தா அது அந்த ஆன்மாவுக்கே எவ்ளோ பெரிய குறையா இருந்துருக்கும்

இப்படி எல்லாம் மனசை தேத்திக்கிட்டாலும், தனியா இருக்கறப்ப மறுபடி இழப்பின் வலி மேலே எழுவதை தடுக்க முடியல. கொஞ்ச நாள் ஆகும்னு நினைக்கிறேன். மனசுவிட்டு எழுதினப்புறம் பீலிங் பெட்டர், போன் ஈமெயில் மெசேஜ் அனுப்பி விசாரிச்சா எல்லாருக்கும் தேங்க்ஸ் 

BYE FOR NOW ...